மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு

 

ஒன்று

வட்டத்தின் சுழற்சியில்

நடுவே தோன்றி வளர்ந்தது

பேரொளி

 

அதற்குப் பேச்சுவரவில்லை

சைகைகளும் இல்லை

எனினும் அதனிடம் அடக்கமாய் வீற்றிருந்தது

நோக்கமற்று ஒரு மகத்துவம்.

 

அபி.

கேதார்நாத் நோக்கிய பயணத்தில், குளிர்காலை ஒன்றினில், இமயச்சரிவில் பசுமை வழிந்திருந்த கிராமம் ஒன்றின் மேட்டிலிருந்த மையச்சாலையோர தேநீர்க்கடையில் நின்றிருந்தேன். தூரத்து மலைவளைவின் சரிவுகளின் கிராமத்துப் பாதை வழியே மேலேறிக் கொண்டிருக்கும் பசுக்கூட்டம். காண்பவற்றை வெள்ளைக் கொசுவலைக்குள் நின்று காணும் காட்சியென மாற்றும் வெண்பனிப் புகைசூழ்கை, பின்புலச் சாம்பல் வண்ணத்தில், அடங்கிய கோட்டுருவமாக மலைத்தொடர். எங்கோ இருந்து உயர்ந்து எங்கெங்கோ மோதி எழுந்துவந்து மிகமெல்லியதாய் எதிரொலிக்கும் கங்கையின் பேரோசை. தூரத்தில், மானுடக் கீழ்மைகள் அண்டாத, கிராத மலையின் வெண்தீயொளிர் பனிபடுசிகரம்.

கிராத மலையே கிராதனாகி இறங்கி வரும் கண் மயக்கும் காட்சி ஒன்றினைப்போல், சிகர ஒளியின் கீழ் சாலை முனையில் தோன்றினார் ஒரு பைராகி. கோவணதாரி. வலக்கையில் சூலம், இடக்கையில் கப்பரை. நெடு மேனியெங்கும் ருத்ராக்ஷக்காப்புகள், ஜடாமுடி தொட்டு வெறும் பாதம் வரை தூய சாம்பல் பூச்சு. மிக சொற்ப வினாடிகள், எங்கோ தோன்றியவர், இங்கே வந்து கடந்து, இறக்கம் திரும்பி மறைந்து போனார். அந்தக் கிராதநாதர் மலையின் பின்புலத்தில், அவரைக் கண்ட அக்கணத்தின் உணர்வுகளை சொல்ல மொழி இல்லை அல்லது கொண்ட மொழி தீருமட்டும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

திரும்பி கடைக்குள் பார்த்தேன். கடைக்காரர் கைக்கூப்பி நின்றிருந்தார். நெற்றியில் சுடர் என செந்திலகம். அருகே கிடந்த சிவம் மேல் மிதித்து நிற்கும் பன்னிருகர மகாகாளியின் படம். சாக்த பக்தர், அல்லது உபாசகர். பைரவ் என்று சொல்லி கண்ணால் அவர் போனதிசையை காட்டினார். பலகையில் அமர்ந்திருந்த பெரியவர் தேவபூமியின் மைந்தன் போகிறார் என்றார். தேவபூமி. ஆம் தேவபூமி இது. இவர்களே அதன் மைந்தர்கள். உலகம் என்பது உயர்தோர் மாட்டே என்பதோர் உயர்ந்தவன் சொல். இந்த உலக வாழ்வில் உயர்ந்தோர் யார்? இவர்களே.

‘இது’ என்ன? எனும் தகிக்கும் வினாவைத் தாங்கி, ‘இதை’ அறியக் கிளம்பியவர்கள். லௌகீகத்தில் உண்டு உயிர்த்திருந்து மடியும் கோடிகளில், ஆண்டு அடங்கும் லட்சங்களில், விட்டு அதிலிருந்து வெளியேறி சாரம் ஒன்றினை நோக்கிய மகத்தான பயணத்தைத் தேர்ந்த சிலர். லட்சத்தில் கோடியில் ஒருசிலர். இவர்களால் ஆன, இவர்களுக்கான மண் இந்த பாரதமண். வேதகால ரிஷிகள் துவங்கி, உபநிஷத காலம், தரிசனங்களின் காலம், புத்தரும் மகாவீரரும் கண்ட பௌத்த சமண மதங்களின் காலம், பக்தியால் கட்டி எழுப்பிய பெருமதங்களின் காலம், மறுமலர்ச்சி கால ராமகிருஷ்ண பரமஹம்சர், ஜனநாயக கால ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, பின்நவீன கால ஓஷோ என அந்தர்வாகினி என இம்மண்ணில் காலமெங்கும் தொடரும் மெய்மைத் தேட்டத்தின் நெடும் பாரம்பரியம் இவர்களால் ஆனது.

பாரதநிலத்தின் ஒரு பகுதியான தமிழ்நிலத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவனில் துவங்கி ரமணர் வரை, மணிமேகலை தொட்டு, பாரதியின் முன்னோடி செங்கோட்டை ஆவுடையக்காள் வரை அந்தப் பாரம்பரியத்தின் இணைத் தொடர்ச்சி உண்டு. இந்த மெய் தேட்ட பாரம்பரியத்துடன் பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்ததாகவே பாரத நிலத்தின் கலைச் செல்வங்கள் காணக் கிடைகின்றன. பாரத நிலத்தின் காவிய கர்த்தாக்கள் ரிஷிகளும் கூட. பௌத்த மரபின் மெய்மைத் தேட்ட சாதகர்கள் உருவாக்கியதே அஜந்தா ஓவிய வெளி. தாந்த்ரீக, சாக்த, சாங்கிய மெய்த்தேட்ட மரபுகளுடன் பின்னிப் பிணைந்ததே பாரதக் கோயிற்கலை. ஆடல்வல்லான் மெய்மைத் தத்துவத்துடன் இணைந்து நிற்பதே பரதக்கலை.

