‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் 5

காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கி கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்குச் செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம், இது மந்தணமெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இதை அவர் இன்னும்கூட எவரிடமும் சொல்லவில்லை. ஆகவே நான் சொன்னால் நன்றாக இருக்காது“ என்று அவன் அனைவரிடமும் அதை சொல்லிவிட்டான். அவர்கள் ஆதனிடம் இயல்பாக பேச்சைத் தொடுத்து அது வளர்ந்தெழும் ஒழுக்கின் நடுவே அஸ்தினபுரிக்கா அவன் செல்கிறான், அவ்வாறு ஒரு தோற்றம் வருகிறதே என பேசத் தொடங்கினார்கள். பின்னர் அப்பேச்சு மெல்லமெல்ல வலுத்தது. அதைப்பற்றி மட்டுமே அவனிடம் பேசுவதென்றாயிற்று.

அவ்வணிகக்குழு வெவ்வேறு ஊர்களில் இருந்து காஞ்சிக்கு வந்து ஒன்றாக இணைந்துகொண்ட ஏழு வணிகர்குழுக்களின் தொகை. அவர்கள் வேங்கடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். கோடை எழுந்துவிட்டிருந்தமையால் வழியெங்கும் செம்மண் வெந்து கிடந்தது. புழுதி படிந்த மரங்கள் கானலில் ஆடி நெளிந்தன. சருகுகளையும் மணலையும் அள்ளி வீசிக்குவித்து காற்று ஊளையிட்டது. உடல் உருகிவழிந்துவிடும்போல் எரிந்தது. ஆனால் மாலையில் இனிய காற்று வீசியது. வானம் விண்மீன்பெருக்காகச் செறிந்திருந்தது. அவர்கள் அந்திக்குள்ளாகவே தங்குமிடம் தேர்ந்து அமைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். “இரவில் பயணம் செய்தால் நன்று, நல்லொளி உள்ளது” என்று அழிசி சொன்னான். “ஆம், ஆனால் அது நாகங்கள் வெளியே வரும் பொழுது. நாகமனைய கொள்ளையருக்கும் உகந்தது” என்று முதிய வணிகரான பூதநாதர் சொன்னார்.

வணிகக்குழுவில் எல்லா பேச்சும் அஸ்தினபுரியைப் பற்றியதாக மெல்லமெல்ல மாறியது. அந்தியில் நீர் வற்றி சேற்று அலையென விரிந்துகிடந்த ஓர் ஏரியருகே அனல்மூட்டி சுற்றியமர்ந்து உணவுகொள்கையில் ”இவர் அஸ்தினபுரிக்குச் செல்கிறார்” என்று இளைஞனாகிய புலியன் சொன்னான். அனைவரும் கைகளில் சுட்ட அப்பங்களுடன் அவனை நோக்கி திரும்பினார்கள். “அஸ்தினபுரியா? அது மிக வடக்கே அல்லவா உள்ளது? செல்லும் வழியில் பனிமூடிய நூற்றெட்டு மலைகள் உள்ளன. அவற்றைக் கடந்து செல்லவேண்டுமே” என்று முதுவணிகரான காத்தன் சொன்னார்.

“எங்கோ கேட்டுவிட்டு உளறுகிறார். அஸ்தினபுரியைக் கடந்து மேலும் வடக்கே சென்றால்தான் இமையமலையை அடையமுடியும்” என்றார் இன்னொரு வணிகரான முத்தர். “அப்படியானால் என்னிடம் சொன்னவன் அறிவிலியா? நேற்று நாம் கண்ட வணிகர்கள்கூட பெருமலைகள் நடுவே உள்ளன என்றார்களே?” என்றார் காத்தன். “எவர்?” என்றார் அப்பாலிருந்த திருவடியர். “வடபுலம் நாடும் வணிகர்கள்…” என்றார் காத்தன். புதிதாக வந்து சேர்ந்துகொண்ட இளைய வணிகரான இருளர் “அவை விந்திய மலைகள். அவற்றில் பனி இல்லை” என்றார். “பனி அங்கே உண்டு, பனியில்லாத மலையா?” என்றார் காத்தன். உரையாடல்கள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு விரிந்தன.

“பனி என்றால் அது உப்பு போலிருக்கும்.” “பனியா? அது புகைத்திரைபோல எனலாம். எப்படி உப்புபோல் ஆகும்? எதையாவது உளறிவிடுகிறார்கள்.” “நீர் சொல்வது மூடுபனி… இது நீர் விழுந்து உறைந்து பனியாவது.” “நான் கங்கைவரை சென்றிருக்கிறேன். குளிர் என்றால் என்னவென்றும் அறிந்திருக்கிறேன். அங்கும் பனி மூடுதிரைதான். உப்புக்கல்லெல்லாம் இல்லை…” “உறைந்த பனி அவ்வாறிருக்கும்… பார்த்து வந்தவரே சொல்லியிருக்கிறார். நம்மூரில் தேங்காயெண்ணை உறைந்து அவ்வாறு ஆகிறதல்லவா?” “ஆம், நெய்யும் உறைந்துவிடுகிறது. உறைவன அனைத்தும் படிகம்போல் ஆகிவிடுகின்றன.” “நீர் உறைந்து பனிமலைமுகடுகள் உருவாகின்றன.”

