அபியின் அருவக் கவியுலகு-3

 

பகுதி மூன்று -இரவிலி நெடுயுகம்

 

அபியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு 2003ல் கலைஞன் பதிப்பகத்தால் (பிரம்மராஜனின்  முன்னுரையுடன்) வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் அபி தன்னுடைய தொடக்க காலக்கவிதைகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்திருப்பது காணக்கிடைக்கிறது. அவரது முதல் தொகுதியான “மெனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து ஒருசிலகவிதைகள் இறுதியில்தரப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் எழுதிய விமரிசனம் காலத்தின்ஒரு பகுதியாக நிற்கவேண்டிய ஒன்றுமட்டுமேயாகும். நாளை அக்கவிதைகள் வாசகனுக்கு கிடைக்காமலே ஆகக்கூடும்.தமிழின் அருவக் கவிதையின்தலைசிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அபியின் இக்கவியுலகம்

 

நிழல்

தொட்டு எழுப்பிவிட்டுப்

போனது’ (உலா)

 

என்று தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதையே அருவமான அனுபவத் தளங்களுக்குள் நுழைகிறது.வாடைக்காற்று வழித்துப்போகும் தேய்மான’த்தை  அளவிடமுயலும் வரிகளாக வே இத்தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் உள்ளன

 

பிரபலமான நம்பூதிரி நகைச்சுவையை நித்ய சைதன்ய யதி அடிக்கடி கூறுவதுண்டு. ஒரு வித்தைக்காரன்கம்பிவளையங்கள் வழியாக அழைவதை நம்பூதிரி நோக்கியிருந்தாராம். அவன் பெரிய வளையம் வழியாகப் பாய்ந்தான். பிறகு அதைவிடச் சிறிய வளையம் வழியாக. கடைசியாக மிகச்சிறிய வளையம் வழியாக பிதுங்கி வந்தான். நம்பூதிரி சொன்னார் “இப்படியே போனால் இவன் வளையமே இல்லாமல் இந்தப்பக்கம் வந்துவிடுவான் போல இருக்கிறதே!’ என்று. வாழ்வனுபவங்கள் தூலமாக நம் ஐம்புலன்களையும் அவற்றின் மையமான தன்னுணர்வையும் தொடுபவை. அவை மூலமே நமது முதற்கட்ட அறிதல்கள் அனைத்தும் நிகழ்கின்றன. ஆகவே அறிதலின் எந்நிலையும் பிரத்தியக்கம்(பிரத்யட்சம்) என்று கூறப்படும் இந்நிலையிலிருந்து எழுவதாகவே உள்ளது. பிரத்தியக்கத்தைத் துறந்து எந்த நுண்ணறிவும் தன்னளவில் நிலைநிற்க இயலாது. அத்துவித மொய்ஞானம் கூறும் அகம் என்ற தன்னிலை உணர்வுகூட. ஆகவே ஒரு சிந்தனையாளன் எந்நிலையிலும் புறவுலக, பிரத்தியக்க அனுபவங்களைத் தவிர்க்க இயலாது. தவிர்க்க முனையும் சிந்தனையாளன் என்ன செய்கிறான் என்றால் ஏற்கனவே கருத்துக்களாகவும் உருவகங்களாக வும் மாற்றப்பட்டு பிரக்ஞையில் தேக்கப்பட்டுள்ள அனுபவங்களைக் கொண்டு யோசிப்பதை மட்டும்தான்

 

ஏற்கனவே சமைத்துப் பரிமாறப்பட்டதை மீண்டும் சமைக்கும் இந்நிலையை ஆன்மிகவாதிகளிலும் தத்துவவாதிகளிலும் ஒரு சாராரிடம் நாம் காணலாம். இது வாழ்வுடனான நேரடி உறவை இழக்கச் செய்துவிடுகிறது. பிரத்தியக்கத்துடனான உறவு சிந்தனை வெற்று மீபொருண்மையாக (Metaphisics) சுருங்கி விடுகிறது உருவகங்களினாலும் கருத்துருவங்களினாலும் மீபொருண்மைச் சட்டகம் ஒன்றை உருவாக்கி அதற்குள் அலகிலா விளையாட்டை ஆட ஆரம்பிக்கிறது. எந்த ஒரு மீபொருண்மை உருவகமும் அடிப்படையில் உண்மையான ஒரு ஆன்மிகப் பேரனுபவத்தின் வெளிப்பாடாக உருவம்.கொண்டதாகவே இருக்கும். பிரபஞ்சப் பெரும் சலனத்தை ஆனந்தக் களிநடனமாகக் கண்டவன் ஆன்மிக ஞானி. அது நடராஜ வடிவமாகி எடுத்த பொற்பாதம் குறித்த எண்ணற்ற விளக்கங்களும் விவாதங்களுமாகி நம்மைச் சூழ்ந்துள்ளது இன்று. இன்று எவ்வித அனுபவத்துளிகூடத் தெறிக்காமல் பிரபஞ்சப் பெருங்கூத்து குறித்து நடராஜனை முன்வைத்துப் பேசியபடியே போகலாம்.

