‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2

அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள் சுழன்றன. ஆரங்களில் உரசி அச்சு ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் ஒரு சொல்லை கேட்டான். விழித்துக்கொண்டபோது அச்சொல் என்ன என்பது மறந்துவிட்டிருந்தது. அவன் திகைப்புடன் அச்சொல்லுக்காக அகத்தை துழாவினான். அது எப்போதைக்குமாக என மறைந்துவிட்டிருந்தது. அவன் புலரியின் கருக்கிருளில் நிழலுருக்களாகச் சூழ்ந்திருந்த புதர்களை நோக்கியபடி கவளப்பாறைமேல் அமர்ந்திருந்தான்.

உமணர்களின் வண்டிகள் கோடைகாலம் முழுக்க அவன் ஊரை கடந்துசென்றுகொண்டிருக்கும். அவ்வோசையை ஊரார் விரும்பினர். இரவில் அது ஒவ்வொருவர் செவிகளிலும் என ஒலிக்கும். விரிந்து பரந்த பெருநிலம் துயிலும் குழவியிடம் அன்னை என அவ்வூரிடம் பேசுவதாக மிளையன் ஒருமுறை சொன்னார். வணிகப்பாதையில் இருப்பதனாலேயே அவ்வூருக்கு அயலவர் வந்தனர். செய்திகள் அணைந்தன. புதிய பொருட்கள் கிடைத்தன. கோடைக்குள் அவ்வூரில் ஒவ்வொருவரும் மழையெழுகையில் வேளாண்மை செய்வதற்கான பொருளை சேர்த்துவிட்டிருப்பார்கள். அவ்வப்போது வணிகர்குழுக்களுடன் இளையோர் கிளம்பிச் சென்றுவிடுவதுண்டு. அதுவும் நன்றே என அவர்கள் எண்ணினர். சென்றவர்கள் மிக விரைவிலேயே பொன் முடித்த மடிச்சீலைகளுடன் திரும்பி வந்தனர்.

அவனுள் அச்சொல் வந்தது. அது தோன்றவில்லை, அங்கேயே முன்னரே இருந்திருந்தது. அதை அவன் பலமுறை பார்த்த பின்னரும் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான். அவன் அதை நோக்கி உவகையுடன் சென்று திகைத்து நின்றான். ‘அஸ்தினபுரம்.’ ஓர் ஊரின் பெயர். எங்கோ இருக்கும் அறியாத ஊர். உமணர்கள் பேசிச்சென்றபோது அச்சொல் எழுந்ததா என்ன? அந்நிகழ்வு கனவில் விரிவதற்கு முன்பு எப்போதோ மெய்யாக நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் நினைவில் இல்லை. நினைவில் நிற்குமளவுக்கு அதில் ஒன்றுமில்லை. வெறும்பெயர். அவ்வப்போது செவிகளில் விழுவதுதான் அது. எவ்வகையிலும் அவன் உளம்கொண்டது அல்ல. செய்திகள் அவனுக்கு ஒரு பொருட்டெனத் தெரிந்ததே இல்லை. கதைகளை தொடர்ந்து கேட்க அவனால் இயன்றதேயில்லை. அவன் மானுடரையும் பொருட்களெனவே பார்த்துக்கொண்டிருந்தான். முகங்களின் தசையசைவுகளை, விழிதுள்ளல்களை, கையசைவுகளை, உடலில் எழும் மெய்ப்பாடுகளை. அவன் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே உணர்ந்ததில்லை.

செம்மஞ்சள்பெருக்கென காலை எழுந்தபோது அவன் அச்சொல்லுடன் கவளப்பாறை உச்சியில் நின்றிருந்தான். அஸ்தினபுரி. அச்சொல்லை உள்ளம் சொல்லிச்சொல்லி வெறும் தாளமென்றே ஆக்கிக்கொண்டிருந்தது. அதற்கு என்ன பொருள்? அச்சொல் தன்னுள் ஏன் எழுந்தது? அல்லது அது ஓர் உளமயக்கா? தேடிக்கொண்டிருந்ததன் சலிப்பால் சிக்கியதை அதுவென எண்ணிக்கொள்கிறேனா? இல்லை, முன்பொருமுறைகூட அப்படி ஒரு சொல் வந்து நின்றது இல்லை. அதுவே என்று தோன்றியதில்லை. அச்சொல் குறிக்கும் நகரத்தின் மெய்ப்பொருள்தான் என்ன? எண்ணி எண்ணிச் சலித்து வெம்மைகொண்ட வெயிலில் வியர்வை வழிய அவன் நின்றிருந்தான்.

