சமகாலப் பிரச்சினைகள் -கடிதம்

 

சமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை

அன்புள்ள ஜெயமோகன்,

 

நலம்தானே? உங்களுக்கு நீண்ட காலமாக கடிதம் எழுதவில்லை. கடந்த வருடம் நம்முடைய ஜெர்மனி சந்திப்புக்குப் பிறகு உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். அதற்குள் ப்ரியா உங்களுக்கு எழுதிவிட்டாள். அதன் பிறகு ஏனோ கடிதம் எழுதத் தோன்றவில்லை. அருணாவிடம் தொடர்பில் இருப்பதுவும் ஒரு காரணம். இப்போது இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் உங்களுடைய “சமகாலப் பிரச்சினைகள்” குறித்த பதிவு. நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், இது நான் உங்களுக்கு எழுதும் கடிதமே இல்லை. இந்தச் சமூகத்துக்கு, குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் நான் எழுதும் கடிதம். இது நான் கடந்த ஆறு மாதங்களாக எனது தளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதிய என்னுடைய சிந்தனைகளின் தொகுப்பு என்றுகூட சொல்லலாம். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் இவற்றையெல்லாம் யாருக்கு எழுதுகிறேனோ அவர்களைச் சென்று சேர்வதேயில்லை. எழுதி என்னிடமே வைத்துக்கொள்வதில் என்ன பயன்? இதைச் சொல்வதற்கு எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. நம்முடைய கருத்துக்களை எழுதி நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குச் சொன்னால் போதும் என்று வெற்றுப் பெருமிதத்துடன் பேசிக்கொண்டு, வாசிக்கிறார்களோ இல்லையோ எழுதிப் பகிர்கிறேன் என்று சொல்லி வந்தேன். ஆனால் அது என்னையே ஏமாற்றிக் கொள்ளும் செயல்; பாசாங்குத்தனம். சமூகத்தில் மாற்றம் ஏற்பட விரும்புபவர்களுக்கு இந்தப் பாசாங்குத்தனம் இருக்கலாகாது. சுய மேன்மைக்காக மெனக்கெடுபவன் என்கிற முறையில் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்.

 

சமூக வலைத்தளம்

 

எவ்வளவு பிரச்சினைகளைத்தான் ஒரு மனிதன் தீர்த்துவைக்க முடியும் என்கிற அளவுக்கு பிரச்சனைகளின் குவியலாக இருக்கிறது சமூக வலைத்தளம். அங்குத் தொடர்ச்சியாக நடந்து வரும் புரட்சிகளின் ஜ்வாலை நம்மைச் சுட்டெரிக்கின்றது. எல்லாமே அவசர புரட்சிகள். இந்த வாரம் புதிதாக உதயமாகும் புரட்சி, முந்தைய வாரம் உதித்த புரட்சியை அஸ்தமிக்க வைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் எதுவுமே நீடிப்பதில்லை. ஏனெனில் அடித்தளத்தை மாற்றும் நோக்கத்துடன் எவரும்  செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் அதில் நீடித்த முயற்சிகள் இருப்பதில்லை. பல புரட்சிகள் வெறும் திசைதிருப்பல்களாகவே வருகிறது. புரட்சிக் கருத்து கூறுபவர்களிடம் தீர்க்கமாக எதையேனும் பரிந்துரைத்தால் மௌனமாகக் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே, அவற்றை வெறும் உணர்ச்சிகர எதிர்வினைகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். அதுதான் நம்முடைய படைப்பாற்றலுக்கு முழுமுதற்காரணம் என்றாலும், நம்முடைய ஆகப்பெரும் குறைபாடும் இந்த “உணர்ச்சிவசப்படுதலே”. அதனாலேயே பலமுறை சமநிலையை இழக்கிறோம். அதுசார்ந்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை. உணர்ச்சிகளின் மீது கொஞ்சம் கண் வையுங்கள் என்று பேசினால் அதற்கும் கொந்தளிக்கிறார்கள். இன்னொன்று, எல்லாவற்றுக்கும் கருத்து கூறவேண்டிய சமூக அழுத்தமும் அங்கு அதிகமாக இருக்கிறது. கருத்துக் கூறாதவனை உணர்ச்சியற்றவனாக பாவிக்கும் மனநிலையும் எனக்குப் பிடிக்கவில்லை. கருத்துக்கூறாதவன் செய்துகொண்டிருக்கும் அரிய பல சமூகப் பணிகள் குறித்து இமியளவும் அப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது. செயல்திறன் சிறிதுமற்ற போலிப் பாசாங்குக் கருத்தியல்வாதிகளின் கூடாரமே சமூக வலைத்தளம். இதில் “அது சரியா? இது சரியா?” என்கிற விவாதமேடைகள் வேறு. அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குழாயடிச் சண்டைகள்தான் பெரும்பாலும். பட்டியலிட்டால் தனிப்பட்ட முறையில் என்னால் எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய செயல்களே ஏராளமாக இருக்கின்றன. முதலில் அவற்றைச் செய்ய முனைவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

