மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு நான் அளித்த நீண்ட பேட்டியில் ஓஎன்வி அவர்களுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை கண்டித்து அப்பரிசுக்கு எவ்வகையிலும் தகுதியானவர் அக்கித்தம் அவர்கள்தான் என்றும், அவர் இருக்கையில் ஓஎன்விக்கு அளிக்கப்பட்டது ஒரு வகை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அது ஒரு சிறு விவாதத்தைக் கிளப்பியது. பலவகையிலும் மலையாளிகளுக்கு பிரியமான பிரபலக் கவிஞர் ஓஎன்வி. இடதுசாரிக்கவிஞர். கேரள இடதுசாரி இயக்கத்தின் பண்பாட்டுமுகங்களில் ஒருவர். அவர் பரிசுபெறும் அச்சூழலில் அவ்வாறு சொல்வது அவரை அவமதித்தலாகும் என்று சொல்லப்பட்டது. என் கருத்துடன் உடன்பட்டவர்கள்கூட இன்னொருவரிடம் ஒப்பிட்டிருக்கவேண்டாம், இருவருக்குமே சங்கடம் என்றார்கள். ஓஎன்வியின் பாடல்களின் இசையொருமை,சொல்லழகு பற்றி எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றும் ஆனால் ஞானபீடம் என்பது தனக்கான தனிப்பார்வையும் தனிப்படைப்புமொழியும்கொண்டு ஒரு சூழலின் மையவிசையாக இயங்கும் படைப்பாளிக்கு அளிக்கப்படவேண்டியது என்றும் நான் மறுமொழி சொன்னேன். அதைச் சுட்டிக்காட்டவே அந்த ஒப்பீட்டை நிகழ்த்தினேன் என்றேன்.
அக்கித்தம் அவர்களுக்கு ஞானபீடம் என்னும் கருத்தை ஒருவகையில் அவ்வாறு தொடங்கிவைத்தேன் என எண்ணிக்கொள்கிறேன். ஏனென்றால் அக்கித்தம் அன்று பிரபலக் கவிஞர் அல்ல. அவர் சென்றகாலத்தைய கவிஞராக, ஒருவகையில் புதியவாசகர்களால் கவனிக்கப்படாதவராக ஆகிவிட்டிருந்தார். அவர் மலையாளத்தில் புதுக்கவிதை தோன்றுவதற்கு முந்தைய அழகியல்மரபைச் சேர்ந்தவர். அவர் தீவிரமாகச் செயல்படுவதை நிறுத்தி நீண்டநாள் ஆகிவிட்டிருந்தது
அக்கித்தம் என்பது அவருடைய குடிப்பெயர். 1926 மார்ச் 18 ஆம் தேதி பாலக்காடு மாவட்டத்தில் குமரநல்லூரில் பிறந்தவர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி. அமேற்றூர் அக்கித்தத்து மனையில் வாசுதேவன் நம்பூதிரியும் சேகூர் மனைக்கல் பார்வதி அந்தர்ஜனமும் பெற்றோர். இவருடைய தம்பி அக்கித்தம் நாராயணன் புகழ்பெற்ற ஓவியர். இவர் மகன் அக்கித்தம் வாசுதேவனும் புகழ்பெற்ற ஓவியர்தான்
அக்கித்தம் இளமையில் இசையும் சோதிடமும் கற்றார். இளமையில் காந்திய இயக்கத்தி ஆதரவாளராகவும் பின்னர் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவராகவும் திகழ்ந்தார். எம்.ஆர்.பி [எம்.ராமன் பட்டதிரிப்பாடு] அவர்களின் ஆசிரியத்துவத்தில் கொல்லத்தில் இருந்து வெளிவந்த உண்ணிநம்பூதிரி என்னும் மாத இதழின் வெளியீட்டாளராக 1946ல் தன் இருபதாம் வயதிலேயே பணியாற்றினார். நம்பூதிரி சமூகத்தின் மூடநம்பிக்கைகள், பழைமையான ஆசாரங்களுக்கு எதிராகச் செயல்பட்ட முக்கியமான சீர்திருத்த இதழ் இது
கேரளத்தில் இலக்கியம், சமூகசிந்தனை ஆகியவற்றில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய மங்களோதயம் யோகக்ஷேமம் போன்ற இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். திரிச்சூரிலிருந்து வெளியான மங்களோதயம் கேரள நவீனஇலக்கியத்தில் பல தொடக்கங்களை நிகழ்த்திய சிற்றிதழ்- ஒருவகையில் மணிக்கொடியுடன் ஒப்பிடலாம். இவ்விதழின் ஆசிரியரையும் இதழ்ச்சூழலையும் குறித்த வேடிக்கையான சித்திரத்தை வைக்கம் முகமது பஷீரின் ‘ஒரு பகவத்கீதையும் சில முலைகளும்’ என்னும் குறுநாவலில் காணலாம்
1956ல் கோழிக்கோடு ஆகாசவாணியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு திரிச்சூர் ஆகாசவாணியில் பொறுப்பாளரானார். 1985ல் ஓய்வுபெற்றார். அக்கித்தம் இசையிலும் ஈடுபாடுள்ளவர். பொதுவாக அரசியல் விவாதங்களிலோ இலக்கியவிவாதங்களிலோ ஈடுபாடு காட்டாதவர். அனைவரிடமும் நல்லுறவு கொண்டிருந்தவர். ஆனால் இடதுசாரி இயக்கத்தின் உட்பூசல்கள், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் அரசின் மானுட அழிவுகளும் ஒடுக்குமுறைகளும் வெளிப்படுத்தப்பட்டமை அவரை இடதுசாரி இயக்கங்கள்மேல் அவநம்பிக்கை கொள்ளச்செய்தது.இஎம்எஸ் போன்ற மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்த அக்கித்தம் அவ்வியக்கத்தின் தொடர்புகளை வெளிப்படையாக விலக்கிக் கொண்டார்.