பின்னர் குன்றிறங்கி வந்தபோது மேலும் சலித்திருந்தான். பொருளே அற்ற சொல். அதைச் சென்றடையவா இத்தனை காத்திருப்பு? ஆனால் ஒன்றை அவன் உணர்ந்தான். அவனுள் பெருகிப்பெருகி முகில்குவைகள் என முடிவிலாக் கட்டடங்களாக அமைந்திருந்த சொற்கள் அனைத்தும் மறைந்துவிட்டிருந்தன. அந்த ஒற்றைச்சொல்லே அங்கே திகழ்ந்தது. அவன் தன் முந்தைய எண்ணங்களை சென்று தொட பலமுறை முயன்றான். காற்றில் வீசிச் சிக்கிக்கொண்ட முட்புதர்களைப்போல ஒற்றைச்சிடுக்குப்பரப்பென ஆகிவிட்ட அச்சொற்களை நினைவுகூரவே இயலவில்லை. எனில் இதுவே அச்சொல். ஆனால் பொருளற்றது, ஒரு வெறும் இடம், கதைகளில் திகழுமொரு நகரம்.

அவன் கீழிறங்கி வந்தபோது எதிரே மிளையனை பார்த்தான். அவர் காலையிலேயே பனைமரத்தடிக்குச் சென்று கள் அருந்திவிட்டு கலயத்தில் மேலும் கள்ளை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவனைக் கண்டதும் “மேலே சித்தர் எவரும் இன்னமும் வரவில்லையா?” என்றார். அவன் “அஸ்தினபுரி என்றால் என்ன?” என்றான். அவர் திகைத்து “தொலைவு, நெடுந்தொலைவு” என்றார். அவன் உள்ளம் அதிர வாய் திறந்து நோக்கி நின்றான். “அது வடக்கே கங்கைக்கரையில் உள்ள மாநகர். மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. அழிவற்றது” என்று மிளையன் சொன்னார். “அங்கே துரியோதனன் என்னும் மாமன்னர் ஆட்சிசெய்கிறார். பாரதவர்ஷத்தின்மேல் புரவியுலா வேள்வியை அவர் இயற்றினார். அரசப்பெருவேள்வியை அதன்பின் நிறைவுசெய்து மும்முடிசூட்டிக்கொண்டார்.”

“ஆம், கேட்டிருக்கிறேன்” என்று அவன் முனகலாக சொன்னான். “நீ கேட்காத பல செய்திகளுண்டு… அஸ்தினபுரியின் முடியுரிமைக்கென ஒரு பூசல் நிகழ்ந்தது. மாமன்னர் துரியோதனனின் தந்தை திருதராஷ்டிரருக்கு உரியது மணிமுடி. அவருக்கு விழியில்லை என்பதனால் அது அவருடைய இளையோன் பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. திருதராஷ்டிரரின் மைந்தர் துரியோதனன் பதினெட்டு அகவைநிறைவை அடையும்போது மணிமுடி அவரிடம் வந்துவிடவேண்டும் என்பது அன்று அளிக்கப்பட்ட சொல்.” ஆதன் “தெரியும்” என்று சலிப்புடன் சொல்லி நடக்க அவர் பின்னால் வந்து “நீ அறியாதவை சில உண்டு… அவற்றையே சொல்லவந்தேன்” என்றார். “பாண்டுவிடமிருந்து துரியோதனனுக்கு மணிமுடி கைமாறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பிறவிநாள்கணக்கில் பாண்டுவின் மைந்தர் யுதிஷ்டிரனே மூத்தவர். ஆகவே அவருக்கே முடியுரிமை என்று சொல்லப்பட்டது.”