 

இத்தனைக்குப் பிறகும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் குதித்தேன். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். ‘பாலில் விஷம்’ என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லைதான். ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். ஆனால் அது வெறும் நம்பிக்கையாகவே நின்றுவிடும் என்று தோன்றுகிறது.

 

அரசியல் 

 

இந்தியாவில் தேர்தல் நடந்த அதே வேளையில் இங்கும் தேர்தல் நடந்தது. ஆனால் அதற்காக மொத்தமாகவே ஐந்து மணிநேரம்தான் செலவழித்திருப்பேன். எல்லா கட்சிகளின் கொள்கை விளக்க அறிக்கைகளையும் வாசித்தேன். இருந்தாலும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற தெளிவு இல்லாமல் இருந்தது. நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் ஒரு இணைப்பை அனுப்பி வைத்தான். தேர்தலுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தேர்வுத் தளம் அது. நம் தொகுதி மட்டுமல்லாது, தேசம், ஐரோப்பா சார்ந்த கேள்விகளுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் பதில்களுக்கு ஏற்ப, இறுதியில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிக்கலாம் என்று அந்தத் தளம் பரிந்துரைக்கிறது. அது நம் முடிவோடு ஒத்துப்போகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். அவ்வளவே.

 

தாயகத்தில் நாம் இதற்காக செலவழித்த நேரத்தை யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. கட்சிகள் இதற்காக செய்த செலவுகளில் எத்தனையோ  நலிந்த குடும்பங்களை வாழ வைத்திருக்கலாம். எத்தனையோ சாலைகளைச் சீரமைத்திருக்கலாம். எத்தனைப் பேருக்கு மருத்துவ வசதி கிடைத்திருக்கும். எத்தனையோ கல்விக்கூடங்களை சீரமைத்திருக்கலாம். இப்படி எத்தனையோ அறச்செயல்கள் புரிந்திருக்கலாம். அதிலும் என்னை மிகவும் பாதித்தது இந்த அருவருப்பு நிறைந்த அவதூறுப் பரப்புரைகளே. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எல்லா கட்சிகளுக்குமே தாங்கள் திருடர்கள் என்கிற தெளிவு இருப்பதாகவே தோன்றுகிறது. அதனாலேயே “மற்றவன் மகா திருடன்” என்கிற ரீதியிலான பரப்புரைகள் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களின் கோரப் பசிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் மெத்தப் படித்த பெருமக்களே என்பது வேதனை தரக்கூடிய விஷயம். இதில் பலர் எனக்கு இளம் வயதில் கல்வி கற்பித்த ஆசான்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட அடிப்படை அறம், உயர் பண்புகள், இத்யாதி இத்யாதிகளை சாக்கடையில் கொட்டிவிட்டு, தாங்கள் நம்பும் தலைவர்களே புனிதர்கள், மற்றவர்கள் கொடூர அரக்கர்கள் என்று உரக்கக் கத்திக்கொண்டு, அதை எப்பாடு பட்டேனும் நிரூபித்தே ஆகவேண்டும் என்று சபதம் பூண்டு, சாகசமாகச் சாக்கடையில் குதித்து, கட்டிப் புரண்டு தங்களைத் தாங்களே சிறுமைப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இவையனைத்துக்கும் மேலாக எவ்வளவு நேர விரயம்!

