மயில்கழுத்து- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

மயில்கழுத்து இதுவரை வந்த கதைகளில் இருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. உடனடியாகப் போய்ச்சேரக்கூடிய கதை கிடையாதென்று தெரிகிறது. நானும் அப்படியே நினைத்தேன். சில காரணங்களுக்காக எனக்கு தனிப்பட்டமுறையிலே இந்தக்கதைதான் மிகவும் பிடித்திருந்தது. ஏன் என்று விரிவாகவே சொல்லலாம். மனிதனுக்கு என்னென்னவோ தேடல்கள். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக பூர்ணத்துவத்துக்கான தேடுதல் என்று சொல்லிவிடலாம். ஆகவேதான் அதை மனிதன் அழகு என்று நினைத்துக்கொள்கிறான். அழகு என்பதும் பூர்ணம் என்பதும் ஒன்றுதான் என்று காஞ்சி பெரியவர் எங்கோ சொல்லியிருக்கிறார். சாமுத்ரிகா லட்சணம் என்றாலே எல்லாம் பூர்ணநிலையிலே இருந்துகொண்டிருப்பது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு நிலை உண்டா என்றால் அது ஈஸ்வரனிடத்திலே இருக்கிறது என்பது சங்கல்பம். பிளேட்டோ அது இன்ஃபினிட்டியில் இருக்கிறது என்று சொல்வார்.

ஆனால் மனுஷன் அதை சதா தேடிக்கொண்டிருக்கிறான். சீனாவிலே யின் எப்போதுமே யாங்கை தேடிக்கொண்டிருக்கிறது என்பது மாதிரி. தேடுதலின் தீவிரத்தைத்தான் தாபம் என்று சொல்லிக்கொள்கிறான். அந்த தேடுதலினால்தான் அவன் கலைகளை உருவாக்குகிறான். ஆனால் ஒன்று உண்டு. இது ஒரு மனுஷ்யநாடகம் என்று எப்போது தெரிகிறதோ அப்போது விலகிவிடுகிறது. எனக்கு மட்டும்தான் என்று நினைத்துக்கொள்ளும்போதுதான் தீயாக காய்கிறது. இதெல்லாம் இன்றுவரை எத்தனைகோடி பேரை அவஸ்தைப்படுத்தியிருக்கும். இனிமேல் எத்தனைபேரை அவஸ்தைப்படுத்தும் என்று நினைத்துக்கொண்டால் போதும் சாதாரணமாக ஆகிவிடும்.

ஆமாம், அது விஷம்தான். ஆலாலகண்டன் உண்ட அதே விஷம். அதுக்கும் நீல நிறம்தானே. அவன் அதை தொண்டையிலேயே வைத்துக்கொண்டான். ராமன் முழுங்கிவிட்டார். எரியறதே எரியறதே என்று குதிக்கிறார். சங்கீதத்தின் பால்கடலை கடைந்தாலும் அதுதான் வருகிறது. அமுதத்தின் தங்கச்சி அல்லவா? அந்த இன்னொருவர் [சுந்தர ராமசாமியா?] அதை விழுங்கி நீலகண்டராக ஆகும் இடம் நல்ல இடம். அதுதான் உச்சம்.

நான் இதேமாதிரி ஒரு நாலைந்து கதைகள் எழுதியிருக்கிறென். எல்லாம் எழுபதுகளிலே. ஒன்றும் இப்போது சுகமில்லை. என்னால் சும்மா பேசத்தான் முடிந்தது. நல்ல கதை. வாழ்த்துக்கள்

சுந்தரம் [ ஹர்ஷன்]

=====================

அன்புள்ள ஜே,

நீண்டநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன். எழுத வேண்டும் என்று நினைப்பேன். கொஞ்சம் எழுதி விட்டுவிடுவேன். சரியாக எழுத முடிவதில்லை. வேலை நடுவே எழுத வேண்டும்.

மயில்கழுத்து மிக நன்றாக வந்த கதை. மற்ற கதைகளை மாதிரி அறத்தைப்பற்றி பேசாமல் கலையைப்பற்றி பேச ஆரம்பிக்கிறது. இரண்டு தடவை வாசித்தேன். நிறைய எழுதலாம். இரண்டு கலைஞர்கள். ஒருத்தர் எல்லாவற்றையும் வெளியே கொட்டுகிறார். இன்னொருவர் உள்ளேயே வைத்துக்கொள்கிறார். ஒருவர் logical இன்னொருத்தர் emotional. இரண்டு பேரும் இரண்டு எல்லைகளிலே நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடுவே மூன்றாவது கலைஞர். அவர் இந்த இடத்திலேயே இல்லை. அவர் இருக்குமிடம் sublime. இந்த மூன்று கலைஞர்களும் எப்படி காமம் என்கிற ஒரே புள்ளியை சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை என்று நினைத்தேன். மூன்றுபேரிலே எனக்கு ராமனைத்தான் பிடிக்கும்.

ஆனால் இன்று மீண்டும் வாசித்தபோது இன்னொரு நினைப்பு வந்தது. சந்திரா இன்னொரு கலைஞர் அல்லவா? செக்ஸை ஒரு elemental energy யாக கையாளக்கூடிய மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் அவர்தான். மற்றவர்கள் பொத்தி பொத்தி வைக்கக்கூடியதை கீறிப்பிளந்து பார்க்கிறார். அவர்தான் Maupassant முதல் Antonin Artaud வரை நவீன ஆர்ட்டிஸ்ட்களை உண்டுபண்ணிய அந்த அடிப்படையான பார்வை கொண்டவர். அதனால்தான் அவர்கள் அவரை அப்படி பயப்படுகிறார்கள். ராமன் அவளை ஆர்ட்டிஸ்டே கிடையாது என்று சொல்கிறார். சந்திரா வேறு ஒரு யுகத்தைச்சேர்ந்த கலைஞர்.

நீங்கள் அவரை மயில் மாதிரி என்கிறீர்கள். ராமன் அவரை ராஜநாகம் மாதிரி என்கிறார். என்ன ஒரு Contrast ….மயில் ராஜநாகத்தை காலால் பிடித்து கொத்தி உண்ணக்கூடியது.

பல கோணங்களிலே திறந்துகொண்டே இருக்கக்கூடிய கதை.

வாழ்த்துக்கள்

வரதன்

=====================

அன்புள்ள ஜெ,

மயில்கழுத்து பல விஷயங்களை சாதாரணமாக தொட்டுச்சென்ற அருமையான கதை. கடைசியில் சந்திராவின் கலையைப்பற்றி ராமன் சொல்லும் இடத்தை பலமுறை வாசித்தேன். அவள் என்ன செய்தாலும் கலையை உருவாக்கமுடியாது. ஏனென்றால் அவளிடம் ஈரமே இல்லை என்று சொல்கிறார். முக்கியமான வரி. ஈரம்தான் ராமனின் கலை.

கண்ணாடிப்பிம்பம் வருவது போல சத்தமே இல்லாமல் சந்திரா வந்தாள் என்ற வர்ணனை அபாரம்

கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள் [சிறுகதை ] – 1