‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 7

புரவிகளைத் தொடர்ந்த படைகள் ஒருநாளிலேயே அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டன என்று செய்தி வந்தது. கிழக்கே அவை மகதத்திற்குள் நுழைந்தன. மேற்கே சிந்துவை நோக்கி சென்றன. வடக்கே குருநாட்டை கடந்தன. தெற்கே மச்சர்நிலங்களுக்குள் புகுந்தன. அவை செல்லும் பாதையை அஸ்தினபுரியின் அரண்மனையில் ஒரு பலகையில் படமாக வரைந்திருந்தனர். அவை செல்வதற்கு ஏற்ப அதில் வண்ணத்தால் அடையாளப்படுத்தினர். ஒவ்வொரு நாளும் அரண்மனை ஊழியர்கள் அதன்முன் வந்து நின்று ஆர்ப்பரிப்பதைக் கண்ட யுதிஷ்டிரன் அதை அரண்மனைக்கு வெளியே மிகப் பெரிய பலகை ஒன்றில் வரையும்படி ஆணையிட்டார். அதன் முன் எந்நேரமும் மக்கள் திரள் நின்றிருந்தது. அதில் செல்லும் படைகளின் நிலை சற்றே மாற்றியமைக்கப்படுகையில் ஆரவாரம் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டு எல்லையிலும் அந்நாட்டு அரசனே தன் அமைச்சர்களுடன் வந்து காத்து நின்று புரவியை எதிர்கொண்டான். அதற்கு பொன், பட்டு, மலர், சுடர், நீர் என ஐந்து மங்கலங்கள் காட்டி, அதன் முன் வாள் தாழ்த்தி வரவேற்றான். அஸ்தினபுரிக்குரிய திறையைச் செலுத்தி முடி தழைத்தான். செல்லும் நாடுகளில் நால்வரும் பெற்ற செல்வம் உடனே சிறிய படையுடன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அவர்களிடம் சிறிய படைத்துணை ஒன்றை பெற்றுக்கொண்டு அது மேலே சென்றது. எனவே செல்லுந்தோறும் பெருகியது. ஆரியவர்த்தத்தின் எல்லைகளை அடைந்தபோது பன்மடங்காகிவிட்டிருந்தது. அதை எதிர்க்க எவரும் துணியவில்லை.

அஸ்தினபுரிக்கு வந்துகொண்டிருக்கும் பொருள்வண்டிகள் வெளிப்படையாக, கொம்பு முழவு அறிவிப்புகளுடன் வரட்டும் என்று சுரேசர் ஆணையிட்டர். “இந்நிலம் பொன் கொழிப்பது என்று மக்கள் அறியட்டும்” என்றார். “ஆனால் கிளம்பிச்சென்றவர்கள் பொன்னோ பொருளோ குறைகிறது என்பதனால் செல்லவில்லை” என்றாள் சம்வகை. “மெய், ஆனால் மக்களின் உள்ளத்தில் பொன் என்பது திரு. நலமும் அழகும் திருமகளே. திருமகள் தேடிவரும் நாட்டில் பிற அனைத்தும் சிறப்புறும் என்றே எண்ணுவார்கள். நோக்குக, இங்கு செல்வம் வருந்தோறும் தேடிவருபவர்களும் பெருகிக்கொண்டேதான் இருப்பார்கள்!” என்றார் சுரேசர்.

ராஜசூயம் குறித்த அறிவிப்பை அவர் வேண்டுமென்றே பிந்தச்செய்தார். “அதை அறிவித்தால் வேதியர்கள் சினம்கொள்ளக்கூடும். அவர்கள் ஒட்டுமொத்தமாக அஸ்தினபுரியை புறக்கணித்தால் அவர்களை நாம் வெல்வது கடினம். அவர்களில் ஒரு சாராரையாவது தௌம்யர் வென்றெடுத்துவிட்டாரென்றால் நன்று” என்றார். ஆனால் ராஜசூயம் பற்றிய செய்திகள் பரவவிடப்பட்டன. பெருவேள்விக்குரிய அவிப்பொருட்கள் பலரும் அறியும்படி சேர்க்கப்பட்டன. அதற்குரிய பந்தல்களும் முனிவரும் அந்தணரும் தங்குவதற்கான குடில்களும் அமைக்கப்பட்டன. சூதர்கள் வழியாக அச்செய்தி நாடெங்கும் பரவிச்சென்றது.

