கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

 

ஒரு வாக்குறுதி

 

பொன்சூடி நீ சிவந்தபோது

உன்னை

கொய்தெடுத்து கட்டினான் அல்லவா?

மிதித்தான், புடைத்தான்

செம்புக்கலத்தில் அவித்தான்

எரிவெயிலில் உலத்தினான்

உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான்

கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும்

அன்னமாக்கி பரிமாறினான்

 

எனினும் ஏன் சீதை

அவன் மீண்டும் வரும்போது

காதல் நடிக்கும்போது

நிலம் ஒருக்கும்போது

சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது

மிதித்து அகற்றாமல் அவனை

புன்னகைத்து ஏற்கிறாய்?

 

சிரிப்பல்லாமல் விளைவதென்ன அக்கா?

யாருடையதோ என் வயல் என்று

அறியப் பிந்தியது

என் கண்ணீர் நிலம்

 

தெருவிளக்கின் கால்கள் போல

நெற்தண்டுகள் எழும்

கதிர்கள் விளையும்

வயல்கள் இப்போதும் உண்டு என் கனவில்

பாலக்காடும் பாயிப்பாடும் திரிச்சூரிலும்

 

நல்லவேளை

கனவில் இருபோகும் முப்போகம்

விளைவதுண்டு இன்றும்

 

[குறிப்பிடப்படும் ஊர்கள் கேரளத்தில் நிலத்திற்கான விவசாயிகள் கிளர்ச்சி நடந்த வரலாற்றிடங்கள்]

 

பல்லிவால்

 

பல்லியின் முறிந்து விழுந்த வால்
அமைதியாக திரும்பி பார்த்தது.

அதோ இருக்கிறதென் பல்லி.
ஏதும் நிகழ்ந்த சாடையே இல்லை.
பூவைப்பிரிந்த கொடி என
கண்ணீர்துளி உதிர்ந்த கவிஞன் என
அதோ இருக்கிறதென் பல்லி.

‘சென்றது நினைந்து வருந்தா
பண்ணித சிரேஷ்டனாய்’
அதோ இருக்கிறதென் பல்லி.

யாரோடும் எந்தவிதமான பகையும் இல்லாமல்
பிரபலமான அந்த
‘மதிப்பீட்டுச் சரிவுத்துயரம்’ கூட இல்லாமல்
அதோ இருக்கிறதென் பல்லி.
பின்பக்கம் தன்னைவிட பெரிய நிழலுடன்
அதோ இருக்கிறதென் பல்லி.
புதிய இரையோ துணையோ காத்து
அதோ இருக்கிறதென் பல்லி.

 

[கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து நக்ஸலைட்டுக்கள் பிரிந்துசென்றபோது எழுதப்பட்ட கவிதை. இன்று வெவ்வேறு தளங்களில் பொருள் அளிப்பதாக, மாறியிருக்கிறது]

 

கே.ஜி.சங்கரப்பிள்ளை அறிமுகம் 

முந்தைய கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2
அடுத்த கட்டுரைகாந்தி வாசித்த நூல்கள்