காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

பாண்டிச்சேரிக்கு 1985ல் நான் முதல்முறையாகச் சென்றேன். ரோமெய்ன் ரோலந்து நூலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளை அப்போதுதான் பார்த்தேன், அதைப்பற்றி பேச்சுவாக்கில் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய சொல்லும்படியாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதை நான் வாங்கியதற்கு ஒரே காரணம்தான். அவை மொத்தமாக ஏழு ரூபாய்க்குக் கிடைத்தன. மூன்று தொகுதிகளாக ஆயிரம் பக்கங்களுக்குமேல். ஆனால் மிகப்பழைய பதிப்பு. புரட்டினால் தாள்கள் ஒடிந்துவிடும் அளவுக்கு நைந்தது

அந்நூலை நான் அவ்வப்போதாக வாசித்தேன். என்னை பெரிதும் கவர்ந்தது அதன் நடை. முதலில் எனக்குப் பட்டது அந்த நடைக்கும் பைபிளின் மொழிக்குமான ஒற்றுமை.ஏறத்தாழ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த உரைநடை கொண்டவை இவை. பைபிள் மொழியாக்கத்தின்போது மார்ட்டின் லூதர் ஒரு நெறியைக் கையாண்டதாகச் சொல்லப்படுகிறது. அது ‘சந்தை’ மொழியில் அமையவேண்டும். முச்சந்தியில் நின்று போதனைசெய்யும் பிரசங்கிக்குரிய மொழி, அடித்தளமக்கள் எவர் உதவியும் இன்றி புரிந்துகொள்ளும் மொழி. தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டபோது அந்த நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த உரைநடையில் சம்ஸ்கிருதச்சொற்களும் சம்ஸ்கிருத மருவுசொற்களும் மிகுந்து காணப்படுவது இதனால்தான்.

அந்தமொழியை நாம் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பிலும் காண்கிறோம். ஏனென்றால் அவரும் ஏறத்தாழ பேச்சுமொழியில்தான் எழுதுகிறார். அன்றைய அச்சுமொழி என்பது செய்யுளும், செய்யுளின் சொல்லமைப்பை அப்படியே கையாண்ட உரைநடையும்தான். ஓரளவேனும் இந்த மொழிக்கு நெருக்கமாக வருவது வீராச்சாமிச் செட்டியாரின் வினோத ரசமஞ்சரி போன்ற ‘மக்கள் இலக்கியங்களே’.அவ்வகையில் பார்த்தால் தமிழ் உரைநடையின் ஒரு முன்னோடியான ஆவணம் என்றே ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பைச் சொல்லமுடியும். பின்னாளில் பலவகையான கணக்குக்குறிப்புகள், தொழில்கடிதங்களில் இதே நடை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். நம் உரைநடை பேச்சுமொழியிலிருந்து படிப்படியாக உருவாகி வந்ததை இவற்றினூடாக தொகுத்துக்கொள்ளலாம்

வரலாற்றை எழுதும் வழக்கம் அற்றவர்கள் நாம். நாம் தொன்மையை விழுமியங்களின் அடிப்படையில் புராணங்களாக, தொன்மங்களாக ஆக்கி நிலைநிறுத்திக்கொண்டோம். நாம் கொண்டுள்ள வரலாறு என்பது கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து எழுதிக்கொண்டதுதான். பெரும்பகுதி ஊகங்களால் ஆனது அது. இன்னமும்கூட தமிழ்வரலாற்றின் பெரும்பகுதி எழுதப்படாததாகவே உள்ளது.

நம் வரலாற்றை புறவயமான சான்றுகளின் அடிப்படையில், காலவரிசைப்படி எழுதுவதற்கு வழிகாட்டியவர்கள் ஐரோப்பியர். ஜே.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல் ஒரு மிகப்பெரிய முன்னோடி ஆக்கம், ஒரு செவ்வியல்படைப்பு அது. தமிழகவரலாற்றின் ஒரு கோட்டுவரைவை அவர் உருவாக்குகிறார். தமிழ்நிலத்தை விரிவாக பதிவுசெய்கிறார். தமிழ்வாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை தொகுத்தளிக்கிறார். ஒரேசமயம் தொகைவரலாறும் [Macro History]  நுண்வரலாறு [Micro History] மாக திகழும் அரிய ஆவணம் அது. அதைப்போன்ற ஆரம்பகட்ட பிரிட்டிஷ் ஆவணக்குறிப்புகள் நமக்கு அரிய வரலாற்றுச் செய்தித்தொகைகள்.

ஜே.எச்.நெல்சனின் பெரும்படைப்புக்கு இணையான ஒரு வரலாற்று ஆவணம் பாண்டிச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. மொத்தத் தமிழ் வரலாற்றிலும் அதைப்போன்ற ஒன்று அதற்கு முன் இல்லை என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். இங்கே பேரரசுகள் இருந்திருக்கின்றன. வரலாறு கொந்தளித்துப் பெருகிச்சென்றிருக்கிறது. ஆனால் எந்த வரலாறும் சுருக்கமாகவேனும் பதிவுசெய்யப்படவில்லை. வரலாற்றின் ஒருபகுதியாக இருந்த ஒருவர் அன்றன்று அதைப் பதிவுசெய்வது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று. ஆனந்தரங்கம் பிள்ளை அவ்வகையில் ஒரு முதல்வர், முன்னோடி. அதிகம்பேரால் தொடரப்படாதவரும்கூட. அவருக்குப்பின்னரும் கூட , இன்றுவரையிலும்கூட, இதைப்போல ஆட்சி, அரசியல் குறித்து தெளிவான ஓர் அன்றாட ஆவணப்படுத்தல் நிகழ்ந்து, நமக்கு கிடைக்கவில்லை.

ஓரளவேனும் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புடன் ஒப்பிடத்தக்கது ஸ்ரீரங்கம் கோயிலொழுகு, தஞ்சை மோடி ஆவணங்கள், திருவிதாங்கூர் அரசுடன் அழகியபாண்டிபுரம் முதலியார் எழுதிய கடிதத் தொடர்புகள். ஆனால் அவையெல்லாம் நடைமுறைத்தேவைக்கான பதிவுகள், காலத்தால் நம்மிடம் வந்துசேர்ந்தவை. ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு அவரால் வரலாற்றைப் பதிவுசெய்யவேண்டும் என்னும் தெளிவான நோக்குடன் எழுதப்பட்டது. அதை அவர் தனக்காக மட்டும் எழுதிக்கொள்ளவில்லை, எதிர்கால வாசிப்பு அவர் கவனத்தில் இருந்தது என்பதை அதன் குறிப்புகளிலிருந்து நன்றாகவே உணர முடிகிறது.

ஆனந்தரங்கம்பிள்ளை [1709 – 1761] பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளர் [துபாஷ்] என்னும் பதவியில் இருந்தார்.  . 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியுள்ளார்.  ஆனந்தரங்கம்பிள்ளையை தொடந்து ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 – 1801) ஆகிய நால்வரும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதியிருக்கின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இந்த நாட்குறிப்பு ஒர் இயக்கம்போல கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் வரலாற்றுச்சூழலில் மிக அரிய ஒரு நிகழ்வு இது.

நாட்குறிப்பு, செய்திக்குறிப்பு [chronicle] என்பது ஓர் ஐரோப்பிய வழக்கம்.பண்டைய ரோமாபுரி அரசின் காலம் முதல் மேற்கே இருந்துவருவது. ஆனந்தரங்கம் பிள்ளை இந்திய உடலில், இந்திய உள்ளத்தில் எழுந்த ஒர் ஐரோப்பிய நிகழ்வு. ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகளை வாசிக்கையில் அவர் ஐரோப்பிய நாட்குறிப்பு முறைமையை கற்று கடைப்பிடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. நுண்ணிய செய்திகளை பதிவுசெய்கிறார். முக்கியமானவை மட்டுமல்ல அவற்றுடன் இணைந்த சிறிய தகவல்களும் விரிவாகவே குறிப்பிடப்படுகின்றன. அளவுகள், இடங்கள், பெயர்கள் தெளிவாக ஆவணப்படுத்தப்படுகின்றன.

கல்வெட்டு,செப்பேடு,இலக்கியம் வழியாக நாம் உருவாக்கும் வரலாறு என்பது தொகைவரலாறு. அரசர்களின் ஆட்சிக்காலம், படையெடுப்புகள், பெருங்கட்டுமானங்கள் நிகழ்ந்தமை ஆகியவை மட்டுமே அதிலுள்ளன. மக்களின் வாழ்க்கை நிகழ்ந்த விதம், பண்பாட்டு மாற்றங்கள், வரலாற்றை நிகழ்த்திய நுண்காரணிகள் அவற்றில் இருப்பதில்லை. அவற்றுக்கு நாம் இலக்கியப்பதிவுகளையே நம்பியிருக்கிறோம்.இலக்கியம் காட்டும் வாழ்க்கை என்பது புனைவுத்தேவைக்கேற்ப உருமாற்றப்பட்டது. பெரும்பாலும் நேர்காலம் அதில் இருப்பதில்லை. ஆகவே அது நேரடிச் சான்று அல்ல. அதில் தற்செயலாகவே சமகால வாழ்க்கை இடம்பெறுகிறது. ஆகவே அதுவும் ஓர் ஊகமாகவே முன்வைக்கப்படவேண்டும்

ஆனால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு போன்றவை நம்பகமான நேரடிப் பதிவுகள். இவற்றிலுள்ள சிறியசெய்திகள், அன்றாடத்தகவல்களே மேலும் முக்கியமானவை. அவற்றை நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் வாசித்துக் கண்டுபிடிக்கலாம். அரசியல்வரலாறு சார்ந்த வாசிப்பு கொண்டவர்களுக்கு இது பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வரலாறுகுறித்த நேரடிப்பதிவு. சமூகவியல் ஆய்வாளர்களுக்கு இந்திய வாழ்க்கையை காலனியாதிக்கம் கையகப்படுத்துவதைப் பற்றிய பெருஞ்சித்திரம். இலக்கியவாதிகளுக்கு சென்றகால மக்கள் வாழ்க்கையின் நுண் விவரிப்பு. மொழியியலாளர்களுக்கு தமிழ் உரைநடையின் வளர்ச்சியை காட்டும் முதன்மை ஆவணம்.

ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகளின்  நுண்செய்திகள் இரண்டு வகையானவை. அக்காலகட்டத்தின் அரசியல் சூழலில் ஓர் ஐரோப்பிய ஆட்சிமுறைமை இங்கே அறிமுகமாகும்போது இந்தியாவின் தொன்மையான நிர்வாகமுறை, அரசராட்சியின் அடுக்குமுறை எவ்வண்ணம் அதை எதிர்கொள்கிறது என்பது முதன்மையானது. ஆனந்தரங்கர் காட்டும் ஏராளமான சடங்குசம்பிரதாயங்கள் அவ்வகையில் பார்க்கப்படவேண்டியவை. இரண்டாவதாக, வணிகம் மற்றும் நிர்வாகம் சார்ந்து அவர் சந்திக்கநேரும் சாதாரண மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புக்கள். இவற்றினூடாக ஒரு ‘இணைவரலாறு’ உருவாகி நமக்கு கிடைக்கிறது. பெருவரலாற்றின் இடைவெளிகளை அது நிரப்புகிறது.

உதாரணமாக, இன்று ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. இந்தியாவின் அரசு ஊழல் என்பது இங்குள்ள ஜனநாயகத்தின் ஒரு பக்கவிளைவு என்று. இது திரும்பத்திரும்ப மேடைகளில் சொல்லி நிலைநாட்டப்படும் ஒன்று. அரசர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஊழல்களைப்பற்றி மோடி ஆவணங்களில் நாம் பார்க்கலாம். ஆனந்தரங்கம்பிள்ளை பதிவுகள் பிரெஞ்சு கம்பெனி ஆட்சியில் கவர்னர் முதலான ஆட்சியாளர்களும் அவர்களின் ஊழியர்களும் கீழ் எல்லைவரை அடுக்கடுக்காகச் செய்த ஊழல்களை காட்டுகின்றன. ஊழல் என்பது அதிகாரச் செயல்பாட்டின் ஓர் அம்சம். பிரெஞ்சு, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் ஊழல்செய்வதற்கான மறைமுக அனுமதியை அளிப்பதன் வழியாகவே தங்களுக்குரிய உள்ளூர் அதிகாரிவர்க்கத்தை உருவாக்கிக்கொண்டன. அவை இந்தியாவைச் சுரண்டியபோது ஒத்துழைத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு ஊழலுக்கான வாய்ப்பு

அதேபோல அதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராடுவதும் ஜனநாயகத்தில் உருவான ஒன்று என்னும் எண்ணம் நமக்கு உண்டு. திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளை முதலியார் ஓலைகள் காட்டுகின்றன. ஆனந்தரங்கம் பிள்ளை குறிப்புகளில் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்புகளும் அவற்றை சமரசம் – அடக்குமுறை என இருமுனைப் படைக்கலத்தால் ஆட்சியாளர்கள் கையாண்டதும் தொடர்ச்சியாகக் காட்டப்படுகிறது.

நுண்தகவல்களின் பெருக்கு என இந்நூலைச் சொல்லலாம். உதாரணமாக அக்காலப் படையெடுப்புகள் பற்றிய செய்திகள். மராட்டியரின் படைகள் ஒருநாளில் ஐம்பது முதல் அறுபது மைல் தொலைவுவரை பயணம் செய்கின்றன. வழியிலுள்ள ஊர்களை முழுமையாகச் சூறையாடியபடியே செல்கிறார்கள். அதில் எதிரிநாடு நட்புநாடு, இந்து முஸ்லீம் என எந்த பாகுபாடும் இல்லை. போர் ,கொள்ளை, சூறையாடல் ஆகிய மூன்றும் ஒன்றே.

நம் பாடநூல்கள் மராட்டியர் நம்மவர், வெள்ளையர் அன்னியர் என உருவாக்கும் சித்திரத்திற்கும் இந்த உண்மைவிவரணைக்கும் தொடர்பே இல்லை. மாரட்டிய படையில் கணிசமானவர்கள் இஸ்லாமியர் என்பதும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்தியச்சூழலில் ஐரோப்பிய படைகளை மக்கள் ஒருவகையில் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஏன் என்பதை இக்குறிப்புகள் வழியாகக் காணலாம். ஒப்புநோக்க கட்டுப்பாடு மிக்க நவீன ராணுவங்கள் ஐரோப்பியருடையவை.

ஆனந்தரங்கரின் குறிப்புகளில் தொடர்ச்சியாக மதப்பூசல்கள் நிகழ்வது பதிவாகியிருக்கிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமான பூசல்கள் மட்டுமல்ல இந்துக்களுக்குள் சைவர்களுக்கும் வைணவர்களுக்குமான பூசல்களும் நிகழ்கின்றன. பிரெஞ்சு அரசு கிறித்தவச் சார்பு கொண்டது, கிறித்தவ மதத்தை நிறுவவும் எண்ணம் கொண்டிருக்கிறது. ஆனால் மதப்பூசல்கள் நிர்வாகத்திற்கும் வணிகத்திற்கும் இடைஞ்சல் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆகவே எப்போதுமே மதத்தை ஒரு படி கீழாகவே வைத்திருக்கிறார்கள்.

வரலாறு இரண்டு வகை. அரசர்வரலாறு, மக்கள் வரலாறு. தமிழகத்திற்கு ஒரு மக்கள் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை. ஆனால் நாட்டாரியல் ,சமூகவியல் போன்ற துறைகளின் உதவியுடன் ஆங்காங்கே மக்கள்வரலாற்றின் சில பகுதிகள் எழுதப்படுகின்றன. எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள்வரலாறு தமிழகத்திற்கு எழுதப்படுமென்றால் அதற்குரிய முதன்மையான ஆவணத்தொகையாக அமையும் தகுதிகொண்டது ஆனந்தரங்கம்பிள்ளையின் தினப்படிச் சேதிக்குறிப்பு

ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகளின் அச்சேற்ற வரலாறு 

முந்தைய கட்டுரைவிழா ,கடிதம்-கதிர்முருகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32