 

இன்னொன்று, சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் அநாகரிகமான, தரங்கெட்ட வார்த்தைகளைக் கலந்து பேசுவதென்பது அரசியல்வாதிகளுக்கும், சமூக வலைதளப் போராளிகளுக்கும், சமூக வலைதள “எழுத்தாளர்களுக்கும்” பேஷனாகி விட்டது. மதம், இனம், கட்சி சார்புடையவர்கள் இந்த விஷயத்தில் நிராயுதபாணிகளாகச் செயல்படுகிறார்கள். அறிவு என்னும் ஆயுதம் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறேன். இவர்களுக்கென்று சுய சிந்தனை என்று எதுவும் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. வெகுஜனங்களின் உணர்ச்சிகளுக்கு உணவூட்டிக்கொண்டிருப்பவர்கள். நண்பர்கள் சிலரைத் தொட்டு மீட்கப் பலமுறை முயன்றேன். சாக்கடைத் தண்ணீர் என்மீது தெறித்து நானும் கறைபட்டுக்கொண்டேன். எல்லோருமே பொதுவாக என்னிடம் கூறியது, “அவனை நிறுத்தத் சொல். நான் நிறுத்துகிறேன்” என்பது போன்ற தாதாக்களின் வசனங்கள். அதன் பிறகு என் மீதே பாய்ச்சல்கள். அதனால் இவர்களை விட்டு விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இன்னொருபுறம் எழுத்தாளர்கள் என்கிற அடைமொழியைத் தாங்கிக்கொண்டு இணையத்தில் உலவும் ஆகச் சிறந்த சிந்தனையாளர்கள், சாமான்யர்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக இவற்றையெல்லாம் செய்துகொண்டிருந்ததை அறத்தின் வீழ்ச்சியாக நான் காண்கிறேன். IN BOLD.

 

முகநூல் தளம் ஒரு நவீன குருஷேத்திரக் களமாகத் தெரிந்தது எனக்கு. அவதூற்று பரப்புரை மீம்ஸ்கள், பெருவெறுப்பு நிறைந்த பதிவுகள், காழ்ப்புக் கொண்ட காணொளிகள் இவையே இங்கு ப்ரம்மாஸ்திரங்கள். ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின் மீது என்று மாறி மாறி வெறுப்பம்புகளைக் கக்கிக் கொள்கிறார்கள். சண்டை வெறிபிடித்த காட்டுமிராண்டிச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோமா நாம்? அல்லது இப்படி ஒருவரை ஒருவர் நாராசமாக சீண்டிக்கொண்டு விளையாடுவதை பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கிறார்களா. அல்லது நம் சமூகம் எப்பொழுதுமே இப்படித்தான் இருந்து வந்ததா? இன்றைய நாகரிகம் இப்படி இருக்கும் நிலையில் கீழடி நாகரீகத்தைப் பற்றி பேசி என்ன பயன். நம்முடைய முன்னுரிமைகள்தான் என்ன?

