அபியின் அருவக் கவியுலகு-4

அபியின் அருவக் கவியுலகு-1

அபியின் அருவக் கவியுலகு-2

அபியின் அருவக் கவியுலகு-3

பகுதி நான்கு- மெத்திடும் மாலை

 

தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம், மாலை ஆகியவை. இவற்றில் காலம் ஒரு தொடக்க முயற்சியாக பல பகுதிகள் கொண்ட ஒரு நீள்கவிதைத் தன்மையுடன் உள்ளது. மாலை ஒரு வகையான நவீன காவியம்.

 

தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகிய மூன்றிலும் எப்போதும் ஊடுருவியபடி உள்ள ஆன்மிகமான வினா காலம் குறித்தது. கீழை மதங்களில் காலம் குறித்த கருத்துருக்களும் படிமங்களும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. ஆச்சரியமூட்டும் விஷயம் ஒன்று உண்டு. கீழைமதங்களில் காலம், மரணம், வெட்டவெளி, வெறுமை ஆகியவை பெரும்பாலான தருணங்களில் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்த நிலையிலேயே முன்வைக்கப்படுகின்றன. மரணத்தின் தேவனான காலனிடமே மெய்ஞானத்தை நசிகேதன் கேட்க முடிந்தது என்ற ஐதீகம் இந்து ஞான மரபின் அடிப்படைகளில் ஒன்று. மீண்டும் மீண்டும் இலக்கியத்தில் பேசப்படும்  ‘காலம்’ என்பது இன்று தத்துவம் அறிவியல் ஆகிய தளங்களில் பேசப்பட்டவற்றுக்கான நுண்மையான எதிர்வினையாகவும், மீறிச் செல்லலாகவும்தான் இருக்க இயலும்.

 

தமிழில் காலம் குறித்து பல கவிஞர்களால் எழுதப்பட்ட வரிகள் ‘கபாலச்சூடு’பெரியாத நிலையில் உருவாக்கப்பட்ட தத்துவப் பிசிறுகள் மட்டுமே என்பதால் அவற்றை நான் பொருட்படுத்தவில்லை. சுந்தரராமசாமி (பசுவய்யா) காலத்தை மரணமாகவே காண்கிறார். (காலமே, என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய்? என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே) மரணத்தின் பெருவெளியாக காலத்தை, அதன் படிமமாக கடலை உருவகித்து பசுவய்யாஎழுதிய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

 

காலம் குறித்த உக்கிரமான ஒரு தரிசனத்தையும் பதற்றத்தையும் நாம் பிரமிளின் கவியுலகில் மாறி மாறிக் காண்கிறோம். காலம் குறித்த கவிதைகளில் தமிழின் பெரும் படைப்புகள் பிரமிள் உருவாக்கிய ‘தெற்குவாசல்’ முதலிய ஆக்கங்களே.மூன்று கூறுகளால் அவை சிறந்த கலைச்சாதனைகளின் தளத்தை அடைகின்றன. ஒன்று; அவை ஆழமான நேரடி அனுபவத்திலிருந்து முளைத்தவை; தத்துவச் சபலத்தின் விளைவுகள் அல்ல. இரண்டு; அவை காலம் குறித்த மத, தத்துவ, அறிவியல்தரிசனங்ளையும் உருவகங்களையும் தீவிரமாக உள்வாங்கி உருவாக்கப் பட்டவை. மூன்று; அவற்றின் வெளிப்பாடும் சரி, தரிசனமும் சரி வாழ்வின் அன்றாட தளங்களுக்கு அப்பாற்பட்ட விசேஷதளத்தைச் சார்ந்தவையாக இல்லை. உணர்ச்சியழுத்தம் செறிந்த வெளிப்பாடும் பரவசத்தையும் சொல்லின்மையையும் அளிக்கும் தரிசன உச்சமும் அவற்றில் உள்ளது. இவ்வரிசையில் பிரமிளுக்கு அடுத்தபடியாக  அபியின் காலம் குறித்த இக்கவிதைகளை வைக்கிறேன்

 

