வாசிப்பின் பாவனைகள்

அன்பின் ஜெமோ,

அடுத்தடுத்து நல்ல கதைகளாகக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.பெரிய மனது உங்களுக்கு. யானைடாக்டர் நல்லதொரு விவரணம்.அவருக்கிருக்கும் தனிமனித தேவைகளையும் கடந்த சேவை மனம்.அவரே தன்னை சிறிதாய் உணர்கிறார் யானையின் முன்னும் காட்டினுள்ளும்.அத்தகைய தன்னுணர்வு வாய்ப்பது அரிது.

அப்புறம் வலி சம்பந்தமாக உங்கள் அவதானிப்பு.உலோகத்தில் அதை அடிக்கடி தொட்டு செல்வீர்கள்.முன்பொருநாள் ஒரு விவரண காட்சி பார்த்தேன் ஒரு நாயைத் தோலை உரித்து இறைச்சிக்காக விற்க வைத்திருப்பார்கள்.ஆனால் நாய் இன்னமும் உயிருடன்.வாங்க யாராவது வந்தபின்தான் கொல்கின்றனர்.எனக்கு இதை எழுதவே கடினமாக இருக்கிறது அதன் கண்களை பார்த்தேன் அது இன்னும் கனகாலம் என் நினைவிலிருக்கும்.

இன்னுமொன்று,இது சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை.மாரிமுத்து நீங்கள் படுத்தபின் போர்த்திவிட்டு டீ தந்து சாப்பாடு மூடிவைத்து ஜீப் ஓட்டி இன்ன பலவும் செய்தும் அவரை ஒருமையில் அழைப்பது சரியா? வணங்க்கானிலும் இதுவே.ஜமீந்தார் வந்தார்.சேவகன் வந்தான்.ஏன் ஜமீன்தான் வந்தான் சேவகர் வந்தார் என்று வரக்கூடாது?சிலவேளை நீங்கள் சொல்வதுபோல் மோட்டார் மெக்கானிசம் படிக்கதான் நான் லாயக்கோ?

எங்கேயோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன்.மயில்கழுத்து புரிந்தும் புரியாததுமாக ஜாலம் செய்கிறது.ஏதோ ஒன்றின் உச்சமாக இருப்பவர்களுக்கு இருக்கும் ஒரு தவிப்பு அது தவிர்த்தால் தங்களிடம் மிச்சமாக இருப்பது எது என்பதாக இருக்குமோ?அழகான பெண்ணைப் பார்த்தால் குஞ்சு தான் ஞாபகம் வருமோ?அதை களையத்தான் அவள் முனைகின்றளோ? ஜெர்மனியில் ஒரு பெண் கேட்டாள் ஏன் ஆண்களுக்கு புத்திசாலியான பெண்களை விட அழகான பெண்களை பிடிக்கின்றது?

நான்ஆயிரம் யோசித்தேன்.அவள் சொன்னாள் உங்களுக்கு பார்க்கத்தான் தெரியும் என புன்னகையுடன்.ஆனால் அது புன்னகை அல்ல என்பது புரிய கன காலம் சென்றது.

அன்புடன்

வே.பாலா.

 

அன்புள்ள பாலா

பொதுவாக புனைவை வாசிப்பதற்கான மனநிலைகளை நமக்கு யாரும் பயிற்றுவிக்கவில்லை. புனைவு என்பது ஒரு சிறப்புத்தகுதி கொண்ட கூறுமுறை என்பது நமக்குத்தெரியாததனால் எப்போதும் நாம் பொதுவான கூறுமுறைகளுக்கான நியாயங்களை அதன் மீது போடுகிறோம்.

உதாரணமாக என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்றுண்டு . சமீபத்தில்கூட ஒருவர் கேட்டார். ‘கேட்டை திறக்காமல் காம்பவுண்ட்டை தாண்டிக்குதித்தான்’ என்று ஏன் எழுதுகிறீர்கள். இரும்புக்கதவை திறக்காமல் சுற்றுச்சுவரை தாண்டிக்குதித்தான் என ஏன் எழுதக்கூடாது என.

ஒரு செய்திஎழுத்துக்குரிய பல்வேறு இலக்கணங்கள், அரசியல்சரிகள், இடக்கரடக்கல்களை இலக்கிய எழுத்தில் தேடகூடியவர்கள் இதுபோல அடிக்கடி எழுதுகிறார்கள். நேரில் கேட்கிறார்கள். அவர்களுக்கு நுட்பமான பதில் ஒன்றைச் சொல்லவேண்டும். அனால் அப்படிக் கேட்பவர்கள் நுட்பமான ஒன்றை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக பலசமயம் இருப்பதில்லை.

அப்படிக்கேட்பவர்கள் வயதால் இளையவர்கள் என்றால், அவர்கள் இலக்கிய வாசிப்பின் ஒரு பழக்கமும் ருசியும் கொண்டவர்கள் என்றால் மட்டுமே நான் பதில் சொல்ல முயல்கிறேன்.

இலக்கியப்படைப்பின் மொழி என்பது ஆசிரியனின் நேரடி மொழி அல்ல. அந்த மொழிபு [narration] பல்வேறு பாவனைகள் வழியாக நிகழ்கிறது. அந்த பாவனைகள்தான் இலக்கிய எழுத்தின் சிறப்பம்சம். ஒரு சிறு குழந்தை விளையாடும்போது தன்னை திருடனாக, போலீஸாக,நாயாக, பறவையாக கற்பனைசெய்துகொள்கிறது. அதன்மூலம் அதன் உலகம் விரிவடைந்துவிடுகிறது. பல்வேறு சாத்தியங்கள் வழியாக அது விதவிதமாக வாழ்கிறது. இலக்கியமும் அதேபோன்றதுதான்.

இலக்கியம் சொல்லிப் புரியவைக்கும் கலை அல்ல. வாசகனை கற்பனைசெய்து, உண்மை அனுபவத்துக்கு நிகரான அனுபவத்தை அவன் அவ்வாசிப்பினூடாக அடையச்செய்து, அந்த அனுபவத்தினூடாக புரியவைக்கும் கலை. எதையும் சொல்வதற்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. ஓர் அனுபவத்தை அளிப்பதற்காகவே எழுதப்படுகிறது.

இதற்காகவே இலக்கியம் பலவகையான பாவனைகள் வழியாக வெளிப்படுகிறது. அந்த ஒவ்வொரு பாவனைகளுக்கும் ஏற்ப மொழி உருமாற்றம் கொள்கிறது. ஒரு கதையில் வரும் மொழி யாருடைய மொழி என்பது முக்கியமானது. நீங்கள் சொல்லும் வணங்கான் கதையில் அது வணங்கான் நாடாரின் மொழி. அவர் வழியாக வெளிப்படும் அவர் அப்பா ஆனைக்கறுத்தான் நாடாரின் மொழி. யானைடாக்டர் கதையில் அது வனத்துறை அதிகாரியின் மொழி.

அந்த மொழி இயல்பாக எப்படி இருக்குமோ அதைத்தான் அந்தக்கதை பாவனை செய்ய முடியும். அந்த எல்லையை மீறி இன்றுள்ள அரசியல் கோட்பாடுகளுக்கோ, நாகரீக விதிகளுக்கோ, இடக்கரடக்கல்களுக்கோ இடம் கொடுத்தால் அந்த பாவனை கலைந்து போகும். அந்த பாவனை மிக நுட்பமானது. சரளமாக அது நிகழ்ந்தாகவேண்டும். அதை உருவாக்க மிகச்சிறந்த வழி அதைச்சொல்பவராகத் தன்னை ஆக்கிக்கொள்வதே. அதுவே , எல்லா நல்ல எழுத்தாளர்களும் செய்வது.

அதன்பொருட்டு தன்னுடைய சொந்தக் கொள்கைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் சட்டையை கழற்றுவது போல கழற்றிவிட்டு கூடுபாய வேண்டியிருக்கிறது. நம்முடைய விதிகளுக்குள் அந்த கூற்றை கொண்டு வர முடியாது, நம் அங்கே சென்றாகவேண்டும். அதைத்தான் படைப்புக்கான மனநிலை என்கிறோம். மிக எளிய , குழந்தைகளிடம் எப்போதும் இருக்கும், மனநிலை இது

இதைத்தவிர ஆசிரியர் கூற்றாகவே கதை வெளிவரும்போதும் மொழிப்பாவனை மாறும். கதையின் ஆசிரியராக, நம்மை வழியில்சந்தித்து பேச ஆரம்பிப்பவராக, உணர்ச்சிகரமாக உரையாற்றுபவராக, மொழித்திறன் மிக்க கதைசொல்லியாக பலவிதமாக பாவனைசெய்துகொண்டுதான் கதை சொல்கிறோம். ஒரு கதையில் நல்ல தமிழ் பயின்றுவரும். அங்கே அந்த பாவனை அதை அனுமதிக்கும். இன்னொரு கதையில் சரளமான மொழி மட்டுமே வரமுடியும். அந்த பாவனையின் இயல்பு அது

ஒரு கதையை வாசிக்கையில் அந்த கதை உருவாக்கும் கதைபாவனைக்குள் நுழைய முயல்வதே நல்ல வாசகன் செய்ய வேண்டியது. அப்போது மட்டுமே அந்தக்கதை உருவாக்கும் உணர்ச்சிகளும் கவித்துவமும் வந்து சேரும். மொழிசார்ந்த, கோட்பாடு சார்ந்த, பொதுநம்பிக்கைகள் சார்ந்த, முன்விதிகளுடன் வெளியே நின்று கொண்டால் அந்த கதைக்குள் செல்லமுடியாமலாகும். அதன் இலக்கிய அனுபவம் தவறிப்போகும்

ஒரு நிகழ்ச்சியில் பி.சி.சர்க்கார் ஜூனியர் ஒருவரிடம் சொன்னார். ‘இந்த மாஜிக் நிகழ்ச்சியை பார்க்கும்போது தயவுசெய்து திரும்பி பின்னால் பார்க்காதீர்கள். நீங்கள் என்னை பார்த்து என்னுடைய வசியத்துக்கு ஒப்புக்கொடுத்தால் மட்டுமே நான் என் வித்தையை காட்டமுடியும். பிடிவாதமாக வெளியே நிற்பவரிடம் என் மாஜிக் பலிக்காது. அதனால் எனக்கு நஷ்டம் இல்லை. முந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்து உட்கார்ந்திருப்பவர் நீங்கள்தான்’

எந்த இலக்கியவாதியும் இதைத்தான் சொல்வான்

ஜெ

முந்தைய கட்டுரைஸ்டீவம் மில்ஹௌசர்
அடுத்த கட்டுரைகதைகள்,மேலும் கடிதங்கள்