அஞ்சலி : தருமபுரம் ஆதீனம்

 

1998 ல் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது என் நண்பர் ‘தாசில்பண்ணை’ ராஜசேகரன் அவர்கள் மயிலாடுதுறையில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். விஷ்ணுபுரம் குறித்து அவர் எழுதிய சிறுநூலும் வெளியிடப்பட்டது. அதற்குமறுநாள் நிகழ்ந்த இன்னொரு விழாவில்தான் தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் சீர் வளர் சீர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை நேரில் சந்திக்க வாய்த்தது. ஜி.கே. மூப்பனார் முதலியோர் பங்குகொண்ட மேடை. என்னிடம் விஷ்ணுபுரம் நாவலின் ஒரு பிரதியை குருமகாசன்னிதானம் அவர்களுக்கு வழங்கும்படி ராஜசேகரன் சொன்னார். நான் மேடைக்குச் சென்று அதை அவரிடம் கொடுத்து வணங்கினேன்.

 

அது ஒரு எளிய மரபுநிகழ்வு என்றே நினைத்தேன். ஆனால் ஒருமாதம் கழித்து அவரிடமிருந்து ஒரு பாராட்டுக் குறிப்பும் வாழ்த்தும் எனக்கு வந்தது. அது அன்று மிக நிறைவளிப்பதாக இருந்தது. அதன்பின் ஒருமுறை அவரை நேரில்சென்று வணங்கியிருக்கிறேன். இரு வெவ்வேறு மேடைகளில் சந்தித்து வணங்க நேர்ந்திருக்கிறது. ஒரு மனிதர் ஒரு அடையாளமாக ஆகும்போது அவர் நம்மிடமிருந்து முற்றாக அகன்று ஆலயச்சிலை போல் ஆகிவிடுகிறார். ஆகவே வணக்கமும் முகமனும் அன்றி தொடர்பு இயல்வதல்ல. ஆனால் அவர் தன் தோற்றம் வழியாகவே தான் எதன்பொருட்டு நிலைகொள்கிறாரோ அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்

 

சன்னிதானம் அவர்கள் சைவம் குறித்த தெளிவான புரிதல்கொண்ட பேரறிஞர். சைவம் அரசியல்மயமாக்கப்பட்டு, ஆழ்ந்த அறிவில்லாதவர்களால் தங்கள் நோக்கப்படி நான்குபக்கமும் சிதைக்கப்பட்டுவரும் இந்நாட்களில், அழுத்தமான நங்கூரமாக அதன் தொல்மரபைச் சார்ந்து நிலைகொண்டவர். அடிப்படையில் சைவம் ஓர் அரசியல் அல்ல, அது வீடுபேறுக்கான வழி, மெய்மையின் பாதை என்று வலியுறுத்திக்கொண்டே இருந்தவர். ஐயம் அகற்றுதலும் வழிகாட்டலுமே குருமகாசன்னிதானம் அவர்களுக்குரிய பொறுப்பு, அதை முறைப்படிச் செய்தவர்.

 

கல்வியாலும் பதவியாலும் தன்குரலுக்கு இருந்த அதிகாரத்தை நன்குணர்ந்தவர். ஆகவே எந்த மேடையிலும் எவர்முன்பும் மரபார்ந்த சைவத்தின் கருத்துக்களை அறுதியான கூற்றாக முன்வைத்தவர். குருமகாசன்னிதானம் அவர்களின் நிறைவு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் ஆசிரியர் ஒருவரின் நினைவுகளை நாம் தொகுத்துக்கொள்வதற்கான தருணம்.

 

வணக்கம்

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைசொற்சிக்கனம் பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6