கேள்வி பதில் – 74

இலக்கியம் தரும் புரிதலும் கண்ணோட்டமும் போதாது, பல சமயங்களில் பிற துறைகள் தொடும் விஷயங்களை/முன் வைக்கும் கருத்துகள் இலக்கியம் மூலம் வரும் சாத்தியம் மிகக் குறைவு. எனவே நான் இலக்கியமற்றது 95% இலக்கியம் 5% படிக்கிறேன். தமிழில் வெளிவரும் சிறுபத்திரிகைகள் எனக்கு அலுப்பூட்டுகின்றன என்கிறார் என் நண்பர். இது குறித்து உங்கள் கருத்தென்ன? சிறுபத்திரிகைகள் ஏன் இலக்கியம், அதிகபட்சம் வரலாறு, தத்துவம் அல்லது இலக்கியம், கலைகள் தொடர்புடையவற்றையே குறித்து கட்டுரைகள் வெளியிடுகின்றன? பிற துறைகளில் எழுதுபவர்கள் குறைவு என்பதுதான் காரணமா?

— R.விஜயா.
தமிழில் வெளிவரும் சிறுபத்திரிகைகள் பொதுவான ஓர் இடைவெளியை நிரப்பும்பொருட்டு உருவானவை. அதாவது செய்திகள், அரசியலாய்வுகள், சமூக ஆய்வுகள் ஆகியவற்றை வெளியிடவும் விவாதிக்கவும் வேறு இதழ்கள் உள்ளன. தமிழில் தினமணி கடந்த 40 வருடங்களாக அப்பணியை ஆற்றிவருகிறது. இன்றும் அதன் நடுப்பக்கம் சாதாரண பொதுமக்களும் துறையறிஞர்களும் எழுதும் மேடையாக உள்ளது. வருடத்துக்கு ஏறத்தாழ 700 கட்டுரைகளை அது வெளியிடுகிறதென்பதை மறக்கக் கூடாது. குடிநீர் சேகரிப்பு, சுற்றுசூழல் ஆய்வு முதல் மருத்துவம் அணு ஆராய்ச்சி வரை அதில் எழுதப்படுகின்றன. முன்பு சுதேசமித்திரன் இதழ் இப்பணியை ஆற்றியது. இவற்றில் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் இடத்துக்கு மேலாகக் கூடுதலாக இடம் தேவையென உணர்ந்தபோது உருவானதே சிற்றிதழியக்கம்.

ஆரம்பத்தில் அது நவீன இலக்கியத்துக்காக மட்டுமே வெளிவந்தது. உதாரணம் எழுத்து. பின்பு இலக்கியத்துக்குத் தொடர்புள்ள திரைப்படம் நாடகம் நாட்டரியல் வரலாற்றாய்வு போன்ற துறைகள் சேர்ந்தன. உதாரணம் படிகள், கசடதபற, யாத்ரா. எழுபதுகளின் பிற்பகுதியில் இடதுசாரி தீவிரக்குழுக்கள் பல உருவாகி மார்க்ஸியத்தின் உள்வழிகள் பல அடையாளம் காணப்பட்டபோது அரசியல்கோட்பாட்டிதழ்கள் உருவாயின. உதாரணம் பரிமாணம், புதிய தலைமுறை, நிகழ். இக்காலத்தில்தான் தமிழாய்வுக்கான சிற்றிதழ்கள் பல உருவாயின. உதாரணம் தெசிணி, வள்ளுவம். சிற்றிதழின் முகங்கள் ஏராளமானவை. அவற்றை பொதுவாக ஒரே வகையாகப் புரிந்துகொள்வது பிழை. இன்றும் பொதுவாக இம்மூன்றுவகையான சிற்றிதழ்களும் வருகின்றன.

இக்காலச் சிற்றிதழ்களில் சமகால அரசியல் சமூகவியல் நிகழ்வுகள் ஏராளமாகவே விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக காலச்சுவடு சமீபகாலமாக கம்யூனலிஸம் காம்பாட் முதலிய இதழ்களின் தமிழ்வடிவமாகவே உள்ளது. சொல் புதிது அதிகமாக தத்துவத்துகே இடமளித்தது. இலக்கியத்தின் இடம் சிற்றிதழ்களில் மிகவும் குறைந்துவிட்டதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இனி சிற்றிதழ்களின் இடம் குறித்து. அத்தனைபேருக்கும் ஆர்வமூட்டும்படி, அலுப்பே ஊட்டாதபடி இருப்பதற்கு சிற்றிதழ்கள் வணிக ஊடகங்கள் அல்ல. விளம்பரங்களை நம்பி இயங்குபவையுமல்ல. சிற்றிதழ்களில் அலுப்பு கொள்பவர்களே தமிழில் பல லட்சம். அவர்கள் சிம்ரன் மீண்டும் நடிப்பாரா என்ற கேள்விமுதல் ராகுல் சொந்தமாகப் பேசுவாரா என்ற கேள்விவரை அலசும் விறுவிறுப்பான இதழ்களையே படிக்கலாம். நான்குபக்கங்களுக்கு மேல் எந்த விஷயமுமே நீளாது என்ற உறுதியும் அங்கு உண்டு.

