அறம் வாங்க
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
அறம் தொகுப்பில் உள்ள உலகம் யாவையும் கதையை இப்போது தான் வாசித்தேன்.
மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அது மாறிவிட்டது. முந்திய கடிதத்தில் சில சிறுகதைகளை குறிப்பிட்டிருந்தேன். (யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் என) அந்த வரிசையில் இப்போது உலகம் யாவையும்.
இந்திய பயணங்கள் குறித்த தங்களின் எல்லா கட்டுரைகளிலும், இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் சுதந்திரம் குறித்தான களிப்பை கண்டிருக்கிறேன். இச்சிறுகதையின் முடிவிலும் அதே களிப்பு. ஒரு விடுபடல் உணர்வு.
காரி டேவிஸ் தனிமைச் சிறையில் இருக்கும் பகுதியை வாசிக்கும் போது, பிளாட்டோ வின் குகைக்குள் மனிதன் நினைவில் எழுந்தான். இலக்கியம் என்பதே தத்துவங்களை நிழல் வாழ்க்கையின் மூலம் மெய் நிகர் வாழ்வாக மாற்றுவது தானே. காரி டேவிஸ் கூட பிளாட்டோவின் குகைக்குள் மனிதனின் ஒரு சிந்தனை துளி.
நன்றி
அதிரன் சார்த்தன்.
அன்புள்ள ஜெ
அறம் தொகுப்பை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். அறம் தொகுதியிலுள்ள கதைகளில் அறம்குறித்த, ஆளுமைகள் குறித்த நெகிழ்ச்சியான நிலைகளைச் சொல்லும் கதைகள் யானை டாக்டர், அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், சோற்றுக்கணக்கு போன்றவை. அவை நேரடியாக எந்த செண்டிமெண்டையும் சொல்லவில்லை. அழுகைக்கணங்களும் இல்லை. ஆனால் மனிதனின் நிமிர்வை, பெருமையைச் சொல்லும் கதைகள். அது நம்மை நெகிழ்ச்சியடையச் செய்கிறது. நான் நீண்டநாட்களுக்கு முன் தலாய் லாமாவை நேரில் பார்த்தேன். அவர் என்னை தொட்டு வாழ்த்தியபோது கண்கலங்கி நெகிழ்ந்துவிட்டேன். அந்த நெகிழ்ச்சி அது. அது துன்பம் அல்ல. ஒரு பேரின்பநிலைதான்
அதே நெகிழ்ச்சியை மிகமிக நான் அடைந்தது உலகம்யாவையும் என்னும் கதையில் அது மிகமிகச் சாதாரணமாகச் சொல்லப்பட்டுள்ள கதை. எந்த பெரிய நிகழ்ச்சியும் இல்லை. ஒரு சந்தர்ப்பம் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்தக்கனவு என்னை கொந்தளிக்கச் செய்தது
நன்றி
செல்வக்குமார் அழகேசன்