“அதையும் அறிவேன்” என்று ஆதன் சொன்னான். “நீ இன்னும் அறியாத ஒன்று உண்டு. அஸ்தினபுரியின் முடிப்பூசலை அத்தனை சிற்றூர்களிலும் பாணர்கள் பாடியிருப்பார்கள். அவர்கள் பாடாத ஒரு கதை உண்டு. என்னிடம் ஒரு முதிய பாணன் இக்கதையை சொன்னான்” என்று அவர் அவன் தோளை தொட்டார். “உடன்பிறந்தோர் போரிட்டு அழியலாகாதென்பதனால் சான்றோர் கூடி முடிப்பூசலை நாற்களம் விளையாடி முடித்துக்கொள்வது என்று முடிவுசெய்தனர். யுதிஷ்டிரன் தனக்குரிய பகடையை அமைக்கும்பொருட்டு அமைச்சர்களிடம் உசாவினார். அரசே, அறுதியாக வெல்வது அறமே என்று அவர்கள் சொன்னார்கள். அறத்தில் நின்று உயிர்துறந்த முனிவர் ஒருவரின் எலும்புகளால் உங்கள் பகடைகளை அமையுங்கள். அவை வெல்லற்கரியவை என்றனர்.”

அவன் நின்று செவிகொடுத்தான். மிளையன் “இக்கதையை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் தகுதியானவர்கள் மட்டுமே அறியத்தக்கது இது” என்று தொடர்ந்தார். “யுதிஷ்டிரன் கானகந்தோறும் முனிவர்களை தேடிச்சென்றார். தண்டகாரண்யத்தில் வேதம் முற்றோதும்பொருட்டு சென்று தங்கிய காத்யர் என்னும் முனிவரைப்பற்றி அவரிடம் சொன்னார்கள். அவர் வேதம் ஓதத்தொடங்குகையில் ஓர் உறுதிமொழி எடுத்தார். முற்றோதாமல் அந்த இடம்விட்டு அகல்வதில்லை என்று. அவருடன் நூற்றெட்டு முனிவர்கள் அவ்வுறுதிமொழியை எடுத்தனர். அவ்வாண்டு தண்டகாரண்யத்தில் மழை பொழியவில்லை. அடுத்த ஆண்டும் மழை பொய்த்தது. மூன்றாண்டுகள் முற்றாகவே மழை நின்றுவிட்டபோது பசுமை மறைந்தது. முனிவர்கள் ஒவ்வொருவராக கடந்துசென்றனர். எழுவர் மட்டுமே எஞ்சினர்.”

“அவர்கள் சிற்றுயிர்களைப் பிடித்து வேள்வியில் அவியாக்கி அந்த அவிமிச்சத்தை உண்டபடி வேதமோதுதலை தொடர்ந்தனர். பின்னர் சிற்றுயிர்களும் மறைந்தன. ஏழாமாண்டில் அனைத்து முனிவர்களும் விலகிச்செல்ல காத்யர் மட்டும் அங்கேயே இருந்தார். வேதத்தை அதன் அனைத்து கிளைகளுடன், அனைத்து துணைகளுடன், அனைத்து விளக்கங்களுடன், அனைத்து நீட்சிகளுடன் ஓதிமுடிக்கும் நிலையில் அவர் இருந்தார். ஒருதுளி நீரும் அங்கே எஞ்சாமலாயிற்று. உண்பதற்கு காய்ந்த சருகோ எறும்புகளோகூட அங்கே இருக்கவில்லை. இறுதியாகச் சென்றவர்கள் அவரிடம் எழுக, வருக என்று மன்றாடினர். அவர் வேதச்சொல்லில் இருந்து சித்தம் விலக்கவில்லை.”

“மெய்யாகவே இக்கதையை நீ கேட்டிருக்கமாட்டாய்” என்று மிளையன் சொன்னார். “காத்யர் தன் கையை வெட்டி அக்குருதியையே விடாய்நீராக உண்டார். தன் தொடைத்தசைகளை வெட்டி அவியாக்கி அந்த அவிமிச்சத்தையே உணவாகக்கொண்டார். வேதத்தை அவர் முற்றோதி முடித்ததும் வானில் மின்னலெழுந்தது. இடியோசை முரசொலி என முழங்க வெண்களிற்றில் இந்திரன் தோன்றினான். அவரை முகில்தேரில் ஏற்றி விண்ணுக்குக் கொண்டுசென்றான். அவருடைய உடல் மண்ணில் கிடந்தது. வான்நிறைத்துப் பெய்த மழையில் அது சேற்றில் புதைந்தது.”

“காத்யரின் எலும்புகள் இருக்குமிடத்தை முனிவர்களிடமிருந்து உசாவி அறிந்து யுதிஷ்டிரன் அங்கே வந்தார். ஏழுமுறை மண்ணை அகற்றியபோது எலும்புகள் அங்கே கிடப்பதை கண்டார். அவை வெண்பளிங்கால் ஆனவைபோல் தூய்மையாக இருந்தன. அவர் காத்யரின் தொடை எலும்பிலிருந்து தன் பகடையை உருவாக்கிக்கொண்டு அஸ்தினபுரிக்கு மீண்டார்” என்றார் மிளையன். “யுதிஷ்டிரன் முனிவரின் எலும்பாலான பகடையுடன் வந்திருப்பதை துரியோதனன் அறிந்தார். அதை வெல்லும் பகடையை உருவாக்கவேண்டும் என்று விழைந்தார். அதை கண்டுபிடிப்பது எப்படி என்று தன் நிமித்திகர்களிடம் கேட்டார். அரசே, காலவடிவமானது காகம். அளியற்றது. எங்கே அதுவும் இரக்கம் கொள்கிறதோ அங்கே அகழ்க என்று அவர்கள் சொன்னார்கள்.”

“அப்படியொரு இடத்தைத் தேடி துரியோதனன் வடபுலத்தின் வறுநிலத்தில் அலைந்தார். காகங்களின் எல்லையற்ற பசியை கண்டார். அதுவே காலப்பசி என்று உணர்ந்தார். வேள்வியன்னத்தை அவை திருடி உண்டன. மலத்தைக் கிண்டி பொறுக்கின. கைக்குழவியின் கையிலிருந்து உணவை தட்டிச்சென்றன. சிம்மத்தை துரத்தித்துரத்தி அதன் புண்ணைக் கொத்தித் தின்றன. சோர்ந்து தளர்ந்து அவர் ஒரு முள்மரத்தடியில் தங்கியபோது உடல்மெலிந்த நாய் ஒன்று தன்னை இழுத்துக்கொண்டு ஒரு சிறு மரத்தடியில் சென்று படுத்ததை கண்டார். அதைச் சூழ்ந்திருந்த காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. ஆனால் சென்று அதன் புண்களை கொத்தவில்லை. நாய் உயிர்விட்ட பின்னரும் அவை அணுகவில்லை.”

“அதுவே இடமென்று கண்டு துரியோதனன் அவ்விடத்தை அகழ்ந்தார். அங்கே ஓர் அன்னையின் எலும்புக்கூடு இருந்தது. அவள் நெஞ்சோடு கவ்விக்கொண்டு மடிந்த குழவியின் எலும்பும் பிரித்தறியமுடியாதபடி கலந்துவிட்டிருந்தது. அவ்வன்னை அருகிருந்த சிற்றூர் ஒன்றில் வாழ்ந்தவள். வற்கடம் வந்து அவ்வூர் மக்கள் கிளம்பிச்சென்றபோது அவள் கருவுற்றிருந்தாள். அவர்களிடம் அவளை ஏற்றிச்செல்ல ஊர்தியோ விலங்கோ இருக்கவில்லை. ஆகவே அவளை அவர்கள் கைவிட்டுச்சென்றனர். அவள் அங்கே கைக்குச் சிக்கிய சிற்றுயிர்களை உண்டபடி வாழ்ந்தாள். குழவியை ஈன்றெடுத்தாள். அக்குழவியுடன் அவள் அப்பாலைநிலத்தின் சாலையோரம் நின்றாள். அவ்வழி வணிகர்கள் வருவது நின்றுவிட்டிருந்தது. வழிதவறி வந்த ஒருவனை அருகழைத்து அவனை கல்லால் அறைந்து கொன்று சங்கைக்கடித்து குருதியுண்டாள். அக்குருதியை முலைப்பாலாக்கி தன் குழவிக்கு அளித்தாள். அவன் ஊனை வெட்டி சுட்டு உண்டாள். எஞ்சியதை வெயிலில் உலர்த்தி சேர்த்துக்கொண்டாள். அவ்வண்ணம் அவள் உயிர்வாழ்ந்தாள்.”