 

ஆன்மிக தத்துவம் பிரத்தியக்கத் தொடர்பை இழக்கும்போது தருக்கமாக மாறி விடுகிறது. மெய்காண் முறைமையை வகுப்பதில் தருக்கத்திற்கும், தூயதருக்கத்தின் விதிகளான கணிதத்துக்கும் உள்ள பெரும்பங்கை நான் மறுக்கவில்லை. ஆனால் தத்துவம் எந்த அளவுக்கு தருக்கத்தன்மை கொள்கிறதோ அந்த அளவுக்கு அதன் மானுட முகம் தேய்மானமடைகிறது. அர்த்தமற்ற இயந்திர இயக்கமாக ஆகிறது. அத்வைதம், சமகாலத்தில் மேலை மார்க்ஸியம் இரண்டையும் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஒருமையாகக் காணும் தரிசனமே அத்வைதம். அந்த அனுபவதளத்தை அது தவிர்த்துவிட்டபோது ‘அத்யாசம்’, ‘அத்யாரோபம்’ என்று தருக்கம்சமைக்கும் பெரும் இயந்திரமாக மாறியது. நவீன மேலைமார்க்ஸியம் கல்வித்துறையினர் கோட்பாடு கட்டிக் கலைத்து ஆடும் ஆட்டமாக மாறியபோது மார்க்ஸியத்தில் உள்ள பெரும் கருணைஇல்லாமலாயிற்று. இதற்குச் சமானமாக ஒன்றை இலக்கியத்தில் கூறவேண்டுமானால் இலக்கியப் படைப்புக்களை இலக்கண விதிகளாக மாற்றி விளையாடி மகிழும் பண்டிதர்களைக் காட்டலாம்

 

அருவமான இலக்கிய வெளிப்பாட்டை முயலும் படைப்பாளி எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கலே இதுதான். உண்மையான வாழ்வனுபவத்தில் இருந்து உருவாகி, பருண்மையானவற்றை விலக்கி அல்லது புறம் நிறுத்தி  நுண்மையை மட்டுமே வெளிப்படுத்துவதாக அவனுடைய படைப்பியக்கம் அமைய வேண்டியுள்ளது. நுண்மையாக்கப்பட்ட கருத்துக்களுக்கு உருவக வடிவம் தருபவனாக அல்லது உருவகங்களுக்கு கருத்து வடிவம் தருபவனாக அவன் சிறுத்துப் போய்விடுவான். தமிழ்ப்புதுக்கவிதையில் நுண்தளத்துக்கான முயற்சியில், இப்புதைசேற்றில் சிக்கிக்கொண்டவர்கள் பலர். என் நோக்கில் சிறந்த உதாரணங்கள் ஆனந்த் அதில் முதன்மையனாவர். தேவதச்சன் இன்னொருவர். தேவதச்சன் சமீபகாலக் கவிதைகளில் இந்தப் பொறியிலிருந்து மீண்டு மொழி எளிமையும் மெய்யனுபவப்புலமும் கொன அழகிய கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இக்கவிதைகளை வைத்தே தேவதச்சன் குறிப்பிடத்தக்க கவிஞராக இடம்பெறுகிறார். அருவக்கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி அதன் அதிகபட்ச சாத்தியப்புள்ளிவரை கொண்டு சென்ற முதன்மையான தமிழ்நவீனக் கவிஞர் அபி மட்டுமே

 