 

பதினோரு வருடங்களுக்கு முன்பு இந்தூரிலுள்ள இந்திய மேலாண்மை கழக வளாகத்தில், பொது மேலாண்மை வகுப்பில் ‘இந்திய வணிகச் சூழல்’ பற்றி பேசிக்கொண்டிருந்த என்னுடைய பேராசிரியர், “கிட்டத்தட்ட 67 சதவீத இந்தியக் குடும்பங்கள் இன்னமும் சமையலுக்கு விறகுக்கட்டைகளைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன” என்றொரு தகவலைச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. இந்த சதவீதத்தில் இன்றைக்கும் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களோ, வளர்ச்சியடைந்த நகரங்களோ, மாநகரங்களோ அல்ல இந்தியா. உண்மையான இந்தியா இன்னமும் அடுப்பில் விறகைப் போட்டு ஊதிக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அருவருப்பாக வசைபாடிக்கொள்வதாலோ, அடித்துக்கொள்வதாலோ அந்த 67 சதவீத உண்மையான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. இவர்களின் ஆரவாரங்கள் அவர்கள் காதுகளில் விழப் போவதுமில்லை. இதற்குத்தானா இவ்வளவு அக்கப்போர்!

 

 

மதம் 

 

மனிதர்களுக்கு மதம் பிடிக்கிறது. அவரவர்க்கு அவரவர் மதம் பிடித்திருக்கிறது. “ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என்றான் பாரதி. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அவரவர் அவநம்பிக்கையும் அவரவர்க்கே. அவரவர் தமதமது அறிவறி வகைவகை. மற்றோரின் நம்பிக்கையைச் சிதைப்பதை நான் விரும்புவதில்லை. அது மூட நம்பிக்கையாயிருப்பினும்கூட. உலகில் எத்தனையோ மூடத்தனங்கள். இதில் கடவுள் சார்ந்த விஷயங்கள் மட்டுமே மூடத்தனம் என்று கூறுவது பகுத்தறிவும் ஆகாது. நான் மத அடையாளங்களைத் துறந்தவன். அக்நாஸ்டிக்தான். ஆனால் தேடலைத் துறந்தவன் இல்லை. எதிலும் தேடல் அவசியம்தானே. தேடலே வாழ்க்கை. தெரிந்து தெளிதல் ஞானம். ஞானமே ஒளி. ஒளியே இருளை அகற்றும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால், எனக்கு ஒன்று தேவையில்லை என்பதால் மற்றவர்களுக்கும் அது தேவைப்படக்கூடாது என்று எண்ணுவது அறிவீனம். நான் வலிமையானவன் அதனால் ஊன்றுகோல் எனக்குத் தேவையில்லை என்பதால் அதை வைத்திருக்கும் வயோதிகனிடமிருந்து பிடுங்குவது என்பது இரக்கமற்ற செயல் அன்றோ. உளவியல் அறிந்தவன் என்கிற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். மாற்று முன்வைக்கப்படாமல் இருப்பதை விளக்குவது ஆபத்தானதும்கூட.

 

என்னுடைய உறவுகள் வாட்சேப்பில் தினமும் கடவுளர் படங்களை அனுப்புகிறார்கள். அதற்கு நன்றிகூட சொல்வேன். நம்மை சில ஜீவன்கள் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடையும் சாமான்யன் நான். நாளைக்கே எனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் மசூதிக்குப் போவது பற்றி சற்றும் யோசிக்கமாட்டாள் என் அம்மா. சிறுவயதில் பலமுறை அதைச் செய்திருக்கிறார். அவளுடைய அப்பாவித்தனமான பக்தியில் யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அன்பையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அது. இன்னொரு நண்பன் என்னுடைய எல்லா கட்டுரைகளையும் படித்துவிட்டு, இது அப்படியே குர்ஆனில் வருகிறது, நண்பா. நாங்கள் பின்பற்றுவதே இல்லை. நினைவூட்டலுக்கு நன்றி என்று கூறுகிறான். ஆனால் கண்டதற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்களின் கடவுள் நம்பிக்கையின் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டாகிறது. நம்புவதுதான் நம்புகிறார்கள், முழுமையாக நம்பலாம்.