காலம் குறித்த அபியின் இக்கவிதைகள், ஒன்று; கவிஞான ஆழமான சுயத்திலிருந்து உருவாகி வருவதால் நம்பகத்தன்மையுடன் உள்ளன இரண்டு; நேரடி அனுபவத்தளத்திலிருந்து உடனடியாகத் துண்டித்துக் கொண்டு அருவமான தளத்தை நோக்கிச் சென்றுவிட்டிருப்பதனால் வாசகப்பங்களிப்பைக் கோருவனவாக உள்ளன.  மூன்று; கால அனுபவத்தின் ஒரேயொரு புள்ளியை மட்டும் இவை முனைப்படுத்தி இலக்காக்குகின்றன. காலம் அகாலமாகி நிற்கும் ஒரு துளியை. நான்கு; அத்துளியை கவிதையின் சொல்லுதல் வழியாக அல்ல மெளனம்  மூலம் உணர்த்தி முடிக்க முயல்கின்றன.

 

அபி கவிதைகளில் இக்கவிதைகள் ஒரு சாதனை என்று ஏன் கூறுகிறேன் என்றால் இந்தக் கவித்துவ மெளனத்தை அடையும் முயற்சியிலேயே அபி அவருடைய உச்சகட்டச் சாத்தியங்களை அடைந்துள்ளார் என்பதனால்தான். என்பதனால்தான். அவருடைய கவிதைப்பாணியாக உருவாகி வந்த அருவ ஆக்கமுறைக்கு உரிய கருவே காலம். பெரும்பாலும் தன் அந்தரங்க அனுபவ தளத்திலிருந்தே அபி தொடங்குகிறார். இக்கவிதைகள் அனைத்திலும் சொல்லப்படாவிடினும்கூட ஒரு ‘நான்’ வெளிப்பட்டபடியே உள்ளது. ‘யாருடையது இக்காலம்?’ என்ற வினாவுக்கு’என்னுடையது’ம்என்றே ‘காலம் மறுபடி’ போன்ற பொதுவான கவிதைகள்கூட பதிலிறுக்கின்றன

 

தன்னில் இருந்து காலத்தைப் பேசத் தொடங்கினால் தன்வ்சூழலுக்குத்தான் திரும்பவேண்டும் என்பது தியான மரபின் அறிதல்களில் ஒன்று. நம்மைச் சுற்றி காலமாக நிரம்பியிருப்பவை,காலத்தை தங்கள் மீது நிகழ்த்திக்கொண்டிருப்பவை நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும் அவற்றைத் தன்னுள் வைத்திருக்கும் வெளியும். அவ்வெளியின் அகப்பிரதிபலிப்பில்தான் நாமறியும் அகக்காலமும் உள்ளது,அந்தக் காலத்தின் நகர்வை நாம் உணரும்படிச் செய்யும் அகாலம் ஒன்று நம்முள் உள்ளது என்பது பெளத்த, அத்வைத மரபுகளின் நம்பிக்கை. அபியின் கவிதைகளும் பெரும்பாலும் சூழலின் அகப்பிரதிபலிப்பையே தங்கள் சொற்களனுக்கான வெளியாகக் கொண்டுள்ளன. இக்கவிதைகள் அனைத்துமே புறக்காட்சியை படிமமாக்குவதிலிருந்தே தொடங்குகின்றன. ‘காடு முழுவதும் சுற்றினேன், பழைய சுள்ளிகள் கிடைத்தன’ என்றோ ‘எங்கிலும் புழுதி’ என்றோ. ஆனால் புறவயத்தன்மையின் திட்டவட்ட அடையாளங்களை அபியின் வழக்கமான உத்தியின்படி உடனே அழித்துக்கொண்டு விடுகின்றன

 

நுட்பமான ஓர் அழகியல் நேர்த்தியுடன் நம் அறிதலினூடாக வழியும் கால ஓட்டத்தை பதிவுதைச் செய்கின்றன இக்கவிதைகள்.

 

அணைத்து

கரித்தழும்பு ஆற்றி

நீரிலிட்டபோது

கூசி முளைத்துக்

கூசின

இலைகள்

 

என்று காலத்தைக் காட்சிப்படுத்துகின்றன. (என் தனிவாசிப்பில் இதைநான் அறிந்த ஒரு காட்சிபிம்பமாகவே ஆக்கிக்கொண்டேன். தீயில் கருகிய செடிகளின் இலைகளில் அக்கரி வடிவில் இலை நரம்புகளின் வடிவமும் தளிர்களின் மென்மையும் விளங்கித் தெரிவதை அவதானித்திருக்கிறேன்.) இங்கு ஓர் அருவப் படிமமாக காலத்தை பின்னால் திரும்பி நகரும் விதத்தில் அபி காட்டுகிறார்

 

தளிர் நரம்பு

நேற்றினுள் ஓடி

நெளிந்து மறைந்தது

 

என்ற அழகிய சொற்கூட்டு காலத்தின் விரைவான – மின்னல் கிளைவில் நரம்பு படர்ந்து அணைவது போன்ற  ஒரு காட்சியை அளித்து அமைகிறது.தொடர்ந்த கவிதைகளில் காலத்தின் முகங்கள் படிப்படியாக தொட்டு எழுப்பப்படுகின்றன. காலத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து இறுதியில் வெண்வயிறுகாட்டி மிதத்தல் குறித்து ஒரு சித்திரம் (நீச்சல்) முள்ளையும் பூவையும் மறைத்து மறுபடியும் புதிதுபோல வரும் காலத்தின் முடிவற்ற புதுமை இன்னான்றில் (மறுபடி) அனைத்தையும் உண்டு தன்வயமாக்கும் மண்போல புழுதி வடிவமாக ஒரு காட்சி (புழுதி)இவ்வாறு நீளும் இக்கால தரிசனம் மேலும் மேலும் காலத்தை அருவக் கருத்துருவாகத் திரட்டியபடியே செல்கிறது. முதல் கவிதையில் தெரிந்த திட்டவட்டத் தன்மைகூட பிறகுள்ள கவிதைகளில் இல்லாமலாகிறது

 

பிரக்ஞையின்

அறாவிழிப்பு

இரவிலி நெடுயுகம்

இடம் தொலைத்த ஆழ்வெளி

 

என்று கச்சிதமாகக் கூறப்படும் இன்மையின் பெரும்பாழில் காலம் சிறையிருப்பதைக் காட்டுகையில் அபி அகாலத்தை ஏதோ ஒருவகையில் வாசகமனம் உணரச்செய்து விடுகிறார். அபூர்வமான பல சித்தர் பாடல்களில் நாம் அடையும் ஒரு நிலைத்த கணம் அது. நவீனக் கவிதையில் அது சாத்தியமாகியிருப்பதை ஒரு சாதனை என்று ஐயமின்றிக் குறிப்பிடுவேன்

 

மாலை’ என்ற பொதுத்தலைப்பில் அபி எழுதிய கவிதை வரிசையே அவரது முதன்மையான ஆக்கமாகும். ‘மாலை’ என்ற சொல்லை ‘அடங்குதல்’, ‘அமைதல்’விடைபெறுதல்’, ‘பிறதொன்றின் தொடக்கம்’, ‘அறிய முடியாமையின் முகம் முதல் விளிம்பு’ என்றெல்லாம் விரித்தபடியே செல்லும் இக்கவிதை வரிசை தமிழ்ப்பதுக்கவிதையின் முக்கியமான சாதனை

 

வேட்டைக்குப் போனவர்கள்

திரும்பி வருகிறார்கள்

 

என்று கூர்மையாகத் தொடக்கம் கொள்கிறது

 

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்திலேயே

ஊர் மேடிட்டுக் கொள்கிறது

யாதும் ஊர் ஆகிறது

 

தணிந்தடங்கிய யாவும் இதோ

ஊர் ஆகின்றன

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்

 