1951ல் வெளிவந்த இருபதாம்நூற்றாண்டின் இதிஹாசம் [இருபதாம் நூற்றாண்டின் தொன்மம்] என்னும் புகழ்பெற்ற குறுங்காவியம் அந்த கொந்தளிப்பையும் விலக்கத்தையும் வெளிப்படுத்துவது.
வெளிச்சம் துஃகமாணு உண்ணீ
தமஸல்லோ சுகப்ப்ரதம்
[வெளிச்சமே துயரம் மகனே, இருட்டல்லவா இனியது]
என்னும் வரி அக்கவிதையில் உள்ளது. மலையாளத்தில் ஒரு பழமொழி போல புழங்குவது அது. 1983ல் வெளிவந்த ‘இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம்’ [இடிந்துசிதைந்த உலகம்] இடதுசாரிகள் மேல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த இன்னொரு நீள்கவிதை.
இக்காரணத்தால் பொதுவாக இடதுசாரி விமர்சகர்களால் ஆளப்படும் மலையாள இலக்கியச் சூழலில் அக்கித்தம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார். 1973ல் அவருக்கு கேந்திர சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. அதன்பின் முக்கியமான விருதுகள் எவையும் அளிக்கப்படவில்லை. 2017ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இப்போது ஞானபீடம்
அக்கித்தம் கவிதைகள் கேரளத்தின் மரபுக்கவிதை இலக்கணத்தை ஒட்டியவை. அதேசமயம் மரபுக்கவிதைகளிலுள்ள வழக்கமான சொல்லணிகள், மரபுத்தொடர்கள் அற்றவை. கேரளப் புதுக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒருமுறை பி.ராமன் சொன்னார். “மலையாளத்தில் வசனகவிதை எழுதுவதில் ஒரு சிக்கல் உள்ளது. மலையாள உரைநடை பேச்சுமொழிக்கு அணுக்கமாகச் செல்லும்போது தொய்வான சொல்முறையாக ஆகிறது. அதை இறுக்கமான உரைநடையாக ஆக்கமுயன்றால் செயற்கையாக மாறிவிடுகிறது.இறுக்கமான இயல்பான கவிமொழியை அடையவேண்டும் என்றால் மரபுக்கவிதையின் தாளக்கட்டு உதவுகிறது”
இது ஓர் உண்மை. அக்கித்தம் போன்றவர்களின் மரபுக்கவிதை வரிகளுடன் ஒப்பிட்டால் மலையாள வசனகவிதைகள் நீளநீளமாக ஒலிப்பதைக் காணலாம். மலையாள மரபுக்கவிதை சம்ஸ்கிருத சொற்புணர்ச்சி இலக்கண முறைமையை அடியொற்றி பல சொற்களை ஒன்றோடொன்று இணைத்து அடர்த்தியான சொல்லாட்சிகளை உருவாக்குகிறது. அது பழகிய தாளத்தில் அமைந்திருப்பதனால் நினைவில் நிற்கவும் நாவால் சொல்லவும் அயலாக இருப்பதுமில்லை.
அக்கித்தம் கவிதைகளை வாசிக்கையில் அவை பிறகுவந்த மலையாள நவீனக் கவிதைகளைவிடச் செறிவானவை எனத் தோன்றுவது இதனால்தான். ஏனென்றால் அவருடைய கவிதையின் பேசுபொருட்கள் புதுக்கவிஞர்கள் எடுத்துக்கொண்டவைதான். அவருடைய பார்வையும் நவீன காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். அவருடைய மொழி மட்டுமே யாப்புக்குள் நிற்பது.