சிற்றிதழ்களின் பங்களிப்பு அல்லது சாதனை என்ன? மாற்றுக்குரல்கள்தான். அவற்றை நீங்கள் வேறு எங்குமே படிக்க இயலாது. உதாரணமாக எங்கள் ‘சொல்புதிது‘ இதழில் வெளிவந்த இசை ஆய்வாளர் நா.மம்முதுவின் பேட்டி. தமிழின் மையப்பெரும்போக்குக் கலாசாரம் முற்றாகத் தவிர்த்துவிட்ட ஒரு மேதை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். தமிழின் தொன்மையான பண்மரபே இன்றைய மரபிசையாக [கர்நாடக சங்கீதம்] உருவாயிற்று என அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் அறிவியல்பூர்வமாக நிறுவியவர். ராகங்களின் கணித அமைப்பை முதல்முறையாக விளக்கியவர். நம் இசை மரபு குறித்து இதுவரை வந்தவற்றிலேயே மகத்தான நூல் ‘கர்ணாமிர்த சாகரம்’ தான். பண்டிதரின் ஆய்வு முடிவுகளை பின்தொடர்ந்துதான் இன்றைய ராக ஆய்வுகள் அனைத்துமே உள்ளன.

ஆனால் தென்னிந்திய இசை குறித்து எழுதப்பட்ட பல மதிக்கப்படும் நூல்களில் பண்டிதரைப்பற்றி ஒருவரி கூட இல்லை. அப்படி ஒருவர் ஆய்வு செய்தமைக்கான தடையங்களே இல்லை. காரணம் கர்நாடக இசையை இன்று தங்கள் சொத்தாக எண்ணும் பிராமணர்களுக்கு அது பழந்தமிழிசையே என்ற கூற்று கசப்பாக உள்ளது. ஒரு நாடார் அதில் மேதையாக இருந்தார் என்பதும்உவப்பாக இல்லை. அவரை மறுக்க இந்த ஐம்பது வருடங்களில் அவர்களால் இயலவில்லை, ஆகவே மறைக்கிறார்கள். சாதி சார்ந்த காரணங்களினால் திராவிட இயக்கமும் பண்டிதரை மறந்தது. திராவிட இயக்கம் இசைவேளாளரின், சைவவேளாளரின் [ஓதுவார்] மரபாக இசையை நிறுவ முயன்றது. அங்கு ஒரு நாடார்புகுவது அவர்களுக்கும் சங்கடமளித்தது.