ஏன் கலைகள் மெய்மை தேட்ட மரபுடன் இணைந்து நிற்கிறது? தனித்து நிற்க இயலாத ஒன்றா கலை? கலை எந்நிலையிலும் ஒரு படைப்பாளிக்கு அதன் ரசிகனுக்கு ஒரு சாதனம் மட்டுமே. அது அவனுக்கு என்ன அளிக்கிறது என்பதை விட, நிலவைச் சுட்டும் விரல்போல அவனை எங்கே கொண்டு செலுத்த முனைகிறது என்பது முக்கியம். ஆனந்த் குமாரசாமி சொல்வார் ஒரு படைப்பாளி அது கவிதையோ சிற்பமோ ஓவியமோ இசையோ ஏன் படைக்கிறான்? படைப்பதன் வழியே அவன் எய்தும் இன்பம் அதற்காகவே படைக்கிறான். கட்டுரையின் முடிவாக இந்தப் பிரபஞ்ச ஸ்ருஷ்டி ஏன் நிகழ்ந்திருக்கிறது எனில், இப்படி ஸ்ருஷ்டிப்பதில் குண கர்ம வடிவ பேதங்களுக்கு அப்பாற்பட்ட அந்த சாரத்துக்கு ஒரு ஆனந்தம் அதனால்தான் என்பார்.

ஆக ஒரு படைப்பாளி படைக்கையில் எய்துவது சாரமான அந்த ஸ்ருஷ்டி ஆனந்தத்தின் ஒரு துளியைத்தான். உன்னதக் கலைகள் படைப்புகள் நிலவைச் சுட்டும் விரல் போல சுட்டி நிற்பது அந்த சாரமான ஒன்றைத்தான். எனில், ஒரு மெய்த்தேட்ட ஞானிக்கும் ஒரு படைப்பாளிக்கும் என்னதான் வேறுபாடு? ரமணருக்கும் தேவதேவனுக்கும் உள்ள வேறுபாடுதான். தேவதேவன் ரமணர் அல்ல. ஆனால் ஒரு உன்னதக் கவிதையை அவர் எழுதி நிறையும் அக்கணம் அவர் நிற்பது ரமண நிலையில். அவரது அக்கவிதை வழியே செல்லும் அவரது வாசகனும் அக்கணம் ரமண நிலையில் நிற்கிறான். இதன் பொருட்டே கலைஞர்களும் அதன் ரசிகர்களும் கலையில் ஈடுபடுகிறார்கள். இதன் பொருட்டே, உன்னதமாக்கலின் வழியே சென்று தொடப்படும் ஆத்மீக சாரத்தின் காரணமாகவே பாரதக் கலைகள் மெய்த்தேட்ட மரபுடன் பிணைந்து நிற்கின்றது.

உலக அளவில் படைப்பாளிகளை இரு உலகப்போர்கள், இந்திய அளவில் சுதந்திரத்துக்குப் பிறகான சோர்வு நிலை, இவை போல பல விஷயங்கள் கூடி, பாரதக் கலைஞர்கள் அனைவரையும் சில மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்தன. இலக்கியத்திலும் நவீனத்துவமாக முகிழ்ந்த அந்தப் போக்கு தமிழில் சுந்தர ராமசாமி அசோகமித்திரன் வழியே சிகரம் தொட்டது. மலையாளம் கன்னட மொழிகளை ஒப்பு நோக்க தமிழில் நவீனத்துவம் சில மடங்கு ஒளிகுன்றிய ஒன்றாகவே தோற்றம் தருகிறது. காரணம் தமிழ் ஆளுமைகளின் மரபு மீதான பாராமுகம். [பா.சிங்காரம் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்துவிட்டால்] உதாரணமாக ஓ.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலின் முழுமை இசைவில் கலாபூர்வமாக தொழில்படும் தத்துவ பலம் தமிழின் நவீனத்துவ நாவல் எதுவும் சாதித்ததில்லை. நவீனத்துவ நோக்கிலான நாவலான ஏணிப்படிகள் நாவலுக்கு பின்பாக தகழி எழுதி நிறுத்தியது கயிறு எனும் ஒட்டுமொத்த வாழ்வையும் அள்ளமுனையும் பாவனை கொண்ட பெருநாவல். மண்ணும் மனிதரும் எழுதிய காரந்த் தான் அழிந்தபிறகு எழுதினார். நவீனத்துவத்துக்கு முன்பான செழுமையான இலக்கிய மரபு சகோதர மொழிகளில் உண்டு. தமிழில் இந்த நிலை இல்லை. ஆகவேதான் இங்கே மரபிலிருத்து தன்னை துண்டித்துக் கொண்ட நவீனத்துவம் கொண்ட வீர்யம் பிறமொழிகளை ஒப்புநோக்க பலவீனமாக காட்சி தருகிறது.

