அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்

 

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்

 

அன்புள்ள ஜெ,

கிருஷ்ணன் இவ்விஷயத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு கொள்வார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நாம் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நான் என் நினைவறிந்து ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் சிக்கல்களை உங்களிடம் கூறிக்கொண்டு தான் இருக்கிறேன்.

2018, புதிய வாசகர் சந்திப்பில் நண்பர் ஜனார்த்தனன் உங்களிடம் முன்வைத்த கேள்வி எனக்கு வாசிக்க வேண்டும் எழுத வேண்டுமென்ற ஆவல் நிறைய உள்ளது ஆனால் என் குடும்பமும் சுற்றமும் அதற்கு நேர்மாறான நிலைக்கே என்னை கொண்டு செல்கின்றனர் என வருந்தினார். அன்றிலிருந்து இன்று வரை நானே பலர் உங்களிடம் முறையிடுவதைக் கேட்டிருக்கிறேன். உங்கள் மூலம் பல கடந்தகால வாசகர்களையும் அறிந்திருக்கிறேன்.

நான் பைத்தியம் ஆகிவிடுவேனோ எனக் கவலை கொண்டு எங்கள் அம்மா வேண்டாத தெய்வமில்லை. உள்ளதைச் சொல்ல வேண்டுமானால் என் அம்மாவிற்கும், தங்கைக்கும் உங்கள் மேல் தனி வெறுப்பே உண்டு. அது வெளிப்படும் தருணங்களில் நானே பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அவ்வெறுப்பு என்பது என்னை அறியாமலேயே அவர்கள் மனதில் உருவானது அதனை என்னால் விளக்கவும் முடியாது அதனை எதிர்த்து அவர்களிடம் பேசவும் முடியாது. இத்தனைக்கும் என் அப்பா தீவிரமான வாசகர். ஜெயகாந்தனையும், சுந்தர ராமசாமியையும் அதே நேரம் சுஜாதா, ராஜேஷ் குமார் இன்னும் இறங்கி விகடன், குமுதம் என ஒன்று விடாமல் வாசிக்கக் கூடியவர். என் அப்பா உங்கள் காடு, கொற்றவையை நான்கு நாட்களில் வாசித்து முடித்துவிட்டார். ஆனாலும் என் வீட்டிலும், சொந்தங்களுக்கு இடையிலும் ஒருவன் வாசிக்கிறான் என்பது தேவை இல்லாமல் தன்னை வருத்திக் கொள்கிறான் என்றே எண்ணுகின்றனர்.

இங்கே வாசிப்பு என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமே, அதைத் தாண்டி ஒரு படி மேலே சென்றாலும் அது வாழ்க்கையை அழித்துவிடும் என்றே நினைக்கின்றனர். அதுவும் ஒரு குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் பார்த்துக் கொள்பவன் வாசிக்க எண்ணுவதே தவறான ஒன்று.

இங்கே பெங்களூருக்கு ஒரு முறை என் அத்தையும், மாமாவும் வந்துவிட்டு என் மாமா என் நடவடிக்கைகளைக் கண்டு என் அத்தையை என்னிடம் தனியாகப் புத்திமதி சொல்லுமாறு அறிவுறுத்தினார்.

என் மொத்த குடும்பத்திலும் உள்ள இலக்கிய வாசகன் நான் தான், என் மாமா, அத்தை பசங்களெல்லாம் வேலையில் மூழ்கியவர்கள். கதவைச் சாத்தி வெளியில் துரத்தி விட்டால் மட்டுமே அவர்கள் அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்கள். நான் ஆறு மணிக்கே வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என்பது அவர்கள் வாழ்க்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத பெரும் குற்றம்.

”சரி வந்தும் எதுவும் உருப்படியா வீட்டோட டி.வி. கிவி பாக்காம தனியா போய் படிக்க வேறு செய்கிறான்” என்று மாமா பிலாக்கணம் வேறு.

