அன்புள்ள ஜெயமோகன்..
உங்களோடு தொடர்பு கொள்ளுவது இதுவே முதல் முறை. உங்கள் வாழ்த்துக்கும் குறிப்புகளுக்கும் சந்தோஷம்.
நான் ”எழுத்துவுடன் “” தொடர்பில் இருந்தது சில ஆண்டுகள் தான்.. போகப் போக எனக்குள் ஏற்பட்ட அனுபவ மாற்றங்களால் என் கவிதைகள் வெவ்வேறு தளத்துக்கு அதனால் வெவ்வேறு கோட்பாடுகளின் பொருத்ததிற்கு மாறி வந்திருப்பதாக எண்ணுகிறேன்.
பிற்கால கவிதைகளில் படிமங்கள் பாம்பு சட்டை திரி உதிர்ந்து விட்டன. ஆனால் எந்தக் கோட்பாடுகளுக்கும் எப்போதும்
சிக்கிக் கொள்ள எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. அதை பற்றிய ஆராய்ச்சிகளும் என் இயல்புக்கு ஒத்து வரவில்லை..
கவிதை என் உயிரின் சுதந்திரத்தை எனக்கு நிதர்ஸனப் படுத்துகிறது. வாழ்க்கையை மனித உறவுகளைப் பற்றி உண்மையின் சூட்டோடு வெளிப்படுத்துவதில் இந்தப் பிறவி எனக்கு அர்த்தமுள்ளதாகிறது. இவையெல்லாம் கவிதைகளா பரிசுகளுக்கு இதில்
என்ன இடம் என்ற சிந்தனைகள் என்னை பெரிய அளவில் ஆட்கொள்ளுவதில்லை.
நீங்களும் அப்படிப்பட்ட ஆளுமை கொண்டவர் தான். ஈழத்து இலக்கியம் பற்றி நீங்கள் சொன்ன அபிப்ராயங்களில் புறப் போராட்டங்களின் விவரிப்புகளில் சிக்கிக் கொண்டு இலக்கியத்துக்கு உயிர்நாடியான அகவிழிப்பை இழக்கும் படைப்புகள் பற்றி சொல்லியிருகிறீர்கள். அது எவ்வளவு சத்தியமானது!
—வைதீஸ்வரன்
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எஸ்.வைத்தீஸ்வரன் அவகளுக்கு,
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? உங்களை நேரில் சந்தித்து விரிவாகப்பேச இதுவரை அமையவில்லை. சென்னை மீதுள்ள ஒரு மனவிலகல் காரணமாக அவசிய வேலை இருந்தாலொழிய அங்கே வருவதில்லை என்பதே காரணம்.
தொடர் பயணங்கள் முடித்து இப்போதுதான் ஊர் திரும்பினேன். ஆகவே கடிதங்கள் தாமதமாகிவிடன . மன்னிக்கவும்
நான் கால்நூற்றாண்டுக்கும் மேலாக உங்கள் கவிதைகளைப் படித்துக்கொன்டிருக்கிறேன். எழுத்து மரபுடன் உங்களை தொடர்பு படுத்துவது உங்கள் தொடக்கம் பற்றிய ஓர் அடையாளத்துக்காகத்தான். பொதுவாக கவிஞர்களை எப்படிப்பட்ட அடையாளத்தில் நிறுத்தினாலும் பெரும்பகுதி வெளியேதான் கிடக்கும். இதை ஒவ்வொரு முறையும் சொல்லியபின்னரே அவ்வடையாளங்களை நான் செய்வது வழக்கம். அது இலக்கிய விமரிசனத்தின் ஒரு பாணி.
