[ 1 ]
கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன். இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என் பையிலிருந்து பணம் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று பெரிய கல்கத்தா ஜிப்பா போட்டிருந்தேன். கீழே இறங்கிப் பையில் கையை விட்டதும் தெரிந்தது, பணம் இல்லை. ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவுக்கு வந்தது. என்ன இது இந்நேரத்திலும் மேற்கோள் என்று மண்டையை தட்டிக்கொண்டேன். கோமலின் வீடு தெரியவில்லை, அவரைப்பார்க்காமல் திரும்பிச்செல்ல காசும் இல்லை.
இன்னொரு பைக்குள் ஐம்பது பைசா இருந்தது. நல்லவேளையாகச் சிறிய தாள்துண்டில் எழுதப்பட்ட கோமலின் வீட்டு எண்ணும் இருந்தது. டீக்கடை ஓரத்து தொலைபேசியை கையிலெடுத்தபோது கிலியாக இருந்தது. அது வழக்கம்போல ஒரு ஹலோவுடன் துண்டித்துக்கொண்டால் கடைசி ஐம்பதுபைசாவையும் இழந்தவனாவேன். நல்லவேளையாகக் கோமலே எடுத்தார். “ஹலோ” என்றபின் கனமான மெல்லிய முனகலுடன் அசைந்தார். “நான்தான் கோமல்” என்றார்.
நான் என்னைத் தடுமாறும் சொற்களால் அறிமுகம் செய்துகொண்டேன். என் கதைகள் அவருக்கு நன்றாக நினைவிருந்தன. உற்சாகமாக “அட…” என்றார் “வாங்க” என்றார். “சார் வீட்டுக்கு வழி சொல்லுங்க. வந்திடறேன்.” “என்னத்தைச் சொன்னாலும் நீங்க வந்துகிட மாட்டேள். எனக்கு உங்களத் தெரியும். பேசாம ஒரு ஆட்டோபுடிச்சு வந்திடுங்கோ, அட்ரஸ் சொல்றேன்” என்றார். “சார்” என்று தயங்கி “எங்கிட்ட பைசா இல்லை.” “ஏன் என்னாச்சு?” “பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார்.” கோமல் மெல்லச் சிரித்து “ஆட்டோ புடிச்சு வந்து சேருங்கோ… நான் குடுக்கறேன்” என்றார். நான் விலாசத்தை குறித்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டேன். ஒரேமாதிரி இருந்த வீடுகள் கொண்ட ஒரேமாதிரி தெருக்களில் ஒன்றில் எண்பதுகளில் கட்டப்பட்ட கான்கிரீட் வீடு. பெரிய வீடுதான்.
கோமலின் மகள் வெளியே வந்து “அப்பா உள்ள அழைச்சிண்டு வரச்சொன்னார்… உள்ள வாங்கோ” என்றாள். அவளே ஆட்டோவுக்கு ஏழு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டு “பிக்பாக்கெட் அடிச்சுட்டானா? இந்த ரூட்லே ரொம்ப ஜாஸ்தி” என்றாள். நான் உள்ளே சென்றேன். கூடத்தில் இருந்து பக்கவாட்டில் சென்ற அறைக்குள் கட்டிலில் கோமல் இருபக்கமும் பெரிய தலையணைகள் நடுவே அமர்ந்திருந்தார். இடதுபக்க சன்னலின் ஒளி முகத்தின் பக்கவாட்டில் விழுந்திருந்தது. அவரது மடிமேல் காகிதங்களும் குறிப்பேடும் இருந்தன. “வாங்கோ” என்று அழகிய பல்வரிசை தெரியச் சிரித்து “எவ்ளவு பணம் போச்சு” என்றார். “எம்பது ரூபா சார்” “பாவம்” என்றார். “பரவால்லை” என்றேன். “நான் அவனைச்சொன்னேன், அவ்ளவு ஒழைச்சிருக்கான்… ஒருநாள்கூலியாவது தேறியிருக்கணும்ல?”