வேள்விப்பரிகள் நிலம்வென்று சென்றுகொண்டிருந்தமை குடிகளின் உள்ளத்தில் உருவாக்கிய மாற்றத்தை சம்வகை நாளுமெனக் கண்டாள். அவர்கள் குருக்ஷேத்ரப் பெரும்போரை வெறும் அழிவென, தங்கள் குடிகளுக்கு இழப்பென மட்டுமே அதுவரை அறிந்திருந்தார்கள். அது அஸ்தினபுரிக்கு பாரதவர்ஷத்தின் மேல் அளித்த மேல்கோன்மையை, பெருமிதத்தை அவர்கள் உணரத் தொடங்கினர். “கோன்மை என்பது செல்வம், செல்வம் என்பது துய்ப்பு. துய்ப்புபோல் எளிதாகப் புரியும் பிறிதொன்று இல்லை. உடலே அதன்பொருட்டுதான் உருவாகியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான துய்ப்பின்பங்கள் உள்ளன. நாணிலாது கொண்டாடுவது உடல். அடக்கமே இல்லாது களியாடுவது. நோக்குக, சின்னாட்களிலேயே இங்கே துய்ப்பு மேலோங்கும்! பிற அனைத்தும் மறக்கப்படும்” என்று சுரேசர் சொன்னார்.

அவள் அச்சொற்களை முதலில் சற்று வெறுத்தாள். ஆனால் அதை கண்முன் என கண்டாள். நகரின் மையச்சாலைகளில் எல்லாம் பெரிய பலகைகளில் வேள்விப்பரிகளின் வழி வரைந்து இடப்பட்டது. பறவைச்செய்திகள் வருந்தோறும் அவை மாற்றியமைக்கப்பட்டன. மாற்றியமைப்பதற்கான செய்தி முரசொலியினூடாக பரப்பப்பட்டது. ஒவ்வொரு பலகை முன்னும் மக்கள் கூடி நின்று களிவெறிக்கூச்சலிட்டார்கள். பின்னர் முரசொலியிலிருந்தே அவர்கள் செய்திகளை அறிந்துகொண்டு ஆர்ப்பரித்தார்கள். செய்திகளை பல பகுதிகளாகப் பிரித்து காலையிலும் உச்சியிலும் மாலையிலும் என பதிவுசெய்யச் சொன்னார் சுரேசர். பின்னர் நாழிகைக்கு ஒருமுறை செய்திகள் மாற்றப்பட்டன.

“மெய்யான செய்திகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அங்கே நிகழ்வனவற்றை சற்று உய்த்துணர்ந்து மாற்றலாம், பிழையில்லை. பிறிதொன்று நிகழப்போவதில்லை” என்றார் சுரேசர். மேலும் சில நாட்களில் அச்செய்திகளின் அமைப்பு சற்றே சலிப்பூட்டத் தொடங்கியபோது கற்பனையால் இடர்கள் உருவாக்கப்பட்டன. “உய்த்துணர்வது சற்றே விடுதலை பெறட்டும். நாம் விரும்புவது அங்கே நிகழட்டும். விரும்பாதவையும் அவற்றின் எல்லைக்குள் நிகழட்டும்” என்று சுரேசர் சொன்னார். “ஏனென்றால் எந்தப் போரும் விளையாட்டே. எல்லா விளையாட்டுக்களும் போரே என்பதுபோல.”