 

ஆனால் மத அடிப்படைவாதம் என்பது வேறொரு தளம். அடிப்படைவாதம் மனிதத்துக்கு எதிரானது. எனவே அது நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியது. எந்த மதமாயினும். தனிப்பட்ட முறையில் அதை நான் சார்ந்திருக்கும் மதத்தில் இருந்தே தொடங்குவேன். அறச் செயல்களை வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என்பார்கள். எனவே என் வீட்டிலிருக்கும் மத அடிப்படிவாதிகளை எதிர்ப்பதிலிருந்தே அதைத் தொடங்கியிருக்கிறேன். ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் இதையே செய்யவேண்டும். ஏனெனில் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுவும் ஒரு அறச்செயல்தான். கடவுளையே காப்பாற்றக் கிளம்பும் மத அடிப்படைவாதிகள் அவர்தம் கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்களா என்கிற கேள்வி எழலாம். உண்மையில் இவர்களுக்கு கடவுள் மீதெல்லாம் பெரிய ஈடுபாடு இருக்காது. உளவியல் ரீதியாகப் பார்த்தோமானால் அடிப்படைவாதிகள் பெரும்பாலும் நார்சிஸிஸவாதிகளாக இருப்பார்கள். மதம் மட்டுமல்ல, இவர்கள் எதைக் கையில் எடுத்தாலும் அதுதான் சிறந்தது என்றும், அதை மற்ற எல்லோருமே பின்பற்றவேண்டும் என்று நினைப்பவர்கள். அப்படி அது நடக்காத பட்சத்தில், அமைதியிழப்பார்கள்; அரக்கத்தனத்தை சூடிக்கொள்வார்கள். அவர்கள் கையிலெடுத்திருக்கும் விஷயத்துக்கு எதிர்கருத்து உடையோர்களை மூர்க்கமாகத் தாக்கி, அவர்களை அழிக்க முயல்வார்கள். அதற்காக எதையும் செய்ய முயல்வார்கள். எதிர்கருத்துடையோரைப் பற்றி எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்புமளவிற்கு நிராயுதபாணிகளாக நிற்பார்கள். இத்தகையோர் கைகளில் மதமும், அரசியலும் வந்தமர்ந்துவிட்டால் அவர்களுடைய மூர்க்கத்தனம் அதன் உச்சத்தைத் தொடும். அதன் பிறகு யாராலும் அதைக் கட்டுப்படுத்தமுடியாது. உளவியல் தெரிந்த எவரும் என்னுடைய இந்தக் கருத்தை ஏற்க மறுக்கமாட்டார்கள். தன்னுடைய நம்பிக்கையே ஆகச் சிறந்ததென்றும், சக மனிதனை அவனுடைய நம்பிக்கைகளுக்காகத் தூற்றுவதும் வெறுப்பதும் மனிதம் ஆகாது. ஆனால் அடிப்படைவாதம் என்பது தான் சார்ந்த மார்க்கத்துக்காக இவை அனைத்தையும் செய்யும். எதையும் தூக்கி எறியத் தயங்காது. எவரையும் கொல்லும். அது சரியென்றும் வாதம் செய்யும். தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்ளும். இதைத்தான் இப்போது தாயகத்தில் கண்ணுற்று வருகிறோம்.

 

நடுவுநிலைமை

 

இந்துத்துவர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அத்தனை வல்லவர்களும் தங்களை எதிர்த்து நிற்கும் பொது எதிரிகளுக்கு அவர்களே வைத்திருக்கும் பெயர் – “நடுநிலை நக்கிகள்”. நக்கிகள். ஆகா! எத்தனை கருத்தாழம் மிக்கச் சொல்! “இளம்” எழுத்தாளர் பெருமக்கள் பலரும் இதைப் பலமுறை பயன்படுத்தி தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும், தமிழின் நீள, அகல, ஆழத்தையும், நெஞ்சை நிமிர்த்தி உலகுக்குப்  பறைசாற்றுகிறார்கள். இவர்கள்தான் இன்றைய தமிழ் இளைஞர்களை வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள். வாழ்க இவர்தம் சமூகத்தொண்டு! வாழ்க தமிழ்!