“அவ்வண்ணம் ஏழு வழிப்போக்கர்களைக் கொன்று ஏழு மாதம் அவள் அங்கே உயிர்வாழ்ந்தாள். ஒரு விலங்கோ ஊர்தியோ வருமென்றால் அங்கிருந்து கிளம்பிச்செல்லலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அங்கே எவருமே வராமலாயினர். நாற்பத்தெட்டு நாட்கள் அங்கே அவள் எவரேனும் வருவார்கள் என எதிர்பார்த்திருந்தாள். தன் உடலில் இருந்த இறுதித்துளி குருதியையும் குழவிக்குப் பாலென்று அளித்தாள். பின்னர் அந்த முள்மரத்தடியிலேயே உயிர்துறந்தாள். உலர்ந்து வற்றில் மண்ணில் புதைந்து வெள்ளெலும்பானாள். அவளுக்காக காகங்களும் இரங்கின. ஏனென்றால் அவளை அழைத்துச்செல்ல வந்த எமன் இரங்குவதை அவை கண்டிருந்தன.”

“அவள் எலும்பிலிருந்து பகடையை உருவாக்கிக்கொண்டு துரியோதனன் நகர்மீண்டார். அஸ்தினபுரி நகரில் மாபெரும் நாற்களப்போட்டி நடைபெற்றது. அதில் யுதிஷ்டிரன் உருட்டிய ஒவ்வொரு பகடையையும் துள்ளித்துள்ளி தோற்கடித்தது துரியோதனன் சார்பில் அவர் மாமன் சகுனி உருட்டிய பகடைகள். நூறுமுறை அவை வென்றன. யுதிஷ்டிரன் தன் நாட்டையும் இளையோரையும் துணைவியையும்கூட பணயம் வைத்து ஆடி இழந்தார். அவருக்கு உயிரையும் தம்பியரையும் துணைவியையும் அளித்து கானேகும்படி ஆணையிட்டார் துரியோதனன். நிலம்செழிக்க நாடுகொழிக்க அஸ்தினபுரியை ஆட்சிசெய்கிறார்” என்று மிளையன் சொன்னார்.

“கானேகிய பாண்டவர்கள் உளமுடைந்திருந்தனர். அவர்கள் காட்டில் வசிட்டரை கண்டனர். யுதிஷ்டிரன் துயருடன் ஏன் என் பகடைகள் தோற்றன, வேதமாமுனிவர் தோற்கும் காலம் வந்தமைந்துவிட்டதா என்ன என்று கேட்டார். வசிட்டர் சொன்னார். இன்றல்ல என்றும் பசித்தவர்களுக்கே அறம் இரங்கி வரும். சொல்திகழ்வதற்குரியதல்ல நிலம், உயிர் தழைப்பதற்குரியது என்று. ஆனால் சொல் அல்லவா என்றும் நிலைகொள்வது என்றார் யுதிஷ்டிரன். அப்படியென்றால் ஓடு, இனி சொல்லைத் தின்றே உயிர்வாழ் என்றார் வசிட்டர். என் சொல்லில் உண்மை இருந்தால் அது எனக்கு அன்னமும் நீரும் ஆகுக என்றார் யுதிஷ்டிரன்.”

“அவர்கள் காட்டில் அலைந்தனர். பசித்தபோது யுதிஷ்டிரன் வானைநோக்கி வேதச்சொல்லால் ஆணையிட்டார். விடாய்நீருக்கு வேதச்சொல்லையே எடுத்தார். சொல் சொல்லென்றே இருந்தது. அன்னம் அதை அறியவே இல்லை. அவர்கள் காட்டில் பசித்து அலைந்து உயிர்விட்டார்கள். அவர்களின் உடல்களைக் கவ்வி இழுத்து நரிகள் உண்டன. யுதிஷ்டிரனின் எலும்புகளை கவ்விச் சப்பிய நரி ஒன்று தன் குழந்தையிடம் இதற்கு எரிபுகையின் மணம் இருக்கிறது. அடுமனையாளன் போலும் என்றது. அருகே நின்ற முதிய நரி அவன் வேதவேள்விகளில் அமர்ந்து உடல்நிறைத்தவன், அஸ்தினபுரியின் அரசனாக இருந்தவன் என்றது. நல்லவேளை, அவன் அரசனாகவில்லை. இல்லையேல் அஸ்தினபுரியின் மக்கள் புகையுண்டு உயிர்வாழ வேண்டியிருந்திருக்கும் என்றது அன்னைநரி. குழவிநரி வான்நோக்கி மூக்கை நீட்டி ஊளையிட்டுச் சிரித்தது.”

ஆதன் சிரித்து “நல்ல கதை, மிகப் புதியது” என்றான். “நான் இதைக் கேட்டு நெடுநாட்களாகின்றது. இதை இப்போதுதான் சொல்கிறேன்” என்றார் மிளையன். “நல்ல கதை, பொருளுள்ளது. அரசசபைகளில் இதைச் சொல்லும்படி பாணர்களிடம் சொல்லவேண்டும்.” மிளையன் “அவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்” என்றார். “அவர்களுக்கென்ன? அவர்கள் எல்லாவற்றையும் பாட்டாக ஆக்கிவிடுகிறார்கள். பாட்டில் வருவன எல்லாம் பழங்கதை என அரசர்கள் எண்ணுகிறார்கள். பழங்கதை என்பது சித்திரத்துப்புலி, பதுங்கும் பாயாது” என்றபின் “நீ அஸ்தினபுரியைப்பற்றி என்ன கேட்டாய்?” என்றார். “என் நினைவில் அச்சொல் எழுந்தது” என்று அவன் சொன்னான். “அது நெடுந்தொலைவில் உள்ளது… தொலைவு என்றால்…” அவர் திரும்பி வடக்கே நோக்கி “சென்றுகொண்டே இருக்கவேண்டிய தொலைவு” என்றார்.

அவன் அங்கேயே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். “இல்லத்திற்குத்தானே, நானும் வருகிறேன் வா” என்று மிளையன் அழைத்தார். அவன் அவர் சொற்களை கேட்கவில்லை. அங்கே நின்று அவர் சுட்டிய திசையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பெருகியெழுந்த அலை அமைந்ததும் அவன் உணர்ந்தான் தொலைவு என்பது ஒரு ஊர் என ஆகிவிட்டிருந்தது. அவர் மேலும் அப்பால் சென்று நின்று உரக்க “என்ன கிளம்பவிருக்கிறாயா? அஸ்தினபுரிக்கா போகிறாய்?” என்றார். அவன் திடுக்கிட்டுத் திரும்பி அவர் விழிகளை பார்த்தான். அதிலிருந்த நச்சுப்பகடி அவனை விழிதளரச் செய்தது. “காசியும் கயிலையும் இவ்வாறு பலரை அழைப்பதுண்டு… முதல்முறையாக அஸ்தினபுரி ஒருவரை அழைக்கிறது. நன்று, அதற்கு உன்னை தேவைப்படுகிறது போலும்” என்றார்.

அவன் நெடுநேரம் அங்கேயே நின்று வெயில் எரியத்தொடங்கிய வடதிசைச் செம்புலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். கோடைகாலத் தொடக்கம், உமணர்களின் வண்டிகள் வரத்தொடங்கிவிட்டிருந்தன. உப்பை அளித்து சிற்றூரின் பொருட்களை பெற்றுக்கொள்பவர்கள். பின்னர்தான் கப்பல்பொருட்களைக் கொண்டுவருபவர்களின் வண்டிகள் வரும். மக்கள் கையிலிருக்கும் பொருளைக் கொடுத்து முதலில் உப்பை வாங்கிக்கொள்வார்கள். இந்த வண்டிகள் எங்கே செல்கின்றன? உமணர்களுக்கு நாட்டு எல்லைகள் இல்லை. அவர்கள் செலுத்தும் சுங்கத்தால் அனைத்து நிலங்களுக்கும் உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள். இவர்கள் பாண்டிய நாட்டுக்குள் செல்வார்கள். அதற்கும் அப்பால் நெடுந்தொலைவில் சோழநாடு. அப்பால் கீழைப்பல்லவநாடு. வேங்கடம். அதற்கும் அப்பால்…

