அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

என் சொந்த அனுபவத்தில் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களால், நான் வாங்கும் நூல்களால் வாழ்க்கைக்கு என்ன பயன் என்ற கேள்வி எப்போதும் எனை நோக்கி வைக்கப்படுகிறது.

புத்தக கண்காட்சி என்பது அவர்களைப் பொறுத்த அளவில் பொது அறிவு, ஆன்மிக, சோதிட நூல்கள் வாங்குமிடம் மட்டுமே. 100 நாட்களில் பங்கு சந்தை புலி, 50 நாட்களில் லட்சாதிபதி போன்ற தலைப்புகள் மகிழ்விக்கலாம். மற்றபடி இலக்கியம் தன்வரலாறு நூட்கள் அவர்களைப் பொறுத்த அளவில் பண விரயமே.. அனைவருமே நல்ல பணியில் 6  இலக்க ஊதியம் பெறுபவர்கள் என்பது கூடுதல் தகவல்..

 

அன்புடன்,

ஞானசேகர் வே

 

 

அன்புள்ள ஜெ,

தமிழத்தில் புத்தகம் படித்தால் மதிக்கப்படுவோமா என்றால் சொல்லத்தெரியவைல்லை, ஆனால் விலக்கப் படுவோம் என்று சொல்ல முடியும்..

அதிலும், விகடன், வைரமுத்து அளவுக்கு வாசித்தால் பாதகமில்லை.. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் என்றெல்லாம் படித்தால் கொஞ்சம் அன்னியமாகத்தான் பார்க்கப்படுகிறோம்..

நான் பழகும் வட்டத்தில், அனேகமாக அனைவருமே பட்டப்படிப்பு அல்லது அதற்குமேல் படித்தவர்கள். தமிழ்ப் பெருமை பேசுபவர்கள். ஆனால் யாருக்குமே தமிழில் இலக்கியம் படிப்பவனோடு பகிர்ந்துகொள்ள ஒரு சொல் கூட இல்லை.

புதிரான ஒரு விஷயம் – தமிழ்ப் பெருமை உயர உயர, இலக்கியத்தில் இருந்து விலகித்தான் நிற்கிறார்கள். என் நட்பு வட்டாரத்தில், தமிழிலோ ஆங்கிலதிலோ பொருட்படுத்தும்படி எதையேனும் வாசிப்பவர்கள் எவருமே தமிழ் குறித்து மிகையாக உணர்ச்சிவசப்படாதவர்கள் தான்..

அது என்னமோ, நான் தமிழ் இலக்கியங்களை வாசிப்பது (வைரமுத்துவைத் தாண்டி) ஒரு ரகசியச் செயல்பாடாகவே இருக்கிறது.. இத்தனை 100 நண்பர்களில், உங்கள் பெயரைப் பகிரமுடிந்த நண்பர்கள் 3 அல்லது 4 பேர்தான்.. அதிலும் ஒருவர் “எனக்கு சாருவைப் பிடிக்காது, ஜெயமோகனைத்தான் பிடிக்கும்” என்று சொன்னவுடன், கொஞ்சம் சந்தேகமாகத் தான் என்னைப் பார்த்தார்..

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

தமிழகத்தில் அறிவுச்செயல்பாடு பற்றி எழுதியிருந்தீர்கள். இதில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவம் சார்ந்தே பதிலெழுத முடியும். என்னுடைய அனுபவம் இதுவே. பொதுவெளியில் வாசிப்பது, தமிழகத்தில் மிக அபாயமானது. தொழில்சார்ந்த நூல்கள், அதிலும் ஆங்கிலநூல்களாக இருந்தால் ஓரளவு ஆபத்தில்லை. மற்றபடி பிழைக்கத்தெரியாதவன், குழப்பவாதி என்றபெயர்தான் மிச்சம்

நான் தொழில்செய்து வருகிறேன். என் தொழிலில் ஒருவர்கூட என்னிடம் நான் வாசிப்பதைப்பற்றி பாராட்டாகவோ அல்லது பரவாயில்லை என்றோ சொன்னதில்லை. இதெல்லாம் எதுக்கு என்றுதான் நேரில் சொல்வார்கள். மறைமுகமாகப் பேசும்போது கிறுக்கன் என்று சொல்வார்கள். இத்தனைக்கும் நான் தொழிலில் வெற்றிகரமாகவே இருக்கிறேன். வாசிப்பது நமக்கு எதைத்தருகிறது என்பது தமிழ்ச்சமூகத்தின் பொதுவாக உள்ள மக்களுக்கு சற்றும் புரியாது

ரயிலில், பேருந்தில் எல்லாமே இதே அனுபவம்தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் வேறுபாடு. அங்கே நாம் எதைச்செய்தாலும் எவரும் கவனிக்க மாட்டார்கள். ஆகவே எந்தப்பிரச்சினையும் இருக்காது

சிவசுப்ரமணியம்

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
அடுத்த கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-1