மும்மொழி கற்றல்
மும்மொழி- கடிதம்
மும்மொழிகற்றல்- மறுப்பு
வணக்கம் ஜெ,
சா.விஜயகுமாரின் எதிர்வினையை (https://www.jeyamohan.in/126335#.Xdl3ZWZS9PY) படித்தேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ் இணையச் சூழலில் வரைவு தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக எழுத்துப் பூர்வமான, கொள்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட ஒன்றை முதன்முதலில் பார்க்கிறேன். பொதுவாக இதுகுறித்து சில காணொலிகளும், மேடைப் பேச்சுகளுமே அதிகம் பகிரப்பட்டன.
இனி, அவரது கடிதத்தில் உள்ளவற்றுக்கு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அ. பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் தமிழில் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டிருப்பது நல்ல செயல். சமூக வளைத்தளங்களில் ’தமிழில் தேசிய கல்விக் கொள்கை’ குறித்து தகவல்கள் வந்த போது பிறகு தரவிரக்கம் செய்துகொள்ளலாம் என விட்டுவிட்டேன். தமிழக அரசு மொழிபெயர்ப்பை வெளியிட்டதாகவும் செய்தியைப் பார்க்க முடிந்தது. ஆனால், பின்னர் கூகுள் மூலம் தேடிய போது. எதுவும் கிடைக்கவில்லை. இதிலிருந்து இந்த மொழிபெயர்ப்பு அதிகம் பகிரப்படவில்லை, படிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.
ஆ. இதுவரை மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் அனைத்துமே ஹிந்தியை பரவலாக்க முயற்சி செய்துள்ளன. தற்போதைய அரசும் இதையே செய்யும். ப.சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்த போது ஹிந்தி திவஸில் பேசிய பேச்சின் சாரம்சம் அமித்ஷா சமீபத்தில் பேசியுள்ளதைப் போன்றதுதான்.
அதன் வீடியோhttps://www.youtube.com/watch?v=JSvbZywednU.
இது நமது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷடமான விசயம். சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகளால்/காங்கிரசால் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவால் செயல்வடிவம் பெற்ற திட்டம். இந்த விசயத்தில் மத்தியில் ஆளும் அரசியல்வாதிகள் ‘வெள்ளையனை விரட்டி விட்டோம், இனி அவன் மொழி மட்டும் எதற்கு’ என்ற பழமைவாதத்தில் உள்ளனர். எனவே அவர்களது முயற்சிகள் தொடரும். ஹிந்தி திவஸ் என்று ஒரு நாள் கொண்டாட்டத்தை இனி ‘ஹிந்தி வாரம்’ என வாரம் முழுக்க கொண்டாட வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்த பொதுவான மத்திய அரசின் போக்கை, ‘தேசிய கல்விக்கொள்கையே இதற்காகத்தான்’ என்று பரப்புவது குறுகலானது என நினைக்கிறேன். கல்விக்கொள்கையிலும் இது பிரதிபலித்திருக்கலாம். அதை எதிர்ப்பது, ஜன நாயகக் குரல் எழுப்புவது சரி. ஆனால், கல்விக்கொள்கையிலுள்ள மற்ற நல்ல விசயங்கள், சுமாரான விசயங்கள் எதுவும் உரையாடப்படாமல், விமர்சிக்கப்படாமல், வெளியே தெரியாமல் இருப்பது அறிவார்ந்த சமூகத்தில் சரியான போக்கா?
இ. அவர் எடுத்துக்காட்டிய பகுதிக்கு மாறாக இந்தப் பிரிவு, ஒன்றாம் வகுப்பிலிருந்தே எழுதப்பயில பயிற்சிப் புத்தகங்கள், கணக்குப் பயிற்சிப்புத்தகங்கள் வழங்கப்படும் என்கிறது
விஜய்குமார் சொல்லும் பகுதியில் 1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மொழிகள் மற்றும் கணிதத்திற்கு பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று சொல்கிறது. 3 மொழிகளுக்கும் என சொல்லப்படவில்லை.
இது ஒரு குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியதுதான். ஆனாலும் இந்தப் பகுதி P2.3 இல் இருக்கிறது. நான் குறிப்பிட்ட பகுதி பின்னால் P4.5.3. இல் வருகிறது. எனில், முதலில் 1லிருந்து 5 ஆம் வகுப்பு வரை எனப் பொதுவாகக் கூறிவிட்டு, பின்னால் வரும் பகுதியில் 1-3 வரை பயிற்று மொழியில் மட்டும் எழுதினால் போதும், அதன் பிறகு மற்ற மொழிகளில் எழுதப் பழகலாம் எனக் குறிப்பிடும் போது அந்தக் குழப்பம் நீங்குவதாத்தான் கொள்ள வேண்டும். மேலும், அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?! என்கிறார்.
