பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 2
சுரேசரின் ஆணைப்படி நகர் விழாக்கோலம் பூண்டது. ஆனால் அவர் எண்ணியதுபோல் எதுவும் நிகழவில்லை. அதை அவருடைய அலுவலவையில் அவர் ஆணையை ஏற்று நின்றிருக்கையிலேயே சம்வகை உணர்ந்தாள். நகரில் அப்போது கோட்டைக்காவலுக்குக்கூட போதிய காவல்பெண்டுகள் இருக்கவில்லை. முதிய பெண்களே அரண்மனையிலும் அடுமனையிலும் பணிபுரிந்தனர். ஆகவே விழவொருக்கங்கள் அரைகுறையாக நிகழ்ந்தன. அவற்றைச் செய்பவர்களுக்கு தாங்கள் மெய்யான ஒரு பணியைச் செய்கிறோம் என்னும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆகவே அவர்களிடம் விழவுக்குரிய கொண்டாட்டமே வெளிப்படவில்லை. எரிச்சலுடன் கூவியபடியும் பிறரை வசைபாடியபடியும் அவர்கள் பந்தல்களும் மேடைகளும் தொங்கல்களும் தோரணங்களும் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
அவர்களை வேறு பணிகளுக்கு அழைக்கவேண்டியிருந்தது. ஆகவே அனைத்து அணிவேலைகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கூத்துமேடைகளுக்குரிய கால்கள் நாட்டப்பட்டு தறிகளாகவே விடப்பட்டன. கொடிகளும் தோரணங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டு அறுந்து கிடந்து ஆடின. சூதர்கள் விழவுகுறித்த செய்திகளைப் பாடியபோது இளிவரல் ஓசைகள் எழுந்தன. “இந்நகரில் என்ன விழவு இது? முதுமகள் பூச்சூடிக்கொண்டதுபோல மேலும் மங்கலமின்மையையே அது உருவாக்குகிறது” என்றாள் முதிய காவல்பெண்டான சந்திரிகை. சம்வகை “இது அரசப்பழி. இதற்கு தண்டனை உண்டு” என்று சினந்தாள். “சாட்டையாலடித்து எவரையும் நகைக்க வைக்கமுடியாது” என்றபடி சந்திரிகை எழுந்துசென்றாள்.
ஆனால் சுரேசர் “ஆம், அதை நானே பார்த்தேன். ஆனால் அது நிகழட்டும்… அடுகலங்கள் தெளிவான செய்தியை உரைப்பவை. பல்லாயிரம் சொற்களுக்கு நிகரானவை. நாளும் வண்டிகளில் அவை தெருக்களினூடாக ஓர் இடத்திலிருந்து இன்னொன்றுக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்” என்றார். ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய நிலைவாய்களும் குட்டுவங்களும் உருளிகளும் வண்டிகளில் ஏற்றப்பட்டு நகரத்தெருக்களினூடாக சென்றன. சுரேசர் சொன்னதுபோல அவை விழவு குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. எவரும் அவற்றால் மகிழ்வுறவில்லை. பல தருணங்களில் இளிவரலையே உருவாக்கின. ஆனால் மெல்ல மெல்ல என்ன நிகழவிருக்கிறது என்று நோக்கும் ஆர்வம் உருவாகியது. அது மக்களை அஸ்தினபுரியிலேயே நிலைகொள்ளச் செய்தது.
யுதிஷ்டிரன் வந்துகொண்டிருக்கும் செய்திகள் அஸ்தினபுரியை வந்தடைந்தன. முக்தவனத்தில் நிகழ்ந்த நீர்க்கடனுக்குப் பின் மறுநாளே அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். நேராக அஸ்தினபுரிக்கு வந்துசேர்வதாகத்தான் பேசப்பட்டது. ஆனால் ஒவ்வொருநாளும் செய்திகள் மாறிக்கொண்டிருந்தன. நகரில் அவர் நுழைவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக வந்த யுயுத்ஸு “அரசர் வரும்போது நகரம் ஒருங்கியிருக்கவேண்டும்” என்றான். ஆனால் நகர் விரைவாக ஒழிந்துகொண்டிருந்தது. “அவர்கள் நீர்க்கடன் புரிய கங்கைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அங்கேயே துயர்காக்கவும் கூடும். அவர்கள் திரும்பட்டும்” என்று அவன் அரசரின் வருகையை ஒத்திவைத்தான். யுதிஷ்டிரன் கங்கைக்கரையிலேயே வெவ்வேறு சிற்றூர்களில் இறங்கி தங்கி செய்திக்காக காத்திருந்தார். அரசி திரௌபதி நேராக இந்திரப்பிரஸ்தத்திற்கே சென்றுவிட்டிருந்தாள்.
