இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்

இலக்கியவிழாக்கள்

 

அன்புள்ள ஜெ..

 

தி இண்டு லிட்ஃபெஸ்ட் திருவிழா நடத்துவோருக்கு தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லை என்பதும் அது வீண் செலவு என்பதும் மறுக்கவொண்ணா உண்மை.

 

ஆனால் இந்த நிலை அப்படியே நீடிப்பதே நல்லது என்பதுதான் யதார்த்தமான நிஜம்

 

உதாரணமாக இந்து குழுமம் தமிழ் நாளிதழ் போக்கில் ஒரு மாற்றம் கொணர முயன்றது. அப்படி உருவான தமிழ் இந்து அரசியல்வாதிகளுக்குத்தானே பயன்படுகிறது. ஒரு ஜெயமோகனுக்கோ , சாரு நிவேதிதாவுக்கோ எந்த இடமாவது கிடைத்ததுண்டா ? வெண்முரசு குறித்து எழுதப்பட்டதுண்டா ?

 

அமேசான் என்ற பெருநிறுவனம் செய்ய முனைந்த நன்மையை அரசியல்வாதிகள்தானே கைப்பற்றினர்

 

அமேசானில் ஐந்துக்கும் பத்துக்கும் அரசியல் செய்பவர்கள் , தெருமுனைப்பேச்சாளர்கள் தரத்தில் கவிதை எழுதுவோரைப்பார்க்கையில் தமிழ் இலக்கியத்தை யாராவது தேடி வந்து அவர்கள் கண்களில் இவர்கள் பட்டுவிடக்கூடாதே என பயமாக இருக்கிறது.  hindu லிட்ஃபெஸ்ட் நடத்துவோர் இவர்களை பார்த்த பின்பும் தமிழ் இலக்கியத்தை மதித்தால் அது,பேரதியம்தான்;

 

அப்படியே அது நடந்தாலும் அந்த பலன் நீங்கள் கனவு காண்பதுபோல அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்ற தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு கிடைக்காது; அப்துல் ரகுமான் , சுரதா , வைரமுத்து போன்றோர்தான் மாபெரும் இலக்கியவாதிகளாக முன்நிறுத்தப்படுவார்கள்

 

எனவே இவ்விஷயத்தில் நீங்கள் தலையிடுவது அதில் வென்றாலும் எந்த நலனும் தராது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை

 

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள ஜெ,

 

நான் இந்திய அளவில் நிகழும் இலக்கிய திருவிழாக்களில் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அது என் தொழில்சார்ந்தது. மும்பை கேட்வே லிட் ஃபெஸ்டில் நீங்கள் கலந்துகொண்டபோது நாம் சந்தித்திருக்கிறோம். அதன்பின் கேந்திரிய சாகித்ய அக்காதமி விழாவிலும் சந்தித்தோம். இவற்றை இலக்கிய கூட்டங்கள் என்றோ கருத்தரங்குகள் என்றோ கருதமுடியாது. இவை திருவிழாக்கள். அதாவது ஆங்கிலத்தில் Fair என்பார்களே அது. இங்கே சீரிய விவாதமோ நுட்பமான இலக்கியப்பேச்சோ நிகழமுடியாது. இவற்றின் அமைப்பே அப்படி. இங்கே இலக்கியவாதிகளை display செய்கிறார்கள். அதுவும் தேவைதான். பலவகைப்பட்ட மக்கள் இந்த அரங்குகளுக்கு வருகிறார்கள். அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எழுத்தாளர்களை அவர்கள் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். இவை புத்தகவாசிப்புக்கு நல்லது. நல்லது என்று சும்மா சொல்லவில்லை, என் அனுபவம் இது.

 

இந்தவகையான விழாக்களுக்குச் செல்பவர்கள் ஆரம்பத்தில் மிக உற்சாகமாகவும் நம்பிக்கையாகவும் இலக்கியத்திலே எதையாவதுச் செய்யவேண்டும் என்னும் எண்ணத்துடனும் இருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இது எப்படி நிகழும் என்று தெரிந்துவிடும். Display தவிர எதுவுமே நடக்காது. அங்கே காட்சிப்படுத்தப்படுவதனால் நேரடியாக உடனடியாக லாபம் ஏதும் கிடையாது. ஏனென்றால் அதை அந்தப்பதிப்பகம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் பேட்டிகளும் மதிப்புரைகளும் செய்திகளும் வரவைக்கவேண்டும். டிவி பேட்டிகள் வேண்டும். இப்படித்தான் இன்று எழுத்தாளர்களைச் சந்தைப்படுத்த முடியும். இந்த விழாக்கள் சந்தைப்படுத்தலின் ஒரு பகுதிகள்

 

உதாரணமாக கேட்வே லிட்ஃபெஸ்டில் நீங்களே சொன்னீர்கள். அங்கே ஒரு அமர்வு ஒருமணிநேரம். அதில் நான்குபேர் பேச ஒருவர் தொகுப்பாளர். மொத்தமே ஐந்து சொற்றொடர்களைச் சொல்ல உங்களுக்கு வாய்ப்பு அமைந்தது. அதற்காக விமானத்தில் மும்பை வந்து நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்தீர்கள். மூன்றுநாட்கள் வீண் என்றீர்கள். ஆனால் அன்றைக்கு மாலை ஒரு மதுவிருந்து நடைபெற்றது. நீங்கள் அதற்குச் செல்லவில்லை. உண்மையில் அதுதான் முக்கியம். அங்குள்ள தொடர்புகள்தான் முக்கியமானவை. அதை நீங்கள் செய்திருக்கவேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் ஏஜெண்ட் அதைச்செய்யவேண்டும்

 

எல்லா லிட்ஃபெஸ்டுகளுக்கும் இதுதான் ஃபார்முலா. உலகம் முழுக்க இதுதான் சூழல். இது ஒரு திருவிழா என்று மட்டும் நினைத்தால்போதும். இதற்கு ஆங்கிலத்தில் எழுதுபவர்களை அந்தப்பதிப்பகங்களே கொண்டுசெல்கின்றன. ஏஜெண்டுகள் அந்த அமைப்பை அணுகி தங்கள் எழுத்தாளர்களுக்கு இடம்பெற்று தருகிறார்கள். அப்படித்தான் அதில் எழுத்தாளர்கள் பங்குகொள்கிறார்கள். தமிழில் காலச்சுவடு அதை திறமையாகச் செய்கிறது. அந்த அமைப்புக்கு எழுத்தாளர்களை மதிப்பிடவோ கொண்டுசெல்லவோ ரசனையோ அறிவார்ந்த ஸ்கேலோ ஒன்றும் இருக்காது. அது ஒரு coordinator மட்டும்தான். இலக்கிய அமைப்புகளையும் தீவிர இலக்கியம் நடக்கும் களங்களையும் இதனுடன் குழப்பிக்கொள்ளவேண்டியதில்லை.

 

தமிழில் நீங்கள் நடத்துவது இலக்கிய அரங்கு. இது இலக்கியச்சந்தை. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். இங்கே விற்பனைக்குத்தான் முதலிடம். புகழ்தான் அடையாளம். அதை நாடித்தான் செல்வார்கள். வைரமுத்துதான் நட்சத்திரம் கி.ராஜநாராயணன் அல்ல. இந்தக் காலகட்டத்தில் இலக்கியமும் வியாபாரம்தான்.

 

எஸ்.ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரை‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
அடுத்த கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-3