«

»


Print this Post

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4


பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் 4

ஆதன் ஊரைவிட்டுக் கிளம்பி பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னரே அஸ்தினபுரிக்குச் செல்வதென்று அறுதியாக முடிவெடுத்தான். அவனை கேட்காமலேயே அவன் மதுரைக்குச் செல்பவன் என உமணர்கள் எண்ணிக்கொண்டனர். அவன் அண்ணாமலையானை நாடிச்செல்லும் வழியில் மதுரையில் சின்னாள் தங்குபவன் என்று கருதினர். உமணர்களின் வண்டிநிரையுடன் அவர்களின் ஏவலனாக அவன் சென்றான். அவர்கள் சில நாட்களிலேயே அவனுடைய இயல்பை புரிந்துகொண்டு அவனுக்குரிய தனிமையை அளித்தனர். அவன் சருகுப்படுக்கை அமைத்து படுத்துக்கொள்கையில் எவரும் அருகே வருவதில்லை. இரவில் விழித்து வான்நோக்கி அமர்ந்திருக்கையில் ஏதும் கேட்பதுமில்லை.

“இறையூர் தேடிச் செல்பவர்கள் ஒவ்வொன்றாக எடுத்துநோக்கி ,ஏங்கி, துணிந்து வீசிவிட்டு விடுதலைகொண்டு முன்செல்பவர்கள்” என்று வணிகரான மருதர் சொன்னார். “ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு கணத்தில் ஒன்றைத் தொட்டு உள்ளிருந்து எடுத்து அதை உதறமுடியாது என எண்ணி அக்கணமே திரும்பிச் செல்பவபவர்களூம்கூட… சென்றமுறை வந்த ஒருவர் புளிக்காய் பச்சடியை தொட்டு நாவில் வைத்தார். மகளே என வீரிட்டபடி எழுந்து ஈரக்கையுடன் தெற்குநோக்கி ஓடி மறைந்தார்.” அவன் புன்னகை புரிந்தான். “ஆனால் மீள்பவர்களைக் கண்டு நான் ஏளனம் செய்வதில்லை. கிளம்பவேண்டும் எனத்தோன்றுதல் மாண்புடையது. திரும்பிச்செல்லுதல் அதனினும் மாண்புடையது. தெய்வத்தைவிட பெரிய ஒன்றை இல்வாழ்க்கையிலேயே கண்டடைபவன் நல்லூழ் கொண்டவன் அல்லவா?”

மதுரையில் அவன் அஸ்தினபுரியைப் பற்றிய புதியசெய்தி ஒன்றை அறிந்தான். மதுரையின் கூலவணிகர் தெருவினூடாகச் சென்றுகொண்டிருக்கையில் வடபுலத்துப் பாணன் ஒருவன் பாடிய அயல்மொழி செவியில் விழ அவன் நின்றான். அவன் பாடி முடித்ததும் அவ்வரிகளை மதுரைப்பாணன் தமிழில் பாடினான். “செங்குருதி கொழுங்குருதி அனற்குருதி புனற்குருதி எழுகிறது அறநிலத்தில். அரசகுடி அரக்ககுடி அசுரகுடி அல்லார்குடி அனைத்தும் திரள்கின்றன குருநிலத்தில்!” என்று பாணன் பாடினான். “மதகளிற்றுப்பெருநகரில் எழுகிறது போர். மாநிலத்து தலைநிலத்தில் எழுகிறது பெரும்போர்.”

அவன் கூட்டத்தில் சேர்ந்து நின்று அதை சொல் சொல் என செவியுற்றான். இளைய யாதவர் தேர்ச்சகடம் தேய, தன் கால்குறடு தேய அஸ்தினபுரிக்கு மும்முறை தூதுசென்றார். சூடிய பீலி தாழ தலைவணங்கி அரசவையிலும் குடியவையிலும் அந்தணர் அவையிலும் மன்றாடி போரை நிறுத்த முயன்றார். அறுதியாக அதுவே ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக என்று தன் கால்பொடியைத் தட்டி வீசியெறிந்துவிட்டு அஸ்தினபுரியிலிருந்து கிளம்பினார். செல்லும் வழியிலேயே பாஞ்சஜன்யத்தை எடுத்து மும்முறை முழக்கி அஸ்தினபுரியின்மேல் போரை அறிவித்தார். அவ்வோசையை ஏற்று ஆயிரம் முரசுகளும் பன்னீராயிரம் கொம்புகளும் ஒலித்தன.

ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கென அவ்வறைகூவல் பரவ அன்றிரவு ஆரியப்பெருநிலமே விண்ணைநோக்கி போர்க்கூவல் எழுப்பியது. இரவில் வெளித்த விண்மீன்களுக்குக் கீழே மிதந்தலைந்த தேவர்கள் அவ்வோசையைக் கேட்டு நடுங்கினர். முனிவர்கள் தங்கள் ஊழ்கத்திலிருந்து விழித்தெழுந்தனர். அந்தணர் திகைத்தபின் மேலும் ஓசையுடன் வேதம் ஒலித்தனர். பாரதவர்ஷத்தின் அத்தனை பேரரசர்களும் கௌரவர்களின் தரப்பையே தேர்ந்தனர். பாஞ்சாலமும் விராடமும் மட்டுமே பாண்டவர்களுடன் இணைந்துள்ளன. மதயானைக்கூட்டமென திரண்டுள்ளனர் ஆரியவர்த்தத்தின் அரசர்கள். வில்லேந்தி காய்த்த கைகள் கொண்டவர்கள். முடிசூடித் தழும்பேறிய நெற்றிகொண்டவர்கள்.

கூடிநின்றவர்களிடமிருந்து எழுந்த ஓசை வியப்பா அச்சமா உவகையா என அவனால் பிரித்தறியமுடியவில்லை. பாணன் அவர்களை விழிசுழற்றி நோக்கியபின் சொன்னான் “வில்பெருவீரனாகிய கர்ணன், உருத்திரவடிவினனாகிய அஸ்வத்தாமன், பெருந்திறலோனாகிய ஜயத்ரதன், தோள்வலியனாகிய துரியோதனன், நூற்றுவர் தம்பியர் நிரை. அவர்களுடன் துணைநின்றிருக்கிறார்கள் பிரஜாபதியாகிய பீஷ்மர், பிரம்மவடிவமாகிய துரோணர், அருந்தவத்தாராகிய கிருபர், பெருந்தந்தையாகிய பால்ஹிகர், தாய்மாமனாகிய சல்யர். இதைப்போல் இத்தனை மாவீரர் ஒருதரப்பில் திரண்டதில்லை.”

கூட்டம் திகைத்துச் சொல்லடங்க பாணன் தொடர்ந்தான் “ஆனால் எவர் வெல்வார் என்பதை எவரும் சொல்லமுடியாது என்கின்றனர் அறிந்தோர். பாண்டவர்களின் தரப்பில் வில்விஜயனும் பெருந்தோள் பீமனும் உள்ளனர். திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் சிகண்டியும் திகழ்கின்றனர். ஆயினும்  எதிர்த்து நிற்போரை எண்ணினால் அவர்கள் ஆற்றலற்றோரே. ஆற்றலெனத் திகழ்பவர் இளைய யாதவர். விண்ணவனே மண்வடிவெடுத்தான் என பெரும்புலவர் வாழ்த்தும் கோமகன். எங்கு வில்லவனும் சொல்வலனும் இணைகிறார்களோ அங்கே வெற்றிமகள் வந்தமர்வாள் என்பது உறுதி எனப் பாடுகின்றனர்.” கூட்டத்திலிருந்து ஆரவாரம் எழுந்தது. அதுவும் ஏன் என்று அவனால் உணரமுடியவில்லை. அவன் முகங்கள் ஒவ்வொன்றையாக பார்த்தான். அவற்றிலிருந்த உணர்வென்ன என்று அவனால் உய்த்துணரக் கூடவில்லை.

பின்னர் அவன் அறிந்தான், அவர்களிடமிருந்தது ஒற்றை உணர்வே என. அது கதைகேட்கும் குழவியரின் உணர்வு. விந்தைநிலை. துயர், அச்சம், தவிப்பு, சீற்றம், உவகை, நிறைவு அனைத்துமே விந்தையெனவே அவர்களில் வெளிப்படும். கதைகளுக்குரியது அந்த ஒற்றை உணர்வே. கதையின்ல் எழும் வலியும் இழப்பும் நோயும் சாவும் இனியதே. கதையில் அனைத்தும் சுவையே. அவன் மதுரையில் வைகைக்கரையில் அமைந்த செங்கல்படிக்கட்டில் அமர்ந்து நீலநீர் சுழித்தோடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். மதுரையிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்ற முடிவை அப்போதுதான் எடுத்தான்.