அருவக் கவிதைகள் எப்படி அந்த அருவத்தளத்தை அடைய இயலும்? திட்டவட்டமான புறவுலகத்தன்மை கொண்ட ஒரு கவிதையை எடுத்துக்கொள்வோம். அது கவிதை என்றால் அந்த புறஉலகத் தன்மையின் ஒரு நுனி எப்படியாயினும் ஓர் அருவத்தன்மையில் ஆழமாகப் புதைந்திருக்கும். தமிழ்க்கவிதையில் மிகத்தெளிவான முழுமையான புறஉலகத்தன்மை கொண்ட சிறந்த கவிதைகளை நாம் மனுஷ்ய புத்திரனின் படைப்புலகில் பார்க்க முடிகிறது

 

மறுமுனையில்

உன் நாசியில்

விழுந்து உடைகிறது

எனது பிரியத்தின்

ஒரு தனித்த மழைத்துளி

மழை வரலாம்

என்று நினைத்துக்கொண்டே

நடக்கிறாய்

சாலையின் மறுமுனையில் இருக்கிறது

உன் வீடு

காற்றை மூர்க்கமாய்

கடந்து கொண்டிருக்கின்றன

மறுமுனையறியாத

எண்ணற்ற மழைத்துளிகள்

 

(இடமும் இருப்பும் – மனுஷ்யபுத்திரன்)

 

தெளிவான காட்சிப்புலம் உடைய கவிதை இது. சாலை, அதில் நடக்கும் ஒரு பெண். அவளைப் பார்க்கும் ஒரு காதலன். அவள் மூக்கில்விழும் மழைத்துளி. அதைத் தன் கண்ணீர் என்று அவன் எண்ணுகிறான். அவள் விரைவாக வீடு திரும்ப அவன் கண்ணீரால் வானம் பூமியை மூடுகிறது – இவ்வாறு இக்கவிதையை நாம் தெளிவாக காட்சிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பிரியத்தின் ‘ஒரு துளி’ என்ற சொல் ஒரு அருவத்தன்மையின் கீற்றை முன்வைக்கிறது. அது தன் இலக்கை –மறுமுனையை கண்டடைந்து விட்டது. அப்படிக் கண்டடையாத பல்லாயிரம் கோடித்துளிகள் காற்றில் சிதறுகின்றன என்ற வரி ஒரு பெரும் திறப்பாக உணரப்படாத காதலையும் அதன் தனிமையின் ஆவேசத்தையும் காட்டுகிறது .அவ்வரியைப் பின்தொடரும் தோறும் நாம் அவ்வக நிகழ்வின் அருவதளங்களுக்குச் சென்றபடியே இருக்கிறோம். அதனால்தான் இது ஒரு சிறந்த ஆக்கமாக உள்ளது

 

இதேபோல ஓர் அருவக்கவிதை தன்னுள் உண்மையான புறஉலக தூல அனுபவத்தளம் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும் எனலாம். முளைத்த பிறகு செடியாகிவிட்டபிறகு விதை இல்லாமலாகும்தான். ஆயினும் செடியின் சாரத்தில் அவ்விதையை நம்மால் அறிய முடியவேண்டும். இதுவே அருவக் கவிதையை அளக்கும் திட்டவட்டமான , அதாவது கைக்குச்சிக்கும், அளவுகோலாகும் – அதன் அருவம் தன்வெளிக்குள் திடமான அனுபவதளம் ஒன்று தன்னை அறியத் தருகிறதா என்பது.  தூலமான கவிதைக்குள் தெரியும் அருவத் தளம் அதன் முடிவின்மைச் சாத்தியத்திற்கான ஆதாரம். அருவக் கவிதைக்குள் தெரியும் தூலம் அது வெறும் மன மீட்டலல்ல என்பதற்கான ஆதாரம்

 

மனசின்

அனந்தகோடிச் செய்முறைகள்

சிலிர்த்து கொள்கின்றன

 

(மாலை: செய்முறைகள்)

 