கோமலின் சிரிப்புடன் நானும் கலந்துகொண்டேன். இருபக்கமும் தோளுக்குச் சரிந்த நரைமயிர்க்கற்றைகள் அவரை ஒரு கலைஞனாக எழுத்தாளனாக அல்லது இன்னும் என்னென்னவோ ஆகக் காட்டி, அவர் லௌகீகன் அல்ல என்று அடையாளம் சொல்லின. அதேபோல எனக்கும் ஓர் அடையாளம் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புபவன். ஆனால் தக்கலையில் அந்த தோற்றத்துடன் அலுவலகம் சென்றால் நாய் துரத்திவரும். யாருடனும் எங்கும் கலந்துவிடும் பாவனைகள், பஞ்சப்படி பயணப்படி ஆசாமிகளுக்கான மனக்கணக்குப் பேச்சுக்கள், மங்கிய ஆபீஸ்நிற உடைகள் என்றுதான் என்னால் வாழமுடியும். ஆகவேதான் அலுவலகமில்லாத நாட்களில் இந்த ஜிப்பாவை அணிகிறேன். பேருந்துகளில் ’நான் வேறு’ என்று சொல்லிக்கொள்கிறேன்.
இப்போதும் குழம்பி ஒரே மாதிரி வீடுகள் கொண்ட தெருக்களில் அலைந்தேன். நல்லவேளையாக வெயில் இல்லை. கோமலின் வீட்டுக்குச் செல்லும் வழியை இப்போது கோமலிடம் கேட்கமுடியாது. அவர் உடம்பு மேலும் சரியில்லாமல் ஆகிவிட்டிருந்தது. நான் பரீக்ஷா ஞாநியை தொலைபேசியில் அழைத்தேன். அவர் சொன்ன அடையாளங்கள் எல்லாமே எனக்குத் தெரிந்தவை என அவர் சொல்லித்தான் ஞாபகம் வந்தது. எளிதாக அவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். “வாங்கோ” என்று சோர்ந்த முகத்துடன் அவரது பெண் வரவேற்றாள். உள்ளே கோமலுடன் வேறு யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். “பாவைச் சந்திரன்… குங்குமத்திலே இருந்தாரே” என்றார் அவர் மனைவி. நான் “ஓ” என்றேன். “பாக்கறீங்களா?” “இல்லை வேணாம், மூட் இல்லை.”
அவர் சென்றபின் நான் உள்ளே சென்றேன். அவர் கட்டிலில் அதேபோல மல்லாந்து படுத்திருந்தார். இன்னும் மெலிந்து இன்னும் கன்னங்கள் ஒட்டி அதனாலேயே மூக்கும் பற்களும் உந்தி கழுத்துக்குக் கீழே சதை தொங்க முதியவராக இருந்தார். அவர் சிரிக்கும்போது அவரது உதடுகள் வலப்பக்கமாக கொஞ்சம் வளையும், அது அவர் குறும்பாக சிரிப்பதாகத் தோற்றம் கொடுக்கும். குறும்பாகச் சிரித்தே அந்த வளைவு நிரந்தரமாக ஆகிவிட்டிருக்கலாம். அப்போது அந்த குறும்புச்சிரிப்பு மெல்லிய படபடப்பை அளித்தது. நான் மோடாவை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டேன்.
