வெயிலில் ஃப்ராய்ட்

 

வெயில் கவிதைகள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

 

தங்களின் வெய்யில் கவிதை உரையின் எழுத்து வடிவம் படித்தேன். கட்டுரையின் கடைசியில் இருந்த இணைப்பான Freud இன் குடலும் வெய்யில் கவிஞரின் வெப்பமும் இதை பதிவிட தோன்றுகிறது.

 

முதலில் ரயிலில் சந்தித்த மனிதரில் இருந்து ஆரம்பிப்போம். இங்கு நான் Freud இன்  இரண்டு மனஞ்சார்ந்த தற்காப்புகளை குறிப்பிட வேண்டி இருக்கிறது. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். (Freud ஐ இழுத்தது நீங்கள் தான்!!) ஒன்று வெளியேற்றுதல் (Projection ) மற்றொன்று வெளியேற்றி அடையாளங்காணுதல் (Projective identification ). நம் மனதில் தீராத ரணமாக இருக்கும் நிகழ்வுகளையோ செய்திகளையோ  அனுபவங்களையோ  நினைவுகளாக அதனுள் பொருந்திய உணர்வுகளாக நம் மனதில் படிந்து விடுகிறது (இது சந்தோசமான நினைவுகளுக்கு அவ்வளவாக பொருந்தாது. இதை பற்றி இப்பொழுது இங்கே பார்க்க தேவையில்லை). அப்படி நம் மனதில் படிந்த படிமங்கள் அதன் வீரியம் காரணமாக வெளிப்பட நேரிடும். அதற்கு சந்தர்ப்பங்களோ சுற்றுசூழலலோ தெரியாமல், அதாவது நேரம் காலம் தெரியாமல் ஏதோ ஒரு தூண்டுதனாலோ அல்லது உள்ளார்ந்த உந்துதனாலோ வெளிப்பட முயற்சிக்கும். இப்படி மீண்டும் மீண்டும் நடக்கும் பொழுது நம்முடைய சமநிலையை ( Homeostasis ) பாதுகாக்க உருவாக்க பட்டவை தான் மேற்கூறிய இரண்டு தற்காப்புகளும்.

 

சுருக்கமாக சொன்னால் நாம் எப்பொழுதெல்லாம் நம் அடி  மற்றும் ஆழ் மனதில் அமுக்கிவைத்துள்ள நம் சமநிலையை குலைக்கக்கூடிய எண்ணங்கள் மேலெழுமோ அப்பொழுதெல்லாம் நம் மனம் முதல் அடியாக அந்த நினைவுகளும் அது சார்ந்த உணர்வுகளுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்புடுத்துகிறது (Splitting ). பிறகு இந்த நினைவுகளை எந்த ஒரு உணர்ச்சி பிரவாளமும் இல்லாமல் வெளியேற்றுகிறது (Projection ). இது இரண்டாம் நிலை. ஒருவர் சுமக்கும் நினைவுகளும் அதன் தாக்கமும் மிக வீரியமாக இருக்கும் பட்சத்தில் (ரயில் மனிதரை போல) முதல் மற்றும் இரண்டாம் நிலையை தாண்டி மூன்றாம்  நிலைக்கு செல்ல நம் மனம் முயற்சிக்கும். அந்த மூன்றாம் நிலை தான் வெளியேற்றி அடையாளங்காணுதல் ( Projective identification ). அதாவது வெளியேற்றிய நினைவுகளை வேறு ஒருவருடனோ அல்லது பலருடனோ, ஒரு  இடத்துடனோ அல்லது பொருளுடனோ  இணைத்துவிடுவது. இப்படி செய்வதால் அந்த மனதை பொறுத்த வரை அந்த நினைவு அதற்கு சொந்தமில்லை, முழுவதுமாக. தனக்கு சொந்தமில்லாத ஒரு விஷயத்தை பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவை இல்லை அல்லவா. இது தான் இந்த தற்காப்புகளின் அடிப்படை. Freud விவரித்த மனம் சார்ந்த தற்காப்புகளில் இவை முக்கியமாக கருதப்படுகிறது.

 