சாரிகர் “குருக்ஷேத்ரப் போர் இன்னும் நினைவில் அழியவில்லை” என்றார். “ஆம், அந்தப் போர் தொடங்குவது வரை இங்கே இம்மானுடர் கொந்தளித்து களியாடிக்கொண்டுதான் இருந்தனர். இவர்களின் வாழ்க்கையில் கலப்பற்ற இன்பத்தில் இவர்கள் திளைத்த நாட்கள் அவை மட்டுமே” என்றார் சுரேசர். “போர் ஒரு மாபெரும் திருவிழா. எல்லா விழாக்களும் அறுவடையின் கொண்டாட்டங்களில் இருந்து தொடங்கியவை என்று நூல்கள் சொல்கின்றன.” சாரிகர் “அவர்கள் உண்மையை அறியும்போது சீற்றம் கொள்ளக்கூடும்” என்றார். “அவர்கள் நாம் சொல்வனவற்றை மேலும் பெருக்கிக் கொள்வார்கள். நெடுந்தொலைவு செல்வார்கள். கற்பனையே ஆனாலும் நெடுந்தொலைவு சென்றபின் எவராலும் மீளமுடியாது” என்றார் சுரேசர்.

“விதர்ப்பநாட்டு குடிகளில் ஒரு சாரார் தங்கள் குடித்தலைவனின் தலைமையில் புரவியை எதிர்க்கிறார்கள்” என்றது செய்தி. அவர்களை சகதேவன் வென்று சென்றது மறுநாள் அறிவிக்கப்படும்வரை அஸ்தினபுரி செய்திக்காக கொந்தளித்துக்கொண்டிருந்தது. அர்ஜுனனால் பிரம்மபுத்திர பெருநதியை கடக்கமுடியவில்லை. படகுகளில் வந்து மச்சர்கள் தாக்குகிறார்கள் என்று இன்னொரு செய்தி அறிவித்தது. புரவியுடன் எப்படி நதியைக் கடப்பது என்று அஸ்தினபுரியினர் அனைவரும் கூடி அமர்ந்து பேசி கொப்பளித்தனர். வடக்கே பனிமலைகளின் கணவாய் ஒன்றில் பீமனின் வேள்விப்பரி காணாமலாகிவிட்டது என்றது இன்னொரு செய்தி. அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது நகரம் வெறிகொண்டு கூத்தாடியது. கலங்களையும் பெட்டிகளையும் அறைந்து ஓசையெழுப்பி நடனமிட்டார்கள் மக்கள்.

சாரிகர் தன் அறையில் இருந்து அச்செய்திகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். “இங்கிருந்துகொண்டு அவர்களிடம் விளையாடுகிறேன். என்னிடம் இவ்வண்ணம் புதிய செய்திகளை உருவாக்கும்படி சுரேசர் சொன்னார். அவரே ஓரிரு செய்திகளை உருவாக்கி வழிகாட்டினார். எனக்கு முதலில் இது ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் நகரில் நிலவும் சோர்வைத் தீர்க்க இது ஒன்றே வழி என்றார். அது மெய் என்று அங்கே கேட்கும் கூச்சல்கள் எனக்குக் காட்டுகின்றன. உண்மையில் விருப்பமில்லாமல்தான் தொடங்கினேன். ஆனால் இன்று என்னை இந்த விளையாட்டு உள்ளிழுத்துக்கொண்டுவிட்டது” என்றார்.

“ஒரு கூட்டுமுழக்கமாக மட்டுமே அவர்களை உணர்ந்துகொண்டிருக்கிறேன். முதலில் ஒரு திரள் என தோன்றி இப்போது ஓர் ஆளுமை என அவர்களை உணர்கிறேன். ஆகவே எழுந்துசென்று அவர்களின் முகங்களைப் பார்ப்பதை தவிர்க்கிறேன்” என்றார் சாரிகர். “நான் இங்கே ஒரு செய்தியை உருவாக்குகிறேன். என் கற்பனையை ஓட்டி. அது புதிதாக இருக்கவேண்டும். ஆனால் எல்லை கடக்கக்கூடாது. அவர்கள் எதிர்பாராததாக இருக்கவேண்டும், ஆனால் அவர்களால் நம்பமுடியாததாக ஆகிவிடக்கூடாது. அவர்களை பதற்றம்கொள்ளச் செய்யவேண்டும், ஆனால் நம்பிக்கையிழக்க வைக்கக்கூடாது. ஒரு மாபெரும் ஆடல்.”