விஷ்ணுபுரம் நாவல் வெளியாகி இந்த நவீனத்துவம் கண்ட வடிவ உள்ளடக்க பார்வை நோக்கில் ஒரு உடைவை நிகழ்த்தியது. இந்த வாழ்வின் பொருள் என்ன எனும் வினாவை, விண்ணை நோக்கி கன்மதம் உமிழும் எரிமலை வாய் போல தகிக்க தகிக்க எழுப்பியது. நவீனத்துவம் கையாண்ட அதே வினா. அதில் இத்தனை தகிப்பு குடியேறியது எப்படி? மகத்துவம் நோக்கியதான நமது ஆத்மீக மரபின் பின்னணியில் அந்தக் கேள்வியை விஷ்ணுபுரம் பொருத்தியதே காரணம். பாரதி வழியே துவங்கிய நவீன தமிழ்க் கவிதை மரபிலும் தொடர்ந்த, மரபிலிருந்து வெளியேறும் போக்கில், அதன் காரணமாகவே உவகையோ, துயரோ அதன் ஆத்மீகசாரமான ஒன்றிலிருந்து கவிதைகள் தம்மை துண்டித்துக் கொள்ளும் நிலையும் நிகழ்ந்தது. [மரபின் மீதான பயிற்சியுடன், அதை எஞ்சி நிற்கும் இருள்முகமாக மட்டுமே காணும் இன்றைய கண்டராதித்தன் கவி உலகு, தத்துவமற்ற ஆனால் தத்துவநோக்கினைக் கொண்டு, விலகல் கூடிய தன்மையுடன் ‘சாரமான’ ஒன்றினை அணுகிப் பார்க்கும் முன்னோடிக் கவி தேவதச்சன் போன்ற விதிவிலக்குகளும் உண்டு] இந்தப் போக்கில் உடைப்பை நிகழ்த்தியோர் என பிரமிள், தேவதேவன், அபி இவர்களை சொல்லலாம். நவீனத்துவ கவிதை அதுவரை கையாண்டவற்றிலிருந்து வேறுபட்டு, குறிப்பிட்ட தருணத்தை குறிப்பிட்ட உணர்வுகளை மொழியை ஆத்மீக சாரம் ஒன்றின் பின்புலத்தில் கொண்டு சேர்த்து கலை வெற்றியையும் சாதித்த கவிதைகளை நல்கியோர் என இம்மூவரை சொல்லலாம்.

மொழியாளுமை, கொண்ட உணர்வின் உண்மையும் தீவிரமும், பிரிதொன்றிலாத தன்மை, அளிக்கும் அர்த்த சாத்தியங்கள், காலத்தை உதறி நிற்கும் உள்ளடக்கக் கூறு, மீண்டும் மீண்டும் ஈடுபடச்செய்யும் வசீகரம் கொண்ட [வடிவம் உள்ளிட்ட] புதுமை, இவை கூடி நிகழ்த்தும் உன்னதமாக்கல், கலைவெற்றியைத் தீர்மானிக்கும் இக்காரணிகள் முழுமையாகப் பொலிந்த நல்ல பல கவிதைகளை எழுதிய, தேவதேவன், பிரமிள், அபி எனும் இம்மூவரில் இவர்களின் கவியுலகில் தொழிற்படும் ஒத்த தன்மைகளுக்கு இணையாகவே ஒவ்வொருவரிலும் தனித்தன்மைகளும் உண்டு. கோட்பாட்டு விமர்சகர்கள் ‘படிமக்’ கவிஞர், ‘அருவக்’ கவிஞர் இப்படி குறிப்பு ஒட்டிய பொட்டலங்களில் தனித்தனியே கட்டிவைத்திருக்கும் தனித்தன்மையல்ல அது. இப்படி பொட்டலங்களுக்குள் கட்டப்பட முடியாத மிக மெல்லிய வேறுபாடுகள் கொண்ட தனித்தன்மை. உதாரணமாக பிரமிளின் படிமங்களை திடல் மேல் பொழியும் ஆலங்கட்டி மழை என உவமித்தால், அபியின் படிமங்களை நதியில் மிதக்கும் ஆலங்கட்டிகள் என உவமிக்கலாம். பெருநதியால் சமன்காணும் குளிர்மையும் எடையும் கொண்ட ஆலங்கட்டி. தேவதேவன் கவிதைகளில் இலங்கும் புறவுலகை இதே நதியின் ஆலங்கட்டி எனக்கொண்டால், அபியின் புற உலகோ இருப்பும் இன்மையும் ஒன்றேயான அதிகாலைப் பனித்துளிக்கு ஒப்பானது.

அபி கவிதைகளின் சுட்டு நிலையும் முந்தைய இருவரை விடவும் வேறுபட்டது. பிரமிளின் பாலை கவிதையில் வரும் தன்னிலை, மிக வலிமையானது. உன் எனும் சுட்டை அடைப்புக்குறிக்குள் வைத்து அடையாளமிட்டு -(உன்) பெயர்-, என்றே கவிதைக்கு தலைப்பிட்டிருக்கிறார் பிரமிள். தேவதேவனின் ‘நான்’ ‘நாம்’ இவை குறித்து அறிவோம். ‘ஆத்மீகமான நான்’ என்பதன் பிரகடனமாகவே ஒலிக்கிறது அவரது – அது இருக்கிறது- எனும் தலைப்பிட்ட கவிதை. அபி கவிதைகளில் வரும் நான், நீ, அவன், சுட்டுக்கள் எல்லாமே ஒரு வகையில் கவிஞர் இசை குறிப்பதைப் போல தற்சுட்டுக்கள்தான். இந்த ‘தான்’ என்னவாக இருக்கிறது என்று அவதானித்தால், அதன் பாவனை அந்த கிராதமலை பைராகியின் ‘தான்’ போன்ற ஒன்று என சொல்ல முடியும். தன்னை ‘இது’ என்றும் தன்னை உள்ளிட்ட பிறவற்றை ‘அது’ என்றும் சுட்டும் ஒரு தன்னிலைப் பார்வை அது. அது போன்ற ஒன்றே அபி கவிதைகளின் சுட்டு நிலை. இதன் தொடர்ச்சி என்றே அவரது கவிதைகளில் முன்னூற்று அறுபது பாகை சுழலும் நோக்குநிலையும் இலங்குகிறது.

”உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு என்னவிதமான தயாரிப்புகள் தேவை” என்று எழுப்பப்பட்ட வினாவுக்கு ”வேண்டுமானால் குழந்தைமையின் தூய அறியாமையோடு அணுகிப் பாருங்கள்” என்றொரு பரிந்துரையை அபி அளித்திருக்கிறார். கவிஞர் இசை, தன்னியல்புடன் அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் ஞானத்தின் தாடி மண்டி இருந்தால் நல்லது என்று அந்தப் பரிந்துரைக்கு மேலுமொரு அடிக்குறிப்பை இணைக்கிறார். ஒரு வாசகனாக அபி கவிதைகளின் குறிப்பிட்ட சில கவிதைகளை, அதன் அர்த்த சாத்தியங்களை, விரிந்ததொரு உணர்வுப்புலத்தில் வைத்து ரசிக்க, அவற்றை விஷ்ணுபுரம் எனும் புனைவு வெளி கையாளும் தவிப்புகளின் உணர்வுக் கொந்தளிப்புகளின் பகைப்புலத்தில் பொருத்திப்பார்த்தேன்.

ஏன் விஷ்ணுபுரம்? இலக்கியத்துக்கு வாழ்வை, நிகர் வாழ்வின் உறவு சிக்கல்களை, உணர்வுத் தவிப்புகளை உரைகல் எனக் கொள்ளலாம்தான். நிகர்வாழ்வைக் காட்டிலும் பலமடங்கு செறிவான வாழ்க்கைத் தருணங்களும் உணர்வுத் தருணங்களும் கொண்ட புனைவுவெளி அது, மகத்தான துயரங்களின், உவகைகளின், சரிவுகளின், தோல்விகளின் இலக்கியசாட்சியம் விஷ்ணுபுரம். எனவே ஒரு வாசகர் வாசிக்கக் கிடைக்கும் எந்த கவிதைத் தருணத்தையும் விரித்துப் பொருள் கொள்ளவோ, வாசித்தவற்றை ஈடு செய்யுமொரு கவிதைத் தருணமோ உணர்வுத்தருணமோ விஷ்ணுபுரத்தில் கண்டடைந்துவிட முடியும். வாழ்வைமதிப்பிடுவது புனைவின் பணி எனில், புனைவைக் கொண்டு மற்றொரு புனைவை மதிப்பிடுவதோ, ஒரு புனைவைக் கொண்டு மற்றொரு புனைவை ரசிக்கப் புகுவதோ, ரசனை செல்லும் பாதைகளில் ஒன்றுதான்.

விஷ்ணுபுரம் நாவலின் துவக்கத்தில், பிங்கலன் வசீகரிக்கும் குளுமையைத் தீண்ட எண்ணி, நெருப்பை தொட்டுப் பார்ப்பான். அவனது ஆத்மீக தத்தளிப்புகளின் துவக்கப்புள்ளி அதுதான். அதிலிருந்து கீழ்க்கண்ட இந்த கவிதைக்கு வருவோம்

நெருப்புத் துண்டென இரும்பு

கனியும் அதுவே

நாம் யார்

நமது பசி எத்தகையது

சொல்லும் அது.

தேவதேவனின் சமீபக் கவிதை ஒன்றின் சில வரிகள் இவை. விஷ்ணுபுரம் பிங்கலன் தவிப்புகளின் சித்திரங்கள் வழியே கடந்து வந்த ஒரு வாசகனுக்கு மேற்கண்ட தேவதேவனின் வரிகள் சுட்டும், கிளர்த்தும் உணர்வுகளின் தாக்கம் [இந்தப் பகைப்புலம் காரணமாக] தனித்துவமான பரவசம் அளிப்பது.

இந்தப் பின்னணியில், விஷ்ணுபுரம் நாவலின் உணர்ச்சிப்புலத்தில் அபியின் குறிப்பிட்ட சில கவிதைகளைப் பொருத்தி, அதன் அர்த்த சாத்தியங்கள் அளிக்கும் உணர்வு நிலைகளை ரசிக்கப் புகுவோம்.

*

இரண்டு

மாலை – எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி

பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
O

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?.

‘இது’ என்ன? இந்த உடல், இந்த உயிர், இந்த ஜடப்பிரபஞ்சம், உடல்கொண்டு பிறந்து மாய்ந்து இதில் நிகழும் வாழ்வுப் பெருக்கு, இவற்றைக் கட்டிவைக்கும் காலம், இவையெல்லாம் என்ன? இவை எங்கிருந்து வந்தன? இதன் நோக்கம் என்ன? இவற்றை தொட்டுத் தொட்டு ஆய்ந்து விடை தேடித் தவிக்கும் ‘இது’ என்ன? எனும் வினாவின் மீதான விசாரனையே விஷ்ணுபுரத்தின் ஞானசபைப் பகுதி. ‘இது’ என்ன? எனும் வினா அன்றாடத்தில் புழங்கி மறையும் எளியவினா அல்ல. சாரமான ஒன்றை நோக்கி, அந்த சாதகனை, கொண்ட ஆற்றல்கள் அத்தனையும் கொதிக்கவைத்து திரட்டி மையம் கொள்ள வைக்கும் வினா.

கோடியில் ஒருவருக்குள் எழும் வினா. அவரை ரமணர் என்றாக்கும் வினா. யோகி ராம்சுரத்குமாருக்கு, ஒரு சிறு குருவியின் மரணத்தின் வழியே இந்த வினா அவருள் உதித்து அலைக்கழித்தது என்றொரு கதை உண்டு. ஆம். சாமன்யருக்கு பொருட்டே இல்லாத ஒரு மரணம். ஒரு ஆன்மசாதகனுக்கோ இதுவரையிலான அவனைக் கொன்று, அவனுக்குள் பண்புபேதம் கொண்ட வேறொருவனை ஜனிக்கவைக்கும் மரணமாகிறது. இத்தகு ஆளுமைகளின் தத்தளிப்பு என்னவாக துவங்கி கொழுந்துவிட்டு எரிந்து அவனையே உயிர்கொண்டுஎரியும் எரிமலை ஒன்றின் வாய் என ஆக்குகிறது? அத்தகு தத்தளிப்பின் துவக்கத்தின் கவிதைவடிவே மேற்கண்ட கவிதை.

சாத்வீக கனத்துடன்

இது எது?

தாளவே இயலாத பாரம் இது. ஆனால் சாத்வீகமானது. தாளஇயலா சாத்வீகம் கொண்டு கனக்கும் ‘இது’ எது? ‘இதை’ அறிவதன்றி இனி அமைய இயலாது என்றொரு நிலை வருகிறதே. மெய்ப்பொருளில் அதன் பெயரே துயர். ‘மானுடத் துயர்’ பிற அனைத்து துயர்களும் இக் கடலின் சிறு துமிகளே. விஷ்ணுபுரம் நாவலில், ஞானசபைக்கு செல்லும் முன்பாக சார்வாகன் ஒருவருக்கு ஒரு பாலகன் சீடனாக கிடைப்பான். மழலை மாறாத, இன்னும் குழந்தைமை விலகாத பாலகன், ”குருவே அவ்வளவு பெரிய படியை நான் தொடாமலே தாண்டிக் குதித்துவிட்டேன் ”என்று சொல்லி சந்தோஷப்படுவான். அத்தகு பாலகனைத்தான் அந்த சார்வாகன் தனது சீடனாக்கி, வகுபடாத அந்த சாரத்தின் மந்திரத்தை அளிப்பார். பாலகன் அவன். மழலை மாறாதவன். அவனுக்கு என்ன தெரியும்? ‘மானுடத் துயர்’ அது என்ன என்பதை உணர்ந்தவனாக அந்த பாலகன் இருப்பான். ஆகவேதான் அவனைத் தேடி குரு வருகிறார்.

இருள் இருண்டுகாட்டிய வெளிச்சத்தில்

இடராத என் பாதங்களினடியில்

இது எது?

இருளே இருண்டு வெளிச்சமாகி நின்று,

பாதங்கள் இடராதபடி பாதையை காட்டும் இது எது?

இந்தப் பாதை எதனுடயது, இருளே இருண்டு நல்கும் வெளிச்சம் இது எதனுடயது?

வினாக்கள் கூர்மை கொண்டபடியே சென்று இறுதியாக மிஞ்சும் ஒரே வினா என்னவாக இருக்கும்? நான் யார். புத்தர் நான் யார் என்று வினவினார். பல்லாயிரம் வருடம் கழித்து ரமணருக்குள் அதே கேள்வி பிறக்கிறது. காலம்தோறும் இந்த வினா உடல்களை மாற்றிய வண்ணம் கிளர்ந்து கிளர்ந்து ‘சாரமான’ அந்த ஒன்றை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில்
பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்
நீராக இருந்தது
வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது
அதிலிருந்து
மகத்தான தவத்தால்
அந்த ஒன்று பிறந்தது.

[ரிக் வேத ஸ்ருஷ்டி கீத பாடல். மொழியாக்கம் திரு. ஜடாயு]

ரிக்வேதகவி கண்ட, இருளை இருள் மறைத்திருத்த ஆதியிலிருந்து, மகத்தான தவத்தால் பிறந்த, சாரமான அந்த ஒன்றை நோக்கி, இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில், இடராத பாதங்கள் நடக்கும் பாதை செல்கிறது. ரிக்வேதகால கவிமனமும் அபியின் இக்கவிதையும் சென்று கொண்டிருப்பது ஒரே பாதையில். மகத்துவம் நோக்கிய அதே பாதையில்.

இத்தகு துயர்மிகு வலிமிகு ‘அடிப்படை’ வினாவோடு தவிக்கும் தன்னிலை ஒன்றின் நிலமும் பொழுதும் என்னவாக அறியக் கிடைகிறது?

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி
பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்.

கோடியில் ஒருவருக்கு எனினும் அவருக்கு ஏன் எப்படி இந்த அடிப்படை வினாவாலான தவிப்பு உருவாகிறது? ஏதேனும் நிகழ்த்தவு அதன் பின் உண்டா? ஊழ். அதுமட்டுமே பதில். தேசமெங்கும் எவ்வுயிர்க்குமான பெருமழை பொழிந்தாலும் எவரோ ஒருவர் தலையில் மட்டும் வந்து இடி விழுகிறதே அப்படியான ஊழ். மிக அறிதாக [அதே ஊழ் தொழிற்பட்டால்] இந்த தவிப்பை ஆற்றுப்படுத்தும் குரு அவனுக்கு கிடைக்கக் கூடும். அந்த விஷ்ணுபுர பாலகனுக்கு குருவாக தேடி வரும் சார்வாகன் போல.

அந்த சீடனின் குறிப்பிட்ட தவிப்பின் பின்னணி கொண்ட வினாவுக்கு, அவனது குரு அளிக்கும் பதில் பிரத்யேகமாக அவனுக்குமட்டுமே ஆனது. பிறருக்கு அந்த பதில் ஏதும் அளிக்காது. ஆகவேதான் அந்த குருவின் சொல் வழியே மீட்சி அடையும் சீடனுக்கான அந்த குருவின் அதே சொல், பிறருக்கு மீட்சியை அல்ல, பொருளைக் கூட அளிக்காது. ஜென் கதைகளில் குருவிடம் கேள்வி கேட்கும் சீடன், குருவின் ‘குறிப்பிட்ட ‘பதில் வழியே அனுபூதியை அடைகிறான். அந்தக் கதையை கேட்கும் நாம். வெறும் கதை கேட்பவர்களாக மட்டுமே எஞ்சும் காரணி இதுதான்.

உள்பாடு.
இந்தப் பழக்கம்
விட்டு விடு.

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்கக் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்…
இந்தப் பழக்கம் விட்டுவிடு
முடிந்தால்
புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள் நுழைந்து
விடு.

இந்தப் பிரபஞ்சம் பெருவெடிப்பென நிகழ்வதற்கு முன்னர் ஒரு புள்ளியாக இருந்தது. இங்கு இப்போது நாம் காணும் புடவி, என்றோ காலாதீத காலம் ஒன்றில்

எங்கும் நீண்டு
எதையும் தொட்டிராத
எதையும் தொடாமல் திளைக்கும்
புதிய கை

ஒன்று தொட்டுத் திறந்த புள்ளிதானே. குரு வழிகாட்ட, சாதகன் வானத்திலோ பூமியிலோ கண்ட புள்ளியைத் தொட்டு அதன் முடி திறந்து உள்பாட்டின் உள்ளே நுழைந்துவிட்டால்? அங்கே விதிகள் வேறு, காலமும் வெளியும் இயங்கும் நியதிகள் வேறு. கனவன்று எனத் தோன்றும் கனவின் நியதிகள் கொண்டது அது.

காலம் – சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது.

இந்த ‘உள்’பாட்டில் காலம் என்னவாக இருக்கிறது? கலைத்தடுக்கப்பட்ட காலத்தில் நிகழ்வுகள் என்னவாக மாறுகின்றன?

ம்ருத்யோமா அம்ருதம் கமய என்று பிரார்த்தித்த கவி அறிவான் நோக்கமற்ற அந்த மகத்துவம் இன்றைய மரணத்திலிருந்து நாளைய மரணமிலாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்லுமென. மரணத்தை ‘இன்றில்’ வைத்து வாழ்வை ‘நாளையில்’ வைத்து விளையாடும் கரம் அதனுடையது. இங்கே எரித்து, அணைத்து, கரித்தழும்பு ஆற்றப்பட்ட சுள்ளி பசும் இலைகள் கூசி முளைக்க உயிர்க்கிறது. மரணத்தை ‘இன்றில்’ வைத்து ‘வாழ்வை’ நேற்றில் வைத்து காலத்தை கலைத்து சித்து விளையாட்டில் ஈடுபடும் இந்தக் கை யாருடையது?

சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுகள் என்கிறார் ராமகிருஷ்ணபரமஹம்சர். தண்ணீர் மேல் நடக்கும் சித்து விளையாட்டைக் கற்று என்ன பயன்? பத்து பைசா அளித்தால் படகோட்டி நம்மை கரை சேர்த்து விடுவானே. என்கிறார். மொத்த சித்து விளையாட்டுமே செல்லாத பத்துபைசா அளவுதான் மதிப்பு. ராமகிருஷ்ணருக்கு மட்டுமல்ல எந்த பரமஹம்சருக்குமே. இவற்றை விடுத்த சாதகன் மட்டுமே அநுபூதி எய்துவான் என்கிறார் ராமகிருஷ்ணர். இதை விடுத்தவனின் அடுத்தகட்ட பயணத்தின்பாற்பட்ட அக உலக சித்திரம் இது என்று கொள்ளலாம்.

மாலை – த்வனி

நான் வெட்டவெளியாகுமுன்பே
என்
தீர்மானங்கள்
கசிந்து
வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும்
நல்லது

அவசரமில்லாத ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின்
மீது
என்
வாழ்வை
மெல்லத்
தவழவிட்டேன்

வீட்டு முற்றத்தில்
கூழங்கற்களின்
நடுவே
ஓடைகளின்
சிரிப்போடு
வெளி-உள்
அற்று
விரிந்துபோகும்
என் வெட்டவெளி

விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத்
திரட்டி சுமந்து
வெற்றி
உலா போகிறார்கள்
விளக்கு
வரிசை மினுமினுக்க

உண்மையின்
அனைத்துச்
சுற்றுவாசல்களிலும்
புகுந்து
திரிந்து
திருப்தியில்
திளைக்கும்
என்
நண்பர்களுக்கு

கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம்
கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு

என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்

வெறுமைப் பாங்கான
எனது
வெளியில்
ஒளியும்
இருளும் முரண்படாத
என்
அந்தியின் த்வனி
த்வனியின்
மீதில்
அர்த்தம்
எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்
.

பற்றிக்கொள்ள ஏதுமற்றதொரு வெட்டவெளி. சித்துவிளையாட்டில் சிறந்தவனாகி நின்றால். வாயிலிருந்து லிங்கம் எடுக்கலாம். பைஜாமாவிலிருந்து தங்கக்காசு எடுத்து வீசலாம். ஆட்சியாளர்களுக்கு குறி சொல்லலாம். விளக்குகளின் வெளிச்ச மழையில் ஊர்வலம் போகலாம். இவை எல்லாமே இவற்றை விட்டுவிட்ட சாதகனின் பழைய நண்பர்கள். கொஞ்சம் தவறினால் போதும் வெற்றிடத்தை நிரப்பும் காற்றைப்போல இந்த சாதகனின் அக வெற்றிடத்தை இவை தம்மைக் கொண்டு நிரப்பி விடும். இவற்றுக்கு தனது வெளியை இழந்துவிடாதிருக்கவே சாதகர்கள் எங்கெங்கோ தப்பி ஓடுகிறார்கள். ரமணர் தனது சாதனா காலங்களில் புண்பட்ட ஒரு வனவிலங்கைப்போல ஓடி ஒளிபவராகவே இருந்திருக்கிறார்.