“பாவையப் பாத்திருக்கீங்கள்ல?” “இல்லை…லெட்டர் போட்டிருக்கேன்” “ஓ” என்றார். “நல்ல மனுஷன்…” நான் அவரை கூர்ந்து பார்ப்பதை தவிர்க்க எண்ணினேன். ஆனாலும் அவரது முகத்தில் கண்களில் எதையோ பார்வை பரபரவென்று தேடிக்கொண்டே இருந்தது. திருவண்ணாமலைக்கு உற்சாகமாக பஸ்ஸில் வந்திறங்கி, வரவேற்க வந்த பவா செல்லத்துரை கும்பலுடன் உரக்கச்சிரித்துப் பேசி, ஒவ்வொருவரையாக கட்டிப்பிடித்து கன்னங்களை கிள்ளி, வராதவர்களை எல்லாம் பெயர்சொல்லி விசாரித்து, விடுதியறைக்கு வந்து ஜிப்பாவைக்கூடக் கழற்றாமல் கட்டிலில் தலையணையைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொண்டு நாடகம் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேச ஆரம்பித்த கோமல். இரண்டுநாள் இரவும் பகலும் கோயிலிலும் ரமணாசிரமத்திலும் சாலைகளிலும் ஓட்டல்களிலும் பவா செல்லத்துரையின் வீட்டிலும் பேசிப்பேசி தீராமல் நள்ளிரவில் பஸ்ஸுக்காக காத்து சாலையோர கல்வெர்ட்டில் இருக்கும்போதும் பேசி பஸ் வந்து நின்றதும் பேச்சை அப்படியே விட்டு விட்டு ஓடிப்போய் ஏறிக்கொண்டவர்.
கோடைகால ஆற்றைப்பார்க்கையில் இதில் எப்போதாவது வெள்ளம் வந்ததா என்றே தோன்றும். கோமல் தனக்குள் ஆழ்ந்து சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். நோய் முற்றியபின் அவரிடம் மௌனம் அதிகரித்தபடியே வந்தது. உண்மையில் திருவண்ணாமலைக்கு வந்தபோதே அவருக்கு முதுகெலும்புப் புற்றுநோய் தீர்க்கமுடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. எட்டாண்டுகள் இரு அறுவைசிகிழ்ச்சைகள் மூலம் அதைத் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். முதல் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர்தான் நெருக்கமான நண்பர்களுக்கே அவருக்குப் புற்றுநோய் என்று தெரியும். வெட்டி வீசப்பட்டு எஞ்சிய முதுகெலும்புடன் மாதம் இருபது ஊர்களில் நாடகம் போட்டிருக்கிறார். திரைக்கதைகள் எழுதினார். இரு சினிமாக்களை இயக்கினார்.
ஏதோ ஒருகட்டத்தில் மேலும் நாடகம் போடவேண்டாம் என்று டாக்டர்கள் கடிந்துகொண்டபின்னர்தான் குழுவைக் கலைத்தார். அவரது பள்ளி நண்பர் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் தியாகராஜனிடம் பேசி பெண்கள் இதழாக இருந்த சுபமங்களாவை பெற்றுக்கொண்டு நடத்த ஆரம்பித்தார். நாலைந்து மாதத்தில் அது ஓர் அலையாக, இயக்கமாக ஆகி அவரை இன்னமும் பரபரப்பாகியது. மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் வாசகர்களுமாக ஒரு பெரிய வட்டம் திடீரென்று அவரைச்சுற்றி உருவானது. நாடகப்பித்து அவரை மேலும் துரத்தியது. நாடக விழாக்களை ஒருங்கிணைத்தார். நாடகப்பட்டறைகளும் இலக்கியச்சந்திப்புகளும் ஒருங்கமைத்தார். முன்னைவிடப் பரபரப்பாக அலைய ஆரம்பித்தார்.
குற்றாலம் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின் சட்டைகளை கழற்றி தோளில் மாட்டிக்கொண்டு பேரருவிக்கு குளிப்பதற்காகச் செல்லும்போது நான் கேட்டேன் “வலிக்கலையா சார்?” “ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?”
ஆனால் மெல்லமெல்ல அவரது நடமாட்டங்கள் குறைந்தன ஏழெட்டுமாதம் முன்னால் நான் கூப்பிட்டபோது “இப்ப எங்கியும் போகலை. ஆபீஸ்போகக்கூட முடியாது. வீட்டிலேயே இருக்கேன். இங்கியே எல்லா வேலையையும் பாத்துக்கறேன்” நான் “வலி எப்டி இருக்கு?” என்றேன். “வளந்துட்டா… இப்ப அவளுக்கு தனியா அஜெண்டா இருக்கு. எங்கியோ போகணும்னு துடிக்கறா… என்னையும் கூட்டிண்டுதான் போவான்னு நெனைக்கறேன்” என்றார். முதல்முறையாக அப்போதுதான் அவரை ஒரு நோயாளியாக உணர்ந்தேன்.