என்று அபி எழுதும்போது மனுஷ்யபுத்திரனின் கவிதையில் மழை எனும் நிகழ்வின் பிரம்மாண்டத்தை வேறு ஒரு தளத்தில் நாம் உணர முடிகிறது. மனதின் பிரிந்து பின்னி செல்லும் இயக்கத்தின் திகைக்கவைக்கும் பேருரு. இதுவே அபி கவிதைகளின் அருவத்தன்மையின் அடிப்படை வலுவைநிறுவுகிறது. மீண்டும் மீண்டும் அபியின் கவிதைகள் அவரது அருவ வெளிப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான அனுபவ தளத்தை நமக்கு அறிவுறுத்துகின்றன. அவ்வனுபவதளத்திலிருந்து சில பிரதிநிதித்துவக் கூறுகளை அவர் பிரித்து எடுத்துக்கொள்கிறார். அவை பெரும்பாலும் படிமங்கள். அபூர்வமாக கருத்துருவங்கள். அவ்விரண்டையும் மீண்டும் மீண்டும் ‘தூய்மைப்’படுத்தி அனுபவ தளத்தை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார். இதன் மூலம்தான் அவரது கவிதைகளுக்குஅருவத்தன்மை கைகூடுகிறது. அதன்பின் அந்தப் படிமங்களையும் கருத்துருவங்களையும் பின்னி முடைந்தும் ஒன்றோடொன்று மோதவிட்டு ஒன்றையொன்று கழிக்கச் செய்தும் தன்கவிதைகளை அவர் ஆக்குகிறார்

 

படிமங்களிலும் கருத்துருக்களிலும் அபி செய்யும் ஒரு நுண்ணிய உத்தியை வாசகர்கவனிக்கவேண்டும் என்று எண்ணு கிறேன். படிமங்கள் என்பவை பெரும்பாலும் விழியின் தருக்கத்துக்கு உட்பட்டவையாகவே அறியப்படுகின்றன. கண்ணால் காணப்படும் ஒரு காட்சியானது கருத்தில் மேலதிக தளங்களை உருவாக்குவதே படிமம். அபி படிமங்களை காட்சித் தன்மையிலிருந்து திட்டமிட்டே விடுவித்து விடுகிறார். அவற்றுக்கு காட்சியின் பல சாயல்களை அளித்து காட்சியின் தருக்கத்தை மட்டும் இல்லாமல் செய்கிறார். இருவகையில் இதை அவர் செய்கிறார் என்று படுகிறது .

 

புரண்டு படுக்க இடமின்றி

ஒற்றையடிப்பாதை

சலிக்கிறது

(மாலை: திரும்புதல்)

 

என்ற கவிதைவரியில் காட்சிக்கு அகப்படும் பாதை என்ற தூலமானது அருவமாக்கப்படுவது அதன் செயலினூடாக

 

விடைகள் மிகவும்

மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவனபோல

முக்கி முனகி வியர்வை துளிர்த்து

நம் முகத்தில்

திருப்தி தேடுபவை

 

(விடைகள்)

 

என்ற கவிதையில் விடை என்ற கருத்துருவகம் தூலமான செயல்களால் அடையாளப்படுத்தப்பட்டு படிமம் ஆக்கப்பட்டுள்ளது. இவ்விரு வகையிலும் அபி உருவாக்கும் படிமங்கள் அருவப் படிமங்களாகவே பெரும்பாலும் உள்ளன

 

ஜென் மரபை அறிந்தவர்கள் ‘ஒரு கை ஓசை’ என்ற கருத்துரு குறித்து அறிந்திருப்பார்கள். அருவக் கருத்துருக்களுக்குச் சிறந்த உதாரணம் அது. எவ்வாறு ஓர் அருவக் கருத்துரு உருவாக்கப்படுகிறது?

 

.அ) நேரடி அனுபவம் ஒன்று தருக்கப்படுத்தப்பட்டு சாராம்சப்படுத்தப்பட்டு கருத்துருவாகச் சுருக்கப்படுகிறது.

 

ஆ) அக்கருத்துருவின் நேர் எதிர்கூறுடன் அது ஒப்பிடப்பட்டு அல்லது இணைக்கப்பட்டு அதன் தருக்க மதிப்பு களையப்படுகிறது.

 

ஆ) இவ்வாறு நடைமுறைப்பொருள் இழக்கப்பட்ட அக்கருத்துருவானது ஒரு சாதாரணக் கருத்துருவினைப் போல சகஜமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ‘எதிர்பாராத ‘படி அதைக் காணநேரும் வாசகன் அல்லது மாணவன் ஒருவகை அதிர்ச்சியை அடைகிறான். அதன் மூலம் ஏற்படும் அகநகர்வின் மூலம் அக்கருத்துரு உருவாக்கும் பாதிப்பே அதன் பயன்மதிப்பாகும். ஜென் வழிப்பட்ட ஹைக்கூ கவிதை இவ்வாறு அருவக்கருத்தை, அருவப்படிமங்களைக் கையால்வதை  நாம் சாதாரணமாகக் காணலாம்

 