மேலும் மேலும் நகர் ஒழிந்துகொண்டிருந்தது. யுயுத்ஸு “இத்தனை பேர் செல்கிறார்கள். அரசர் ஒழிந்த நகரில்தான் குடியேறவேண்டியிருக்கும் போலும்” என்று சலித்துக்கொண்டான். சுரேசர் “இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து மக்களை கொண்டுவரலாம்” என்றார். யுயுத்ஸு “அது நல்ல எண்ணம்” என்று கூறியபின் இந்திரப்பிரஸ்தத்திற்கு தூதர்களை அனுப்பினான். ஆனால் அந்நகரமும் ஒழிந்துகொண்டிருப்பதாக செய்தி வந்தது. “அதுவும் விதவைகளின் நிலமாக மாறிவிட்டிருக்கிறது. அங்கே மங்கலம்கொண்டோர் எவருமில்லை” என்று ஒற்றன் சொன்னான். யுயுத்ஸு சீற்றத்துடன் அவனிடம் “அதை நான் அறிவேன்… அங்கிருந்து அடுமனையாளர்களையாவது இங்கே கொண்டுவர முடியுமா?” என்றான். “எங்கிருந்தாயினும் இன்று பெருநோயாளிகள், கள்மகன்களை மட்டுமே திரட்டமுடியும். ஆரியவர்த்தமே ஒழிந்துகிடக்கிறது” என்று ஒற்றன் அஞ்சாமல் அவன் விழிகளை நோக்கி சொன்னான்.
யுயுத்ஸு சினத்துடன் ஏதோ சொல்ல நாவெடுத்த பின் அப்பால் நின்றிருந்த சம்வகையை நோக்கி “நீ என்ன செய்கிறாய்? கோட்டையை திறந்துவைத்து அத்தனை பேரையும் வெளியே அனுப்புகிறாயா?” என்றான். “வேண்டுமென்றால் மூடிவிடுகிறேன்” என்றாள் சம்வகை. யுயுத்ஸு “எனில் சென்று மூடு… அதற்கு என் ஆணை வேண்டுமா?” என்றான். “ஆம், வேண்டும். அவர்கள் எவரை பழிக்கவேண்டும் என அறிந்தாகவேண்டும். நான் அப்பழியை கொள்ளமுடியாது” என்று சம்வகை சொன்னாள். யுயுத்ஸு ஒருகணம் சொல்லிழந்த பின்னர் “செல்க, எவரும் என் முன் நிற்கவேண்டியதில்லை! செல்க!” என்று கூவினான். “என்ன ஆயினும் சரி இன்னும் சில நாட்களில் அரசர் நகர்புகுவார். செல்பவர் செல்லட்டும், நகர் இங்கிருக்கும் அல்லவா?” சுரேசர் சம்வகையிடம் செல்க என்று விழிகாட்ட அவள் தலைவணங்கி அறையைவிட்டு வெளியேறினாள்.
அறைக்குள் யுயுத்ஸு “என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியாமல் இல்லை. இப்போது சொல்கிறேன், இன்று இந்நகரை விட்டுச்செல்லும் குடி எதுவாயினும் அது அஸ்தினபுரிக்கு வஞ்சம் இழைத்ததுதான். அவர்களோ அவர்களின் நூறு தலைமுறையினரோ இந்நாட்டுக்குள் இனி நுழைய முடியாது” என்று கூவினான். “அவர்கள் அறிக, ஒருநாள் அஸ்தினபுரியின் படைகள் அவர்களைத் தேடி வரும்… அன்று அவர்கள் அஸ்தினபுரிக்கு எதிர்தரப்பாக இருப்பார்கள். அஸ்தினபுரியின் வஞ்சத்தின் வெம்மையை அப்போது அவர்கள் அறிவார்கள்.” சுரேசர் “நாம் இனிமேல் வஞ்சம்கொள்ள நம் குடிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்” என்றார். யுயுத்ஸு “என்ன சொன்னீர்? என்ன சொன்னீர்? அந்தணர் என்றால் நாவில் நஞ்சுகொள்ளலாம் என்று எண்ணமா?” என்று மேலும் உரக்க கூவினான்.
யுதிஷ்டிரன் நகர்நுழைந்த நாளில் சுரேசர் அவரால் இயன்ற அளவுக்கு அனைத்தையும் ஒருக்கியிருந்தார். கங்கைக்கரையிலிருந்து அத்தனை குகர்களையும் திரட்டி நகருக்குள் கொண்டுவந்தார். நெடுஞ்சாலைகளில் தங்கியிருந்த நாடோடிகளை வீரர்கள் பிடித்துக் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களுக்கு நல்லாடைகளும் தலைப்பாகைகளும் வழங்கப்பட்டன. நகரின் கோட்டைமுகப்பும் அரசர் செல்லும் பாதையும் மட்டும் அணிசெய்யப்பட்டன. நகர்க்குடிகளில் எஞ்சியவர்கள் அனைவரையும் சுரேசர் சென்று சந்தித்தார். குடித்தலைவர்களின் அவைகளுக்கு அவரே சென்று பேசினார். “அரசர் நகர்புகும்போது நற்சொல் கூறி வரவேற்போம். இந்நகரை அவருடைய செங்கோல் மீட்கும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன். அவர் குருகுலத்துக் குருதி என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார்.