அவசரமில்லாத ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின்
மீது
என்
வாழ்வை
மெல்லத்
தவழவிட்டேன்


வீட்டு
முற்றத்தில்
கூழங்கற்களின்
நடுவே
ஓடைகளின்
சிரிப்போடு
வெளி-உள்
அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி.
 

முதன் முறையாக வாழ்வு என எதை உணர்கிறோமோ அதில் நிகழுமொரு பண்பு மாற்றம். அவசரமற்ற ஓடைகளின் ஓட்டத்தின் சிரிப்பை கேட்க முடிந்த செவி. காலநதி வழியே வடிவம் கொண்ட கூழாங்கற்கள். தவமோ தியானமோ காத்திருக்கும் கூழாங்கற்கள். இவற்றினிடையே மெல்லத் தவழும் வாழ்வு. அந்த வாழ்வின், அந்த அக உலகின் த்வனி இருளும் ஒளியும் முரண்படாத அந்தியின் த்வனி. வெறுமைப் பாங்கானது. முதல் ஆசுவாசம் இங்கே. இங்கு துவங்கும் மகத்துவத்தை நோக்கிய அந்த பாதையின் மேலான பயணத்தில், அதில் நிலைபெற்ற அனைவரும் இலக்கை அடைந்தேதான் தீருவார்களா? நிச்சயமில்லை எனும் இரக்கமற்ற பதிலையே விடையாக சொல்கிறது விஷ்ணுபுரம். பாதை தெரியும், இலக்கும் தெரியும், ஆனால் அதை நோக்கி நடக்க நடக்க இலக்கு அவனை விட்டு அதே மடங்கு வேகத்தில் விலகி சென்றுகொண்டே இருக்கும். அவனது பாதங்கள் முதுகுநோக்கி திரும்பியிருக்கும் நடையாளன் ஒருவனைக் கொண்டு, இந்தத் துயரை விஷ்ணுபுரம் சித்தரிக்கும். விஷ்ணுபுரம் நகரின் ஆத்மீகத் தோல்வியாளர்களில் ஒருவனின் தற்குறிப்புக் கவிதை என அபியின் -மாலை தணிவு- கவிதையை அணுக முடியும்.

என்னை இந்த பாரத ஆத்மீக பாரம்பரியத்தை உய்விக்கவந்த இரண்டாம் ரமணர் என நம்பிக்கொண்டு அதை நிறைவேற்ற முதலில் யோகம் தியானம் ஏதேனும் ஒன்றை பயிலும் நோக்கில் கோரஷ்டயான ஆசாமிகளுடன் திருவண்ணாமலையில் சுற்றிக்கொண்டிருந்த தினங்களில் ஒரு மௌனச் சாமியாரை சந்தித்தேன். பக்தர்கள் சூழவே எப்போதும் காட்சி தருவார். பக்தர்களின் கனவில் வந்து அவர் ஏதேதோ செய்து புகழ் பெற்றிருந்தார். நான் பார்த்த நாளெல்லாம் அவர் எதுவுமே செய்ய மாட்டார். சும்மா இருப்பார். ஆம் உண்மையாகவே ‘சும்மாவே’ இருப்பார். யாராவது ஊட்டிவிட்டு, குளிப்பாட்டி, காலைக்கடன் கழிக்கவைத்து, அனைத்தும் செய்வித்து அவரை அமர்த்தி இருப்பார்கள். கிட்டத்தட்ட கோமா நோயாளி போல. நெடுநாள் கழித்து வேறொரு சாமியார் வழியே இந்த சாமியாரின் உண்மை நிலை குறித்து அதிர்ந்து போனேன்.

இருபதுகளை தொடும் இளம் வயதில் இந்த திருவண்ணமலைக்கு வந்தவர். கால் நூற்றாண்டு தீவிரமான ஆத்மீக சாதகத்தில் ஈடுபட்டவர். என்ன பிசகோ. அதுவரை அவரை செலுத்திவந்த தீ. அவர் அப்போது அவரது உள்முக பயணத்தில் எங்கே வந்திருக்கிறாரோ, அங்கேயே அவரை அப்படியே விட்டுவிட்டு தணிந்து விட்டது. இனி எதுவுமே செய்வதற்கு இல்லை. லௌகீகமாக காமத்திலோ, ஆத்மீகமாக யோகத்திலோ கூட அவரால் அமர இயலாது. எதையும் செய்ய [தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்றாலும் கூட] அவருள் தன்முனைப்பு மீளாது. இப்போது அவர் காணும் புறம் அவருக்கு அகத்தில் என்னவாக பொருள்படுகிறது? தெரியாது. உயிர் மூச்சு நிற்கும் வரை அந்த இடைவெளியிலேயே அவர் இருக்க வேண்டியதுதான். அவர் இப்போது நிற்கும் பொழுது பகலும் அல்ல இரவும் அல்ல. மாலை. அவர் நிகழும் கணம் நிகழும்போதே நின்றுவிட்ட கணம்.

மாலை – தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு.