என்று இக்கவிதை அபிக்கே உரிய முறையில் காட்சிப் படிமங்களை முரண்பாடு மூலம் ரத்துசெய்து அருவப் படிமங்களாக ஆக்குகிறது. ஊர் என்ற நிலப்பகுதியில் மாலை நிகழ்வதை அதன்மூலம் வாசகக் கற்பனையில் பல தளங்களுக்கு விரியச் செய்து படிப்படியாக அடங்கி ஒன்றில் நிலைக்கும் ஒரு நிலையைச் சொல் மூலம் நிகழ்த்திக் காட்டுகிறது. மாலையாகும்போது தன் எல்லைகளை விரித்து விரித்து யாவுமாகி ஒரு புள்ளியாகும் அந்த ஊர் நாம் எப்போதும் வசிப்பதான ஒன்று என்று நாம் அறிகிறோம்.நிழல்கள் நீள, ஓசைகள் கனக்க, ஓய்வும் தனிமையும் சூழ மெல்ல மெல்லச் சிவந்து அணையும் அந்தி உருவாக்கும் பற்பல விசித்திரமான தரிசனங்களைத் தொடர்ந்து அளிக்கின்றன அபியின் இவ்வரிசையில் உள்ள கவிதைகள். அனேகமாக இவ்வரிசையில் அனைத்துக் கவிதைகளும் கவிஞர்களுக்கு அபூர்வமாகவே வாய்க்கும் உருவ, ஓசை, உணர்வு அமைதியுடன் எழுதியிருப்பதை நோக்குகையில் அபியின் தியானம் புரிகிறது. அவரது அதிருஷ்டமும் கூடத்தான் என்று ஒரு எழுத்தாளனாகச் சொல்லத் தோன்றுகிறது.

 

ஊர் என்ற உணர்விலிருந்து மேலும் பிரிந்து தான் ஆக உணர்வதில் உள்ளது அடுத்த கவிதை

 

ராகஇயக்கங்களின் தரைமட்டப் பிம்பமாக நான்

காடுகள் ஊர்ந்து பரவக்

களமாக

 

என்று முடியும் இரண்டாவது கவிதை முதல் கவிதை உருவாக்கிய ஒருமையுணர்விலிருந்து மேலும் பரவும் உணர்வை அளிக்கிறது. அடுத்த கவிதையில் ஊர் தொலைவில் எங்கோ இயங்கிக் கொண்டிருக்கிறது நான் ஆக உணரப்படும் நிலையோ பிரபஞ்சத்தைத் தன்னருகே உணர்றது

 

அதோ தொலைவில்

விளக்குப் புள்ளிகளைத்

தன்மீது தரிக்கும்

ஊரின் மாலை

 

இங்கே என்னருகே

எனது மாலை

பிரபஞ்ச சோகம் திளைத்து

 

தொடர்ந்து வரும் கவிதைகள் இந்த அபூர்வமான தன்னிலையுணர்வின் விதவிதமான வண்ணங்களைக் கொண்டு அருவமான காட்சிகளைத் தீற்றிச் செல்கின்றன.

 

இங்கே படரும் இருளைச்

சிறிது சுண்டினால்கூட

என் மலை எனக்குப்

பதில் சைகை தரும்

 

என்ற பிரம்மாண்டமான தன்னுணர்வும்

 

உண்டு இல்லை என்பவற்றின்மீது

மோதிச்சிதறி

அகண்டம்

ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது’

 

என்ற தத்தளிப்பும் மாறிமாறி நிகழும் அபூர்வமான சொல்லிணைவுகளின் வெளியாக உள்ளது இக்கவிதை வரிசை.இவ்வரிசையில் அபியின் படிம உருவாக்கத்தின் அனைத்துச் சாத்தியங்களையும் காணமுடிகிறது.

 

சிறிய தெருக்களின் வேளை அது

அடக்கமாக மகிழ

அவைகளுக்குத்தான் தெரியும்

 

என்ற நேரடியான எளிய படிமம் ஒருவகையில் நம் மனதை விரிவுபடுத்துகிறது என்றால்

 

பறவை ஒலிகளைப் பூசிச்

சருமம் மெத்திடுகிறது மாலை

 

என்பது போன்ற கற்பனாவாதம் ஒங்கிய படிமங்கள் இன்னொரு கோணத்தில் மனதை ஒளிபெறச் செய்கின்றன. பல திசைகளிலாகப்பிரிந்து பிரிந்து சுயம் என்று உணர்பவை ஒவ்வொன்றும் சென்றுவிடஒருகணம் எதுவுமின்மையின் இடத்தில் தத்தளித்து தன்னை உணர்ந்துவிட்டு ‘போய் வருகிறேன்’ என்று மாலையிடம் விடைபெற்று தன் எல்லைகளுக்குள் தூலங்களுக்குள் மீளும் கவிஞனை இவ்வரிசையில் நாம் காண்கிறோம்

[மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12