ஆனால் அக்கருத்துருக்களை அவை உண்மையான அனுபவத்தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு அதன் மீதான தீவிர தியான நிலையிலிருந்து உருவாக்கும் போதே அவை மதிப்பிற்குரியதாகின்றன. நான் பல கட்டுரைகளில் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதுபோல ஓர் அருவக் கருத்துருவையோ,அருவப் படிமத்தையோ காணும் வாசகன் வேறு வேறு வடிவில் அதைப்போல பலவற்றைச் ‘சுயமாக’ அவனும் உருவாக்கியபடியே செல்லலாம். தான் மிகப் படைப்பூக்கம் கொண்ட செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஞானமேடை ஏறிய ஜென் குருக்களுக்கு இணையாகச் சிந்திப்பதாகவும் கற்பனை செய்துகொள்ளலாம். அது அபத்தமான ஒரு பகற்கனவேயாகும். என் வாசிப்பில், இக்கட்டுரையில் ஏற்கனவே கூறியுள்ளபடி, தமிழில் இதற்குச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த்’தான். அவரது  ‘பறந்து செல்லும் பறவையை’ என்ற சிறுகவிதை சிற்றிதழ் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒன்று. ஜென்மரபில் சிறிதளவு அறிமுகமுடைய ஒருவாசகனால் அது வெறும் எதிரொலியே என்று அறிய இயலும். தமிழ்ப் புதுக்கவிஞர்களில் இத்தகைய புதைசேற்றில் ஒரு தருணத்திலாவது அழுந்தாதவர்கள் தேவதேவன் போல் தன் அனுபவ மண்டலத்தையே சார்ந்து இயங்கும் சிலரே

 

அருவக் கருத்துருவினை உருவாக்குவதோடு நின்றிருந்தால் இப்பட்டியலில் அபியையும் சேர்த்து விட்டிருக்கத் துணிந்திருப்பேன். ஓர் அருவக் கருத்து அனுபவத்தின் மீதான வேறு ஒரு கோணம் மட்டுமே. அபி அதற்கு அடுத்த தளத்திற்குச் சென்று அருவப் படிமங்களையும் அருவக்கருத்துக்களையும் கருவிகளாக்கி தன்னுடைய நுண்மையான அனுபவ தளத்தைச் சொல்ல முற்படுகிறார்

 

வடிவம் எனக்கின்றி

வடிவமைப்புகளைச்

சுற்றிக் கொண்டிருப்பேன்

 

(என்விதி)

 

இல்லாமையிலிருந்து

தோற்றங்கள்

எனக்கு வரத்தொடங்கின

(அவன்)

 

ஒருநாள் ஒரு

சாயலைப் பார்த்தேன்

(சாயல்)

 

ரத்தம் இருள்வது தெரிகிறது

 

(மாலை:போய்வருகிறேன்)

 

எங்கோ போய்க்கொண்டிருக்கும்

வெட்டவெளி

 

(சுற்றி)

 

இல்லாதிருத்தலே

இருத்தல்

 

(இருத்தல்)

 

இத்தகைய கருத்துருக்களை நாம் நவீனத் தமிழ்க் கவிதைகளில் தாராளமாகவே காணலாம்.  இவை ஒரு எண்ண வெளிப்பாடாக மட்டும் நின்று விட்டன என்றால் இவற்றுக்கு ஒரு கவியுருவகத்தின் (மெட்டஃபர்) மதிப்பு மட்டுமே உள்ளது. ‘மலையேறும் காலம்’ ‘இருளைப் பரப்பும் வெளிச்சம்’ போல பல வகையான கவியுருவகங்கள் நம் கவிதைகளில் மலிந்துமுள்ளன. பலவிதமான அனுபவத்திறப்புகளை தங்கள் காட்சித்தன்மை மூலமே எழுப்பும் படிமங்களுக்கு உள்ள கவிதை மதிப்பு இத்தகைய கவியுருவங்களுக்கு இல்லை என்றே நான் எண்ணு கிறேன்.உருவகங்கள் புனைகதையின் கருவியாக மாறி நீண்டநாள் ஆகிவிட்டது (விஷ்ணுபுரம் உருவகங்களையே தன் கட்டுமானப் பொருளாகக் கொண்ட ஆக்கம்)

 

அபி தன் கவிதைகளில் அருவப் படிமங்களையும் அருவக் கருத்துருக்களையும ஊடும் பாவுமாக நெய்து உருவாக்கும் அருவமான அனுபவதளமே அவற்றுக்கு கவித்துவமான முதன்மையை அளிக்கிறது.