இப்பொழுது இவற்றை நீங்கள் கூறிய நபர்களுக்கு பொருந்துமா என்று யோசித்து பார்க்கிறேன். அந்த ரயில் மனிதர் அந்த கம்பார்ட்மென்டின் அந்த பகுதியில் இருந்த ஒவ்வொருவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து விட்டார் தன் தனிப்பட்ட கேள்விகளை ஒவ்வோரிடமும் கேட்பதினால். இதனால் ஒரு பந்தத்தை உங்கள் அனைவரிடமும் ஏற்படுத்திக்கொண்டார். மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் அந்த நபரோ மற்ற யாருமோ கவனிக்காமல் எழுந்து செல்ல முடியாத நிலை வேறு  அவர் தன் ஆழ்ந்த ரணங்களை விவரிக்கும்பொழுது. இதுதான் சூழ்நிலையை ஏற்படுத்துதல் ( setting the  scene ). இதையும் அவர் செவ்வனே செய்து விட்டார். இந்த சூழலில் அவர் சொல்வதை அவரின் வெளியேற்றுதலை நீங்கள் அனைவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும் (ரயிலில் இருந்து வெளியே குதிக்கலாம் தான் இருந்தாலும் நம் வாழ்க்கை அவ்வளவு மோசமாக இல்லை அல்லவா?). இங்கே அடையாளங்காணுதல் எங்கு வருகின்றதென்றால் அந்த கதையை அவர் சொல்லி முடித்தவுடன் உங்களுக்கு தோன்றிய ஒவ்வாமையும் பதற்றமும் தான். அந்த ஒவ்வாமை மற்றும் பதட்ட நிலையில் தான் அவரின் ஆழ்மனம் எப்பொழுதும் இருக்கிறது. அதனை அவ்வப்பொழுது கட்டுப்படுத்த தான் அவருக்கு மேற்கூறிய சம்பவங்கள் தேவைப்படுகிறது என்று கருதலாம். குக்கரில் பிரஷர் அதிகமானால் அவ்வப்பொழுது விசிலை தூக்கி காற்று பீறிட்டு வருமல்லவா அது போல தான் அந்த நபருக்கும் இது போன்று தேவைப்படுவதாக கருதலாம். இதற்கு ஆதாரம் என்று பெரிதாக எதுவும் இல்லை உங்கள் மனதில் தோன்றிய ஒவ்வாமையும் இந்த கூற்றில் உள்ள ஓரளவு உண்மையும் தன்மையும் தவிர.

 

மேலும் அந்த நபரின் அப்போதைய எதிர்பார்ப்பு தன் மன கொந்தளிப்புகளை அடுத்தவருக்கு செலுத்தி தன் மன வேதனையை மற்றவர்களுக்கு அனுப்புவது மட்டும் தான். அவருக்கு உங்கள் ஆறுதலோ  அறிவுரையோ முக்கிய தேவை இல்லை. இதனால் தான் அங்கே இருந்த ஒருவருக்கும், வயதான இரண்டு நபர்களுக்கும் கூட, எதுவும் சொல்ல தோன்றவில்லை . இப்படி தான் மனோநிலை ஆய்வாளர்கள் Freud இன்  என்னைப்போன்ற அடிப்பொடிகள் நினைப்பார்கள்.

 

இதற்கும் psychoanalytical ஆதாரம் இருக்கிறது. இதை இந்த நபரின் கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் பார்க்க வேண்டும். அவர் தன் வாழ் ஆனால் முழுவதும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்திருக்கிறார் (நீங்கள் கூறியதில் இருந்து. முழுவதும் தெரியாமல் ஆணித்தரமாக நான் இதை கூற முடியாது). தன் தந்தை கொண்டு வந்து போட்ட இடத்தில் தன் வாழ்க்கையை எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். அதற்கு பின் தந்தை ஸ்தானத்தில் முதலாளி. சாணி மொழுகி வீடு கூட்டி கடை பார்த்து அனைத்தும் பொம்மலாட்ட வாழ்க்கை. “என் பெண்ணை கட்டிக்கொள்!” என்ற கட்டளை. (அவள் இந்த ஊரை விட்டு செல்லக்கூடாது). “உத்திரவு ஐயா” என்று உளமேற்று நடத்தல். இப்படி தன்னுடைய வளருங்காலம் ( formative years ) முழுவதும் தன்புத்தி இல்லாமல் அடுத்தவர் கட்டளைக்கு ஏற்ப வாழ்க்கையை இவர் வாழ்ந்திருக்க கூடும். Oedipus  காம்ப்ளக்ஸில் முழுவதுமாக தோற்ற நிலையில் இருப்பவர். மனைவியை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன முயற்சி செய்தார் என்பது தெரியவில்லை. எதுவும் செய்யவில்லை என்றாலும் ஆச்சரியமாக இருக்காது. தன்னால் தன்னில் முழுதும் மாறுபட்ட துணையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேள்வி கூட கேளாமல் வாழ்க்கையை அடுத்தவர் இஷ்டத்திற்காக தன்னிலை இழந்த ஒரு passive (இதற்கான சரியான தமிழ் வார்த்தையை என்னால் ஈட்ட முடியவில்லை) ஆன வாழ்க்கையை வாழ்ந்தவர். ஒரு கடையையே கட்டி ஆண்ட எந்த சூழலிலும் தன்னால் சுதாரித்து எழுந்து வர முடியும் என்று தெரிந்த மனிதர் என் மனைவி என்னை விட்டு சென்றால் என்ன எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை என்னால் அமைத்துக்கொள்ள முடியும் என் குழந்தைகளையும் என் பக்கமே திருப்பிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இவரிடம் இல்லாமல் இருப்பது இந்த passivity யால் தான். தன்னால் முடியும் என்று தெரிந்தும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத நிலை. அந்த கம்பார்ட்மெண்டில் உள்ள பலருக்கும் அவருக்கு பல  விதமான அறிவுரைகளும் ஆறுதல்களும் அளித்திருக்க முடியும் என்ற நிலையிலும் நீங்கள் அமைதி காத்தது அவரின் இந்த passivity யை  நீங்கள் அந்த ஒரு சில கணங்களுக்கு அனுபவித்ததினால் தான். அந்த கணங்களில் உங்களை அனைவரையும் அவராக அவரிடத்தில் இருத்திவிட்டார் அல்லவா அதில் தான் அந்த வெளியேற்றுதல் மற்றும் அடையாளங்காணுதல் முழுமை அடைகிறது.