கோமல் என்னை நோக்கித் திரும்பினார். புன்னகை செய்து “ஸாரி , நீங்க இருக்கறதை மறந்துட்டேன். இப்பல்லாம் மனசு அதுபாட்டுக்கு எங்கேயோ போய்ண்டே இருக்கு. ஒரு ஆர்டரே கெடையாது. ஒருமணிநேரம் கழிச்சு எதைப்பத்தி சிந்திச்சேன்னு பாத்தா ஒரு டிராக்கும் கெடையாது. எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி…”
நான் மெல்ல “வலி எப்டி இருக்கு?” என்றேன். “முந்தாநாள் ஞாநி வந்திருந்தார். இதையேதான் கேட்டார். அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன். பாவம், முகம் வெளுத்துப்போச்சு…” என்று கோணலாக சிரித்து “என்னை பாத்தா நாடகக்காரனுக்கெல்லாமே கிலி. ஏன்னா அவன் தன்னையும் என்னையும் சேத்து பார்த்துக்கறான். எனக்கு வந்தது அவனுக்கும் வரலாமில்லியா? அதுவும் அவரு என்னை மாதிரியே முற்போக்கு வேற…”
கோமலின் மனைவி உள்ளே வந்து டீபாயில் காபி கொண்டு வைத்தார். சுவர் ஓரமாக நின்றுகொண்டு “நீங்களாவது சொல்லுங்கோ. வயசு மூத்தவா பெரியவா எல்லாரும் சொல்லியாச்சு… சின்னவா சொல்லியாவது கேக்கறாரா பாப்போம்” என்றார். நான் “என்ன?” என்றேன். “சொல்றேன்” என்றார் கோமல். “அடம்புடிக்கறார். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்கணுமில்லியா?” என்றார் அவர் மனைவி. “நான் சொல்லிக்கறேன் அவர்ட்ட. நீ உள்ள போ” என்றார் கோமல். அவர் உள்ளே சென்றார்.
“என்னசார்?” என்றேன் .நாடகம் ஏதும் போடுவேன் என்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் “நான் கைலாசமலைக்கு ஒரு யாத்திரை பண்ணலாம்னு நினைக்கிறேன்” என்றார். “சார்?” “அதான்யா, இமயமலைக்கு யாத்திரை… கைலாசமலைக்கு முன்னாடி போயி நிக்கணும்னு ஒரு ஆசை… கடைசி ஆசைன்னு வச்சுக்கோ.” நான் பயத்துடன் “சார், உங்களால எந்திரிக்கவே முடியாது.” “சரி தவழ்ந்து போறேன். காரைக்காலம்மையார் மாதிரி… இப்ப என்ன?” என்றார். “நடக்காத விஷயங்கள சொல்லாதீங்க… நீங்க இங்கேருந்து கெளம்பினா கால்வாசிபோறதுக்குள்ள…“ “போய்டுவேன், அதானே. போனாப்போறது. இங்க படுத்துண்டு ரயிலுக்காக வெயிட்பண்றதுக்கு தண்டவாளத்தில கையக் காட்டி நிப்பாட்டி ஏறிக்கறது பெட்டர்.” “சார்…“ “ஸீ, நான் முடிவு பண்ணியாச்சு.”
மேற்கொண்டு நான் ஒன்றும் பேசவில்லை. “என்ன?” “ஒண்ணுமில்லை சார்.” “இந்த அளவுக்கு ரிலிஜியஸா இருக்கானே, இவன்லாம் எப்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே இருந்தான்னு நினைச்சுக்கறே. இல்ல?” ”இல்லசார்” என்றேன். “அப்டித்தான் நினைச்சுக்கிட போறாங்க. பரவாயில்லை. எனக்கு இனிமே அதையெல்லாம் யோசிக்கறதுக்கு டைம் இல்லை. ஆனா நீயாவது புரிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். என்னைக்காவது நீ இதை எழுதிருவே…” நான் தலையசைத்தேன்.
“இது வழக்கமான சாமிகும்பிடுறது கெடையாது. நான் ஒரு ஹிண்டு. அதிலே எனக்கு எந்த ஒளிவு மறைவும் கெடையாது. ஆனா வைதீகன் இல்லை. எந்தச் சடங்கும் நான் பண்றதில்லை. கோயிலிலே போயி கும்பிட்டுட்டு நிக்கறதில்லை. ஹானஸ்டா சொல்றேனே நான் இதுவரை எதையுமே சாமிக்கிட்ட வேண்டினதில்லை. ஒரு கட்டத்திலே கையிலே பைசாவே இல்லாம இந்த சிட்டியிலே குழந்தைங்களோட நின்னிருக்கேன், அப்பக்கூட சாமிகும்பிட்டதில்லை. ஏன் இப்ப, இந்த நோய்னு தெரிஞ்சப்பகூட சாமிகிட்ட வேண்டிகிட்டதில்லை. இந்த வலிய குறைக்கணும்னு கும்பிடாம எப்டி இருக்கேன்னு எனக்கே தெரியலை.”
நான் அவரது முகம் கொண்ட மலர்ச்சியை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “ரொம்பநாள் முன்னாடி குமுதம் அட்டையிலே ஒரு கலர் ஃபோட்டோ வந்தது. சுவாமி சாரதானந்தான்னு ஒருத்தர் எடுத்தது… இமயமலைப்படம்…” என்று ஆரம்பித்தார். நான் மலர்ந்து அவரை மறித்து “எனக்கே ஞாபகமிருக்கு சார்… இமயமலைச்சரிவிலே பனியாபடர்ந்திருக்கும். அதிலே ஒரு காட்டெருமைக் கன்னுக்குட்டி படுத்திருக்கும். அது முடியெல்லாம் பனி படர்ந்து சிலிர்த்துட்டு நிக்கும்…. அப்ப ரொம்ப புகழ்பெற்ற படம் அது.”
“அதேதான்” என்றார் கோமல். “நான் அன்னைக்கு சிவகங்கையிலே ஒரு நாடகம் போட்டுட்டு ட்ரூப்பை அனுப்பிட்டு மறுநாள் நாடகத்துக்கு சாத்தூருக்கு நான் மட்டும் காரிலே போனேன். கார் வழியிலே எங்கேயோ நின்னுடுத்து. ரெண்டுபக்கமும் பெரிய பொட்டல். மேமாசம் வேற. அப்டியே காய்ஞ்சு தீய்ஞ்சு கண்ணுக்கெட்டின வரைக்கும் உயிரில்லாத மண்ணு. சருகுமேலே காத்து மண்ணை அள்ளிக்கொட்டற சத்தம் மட்டும் கேட்டுண்டே இருக்கு. டிரைவர் பஸ்ஸிலே ஏறி மெக்கானிக்கை கூட்டிவர்ரதுக்கு போய்ட்டான். காரிலே ஒக்கார முடியலை. இறங்கி கொஞ்ச தூரம் நடந்து ரோட்டோரமா இடிஞ்சு கிடந்த ஒரு பழைய கட்டிடத்திலே ஏறி உக்காந்து அந்த வெந்த மண்ணை பாத்துண்டே இருந்தேன். என்னன்னு தெரியாம கண்ணுலே தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுத்து. அழுதிண்டே இருக்கேன். அப்ப எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்தத் துக்கமும் இல்லை. ஆனா அப்டி ஒரு வெறுமை உணர்வு.