 

அவன் திரும்பி ஊருக்குள் வந்தபோது அனைவர் விழிகளும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அதை அவன் உடலே உணர்ந்தது. எவரும் எதுவும் பேசவில்லை. ஊரில் அனைவருக்குமே அவனை காணாமல் கடந்துசெல்லும் கண்கள் வாய்த்திருந்தன. அன்று அத்தனை விழிகளும் அவன்மேல் பதிந்தன. நிலைத்து அவன் கடந்துசெல்வதுவரை நீடித்தன. நோக்குகள் உடலைத் தொடும் என அவன் அன்று உணர்ந்தான். ஒருவர் அவனைக் கண்டதும் விந்தையான கனைப்பொலி ஒன்றை எழுப்பினார். ஒருவர் இன்னொருவரிடம் ஒரு சொல் உரைத்தார்.

தன் சிற்றில் திண்ணையில் அமர்ந்திருந்த காரிக்கிழவி மட்டும் எழுந்து கைநீட்டி “அறிவில்லாதவனே, அந்த நச்சுக்கிழவன் சொன்னதைக் கேட்டு அஸ்தினபுரிக்கா செல்லப்போகிறாய்?” என்றாள். அவன் திகைத்து அவளை நோக்கிவிட்டு தலைகுனிந்து நடந்தான். “அவன் இங்கிருந்து ஒவ்வொருவரையாக கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கும் பேய். அவன் மட்டும் இங்கிருந்து அகலவே மாட்டான்… கீழ்மகன் சொல் கேட்டு எவரும் நலமடைந்ததில்லை…” என்று காரிக்கிழவி அவன் முதுகுக்குப் பின் கூவினாள். அவள் அவன் தந்தையின் சிற்றன்னை. “இரும்பை பொன்னாக்குகிறேன் என்று உன் தந்தை செத்தான். நீ எதை பொன்னாக்கப் போகிறாய்?” என்று அவள் ஓலமிட்டதை அவன் கேட்டான். “குலதெய்வங்களே, இக்குடியைப் பற்றியிருக்கும் அந்தப் பேயை ஓட்டமாட்டீர்களா? இன்னும் எத்தனை தலைகொள்வீர் நீங்கள்?”

அவனுக்கு எதிரே உருளியில் ஆலயப்படையல் அன்னத்துடன் வந்த ஊரந்தணர் கௌசிகர் “கிளம்புவது நன்று. எதன்பொருட்டென்றாலும். மீண்டு வந்தாலும் நன்று, வராவிடிலும் நன்று. ஆனால் கிளம்புகையில் தெளிவிருக்கவேண்டும். எங்கு செல்வதென்று, எதன்பொருட்டு என்று. தெளிவில்லாமல் கிளம்புபவனை அலைக்கழித்து அழிப்பவை எட்டுத் திசைகளும் என நூல்கள் சொல்கின்றன” என்றார். அவன் நின்று அவர் சொல்வதை கேட்டான். “என் சொற்களுக்கு என்ன பயன் என்று நான் அறியேன். உன் தந்தையும் என்னை செவிகொண்டதில்லை. நான் சொல்லவேண்டியதை ஒருபோதும் தவிர்த்ததில்லை” என்றார். அவன் பெருமூச்சுடன் நின்றான்.

“அஸ்தினபுரிக்குச் செல்வதாகச் சொன்னார்கள்” என்று அவர் தொடர்ந்தார். “அவ்வண்ணம் ஒரு நகரம் மெய்யாகவே அங்குள்ளதா என்பதே ஐயம்தான். தொல்கதைகளில் அவ்வண்ணம் பலநூறு பெருநகர்கள் உள்ளன. அவை மானுடர் சொல்லிச்சொல்லி மொழியில் உருவாக்கியவை. நாம் இளமையில் அந்திமுகிலில் மாபெரும் மாடமாளிகைகள் கொண்ட நகர்களை பார்ப்போம். என்றேனும் விண்ணில் பறந்தேறி அங்கு சென்றுவிடவேண்டும் என கனவு காண்போம். அதைப் போன்றதே உன் கனவும். விண்ணில் இருப்பது முகில் எனும் மாயத்தோற்றம். மண்ணிலிருப்பவர்களுடன் தெய்வங்கள் அவ்வாறு விளையாடுகின்றன. அதற்கப்பால் நான் உன்னிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை.”