படிமங்களில் இருந்து விலகி படிமத்தன்மை கொன்ட நிகழ்வுகளை நோக்கியும் அதன்பின் படிமமில்லாத கவிதைகளை நோக்கியும் உங்கள் பயணம் இருப்பதை அவதானித்திருக்கிறேன்
பரிசுகளில் ஒன்றும் இல்லை. ஆனால் பரிசுகள் ஒரு படைப்பாளிக்கு ஒரு அமைப்பு அளிக்கும் அங்கீகாரம். அந்த அமைப்பு எது அதன் நோக்கம் எது என்பதைவைத்து பரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வகையில் உங்களுக்குக் கிடைத்த பரிசு முக்கியமானது. அதை அளித்தவர்கள் உங்கள் கவிதையின் சிறந்த வாசகர்கள் என நான் அறிவேன்
ஜெ
**
அன்புள்ள ஜெயமோகன்,
இலக்கியப்பரிசுகளை நீங்கள் ‘கண்டுகொன்டு’ வாழ்த்துவதில் உள்ள அரசியல் தெளிவாகவே தெரிகிறது. நன்றி
சிவம்
அன்புள்ள சிவம்
நன்றி. அப்படி தெளிவாகத்தெரியவேண்டுமென்பதற்காகத்தானே மெனக்கெட்டு எழுதுவது. நீங்கள் புரிந்துகொள்ளும் முனைப்புடன் இருப்பீர்கள் என்றால் இன்னும்கூட மேலே சென்று கவிதைகளை- இலக்கியத்தைப்பற்றி நிறையவே யோசிக்க முடியும்.
எல்லா பரிசுகளையும் பாராட்ட வேண்டுமென்றால் எதற்கு எழுத்தாளன்? ஒரு மென்பொருளை நிறுவினாலேபோதுமே? அல்லது கவிமணி தேசிக வினாகம் பிள்ளை போல ஒரு உதவியாளரை வைத்திருக்கலாம். அவர் ‘எந்நாள் காண்பேன் இனி?’ என முடியும் வெண்பாக்கள் எழுதி தயாராக வைத்திருப்பாராம். யாராவது இரங்கற்பா கேட்டால் சட்டென்று விடுபட்ட இடங்களை நிரப்பி அந்த உதவியாளரே கொடுத்துவிடுவார்
நீங்கள் அரசியல் என்று சொல்வ்து என் ரசனை சார்ந்த முடிவுகளை என நான் எண்ணுகிறேன். நான் தொடர்ச்சியாக வாசிப்பவன் என்ற முறையில் படைப்புகளை தரம்பிரிப்ப்வன். தரமான படைப்புகளை பிறருக்கு சிபாரிசு செய்பவன். அவர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளும் பொருட்டு கட்டுரைகள் எழுதுபவன். அக்கட்டுரைகளை நூலாக வெளியிடுபவன். சென்ற காலங்களில் பார்த்தீர்கள் என்றால் தரமான படைப்புகள் அங்கீகரிக்க்ப்படும்போதும் சரி தரமற்ற படைப்புகள் பரிசுபெறும்போதும் சரி அவற்றின் தரம் தரமின்மை ஆகியவற்றை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும்– விவாதிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே நான் அந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இலக்கிய விமரிசகனாக என் கடமை அது. என் கருத்துக்களுடன் நீங்கள் விவாதிக்கலாம். உங்கள் கருத்துக்களை எழுதலாம். அந்த விவாதம் மூலம் இலக்கியத்தின் மதிப்பைப்பற்றிய புரிதல் மேம்பட வாய்ப்புண்டு
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெ
சமீபத்திய இலக்கியப்பரிசுகளைப்பற்றி தொடர்ச்சியாகப்பாராட்டித்தள்ளிவிட்டீர்களே…ஏன்? உங்கள் கருத்துக்களில் விமரிசனங்கள் இல்லையே
ராம்
அன்புள்ள ராம்,
சமீபத்திய இலக்கியப்பரிசுகள் குறிப்பிடத்தக்கவர்களுக்குக் கிடைத்துள்ளன என்பதே காரணம். என்னைப்பொறுத்தவரை ஒருவர் இலக்கியத்துக்காக தன் வாழ்க்கையை சமர்ப்பிப்பதும் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பதும்தான் முக்கியம். அவர் இலக்கியத்தை நேர்மையாக எடுத்துக்கோண்டிருக்கிறாரா என்பது அடுத்த வினா. இலக்கியத்தரம் என்பது அடுத்த வினாவே.
ஏனென்றால் இலக்கியத்தரம் என்பது எப்போதும் முற்றிறுதியாக சொல்லிவிடக்கூடிய ஒன்றல்ல. அது எப்போதும் ஒரு விவாதத்தின் சமரசப்புள்ளியாகவே இருக்கும். பெரும்பாலும் தரம் என்ற அளவீஉ ஒரு சமூகத்தில் கண்ணுக்குத்தெரியாமல் ஆனால் தெளிவாகவே இருந்துகொண்டிருக்கும் . ஆனாலும் அந்த அளவுகோலுக்கு தவறிவிடும் நல்ல படைப்புகள் இருக்கக் கூடும்தான்.
ஆகவே என்னபோறுத்தவரை தேர்ந்த ரசிகர்கள் முக்கியமானதாக கருதும் ஒரு படைப்பை பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்தான். ஓரு நல்ல எழுத்தாளன் அங்கீகாரம்பெற முடியாமல் போவதில்கூட விசித்திரம் ஏதும் இல்லை. அந்தச் சமகாலத்துடன் அவன் ஆக்கங்கள் உரையாடாமல் போய்விட்டன என்றே அதற்குப் பொருள். அது இலக்கியத்திற்கு குறைவு ஒன்றும் அல்ல. இலக்கியம் சமகாலத்தன்மையை தன் நிபந்தனையாகக் கொண்டது அல்ல.
இலக்கிய விருதுகள் சமூக அங்கீகாரங்கள்.அவற்றில் கச்சிதமான இலக்கிய அளவுகோல் இருந்தாகவேண்டும் என்பதில்லை.லெது கண்டிக்கத்தக்கது என்றால் அரசியல் சமூகச்செல்வாக்கு போன்ற புறக்காரணிகளால் இலக்கியத்தளத்தில் தீவிரமோ நேர்மையோ இல்லாதவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படுதல்தான். அது இலக்கியம் என்ற இயக்கத்தையே காலப்போக்கில் சிறுமைகொள்ளச் செய்துவிடும். ஆகவே அத்தகைய நசிவுப்போக்குகளை உடனடியாகக் கண்டனம் செய்ய வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தில் ஒரு விஷயத்துக்கு கடும் கண்டனம் வரும் என்பதே ஒரு பெரிய சக்தி
நான் எழுப்பும் கண்டனக்குரல் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல. அதற்குப்பின்னால் ஒரு இலக்கிய மரபு ஒரு இலக்கியச்சுற்றம் இருக்கிறது. என் குரலை ஏற்கும் பல்லாயிரம்பேர் தமிழகத்தில் உள்ளனர். ஆகவே அது ஒரு வலுவான சமூகத்தரப்பு ஆகிறது. அந்தக்குரல் ஒலிப்பதென்பது இன்றியமையாதது. அக்குரலை எழுப்பாமல் தரமான ஆக்கங்கள் புறக்கணிக்கப்படுவதைப்பற்றி பேசுவதில் பயனில்லை
அத்துடவ் விருதுகள் அளிக்கப்படும் தருணம் என்பது ஒரு படைப்பாளியை பொதுவாக பலர் கவனிக்கும் சந்தர்ப்பம்.அப்போது அவரைப்பற்றிய விமரிசனங்களை ஆய்வுகளை நிகழ்த்துவதும் ஒரு நல்ல மரபுதான்
இப்போது அளிக்கப்பட்டுள்ள விருதுகள் முக்கியமானவையாக இருப்பதற்குக் காரணமும் விருதுகள் மேல் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் விமரிசனம்தான். அந்த அழுத்தம் கண்டிப்பாக முக்கியமானது. பெரும்பாலும் தரமான படைப்புகளுக்கே விருதுகள் அளிக்கப்படும் கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கிய விமரிசனம் அளிக்கும் அழுத்தம் இதைவிடப் பலமடங்கு தீவிரமானது என்பதைக் கண்டிருக்கிறேன். தவறான ஒரு படைப்பு அங்கீகரிக்க்ப்பட்டால் பலசமயம் அந்தப்பரிசை திரும்பப்பெறும் வரை விமரிசகர்கள் ஓய்வதில்லை என்பதை காணலாம்
அன்புடன்
ஜெ
மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது
கனடிய இலக்கியத்தேட்ட விருதுகள்
இயல்’ விருதின் மரணம்
சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
விருதுகள். கேள்வி பதில் – 67, 68
விருதுத் தெரிவுக் கமிட்டியினர் கேள்வி பதில் – 40, 41, 42
சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் கேள்வி பதில் – 04