அவர்கள் வெறித்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தார்கள். “அனைவருக்கும் ஒரு சொல்லை நான் அளிக்கிறேன். அரசர் நகர்நுழைந்ததும் கருவூலவாயில் திறக்கும். அஸ்தினபுரியின் கருவூலம் நாகருலகு வரை திறக்கும் ஆழம் கொண்டது என்னும் சொல்லை கேட்டிருப்பீர்கள். அதிலிருந்து உங்களுக்கு நிறைவளிக்கும் வரை பொன்னும் மணியும் எழுந்துவரும்.” அவர்களின் விழிகளில் எந்த உணர்வும் தெரியவில்லை. சுரேசர் “இங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் மீட்டுக் கட்டப்படும். நகருக்குள் வரும் வணிகர்களுக்கு சுங்கம் தவிர்க்கப்படும். எனவே பொருட்கள் மலிவுவிலையில் இங்கே குவியும். இங்கு இன்னும் சில நாட்களிலேயே செல்வம் செழிக்கும். சூதர்களும் விறலியரும் வந்து குழுமுவார்கள். பெருவிழவுகள் எழும்” என்றார். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.
சுரேசர் சலிப்புடன் எழமுயன்றபோது ஒரு முதியவர் “நாங்கள் அரசரை வரவேற்கிறோம். அவர் எங்களுக்கு உகந்த அரசர் என்பதற்காக அல்ல. அவர் எங்களுக்கு அள்ளி வழங்கவிருக்கிறார் என்பதற்காகவும் அல்ல. இந்நகரைக் கட்டியவர்கள் எங்கள் முன்னோர் என்பதனால். இங்கே அவர்களின் எலும்புகள் மண்ணுக்குள் இருக்கின்றன என்பதனால்” என்றார். சுரேசர் சொல்லவிந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்தார். “நாங்கள் இங்கே வாழ்ந்து பழகிவிட்டோம். இக்கலம் மூழ்குமென்றாலும்கூட உடன்மூழ்கவே எண்ணுகிறோம்” என்றார் இன்னொருவர். “இது உங்கள் மண். உங்கள் மண்ணை ஆள்கிறோம் என்னும் பொறுப்புணர்வு என்றும் மாமன்னரிடம் இருக்கும்” என்றார் சுரேசர்.
திரும்பும்போது அவர் சம்வகையிடம் “இவர்கள் போதும். ஏதேனும் ஒரு பற்று எஞ்சியிருந்தால் போதும் அதை பிற அனைத்தின் மீதும் பற்றென வளர்த்தெடுத்துக்கொள்ள முடியும்” என்றார். “இவர்கள் அரசரை வரவேற்கையில் முகப்பில் நிற்கட்டும். திரட்டிவந்த பிறர் பின்னணியில் நின்றிருக்கட்டும்.” சம்வகை “ஆனால் இவர்கள் வாழ்த்தொலி எழுப்பாமல் நின்றிருக்கக்கூடும்” என்றாள். “ஆம், ஆனால் இவர்களின் முகங்களில் எதிர்ப்பும் வெறுப்பும் இல்லை. அது போதும். நாம் வாழ்த்தொலி எழுப்புவோம்” என்றார் சுரேசர். “யுதிஷ்டிரன் அஸ்தினபுரியை நன்கறிந்தவர். இம்மக்களின் முகமும் அகமும் அவருக்குத் தெரியும். நாம் அயலவரை முன்னிறுத்த முடியாது.” சம்வகை “அவ்வண்ணமே” என்றாள்.
“இவர்கள் அஸ்தினபுரியை விரும்புபவர்கள். நம் வரவேற்பொலியில் அஸ்தினபுரிக்கான வாழ்த்து ஓங்கி ஒலிக்கட்டும். இந்நகரை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் தொடரட்டும். இறுதியில் யுதிஷ்டிரனின் பெயரும் வந்தமைகையில் இவர்களால் அதை தவிர்க்கமுடியாது. ஆம், அப்போது ஓசை சற்றே தணியும். அதை நாம் கடந்துசெல்வோம். இவர்கள் போதும். இவர்களில் இருந்து அஸ்தினபுரியை நாம் மீட்டு எடுத்துவிடமுடியும்.” சம்வகை “வெவ்வேறு வகையான மானுடரை நகரில் சேர்த்திருக்கிறோம். அவர்களில் எவரேனும் அரசரை நோக்கி ஏதேனும் அவச்சொல்லை உரைத்துவிடக்கூடும்” என்றாள். “செவிகேட்காத தொலைவில் அவர்கள் நிற்கட்டும். அவர்கள் வீசும் அரிசியும் மலரும் மட்டும் அரசர்மேல் பொழிந்தால் போதும்” என்றார் சுரேசர்.