 

உடலை இறுக்கி கண்ணீரை அடக்கிய புள்ளி தான் அவரின் எல்லை. அதை அவர் கடந்திருப்பர் என்றால் மற்றவர்களுக்கு வெளியேற்றிய எண்ணங்கள் அனைத்தும் அவரிடமே முழு வீரியத்துடனும் தாக்கத்துடனும் திரும்ப சென்றிருக்கும். அந்த நிலையில் தான் அவர் தன்னுள் அமிழ்ந்திருந்த அந்த ஆழ்ந்த ரணங்கள் தன்னிடம் இல்லை என்று உணர்ந்த நொடிப்பொழுது. அதில் ஏற்பட்டது தான் அந்த சிரிப்பு. சுமையை இறக்கி வைத்த … இல்லை… இல்லை… மற்றவருக்கு கொடுத்துவிட்ட ஆசுவாசம் தான் அந்த சிரிப்பு.

 

கவிஞர்களின் எழுத்தும் இதை தான் செய்கிறதோ என்னவோ. முகம் தெரியாத வாசகர்களை மனதில் நிறுத்தி எழுதுவதால் தானோ என்னவோ அவர்களால் மிகக்கடினமான தீட்டுக்கரை படிந்த சேலைகளையும்  களிமண் சோற்றையும் அவர்களுக்கு பங்கிட்டு தங்களின் மனதின் சுமைகளை இறக்கி வைக்க முடிகிறது. இது மட்டுமே காரணம் அல்ல. ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் கோரத்தில் நகைச்சுவையை காண்பதற்கு.

 

நகைச்சுவை இங்கே இரண்டு காரணுங்களுக்காக பயன்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒன்று நகைச்சுவை இல்லாமல் போனால் அந்த எண்ணங்களின் தாக்கமும் வீரியமும் மனதின் வாயடைத்து போக செய்து விடலாம். பிறகு கவிதையோ கட்டுரையோ கதையோ எப்படி வெளி வரும். இரண்டாவது நகைச்சுவை கேட்பவரின் ஆர்வத்தை தூண்டுவதற்காக இருக்கலாம். நகைச்சுவை மூலம் ஆர்வத்தை தூண்டி உள்ளே இழுத்து விட்டு பிறகு சம்மட்டியால் தாக்குவது.

 

ரயில் மனிதரின் சிரிப்புக்கு பஸ் ஸ்டாண்ட் பாடகரின் பகடிக்கும் நூலிழை அளவே வித்தியாசம்! ஒன்றில் பாரத்தை இறக்கிய ஆசுவாசம். மற்றொன்றில் கவனத்தை ஈர்க்கும் அலங்காரம். அவ்வளவே!

 

Freud கோட்பாடுகளுக்கு ஏற்ப மேற்கூறியவற்றை நான் எழுதி உள்ளேன். இது ஒரு விதமான பார்வை அவ்வளவே. மற்ற சிந்தனைகளும் அதற்கான அர்த்தங்களும் இதற்கு மேலும் சுவை கூட்டும் என்று நம்புகிறேன்.

 

இந்த பதிவை படித்தமைக்கு நன்றி!

 

தங்கள் உண்மையுள்ள

 

முரளி சேகர்

வெயில்

அன்புள்ள முரளிசேகர்

 

வெயில் எழுதிய ஒரு தொகுப்புக்குப் பெயர்  ‘கொஞ்சம் மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’  வேடிக்கையான ஒரு தொனி இருந்தாலும் அடிவயிற்றுப்பசியையும் அதற்குக்கீழே கொண்டுசென்று அணுகும் போக்குக்கு எதிரான ஒரு குரல் அது

 

ஜெ

 

 

கொஞ்சம் மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட் 

வெயில்

 

நான் ஒரு நீண்ட துப்பாக்கியைக் கனவு கண்டேன்

 நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்!

ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட

மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட

என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்புபடுத்தக்கூடும்

தயவுசெய்து

உங்கள் கண்ணாடியைத் துடைத்துக்கொள்ளுங்கள் டாக்டர் ஃப்ராய்ட்!

என்னிடமிருப்பதிலேயே

பெரும் பிரச்னைக்குரிய உறுப்பென்றால் அது

எனது இரைப்பைதான்.

அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளைத் தந்திருக்கிறதுதான்

அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டுத் தின்ன இயலாது

தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்

உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!

நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம்

நான் சாமான்யை

எனக்குக் குழந்தைகள் இருக்கின்றன

உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்!

ஓர் எளிய நீதிக்காக

சட்டத்திற்குக் கேட்காதவாறு

ஐந்து தோட்டாக்களை நான் ‘பயன்படுத்தி’விட்டேன்

நீங்கள் மனதுவைத்தால்

தடயங்களேதுமின்றி

அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்!

 

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் வாங்க

முந்தைய கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை