புராணமயமாதல்

naraya

 

ஜெயமோகன சார்,
ஒரு சந்தேகம். நாராயண குரு குறித்து ஒரு புத்தகம் படித்தேன் ( கிழக்கு பதிப்பகம், ஒரு சிறிய அறிதலுக்கு மட்டுமே பயன்படும்). அதில நாரயண குருவை ஒரு கடவுள் மட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தார் ஆசிரியர் (சில அற்புதங்கள் புரிந்தார் என்று). இவரைப் போல் பலர்..

என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர்,, விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும்.

அதே போல SNDP மூலம் நாராயண குரு ஒரு மட்ட மக்களை மேலே கொண்டு வந்தார் என்று கொள்ளலாம் அல்லவா? உங்கள் கருத்து என்ன? அல்லது இதைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளீர்களா?…

அன்புடன்
கணேஷ்.சென்னை.

 

 

பின்குறிப்பு: ஆனால் இன்னும் ஒரு சுவையான விஷயம். அண்மையில் நானும், என் மனைவியும் சென்னை புட்டபர்த்தி பாபா அவர்களின் கோவிலுக்கு ஒரு மாலை ”கூட்டுத்தொழல்” என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். என் மனைவி பாபா உண்மையிலேயே ஒரு அற்புத சக்தி கொண்டவர் என்றால் என்னிடம் எதாவது தொடர்பு கொள்வார் என்றாள். எங்கள் இருவருக்கும் இது போன்ற விஷயங்களில் ஒரு சாதரணமான இரண்டு கெட்டான் மன நிலை. தவறாகக் கூறினால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்று.. :) எனவே சரி பார்க்கலாம் என்று சென்றோம்.

 
அன்று தொழுது முடிந்த பின் அங்கே வந்த ஒரு அறிவிப்பின் மூலம் என் மனைவி ஒரு நோயாளிக்கு ஓ பாஸிட்டிவ் ரத்த தானம் கொடுக்க வேண்டியதாயிற்று. இது போன்ற விஷ்யங்கள் ஒரு தற்செயல் என்றாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை…

 

nitya

அன்புள்ள கணேஷ்,

மனிதர்களைக் கடவுள் போல ஆக்குவது ஒரு இந்திய மன அமைப்பு. அதற்கு ஆதாரமாக இருப்பவை மூன்று விழுமியங்கள். 1. மூத்தார் வழிபாடு 2. நீத்தார் வழிபாடு 3. குருவழிபாடு. ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார் வானுறையும் தெய்வத்துள் வைக்கபப்டும் ‘ என்ற மரபுசார்ந்த நம்பிக்கை இந்த மன அமைப்புக்கு வழியமைக்கிறது.

ஒருவர் வயதுக்கு மூத்தவராகும்போது அவரை உயர்ந்த இடத்தில் நிறுவி நாம் வழிபட ஆரம்பிக்கிறோம். கணிசமானவர்கள் வயதானவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மதிக்கப்படுவதை, வழிபடப்படுவதை நம் சமூகத்தில் காணலாம். தாய் தந்தையரைக் கடவுளின் இடம் நோக்கி நகர்த்திக்கொண்டே இருப்பதும் நம் வழக்கம்.

நம்முடைய பழங்குடிப் பண்பாட்டுக்காலம் முதலே நீத்தார் கடவுள்களாக ஆவது உள்ளது. ஒருவர் இறந்துவிட்டால் அவர் தூய இருப்பாக ஆகிவிடுகிறார். பிரபஞ்ச பேரிருப்புடன் கலந்து அதன் பகுதியாக ஆகிவிடுகிறார். அதன்பின் அவரும் கடவுளே என்று நம் தொல்மரபு நம்புகிறது. ஆகவே நாம் இறந்தவர்களைத் தெய்வமாக்கிக்கொண்டே இருக்கிறோம். வீரத்தால் இறந்தவர்கள், தியாகத்தால் இறந்தவர்கள் தெய்வங்களாகிறார்கள். பேற்றில் இறந்த பெண்கள் தெய்வங்களாகிறார்கள். ஒருவருக்கு சமூகம் ஓர் அநீதி இழைத்துவிட்டால் அந்தக் குற்றவுணர்ச்சியால் அவர்கள் தெய்வமாக்கப்படுவதும் உண்டு

கடைசியாக, குரு தெய்வமாகிறார். வாழும்போதே அவரை வழிபட ஆரம்பிக்கிறோம். இறந்தபின் கடவுள் ஆக்குகிறோம். நம் மரபில் காவி உடுத்தி மறைந்த அனைவரையும் புதைத்துச் சமாதிகட்டி அதைக் கோயிலாக்கி குருபூஜை செய்து வழிபடுகிறோம்.

இந்த மூன்று விழுமியங்களும் இந்து,சமண, பௌத்த,சீக்கிய மதங்களில் ஆழமாக வேரூன்றி அடிக்கட்டுமானமாகவே ஆகிவிட்டவை. இந்த ஆதார மனநிலைக்குப் பல்லாயிரம் வருடத்துப் பழக்கம் இருக்கிறது. இம்மனநிலை நம் சமூகம் அடைந்த ஆன்மீகவல்லமையை, அறிவுத்தொகையை, கலைகளைச் சிதறாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது. எத்தனை எதிர்மறைச்சூழலிலும் எதுவும் மறக்கப்படாமல் அடுத்த தலைமுறையைச் சென்றடைய தேவையாக இருந்திருக்கிறது இது

ஆகவே இன்று இதை மூடநம்பிக்கை என்றோ, அசட்டு உணர்ச்சி வெளிப்பாடு என்றோ புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப்பொறுத்தவரை நான் என் குருநாதர்களாக அமைந்தவர்கள் மீது பெரும்பக்தி கொண்டவனே. அது என் எளிமையையும் என் தகுதியையும் ஒரே சமயம் எனக்குக் காட்டுகிறது.

ஆனால் நவீன அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவர் கூடவே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மையும் ஆராய்ச்சிமனநிலையும் கொண்டிருக்கவேண்டும். அது முன்னோடிகளையும் குருநாதர்களையும் அவமதிப்பதோ சிறுமைசெய்வதோ அல்ல. அவர்களிடமிருந்து மிகச்சிறந்ததைப் பெற்றுக்கொள்ளவே அவர்களை நாம் ஆராய்கிறோம். அவர்களின் வெற்றிகள் மட்டும் முக்கியமல்ல, தோல்விகளும் நமக்கு முக்கியமே. அவர்களின் தெளிவு மட்டுமல்ல, கலக்கமும் நமக்கு முக்கியமே. அவர்களின் பலம் மட்டுமல்ல பலவீனமும் முக்கியமே. அவையெல்லாமே நமக்குப் பாடங்கள்.

ஆனால் மரபான மனநிலை நம் சமூகத்தில் ஆழ வேரூன்றிருப்பதனால் நம்மால் முன்னோடிகளையும் வழிகாட்டிகளையும் அப்படி ஆராய முடிவதில்லை. ஆராதகர்களும் பக்தர்களும் மனம் புண்படுகிறார்கள். நாம் இழிவுசெய்துவிட்டதாக எண்ணி கொந்தளிக்கிறார்கள். எனக்கு மீண்டும் மீண்டும் இந்த அனுபவம் உண்டு. ஏனென்றால் நான் யாரை என் ஆசிரியராக நினைக்கிறேனோ அவரையே மிக கூர்ந்து ஆராயவும் செய்கிறேன்.

சமீபத்தில் ஒரு பெரியவர் என் கைகளைப்பற்றிக்கொண்டு நான் காந்தியை இழிவுசெய்துவிட்டதாகச் சொல்லி கொதித்து பொருமி சாபமிட்டார். காந்தி செய்த பாலியல் சோதனைகளைப்பற்றி நான் எப்படி எழுதலாம் என்றார். சுந்தர ராமசாமிக்கு நடிகை சரிதாவை பிடிக்கும் என நான் எழுதியதை அவரை இழிவுபடுத்திவிட்டேன் என்று ஒரு பெரிய கூட்டமே நம்பிக்கொண்டிருக்கிறது. நேருவைப்பற்றியும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றியும் எழுதியமைக்காக இன்றும் வசைபாடிக் கடிதங்கள் வருகின்றன.

நம் அறிவுச்சூழலில் புராணமயமாக்கம் என்ற செயல் நடந்துகொண்டே இருக்கிறது. இறந்தவர்களின் எல்லா எதிர்மறைக்கூறுகளையும் மறக்கவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். அவர்களைப்பற்றி உணர்ச்சிகரமான நம்பிக்கைகளைச் சொல்லிச்சொல்லி மிகைப்படுத்திக்கொண்டே செல்கிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள் யார் என்பதே நமக்கு மறந்துவிடும். நமக்கு புராணத்துக்கென ஒரு கதைவடிவம் உள்ளது. அந்த டெம்ப்ளேட்டில் எல்லாரையும் கொண்டு சேர்த்துவிடுவோம். எல்லாருக்கும் ஒரே கதைதான். ஷிர்டி சாய்பாபாவானாலும் காஞ்சி பெரியவரானாலும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியானாலும் எம்.ஜி.ஆர் ஆனாலும்

இதுதான் நாராயணகுருவுக்கும் நடந்தது. நாராயணகுரு இருக்கும்போதே இது ஆரம்பித்தது. அவர் அதை கடுமையாக நிராகரித்தார். கண்டித்து எழுதினார். ஆகவே அவர் சமாதியாவது வரை காத்திருந்தார்கள். மறுநாளே சிலை வைக்க ஆரம்பித்தார்கள். கதைகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். அதே கதைகள், கொஞ்சம் கூட புதிய கற்பனை இல்லை. குறிப்பாக அவரை கடவுளாக்கி அந்த மையத்தைக்கொண்டு ஈழவ சாதியை ஓர் அரசியலமைப்பாக ஆக்க முயன்றவர்கள் அதை முன்னெடுத்தார்கள்.

இந்தப்போக்குக்கு எதிராக கலகம் செய்து வெளியே வந்து நாராயணகுருவை அவரது உண்மை வடிவில் முன் வைத்தவர்கள் நாராயணகுருவின் உண்மைச்சீடர்களான நடராஜகுரு போன்றவர்கள். நடராஜ குரு எழுதிய ’The word of Guru’ போன்ற உலகப்புகழ்பெற்ற நூல்களில் நீங்கள் இந்தமாதிரியான புராணங்களைக் காணமுடியாது. அதில் ஓரு தூய அத்வைதி, ஒரு சமூக சீர்திருத்தவாதி, ஒரு யோகி என்ற அவரது பலமுகங்களை பரிணாமத்தை காணமுடியும். அவரைச்சூழ்ந்திருந்தவர்கள் எப்படி அவரை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தார்கள் என்பதை எப்படி அவரை பயன்படுத்திக்கொள்ள முயன்றார்கள் என்பதை மிக விரிவாக காணமுடியும்

ஒரு யோகியாக கனிந்த நாராயணகுரு அடைந்த மனக்கொந்தளிப்புகளை சஞ்சலங்களை சகமனிதர்கள் மேல் அவர் கொண்ட ஏமாற்றங்களை எல்லாம் நடராஜகுரு எழுதியிருக்கிறார். கடைசிக்காலத்தில் இருமுறை நாராயணகுரு எல்லாவற்றையும் உதறிவிட்டு அவர் ஆதியில் இருந்த மருத்துவாழ்மலைக்கே வந்திருக்கிறார். அவரை சமாதானம் செய்து கொண்டு சென்றார்கள். அதே கதை ரமணர் விஷயத்திலும் உண்டு.

சாமானிய மக்களுக்கு கடவுளுருவங்கள்தான் தேவை. குருநாதர்கள் அல்ல. அவர்கள் வழிபடவே விரும்புகிறார்கள், லௌகீகத்தேவைகளுக்காக. அறியவும் பின்பற்றவும் அல்ல. ஆகவே அவர்களின் பார்வைக்கும் அறிபவன் பார்வைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. அவர்களிடம் ‘எக்ஸ்யூஸ் மி’ சொல்லி மெல்ல ஒதுக்கி மேலே மேலே சென்றுகொண்டே இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்களின் கோபங்களையும் ஆதங்கங்களையும் பொருட்படுத்தாமல்தான் சென்றாக வேண்டும்

உங்கள் பின்குறிப்பைப்பற்றி. நான் பொதுவாக தற்செயல்களை அர்த்தப்படுத்திக்கொள்ளும் மனநிலையை வளர விடுவதில்லை. நம்மைச்சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சம் ஒன்று ஒரு மாபெரும் வலை. அல்லது முற்றிலும் தற்செயலானது. இதை வலை என எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக நம் அறிவுக்கு சிக்கும் அளவுக்கு சின்னது அல்ல அது. ஆகவே தற்செயல்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முயல்வது வீண்வேலை மட்டும் அல்ல ஒரு வகை அகங்காரமும் கூட. அது உண்மையான அறிதல்களைத் தடுத்து நம்மை மட்டுமே மையமாக்கிச் சிந்தனைசெய்யும் ஓர் எளிய நிலைக்குக் கொண்டுசெல்லும்

வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ விரும்புகிறவர்களுக்கு அது தேவையாக இருக்கலாம். அது ஞானச் சாதகனுக்குரியதல்ல

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 25, 2011 

முந்தைய கட்டுரைஈர்ப்பு- விவாதம்
அடுத்த கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – 2