சம்வகை முந்தையநாள் பகலிலேயே நகரை ஒருக்கத் தொடங்கினாள். நகரின் சாலையெங்கும் மக்கள்திரளைக் காட்டுவது எளிதல்ல என்று தெரிந்தது. அஸ்தினபுரி எத்தனை பெரிய நகர் என அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. அது மக்கள்திரளால் நெரிந்துகொண்டிருந்தபோது மிக இடுங்கலான தெருக்களுடன் சிறியதாகத் தெரிந்தது. அப்போது தெருக்கள் ஒழிந்த களங்கள் என விரிந்துகிடந்தன. களங்கள் மறுஎல்லை தெரியாப் பாலைகள் போலிருந்தன. அவள் ஒவ்வொன்றாகச் செய்து அதை மதிப்பிட்டு திருத்திக்கொண்டே இருந்தாள். ஒன்றை இயற்றியபின் அந்த அணிவகுப்பு அவ்வழியே நிகழ்வதாக கற்பனை செய்தபோதுதான் பிழைகள் தெரிந்தன. பிழைகள் தெரிந்த பின்னரே வாய்ப்புகளும் தெரியலாயின.
“அரசர் பட்டத்துயானை மேல் அணிவலம் செல்லவேண்டியதில்லை. அவ்வுயரத்தில் நெடுந்தொலைவு கண்களுக்குப்படும். அத்தனை இடங்களை நம்மால் அணிசெய்யவோ மக்களால் நிரப்பவோ முடியாது” என்று அவள் சுரேசரிடம் சொன்னாள். “ஆம், அதை நானும் எண்ணினேன்” என்றார் சுரேசர். சம்வகை “அரசர் தேரில் செல்லட்டும்… தேவையான இடங்களில் தேர் சற்று விரைவாகக் கடக்கவும் வேண்டும்” என்றாள். சுரேசர் அதை புரிந்துகொண்டார். மறுநாள் அவள் “தேரின் பின்புறம் திரைச்சீலைகள் தொங்கவேண்டும்” என்றாள். சுரேசர் “ஏன்?” என்றார். “அரசரை கோட்டைமுகப்பில் வரவேற்பவர்கள் கோட்டைக்காவலர். அவர் கடந்துசென்றதும் உடனே அவர்கள் காவல்பணிக்கு மீளவேண்டும்” என்றாள். சுரேசர் பெருமூச்சுவிட்டார்.
சம்வகை சாலையோரத்தில் இருந்த அனைத்து இல்லங்களிலும் தோரணங்களும் மலர்மாலைகளும் கொண்டு அணிசெய்தாள். மூடியிருந்த இல்லங்களைத் திறந்து அங்கே சிலரை நிற்கும்படி ஆணையிட்டாள். அரசர் செல்லும் சாலை எங்கும் இருபுறமும் தூண்களை நட்டு தோரணங்களும் பட்டங்களும் தொங்கும்படி செய்தாள். தோரணங்களும் பட்டங்களும் இல்லாத இடங்களில் சிறுகுழுக்களாக மக்கள் நின்றிருக்கும்படி வகுத்தாள். பின்னர் அதை மேலும் தெளிவுறுத்தி சாலையிணைவுகளிலும் வளைவுகளிலும் மட்டும் மக்கள் நின்றால் போதும் என ஆணையிட்டாள். நேரான சாலையில் மக்கள் நின்றாலும் திரளென தெரிவதில்லை. அங்கே அணித்தூண்கள் மட்டும் போதும். அப்பகுதியில் தேர் சற்று விரைவுகொள்ளலாம். அப்பகுதியில் மட்டும் அரிசியும் மலரும் மழையென விழுந்தால் போதும். மீண்டும் எண்ணிக்கொண்டு அரிசிமலருடன் மஞ்சள்பொடியும் வீசப்படலாம் என முடிவெடுத்தாள். “இச்சாலையே மேலிருந்து பொழிவனவற்றால் மறைந்துவிடவேண்டும்…” என்றாள். அங்குள்ள பெரிய மாளிகைகளின் உப்பரிகைகளில் அரிமலரை மஞ்சள்பொடியுடன் பொழிய ஏவலரை நிறுத்தினாள். பெரிய கலங்களில் அரிமலரும் மஞ்சள்பொடியும் அங்கே கொண்டுசென்று வைக்கப்பட்டன.
அணிவலங்களுக்குரிய சிறுமுரசுகளுக்கும் முழவுகளுக்கும் கொம்புகளுக்கும் மாறாக அனைத்துப் பெருமுரசுகளும் முழங்கவேண்டும் என்று ஆணையிட்டாள். தொலைவிலிருந்த காவல்மாடங்களில் இருந்தெல்லாம் பெருமுரசுகளை நகருக்குள் கொண்டுவரச் செய்தாள். அரண்மனையின் வைப்பறைகளில் இருந்து தோல் கிழிந்து கலம் உடைந்து கைவிடப்பட்ட பெருமுரசங்களை எடுத்துக்கொண்டு வந்தாள். “முடிந்தவரை அவற்றை சீரமையுங்கள். ஓசையெழுந்தாக வேண்டும்… முறையான தாளக்கட்டு வெளிப்பட வேண்டியதில்லை” என்றாள். கருவூலக்காப்பாளரான சிற்றமைச்சர் சுந்தரர் “பெருமுரசுகள் விழவுகளின்போது மட்டுமே ஒலிப்பவை” என்று சொன்ன போது “இடைவெளிகளை ஓசை நிரப்பட்டும்” என்று சம்வகை சொன்னாள். அவருக்கு அவள் கூறியது புரியவில்லை. அவளுடைய புன்னகையைக் கண்டபின் தலையசைத்தார்.
புரவியில் சாலை வழியாகச் செல்லும்போது தன் நினைவிலிருந்த காட்சிகளை மீட்டிக்கொண்டிருந்தாள். அணிவலம் என்றால் அணியானை நிரை என்றே தன் உள்ளம் எண்ணிக்கொள்வதை உணர்ந்தாள். அஸ்தினபுரி யானைகளின் நகர். நிரைநிரையென முகபடாம் மின்ன நின்றிருக்கும் யானைகளின் நிரைகளால்தான் அந்நகர் பொலிவு கொண்டிருக்கிறது. அவ்வெண்ணம் வந்ததும் கடிவாளத்தை இழுத்து நின்றுவிட்டாள். அரண்மனைக் கொட்டிலில் அப்போது முதுமையடைந்த ஓரிரு யானைகள் மட்டுமே இருந்தன. அவள் அரண்மனைக்குச் செல்வதற்குள் செய்யவேண்டுவன என்ன என முடிவெடுத்துவிட்டாள். அரண்மனை பொருள்வைப்பகத்தில் யானைகளுக்குரிய நெற்றிப்பட்டங்களும் புறச்சால்வைகளும் குவிந்துகிடந்தன. அவள் எண்ணியதைவிட பலமடங்கு. மிகப் பழைய நெற்றிப்பட்டங்களும் புறச்சால்வைகளும் தூசு மண்டி பழுதடைந்திருந்தன. எடுக்க எடுக்க அவை வந்தபடியே இருந்தன.
“அணியானைகள் உயிர்துறக்கையில் அவற்றின் முகபடாம்களை பிற யானைகளுக்கு பயன்படுத்துவதில்லை, காவலர்தலைவியே. அந்த முகபடாம்களிலும் மணிச்சால்வைகளிலும் அந்த யானையின் அசைவு அதன் ஆத்மா என எஞ்சியிருக்கும். பிறிதொரு யானையுடன் அது இசைவுகொள்வதில்லை. நெற்றிப்பட்டம் மாற்றிக் கட்டப்பட்ட யானைகள் சித்தமழிந்து மதம்கொள்ளும் என்பார்கள். ஆகவே ஓர் யானை மறையும்போது அதன் அணிகளை மொத்தமாகக் கழற்றி வைப்பறைக்குள் கொண்டுசென்று போட்டுவிடுவார்கள். இவை நாநூறாண்டுகளாக இங்கே குவிந்திருக்கின்றன” என்று கருவூலக்காப்பாளரான சிற்றமைச்சர் சுந்தரர் சொன்னார். சம்வகை தன் தலைக்குமேல் எழுந்திருந்த அந்த அணிகளின் குன்றை நோக்கியபின் “மறைந்த களிறுகள் அனைத்தும் எழுக! அஸ்தினபுரிக்கு இப்போது அவை அனைத்தும் தேவையாகின்றன” என்றாள்.
இருபது ஏவலர்கள் இரவும்பகலும் பணியாற்றி அனைத்து முகப்படாம்களையும் வெளியே எடுத்தனர். “பழுதுநோக்க நமக்கு பொழுதில்லை. புழுதிமட்டுமே களையப்படவேண்டும்” என்று சம்வகை சொன்னாள். ஏவலர் மூக்கில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு அவற்றை அள்ளி நீண்ட கொடிகளில் இட்டு உலுக்கி புழுதி களைந்தனர். ஈரத்துணியால் வெண்கலக் குமிழ்களையும் பிறைகளையும் துலக்கி ஒளிபெறச் செய்தனர். கோட்டைமுதல் அரண்மனைவரை அரசப்பாதை முழுக்க நெருக்கமாக மூங்கில்களை நட்டு அவற்றில் குறுக்கே கட்டப்பட்ட கழியில் முகபடாம்களை தொங்கவிடும்படி ஆணையிட்டாள். அவள் சொன்னதை ஏவலர் முதல் முகபடாமை அமைத்ததுமே புரிந்துகொண்டனர். காற்றில் அசைந்த முகபடாம் ஒரு கணப்பொழுதில் அங்கே ஒரு யானையை உருவாக்கி நிறுத்தியது. “ஆ! யானை!” என அதைக் கட்டிய ஏவலனே வியந்து பின்னடைந்தான்.
அவர்கள் அனைவரிலும் உளவிசை எழுந்தது. மூங்கில்கவைகளில் முகபடாம்கள் தொங்கவிடப்பட்டன. அவற்றுக்குப் பின்னால் வளைக்கப்பட்ட இரு மூங்கில்கள் மேல் அணிச்சால்வை போர்த்தப்பட்டது. மறைந்த யானைகள் எழுந்து வந்தபடியே இருந்தன. “ஆ, இது அங்காரகன். நான் சிறுவனாக இருந்தபோது மறைந்த பெரும்கொம்பன்!” என்று ஒரு முதிய ஏவலர் கூவினார். “இது காளன், மாளவத்திலிருந்து அளிக்கப்பட்ட நெடுந்தலையன்!” அறிந்த யானைகள், அறியாத மூதாதை யானைகள். “யானை என்பது அதன் அசைவே. அவ்வசைவை ஒற்றி எடுத்துக்கொண்டவை இந்த அணிகலன்கள்!” என்று சூதன் ஒருவன் சொன்னான். “வேங்கைக்காடு பூத்ததுபோல! முகில்நிரைகளில் செவ்வொளி எழுந்ததுபோல!”
முதற்காலையின் ஒளியில் சாலையைப் பார்க்க வந்த சுரேசர் திகைத்து விழிவிரித்து நின்றுவிட்டார். “யானைகளா!” என்றார். உடனே புரிந்துகொண்டு “தெய்வங்களே” என்றார். நீள்மூச்செறிந்தபடி நோக்கிக்கொண்டே நின்றார். “அவை எங்கும் செல்லவில்லை. இங்கேயே இருந்திருக்கின்றன. நம் காப்பறையின் இருளுக்குள்…” அவர் சம்வகையின் தோளைப் பற்றிக்கொண்டு “நீ அறிந்திருப்பாய், இந்நகரம் மண்ணுக்குள் புதைந்த பல்லாயிரம் யானைகளால் தாங்கப்படுகிறது என்பார்கள். அவை அங்கிருந்து இங்கே எழுந்துவந்துவிட்டதுபோல் தோன்றுகிறது” என்றார். சம்வகை புன்னகைத்தாள். அவர் கைகளைக் கூப்பியபடியே அந்தச் சாலையில் சென்றார். உணர்வெழுச்சியுடன் “இது போதும்… அவரை வரவேற்க மண்ணுக்குள் வாழும் மூதாதை யானைகள் எழுந்துள்ளன. இது போதும்” என்றார்.
யுயுத்ஸுதான் முதலில் அஸ்தினபுரிக்கு வந்தான். சம்வகை அவன் சாலையில் வருவதை கோட்டை மேலிருந்து கண்டு கீழிறங்கி வந்தாள். அவன் அவளைக் கண்டதும் புரவியிலிருந்து இறங்கி “அவர்கள் கங்கைப்படித்துறையில் வந்து இறங்கிவிட்டனர். அங்கே அம்பையன்னைக்கு குருதிக்கொடை அளித்து பூசை நிகழ்கிறது. அதை முடித்துவிட்டு தேர்களில் இங்கே வருவார்கள்” என்றான். சம்வகை “எனில் அவர்கள் இங்கே வந்தணைய வெயில் ஏறிவிடும்” என்றாள். “நற்பொழுது அல்லவா?” என்று யுயுத்ஸு கேட்டான். “ஆம், இன்று அந்திவரை நற்பொழுது என்றுதான் சொன்னார்கள்” என்று அவள் சொன்னாள். அவன் பெருமூச்சுவிட்டு “இந்த நாளை சாகும்வரை மறக்கப்போவதில்லை” என்றான். அவள் அவன் அவ்வாறு தனிப்பட்ட முறையில் பேசுவதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே பேசாமல் நின்றாள்.
“நேற்று மாலை தொடங்கியது இந்த நாள்… இரவும் பகலும்” என்று அவன் சொன்னான். “ஒவ்வொரு கணமும் அலைக்கழிதல். நகர்நுழைவுக்கான பொழுது இது என தௌம்யர் வகுத்தார். ஆனால் நகர்நுழைவுக்குரிய சூழல் இங்கில்லை என செய்தி வந்தது. நகரிலிருந்து மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். அரசர் தயங்கினார். ஆனால் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்று சுரேசரின் செய்தி வந்தது. அது அவருக்கு துணிவை அளித்தது. கிளம்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தபோது ஒரு சூதரின் பாடலை அவர் கேட்டார். அச்சூதர் அவர் காதுபட வேண்டுமென்றே பாடியிருக்கலாம்.”
அந்தச் சூதர் விழியற்றவர். விழியற்ற சூதர்கள் அச்சமூட்டும் ஆழம்கொண்டவர்கள். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரனுக்கு தடைகளே இல்லை என்று ஒரு பாடல். அவர் கடலில் காற்றுபோல செல்கிறார். அவரை தடுக்க எவருமில்லை. அவர் முன் நிற்க எவருமில்லை. அவரன்றி எவரும் நகரில் இல்லை. அந்த வஞ்சப்புகழ்ச்சியைக் கேட்டு அரசர் உளமொடுங்கிவிட்டார். “நான் நகர்நுழையப் போவதில்லை!” என்று சொல்லி சோர்ந்து அமர்ந்தார். “இளையோர் எவரேனும் முடிசூடட்டும்” என்றார். சகதேவன் “எங்களில் எவரும் எந்நிலையிலும் முடிசூடப் போவதில்லை என நீங்களே அறிவீர், மூத்தவரே” என்றார். “எனில் யுயுத்ஸு முடிசூடட்டும், வசைபெற்று நான் அரசாளப்போவதில்லை” என்று அரசர் சொன்னார்.
“இத்தனை காத்து, இத்தனை இழந்து அடைவது இந்த வசை மட்டும்தானா?” என்று சொல்லி விம்மி அழுதார். அவரை எப்படித் தேற்றுவதென்று தெரியவில்லை. கிளம்புவதற்குரிய ஆணைகளைக் காத்து ஊரே படகுத்துறையில் நின்றிருந்தது. இறுதியாக பீமசேனன் வந்தார். “ஏன் கிளம்பவில்லை?” என்று கேட்டார். நிகழ்ந்தவற்றைச் சொன்னதும் சினம்கொண்டு கூச்சலிட்டார். “மூத்தவரே, நாம் களம்வென்று அடைந்தது நம் நகர். அதை கைவிடும் உரிமை உங்களுக்கில்லை. உங்கள்பொருட்டு களம்பட்டவர்கள் அனைவரும் இதோ நுண்வடிவில் நம்மைச் சூழ்ந்து நின்றிருக்கிறார்கள். அந்நகரை ஆண்டு அங்கே வளமும் ஞானமும் பொலியச் செய்தாலொழிய உங்கள் கடன் நிகராகாது. துறந்து செல்லலாம். செல்லுமிடமெல்லாம் அக்கடன் கொடுந்தெய்வமென பின்தொடர்ந்து வரும்” என்றார்.
அச்சொற்கள் அரசரை நிலைமீளச் செய்தன. “ஆம், என் கடனை நான் துறக்கமுடியாது” என்றார். “அச்சுமையுடன் நான் எங்கும் செல்லமுடியாது” என நீள்மூச்செறிந்தார். என்னிடம் “சரி, கிளம்புவோம்” என்றார். நான் வெளியே ஓடி ஆணைகளை பிறப்பித்தேன். படகில் வரும் வழியிலும் இதுவே பேச்சு. “அங்கே எவர் இருக்கிறார்கள்? என் குடியினர் என்னை ஏன் கைவிட்டனர்? யாதவர்கள் கூடவா அங்கே இல்லை?” நான் சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டேன். அவர் எதிர்பார்ப்பது என்ன என்று தெரியவில்லை. “என் குடிகள் நான் நகர்நீங்கும்போது உடன் வந்தவர்கள். எனக்காகக் காத்திருப்பதாக சொல்லளித்தவர்கள். அவர்கள் எப்படி என்னை விட்டுச்சென்றார்கள்?”
தௌம்யர் வழியில் படகுத்துறையில் அமர்ந்த அம்பையன்னைக்கு குருதிபலி கொடுத்து நகர்மீள வேண்டும் என்றார். அதைக் கேட்டு மீண்டும் அரசர் சினம்கொண்டார். “அவள் என் அன்னை அல்ல. அவள் உரைத்த பழிச்சொல்லால் அழிந்தது என் குலம். என் நகர் பாழடைந்தது. அவளுக்குரிய குருதியை அவள் கொண்டுவிட்டாள். இனியும் அடங்கவில்லை அவள் எனில் என் நெஞ்சு பிளந்து குருதிகொள்ளட்டும்… ஒருபோதும் அவள் முன் நான் கைகூப்பி நிற்கமாட்டேன்” என்று கூவினார். “அரசே, அவள் நம் அன்னை. நம் குடித்தெய்வமென அவளை வழிபடுகிறோம். தெய்வங்களை நாம் வழிபட நமக்கு அவை நன்றுசெய்யவேண்டும் என்பதில்லை. அவை தெய்வங்கள் என்பதே போதும்” என்றார் தௌம்யர். “தெய்வங்களின் பாதையை மானுடர் அறியமுடியாது” என்று நான் சொன்னேன்.
“முடியாது, என்னால் அவள் முன் ஒருபோதும் தலைகுனிய முடியாது. அவள் முன் சென்றுநின்றால் ஒருவேளை நான் வசைச்சொல்லையே உதிர்க்கக்கூடும்” என்று அரசர் சொன்னார். “அவளை வழிபட்டுத்தான் நகர்நுழைய வேண்டும் என்றால் நகர்நுழைவே தேவையில்லை. திருப்புக படகை!” என்று கூவினார். பின்னால் வந்த படகில் இளைய யாதவர் இருந்தார். நான் அவரிடம் சென்று சொன்னேன். அவர் அரசரிடம் வந்து “அன்னையை வணங்கிச் செல்க, அரசே!” என்றார். புன்னகையுடன் “நான் கொண்ட அளவுக்கு குருதி அவள் கொள்ளவில்லை அல்லவா?” என்றார். அரசர் திகைத்துவிட்டார். கைகள் நடுங்க தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
“படகுத்துறைவரை வந்தபோது நான் உணர்வலைகளால் களைத்திருந்தேன். அங்கே பூசனை நிகழத்தொடங்கியதும் நேராக கிளம்பி இங்கே வந்தேன். பூசனை முடிந்திருக்கும், அவர் வந்துகொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன். ஆனால் வழியில் எதுவும் நிகழக்கூடும்” என்றான். “இளைய யாதவரும் வருகிறாரா?” என்று சம்வகை கேட்டாள். “இல்லை. அவரும் இளைய பாண்டவர் அர்ஜுனனும் நகர்நுழையவில்லை. அவர்கள் துரோணரின் குருநிலைக்குச் செல்கிறார்கள். பிற நால்வரும் நகர்நுழைகிறார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “இங்கே நீங்கள் என்ன செய்துவைத்திருக்கிறீர்கள்? அரசர் இன்றிருக்கும் உளநிலையில் அவர் எண்ணுவதென்ன என்று எவரும் சொல்லமுடியாது. அவருடைய உள்ளத்திலிருப்பது மக்கள்திரண்டு பொலிந்த பழைய அஸ்தினபுரி.”
யுயுத்ஸு அவளிடம் பேசியதனால் மெல்ல தன் உணர்வுகளிலிருந்து விடுபட்டான். “இங்கு வந்தால் சற்றே எளிதாகிறேன். இந்நகரில் நானிருந்த பழைய நாட்கள் நினைவில் எழுகின்றன. கோட்டைவாயிலைக் கண்டதுமே இயல்பாகிவிட்டேன். உண்மையில் கோட்டையைக் கண்டதுமே உன் நினைவை அடைந்தேன்” என்றான். அதன் பின்னர்தான் அவன் யானைநிரையைக் கண்டான். “என்ன இது!” என்றான். “என்ன இது? எங்கிருந்தன இவை?” அவன் உடல் நடுங்கியது. “யானைகள் என்றே எண்ணினேன்… தெய்வங்களே… யானைகள் போலவே தோன்றுகின்றன.” அவன் கைகளை நெஞ்சோடு சேர்த்து நின்றுவிட்டான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வாய் மூச்சுக்கென திறந்து மூடியது.
பின்னர் அவன் வெறிகொண்டு அவளை நோக்கி கூவினான். “எவர் செய்தது இதை? அகற்றுக… உடனே அகற்றுக…” என்று கூச்சலிட்டான். “இவை இங்கிருக்கலாகாது… இவற்றைக் கண்டால் அரசர் அஞ்சி நிலையழிந்துவிடக்கூடும்.” சம்வகை “ஏன்?” என்றாள். “இவை இந்நகரைக் கட்டிய யானைகள்… இந்நகரின் ஆழத்தில் வாழும் யானைகள்” என்று அவன் கூவினான். “மூதாதை யானைகள்! அவை திரண்டு வந்து நின்றிருக்கின்றன…” சம்வகை “ஆம், அவை எழ விழைந்தன. அந்த ஆணையை எனக்கு அளித்தன” என்றாள். ”அவற்றை அவரால் எதிர்கொள்ள முடியாது… வேண்டாம். என் நெஞ்சே நடுங்குகிறது” என்றான் யுயுத்ஸு. “இளவரசே, அவை மூதாதையர் என்றால் அவற்றுக்கு நாம் ஆணையிட முடியாது. அவை அங்குதான் இருக்கும்” என்று சம்வகை சொன்னாள். யுயுத்ஸு அவளை இமைக்கா விழிகளுடன் நோக்கினான். “அரண்மனைக்குச் செல்க! அங்கே இயற்றவேண்டியவற்றை ஒருக்குக!” என்று சம்வகை புன்னகையுடன் சொன்னாள். “இவ்வழியே செல்ல அஞ்சுகிறீர்கள் என்றால் இதோ வடக்குவாயில் வழியாக சுற்றிச் செல்லலாம்.” யுயுத்ஸு அவளை நோக்கி தலை நடுங்க உதடுகள் இறுக சில கணங்கள் நின்றுவிட்டு புரவியில் ஏறிக்கொண்டான்.