மலையாள மரபுக்கவிதையில் இருந்த ‘காளிதாசக்களிம்பு’ அக்கித்தம் கவிதைகளில் இல்லை என்று விமர்சகர்கள் சொல்வதுண்டு. உணர்ச்சிக்கொந்தளிப்புள்ள, கட்டற்ற மொழியில் நீண்டு செல்லும் கவிதைகளையே மரபுக்கவிஞர்கள் எழுதிவந்தனர். அக்கித்தம் சொல்லெண்ணி சுருக்கி எழுதும் ஒரு மரபுக்கவிமொழியை உருவாக்கினார். ஆனால் இயல்பான ஓட்டமும் சொல்லழகும் கொண்டவையாக அவ்வரிகளை அமைத்தார். மலையாளப் புதுக்கவிதையில் சொற்செறிவுக்கு அதேயளவுக்கு கவனம் அளித்தவர் ஆற்றூர் ரவிவர்மா. அவருக்கு அக்கித்தம் மேல் பெருமதிப்பு இருந்தது.
இன்னொன்றும் கூறவேண்டும். மலையாள மரபுக்கவிதைகள் அவற்றின் செறிவு, இசைத்தன்மை ஆகியவற்றுக்காக சம்ஸ்கிருதச் சொற்களை நோக்கிச் செல்வதே வழக்கம். மலையாளம் ஒரு புழக்கமொழி. சந்தத்தில் அமையும் சொல்தேடிச்சென்றால் சம்ஸ்கிருதத்தையே நாடவேண்டும். மலையாள மொழியின் அமைப்புக்கு சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே எடுத்தாள்வது பிழை அல்ல. ஆகவே மலையாளம் சற்று செம்மைகொண்டாலே நேரடிச் சம்ஸ்கிருதமாக ஆகிவிடும். புதுக்கவிதைகள்கூட சம்ஸ்கிருதச்செறிவு கொண்டவையே
ஆனால் முறையான சம்ஸ்கிருதக் கல்விகொண்டவரான அக்கித்தத்தின் கவிதைகளில் சம்ஸ்கிருதம் தேவைக்குமேல் பெருகி நிறைந்திருப்பதில்லை. மலையாள நாமொழி மரபிலிருந்தே சொற்களை கையாளவும் அவற்றை சம்ஸ்கிருதச் செவ்வியல் கவிநடை அளவுக்குச் செறிவுடன் அமைக்கவும் அவர் எடுத்த முயற்சியில் அடைந்த வெற்றியே மலையாளக் கவிஞர்களில் அவரை முதலிடம் கொண்டவராக ஆக்குகிறது. மலையாளக் கவிமொழியையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவர் என்று அவரைச் சொல்லமுடியும். பின்னாளில் எழுதவந்த அனைவரிடமும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் நவகவிஞரான பி.ராமன் வரை, அக்கித்தம் அவர்களின் செல்வாக்கு உண்டு.
ஒரு நவீனக் கவிதைவாசகன் அக்கித்தம் அவர்களின் கவிதையில் இன்று கண்டு வியப்பது நாட்டார்ப்பாடல் அளவுக்கு,பேச்சுமொழி அளவுக்கு எளிய மலையாளச் சொற்கோவைகள் அடர்த்தியான கவிமொழியாக ஆவதன் அழகைத்தான். சற்றே நிறுத்திச் சொன்னால் எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வரிகளே அவருடைய பெரும்பாலான கவிதைகள்
இந்நலேப் பாதிராவில் சின்னிய பூநிலாவில்
என்னையும் மறந்து ஞான் அலிஞ்ஞு நில்கே
தானே ஞானுறக்கேப்பொட்டிக் கரஞ்ஞுபோயி
தாரகவியூகம் பெட்டெந்நு உலஞ்ஞுபோயி
அக்கித்தம் அவருடைய பின்னாளைய கவிதைகளிலூடாக நவீன ஜனநாயக விழுமியங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் பேசும் கவிஞராக வெளிப்படுகிறார். ஆனால் அவருடைய முதன்மையான கவிதைகளில் உலகியல் கொந்தளிப்புகளுக்கு அப்பால் மானுட உள்ளம் அடையும் தனிமையை, முழுமைக்கான தேடலை, அதன் மாற்றில்லாத துயரை வெளிப்படுத்துகிறார்.
மரபுக்கவிதையை நம் உள்ளம் இயல்பாக கற்பனாவாதத்துடன் இணைத்துக்கொள்கிறது. அக்கித்தம் கற்பனாவாதப் பண்புக்கு எதிரானவர். உணர்வடங்கிய நிலை கொண்டவை அவருடைய கவிதைகள். கொந்தளிப்பை வெளிப்படுத்தும்போதும் சமநிலை தவறாத சுருக்கமான மொழியை நோக்கிச் செல்பவை. பெரும்பாலும் மிக யதார்த்தமான வாழ்க்கைச்சித்திரங்கள் கொண்டவை.அவ்வகையில் அவரை நவீனச் செவ்வியலை எழுதியவர் என வரையறைசெய்ய முடியும்
அக்கித்தம் அவர்களுக்கு வணக்கம்