“இங்கே என்னை அரசன் என முதலில் உணர்ந்தேன். பின்னர் பிரம்மன் என எண்ணிக்கொண்டேன். பாரதவர்ஷத்தை முழுமையாக விண்ணில் நின்று நோக்குகிறேன். என் கையசைவால் அனைத்தையும் மாற்றியமைக்கிறேன். அவை இந்தச் சிறிய வரைபடத்தில் நிகழ்கின்றன. சற்றுநேரத்திலேயே நகரில் பேருருவாக விரிகின்றன. நகரிலிருந்து முழக்கம் எழுந்து என்னை வந்தடைகிறது. எனக்கு மறுமொழி அளிக்கிறது இந்நகரம். வானுருக்கொண்ட ஒரு நகரத்திடம் சொல்லுக்குச் சொல் என உரையாடிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “இது பொய். இது கற்பனை. ஆனால் வரலாறும் தொல்கதைகளும் பொய்யும் கற்பனையும்தான்.”

“நேற்று இங்கிருக்கையில் ஒரு கணத்தில் ஒரு பேருணர்வை அடைந்தேன். இங்கே நான் நிகழ்த்தும் இந்த ஆடலை நூறுமடங்கு ஆயிரம் மடங்கு பல்லாயிரம் மடங்கு பெரிதாக எவரோ நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று. கிருஷ்ண துவைபாயன மகாவியாசனைப் பற்றி நாம் கேட்டிருக்கிறோம். சாவற்றவர். எங்கோ இருந்து அனைத்தையும் அறிந்து சொல்லாக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய நாவிலிருந்து ஒரு பெருங்காவியம் எழுந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிகழ்வனவற்றுக்குப் பின் அது உருவாகவில்லை. நிகழ்வனவற்றுக்கு முன்னரேகூட, நிகழ்வனவற்றுக்கு இணையாகக்கூட அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது இன்றுடன் பேசவில்லை, நாளையுடனும் பேசிக்கொண்டிருக்கிறது. நேற்றும் இன்றும் நிகழ்வனவற்றை அது சமைக்கவில்லை, நாளை நிகழ்வனவற்றையும் சமைத்துக்கொண்டிருக்கிறது.”

அவளுடைய விழிகளின் திகைப்பைக் கண்டு அவர் சிரித்தார். “வேடிக்கையாக சொன்னேன். என் உள்ளம் இன்னமும் கலங்கிவிடவில்லை. ஆனால் இந்த அரசுசூழ்கையின் கணக்குகளை உதறிவிட்டு பித்தெடுத்து வரலாற்றுப்பரப்பில் அலைவதைப்போல விடுதலை ஒன்றில்லை.” அவள் புன்னகைத்து எழுந்துகொண்டாள். “காவல் எவ்வண்ணம் நிகழ்கிறது?” என்று அவர் கேட்டார். “முற்றிலும் புதிய முகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எதையுமே கணிக்கமுடியவில்லை. மெய் சொல்வதென்றால் இப்போது காவல் என்பது ஒரு பாவனை மட்டுமே. காவல் உண்டு என இவர்களை நம்பச்செய்கிறோம். முற்றிலும் புதியவர்களாலான இந்நகரில் காவல் என்பது இன்று இயல்வதே அல்ல” என்றாள் சம்வகை.