பசி என்பது தேவை. நிறைவு என்பது ஈடேற்றம். இங்கே பசியும் இல்லை ஈடேற்றமும் இல்லை. தன்னைத் தான் விழுங்கும் பாம்பைப்போல இரண்டும் ஒன்றாகி நிற்கும் தணிவு. வேறொரு விளிம்பைச் சுட்டிக்காட்டாத விளிம்பு. விஷ்ணுபுரம் நாவலின் துவக்க அத்யாயத்தில் ஒருவர் விஷ்ணுபுரத்தை தேடி ஆயுளெல்லாம் பயணிப்பார். கால்கள் நெக்குவிட மலைகளைக் கடந்து வந்து நிற்பார். அவர் முன் அவர் கடக்கவேண்டிய மற்றொரு மலை முன்வந்து நிற்கும். அது போன்றதொரு நிலை கொண்ட பயணத்தின் அகவயமான உணர்வின் சித்தரிப்பு. இங்கே முறிந்து நிற்கும் பயணம். திரும்பும் திட்டமிடலுடன் துவங்கிய பயணம்தான். [திரும்பிச் சென்று ஞானம் குறித்து விவாதிக்கலாம்] விவாத சொற்கள் கூட பாதைகண்டு திரும்புவதற்கு இட்ட அடையாளத்தில் மோதி திரும்பி வந்து விட்டது. ஒன்றுமே செய்வதற்கு இல்லை. நிகழும்போதே நின்றுவிட்ட கணம். எது அந்த சாதகனுக்குள் தணிந்ததோ, அந்த தணிவைத் தொட்டு குளிரத் துவங்கிவிட்டது அக்கணம்.

இவற்றைக் காட்டிலும் வலி மிகுந்த ஆத்மீக சரிவு ஒன்றினை, அஜிதன் எனும் பௌத்த சாதகனை முன்வைத்து சித்தரிக்கிறது விஷ்ணுபுரம். அது இத்தனை நஞ்சுப் பாதையையும் கடந்து வந்து, அமுதக் குளத்தில் குதிக்க வேண்டிய அக் கணம் தயங்கி நிற்பது எனும் நிலை. உப்புப் பொம்மை கடலில் குதிப்பதைப்போல என்கிறார் ராமகிருஷ்ணபரமஹம்சர். அந்த இறுதிக் கணம். அந்த நொடியின் திணிவும் தீவிரமும் என அபியின் -மாலை காத்திருத்தல்- கவிதையின் உணர்வு நிலையை வாசிக்க முடியும். மகத்துவம் நோக்கிய பாதையில், ஈடேற்றத்தை தொலைத்து, மகத்தான தோல்விக்குப் பிறகு இந்த வாழ்வை திரும்பிப் பார்க்கும் ஒருவனின் உணர்வு நிலை என்னவாக இருக்கும்?

காலம் – புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின

நிமிஷம் நாறும் நாள்கள்.

இனி அவன் உயிர்வாழும் இறுதி நாள்வரை ஒவ்வொரு நாளும் அதை ஆக்கிய நாறும் நிமிடங்களால் கவியும் ஒன்றாகவே அவனுக்கு இருக்கும். ரத்தம் சவமாகிக் கரைந்த செம்புழுதியின் நாற்றம். குறள் வழி கண்டால் சாமான்ய மனிதனுக்கோ ஒன்றேபோன்றதானநாள் என்று ஒவ்வொரு நாளையும் காட்டி உயிர் ஈரும் வாளாக வரும் காலம், மகத்தான தோல்வியை அடைந்த அசாத்திய மனிதனுக்கோ கண்ணில் விழுந்து உறுத்தும் குருதிவீச்சம் நாறும் புழுதியாக கிடக்கிறது.

இக்கணம்

என்னைப் பிளந்து செல்லும் வெறுமையின் சாரமென
அமைந்த நின் விழிப் புன்னகை…
இன்மையின் சாரமெனக் காலம்
எனும் இன்மையின் சாரமென
இன்மை.

விஷ்ணுபுரம் நாவலுக்குள் வரும் நெடுங்கவிதை ஒன்றின் சில வரிகள் இவை. அபியின் சில கவிதைகளை இப்படி விஷ்ணுபுரம் எனும் பெரும்புனைவின் கதா பாத்திரங்களான அஜிதன், திருவடி போன்றவர்களின் பித்தூரிய தியானப்பாடல்கள் கொள்ளும் பொருள் போன்றதொரு பின்புலத்தில் பொருத்தி, அவற்றின் அர்த்த சாத்தியங்களின் தீவிரத்தை ரசிக்கலாம் எனும் வகையிலான ஒரு ரசனைப் பரிந்துரை மட்டும்தான் இக் கட்டுரையே தவிர இதுவே அக்கவிதைகளை பொருள்கொள்வதற்கான ‘மேலான’ அளவுகோல் என்பதாக நான் வரையறை செய்யவில்லை என்பதை ‘குறிப்பிட்டு’சொல்லவேண்டும். விஷ்ணுபுரத்தின் கதாமாந்தர்களின் உணர்வு நிலைகளுக்கு ஒப்பான கவிதைஉலகை, வேதகாலம் தொட்டு இன்றும் தொடரும் மானுடத்தின் ‘மேலான’ தத்தளிப்புகளின் மொழிச் சாட்சியம் ஒன்றினை நவீனத் தமிழ்க் கவிதை மரபில் உருவாக்கி உலவ விட்ட கவிஞர் அபி அவர்களுக்கு, இந்த விஷ்ணுபுரம் நாவல் வாசகனின் அன்பும் வணக்கமும்

முந்தைய கட்டுரைஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
அடுத்த கட்டுரைகப்பல்காரனின் கடை