அவன் “அந்நகருக்குச் சென்றுவந்தவர்களும் உள்ளனர்” என்றான். “ஆம், அவ்வண்ணம் ஒரு நகர் இருக்கக்கூடும். சொல்லப்போனால் களிற்றுநகர் என பல நகர்கள் உள்ளன. ஆனால் நீ அங்கே சென்று காணப்போவது நீ எண்ணியிருக்கும் அஸ்தினபுரியை அல்ல” என்று அவர் சொன்னார். “கதைகள் நமக்குத் தேவை. கதைகள் இல்லையேல் தொன்மையும் அறமும் நிலைகொள்வதில்லை. ஆனால் கதைகளை நாம் போர்வையென வைத்திருக்கவேண்டும். என் தந்தை அடிக்கடி அதை சொல்வார். குளிருக்கு எடுத்துப் போர்த்தியபின் மடித்து பெட்டிக்குள் வைத்துவிடவேண்டும். உச்சிக்கோடைவெயிலில் போர்த்திக்கொண்டு அலைந்தால் பித்தன் என்றே சொல்வார்கள்.” அவன் புன்னகைத்துவிட்டு மேலே நடந்தான்.

இல்லத்தில் முகப்பில் அவன் காலடியோசை கேட்டதும் அன்னை வெளியே வந்தாள். அவன் கால் கழுவ நீர் கொண்டுவந்து வைத்தாள். அவன் தன் அன்னை ஏதேனும் சொல்வாள் என எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஒருசொல்லும் உரைக்கவில்லை. அவளும் அறிந்துவிட்டிருந்தாள் என்பதை அவளுடைய அசைவுகளே காட்டின. வழக்கம்போல் அவனுக்கு உணவை எடுத்துவைத்தாள். அவன் உண்ண அமர்ந்ததும் நீர் ஊற்றியபடி அருகே அமர்ந்தாள். அவள் ஏதேனும் சொல்வதற்காக அவன் காத்திருந்தான். அவள் ஏதேனும் சொல்லப்போகிறாள் என்னும் உளத்தோற்றமேகூட தன்னிடம் எழவில்லை எனக் கண்டு அவன் விழிதூக்கி நோக்கினான். அவள் கண்களைக் கண்டதும் திகைத்தான். உடனே விழிகளை தழைத்துக்கொண்டான். அதுவரை அவன் கைகள் சோற்றை அளைந்துகொண்டிருந்தன. அள்ளி அள்ளி அதை உண்டான். எழுந்து கைகழுவிக்கொண்டு சென்று திண்ணையில் அமர்ந்தான்.

அவள் வெளிவருவாள், ஏதேனும் சொல்வாள் என அப்போதும் அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவ்வண்ணம் நிகழாதென்றும் அகத்தே அறிந்திருந்தான். அவள் விழிகளை மீண்டும் நினைவிலெடுக்க அஞ்சினான். அன்று முழுக்க அப்படியே திண்ணையில் அமர்ந்திருந்தான். நூறுமுறை அந்த நோக்கைச் சென்று தொட்டு திடுக்கிட்டு மீண்டான். மெல்ல கண்ணயர்ந்து பக்கவாட்டில் விழுந்தான். கனவில் அக்கண்களை மேலும் அருகே கண்டான். எழுந்தபோது தெளிந்துவிட்டிருந்தான். அவற்றிலிருந்தது விடுதலை. நெடுங்காலம் வளைத்துக் கட்டப்பட்டிருந்த கழையின் நிமிர்வுபோல் ஒன்று. அவன் அப்போது உணர்ந்தான், அவனால் அவ்வில்லத்தில் அதற்குமேல் தங்க முடியாது என்று.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்
அடுத்த கட்டுரைஅமிர்தம் சூர்யா – விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2