“இன்னொரு பெரும்புனைவு” என்று சாரிகர் வெடித்து நகைத்தார். “நன்று. அங்கே அரசரும் இப்புனைவையே விழைகிறார் என்கிறார்கள். அவருக்கு மெய்யான செய்தி செல்கிறது. ஆனால் அவர் அதில் சலிப்புற்றுவிட்டார். அதை ஒருமுறை நோக்கிவிட்டு இப்புனைவுச் செய்திகளை கண்டு களியாடிக்கொண்டிருக்கிறார். உண்மையில் சொல்லக்கேட்டபோது எனக்கே திகைப்பாக இருந்தது. நேற்று அர்ஜுனனை மலைக்குடிகள் நச்சு அம்புகளால் தாக்குவதாக சொன்னேன். அது பொய்ச்செய்தி என அரசர் நன்கறிவார். ஆனால் பதறி உடல்வெம்பி காய்ச்சல் வந்து படுத்துவிட்டார். என்ன நிகழ்கிறது என்பதை உடனுக்குடன் சென்று சொல்ல ஆணையிட்டார்.”

“உடனே அக்கதையை முடித்துவிடும்படி என்னிடம் யுயுத்ஸு வந்து ஆணையிட்டார். ஆனால் நான் மேலும் மேலும் விளையாடினேன். எல்லைவரை சென்றேன். நான்குமுறை யுயுத்ஸு வந்து என்னிடம் பூசலிட்டார். என்ன செய்வது, நச்சு அம்புகளை நான் தடுக்க இயலாதே என்றேன். உண்மையில் நானும் அப்புனைவுக்குள் இருந்தேன். புனைவு தொடங்கும் வரைதான் நான் வெளியே இருக்கிறேன். அது வழிதேர்ந்து திசைகொண்டுவிட்டால் நான் அதன் வழியே செல்கிறேன். மாலையில் அரசருக்கு மெல்லிய வலிப்பு வந்தது. இளையோனே இளையோனே என அரற்றிக்கொண்டிருந்தார். விழிநீர் வழிய மஞ்சத்தில் கிடந்தார். நகரமே கண்ணீருடன் வேண்டிக்கொண்டிருந்தது.”

“மெய்யென்ன தெரியுமா, நானும் அவ்வண்ணமே வேண்டிக்கொண்டேன். என் விழிகளிலும் நீர் வழிந்துகொண்டிருந்தது. பின்னிரவில் அர்ஜுனன் நச்சு அம்புகளைக் கடந்து மூங்கில் காட்டுக்குள் செல்வதை, அங்கே காட்டுக்குடியினரால் கைப்பற்றப்பட்டிருந்த வேள்விப்பரியை மீட்பதை அறிவித்தபோது நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். வேள்விப்பரி ஹிரண்யை எந்த வடுவும் இன்றி அன்று பிறந்தவள்போல் மீட்கப்பட்டதை அறிவித்தபின் எழுந்து நின்று கைதூக்கி ஆர்ப்பரித்தேன். என்னைச் சூழ்ந்து நகரம் வெடிப்போசை எழுப்பிக்கொண்டிருந்தது” சாரிகர் சொன்னார்.

சம்வகை புன்னகைத்தாள். சாரிகர் உரக்க நகைத்து “நான் இரவு களைத்து துயின்றேன். காலையில் எழுந்தால் என் உள்ளம் சலித்துக்கிடந்தது. மேலுமொரு கொந்தளிப்புக்காக அது ஏங்கியது. உச்சிப்பொழுதில் சகதேவனின் பரியான சாரதையை தெற்கே தண்டகாரண்யத்தில் ஒரு சிம்மக்கூட்டம் தாக்கியது” என்றார். சம்வகை “இவ்வண்ணம் பல பித்துகளினூடாகத்தான் திரும்பி வரமுடியும்போலும். நம் முன் விரிந்துள்ள உண்மை அத்தனை கொடியது, அத்தனை பெரியது” என்றாள்.