 

கனவு – அன்று – கனவு

 

எல்லாம் முடிந்துவிட்டது எனக்

கடைசியாக வெளியேறியபோது

கவனித்தான்

பின்புலமற்ற

தூய நிலவிரிவு ஒன்று

அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்

கனவு அன்று அது

 

ஒளியிலிருந்து

இருளை நோக்கிப்

பாதிவழி வந்திருந்தது

அந்த இடம்

கிழக்கும் மேற்கும்

ஒன்றாகவே இருந்தன

தூரமும்

தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்

எப்போதாவது ஒரு மனிதமுகம்

தெரிந்து மறைந்தது

கூட

ஒரு பறவையும்கூடத்

தொலைவிலிருந்து தொலைவுக்குப்

பறந்துகொண்டிருந்தது

 

சஞ்சரிக்கலாம்

மறந்து மறந்து மறந்து

மடிவுற்றிருக்கலாம் அதில்

நடக்க நடக்க

நடையற்றிருக்கலாம்

ஆயினும்

உறக்கமும் விழிப்பும்

துரத்திப்பிடிப்பதை

அவற்றின் மடிநிறைய

தலைகளும் கைகால்களும்

பிதுங்கிக் கொண்டிருப்பதைப்

பார்க்கும் நிமிஷம்

ஒருவேளை வரலாம்

 

கனவு அன்று எனத் தோன்றினாலும்

கனவாக வே இருக்கலாம்

 

இதுவரை இக்கட்டுரையில் பேசிய அருவக் கவிதையின் இயல்புகளை  இக்கவிதையை வைத்து ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் இது முற்றாக அருவக் கவிதை. நுண்ணிதின் நுண்ணிதான அக அனுபவம் ஒன்றை சொற்கள் மூலம் தொட முயல்கிறது. தன் சாத்தியத்தின் உச்சத்தில் அதைத் தீண்டியும் விடுகிறது. ஆகவே இது கவிதை. ஆனால் இக்கவிதை முற்றாக ஒரு ‘அந்தர நடை’ அல்ல. ஒவ்வொரு வாசகனும் உணரக்கூடிய ஒன்றை, ஒரு கனவை நினைவில் கிளர்த்துவதனால்தான் இக்கவிதையை நாம் அனுபவமாகக் கொள்ள இயல்கிறது. புற உலகு விசித்திரமாக மடிந்து பரவிய கணவின் வெளிபோல உள்ளது இக்கவிதையின் நிலக்காட்சி. ‘நடக்க நடக்க நடையற்ற’ கனவுநடைகள் நாம் அனைவரும் அறிந்தவையே அங்கிருந்துதான் இக்கவிதை தொடங்குகிறது. ஆனால் தன்கூறல் முறை மூலம் அதை ரத்துசெய்து கடந்து செல்கிறது.

 

இது அருவமான படிமங்களினால் ஆனது இதன் காட்சியுலகு   ‘பின்புலமற்ற நிலவிரிவு’, ‘கிழக்கும் மேற்கும்’ ஒன்றாக மயங்கிக்கிடக்கிறது. ‘தொலைவிலிருந்து தொலைவுக்குப்’ பறக்கின்றன பறவைகள். இப்படிமங்களை கனவு என்ற கருத்துருவம் சந்தித்து ஊடுருவுகிறது. அக்கருத்துருவை கவிதைக்குள் ஒரு முரண்பாட்டை உருவாக்கி ரத்து செய்து அருவக்கருத்துருவாக ஆக்குகிறார் அபி.’கனவுபோன்று இருந்தாலும் கனவு அன்று அது’ என்று முதலில் கூறப்பட்டு கனவு அன்று எனத் தோன்றினாலும் கனவாகவே இருக்கலாம் என்று முரண் அளிக்கப்பட்டு அக்கருத்துரு அருவமாக்கப்படுகிறத. இவ்விரு சரடுகளும் ஊடுபாவெனப் பின்னி இக்கவிதை தன் இலக்கான அகவயமான நுண்ணனுபவத்தை நோக்கி நகர்கிறது. திறனாய்வாளன் இந்த இடம்வரை மட்டுமே வரலாம், கவிதையை வாசகனே அனுபவித்து அறியவேண்டும்

 

[மேலும்]

முந்தைய கட்டுரைஇலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்