பண்டிதரைப்பற்றிய ஆய்வுகள் இன்றும் ஏராளமாக நடக்கின்றன. நா.மம்முது அவர்களில் ஒருவர். அவரது இப்படிப்பட்ட ஒரு நீண்டபேட்டியை நீங்கள் வேறு எந்த ஊடகத்தில் காணமுடியும்? ஆனந்த விகடனும் கல்கியும் தி ஹிந்துவும் இதை வெளியிடுமா? சிற்றிதழ் ஒன்றுதான் வெளியிட முடியும். இதே இதழிலேயே நாங்கள் திருவனந்தபுரம் லட்சுமணப்பிள்ளை என்ற மறக்கப்பட்ட இசை ஆய்வாளரை விரிவாக அறிமுகம் செய்தோம்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறப்பான நீண்ட பேட்டிகள் எல்லாமே சிற்றிதழ்களில் வெளிவந்தவையே. இதழாளர்களான சின்னக் குத்தூசி, ஞாநி ஆகியோருக்குக்கூட ஒரே முழுநீளப்பேட்டி சிற்றிதழில்தான் [காலச்சுவடு] வந்தது என்பதை மறக்கவேண்டாம். வரலாற்றாய்வாளர்கள், அரசியலாய்வாளர்கள், தமிழறிஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் முழுமையான பேட்டிகள் சிற்றிதழ்களிலேயே வந்துள்ளன. கடந்த ஐம்பதாண்டுகால சிற்றிதழ் வரலாற்றை எடுத்துப் பார்க்கலாம். தமிழில் நவீன கவிதை சிற்றிதழ்களைச் சார்ந்தே இயங்கியுள்ளது. நவீன ஓவியம் குறித்தும் புதிய திரைப்படங்கள் குறித்தும் சிற்றிதழ்களே பேசின. சிற்றிதழ்களைச் சேர்ந்த சிலர்தான் தமிழில் ஓரளவாவது நவீன திரைப்படங்களை எடுத்துள்ளனர். குடிசை- ஜெயபாரதி, ஏர்முனை- அருண்மொழி, ஒருத்தி- அம்ஷன்குமார் என. வணிகத் திரைப்படங்களைப் பற்றியும் திரை இசை பற்றியும் ஆழமான ஆய்வுகள் சிற்றிதழ்களில்தான் எஸ்.தியடோர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, அ.ராமசாமி ஆகியோரால் முன்வைக்கப்பட்டன. கெ.கெ.பிள்ளை தமிழின் வரலாற்றாய்வுப் புலத்தில் பெரும் வினாக்களை எழுப்பியவர். அவரைப்பற்றி ஒரு கட்டுரையை இன்றுவரை எந்த வணிக இதழும், ஆங்கில இதழும் வெளியிட்டதில்லை– படிகள் என்ற சிற்றிதழ்தான் வெளியிட்டது.

இன்றும் தமிழின் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே சிற்றிதழ்களில்தான் வெளிவருகின்றன. விவாதிக்கவும் படுகின்றன. மேலை மார்க்ஸியம், அமைப்புவாதம், பின் அமைப்புவாதம், பின் நவீனத்துவம் போன்ற நவீனயுகச் சிந்தனைகள் முழுக்க தமிழில் சிற்றிதழ்கள் மூலமே அறிமுகமாயின. அவற்றின் தமிழ்க்கலாசாரம் சார்ந்த குரல்கள் சிற்றிதழ்களில்தான் உருவாயின. அத்தனை கலைச்சொற்களும் சிற்றிதழ் தளத்தில் உருவானவையே. கீழைமார்க்ஸியம் [எஸ்.என்.நாகராஜன்], மெய்முதல்வாதம் [மு.தளையசிங்கம்] ஆகிய தமிழுக்கே உரிய தனிச்சிந்தனைகள் உருவானதும் சிற்றிதழ்ச் சூழலிலேயே. தமிழில் தலித்தியம் இன்றும் முழுக்கமுழுக்க சிற்றிதழ் சார்ந்தே உள்ளது [தலித், கோடாங்கி, தாய்மண்].

அனைத்துக்கும் மேலாக இன்று தமிழ்நாட்டின் கடலூர், போடிநாயக்கனூர், சிவகாசி என எல்லா சிற்றூர்களில் இருந்தும் இளைஞர்கள் ஏராளமான சிற்றிதழ்களை நடத்துகிறார்கள். அவர்களுடைய குரல்கள் நேரடியாகப் பதிவாகும் களங்கள் சிற்றிதழ்களே.

சிற்றிதழ்களைத் தொடர்ந்து வாசிக்காத ஒருவருக்கு தமிழின் கலாசாரப்புலத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாது என்பேன். சிற்றிதழ்களில் ஆர்வமில்லாதவருக்குத் தமிழ்க் கலாசாரத்தின் ஆழங்கள் மீது ஆர்வமில்லை என்றே பொருள்.

ஒருவர் சிற்றிதழ்களைப் ‘புரட்டிப் பார்த்து’ உள்ளே நுழைவது சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அவர்கள் அறிவுஜீவிகள் ஆகிவிட்டதாக ஒர் எண்ணம் உண்டு. அவ்வெண்ணமே சிற்றிதழ்களைப் புரட்டிப்பார்த்து ‘சார் எனக்கே புரியலை’ என்றும் ‘சலிப்பா இருக்கு, என்ன எழுதறானுங்க’ என்றும் சொல்லவைக்கிறது. சிற்றிதழ்களுக்கு ஐம்பதாண்டுகால வரலாறு உண்டு. தமிழுக்கே உரிய கோட்பாட்டு மொழி, [Theoretical language] கவிதை மொழி [Poetic language] இங்கே உருவாகியுள்ளன. ஏராளமான கலைச்சொற்கள் உள்ளன. இங்கே நிகழும் விவாதம் இதுவரை நிகழ்ந்த விவாதத்தின் ஒரு பகுதி. ஆகவே கற்று மேம்பட்டுத்தான் ஒருவர் உள்ளே நுழைய முடியும். ஆங்கிலச் செய்தித்தாள் கட்டுரைகளை புரட்டிப்பார்க்கும் ஒரு ‘மைலாப்பூர் அறிவுஜீவி’ அத்தனை எளிதாக உள்ளே நுழைந்துவிட இயலாது.

