கவிதைகள் பறக்கும்போது…

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைகளை ஒலிவடிவமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவை ஒலிவடிவில் மேலும் அழகுகொள்பவை.உரைநடையில் சற்று கீழிறங்குபவை. அப்போதுதான் ஜோதிபாய் பரியாடத்து என்னும் கவிஞரின் வலைத்தளத்தைச் சென்றடைந்தேன்.

 

1965 ல் பிறந்த ஜோதிபாய் பேசாமடந்தை, கொடிச்சி, ஆத்மகதாக்யானம் போன்ற கவிதைநூல்களை எழுதியவர். பாலக்காட்டுக்காரர் ஆகையால் தமிழ் தெரிந்திருக்கிறது. மயிலம்மாள். போராட்டமே வாழ்க்கை என்னும் நூலை தமிழில் இருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். மயகோவ்ஸ்கி கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். பாலக்காடு மாவட்டம் பற்றிய அரசு வெளியீட்டில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

 

ஜோதிபாய் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத்தின் புகழ்பெற்ற கவிதைகளை பாடி வலையேற்றியிருக்கிறார். அவருடைய குரல் இனியது. கவிதைகளை ஒரு கவிஞராக உள்ளுணர்ந்து பாடியிருக்கிறார். ஆகவே உணர்ச்சிகள் ஆழமாக வெளிப்படுகின்றன. உச்சரிப்பு துல்லியமானது. மலையாள மரபுக்கவிதைகளை அவருடைய குரலில் கேட்பது ஓர் அரிய அனுபவம். அவற்றின் வலையேற்றத்தில் வரிகளும் கூடவே தோன்றுவதனால் பொருள்மயக்கம் இல்லாமல் வாசிக்க முடிகிறது

 

அதைக் கேட்டுக்கொண்டிருக்கையில் எண்ணிக்கொண்டேன், முப்பதாண்டுகளுக்கு முன்பு குற்றாலம் கவிதை அரங்கில் தமிழ் – மலையாளக் கவிஞர்களின் கூட்டு உரையாடலை நிகழ்த்தினேன். தொடர்ந்து பதினான்கு தமிழ்- மலையாள கவிதை உரையாடல் அரங்குகளை ஒருங்கிணைத்தேன். முதல் சந்திப்பு முதலே எழுந்துவந்த முதன்மையான விவாதப்பொருள் கவிதையின் இசைத்தன்மை. மலையாளக் கவிதைகளின் இசைத்தன்மையை தமிழ்க்கவிஞர்கள் கடுமையாக நிராகரித்தார்கள். குறிப்பாக யுவன் சந்திரசேகர்

 

அவருடைய விமர்சனப்பார்வையில் கவிதைக்கு ‘வெளியே’ இருந்து ஒரு இசையை அளிக்கக்கூடாது என்பதற்கு அவர் சொன்ன காரணங்கள் இவை.

 

அ. இசையமைப்பது அந்தக்கவிதையின் உணர்வுநிலையை இசையால் வகுத்துவிடுகிறது. கவிதைக்கு ஒர் உணர்வுநிலை உண்டு. இசையின் உணர்வுநிலை வேறானது.

 

ஆ. இசையின் உணர்வுநிலை எப்போதுமே சற்று மிகையானது. துயரம் , எக்களிப்பு, கொந்தளிப்பு எல்லாமே. கவிதை இசையமைக்கப்படும்போது அந்த உணர்ச்சிகள் மிகையாக வெளிப்படுகின்றன. நவீனக்கவிதை மிகையற்ற குறைவான உணர்வுநிலையையே எப்போதும் பயில விழைகிறது

 

இ. நவீனக் கவிதை செவிநுகர் கனி அல்ல, அகவாசிப்புக்குரியது. அகவாசிப்பில்தான் அதன் சித்திரங்கள் துலங்கும்.

 

ஈ. நவீனக்கவிதையின் மௌனங்கள் வாசகனே வாசிப்பில் விடும் இடைவெளி வழியாக உருவாகின்றன. இசை சேரும்போது கவிதை ஒரே ஒழுக்காக ஆகிவிடுகிறது

 

உ. நவீனக்கவிதை காட்சிவடிவானது. செவியனுபவம் மையப்படுகையில் காட்சியனுபவம் குறைவுபடுகிறது

 

ஊ. நவீனக்கவிதைக்கு சொற்களும் வரிகளும் கண்ணுக்கு தெரியும் அந்த வடிவமும் முக்கியமானது. வரிகளின் உடைப்பும் இடைவெளியும் முக்கியமானவை. இசைக்கவிதை அவற்றை இல்லாமலாக்கிவிடுகிறது.

 

எனக்கும் யுவன் சந்திரசேகரின் எல்லா கருத்துக்களும் அன்று உடன்பாடானவையாகவே இருந்தன. நவீனக்கவிதையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இசைத்தன்மை இல்லாமலிருப்பது என்றே நினைக்கிறேன். ஆனால் இன்று நவீனத்தன்மையின் மாறாத உரைநடைத்தொனியும் உணர்ச்சி கலவாத வரண்ட மொழியும் கடும் சலிப்பை உருவாக்கியிருக்கின்றன. ஒரு மாறுதலுக்காகவாவது இசைத்தன்மை கொண்ட கவிதைகளும் அவ்வப்போது வெளிவரலாம் என நினைக்கிறேன்

 

இன்னொன்று, இன்றைய கவிதைகளை வாசிக்கையில் கவிஞன் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோல தோன்றுகிறது. கவிதை என்பதே உரையாடலின் ஒரு துணுக்குத்தான் என்று படுகிறது. அணுக்கமான கவிஞனுடனான ஓர் உரையாடல் இனியது. ஆனால் தொடர்ந்து கவிதைகளை வாசிக்கையில் பலநூறுபேர் ஏறத்தாழ ஒரே மொழியில் என்னிடம் பேசுவதுபோலிருக்கிறது. கவிதையில் இசைக்கூறு அமையும்போது அந்த உரையாடல்தன்மை இல்லாமலாகி அதற்கு ஒரு புறவயத்தன்மை, ஒரு பொதுப்பாவனை  உருவாகிவிடுகிறது.

