மூன்றுகதைகள்

இந்த இணையதள விவாதங்களில் நான் அடிக்கடிச் சொல்லும் இரு கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ எளிமையையே அழகாகக் கொண்ட கதை. உணர்ச்சிகரமான ஒரு தருணம் மட்டும்தான் அதில் உள்ளது. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என ஒருவர் யோசிக்கப்புகுந்தால் மானுடம் என்ற ஒற்றைப்பெருந்திரளை, கண்ணுக்குத்தெரியாத ஒரு ஆழ்நதியோட்டத்தை தொட்டுவிட முடியும்.

காந்தி’ அசோகமித்திரனின் வித்தியாசமான கதை. கதையே இல்லை. ஓர் உணர்வெழுச்சி, ஒரு வேகமான சுய உரையாடல் மட்டும்தான் அது. அதில் விரியும் புறதரிசனம் காந்தியையும் அகத்தரிசனம் காந்தியை சந்திக்கும் இரு வேறு மனங்களையும் காட்டுகிறது

அழியாச்சுடர்களில் என்னுடைய படுகை கதையும்பிரசுரமாகியிருக்கிறது. 1989ல் நிகழ் சிற்றிதழில் வெளியானது இந்தக்கதை. மறு இதழில் இந்திரா பார்த்தசாரதி அதை தமிழின் முக்கியமான திருப்புமுனையாக சுட்டி எழுதியிருந்தார். வெளியான காலம் முதல் தமிழின் முக்கியமான கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் சுட்டப்படுகிறது.

தமிழில் மிகுபுனைவை அறிமுகம் செய்த கதைகளில் ஒன்று. நாட்டரியல் தொன்மத்தை நவீன மனம் சந்திக்கும் ஒரு தருணம் அதில் உள்ளது.

முந்தைய கட்டுரைகண்ணீரின் கணங்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்