ஓர் உண்மைக் குரல்

 

நான் பொதுவாக சினிமா சம்பந்தமான செய்திகள்,பேட்டிகள் எதையும் படிப்பதோ பார்ப்பதோ இல்லை. இப்போதல்ல, இளமையிலிருந்தே. கல்லூரி இரண்டாம் ஆண்டுடன் சினிமாவுடனான என் உறவு முடிந்தது. அதன்பின் எண்பத்தாறு முதல் இரண்டு ஆண்டுக்காலம் கொஞ்சம் மலையாள சினிமா. அதன்பின் எப்போதாவது குடும்பச் சடங்காக சினிமா. பெரும்பாலான படங்களை அப்படியே மறந்துவிடுவேன். சினிமாச்செய்திகளை அறிந்துகொள்வதில்லை. தொடர்ச்சியாகப் பார்ப்பதில்லை என்பதனால் நடிகர்களின் முகங்களும் நினைவிலிருப்பதில்லை. ஆகவே எனக்கு எல்லா படங்களும் ஒருவகை திகைப்பான அனுபவங்களாகவே இருந்தன.

 

நான் அறியாமலேயே சினிமாவில் மிகப்பெரிய ஆறுகள் ஓடிச்சென்றிருக்கின்றன. தமிழில் பல புகழ்பெற்ற நடிகர்களின் ஒருபடத்தைக்கூட நான் பார்த்ததில்லை.என் அக்கறைகள் இலக்கியம் தத்துவம் என மாறிக்கொண்டிருந்தன. எண்பதுகளும் தொண்ணூறுகளும் நான் வெறிகொண்டு வாசித்துத்தள்ளியபடி, பித்தெடுத்து அலைந்தபடி இருந்த காலகட்டங்கள். சினிமா என ஒன்று தமிழில் நிகழ்ந்துகொண்டிருப்பதையே அறியாதவனாக இருந்திருக்கிறேன்

 

அன்று நான் தமிழில் சினிமாவுக்கு எழுதுவேன் என எவரேனும் சொல்லியிருந்தால் திகைத்திருப்பேன். [ஆனால் அன்றே ஒரு கேரள சோதிடர் அதைச் சொன்னார். நான் அவருக்கு நகைத்தபடி பதினைந்து ரூபாய் கட்டணம் கொடுத்தேன்]. லோகிததாஸ் என்னை சினிமாவுக்கு தரதரவென இழுத்துக்கொண்டுவந்தார். அங்கிருந்து பாலாவின் நான்கடவுள்.நேராக வசந்தபாலனின் அங்காடித்தெரு. இதோ பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.

 

உள்ளே வந்தபின் சினிமா என்னும் வாழ்க்கையைக் கவனிக்கத்தொடங்கினேன். இது வெளியே இருக்கும் வாழ்க்கையின் செறிவாக்கப்பட்ட ஒரு சிறுபகுதி. இந்த அளவுக்கு ஏற்ற இறக்கங்கள் கொண்ட, உணர்வுநாடகங்கள் கொண்ட உலகம் பிறிதுண்டா என்று தெரியவில்லை. இதன் சுழற்சிகள், கசப்புகள், ஏமாற்றங்கள், போராட்டங்கள், அதிருஷ்டங்கள் எண்ணற்றவை. ஆனால் பெரும்பாலான செய்திகள் உள்ளேயேதான் பேசப்படும். சினிமாச்செய்திகளாகப் பேசப்படுபவை சினிமாவின் தேவைக்காக உருவாக்கப்படுபவையும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுபவையும்தான். அவற்றில் சாரமேதுமில்லை.