 

“ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்” என்பதல்ல நடுவுநிலைமை. ஆற்றில் குதித்து நீந்திக் கொண்டாடவேண்டிய நேரத்தில் கொண்டாடவும் தெரியவேண்டும், அதே சமயம் அது சீறிப் பாய்ந்து வரும்போது அணைகட்டித் தடுக்கவும் தெரியவேண்டும். நடுவுநிலைமை என்பது ஒரு தொடர் செயல்பாடு. தொடர்ந்து பகுப்பாய்வு செய்து மெய்ப்பொருள் காண முயன்றுகொண்டே இருப்பது அது. “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” என்று ஜெயகாந்தன் எடுத்துரைத்த அந்தந்த நேரத்து நியாயம் எது என்பதை சிந்தித்து தெரிவுசெய்பவர்களே நடுவுநிலைமை கொண்டவர்கள். ஆனால் அங்கேயே தங்கித் தேங்கிவிடாதவர்கள். எதன் பொருட்டாவது எதன் மீதாவது சாய்ந்து கிடப்பது என்பது ஒட்டுண்ணி மனநிலை. எந்த எதிர் விமர்சனமும், சந்தேகமும் இன்றி எதையும் எவரையும் முழுமையாக ஆதரிப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று சுந்தர ராமசாமி கூறுவார். சீண்டினால் சேர்ந்துவிடுவார்கள் என்பதை இத்தகையோர் அறிவார்கள். அதனால் வம்புக்கு இறங்குபவர்களிடம் சமநிலை இழக்காமல் உணர்ச்சிகளை அடக்கித் தம் கருத்தைத் தன் வழியில் சொல்வதே அறிவுடையவர்கள் செய்யக் கூடியது.

 

இருமை என்னும் இருண்மைக்குள் சிக்கிக்கொண்டவர்களுக்கு நான் கூற வருவது புரிய வாய்ப்பில்லை. நன்மை-தீமை, உயர்வு-தாழ்வு, சரி-தவறு, திமுக-அதிமுக, கருப்பு-வெள்ளை என்று இருநிலைத்தன்மை உடையவர்கள், இவை இரண்டுக்குமிடையே சாம்பல் பகுதிக்குச் சாத்தியமே இல்லை என்று கருதுபவர்கள். ஜெயலலிதாவின் செயலைப் பாராட்டினால், “இவன் அதிமுக-காரன்”. கருணாநிதியைச் சந்தித்தால், “இவன் திமுக-காரன்”. ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினால் இவன் அவருடைய அடிவருடி. இவை சார்ந்து கிண்டல்கள். நம் சமூகத்தின் அறிவு, “பனைமரத்தடியில் பால் குடித்தால் கள்” என்கிற அளவில்தான் இருக்கிறது.

 

“ஓரஞ் சொல்லேல்” என்கிறார் ஒளவையார். “ஓரஞ் சேரேல்; சொல்லேல்” என்பேன் நான். ஓரம் சேரா மையவாதிகளுக்கு வள்ளுவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். “தக்கார்” என்பதுதான் அது. இலக்கியவாதிகளின் பெரும்பாலானோர் தகவிலரே. அதுவும் இன்றைய இளம் எழுத்தாளர்களின் பாசாங்குத்தனம் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியுமளவில் இருக்கிறது. தமிழ் இலக்கிய உலகின் பாசாங்குத்தனம் பற்றி எழுத வேண்டிய நேரம் இது. தங்களை அதிமேதாவிகளாகக் காட்டிக்கொள்வதற்காக சதா சாமான்யர்களையும் அவர்தம் ரசனையையும் விமர்சித்துக்கொண்டிருப்பது, ஆனால் அதே சமயம் சாமான்யர்கள் செய்யும் அத்தனையும் செய்வது. இதற்கு சாமான்யர்கள் எவ்வளவோ தேவலை. மேதைகளின் பாசாங்குத்தனத்தைவிட சாமான்யர்களின் நேர்மையே எனக்கு மிகவும் பிடிக்கிறது. எனக்கு எல்லாமும் வேண்டும். இந்த உலகம் அற்புதமானது; பிரம்மாண்டமானது. இங்கு எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது.