“கொஞ்சநேரம் கழிஞ்சு தோணிச்சு எதுக்காக அழறேன்னு. அந்த மண்ணோட வெறுமை மனசுக்குள்ளே பூந்துட்டுதா? அப்டி இருக்க முடியாது. மனசுக்குள்ள அந்த வெறுமை கொஞ்சமாவது இருந்தாத்தானே வெளிய இருக்கறதை அது அடையாளம் காணும். வெளிய இருக்கறது என்ன? மௌனி சொல்றாப்ல அகத்தின் வெளிவிளக்கம்தானே வெளியே. பாழ்ங்கிற சொல் மேலே மௌனிக்கு அப்டி ஒரு பிரியம், கவனிச்சிருப்பேள். பாழ்னா அவரு வீண்ங்கிற அர்த்தத்திலே சொல்றதில்லை. புரிஞ்சுகிடமுடியாத பெரிய வெறுமையைத்தான் அப்டிச் சொல்றார். அவரோட பாதிக்கதையிலே அந்த அனுபவம்தான் இருக்கு.
“கொஞ்சநேரம் கழிச்சு தண்ணி குடிக்கலாம்னுட்டு காருக்குள்ள வந்தேன். முன் சீட்டிலே தண்ணி வச்சிருந்தான். கீழே இந்த குமுதம் விழுந்து கிடந்திச்சு. நான் அதை எடுத்ததுமே என் கை நடுங்க ஆரம்பிச்சிடுத்து. அந்த நேரத்திலே அந்த எடத்திலே எப்டி ஒரு நிமித்தம் பாத்தேளா? பெரிய ஒரு மெஸேஜ் மாதிரி. ஒரு அழைப்பு மாதிரின்னு கூட சொல்லலாம். அதையே பாத்துண்டு எவ்ளவு நேரம் ஒக்காந்திருந்தேன்னு எனக்கே தெரியாது.
“பின்னாடி அந்த நாளை நெறைய யோசிச்சு ஒருமாதிரி வார்த்தைகளா மாத்தி வச்சுகிட்டேன். எனக்குள்ள ஒரு பெரிய வெறுமை இருக்கு மோகன். நான் எப்பவுமே எக்ஸ்ட்ராவெர்ட். ஏகப்பட்டபேரு சுத்தி இருப்பாங்க. பேச்சு சிரிப்பு கும்மாளம்னு இத்தனை நாளையும் கடத்திட்டேன். ஆனா உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய தனிமை இருக்கு. அந்த தனிமையைத் தொடாம அப்டியே வச்சுண்டிருக்கேன். தொட்டா என்னமோ ஆயிடும்னு பயந்து வச்சிண்டிருக்கேன்னு தோணறது. அன்னிக்கு அந்தச் சின்ன எருமைக்குட்டிய பாத்தப்ப என் மனசிலே வந்த வார்த்தை இதான், தனிமை. தனிமையோட மூர்த்தரூபமா அது அங்க ஒக்காந்திண்டிருந்தது.
மனுஷன் உட்பட எல்லா ஜீவனுக்கும் இயற்கை குடுத்திருக்கிறது தனிமையத்தானே? மத்த எல்லாம் நாம குளிருக்கு போத்திக்கறது. கையிலே கிடைச்ச அத்தனையும் எடுத்து மேலே போட்டுக்கறோம். பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள், கட்சி, கழகம், கலை, இலக்கியம் எல்லாமே… எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு தனிமையிலே போய் நிக்கணும்னு அன்னிக்கு தோணித்து. அப்ப என்னோட உள்ளுக்குள்ள பொத்தி வச்சிருக்கிற தனிமை வெளிய வந்து பூதம் மாதிரி முன்னாடி நிக்கும்னு நினைச்சேன். அந்த பூதத்துகிட்ட கேக்கவேண்டிய பல கேள்விகள் இருக்கு எங்கிட்ட.”
நான் “அந்தப்பூதம் கங்கை வார் விரிசடைமேல் கரந்த இளநிலவோட இருக்குமோ?” என்றேன். “பாத்தீங்களா, மாட்டி விடத்தான் நினைக்கறீங்க.” நான் கவலையுடன் “ ஆனா நீங்க எப்டி போகமுடியும்? அசைஞ்சாலே உங்களுக்கு வலி தாங்கலைன்னு பெட்பான் வச்சிருக்காங்க. எவ்ளவு தூரம்… இங்கேருந்து ஃப்ளைட்டிலே போலாம்னாக்கூட ஏறி எறங்கி மறுபடி வண்டியிலே ஏறி… மேலே எப்டி போவீங்க? தூக்கிட்டு போக ஆளிருக்குன்னு கேட்டிருக்கேன்.”
கோமல் “நடந்தேதான் போகப்போறேன்” என்றார். நான் மூச்சிழந்தேன். “வலிக்கும்தான். ஆனா முதுகெலும்பு ஒண்ணும் ஒடஞ்சுபோயிடதுல்ல? பாப்போம். எப்டியும் ஒரு ஒண்ணர லட்சம் காலடி எடுத்து வைக்கணும்னு நினைக்கறேன். அப்ப காலெடுத்து வைக்கிறப்ப ஒருவாட்டி, திரும்ப எடுக்கிறப்ப ஒருவாட்டின்னு மொத்தம் மூணு லட்சம் வாட்டி சுத்தியலால அடிக்கிறது மாதிரி. மூணு லட்சம் நாமாவளி சொல்றதுன்னு வச்சுக்குங்கோ. எதுவானாலும் கணக்கு வச்சுகிட்டோம்னா ஒருமாதிரி ஒரு நிம்மதி வந்திடுது, இவ்வளவுதானேன்னு தோணிடுது.”
“எனக்கு பயமா இருக்கு… நல்ல ஆரோக்கியம் இருந்தாலே போறது கஷ்டம்” என்றேன். “நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…” நான் கொஞ்சநேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “வாத்யார் ராமனுக்கும் இளையபாரதிக்கும் எல்லாம் சொல்லியிருக்கேன். உங்க மேட்டரெல்லாம் நேரா வா.ரா டேபிளுக்கு போய்டும். எல்லாத்தையும் போட்டிருங்கன்னு சொல்லிட்டேன்.”
நான் அன்று திரும்பிச்செல்லும்போது எனக்குள் ஆழ்ந்து நடந்து மூன்றுநான்கு இடங்களில் வழி தவறினேன். இரு ஆட்டோரிக்ஷாக்காரர்கள் என்னை வசைபாடினார்கள். அந்த எருமைக்குட்டியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் ஏழாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ படிக்கும்போது குமுதத்தில் அந்த புகைப்படம் வந்தது. அந்த படம் இப்போது எனக்குள் ஒரு அழியா நிலக்காட்சியாக, ஒரு கனவாக நிலைகொண்டுவிட்டது. நானே அதனால்தான் இமயமலைக்கு கவர்ந்திழுக்கப்பட்டேன். அந்த மலைச்சரிவுகளில், பனிமலைகளில் எத்தனையோமுறை நடந்திருக்கிறேன்.
அந்த எருமை இப்போது இருக்காது. அதை எடுத்த சாரதானந்தா கூட இருக்க நியாயமில்லை. அந்த பனிவெளியும் இல்லாமலாகியிருக்கலாம். இமயமலை இருக்கிறது. மலைமகளின் பிறந்தவீடு. ஈசன் கோயில் கொண்ட முடி. காளிதாசன் பாடிய மலைகள். வெள்ளிப்பனிமலை மீதுலவுவோம்… மீண்டும் அங்கே செல்லப்போகிறேன் என்றோ. தன்னந்தனிமையில் அந்தி ஒளியில் பொன்னொளிர எழுந்த கைலாயத்தின் அடியில் நின்று கொண்டு நான் என்னை பார்க்கப்போகிறேன். என்ன மிச்சம் என்று. எரிசிதை அடங்கிய சாம்பலா? அதை விபூதியாக அணிந்துகொண்டு அங்கே எங்கோ குகையொன்றில் அடங்கி அமைவேனா? கைலாயம் என்பது ஒரு மாபெரும் விபூதி மலை.