நாம் நம் பள்ளி சூழலிலிருந்தே இதற்கு பயிற்றுவிக்கப்பட்டு வளர்கிறோம். நாம் நம் தேவைக்கு அதாவது பரீட்சைக்குப் போக மிதமிஞ்சி ஒன்றைக் கற்பது என்பது தமிழ் சூழலில் முடியாத ஒன்றே. சுய விருப்பத்தில் கூட ஒன்றை கேட்டோ, படித்தோ அறிய இயலாது. ஆகவே இங்கே சராசரியாக ஒருவன் கல்லூரியிலோ இல்லை வேலைக்கு சென்ற பின்னரோ தான் வாசிக்கத் தொடங்க முடியும். அதுவும் அவன் தற்செயலாகவே வந்து சேர்கிறான். தற்போதைய கால கட்டத்தில் அவன் பொருளாதார தேவைகளுக்கும், குடும்பத் தேவைகளுக்கும் நடுவே வாசித்து நேர விரயம் செய்வது சுற்றியுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றே.

என் ஐ.டி பணி என்பது தொடர்ந்து வேலையைக் கூறும் பணி அல்ல ஆனால் ஒரு கால நிர்ணயத்தில் வேலை செய்ய இயலாத ஒரு இடம். பகல் கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் இரவு தேவைப்படும் நேரங்களில் உழைத்தாக வேண்டும். ஆனால் பல நாள் பகல் வேலை என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கும். ஆகையால் என் வாசிப்பை இரவு வீட்டில் மட்டுமே திட்டமிட முடியாது. பகலில் கணினி இருப்பதால் அதில் வாசிக்க சகல வசதிகளும் உண்டு ஆனால் என்னால் அங்கே வாசிக்க முடியாது. பல நாட்கள் என் மேலதிகாரி என்னை திசைத் திருப்ப என்னிடம் வந்து வெட்டிக் கதைப் பேசியிருக்கிறார். அதாவது எதையும் வாசிக்க அனுமதிப்பது என்பது என்னை வேலை சூழலில் இருந்து முற்றுமாக விலக்கி வைத்து விடும் என்பது அவர் எண்ணம். மாறாக நான் வெட்டியாக இருந்தால் கூட அவர் கண்டு கொள்ள மாட்டார்.

என் ஆளுமையைப் பற்றி நான் அறிவேன். என் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி என்னை நான் எந்த சூழ்நிலையிலும் ஒடுங்கி ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தியது இல்லை. யாரிடமும் சகஜமாகப் பேசி சமாளிக்கும் சாமர்த்தியம் எனக்குண்டு. மேலும் யாரையும் புண்படுத்தாமல் பேசி அவர்களிடமிருந்து விலக வந்தும்விடுவேன். இத்தனை வருடத்தில் என் வீட்டிலும், அலுவலகத்திலும் எனக்கென்று ஒரு செயல்முறையை வகுத்தவன் நான். இவ்வாறு தான் வேலை செய்வேன் என்று அறிந்து அதற்கேற்பவே என் உடன் பணிபுரிபவர்களும் என்னுடன் ஒத்திசைந்து பணிபுரியப் பழகியிருக்கிறார்கள். ஆகவே கிருஷ்ணன் கூறிய ஒடுங்கிய ஆளுமை என்பதும் என் விஷயத்தில் பொருந்தாது.

ஒருவன் இலக்கியத்துள் நுழைவதென்பது பல வித சமூக கட்டமைப்புகளை மீறியே உள்ளே வர இயல்கிறது. நீங்கள் சொல்வது போல் ஒரு அட்டையை போட்டு தன்னை மறைத்துக் கொண்டு இரகசியமாகச் செய்வதே சாத்தியம். அதை வெட்டவெளியில் விட்டுவிட்டால் அதனால் ஏற்படும் எதிர்வினைகளை சந்திக்கவே தனி மனம் வேண்டும் (அதுவும் திடகாத்திரமாக இருக்க வேண்டும்).

பெண்கள் இலக்கியத்துள் நுழைவது என்பது மேலும் சிக்கல். நம் விஷ்ணுபுரம் வட்டத்திலுள்ள ஒரு பெண் நண்பர் போன விஷ்ணுபுரம் விழாவிற்கு வருவதற்கு அவர் வீட்டில் எத்தனை தடை ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியும்.

எனவே கிருஷ்ணன் கூறுவது போல் வாசகனுக்கு ஏற்படும் மதிப்பு என்பது ஒரு வித மாயை தான். ஒருவன் இங்கே வாசிக்கிறான் என்பதற்காக மதிப்போ, சலுகையோ குறைந்தபட்சம் அவனை தொல்லை செய்யாமல் விட்டுவிடும் சூழலோ நம் தமிழ் மனங்களின் மத்தியில் கிடையாது. அவை அனைத்தும் உருவாவது போல் தோன்றும் பொய் பிம்பமே.