 

சினிமா பற்றி பலவகையான ‘தொன்ம’ நம்பிக்கைகள் தமிழில் உண்டு. பெரும்பாலானவை சினிமாக்காரர்களின் வாழ்க்கையைப்பற்றி அவர்களே சொன்னவற்றிலிருந்து உருவாக்கப்படுபவை. மிகமிகக்குறைவாகவே அவை உண்மைசார்ந்தவை. ஏனென்றால் உண்மையை எழுத பல தடைகள். சினிமா என்பது சிறிய குடும்பம். அனைவரையும் மீண்டும் முகம்பார்க்கவேண்டியிருக்கும். ஆகவே எவரைப்பற்றியானாலும் நல்லதையே சொல்லமுடியும்.

 

வெற்றியடைந்தவர் தன் வெற்றிப்பாதையைத்தான் சொல்வார். தன்னை வெற்றிக்குப்பின் ஓர் ஆளுமையாகக் கட்டமைத்திருப்பார். அந்த ஆளுமையை ஒட்டியே தன் கடந்தகாலத்தை அவர் மறு ஆக்கம் செய்திருப்பார். அவையே அதிகமாகக் கண்ணுக்குப் படுபவை. தோல்வியடைந்தவர்களின் கூற்றுக்கள் அரிதாகவே பதிவாகின்றன. அவை கசப்புமண்டியவையாக இருக்கும். அவையும் திரிபடைந்தவையே

 

திரிபில்லாமல், சிரித்தபடி, இயல்பாக தன் சினிமா அனுபவங்களைச் சொல்லும் அகத்தியனின் இப்பேட்டியை தற்செயலாகப் பார்த்தேன். முழுக்கப் பார்க்கவைத்தது அதிலிருந்த உண்மை. காதல்கோட்டை உட்பட அவருடைய எந்தப்படத்தையும் நான் பார்க்கவில்லை, அக்காலத்தைய எந்தப்படங்களும் என் கண்களுக்கு பட்டிருக்கவுமில்லை. ஆனால் ஒரு குட்டிநாவல்போல ஒரு வாழ்க்கை இதன் வழியாக எழுந்துவருகிறது. ஒரு கனவின், போராட்டத்தின் கதை

 

அகத்தியன் சினிமாவுக்குள் கனவுகளுடன், கதைசொல்லும் திறமையுடன் வருகிறார். ஆனால் இங்கே கதை தேவையில்லை. கதைகளுக்காக கோடம்பாக்கம் தவிக்கிறது என்பது பொய். பழையகதைகளை மறுஆக்கம் செய்யும் தொழில்நுட்பம் மட்டுமே அன்றும் இன்றும் தேவையாகிறது. அதற்குக் காரணம் நம்முடைய வெகுஜன ரசனை.  அவர்கள் எப்போதுமே இட்லி சாம்பாரையோ பரோட்டா குருமாவையோத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அது கொஞ்சம் புதிதுபோல் தெரியவேண்டும்

 

அகத்தியன் மதுமதியை உருவாக்கியதும் அதையே அப்படியே வான்மதி ஆக்கியதுமெல்லாம் ஒருவகையான காலப்பதிவுகள். திரும்பத்திரும்ப கதைகளை கலைத்துக் கலைத்து அடுக்கி கட்டமைப்புக்களை உருவாக்கிக்கொண்டே இருந்திருக்கிறார். என்ன ஆகியிருக்கிறதென்றால் ஒருகட்டத்தில் அசலான கதையை உருவாக்கமுடியாதவராக ஆகிவிட்டிருக்கிறார். காதல்கோட்டை மட்டுமே அவர் நிறைவுறச் செய்த படம். கதையை கலைத்துக்கலைத்து ஒரு சூத்திரத்தைக் கண்டடைந்து வெற்றியடைகிறார். வெற்றிக்குப்பின் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் ‘கதைபண்ணல்’.  அது தோல்விகளை கொண்டுவர அவருடைய திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது

 

ஆனால் இதுவே இங்கே பெரும்பாலானவர்களின் கதை. ஆனால் கழிவிரக்கமில்லாமல், இயல்பான உற்சாகத்துடன், அறிவுஜீவிக்குரிய விலக்கத்துடன் அதைச் சொல்கிறார்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு -கடிதங்கள்