மதுரையில் அவன் தன் வணிகக் குழுவிடமிருந்து பிரிந்து பிறிதொரு வணிகக்குழுவுடன் இணைந்து கொண்டான். வணிகர்குழுத் தலைவர் அவனைப்பற்றி புதிய வணிகக்குழுத் தலைவரிடம் “இவர் சென்றுகொண்டிருப்பவர் என்று அறிமுகப்படுத்தினார். சென்றுகொண்டிருப்பவன்! அச்சொல் ஆதனுக்கு ஒரு சிறு திடுக்கிடலை உருவாக்கியது. சென்று கொண்டிருப்பவன் எனும் சொல்லைப்போல தன்னைப்பற்றி சொல்ல பிறிதொரு சொல்லில்லை என்பதை அவன் உணர்ந்தான். அவ்வாறு அவர்களுடன் இணைந்து பிரிந்து சென்றவர்களின் பெரும்பட்டியலிலிருந்து அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் சொல் போலும் அது. சென்றுகொண்டிருப்பவர்கள். அவர்கள் செல்வதை மட்டுமே வணிகர்கள் காண்கிறார்கள்.

நாடெங்கும் சாலைகளில் வணிகக்குழுக்கள் ஒரு குழுவின் கொடி இன்னொரு குழு காண, ஒரு குழுவின் ஓசை இன்னொருகுழு கேட்க தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவ்வணிகக் குழுக்களினூடாக பல்லாயிரம்பேர் அவ்வாறு சென்றுகொண்டிருக்கக்கூடும். பாரதவர்ஷம் முழுக்க பல்லாயிரம் பல்லாயிரம் பேர் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்களை சந்தித்தால்கூட அடையாளம் காண முடியாது. அடையாளம் கண்டுகொண்டால்கூட அவர்களிடம் சொல்வதற்கு அவனிடம் சொற்களென ஏதும் இருக்காது. ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவர்கள். பிறரிடம் சொல்வதற்கென சொற்களேதும் இல்லாதவர்கள். சென்றுகொண்டே இருப்பவர்கள்.

அச்சொல் அவனை கவ்விக்கொண்டது. அதுவரை தன்னை அவன் எவ்வகையிலும் வரையறுத்திருக்கவில்லை. அக்கணமே அது அவனுடைய வரையறையாக மாறியது. அச்சொல்லையே தன் பெயராகவும் கொள்ளவேண்டும் என்று அவன் எண்ணிக்கொண்டான். புதிய வணிகக்குழுவுடன் சோழ நாட்டில் சென்றுகொண்டிருக்கையில் சிற்றூர் ஒன்றிலிருந்து வந்து அக்குழுவில் சேர்ந்துகொண்ட இளைஞன் அவனிடம் “மூத்தவரே, தாங்கள் செல்வதெங்கே?” என்றான். முதல் முறையாக அவ்வினாவை எதிர்கொண்ட ஆதன் உளம் திகைத்து வெற்றுவிழிகளால் அவனை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கையைப்பற்றி உலுக்கி “தாங்கள் செல்வதெங்கே? நானும் அங்கு வருகிறேன்” என்றான். “என் பெயர் அழிசி. நான் தச்சன். என் கைகளுக்கு எங்குசென்றாலும் சோறு.”

“நீ எதற்காக கிளம்பினாய்?” என்றான். “அச்சிற்றூரில் நாங்கள் வாழ்ந்தோம்… அங்கே இன்று அவ்வூர் இல்லை” என அவன் கைசுட்டிச் சொன்னான். “என் அன்னையும் தந்தையும் கொள்ளையரால் கொல்லப்பட்டனர். மலையிறங்கி வந்த கொள்ளையர்கள் எங்கள் ஊரை அழித்து தீவைத்து அனைத்துப் பொருட்களையும் சூறையாடிச் சென்றனர். முதியவர்கள் அனைவரையும் கொன்றனர். இளம்பெண்களையும் இளைஞர்களையும் சிறைப்படுத்திச் சென்றனர். கோழிக்கூடு ஒன்றுக்குள் பதுங்கி நான் உயிர் தப்பினேன். என் ஊரில் எஞ்சியவன் நான் மட்டுமே. அவர்கள் சென்றபின் அங்கிருந்து கிளம்பினேன். அந்த ஊரின் நினைவில்லாத எங்கேனும் செல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.”

ஆனால் அவன் தன் இயல்பால் அதையும் துயரில்லாத இளங்குரலில் சொன்னான். ஆதன் அவனை கூர்ந்து நோக்கி “கிளம்பிய பிறகு அதன் நினைவு குறைகிறதா?” என்று கேட்டான். “குறையாதென்றுதான் எண்ணினேன். ஆனால் அங்கிருந்து விலகுந்தோறும் அவ்வூர் சிறுத்துச் சிறுத்து நினைவின் ஆழத்தில் எங்கோ செல்கிறது. அவ்வூருடன் எனக்கு இனி தொடர்புகள் ஏதும் இல்லை என்று தோன்றுகிறது” என்றான் அழிசி. “மற்றபடி இன்பம் துன்பம் என்பன அனைத்தும் சொற்களே. அச்சொற்களால் நாம் சுட்டும் புறவுலக நிகழ்வுகளுடன் நமக்கான தொடர்பென்ன என்பதே கேள்வி. நமக்குத் தொடர்பில்லாத இன்பமும் துன்பமும் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்நாட்களில் நான் கற்றுக்கொண்டது அதுதான்.”

“அதன்பின்னர்தான் நெடுந்தொலைவு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். தொலைவு நம்மை நாம் கொண்டிருக்கும் அனைத்தில் இருந்தும் அகற்றுகிறது. நெடுந்தொலைவு சென்றுவிட்டேன் என்றால் என் இழப்பும் துயரும் மிகமிகச்சிறிதென்று ஆகிவிடும். இங்கிருப்பவர்களில் நெடுந்தொலைவு செல்பவர் நீங்கள் என்பதை உணர்ந்தேன். ஆகவேதான் கேட்டேன்” என்றான் அழிசி. “அதை எப்படி உணர்ந்தாய்?” என்று ஆதன் கேட்டான். அவன் திகைத்து, குழம்பி, பின் சிரித்து “தெரியவில்லை. உண்மையில் அதை அப்படி வகுத்துரைக்கும் அளவுக்கு எனக்கு மொழித்திறன் இல்லை. எவ்வகையிலோ உணர்ந்தேன் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்றான்.

பின்னர் “என்னிடம் அதை சொன்னவர் பெரியவர் என தோன்றுகிறது. அவர் உங்களை சென்றுகொண்டே இருப்பவர் என்று வரையறுத்தார். அச்சொல் எனக்கு ஒரு பெருந்திறப்பாக அமைந்தது. சென்றுகொண்டே இருத்தல் என்பது நெடுந்தொலைவு செல்வதுதானே?” என்று அவன் சொன்னான். ஆதன் சிரித்தபடி “மிக அருகே இருக்கும் ஓரிடத்திற்கும் ஒருவன் சென்றுகொண்டே இருக்கலாமே?” என்றான். அவனுக்கு அது புரியவில்லை. “ஆம் அப்படியும் சிலர் இருக்கக்கூடும்” என்றான். ஆதன் “உன்னுடைய சிறிய அறிதல்களைக்கொண்டு அறியக்கூடிய ஒன்றல்ல இது” என்றான். அவன் மேலும் சிரித்து “உண்மைதான்” என்றான்.

ஆதன் பேச்சைத் தவிர்த்து விலக முனைய அவன் ஆதனின் ஆடையைப் பற்றியபடி உடன் ஓடிவந்து “கூறுக! நீங்கள் செல்லுமிடம் எது?” என்று மீண்டும் கேட்டான். அக்கணத்தில் தன்னுள் ஓயாது திகழும் அச்சொல்லில் முட்டிக்கொண்டு “அஸ்தினபுரி” என்று அவன் சொன்னான். “ஆம், நான் அதை கேட்டிருக்கிறேன். வடக்கே நெடுந்தொலைவில் இருக்கிறது அந்த ஊர். பெருங்களிறுகளின் நகர் அது. பல்லாயிரம் களிறுகள் சேர்ந்து அதை கட்டின என்கிறார்கள். அதை எழுப்பிய மாமன்னர் ஹஸ்தி யானைகளுக்கு ஆணையிடும் சொல் கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு பெரும் படையென திரண்டு வந்து அவருக்காக அந்நகரை உருவாக்கின.”

அவன் ஆதனின் கைகளை பற்றிக்கொண்டு “மூத்தவரே, நானும் வருகிறேன். நான் விரும்பும் ஊர் அதுதான்” என்றான். “நான் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை இப்போதுதான் உறுதியாக அடைந்தேன். ஆனால் மெய்யாகவே அங்கு செல்வேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று ஆதன் சொன்னான். அழிசி மெல்ல குதித்தபடி “நீங்கள் அங்குதான் செல்கிறீர்கள், நன்கு தெரிகிறது. நீங்கள் வேறெங்கும் செல்ல முடியாது. இந்த ஊர்கள் மிகச்சிறியவை. இந்தப் பாதை மிக மிக பழகியது. இந்த வழியாக ஒருவர் நெடுந்தொலைவு செல்ல வேண்டுமெனில் அஸ்தினபுரிக்கே செல்லவேண்டும். அல்லது பாரதவர்ஷத்திற்கு செல்லவேண்டும்” என்றான்.

ஆதன் நகைத்து “எங்கு?” என்றான். “பாரதவர்ஷத்திற்கு” என்று அவன் சொன்னான். “சரி, நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றான். “நான் பாண்டி நாட்டிலிருந்து வருகிறேன்… மதுரைக்குக் கிழக்கே” என்றான். “மதுரை எங்கிருக்கிறது?” என்றான் ஆதன். “நீர்வழிபாட்டுக்கு நீ கற்ற பழம்பாடல் இருக்குமே, சொல்!” அவன் கண்களை மூடி எண்ணி நோக்கி “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,  கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற்கட்டின் நீர்நிலை நிவப்பின்…” என்று சொல்லி நிறுத்தி “மதுரையும் பாரதவர்ஷமே” என்றான்.

பின்னர் “ஆனால் நான் பாரதவர்ஷத்தை கதைகளில் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அனைத்து வளங்களும் நிறைந்த நாடு, தெய்வங்கள் மண்ணிறங்கி வாழும் நாடு என்கிறார்கள்” என்றான். “அனைத்து நிலங்களும் அவ்வாறுதான்” என்று ஆதன் சொன்னான். “மெய்யாகவே நானும் பாரதவர்ஷத்தில்தான் இருக்கிறேனா?” என்று அழிசி கேட்டான். “அவ்வாறு எண்ணிக்கொண்டால் அதுவே” என்று ஆதன் சொன்னான். அவன் விழிகளை மேலேற்றி உவகையுடன் “பாரதவர்ஷம்!” என்றான். பின்னர் “நெடுந்தொலைவிலிருக்கிறது! நெடுந்தொலைவு!” என்றான்.

நெடுந்தொலைவு எனும் சொல் அவனையும் ஆட்டுவிப்பதை ஆதன் புரிந்துகொண்டான். “நான் தங்களுடன் வருகிறேன். தங்களுடன் அஸ்தினபுரி வரைக்கும் வருவேன்” என்றான். “நான் அஸ்தினபுரிக்குச் செல்வதென்றால் உன்னையும் அழைத்துக்கொண்டே செல்வேன்” என்று ஆதன் சொன்னான். “மெய்யாகவா? என்னை விட்டுவிட்டுச் செல்ல மாட்டீர்கள் அல்லவா?” என்றான் அழிசி. ஆதன் இல்லை என தலையசைத்தான். “நீங்கள் அன்புடையவர் என்று தோன்றுகிறது, ஆனால் விட்டுச்செல்பவர் என்றும் தோன்றுகிறது” என்றான். ஆதன் சிரித்தான். “சிரிக்கிறீர்கள்… ஆகவேதான் அப்படித் தோன்றுகிறது” என்றான் அழிசி.

அதன் பின் அழிசி அவனுடன் ஒட்டிக்கொண்டான். அவனுக்கு பணிவிடைகளை செய்தான். துயில் பொழுதில் இலைகளைப் பறித்து அவனுக்கு படுக்கை அமைத்தான். காலையில் அவனுக்கு முன்னரே எழுந்து அவனுக்காக காத்திருந்தான். அவன் ஆடைகளை தூய்மை செய்தான். உணவு சமைத்து பரிமாறினான். அவனுடைய உறவு தனக்கு எத்தனை அணுக்கமாயிருக்கிறது என்று ஆதன் வியந்தான். கிளம்பிய மறுகணமே ஓர் உறவை உருவாக்கிக்கொள்வதென்பது விந்தையானது என்று தோன்றியது. ஆனால் உறவுகள் தேவைப்படுகின்றன. உறவுகளினூடாகவே இங்கே திகழ முடிகிறது. எங்குமல்ல, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பாதையில்கூட திகழவேண்டுமெனில் ஓர் உறவு தேவையாகிறது. அப்போது அவனுக்கு தோன்றியது, எங்கு செல்லவேண்டுமென்ற இலக்கையே உறவென ஒன்று அமைந்த பின்னர்தான் சொல்ல முடிகிறது. உறவென எவருமில்லையேல் எங்கு செல்வதென்ற தெளிவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

 

வாககன் என அவனை அழைத்தார்கள். செல்லும் வழியெங்கும் அழிசி அவனிடம் அஸ்தினபுரியைப் பற்றியே சொல்லிக்கொண்டு வந்தான். கதைகளில் அவன் கேட்டிருந்த அப்பெருநகர் சொல்லச்சொல்ல வளர்ந்தது. அதன் தெருக்களனைத்தும் உருக்கி வீழ்த்தப்பட்ட வெண்கலத்தாலானவை. அதன் கோட்டைச் சுவர் இரும்பாலானது. அங்குள்ள மாளிகைகளின் முகடுகள் அனைத்தும் தங்கம். காலையில் பொன்னொளியில் அந்நகர் செம்முகில் திரள் போல ஒளிவிடும். அங்கு இரவும் பகலும் வேதச்சொல்லே ஒலித்துக்கொண்டிருக்கும். நகருக்கு மேல் முகில்குவை என வேள்விப்புகை மாறாது நிலைத்திருக்கும். அங்குள்ள கிள்ளைகளும் வேதச்சொல் எனவே கூவும். காகங்களும் வேதச் சொல்லையே தங்கள் மொழி எனக் கொண்டிருக்கும். வேத நாதமென பசுக்கள் ஓசையிடும். வேதம் ஒரு பருவடிவு கொண்டு நகரென்று ஆனதுபோல் திகழ்வது அது.

ஆதன் முதலில் மெல்லிய புன்னகையுடன் அந்தப் பேச்சை செவிகொண்டான். ஒவ்வொரு முறையும் அவனை கேலி செய்யும் பொருட்டு ஏதேனும் சொன்னான். ஆனால் அழிசி எந்த இளிவரலையும் பொருட்படுத்தும் அளவுக்கு கூர் கொண்டிருக்கவில்லை. அறிவின்மையா என அவன் எண்ணினான். ஆனால் அழிசியிடமிருக்கும் ஒளிகொண்ட அகத்தெளிவை அவன் பலதருணங்களில் வியப்புடன் உணரவும் செய்தான். அழிசியின் உள்ளம் தன்னியல்பாக நேர்பாதையில் சென்றது. நேர்பாதையில் மெல்லுணர்வுகளும் பேருணர்வுகளுமே உள்ளன, அங்கே பகடிக்கும் அங்கதத்திற்கும் இடமில்லை. அனைத்துக்கும் மேல் ஒரு மெல்லிய ஐயத்தை அடைபவனுக்கு உரியது பகடி. பகடியை அணிந்தவனுக்கு மேன்மைகள் என எதுவும் முழுமையாக சிக்குவதில்லை. பகடியை அணிந்தவன் தன் துயருக்குக் கூட உளம் முற்றழிந்து கண்ணீர் விடுவதில்லை.

மெல்ல மெல்ல அழிசியின் சொற்களே தன்னுள்ளும் திகழ்வதை அவன் உணர்ந்தான். அதனூடாக அஸ்தினபுரியை அவன் பேருருவாக தனக்குள் எழுப்பிக்கொண்டான். அதுவரை வெறும் சொல் என திகழ்ந்தது காட்சிவடிவம் கொள்ளலாயிற்று. அவன் இருமுறை கனவில் அந்நகரை கண்டான். அதன் பொன்னொளிர் தெருக்களில் மிதப்பவன்போல் நடந்தான். ஆயினும் அவனால் உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை. காஞ்சியை அடைந்தபோது அங்கிருந்து வேறெங்காவது செல்லமுடியுமா என்னும் எண்ணம் எழுந்தது. “இந்த வணிகக்குழு இங்கிருந்து மேற்காகத் திரும்பி ரேணுநாடு செல்கிறது. நாம் செல்லவேண்டியது வடக்கே, வேங்கடம் கடந்து விஜயபுரி வழியாக” என்று அழிசி சொன்னான். அவன் எண்ணத்தில் ஆழ்ந்து அமர்ந்திருக்க “நாம் இவர்களிடமிருந்து பிரிந்து பிறிதொரு குழுவை நாடியாகவேண்டும்” என்றான்.

வணிகக்குழு கிளம்புவதற்காக பொதிகளை கட்டிக்கொண்டிருக்க அவன் காஞ்சியின் தெருக்களில் தனித்து அலைந்தான். பிறைவடிவப் பெருநகரின் தெருக்கள் அனைத்துமே ஆற்றைநோக்கிச் சென்று வில்வடிவமான மாபெரும் படித்துறையை அடைந்தன. வேகவதியில் நீர் வெள்ளிக்கம்பிச் சுருள்கள் என முறுகி விரிந்து குவிந்து எழுந்து வளைந்து விழுந்து சென்றுகொண்டிருந்தது. படித்துறையில் காலோய்ந்து அமர்ந்தபோது அவன் அப்பால் அஸ்தினபுரி என்னும் சொல்லை கேட்டான். அங்கே பாணன் ஒருவன் கிணைமுழக்கி உரைச்சொல் வடிவில் கதை நிகழ்த்திக்கொண்டிருந்தான். அங்கிருந்தவாறே ஆதன் அச்சொற்களை செவிகொண்டான்.

“நாவின்மேலும் முகத்தின்மீதும் இறுதி ஆணைகொண்டவர்கள் உண்டு. அவர்கள் மாபெரும் அரசியலாளர்கள். எந்தையே, நீர் உணர்வுகள்மேலும் எண்ணத்தின்மீதும் ஆணை கொண்டவர். யோகியாக அமரவேண்டியவர், இங்கமர்ந்து அரசுசூழ்கிறீர்.” அச்சொற்களைச் சொல்பவன் யார்? கதைகளில் வாழும் ஒருவன். தேவர்கள் கேட்க, இன்னும் பிறக்காதவர்களும் செவிகொள்ள பேசும் ஆற்றல் பெற்றவன்  ”சிற்றெறும்புகளின் களிக்களத்தில் பெருங்களிறு என நுழைகிறீர். தந்தையே, உற்றோ உவந்தோ ஊழாலோ நீங்கள் பற்றியிருப்பனவற்றை முற்றாக கைவிடுக! எனக்குப்பின் என்னவாகும் என அஞ்சுவது எளிய மானுடரின் முதற்பெரும் மாயை. இப்புவிமேல் கொண்ட காதலையே அவர்கள் குடிமேலும் மைந்தர்மேலும் குமுகம்மேலும் கொண்ட பற்றென்று எண்ணிக்கொள்கிறார்கள். அந்த மாயையிலா யோகத்தை அறிந்த எந்தையும் உழல்வது?”

அதை பிரத்யும்னன் இளைய யாதவரிடம் சொல்கிறான் என அவன் புரிந்துகொண்டான் “கானேகுங்கள். அணுகி வந்துகொண்டிருக்கிறது பெரும்போர். ஆயிரங்கள் இலக்கங்கள் அழியக்கூடும். குருதிப் பெருக்கும் விழிநீர் பெருக்கும் எஞ்சக்கூடும். அதை நிகழ்த்துவது அஸ்தினபுரியின் நிலவுரிமைப் பூசல் அல்ல. அவர்களிட்ட வஞ்சினமும் அல்ல. மெய்யான ஏது நீங்கள்தான். இன்று பாரதவர்ஷமே திரிந்துள்ளது. பாற்கலத்தில் பிடியுப்பு என அதை திரித்தது உங்கள் இருப்பு. உங்கள் மேல் அச்சம் கொண்டவர்களே இங்குள்ள அரசர்கள் அனைவரும். அதன்பொருட்டே அவர்கள் அங்கே அணிசேர்கிறார்கள். இப்போர் இத்தனை பெரிதாவது உங்களால். இங்கே பேரழிவு நிகழுமென்றால் அது உங்களால்தான்.”

கூடியிருந்தவர்களின் முகங்களை ஆதன் நோக்கினான். அங்கே கதைகேட்கும் உணர்வுக்குமேல் பிறிதொன்று தோன்றியிருந்தது. அணுகிவரும் இடர் ஒன்றை உணர்ந்துகொண்ட பதற்றம். சிலர் அங்கிருந்து விலகிச்சென்றுவிட விழைபவர்போல் உடல்மொழி கொண்டிருந்தனர். ஆனால் எவரும் அச்சொற்களிலிருந்து விலகவில்லை. பாணன் சொன்னான் “தாங்கள் மட்டும் சற்றே அகன்றால் அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும். ஒவ்வொருவரும் அச்சங்களும் ஐயங்களும் ஒழிந்து மண்ணில் அமைந்து எண்ணத் தலைப்படுவர். யோகியர் வாழவேண்டிய இடம் காடே என வகுத்தவர் மூடர்கள் அல்ல. யோகியர் குடியும் உடைமையும் கொள்வது இழுக்கு என நூல்கள் சொல்வதும் வெறுமனே அல்ல. யோகியர் கோரினால் இவ்வுலகு போதாது. அவர்கள் பெருகினால் இங்கு பிறருக்கு இடமில்லை. ஆகவே விலகுக, அகல்க! இவ்வெளிய மக்களை வாழவிடுக!”

அவன் எழுந்து மீண்டும் தெருவை அடைந்தபோது அழிசி எதிரே வந்தான். “நமது குழு கிளம்பிக்கொண்டிருக்கிறது மூத்தவரே, நாம் கிளம்புகிறோமா?” என்றான். ஆதன் அவனை பொருள்நிகழா விழிகளால் நோக்கிவிட்டு “நாம் வடபுலம்செல்லும் குழுவொன்றை தேர்வோம்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். அவ்வண்ணம் ஒரு குழுவை தெரிந்தெடுத்துவிட்டேன். அவர்கள் விஜயபுரி வரை செல்பவர்கள்…” என்றான். ஆதன் “நன்று” என்றான். “நாம் அஸ்தினபுரிவரை செல்கிறோம் அல்லவா?” என்றான் அழிசி. “ஆம்” என்றான் ஆதன். “அங்கே போர் நிகழவிருக்கிறது என்கிறார்கள்…” என்று அழிசி சொன்னான் “நாம் செல்வதற்குள் போர் தொடங்கிவிடுமா என்ன?” ஆதன் புன்னகைத்தான்.

“அவர் இப்போரை நடத்தவிருக்கிறார் என்கிறார்கள்” என்று அழிசி பேசிக்கொண்டே உடன்வந்தான். “துவாரகையின் அரசர். அவர் பௌண்டரிக வாசுதேவனையும் ஜராசந்தனையும் கொன்றார். ஆகவே ஷத்ரியர்கள் அவரை வஞ்சம்தீர்க்க எண்ணுகிறார்கள். சூழ்ச்சியால் அவர் போரில் படைக்கலம் ஏந்தக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கச்செய்துவிட்டார்கள்.” ஆதன் “எவர் சொன்னது?” என்றான். “இப்போதுதான் கதைகேட்டுவிட்டு வருகிறேன். அவர் படைக்கலம் எடுக்கமாட்டேன் என தன் மூத்தவருக்கு கால்தொட்டு ஆணையிட்டுவிட்டார். படைக்கலமில்லாமல் போர்க்களம் சென்றால் அவரை அவர்கள் வென்றுவிடுவார்கள்.”

அழிசி நின்று கைதூக்கி “ஆனால் அவரை எவரும் வெல்லமுடியாது. படைக்கலமில்லாமல் போர்க்களம் செல்வது அவரல்ல, அவருடைய மாயைவடிவு. அவர் படையாழி ஏந்தி களம்செல்வார்.” ஆதன் “அது சொல்மீறுதல் அல்லவா?” என்றான். அழிசி உரத்த குரலில் “இல்லை, அவருடைய மாயைவடிவம்தான் போருக்குச் செல்லும். அது படைக்கலம் ஏந்தியிருக்கும்” என்றான். ஆதன் சிரித்து அவன் முதுகில் தட்டி “வா” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/127951