இதற்கு ஒரு காரணமாக என் மனதில் தோன்றுவது நம் தமிழ் மண்ணில் எழுத்தாளன் என்ற தனித்த ஆளுமைக்கு பொதுவில் எந்த இடமும் கிடையாது. பெரும்பானவர்களுக்கு அப்படிபட்டவர்களேயே தெரியாது, அப்படியே தெரிந்திருந்தாலும் நல்ல அபிப்பிராயம் உருவாகியிருக்காது.

நீங்கள் உங்கள் பேட்டியில் சொல்வது போல் அந்தந்த இடங்களிலுள்ள அரசியல் அமைப்புகளும் முக்கிய காரணம். உடன் கல்வி நிலையங்களும் என நான் சொல்வேன். கர்நாடகத்தில் ஒரு எழுத்தாளனைப் பற்றிச் சொன்னால் அவர் மேல் எழும் நன் அபிப்பிராயத்தை நானே பார்த்திருக்கிறேன். அவர்கள் தன் வாழ் நாளில் ஒரு புத்தகம் கூட படிக்காதவர்கள் ஆனால் எழுத்தாளன் என்ற ஒருவரைச் சொல்லும் போது அவர்கள் பொது மனதில் எழும் மரியாதையைக் கண்டிருக்கிறேன். என் சமூகத்தின் மேலான குரல் இவன் என்ற புரிதல் உள்ளவர்கள். இதற்கு இங்குள்ள கல்வி நிலையங்களும், அரசியல் அமைப்புகளும் ஆற்றிய பங்கு அதிகம்.

மேலும் இங்கே நான் மேலே சொல்வது அனைத்தும் என் சுற்றம் சார்ந்த, எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் (அ) புரிதலாக இருக்கலாம் ஆனால் என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும் இதுவே இங்கே பொது சூழ்நிலையும் கூட. விதிவிலக்காக கிருஷ்ணன் சொல்வது போல் இருக்கலாம். ஆனால் பொதுவென்று எடுத்தால் இது தான் நிலைமை. அதனை தங்களுக்கு வரும் கடிதங்கள் உறுதி செய்யும்.

 

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

 

அன்புள்ள நவீன்

 

கிருஷ்ணன் அவருடைய நம்பிக்கையைச் சொல்கிறார். அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இல்லை. நான் நடத்திய அத்தனை புதியவாசகர் சந்திப்பிலும் வாசிப்பதனால் நண்பர்களிடம் தனிமைப்படுத்தப்படுவதைப்பற்றி, குடும்பத்தின் எதிர்ப்பு பற்றி, சூழலில் இருக்கும் இளக்காரம் பற்றி இளம்வாசகர்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு சந்திப்பில்கூட ஒருமுறைகூட இதுபற்றி ஓர் உரையாடல் நிகழாமல் நிறைவு பெற்றதில்லை. எந்த உரையாடலிலும் எந்த வாசகரும் அப்படியெல்லாம் இல்லை, எனக்கு மதிப்பு கிடைக்கிறது என்று சொன்னதுமில்லை

 

ஜெ

 

அன்பின் ஜெ..

கிருஷ்ணனின் கடிதத்துக்கான உங்கள் மறுமொழி, அதற்கு என் சொந்த அனுபவத்தைக் கொண்டும் என் அவதானிப்பைக் கொண்டும் பதில் சொல்ல வேண்டும் என ஒரு உந்துதலை ஏற்படுத்தி விட்டது.

என் மகள் முதுகலை வளர்ச்சியியல் படித்தாள். அவளின் படிப்பு என்பது என்ன என்பதை, எழுத்துக் கூட்டிப் படிக்கும் என் பெற்றோருக்கு விளக்க முடிந்ததில்லை. ஒரு முறை ஆங்கில இந்துவில் அவள் எழுதிய கட்டுரையை அவர்களிடம் காண்பித்தேன். அவர்கள் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டார்கள்.

’நல்லாப் படிக்கறாளா?”, என்று மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்வார்கள். என்னைவிட, விஜியை விட நல்லாப்படிக்கிறாள் எனச் சொன்னதும் அவர்கள் கண்களில் ஒரு நிம்மதி தெரியும். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அப்பா கேட்டார்,

“புள்ளைக்கிக் கல்யாணம் பண்ணலியா?’

நான் சொன்னேன், அவள் முனைவர் படிப்புக்கு வெளிநாடு செல்லக்கூடும். அதனால் கல்யாணம் செய்ய வாய்ப்பில்லை.

படிப்பு எத்தனை வருஷம் எனக் கேட்டார் – 6-7 வருஷம் ஆகலாம் எனச் சொன்னதும், ‘அய்யோ’ என வார்த்தை வந்தது.

அப்படின்னா 30-32 வருஷமாயிருமே.. அதுக்கப்பறம் கல்யாணம் எப்பப் பண்ணிக்கறது?

அதை அவளே முடிவு பண்ணட்டும்னு சொன்னேன் – அது சரி.. நல்லபடியாப் படிச்சு, நல்லா இருந்தா சரி – 28 வருடங்களுக்கு முன்பு, சாதி மீறிய திருமணத்துக்குப் பெரும் தடை போட்ட, மிரட்டிய சமூகத்தின் பிரதிநிதி அவர்.

அவரும் அம்மாவும்,  ‘இன்றைய காந்திகள்’, புத்தகத்தை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

நான் அவதானித்த வரையில், 40 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்துகளில் சென்று வந்ததில், ஒரு முறை கூட, புத்தகம் படிக்கும் எனக்கு ஒருவர் கூட எதிர்மறை அறிவுரை வழங்கியதில்லை. ஆனால் உங்களுக்கு ஏன் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது என யோசித்தேன்.

நான்  வேலை நிமித்தம் ஆஃபிரிக்கா செல்கிறேன் என்றதும், என் உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி, ’பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கவா’. என. இது ஒருவிதமான அசூயை.

தனக்கு முன் 5 ½ உயரத்தில் நிற்கும் இந்த சாதாரண ஆசாமிக்கு எப்படி இவ்வளவு புத்தகங்கள் எழுத முடிகிறது என்னும் ஒரு பொறாமை. அதுதான் நீங்கள் எழுதிய பல நிகழ்வுகளுக்கான அடித்தளம் என்பது என் அனுமானம். புதுச்சேரியில் ஒருமுறை, ஒரு மனிதர், நாஞ்சிலிடம், வாலி எவ்வளவு பெரிய இலக்கியவாதி என வாதிட்டதை எழுதியிருந்தீர்கள் – அதுவும் ஒருவிதமான அசூயையின் வெளிப்பாடுதான் – எனக்கும் இலக்கியம் தெரியும்னு வருது. அதுதான் புத்தகங்களின் மீதான எதிர்மறையான விமர்சனமாக உங்கள் காதுகேட்க சொல்லப்படுகிறது. நீங்கள் சினிமாவுக்கு வசனம் எழுதிச் சம்பாதிக்கிறீர்கள் என்பது, பலருக்குக் கூடுதல் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.

எனவே, நீங்கள்  (நாஞ்சில் உள்பட) விதிவிலக்கு – உங்கள் அனுபவத்தை வைத்து, மொத்த சமூகத்தையும் அப்படியே காண்கிறீர்கள் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் புத்தகம் படிக்கும் வழக்கம் – எங்கள் வீட்டுக் குழந்தைகள் (ஒருவர் தவிர) உட்படக் குறைந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள். ஆனால், ஒருபோதும் வீட்டில் உள்ள பெரியவர்களோ, மனைவியரோ இதைக் குறை கூறிக் கண்டதில்லை. வீட்டு வேலை செய்யாமல், தேர்வுக்குப் படிக்காமல் இதைச் செய்தால், நிச்சயம் பிரச்சினை வரும். உண்மையான வாசகர் இதை ஒரு சாக்காகச் சொல்ல மாட்டார் – சொல்பவர்கள், தங்கள் இயலாமையை மறைக்கச் சொல்பவர்களே.

கடிதத்தில் எழுதியிருந்த நிகழ்வில், தன் முன்னே இருந்த பெரியவரை கீழ்த்தரமான வார்த்தையில் திட்டிய உங்கள் வாசகர், உங்களை இன்னும் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ளவில்லை என்றே படுகிறது.

அன்புடன்

பாலா

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
அடுத்த கட்டுரைகாந்தியின் உணவு பரிந்துரை