 

நகருக்குள் வரும் அனைவருமே அயலாரெனும் ஒற்றைச்சொல்லால் வரையறுக்கப்பட்டிருந்தார்கள். ‘அவர்கள்’ என்னும் சொல் ஓர் அடையாளமென்றே ஆகியது. அச்சொல் எப்படி அவர்களை விலக்கி எல்லை வகுக்கிறது என சம்வகை உணர்ந்தாள். அவர்கள். ஆனால் மிக விரைவிலேயே இந்நகரமாக ஆகப்போகிறவார்கள். இவர்கள் என சொல்லப்படுவார்கள். எங்கே அவர்கள் இங்குளோர் ஆகிறார்கள்? இங்குள்ள எதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? என்றோ ஒருநாள் இங்கிருந்து சென்றவர்கள் அயலார் ஆக இங்கு நுழையும்போது இவர்கள் இங்குளோர் ஆகிவிடுவார்கள்.

அதன் பின்னரே அவள் அவர்களின் இயல்புகளை உளம்குறிக்கத் தொடங்கினாள். அவர்கள் வெவ்வேறு மொழியில் பேசினார்கள். வெவ்வேறு வகை ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்களின் வண்ணமும் தோற்றமும் அசைவுகளும் வெவ்வேறு வகையாக இருந்தன. ஒற்றைத்திரள் என ஒன்றாகத் தோன்றியவர்கள் நோக்குந்தோறும் மாறுபாடு கொண்டனர். மானுடர்களை தனித்தனியாக நோக்கி அவர்களின் அடையாளங்களை அறிந்து தொகுத்து அவ்வடையாளங்களின் அடிப்படையில் அவர்களை மீண்டும் சிறுகுழுக்களாக தொகுக்கவேண்டியிருந்தது. திசையால், இனத்தால், வண்ணத்தால், உடைகளால், வேறு பழக்கங்களால் அவர்களுக்கு அடையாளமிட வேண்டியிருந்தது. பெயரிடப்பட்டதும் அவர்கள் அக்குழுவாக இயல்பாக ஆனார்கள். அக்குழு ஒன்றாகவே செயல்பட்டது, ஒற்றையுடல் என புழங்கியது.

தெற்கு நாடுகளிலிருந்து வந்தவர்கள் கரிய நிறமும் பெரிய மின்னும் விழிகளும் உறுதியான வெண்பற்களும் கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த கார்வை கொண்ட குரலில் பேசினார்கள். வண்ணங்கள் குறைவான இறுக்கமற்ற ஆடைகளை அணிந்திருந்தார்கள். கிழக்கு நிலத்திலிருந்து வந்தவர்கள் சிறிய உடலும் மஞ்சள் கலந்த வண்ணமும், பதிந்த மூக்கும், மெல்லிய உதடுகளும் கொண்டிருந்தார்கள். மூக்கொலி கலந்து பேசினார்கள். மையநிலத்திலிருந்து வந்தவர்கள் செங்கல் வண்ணமும், ஒடுங்கி கூர்கொண்ட முகமும், சற்றே வளைந்த எடையற்ற உடலும் கொண்டிருந்தார்கள். மேற்கிலிருந்து வந்தவர்கள் வெண்ணிறத் தோலும், நீலக்கண்களும், உயர்ந்த உடலும், விரிந்த பெருந்தோள்களும், மெல்லிய கோட்டு உதடுகளும், புடைத்தெழுந்த கூர்மூக்கும் கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரின் மொழியும் வெவ்வேறு உயிரினங்களின் ஓசைபோல் முற்றிலும் வேறுபட்டிருந்தது. முழவுகளின், குறும்பறைகளின், உடுக்கின், ஏழ்நரம்பு யாழின், மூங்கில் குழலின் ஒலிகள் என தோன்றின குரல்கள். ஆனால் அவ்விசைக்கலங்கள்கூட உயிர்களின் ஓசைகளிலிருந்து உருவானவை எனத் தோன்றியது பின்பு. அவர்கள் ஒற்றைப்பெருக்கென்றாகி வந்தமையாலேயே ஒருவரோடொருவர் பேசத் தொடங்கிவிட்டிருந்தனர். பொதுவான ஒற்றைச் சொற்களை கண்டடைந்தனர். அச்சொற்களைக் கோத்து மொழிக்குள்ளிருந்து ஒரு சிறு தனிமொழியை உருவாக்கிக்கொண்டனர். அந்த மொழி அவர்கள் இருவரும் சென்று சந்தித்து மீளும் பொது இடமாக இருந்தது. மெல்ல அது சொல்பெருகி வளர்ந்தது. அவர்கள் நகரை அணுகும்போது புதிய மொழியாக உடன் வந்தது.

