சோற்றுக்கணக்கு -கடிதங்கள்

அறம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம்.

நான் கல்லூரி ஆசிரியர். கணிதவியல். விவசாய  குடும்பம்.

உங்கள் எழுத்து நடை அளிக்கும் சித்திரங்களும்  கதாபாத்திர சிந்தனை ஓட்டங்களும்  எனக்கு மிகவும் பிடித்தவை.

இன்று அம்மா சமையல் செய்யும்போது  எடுபிடி வேலையோடு `சோற்றுக்கணக்கு’ சிறுகதையை சொல்லிக்கொண்டு இருந்தேன்.

நான் : உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான் பாத்துக்கன்னு லெட்டரை படிக்கிறான். யோசிச்சு யோசிச்சு களைச்சு போய் தூங்கிடுறான்.

அம்மா : அப்புறம் என்ன பண்றான் ?

நான்  : நீங்க சொல்லுங்க. அவன் என்ன பண்ணனும் ?

அம்மா : டேய் சொல்லுடா, முடிவை .

நான் : கதையை விடுங்க. தர்மம்னு ஒண்ணு  இருக்குல்ல? அது என்னனு சொல்லுங்க.

அம்மா : இந்த ரசத்தை கொண்டு போய் அங்க வை.

நான் : ம்

அம்மா : அந்த கரடிமுடிக்காரர் சும்மாதான இவனுக்கு சாப்பாடு  போட்டாரு. அப்போ, அந்த ராமலட்சுமியை இவன் கட்டிக்கிறதுதான் முறை .

எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

 

வி.பாலக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

சில விழுமியங்களைப் பற்றி நாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்னும் கேள்வி எனக்கு அறம் சிறுகதைகள் வழியாக வந்தது. கொடை, தியாகம், நீதியுணர்வு, பாசம் என்றெல்லாம் நாம் சொல்லும் உணர்ச்சிகள் கொஞ்சம் செயர்கையானவை என்று நம் அறிவு நம்மிடம் சொல்கிறது. குறிப்பாக நமக்கு இளம் வயதாக இருக்கும்போது அப்படியெல்லாம் நம்பவும் சொல்லவும் நாம் ஆசைப்படுவோம். அது பொய் என நமக்கே உள்ளே தெரிந்துமிருக்கும். கொஞ்சம் தலையைச் சுற்றினால் அம்மா வந்து பக்கத்தில் இருக்கவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்போம்.  இந்த விழுமியங்களால்தான் மனிதகுலமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நமக்கே தெரியும். நாமும் அதைச்சார்ந்தே இருக்கிறோம்

 

ஆனால் நம் எல்லாருள்ளும் இருக்கும் அந்த விழுமியங்கள் சிலரிடம் உச்சகட்டமாக உள்ளன. அவர்கள் அதைச்சார்ந்தே தங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் அதெல்லாம் அதேயளவுக்கு அவநம்பிக்கையாலும் கேலியாலும் சுயநலத்தாலும் சமப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் அறிவுஜீவிகள் ஆகுந்தோறும் நமக்கு மகத்துவங்கள் மேல் நம்பிக்கை இல்லாமலாகிறது. நாம் ஒரு வகையான தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்கிறோம். எளிமை களங்கமின்மை அர்ப்பணிப்பு போன்றவை நமக்கு புரிவதில்லை. காதலைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்போம், ஏனென்றால் அது காமத்துக்கான குறுக்குவழி என நமக்குத்தெரியும். நம்முடைய இந்த சீரழிந்த அகந்தையை தொட்டுச் சீண்டுபவை அறம் கதைகள். அவற்றை நம்மால் துறக்கவும் முடியாது. நன்றாக இருக்கிறது என்று சொன்னால் பலவீனமாகத் தெரிவோமோ என்ற சந்தேகமும் ஆட்டிப்படைக்கிறது. நானும் அப்படித்தான். தோரணைதான் நம்ம பொழைப்பும். ஆனாலும் சோற்றுக்கணக்கு வாசித்து தனிமையில் ஒரு துளி கண்ணீர் சிந்தினேன். இட்டுண்ணுதல் என்று மரபிலே சொல்லியிருக்கும் அந்தப்பெரிய மனநிலை தெய்வத்துக்குச் சமானமானதுதான்

 

கணேஷ் முகுந்த்

 

அறம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஓர் உண்மைக் குரல்
அடுத்த கட்டுரையுவன் சந்திரசேகர் – விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3