விற்பனை முகவர்களைப் பற்றி எப்போதுமே எனக்கு ஓரு வியப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா விற்பனையாளர்களைப் பற்றியும் அந்த வியப்பு உண்டு. சாலையோரங்களில் கடைகளைப் பார்த்தபடி நடக்கையில் ‘அய்யோ இங்கெல்லாம் எப்படி வியாபாரம் ஆகும்!’ என்று பதற்றம் கொண்டபடியே இருப்பேன். சிலசமயம் சில கடைகள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த உரிமையாளரை எண்ணி அனுதாபப்படுவேன். விற்பனை என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு தெய்வத்திடம் மன்றாடுவது என்பது என் எண்ணம். அந்த தெய்வம் சுயநலம் மிக்கது. பொருட்படுத்தாதது. புண்படுத்தத் தயங்காதது.
இளமையில் பலவேலைகளுக்குச் செல்ல எண்ணியிருக்கிறேன். முயன்றுமிருக்கிறேன். எதையும் எங்கும் விற்கச்செல்வதைப்பற்றி மட்டும் கற்பனைகூடச் செய்ததில்லை. விற்பனையாளர் என்பவர் விதியையும் தெய்வத்தையும் ஆழமாக நம்புபவர் , தற்செயலை நம்பி குலுக்கல்சீட்டு வாங்குபவர் என்பது என் எண்ணமாக இருந்தது.
தமிழின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் துணிகளுக்கான விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். அவர் சற்றும் வெற்றிபெறாத தொழில் அது. வாழ்க்கையின் விரட்டலால் அதை அவர் செய்ய நேர்ந்தது. கோவையில் இருந்து சுந்தர ராமசாமியைக் காண வருவார். நான் அப்போது அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் அரை டன் எடையைச் சுமந்துகொண்டிருப்பவர் போலத் தோன்றுவார். அவர் இடத்தில் என்னைக் கற்பனைசெய்து உளம் கரைவேன்
அந்நாட்களில் ஒருமுறை சுந்தர ராமசாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதை பற்றிய விவாதம் நிகழ்ந்தது. அதில் ஒரு சிறுவன் பேருந்தில் சீப்பு விற்கிறான். ஒருவர் அவனிடம் ஒரு சீப்பை வாங்கி விலைகேட்டு தலையைச் சீவிவிட்டு சீப்பை திருப்பிக்கொடுக்கிறார். அவன் அழுகிறான். சுந்தர ராமசாமி “அது வெளியுண்மைகளை பாக்கத்தெரியாம எழுதின கதை. அந்தப்பையன் அங்கேயே சீப்பு வித்திட்டிருக்கிறவன். அவன் அழமாட்டான்” என்றார்.
நான் வியப்புடன் “ஏன்?” என்றேன். ஏனென்றால் அந்த சிறுகதையாசிரியரின் உளநிலையிலேயே நானும் இருந்தேன்.”அவன் அன்னிக்குத்தான் முதன்முதலா சீப்பு விக்க வந்தவன்னா அழுவான். அங்கேயே வித்திட்டிருக்கிறவன்னா அதை எப்டி எடுத்துக்கிடுறதுன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும். ஒண்ணு, அதை பெரிசா நினைக்கமாட்டான். கஸ்டமர்களிலே அப்டியும் ஒருத்தன்னு நினைச்சுகிடுவான். இல்லை கொஞ்சம் கூர்மையான பையன்னா அந்த கஸ்டமரோட மனசு எப்டிப்பட்டதுன்னு புரிஞ்சுக்கிட முயற்சிபண்ணுவான்”
சுந்தர ராமசாமி சொன்னார். விற்பனை என்பது ஒரு விளையாட்டு. அதில் சிலகாலம் நீடிப்பவன் அந்த விளையாட்டில் சுவை கண்டுவிடுவான். பல வியாபாரிகள் இரவுபகலாக கடையிலேயே அமர்ந்திருப்பது லாபவெறியால் அல்ல. அவன் ஆடும் அந்த சுவாரசியமான விளையாட்டு அங்கே நடப்பதனால்தான். அதில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. வெற்றியெல்லாம் லாபம், தோல்வியெல்லாம் பாடம். செட்டியார்கள் பேரேட்டில் நட்டம் என எழுதமாட்டார்கள், புத்திக்கொள்முதல் என்றுதான் எழுதுவார்கள்.
.
முதல்முறையாக விற்பனையாளன் என்பவன் ஒரு விந்தையான ஆட்டத்தில் இருப்பவன் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு கணமும் விழிப்புடன் அவன் தன் காய்களை நகர்த்துகிறான். தன் பொறிகளை அமைக்கிறான். இரைகளை வீழ்த்துகிறான். வெற்றியை வெளிக்காட்டாமல் இருக்கிறான். அக்கறையின்மையை காட்டுகிறான். அந்த ஆட்டத்திற்குரிய எல்லா நடிப்புகளையும் சொற்களையும் கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறான்.
அதன்பின்னர்தான் கவனித்தேன், அரசுவேலைகளில் இருப்பவர்கள் மிகவிரைவிலேயே உளம்செத்து சோர்வான சலிப்பான மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். பெரும்பாலும் எல்லா வேலையிலும் அப்படித்தான் ஆகிறார்கள்.ஏனென்றால் வேலை என்பது ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது. அதில் தேர்ச்சி பெறுந்தோறும் அது சலிப்பூட்டத் தொடங்குகிறது. பலவேலைகள் ஓரிரு செயல்பாடுகள் மட்டுமே
ஆனால் வியாபாரிகள் அப்படியல்ல. அவர்கள் பெரும்பாலும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். எதையாவது படைப்பவர்கள் ஊக்கத்துடன் இருக்கிறார்கள் என்பது இயல்பு. அவர்களுக்கு ஒரு படி கீழாக இருந்தாலும் வியாபாரிகளும் எப்போதும் விழிப்பாக, தங்கள் திறன்குறித்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சற்று வெற்றிகரமாக தொழில் அமைந்தால்போதும் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
ஏனென்றால் அவர்கள் வேட்டைக்காரர்கள். அன்றன்றைய வேட்டையை அன்றன்று அடையவேண்டியவர்கள். அவர்களுடன் மறுபக்கம் இருந்து ஆடுவது அவர்களை விட மிகப்பெரிய ஒரு அமைப்பு – நுகர்வோர், அல்லது வாடிக்கையாளர். அது ஒரு கூட்டு ஆளுமை. அது விராடரூபம், பல்லாயிரம் கைகள், பல்லாயிரம் கண்கள், பல்லாயிரம் மடங்கு உள்ளம் கொண்டது, அதை அவன் களத்தில் சந்தித்து வென்றும் தோற்றும் ஆடுகிறான்.
அந்த சுவாரசியத்தை அடைந்தவர்களுக்கு வியாபாரம் என்பது ஒரு கொண்டாட்டம். அவர்கள் ஒருபோதும் வேறொரு தொழிலுக்குச் செல்லமுடியாது. அவர்களால் எங்கும் இதுபோதும் என்று அமர்ந்துவிடமுடியாது.
அந்த ஆட்டத்தின் விதிகளைச் சொல்லும் உற்சாகமான, சுருக்கமான நூல் நண்பர் ஜா.ராஜகோபாலன் எழுதிய ஆட்டத்தின் ஐந்து விதிகள். ஒரு காப்பீட்டுத்துறைப் பயிற்சியாளராக தன் அனுபவங்கள் வழியாக, தான் கற்றுக்கொண்டதன் வழியாக இந்நூலை எழுதியிருக்கிறார். வழக்கமான “செயலூக்கம் அளிக்கும்’ நூல் அல்ல இது. இது அந்த ஆட்டத்துக்கான ஊக்கத்தை மட்டும் முன்வைக்கவில்லை. அதற்கான வழிகளை சுட்டிக்காட்டுகிறது.சிக்கல்களை ஆராய்கிறது.
இந்நூல் கையாளவிருப்பது பேருருவம் கொண்ட நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் என்னும் கூட்டு ஆளுமையை, அல்லது ஒரு குட்டிச் சமூகத்தை. சமூகம் பண்பாடு என நாம் சொல்லும் இந்தப்பேரமைப்பின் இன்னொரு வடிவம்தான் இது. அதன் அத்தனை சிக்கல்களையும் ஒரு விற்பனையாளன் கையாள முடியுமா என்ன?
இது அந்த பேருருவனை அவன் பொருளை வாங்கும் கணத்தில் மட்டும் நிறுத்தி அங்கே அவன் வெளிப்படுவதை மட்டும் கொண்டு வரையறை செய்கிறது. அங்கே அவனைக் கையாள்வதைப் பற்றிப் பேசுகிறது. நம் கூடாரத்திற்குள் வருவது ஒட்டகத்தின் தலை மட்டும்தான் என்றால் கையாளவிருப்பது சற்றே பெரிய ஒரு முயல் வடிவ உயிரை — அவ்வளவுதானே? ஆகவேதான் இந்நூல் கச்சிதமான சிறிய வடிவில் உள்ளது
வாடிக்கையாளன் என்பவன் அந்த விற்பனைத் தருணத்தில் தன்னை ஒருவகையாக வரையறைசெய்து முன்வைக்கிறான். அவன் மேஜைமேல் வைக்கும் சீட்டு அது. அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு அந்த ஆளுமையை வென்றெடுக்க முயல்வதை முதல் விதியாகப் பேசுகிறது இந்நூல். எவ்வகையிலேனும் வாடிக்கையாளர் முன்வைக்கும் அந்த சுயஆளுமையை விற்பனையாளன் மறுப்பான் என்றால் அவன் வாடிக்கையாளரைத்தான் மறுக்கிறான்
அத்தனை ஆட்டவிதிகளுக்கும் மேலே நின்றிருக்கும் விதி மாறாத புன்னகை என்பது. உண்மையில் இந்தியாவில் மரபான வணிகர்களுக்கு மட்டுமே இவ்வழக்கம் உள்ளது என்பதைக் கண்டிருக்கிறேன். புதிதாக வணிகத்தில் இறங்கும் பலர் புன்னகையையே கற்றுக்கொள்வதில்லை. அது அவர்களை எந்த அளவுக்கு அன்னியப்படுத்துகிறது என அவர்கள் அறிவதில்லை.
ஐரோப்பாவும் அமெரிக்காவுமெல்லாம் வணிகத்தின் நிலங்கள், நுகர்வோருக்கு மைய இடம் கொடுப்பவை. ஆனால் நான் ஜப்பானில் பயணம் செய்யும்போதுதான் வணிகர்களிடம் மெய்யான முகமலர்வு என்பதைக் கண்டேன். அது நடிப்பு அல்ல. அவ்வளவு பொழுது நடிக்க முடியாது. அது வணிகத்தை, அதன் ஆடலை, மெய்யாகவே ரசித்துக் கொண்டாடும் ஒருவரின் முகம். அந்த முகமே அவருடைய முதல் சீட்டு. அதை மேஜையில் வைத்ததுமே அவர் வென்றுவிடுகிறார்
தமிழில் விற்பனைக்கலை பற்றி எழுதப்பட்ட அரிய அசலான நூல்களில் ஒன்று இது.