கங்கைக்கரையில் அமைந்த தபதி என்னும் அன்னையின் சிற்றாலயத்துப் பெண்பூசகர் நீராடுவதற்கென்று கங்கையில் மூங்கில்களை நாட்டி நீர்ப்பரப்பிற்கு உள்ளேயே ஒரு சிறு குளத்தை உருவாக்கியிருப்பார்கள். அதை சிறு வயதில் சம்வகை கண்டிருந்தாள். அன்னையிடம் அது ஏன் என்று அவள் கேட்டாள். “அன்னைப்பூசகர் நீராடும்போது உடன் எவரும் நீராடலாகாதென்று நெறி” என்று அன்னை சொன்னாள். “ஆனால் இருபுறமும் படித்துறைகளில் பல்லாயிரம் பேர் நீராடுகிறார்கள். அந்நீர்தான் அதற்குள் செல்கிறது” என்று அவள் சொன்னாள். “இல்லை, அந்த மூங்கில் வட்டத்திற்கு ஞான வாபி என்று பெயர். அதை ஒரு தனிச்சுனையாகவே கருதுகிறார்கள்” என்று அன்னை சொன்னாள். “பெருக்குக்குள் தனிச் சுனை” என்று அவள் வியக்க “எல்லா சுனைகளும் மண்ணுக்கு அடியிலிருக்கும் ஒற்றைப்பெருக்குமேல் அமைந்தவை அல்லவா?” என்று அன்னை சொன்னாள்.

பெருக்குக்குள் தனி சுனை என்று அந்த எண்ணம் அவளை நெடுங்காலம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு மொழிக்குள்ளும் சிறு மொழி வட்டம் ஒன்றை உருவாக்க முடியும். மொழி முழுமையாக செயல்படாதபோது அந்தச் சிறு வட்டத்தை எடுத்து புழக்கத்தில் விடமுடியும். ஒவ்வொரு பெரிய வட்டத்திற்குள்ளும் ஒரு சிறுவட்டம் உருவாகும். அவ்வண்ணம் ஒரு சுழி உருவாகாமல் எந்தப் பரப்பும் செயல்பட முடியாது. அவள் அந்தப் புதிய மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டாள். அதில் வருபவர்களுடன் உரையாடினாள். அந்த மொழி விரைவிலேயே புதிய அஸ்தினபுரியின் பேச்சுமொழியென நிலைகொள்ளும் என புரிந்துகொண்டாள். அதில் அன்னையர் தாலாட்டுவார்கள். ஆயரும் உழவரும் பாடுவார்கள். சூதர்கள் இசைப்பார்கள். அதில் காவியங்கள் எழும்.

அவள் அந்தப் புது மொழியைப் பற்றி எண்ணியபடி அக்கூட்டத்தை நோக்கி அமர்ந்திருந்தாள். அந்த மொழி வேதங்களை எப்படி சென்று சந்திக்கும்? பிறந்து விழிதிறந்த புலிக்குருளை தன் சீற்றம் மிக்க தந்தையைச் சென்று சந்திப்பதுபோல அச்சமே இன்றி அணுகுமா? அந்தக் கற்பனையே அவளுக்கு விந்தையாக இருந்தது. வேதம் அந்தப் புது மொழிக்கென தன்னை மாற்றிக்கொள்ளுமா? கங்கை அங்குதான் ஓடிக்கொண்டிருக்கிறது. கால்வாய்கள் அதை நகர்களுக்குள் கொண்டுசெல்கின்றன. வேதமெய்மை அந்தப் புதிய மொழிக்குள் முற்றிலும் புதிய மொழியில் சென்றமையக்கூடும். வேதத்தில் இருந்து தனக்குரிய பகுதியை அந்த மொழி வெட்டி எடுத்துக்கொள்ளக்கூடும். முருங்கை என உடலெங்கும் முளைவிடும் ஆற்றல்கொண்டது வேதம் என்பார்கள்.

அன்று அவள் யுதிஷ்டிரனை சந்தித்தாள். அவர் கோட்டைக்காவலை நோக்கும்பொருட்டு வந்திருந்தார். கீழே பெருகிச்சென்ற கூட்டத்தை நோக்கியபடி நின்றார். அவள் அவர்களிடம் பேசி ஆணைகளை இட்டுவிட்டு மேலே வந்து அவரை வணங்க “அவர்கள் ஒரு பெருமுழக்கமாக மட்டுமே எனக்கு தெரிகிறார்கள். முகங்களாகக் கூட திரளவில்லை” என்றார். “ஆம், ஆனால் அவர்களை ஆட்சிசெய்யப்போகிறவர் தாங்கள்” என்றாள் சம்வகை. “நீ அவர்களிடம் எந்த மொழியில் பேசினாய்?” என்று அவர் கேட்டார். “அது அவர்களின் பாதையிலேயே திரண்டு வந்த ஒரு புது மொழி… குழந்தைபோல அன்னையின் இடையிலேயே இருக்கிறது. ஓரிரு சொற்களே பேசுகிறது. ஆனால் இனியது” என்று அவள் சொன்னாள்.

யுதிஷ்டிரன் அவளை களைத்த கண்களால் பார்த்தார். “மிக விரைவாக கற்றுக்கொள்லலாம். இந்தக் கோட்டைமுகப்பில் ஒருநாள் பகலந்திவரை நின்றாலே போதும். இங்குள்ள காவலர் அனைவருமே அதை கற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “பயிலாப் பெருந்திரள்” என்றார் யுதிஷ்டிரன். “அவர்களில் திறன்மிக்கவர்களை மட்டுமே இந்நகரில் நாம் நிறுத்திக்கொள்ளப்போகிறோம். அவர்களுக்கு இங்குள்ள உயர்மொழியை கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்குரிய ஆசிரியர்களை கண்டடைவோம், கல்விநிலைகளை அமைப்போம். தௌம்யர் திரும்பிவந்ததும் பேசவேண்டும். சஞ்சயனின் தலைமையில் கல்விநிலைகள் செயல்படலாம்.”

சம்வகை அவர் விழிகளை ஏறிட்டு நோக்கி “இல்லை அரசே, நீங்கள்தான் இவர்களின் மொழியை கற்றுக்கொள்ளவேண்டும்” என்றாள். அவர் அந்த நேர்மொழியில் திகைத்து “ஏன்?” என்றார். “அவர்களை புரிந்துகொள்ளும் பொறுப்பு இருப்பது உங்களுக்கே” என்று அவள் சொன்னாள். “இந்த மொழி இந்நகருக்கென உருவாகி வந்தது. இதுவே இனி இந்நகரின் மொழியாக திகழப்போகிறது. இதை தெய்வங்கள் உருவாக்கியிருக்கின்றன. இத்தருணத்திற்காக பிறந்து வந்துள்ளது. இதை அழிக்கவோ மாற்றவோ மானுடரால் இயலாது.” யுதிஷ்டிரன் அவளை சில கணங்கள் உற்று நோக்கிவிட்டு திரும்பி கீழே பெருகிச்சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கியபடி “மெய்” என்றார். பின்னர் “புதிய வேதம் திகழும் மேடைபோலும் இந்த மொழி” என்றார்.

முந்தைய கட்டுரைபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
அடுத்த கட்டுரைபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை