இலக்கியவிழாக்கள்

 

திரு ஜெ ,

சென்னையிலிருந்து விசாகபட்டணம் விமானத்தில் வருகையில் இருக்கையின் முன் இருந்த இதழைப் புரட்டியதில் ஜனவரியில் பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் கோழிக்கோட்டில் இலக்கிய திருவிழா நடப்பதாகவும் பிரபலங்கள் பங்கெடுப்பதையும் அறிந்தேன். சென்னையில் புத்தக சந்தை மட்டும்தான். இந்து நடத்தும் விழா இருந்தாலும் கோவையில் நடக்கும் விஷ்ணுபுரம் விழா வைப்போல் சென்னையில் இல்லாதது என்னைப் போன்ற வாசகர்களுக்கு குறையே.

அன்புடன்

சேது வேலுமணி

செகந்திராபாத்

***

அன்புள்ள சேது,

தமிழகத்திலும் மாபெரும் இலக்கியத் திருவிழாக்கள் பல நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தி ஹிண்டு லிட் ஃபெஸ்ட் இந்தியாவிலேயே செலவேறிய இலக்கியத் திருவிழா அதுதான். சென்னையில் பல ஆண்டுகளாக நிகழ்கிறது அது. கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக தகவல். இவ்வாண்டு

தி ஹிண்டு லிட்ஃபெஸ்ட் திருவிழாவுக்கும் தமிழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டு விவாதங்களில், இலக்கிய வாசிப்பில் அது எந்த அசைவையும் உருவாக்குவதில்லை. அது சென்னையில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினருக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் மட்டும் அறிந்தவர்கள். ஆங்கிலத்திலும் பிரபலமான ஒரு சில வணிகப் படைப்பாளிகளை மட்டுமே அறிந்தவர்கள். இலக்கிய ஆர்வமோ, இலக்கிய மதிப்பீடுகளோ அற்றவர்கள். ஆங்கில அறிவை ஒருவகை கௌரவச் சின்னமாக மட்டுமே எண்ணுபவர்கள்.

அவர்களை இலக்கியம் அறியாதவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவர்களுக்கு தமிழில் இலக்கியம் இருப்பதே தெரிந்திருக்காது என்பதனால்தான். இந்திய மொழிகளின் இலக்கியங்களிலும் மேலோட்டமான அறிமுகம்கூட இருக்காது. ஏனென்றால் இலக்கிய நுண்ணுணர்வு கொஞ்சமேனும் உடையவர்கள் மிக எளிதாக தமிழ்நவீன இலக்கியத்தை கண்டடைந்திருப்பார்கள். இவர்கள் பேசும் எந்த இலக்கியத்தை விடவும் ஆழமும் விரிவும் கொண்டது அது என உணர்ந்திருப்பார்கள்.

இவர்களுக்கு அந்தந்த காலத்தைய பரபரப்பு நூல்களில் மட்டுமே ஆர்வமிருக்கும். அப்படிப்பட்ட சிலர் கூடி அமர்ந்து அந்த விழா நடைபெறும். அதற்கு உலகமெங்கணுமிருந்து இலக்கியவாதிகள் கொண்டுவரப்படுவார்கள். ஆனால் மேலோட்டமான இந்திய ஆங்கில படைப்பாளிகளே மைய இடம்பெறுவார்கள். பார்வையாளர்களாக திரும்பத் திரும்ப ஒரே கூட்டம், ஒரே கேள்விகள், ஒரேவகையான கைதட்டல்கள், முகமனுரைகள், வாழ்த்துரைகள். தமிழ் இலக்கியச்சூழல் அந்த விழாவை பொருட்படுத்தியதே இல்லை, ஏன் அவர்களைப் பற்றி இவர்கள் அறிந்திருப்பதே இல்லை.

இத்தகைய விழாக்களால் என்ன பயன் விளைய முடியும்? இவ்விழாவில் பொதுவாக தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்பட்டதில்லை – ஏதேனும் ஒருவகையில் செய்தியில் அடிபட்டால் சிலர் அழைக்கப்படுவார்கள். இப்போது பெருமாள் முருகன் மட்டும் முகம் காட்டுகிறார். மற்றபடி தமிழின் இலக்கிய மேதைகளுக்குக் கூட அங்கே இடமில்லை.

நான் அவ்விழாவில் இருமுறை, பார்வையாளனாக, அழைக்கப்படாமல் கலந்து கொண்டிருக்கிறேன். நம்பவே முடியாத அளவுக்கு மேம்போக்குத்தனம் அங்கே திகழும். நாளிதழ்களின் வார இணைப்புக்களில் இருந்து பெற்றுக்கொண்ட வரிகள், கலைச்சொற்கள் காதில் விழுந்தபடியே இருக்கும். அசலான ஒன்றுமே நிகழாது. ஒருகட்டத்தில் எரிச்சலும் ஏமாற்றமும் தாளமுடியாமலாகும்.

இந்தவகையான விழாக்களில் நிகழும் ஒரு பெரிய ஏமாற்றுவேலை என்னவென்றால் ஆங்கிலப் பேச்சுத்திறன் மட்டுமே தகுதி அளவீடாக கருதப்படுவதுதான். ஆங்கிலம் ஓர் ஊடகம். ஆனால் அதுவே தகுதியாக ஆகிவிடுகிறது இவற்றில். சரளமாக, நல்ல உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவர்கள் பேசித்தள்ளுவார்கள். அவை இலக்கியம் அறிந்தவர்களுக்கு மணலைமென்று தின்பதுபோல சலிப்பூட்டும். அந்த ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ஆங்கிலம் அறியாத எழுத்தாளர்கள் மேல் இருக்கும் இளக்காரமும், ஒவ்வொரு சொல்லிலும் திகழும் மேட்டிமைத்தனமும், பண்பாட்டு அறியாமையும் குமட்டலை வரவழைக்கும்

இந்தியாவில் நிகழும் ஓர் இலக்கிய மேடை உண்மையில் பொருள் உள்ளதாக இருக்கவேண்டும் என்றால் அதில் வட்டார மொழிகளை மட்டுமே பேசுபவர்களுக்கும் உரிய இடம் இருக்கவேண்டும். ஒருவரின் இலக்கியப் பங்களிப்பு மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்கள் எந்த மொழியில் வேண்டுமென்றாலும் பேசலாம், தரமான ஆங்கில மொழியாக்கத்திற்கு வசதி செய்து அளித்தால்போதும். அங்கே அசலான குரல்கள் ஒலிக்கும். மெய்யான இலக்கியச் சிக்கல்கள் விவாதிக்கப்படும்.

எந்நிலையிலும் இலக்கிய விழாவில் இலக்கியப் படைப்பாளியின் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும். நான் இந்த ஹிண்டு லிட்ஃபெஸ்ட்டுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை [மறைமுகத்தொடர்பால்தான், அவர்கள் நேரடித்தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள்] இதைச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் நடத்தும் அந்த ஆடம்பர நிகழ்வு நீண்டகால அளவில் ஒரு மாபெரும் வெட்டிவேலை என்று சொல்லியிருக்கிறேன்.

சென்ற பல ஆண்டுகளாகவே நான் சொல்லிவருவது ஒன்று உண்டு. அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்ற தமிழிலக்கிய முன்னோடிகளை இத்தகைய அரங்கின் மைய ஆளுமைகளாக முன்னிறுத்தவேண்டும். அவர்களைப்பற்றி ஒரு தனி அரங்கு கூட்டப்படவேண்டும். அதுவே அவர்களின் முக்கியத்துவத்தை உருவாக்கும். ஞானபீட விருது போன்றவை அத்தகைய அரங்குகள் வழியாக உருவாக்கப்படும் முக்கியத்துவத்தால் மட்டுமே அளிக்கப்படுகின்றன.

உதாரணமாக, கி.ராஜநாராயணன் இத்தகைய சர்வதேச அரங்கு ஒன்றில் மையப்படைப்பாளியாக முன்னிறுத்தப்பட்டிருந்தால் அவருக்கு ஞானபீடம் கிடைத்திருக்கும். இலக்கியவாதிகளாகிய ஒரு சிறுகுழுவினர் அவருக்கு ஞானபீடம் அளிக்கப்பட கடந்த பல்லாண்டுகளாக முயல்கிறார்கள் – முயல்கிறோம். ஆனால் அது நிகழ்வதில்லை. ஏனென்றால் பல்கலைகள், சர்வதேச இலக்கிய விழாக்கள் எவையும் அவரை கண்டுகொள்வதில்லை. அங்கே அசட்டு ஆங்கிலவாந்திகளுக்கே இடம்.

இன்னொன்று, இந்தவகையான இலக்கிய விழாக்களில் இலக்கியவாதிகளின் இடத்தை அதை நடத்துபவர்கள், அந்த இதழின் பணியாளர்கள் முடிவுசெய்யக்கூடாது. இலக்கியவாதிகள் முன்னரே சாதனை புரிந்திருப்பார்கள். கி.ராஜநாராயணன் முக்கியமானவர் என்பதை தி ஹிண்டுவின் ஊழியர்கள் முடிவுசெய்ய வேண்டியதில்லை. அவர்கள் இலக்கிய முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்படுகையில் அவர்களின் அசட்டுச் சார்புநிலைகள் மட்டுமே அவ்விழாவில் வெளிப்படுகின்றன.

இந்த மேட்டிமைத்தனத்தால் இத்தகைய விழாக்கள் ஒருவகை நட்சத்திரவிடுதி விருந்துகள் போல போலிப் பேச்சுக்களால் ஆனவையாக, பொருளற்றவையாக, மாறிவிடுகின்றன. யாரோ நடத்துகிறார்கள் என்னவோ செய்கிறார்கள் என்று இதை விடமுடியாது. ஏனென்றால் இந்த நான்குகோடி ரூபாய் என்பது ஏதோ ஒருவகையில் தமிழிலக்கியத்திற்கு, தமிழக பண்பாட்டுக்கு வரவேண்டிய கார்ப்பரேட் நிதி. அதை இவர்கள் வாங்கி நட்சத்திரவிடுதி மதுவிருந்தாக ஆக்கி வீணடிக்கிறார்கள்.

இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழா விஷ்ணுபுரம் விருதுதான். இந்தியாவின் பெரிய இலக்கிய விழாக்களில் எங்குமில்லாத தீவிரமும் ஆழமும் அதில் உண்டு. அதை அங்கே வந்து பார்த்த அத்தனை இந்திய எழுத்தாளர்களும் பிரபல ஊடகங்களிலேயே பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டே பத்து லட்சம்தான். அதையும் கெஞ்சி மன்றாடி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தவிழாவில் எந்த ஆடம்பரங்களும் இல்லை. எளிமையான தங்குமிடங்கள், எளிய உணவு. இவற்றில் வேறுபாடுகள் இல்லை. பங்கேற்பாளர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்யலாம், செய்ய இயலாதவர்கள் அதன்பொருட்டு எதையும் குறைவாக உணர வேண்டியதில்லை. இலக்கிய ஆர்வம், அறிதலுக்கான விசை மட்டும் இருந்தால் போதும். அனைவருக்குமே நல்வரவுதான்.

இதை பதிவுசெய்வதுகூட இக்காலகட்டத்தில் இவ்வகையில்தான் இங்கே இலக்கியம் செயல்பட்டது என்பதை வாசகர்கள் அறியவேண்டும், எதிர்காலம் நினைவுகூரவேண்டும் என்பதற்காகவே

ஜெ

***

முந்தைய கட்டுரைஅழகிய மரம் 
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8