“நீர் எப்படி உறைய முடியும்?” என்றார் பெரிய தலைப்பாகை அணிந்திருந்த புலவரான பெருங்கந்தர். அவர் தன் கிணைப்பறையையும் சுவடிப்பேழையையும் பொக்கணத்தையும் கழியையும் அருகிலேயே வைத்திருந்தார். அவருடைய குரல் மேடைகளுக்காக தீட்டப்பட்டது. எனவே அனைவரும் அமைதி அடைந்தனர். “ஏன்?” என்று சந்திரர் கேட்டார். “ஏனென்றால் நீரை ஆக்குவது நீர்மை என்னும் அதன் மெய்யியல்பு. நீர்மையின் குணங்கள் நான்கு. எங்கும் நில்லாதிருத்தல், தனக்கென நிறமும் சுவையும் மணமும் ஒளியும் இல்லாதிருத்தல், வடிவமற்றிருத்தல், தண்மை கொண்டிருத்தல். ஆகவேதான் அது அனைத்து இடங்களிலும் நிலைகொள்ளவும் அனைத்து நிறங்களையும் சுவைகளையும் மணங்களையும் வடிவங்களையும் தான் கொள்ளவும் வல்லதாகிறது. வெம்மைகொண்டு அனலென்றே ஆகிறது. இது தொல்நூலோர் வகுத்தது.”

காத்தன் “நீர் வெம்மைகொண்டால் ஆவியாகி மறைகிறது” என்றார். பெருங்கந்தர் “ஆம், அப்போது அது தன் நீர்மைத்தன்மையை கைவிடுகிறது. நீர்மை இருக்கும் வரைதான் அது நீர். அதை இழந்தால் அது பிறிதொரு பொருள்…” என்றார். “தன் பொருளியல்பிலிருந்து எழுந்து பிறிதொன்றாகும் இயல்பு அனைத்துப் பொருட்களுக்கும் உண்டு. பொருளியல்பென்பது ஒரு காலஇடத்தில் தோன்றும் ஒரு நிலை. அது ஒரு தோற்றம் மட்டுமே என்பதும் உண்டு. அந்தக் காலஇடம் மாறும் என்றால் பொருளும் மற்றொன்றாகும்” என்றார் பெருங்கந்தர்.

அதுவரை பேசாதிருந்த ஒருவர் “நான் வெண்பனியை கையில் எடுத்திருக்கிறேன்” என்றார். அனைவரும் அவரை நோக்கி திரும்பினர். அவர் அன்றுதான் அக்குழுவுடன் இணைந்திருந்தார். தனித்தலையும் நாடோடி என்று தெரிந்தது. “நீர் கடுங்குளிரில் உறைந்து மணல்துகள்கள் போலாகிறது. வானிலிருந்து பொழிந்து படிந்து இறுகி உப்புப்பரல்போல ஆகிறது. எடைகொண்டு பளிங்குக்கல் போலவே ஆகிவிடுகிறது. கல்லைப்போலத்தான் இருக்கும். எடுத்து அறைந்து யானை மருப்பையே உடைக்கலாம். செதுக்கிக் கூராக்கி அதைக்கொண்டு மரக்கிளையைக்கூட வெட்டலாம். அடுக்கி வீட்டுச்சுவராகக் கட்டலாம்… நான் இமையமலைகளுக்குமேல் சென்று அதை நேர்கண்டு கைகளால் இயற்றி அறிந்தவன்.”

இளைஞனாகிய மதியன் “நீங்கள் சொல்வது புரிகிறது. எங்களூரில் வானிலிருந்து நீர்மணிக்காய்கள் விழுவதுண்டு. அதை கையில் எடுப்போம். எரிப்பதுபோன்ற தண்மை கொண்டிருக்கும். கரைந்து நீரென்றே ஆகி மறையும்” என்றான். “விண்ணிலிருக்கும் நீரே நீர்மணிகளாக உதிர்கிறது. அதுதான் பனி என்பது” என்றார் நாடோடி. பெருங்கந்தர் “உமது பெயர் என்ன? நீர் கற்றறிந்த சொல்வழி என்ன? மையநூல் என்ன?” என்றார். நாடோடி புன்னகையுடன் “என்னிடம் சொல்பொருத விழைகிறீர் போலும்” என்றார். “ஆம், உம்மை மறுக்க விழைகிறேன்” என்றார் பெருங்கந்தர். “பெயர் வழி நூல் ஏதுமில்லாதவன், அலைபவன். என் சொல்லை நீர் ஒதுக்கலாம்” என்றார் நாடோடி. “நிலையிடம் இல்லாதவன் அவையெழுந்து பேசலாகாது” என்றார் பெருங்கந்தர். “எனில் நான் பேசவே இல்லை என்றே கொள்க!”

“அதெப்படி? உமது சொற்கள் ஒலித்துவிட்டன. எதிரில் எவருமில்லாதபோது சொல்லாடுவதற்கென்று ஒரு முறைமை உள்ளது. என் முன்னாலுள்ள ஒரு பொருளை உமது பெயர் எனக் கொள்கிறேன்.” அவர் சுற்றிலும் நோக்கி “இதோ இப்புகை. உமது பெயர் புகையன். ஆகவே உமது குருவழி அனலுக்குரிய பிருகுகுலம். உமது நூல் நான் கொள்ளும் அதே நூல், தொல்நூலாகிய அளவைநூறு, இல்லையேல் நீர் மாற்றுநூல் கூறும்” என்றார் பெருங்கந்தர். அந்தக் கூட்டம் அமைதிகொண்டது. அவ்வமைதி மெல்லிய மூச்சொலிகளாக நீடிக்க பெருங்கந்தர் “நீர் ஏற்றீர் என்றே கொள்கிறேன். உம்மை இவ்வண்ணம் நான் மறுக்கிறேன். நீர் உறைந்த பனிக்கல்லை நீர் தொட்டு எடுத்து அறிந்திருக்கிறீர் என்கிறீர். அதை புலன்வழி அறிதல் என வகுக்கின்றன நூல்கள்” என்றார்.

“புலன்வழியறிதல் அறிதலின் முதல்நிலை மட்டுமே. அதற்கு அறிதலை தொடங்கிவைக்கும் இயல்பு மட்டுமே உண்டு. அறிதல் அதில் நிலைகொள்ள முடியாது. அதில் மட்டுமே நிலைகொள்வது அறிவல்ல, மாயை மட்டுமே” என்றார் பெருங்கந்தர். “புலன்வழி அறிதல் உய்த்தறிதலால் தொகுக்கப்பட்டு விளக்கப்படவேண்டும். சொல்லறிதலால் முன்பிருக்கும் அறிவுகளுடன் இணைக்கப்படவேண்டும். அறிதல்கள் அனைத்தும் அறிவெனும் முழுமையின் ஒரு பகுதி என பிசிறின்றி முயங்கியாகவேண்டும்.” நாடோடி புன்னகைத்தார்.

“அவ்வாறு ஒன்றென ஆக்குவது அளவைநெறி. அளவைநெறியின் வரையறைகளின்படி பொருளென்பது அதன் பொருண்மையின் நாமறியத்தக்க வெளிப்பாடு மட்டுமே. நீர் பிறிதொன்றாக ஆகும் என்றால் அது நீரே அல்ல. விதை மரமாகலாம், ஆனால் அது மரம் அல்ல. மரம் எரிந்து சாம்பலாகலாம், அது மரமல்ல சாம்பல் என்னும் இன்னொரு பொருள் மட்டுமே. ஆகவே நீர் பனியாகும் என்பது பிழை. நீரிலிருந்து பனி எழுகிறதென்பதே மெய்.” அவர் கைநீட்டி புகையைச் சுட்டி “ஆகவே இந்தச் சிற்றவையில் என் சொல் சொல்மையமென நிலைகொள்க! பொருளின் உள்ளுறையான பொருள்தன்மையை அது கடக்குமென்றால் அது அப்பொருள் அல்ல. இது மறுக்கப்படாதவரை இதுவே மெய்யென்று ஆகுக!” என்றார்.

நாடோடி புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தார். அவர் மறுத்து ஏதேனும் பேசுவார் என பெருங்கந்தர் எதிர்பார்த்தார். பின்னர் “ஒருமுறை இருமுறை மூன்றுமுறை… என் சொல்மையம் மறுக்கப்படவில்லை. ஆகவே அது இங்கே நிறுவப்படுகிறது. பொருளின் பொருள்தன்மையை அது கடக்குமென்றால் அது அப்பொருள் அல்ல” என்றார். எவரும் அதற்கு மறுமொழி கூறவில்லை. “அப்படியென்றால் அரிசியும் சோறும் வேறுவேறு பொருட்கள்” என்று அழிசி சொன்னான். முதுவணிகர் “ஓசையிடாதே” என அவனை அதட்டினார். அவன் மற்றவர்களை நோக்கிய பின் மேலும் பேச விழைந்தான். முதுவணிகரை ஒருமுறை நோக்கிவிட்டு தலைதாழ்த்திக்கொண்டான்.

“இங்கே நிலைநாட்டப்பட்டது எளிய உண்மை அல்ல என்பதை உணர்க!” என்று பெருங்கந்தர் தொடர்ந்தார். “விவர்த்தவாதம் பரிணாமவாதம் என்று இச்சொற்களத்தை அறிஞர்கள் விரித்துக் கொண்டுசெல்வதுண்டு. ஒரு அடிப்படைக் கருத்து ஏதேனும் ஒன்றில் நிறுவப்பட்டுவிட்டது என்றால் அது அனைத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதே பொருள். நீர் பனிக்கட்டியோ நீராவியோ ஆவதில்லை என்றால் பிரம்மம் புடவியோ காலமோ ஆவதில்லை என்றும்தான் பொருள்.” அனைவரும் நாடோடியை நோக்க அவர் மறுமொழி ஏதும் சொல்லவில்லை. “ஆகவே இது இங்கே நிறுவப்பட்டுவிட்டது. ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார் பெருங்கந்தர்.

அப்பேச்சில் தொடர்பிலாது அப்பாலிருந்து விறகு கொண்டுவந்து எரியில் அடுக்கியபின் இளைஞனாகிய பரியன் “அஸ்தினபுரிக்கு அருகே கங்கை ஓடுகிறது. கடல் தன் கையை நிலத்திற்குள் நீட்டியதைப் போலிருக்கும் என்று அதைப் பற்றி சூதன் ஒருவன் பாடினான்” என்றான். அனைவரும் அச்சொல்லால் அந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டு புன்னகைத்தனர். அழிசி சிறுவர்களுக்குரிய உரத்த குரலில் “மலையிலிருந்து வானம் வழிந்திறங்கியது போலிருக்கும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். புன்னகையுடன் அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு நாடோடி “நான் பெரிய நதிகளை பார்த்திருக்கிறேன். கங்கை நான் அறிந்த எந்த நதியை விடவும் நூறு மடங்கு பெரிது” என்றார். “கண்களால் பார்த்து அப்படி சொல்லிவிடமுடியாது” என்று ஒரு குரல் சொன்னது. பலர் திரும்பி நோக்கினர். சீற்றத்துடன் பெருங்கந்தர் அத்திசையை வெறித்துப்பார்த்தார்.

ஆதன் நாடோடியிடம் “நீங்கள் அஸ்தினபுரிக்கு சென்றிருக்கிறீர்களா?” என்றான். அவர் ஆம் என்று தலையை அசைத்தார். “அது பெருநகரம் அல்லவா?” என்றான் ஆதன். “ஆம்” என்றார் நாடோடி. அவன் “அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அங்கு செல்லவேண்டும் என்னும் உள்விளி எனக்கு எழுந்தது. அதற்கு என்னை அளித்து சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான். அவர் தலையசைத்து “நன்று” என்றார். அவர் அஸ்தினபுரியைப்பற்றி ஏதேனும் சொல்லவேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். செல்வதற்கான வழியைப்பற்றியாவது சொல்வார் என்று காத்திருந்தான். அவர் பேசாமல் இன்னொரு சுட்ட அப்பத்தை அனலில் இருந்து எடுத்து தன் தாலத்தில் வைத்துக்கொண்டார்.

“அஸ்தினபுரிதான் இப்புவியிலுள்ள நகர்களிலேயே மிகப் பெரியது, மிகத் தொன்மையானது” என்று முதுவணிகரான காத்தன் சொன்னார். “ஆம், அது ஆயிரம் மாடக்குவைகளின் நகர் என அழைக்கப்படுகிறது. வெண்ணிற மாடக்குவைகள் முகில்திரள்போல தோன்றும்” என்று இளைஞனாகிய அம்மூவன் சொன்னான். அனைவரும் ஊக்கம் கொண்டு பேசத்தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் கங்கை குறித்தும் இமையமலை குறித்தும் அஸ்தினபுரி குறித்தும் கருத்துக்களும் காட்சிவடிவுகளும் இருந்தன. சூதர்களும் பாணர்களும் பாடிக்கேட்டு பெருக்கிக்கொண்டவை. அதை தங்களுக்குள் வியந்து வியந்து சொல்லிச் சொல்லி ஒவ்வொருவரும் அதை ஒரு புதிய திசைக்கு கொண்டு சென்றார்கள். ஒருவர் ஒன்றைச் சொல்ல இன்னொருவர் அதை பாய்ந்து பற்றி பெருக்கிக் கொண்டுசென்றார்.

கிணைப்பறையுடன் அமர்ந்திருந்த நாடோடிப்பாணரான பூதி தனக்கான இடம் கோரி கிணைத்தோலின் மேல் கையை வைத்து இழுத்தார். அனைவரும் அவரை திரும்பி நோக்க காத்தன் “கூறுக பாணரே, அஸ்தினபுரி தோன்றிய கதையை!” என்றார். “இது ஒரு தொல்கதை. நூல்களில் நில்லாது நாவுகளில் பரவிச்செல்வது” என்று பூதி சொன்னார். அவர் கைவிரல்கள் கிணைமேல் துடித்தன.

 

“அஸ்தினபுரிக்கு நிகரான நகர்கள் விண்ணில்தான் உள்ளன. கிழக்கே இந்திரனின் அமராவதி அமைந்துள்ளது. தென்கிழக்கே அனலவனின் தேஜோபுரி. தெற்கே யமனின் சம்யமனி. தென்மேற்கே நிருதியின் கிருஷ்ணாஞ்சனை. மேற்கே வருணனின் சிரத்தாவதி. வடமேற்கே வாயுதேவனின் கந்தவதி. வடக்கே குபேரனின் மஹோதயமும் வடகிழக்கில் சிவனின் யசோவதியும். விண்ணில் செல்லும் கந்தர்வர்களும் தேவர்களும் அஸ்தினபுரி அந்நகர்களில் ஒன்றோ என ஐயம்கொண்டு அவ்வப்போது இறங்கி வந்துவிடுவதுண்டு.”

அஸ்தினபுரி உருவாக்கப்பட்ட வரலாறு இது. முன்பு மாமன்னன் ஹஸ்தி ஆரியவர்த்தத்தை முழுதாக வென்று தன் கருவூலத்தை செல்வத்தால் நிறைத்தான். அனைத்து புகழ்களையும் அடைந்த அவன் தன் சொல் நிலைகொண்டுவாழும் ஒரு தலைநகரை உருவாக்கவேண்டும் என்று விழைந்தான். பாரதவர்ஷத்தின் தலைசிறந்த நகர்ச்சிற்பிகளை தன் அவைக்கு வரவழைக்க விழைந்தான். எவ்வண்ணம் சிற்பிகள் தன்னைத் தேடிவரச் செய்வது என்று தன் அமைச்சரும் வசிட்டகுலத்து அந்தணருமான ஸ்ரீதமரிடம் கேட்டான். ஸ்ரீதமர் “அரசே, பெருஞ்சிற்பிகள் பணத்திற்காகவும் புகழுக்காகவும் எதையும் செய்யமாட்டார்கள். ஆகவே பரிசோ, பட்டமோ அறிவிப்பதனால் பயனில்லை” என்றார். “எனில் எதைச் சொல்லி அவர்களை ஈர்ப்பது?” என அரசன் கேட்டான்.

“அரசே, அனைத்தையும் மண்ணில் கால்நட்டு நின்று அறிவது விலங்கு நோக்கு. தன் மூதாதையர் தோள்மேல் காலூன்றி ஏறி நின்று பார்ப்பது மானுட நோக்கு. அனைத்தையும் விண்ணிலிருந்து குனிந்து காண்பது தேவர்நோக்கு. விலங்குநோக்கு காலஇடத்தில் மட்டுமே அமைவது. நேற்றும் நாளையும் அதற்கில்லை. மானுடநோக்கு கொண்டவன் தன் தந்தையர் அறிந்த அனைத்தையும் தான்பெற்று தன்னுடையதையும் சேர்த்து மைந்தனுக்கு அளித்துச் செல்கிறான். பல்லாயிரம் கண்களும் செவிகளும் கொண்ட பேருருவனே கற்கும் மானுடன் என்கிறார்கள். தன்னைத் தான் அடுக்கியபடி பெருகிச்செல்லும் முடிவிலாக் காலமும் முடிவிலா வெளியும் கொண்டது அவன் அறிதல். ஆனால் தேவர்நோக்கு என்பது அதற்கும் மேம்பட்டது. அதுவும் காலமும் இடமும் அற்றது. ஒட்டுமொத்தத்தையும் சாரத்தையும் அறியும் ஆற்றல்கொண்டது”.

“கற்றல் நிகழும் கணங்களில் தான் மானுடன் என்னும் நிலையிலிருந்து ஒரு கணம் எழுந்து பிறிதொருவனாக ஆகி மீள்வதை கற்போன் அறிகிறான். அந்தப் பெருமகிழ்விற்காகவே அவன் கற்கிறான். கற்றுக்கற்று அவன் தேவநிலையை தொட்டுவிடுகிறான். தேவர்போல் நினைத்தவிடத்தில் தோன்றவும், உளம்கொண்டவற்றை இயற்றவும் ஆற்றல்மிக்கவனாகிறான். பிரம்மன் படைத்தவற்றை மேம்படுத்தவும் அழியாதவற்றை ஆக்கவும் தன்னால் இயலும் என உணர்கிறான். அதன்பின் அவனால் எளிய மானுடருடன் இணைந்திருக்க இயல்வதில்லை. கற்றோன் விழைவது ஒன்றே, தேவநிலை. கவிஞனாயினும் சிற்பியாயினும் இசைஞனாயினும் அவர்களின் வாழ்வை மானுடநிலையிலிருந்து அமரநிலை நோக்கிய நாட்டம், ஓயா ஊசலாட்டம் என வகுத்துவிடலாம்.”

“கற்றோன் அமரன் ஆவதற்கான வாய்ப்பு ஒன்றுள்ளது. பெருவேள்வியென ஆகும் செயலொன்றை இயற்றுதல். அக்கனவு அவர்கள் அனைவருள்ளும் திகழ்கிறது. அதற்கான வாய்ப்பை அளிப்போம் என முரசறைவோம்” என்றார் அமைச்சர். “இங்கே அமையும் பெருநகரம் அதன் சிற்பி தன்னுள் கண்ட வடிவத்தின் முழுமையை அடைய அரசு அனைத்தையும் அளிக்கும் என்போம். செல்வமெனில் செல்வம், தவம் எனில் தவம். ஒருபோதும் இதன் பணி இடைநிற்காது, எதன் பொருட்டும் முழுமையன்றி ஒன்றில் நிறைவுறாது என அறிவிப்போம். அவர்கள் இங்கே வருவார்கள்.” மாமன்னர் ஹஸ்தி அவ்வண்ணமே அறிவித்தார். அவ்வறிவிப்பு பாரதவர்ஷமெங்கும் பரவிச்சென்றது.

அதை ஏற்று ஆயிரம் சிற்பிகள் அஸ்தினபுரிக்கு வந்தனர். இறுதியாக தேவசிற்பியாகிய ஹஸ்திபதன் நகர்நுழைந்தார். அவரைக் கண்டதுமே பிறர் தலைவணங்கி தாங்கள் போட்டியிட விழையவில்லை என அறிவித்தனர். மயனின் வழிவந்தவராகிய ஹஸ்திபதன் பதினெட்டு மாநகர்களை அமைத்தவர். ஒவ்வொன்றிலும் ஒரு குறை இருக்கக் கண்டு உளம்சோர்ந்து காட்டுக்குச் சென்று தவம்செய்து வந்தவர். அவர் தன்னிடம் ஒரு வாஸ்துமண்டலம் இருப்பதை காட்டினார். அது நூற்றெட்டு கன்றுத்தோல்களிலாக வரையப்பட்டிருந்தது. அதை நோக்கிய அரண்மனைச் சிற்பிகள் மானுடர் அதற்கிணையான நகர் ஒன்றை கற்பனை செய்ததே இல்லை என்றார்கள். ஹஸ்திபதனுக்கு பன்னிரண்டாயிரம் தங்கக்காசுகளைக் கொடுத்து பணிதொடங்கும்படி அரசர் ஆணையிட்டார்.

ஆனால் ஹஸ்திபதன் நூற்றெட்டு நாட்களைக் கடந்தும் பணி தொடங்கவில்லை. பதினெட்டுமுறை நாள்குறிக்கப்பட்டு ஒத்திப்போடப்பட்டது. ஒரு கட்டத்தில் அரசர் சினந்து “பணிகள் தொடங்கப்போகின்றனவா இல்லையா?” என உசாவினார். “அந்த வாஸ்துமண்டலம் குறையுடையது, அதை இயற்ற நான் விழையவில்லை, வேறு சிற்பியை நோக்குக!” என்று கூறிவிட்டு ஹஸ்திபதன் தன் பொதிகளுடன் நாட்டைவிட்டு அகன்றார். அரசரும் பிறரும் உடன் வந்து மன்றாடி பொறுத்தருளும்படி சொன்னார்கள். மாணவர்கள் உடன்வருவதாக மன்றாடினார்கள். அவர் எவரையும் செவிகொள்ளவில்லை.

விடாது பின்னால் வந்த அமைச்சரிடம் “அந்தணரே, அந்த வாஸ்துமண்டலம் என் கலையால் நான் இயற்றியது. கலை என்பது பிறிதொன்றுக்குச் செல்லும் வழி மட்டுமே. அவ்வழியிலேயே நான் நின்றுவிட்டிருக்கிறேன்” என்றார் ஹஸ்திபதன். “அந்த வாஸ்துமண்டலத்தை எட்டுத் திசையிலிருந்தும் நோக்கி நோக்கி முழுமை செய்தேன். மையத்திலிருந்தும் விண்ணிலிருந்தும் நோக்கி குறையகற்றினேன். அது பழுதற்றது என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள் கனவில் அதன் மாடமொன்றின் மேல் தலைகீழாகத் தொங்கும் வௌவாலாக நான் மாறி அந்நகரை நோக்கினேன். ஒன்றுடன் ஒன்று பொருந்தாது மண்ணில் தொங்கிக்கிடக்கும் குலைகளாக அந்நகரை நான் கண்டேன்.”

“விழித்தெழுந்து ஓடிச்சென்று அந்த வாஸ்துமண்டலத்தை நோக்கினேன். அதன் குறைகளனைத்தும் எனக்குத் தெரியலாயின. அவை ஒவ்வொன்றையும் தீர்த்து செம்மைசெய்ய முயன்றேன். அந்நாளில் பிறிதொரு கனவு எழுந்தது. அந்நகரின் நிலத்துக்கு அடியில் வாழும் நாகம் ஒன்றாக மாறி வளையில் அமர்ந்து மேலே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு மெல்ல சரிந்துகொண்டிருக்கும் கற்குவைகளாக இந்நகரைக் கண்டேன். அந்த நோக்கில் மீண்டும் இந்த வரைவில் பலநூறு குறைகளைக் கண்டேன். அக்குறைகளை என்னால் களையமுடியாதென்றும் உணர்ந்தேன்” என்று ஹஸ்திபதன் சொன்னார்.

“ஒரு நகர் மானுடருக்கு மட்டும் உரியது அல்ல. அங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் அதுவே இயல்பான உறைவிடம். புட்கள், பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்ட அனைத்துயிரும் தனக்கு உகந்தது என்றும் தன் நோக்கில் அழகியது என்றும் எண்ணும் நகரே முழுமைகொள்கிறது. அமுதத்துளி உயிர்களனைத்துக்கும் இனியதாவதைப்போல. அத்தகைய நகரை ஆக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் கற்றது மானுட அறிவை மட்டுமே” என்று ஹஸ்திபதன் தொடர்ந்தார். “முழுமையான கலையாக்கம் ஒன்றை எவராலும் எண்ணி எண்ணி செதுக்கிச் செதுக்கி அமைத்துவிட முடியாது. எண்ண எண்ண குறையும். செதுக்கச் செதுக்க பிழைபெருகும். நிறைக்க நிறைக்க எஞ்சிக்கொண்டிருக்கும். அது பித்தெடுத்து அழியவே வழிவகுக்கும்.”

“கற்றறிவதே கலை. கற்றவை அனைத்தையும் பொருளில்லாதாக்கி கடந்துசெல்வதே உயர்கலை. அதற்கான தவத்தை மட்டுமே மண்ணில் இயற்றமுடியும். விண்ணிலிருந்து அமுதத்துளி என அது சொட்டவேண்டும்” என்று ஹஸ்திபதன் சொன்னார். “ஒற்றைக்கணத்தில் அது நிகழவேண்டும். ஒரு கனவெழுவதுபோல. குறைதீர்ந்ததாக, துளியும் அணுவும்கூட எச்சமில்லாததாக அது அவ்வண்ணமே தன்னை நிகழ்த்திக்கொள்ளவேண்டும். ஒருமுறை மீண்டும் கைவைக்கவேண்டும் என்றாலும் அது உயர்கலை அல்ல.”

“உயர்கலைக்குத் தடையாவது எது என்று இன்றுதான் கண்டடைந்தேன். என் உழலும் எண்ணங்கள் சென்று சலித்து அமர்ந்தபோது ஓர் எண்ணமென என்னில் நிகழ்ந்து உண்மை, மாற்றிலா மெய்மை என தன்னை நிறுவிக்கொண்டது அது. உயர்கலைக்கு தடை எளியகலை மட்டுமே” என்றபோது ஹஸ்திபதன் நகைத்தார். “பயிலாமல் கலை இல்லை, உயர்கலையோ பயிற்சியின் உச்சம். எனில் பயிற்சியின் ஒரு துளி கைகளிலோ சித்தத்திலோ கனவிலோ எஞ்சியிருந்தாலும் அது உயர்கலையை தடுத்துவிடும். பயின்று தேர்ந்து தான் எளிதில் இயற்றி வெல்லும் எளியகலை அளிக்கும் தன்மகிழ்வையும் ஆணவத்தையும் கலைஞன் துறக்க இயலாது. ஈன்று வளர்த்து தோளுக்குமேல் நின்றிருக்கும் மைந்தனை சங்கறுத்துக் கொல்வதற்கு நிகர் அது. மைந்தன் என்பவன் தன்னுடைய செம்மைவடிவுதான் என உணர்ந்த எந்தத் தந்தையும் அதை செய்ய முடியாது. அதைச் செய்யாதவனுக்கு உயர்கலையில் இடமும் இல்லை.”

“எளியகலை உயர்கலையை முற்றிலும் ஒத்தது, உயர்கலை அடையும் அனைத்துப் புகழையும் அதுவும் அடையமுடியும். அது பெருந்திரளை கொந்தளிக்கச் செய்யமுடியும். பொருட்குவைகளை ஈட்டமுடியும். இயற்றியவனும் ஏற்பவனும் அதுவே உயர்கலை என எண்ணி நிறைவடையும் ஒருமையையும் முழுமையையும் அதுவும் கொள்ள முடியும். ஆனால் அது காலஇடத்தில் அமைந்திருப்பது. உயர்கலை காலம் கடந்தது. இடமென அழிவிலாத ஓர் அகத்துளியை கொண்டிருப்பது. எளியகலை படைத்தவனை எளிதில் கைவிடுவதில்லை. துணைவி என உடன்வரும். தந்தை என ஆறுதல்படுத்தும். மைந்தன் என பொறுப்பேற்றுக்கொள்ளும். உயர்கலை தான் நிகழ்ந்ததுமே படைத்தவனை அகற்றிவிடுவது. தன் முழுமையால் பிறிதொன்றின் தேவையில்லாமலாவது.”

“இந்த வாஸ்துமண்டலம் எளியகலை. கல்விப்பயன். கல்வி அளிக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு. எளியோர் இதன்முன் மலைப்பு கொள்வார்கள். கல்வியால் பெற்ற ஆணவம் கொண்டவர்கள் இதை பிரித்து அடுக்கி விளையாடுவார்கள். ஆடிமுன் நின்று நோக்கி நோக்கி உயிர்விடும் குருவிகள்போல் சிலர் இதிலேயே அழியவும்கூடும். உயர்கலை வாழச் செய்வது. தெய்வத்திடம் என அதன்முன் எளியோரும் கற்றோரும் ஒற்றை உணர்வடைந்து தானழிந்து நின்றிருப்பார்கள். அத்தகைய ஒன்றே வேள்வியென நிகழ முடியும். இந்த வாஸ்துவைக்கொண்டு நான் ஒரு பெருநகரை இங்கே படைக்கமுடியும். ஆனால் அதை நோக்கி விண்ணில் நின்று தேவர்கள் புன்னகைப்பார்கள். அவர்களின் கண்களின் இளிவரலை இப்போதே காண்கிறேன்.”

மறுசொல் இன்றி அமைச்சர் நின்றிருக்க ஹஸ்திபதன் விலகிச்சென்றார். துயருற்றவராக, தனியராக அவர் கங்கையின் கரையினூடாகச் சென்றார். இரவு முழுக்க கங்கையின் நீரில் விண்மீன்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மறுநாள் காலை அவர் நடந்துசெல்கையில் கங்கை தொல்காலத்தில் வழிந்தோடி பின்னர் திசைமாறியமையால் உருவான மென்சதுப்பின் புல்வெளிமேல் முகில்நிழல் விழுவதை கண்டார். சலிப்புற்ற விழிகளுடன் அவர் அந்நிழலுருவை நோக்கியபடி நின்றார். அது மாடமாளிகைகளுடன் ஒரு நகர்போல் தோன்றுவதை ஒரு கணத்தில் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு மேலே நோக்கிய கணம் அங்கே தெரிந்த விண்நகரம் ஒன்று மறைந்தது. கீழே நிழல் தன் உருத்தெளிவை இழந்தது.

அவர் கண்டது இந்திரனின் அமராவதியின் நிழல். ஏதோ ஒருகோணத்தில் கதிர் ஒளி அதன்மேல் பட அந்நிழல் மண்ணில் விழுந்த காட்சி அது. அவர் விண்ணை மீண்டும் மீண்டும் நோக்கியபடி அங்கே பித்தன்போல் ஓடினார். களைத்து மூச்சிரைத்தபடி விழுந்து அழுதார். இனி அது மீளாது என தெளிந்தபின் எழுந்து அமர்ந்து ஏங்கினார். ஒருநாள் முழுக்க அங்கேயே அமர்ந்திருந்தார். பின்னர் அவர் தானே சொன்ன சொற்களை நினைவுகூர்ந்தார். விண்ணிலிருந்து சொட்டும் அமுதத்துளி.

களிப்புடன் கூவியபடி எழுந்தோடிச்சென்று அச்சதுப்பு நிலத்தில் நின்று விண்ணை நோக்கி கைதூக்கினார். ஒரு கழியை எடுத்து வரையத் தொடங்கினார். விழிகளை மூடி, ஒருகணம் மட்டுமே கண்ட அமராவதியின் அவ்வடிவை கண்ணுக்குள் நிறுத்தி அதை வரைந்தார். அது அமராவதியின் நான்கு கோட்டைமுகப்புகளில் ஒன்று மட்டுமே. முழுக்க வரைந்தபின் விழிதூக்கி நோக்கியபோது அவர் மலைத்து நெஞ்சைப்பற்றியபடி அமர்ந்துவிட்டார். அன்று வரை அவர் கற்ற எவ்வடிவிலும் அது இல்லை. ஆனால் மாசற்ற முழுமைகொண்டிருந்தது.

பதினெட்டு நாள் அந்த நிலத்திலேயே மரத்தடியில் தங்கி தான் வரைந்த அந்த மண்டலத்தின் ஒழுங்கையும் நெறியையும் நோக்கிக் கற்று அதை எட்டுத் திசைக்கும் விரித்தெடுத்தார். ஒரு மாநகரின் வரைவை அமைத்தபின் திரும்பி ஹஸ்தியின் அரண்மனையை அடைந்தார். “அரசே, நான் மண்ணில் இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே மாநகர் ஒன்றை உங்களுக்காக அமைத்துள்ளேன்” என்றார். “அது உங்கள் பெயராலும் என் பெயராலும் ஹஸ்தினபுரி என்றே அழைக்கப்படலாகுக! அங்கே அமுதத்துளி விழுந்ததனால் அது அமிர்தபுரி என்றும் பெயர் கொள்க! அதன் மையப்புள்ளியில் அமுதகலம் அமைக்கப்படவேண்டும். நாளும் அதற்கு மூவேளை பூசனை நிகழவேண்டும். அஸ்தினபுரியை ஆளும் அரசனின் கொடி அமுதகலமென்றே ஆகுக!”

“அவ்வாறுதான் அஸ்தினபுரி அமைந்தது” என்றார் பூதி. “அந்நகர் ஹஸ்தியால் கட்டப்பட்டு பிற அரசர்களால் அந்த சிற்பநெறியின்படி விரித்தமைக்கப்பட்டது. அந்நகரின் மையத்தில் அமுதகலத்துடன் திருமகள் அமர்ந்திருக்கிறாள். ஆகவே அதன் கருவூலம் ஒருபோதும் குறைவுபடுவதில்லை. அதன் அழகு வேளைக்கொரு வண்ணம் என பெருகுமே ஒழிய குன்றுவதில்லை.” அவர் புன்னகையுடன் கூட்டத்தை நோக்கிவிட்டு “ஆனால் ஒரு பெருவினா இன்றும் சிற்பிகளை அலைக்கழிக்கிறது. அந்நகரின் நான்கு முகப்புகளில் ஒன்றே விண்ணிலிருந்து விழுந்த வடிவம். பிற மூன்றும் அதன் நெறிகளைக் கொண்டு ஹஸ்திபதனால் உருவாக்கப்பட்டவை. அந்த முதல் கோட்டைவாயில் எது?” என்றார்.

“இந்திரனின் திசை கிழக்கு. ஆகவே அது கிழக்குவாயிலே” என்றார் பெருங்கந்தர். “இல்லை என்கிறார்கள் பேரறிஞர் பல்லாயிரவர்” என்றார் பூதி. “அந்நான்கு வாயில்களிலும் எது பேரழகுகொண்டதோ அது” என்றார் பெருங்கந்தர். சற்றே எரிச்சலுடன் ”அனைத்தும் நிகரான அழகுகொண்டவை” என்றார் பூதி. “இது வெறும் சொல் விளையாட்டு. பருப்பொருள் ஒன்று பிறிதொன்றே என ஆகவே முடியாது. சென்று அங்கே நின்றால் நுண்ணிய வேறுபாட்டை நாம் அறியமுடியும். தேவர்களால் அமைக்கப்பட்ட நகர் மானுடநகரைவிட சற்றே மேம்பட்டதாகவே அமைந்திருக்கும்.”

“தலைமுறை தலைமுறையாக சிற்பிகள் அதையே ஆராய்கிறார்கள்” என்றார் பூதி. “ஒவ்வொருவரும் ஒன்றை சுட்டுகிறார்கள். எது தேவர் அமைத்தது, எது மானுடன் அமைத்தது என்று கண்டடைய எந்த வழியும் இல்லை. ஏனென்றால் அதை அமைத்தபோது அந்த மானுடன் தேவனாகிவிட்டிருந்தான். இன்றும் அறியப்படாத ஒன்றாகவே அவ்வினா எஞ்சுகிறது.” அங்கிருந்தோர் அனைவரும் திகைப்புடன் பூதியை நோக்கிவிட்டு பெருங்கந்தரை நோக்கினர். அவர் ஒவ்வாமை தெரிய எழுந்துகொண்டு “பொழுதாகிறது. நீண்ட பயணத்தின் களைப்பு” என்றபடி தலைவணங்கி தன் சுவடிப்பேழையுடன் நடந்தார். அவருடைய மாணவன் பிற பொருட்களுடன் உடன் சென்றான். அனைவரும் அவரை நோக்கி அமர்ந்திருந்தனர்.

முந்தைய கட்டுரைகவிதைகள் பறக்கும்போது…
அடுத்த கட்டுரைபாரதியும் ஜெயகாந்தனும்