 

நவீனக் கவிதைகளின் அமைப்பும் ‘அந்தரங்கமான குறிப்பு’ என்ற வடிவிலேயே உள்ளது. அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் பண்டத்தே மேல்சாந்தி என்னும் கவிதையை வாசித்தபோது அதன் கதைத்தன்மை அற்புதமான அனுபவமாக இருந்தது. அது ஆசிரியனின் குரல் அல்ல. அக்கதாபாத்திரத்தின் குரல். மாபெரும் ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சொல்கிறார்,

 

எனதில்லை எனதில்லை இக்கொம்பன் யானைகள்

எனதில்லை இப்பேராலயம் பிள்ளைகளே

 

அந்த வரி அந்தப்புனைவிலிருந்து மேலெழுகிறது. கேரள நம்பூதிரி சமூகம் கேரள சமூக ஆதிக்கத்தின் முகம். யானைமேல் அமர்ந்திருப்பவர்கள் தெய்வமும் நம்பூதிரிகளும்தான். ஆனால் அந்த யானை அவருடையதல்ல. ஆலயமும் அவருடையதல்ல. அவருக்கு நிலம் மேல், அரசுமேல் எந்த அதிகாரமும் இல்லை. ஒரு தனிவாழ்க்கையிலிருந்து சமூகச்சித்திரமாக எழுகிறது கவிதை. யானைமேல் அமர்ந்திருக்கும் தன்னந்தனியன், கைவிடப்பட்டவன். அந்த படிமம் அந்தச் சமூகச்சூழலையும் கடந்துசெல்கிறது.

 

அத்தகைய ‘கதைக்கவிதைகள்’ உலகமெங்கும் உள்ளன. கதைக்கவிதைகளின் தேவை என்னவென்றால் அவை அரிய கவிச்சொல்லாட்சிகளை அக்கதைச்சூழலில், அதில் நிலைநாட்டப்பட்டுள்ள கதைமாந்தரின் நாவில் எழச்செய்ய முடியும் என்பதே. அவை கவிஞனின் சொற்களாக வரும்போது அந்த ஆற்றல் உருவாவதில்லை. ஏனென்றால் அக்கவிஞனின் ஆளுமையை நாம் கவிதைக்கு வெளியே சென்று புனைந்தெடுத்துக் கொண்டுவந்து கவிதைக்குள் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. இங்கே கவிதையின் கதைப்பரப்பே அந்த உணர்வுநிலையை, தரிசனநிலையை நிறுவிவிடுகிறது

 

கவிதையில் கதைசொல்லும்போது அதன் நீண்ட சித்தரிப்பு கொஞ்சம் ‘தரைதொட்டு’ நடக்கவேண்டியிருக்கும். அந்த தட்டைத்தன்மையை இசையம்சம் மேலே தூக்கிவிடுகிறது. பண்டத்தே மேல்சாந்தியில் தலைமைப்பூசாரியாக இருந்தவரின் வாழ்க்கைச்சித்திரம் இசையால்தான் கவித்துவமாகிறது.

 

தமிழிலும் கவிதையை இசையுடன் இணைக்கும் சில கவிஞர்களாவது எழலாம்.மலையாளத்தில் கவிதை ஒரு பொதுமக்கள் இயக்கமாக இன்னமும் நீடிப்பதற்கு அதன் செவிநுகர்த்தன்மை ஒரு முதன்மையான காரணம். தமிழிலும் அதற்கான வாய்ப்புகள் மிகுதி என்றே தோன்றுகிறது.

 

ஆனால் கவிதையை ஆலாபனம் செய்யக்கூடாது என நான் நினைக்கிறேன். கவிதையை அதற்கு வெளியே உள்ள ஒரு ராகக்கட்டமைப்புடன் சென்று பொருத்தக்கூடாது. ஜோதிபாய் கவிதையை ‘பாடவில்லை’. அதை மலையாளத்தில் ‘சொல்வது’ என்கிறார்கள். அதாவது ஆங்கிலத்தில் chanting என்று சொல்லப்படுவது. அது பாடுவது singing அல்ல. அந்தக்கவிதையின் உள்ளேயே அதற்கான தாளமும் இசையம்சமும் இருக்கிறது. அதை பாடி வெளிப்படுத்துகிறார் ஜோதிபாய். அதை பாடலாக மாற்றுவதில்லை.

 

இந்த இரண்டுநாட்களில் இருபது கவிதைகளுக்குமேல் கேட்டேன். எல்லாமே பழைய கவிதைகள், கேட்டு நினைவிலூறிய வரிகள். மீண்டும் இசையில் அவை எழுந்தபோது பட்டாம்ப்பூச்சிகள் கூடுகளை உடைத்து வண்ணச்சிறகுகளுடன் எழுந்து சூழ்ந்துகொண்டதுபோல் உணர்ந்தேன்

ஜோதிபாயின் வலைப்பக்கம்  http://kavyamsugeyam.blogspot.com/

 

விஷு தலேந்ந்து – அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி

 

 

 

அர்க்கம் – ஆற்றூர் ரவிவர்மா

 

 

சாந்த- கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5