 

சில நாட்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் லூவன் நகர மையத்திலுள்ள உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது நண்பர் ரகு, “இலக்கியப் புத்தகங்களை எதற்குப் படிக்கவேண்டும், மாதவன்? இலக்கியவாதிகள் செய்வதையெல்லாம் பார்ப்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதுவும் அரசியலில் இருக்கும் இலக்கியவாதிகள் செய்துவரும் அயோக்கியத்தனங்களைப் பார்க்கும்போது, இவர்களிடமிருந்து எனக்கு கற்றுக் கொள்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.” என்று சற்று கோபமாகவே கூறினார். அந்த கோபத்தில் இருந்த அவரது நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பற்றி அன்றைக்கு நீண்ட நேரம் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

 

தமிழில் “சான்றோர்” என்று ஒரு சொல் இருக்கிறது. அதைப் பற்றி கிருஷ்ணகிரியில் ஒருமுறை  பேசிக்கொண்டிருக்கும் போது கவிஞர் பெருமாள் ராசு ஐயா அவர்கள் “சான்றோன் என்பவன் பிறருக்குச் சான்றாக வாழ்பவன்” என்று பொருள் விளக்கம் தந்தார். என்னளவில் இலக்கியவாதி என்பவன் நிச்சயம் சான்றோன் அல்ல. அவன் வெறும் மனிதன். திறமை வாய்ந்த மனிதன். எழுத்துத் தொழில்நுட்பம் தெரிந்தவன். மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவன். இவை இரண்டையும் இணைத்து இலக்கியம் படைக்கத் தெரிந்தவன். மற்றபடி மனிதனிடமுள்ள அத்தனைச் சிறுமைத்தனங்களும் இலக்கியவாதியிடமும் குடிகொண்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது. மனித மனத்தின் நீள, அகல, ஆழங்களில் நீந்தி அலசி ஆராய்ந்து அழகாக எழுதி ஊரார்க்கு உரைத்துவிட்டு, பிறகு மீண்டும் அதே சகல சிறுமைத்தனங்களோடும் சாமான்ய மனிதனாகவும் வாழ இலக்கியவாதியால் மட்டுமே முடியும். அதனாலேயே அவன் எனக்கு விந்தனையானவனாகத் தெரிகிறான்.

 

மற்றேனைய துறைகளில் உள்ள அறிவுஜீவிகளைப் போன்றே, இலக்கியவாதிகளிலும் சில சான்றோர்கள் உண்டு. சில சிந்தனையாளர்கள் உண்டு. “சொல்லே மந்திரமடா!” என்கிற முனைப்புடன் வாழ்பவர்கள் அவர்கள். இந்த முனைப்பு எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படிப்பட்ட இலக்கியவாதிகள் இங்கு வெகுகுறைவு. இந்த விஷயத்தில் சிக்கல் சமூகத்திடம்தான் இருக்கிறது. ஒரு சான்றோனிடம், சிந்தனையாளனிடம் எதிர்பார்ப்பதையெல்லாம் எல்லாம் இலக்கியவாதிகளிடமும் எதிர்பார்க்கிறது இந்தச் சமூகம். சிலர் இந்தச் சிக்கலைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இலக்கியத்தின் போர்வையில் தங்களைச் சான்றோர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொண்டு சாமானியர்களைத் தவறாக வழிநடத்தும் அத்தகையோரின் பாசாங்குத்தனத்தில் எனக்கு மிகப்பெரும் விமர்சனமிருக்கிறது. விரிவாக எழுதுகிறேன்.

 

அன்பன்,

மாதவன் இளங்கோ

பெல்ஜியம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்