சிற்றிதழ்களில் சிக்கல்கள் இல்லையா? கண்டிப்பாக உண்டு. அவற்றை சிற்றிதழ்களிலேயே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அமைப்புசார்ந்த செயல்பாடுகள் இல்லாமையின் சிக்கல்கள் தான் முக்கியமானவை. முதிரா ஆக்கங்கள் ஏராளமாக அச்சாகின்றன. ஆனால் முதிரா ஆக்கங்களும் வருவதற்காவே சிற்றிதழ்கள் உள்ளன. கோட்பாட்டுக் கட்டுரைகளில் முதிரா மொழியும் பயிலாமொழியும் பயின்றுவரும் சிக்கல்கள் தலைசுற்ற வைக்கின்றன. கோட்பாடுகள் மீதான அதி உற்சாகம், கோட்பாட்டுச் சண்டை எல்லாம் உண்டு. தனிநபர்த் தாக்குதல் வேறு.

உலக அளவில் வெளிவரும் முக்கிய இதழ்களைப் படிப்பவன் என்ற முறையில் எங்குமே இப்பிரச்சினைகள் உண்டு என்றே எண்ணுகிறேன். மேலை இதழ்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள பிரமைகளை நான் ஏற்கமாட்டேன். முதிரா ஆக்கங்கள் வராத சூழல் இல்லை. குறிப்பாக சமீபகால ஆங்கிலேய, ஜெர்மானிய எழுத்துகளை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. எந்திரங்களால் எழுதப்பட்டவை போல உள்ளன. கோட்பாட்டு விவாதத் தளத்தில் மேலைச்சூழலில் உள்ள பொதுவான கல்வித்துறை சார்ந்த ‘பந்தா’க்கள், கோட்பாட்டுமொழியின் விளையாட்டுகள் ஆகியவற்றைத் தாண்டிப்பார்த்தால் உள்ளே உண்மையான சிந்தனை மிகவும் குறைவே. குறிப்பாக சமகால கலாசார ஆய்வு[Cultural studies] இயக்கம் சார்ந்தும் பெண்ணியம் [Feminism] சார்ந்தும் வரும் கட்டுரைகளில் சிறுபகுதிகூட முக்கியமானவையல்ல. பெரும்பாலானவை வெறும் ஊகங்கள், மனோதர்மங்கள். உரிய வழிகாட்டல் இல்லாமல் இன்றைய மேலைக் கோட்பாட்டுச் சிந்தனைக்குள் நுழைந்தால் வாழ்க்கை வீணாகும். அதன் கூறுகள் கண்டிப்பாகத் தமிழ்ச் சிற்றிதழ்களிலும் உண்டு.

தமிழ்ச் சிற்றிதழ்கள் அறிவியல் போன்ற விஷயங்களை வெளியிடாமைக்கு எழுத ஆளில்லாமையும் காரணம். சவசவவென தகவல்களைச் சொல்லிவைப்பதில் அர்த்தமில்லை. நான் சொல்வது சிந்தனைகளை முன்வைப்பது குறித்து. சமீபகாலமாக வெ.வெங்கடரமணன், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் எழுத ஆரபித்துள்ளனர். இன்னொரு விஷயமும் உண்டு. தமிழ் சிற்றிதழ்களின் முன்னிலை வாசகர்கள் தமிழ்நாட்டு கிராமப்புற படித்த இளைஞர்கள். அவர்களுடைய அரசியல், கலாசாரத் தேவைகள் சார்ந்தே சிற்றிதழ்களின் உள்ளடக்கம் தீர்மானமாகிறது. அவர்களின் வெளிப்பாடாகவே சிற்றிதழ்களும் உள்ளன. அதாவது சிற்றிதழ் இயக்கம் ஒரு கருவி. அது எதற்குப் பயன்படுகிறதோ அதனை ஒட்டித்தான் அதன் வடிவம் அமையும்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 72
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 75