இது என்ன மாதிரியான வாதம் எனப் புரியவில்லை. எனில், படிக்காத அல்லது ஆங்கிலம் தெரியாத பெற்றோர் எனில், இருமொழிக் கொள்கை உள்ள பள்ளிகளில் கூட படிக்க வைக்க முடியாதே!
4. எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?
வேறேந்த நாட்டிலும் இத்தனை பூர்வ குடி மொழிகள் இல்லாததால் இதற்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இருக்கலாம். நமது அண்டை மாநிலங்களின் மொழியை அறிந்திருந்தால் அந்தக் கலாச்சாரத்தை நம்மால் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களது இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் அல்லாமல் நேரடியாகப் படிக்கலாம். தத்துவங்களை, பழமொழிகள் , சொலவடைகள் போன்ற மொழி சார்ந்த அடுக்குகளைப் புரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, ‘ஆத்மா’ என்கிற சொல்லுக்கு உரிய பொருளில் ஆங்கிலத்தில் ஒரு சொல் இல்லை. அதனால் தோராயமாக அதன் பொருள் தரக்க்கூடிய soul என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? கூடுதலாக ஒரு மொழியைத் தெரிந்துகொண்டால் இந்த இழப்பு இல்லாமல் நேரடியாகப் படிக்கலாம். திருக்குறளைத் தமிழில் படிப்பதும் வேறெந்த மொழியின் மொழிபெயர்ப்பில் படிப்பதும் ஒரே அனுபவமாகுமா? ஒரு தெலுங்கர் மூன்றாவது மொழியாகத் தமிழ் கற்று திருக்குறளை நேரடியாகப் படிப்பதும், தமிழர் கன்னடம் கற்று பசவேஷ்வரரின் வசனங்களை, அக்க மஹாதேவியின் கவிதைகளைப் படிப்பதும் நிகழ்ந்தால் அது எப்படிப்பட்ட சமுதாயமாக இருக்கும் என உரைக்கிறது என்று நான் புரிந்துகொள்கிறேன். இது தனி மனித வளர்சிக்கு மட்டுமின்றி தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வலுசேர்ப்பதாக இருக்கும் என்கிறது. மேலும் பன்மொழி கற்பதால் நிகழும் மூளைத் தூண்டலானது பிற பாடங்களையும் சிறப்பாகக் கற்க உதவுவதாகவும் சொல்கிறது. இது எந்த ஆய்வுகள் அல்லது கணக்கெடுப்பின் அடிப்படையில் சொல்லப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை.
ஈ. மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் வேலைகளுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் அனுகூலம் என்பது நிச்சயம் அநீதிதான். இதில் விஜயகுமாரின் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன். இது மாற்றப்பட வேண்டும். சமீபத்தில் வங்கித் தேர்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. தபால் துறைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் பிராந்திய மொழிகளில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டு சர்ச்சை ஆனது. இவை களையப்பட வேண்டும். நமக்கு ஏற்கனவே IAS, NEET போன்ற தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்துவதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. இது அனைத்து மத்தியக் கல்வி, வேலை சம்பந்தப் பட்ட தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப் பட வேண்டும். IIT நுழைவுத் தேர்வு குஜராத்தியில் மட்டும் கூடுதாலக நடத்தப்பட்டது புதிய செய்தி. தேடிப்பார்த்ததில் 2013 இல் இருந்து அந்த மாநிலம் கேட்டுக்கொண்டதற்காக குஜராத்தியில் நடத்தப்படுவதாக CBSE தெரிவித்துள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே. இதை எப்படி ஒப்புக்கொண்டார்கள், மற்ற மாநிலங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை எனத் தெரியவில்லை. “The Gujarat government had for the first time in 2013 requested the board to conduct JEE (Main) in Gujarati. That facility has been extended ever since,” a source in CBSE told Express. TN school education and higher education departments said they are unaware and needed to look into the records. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/nov/25/gujaratis-alone-to-get-jee-main-question-paper-in-their-regional-language-1710302.html
உ. போகிற போக்கில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள் என்கிறார். சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றி உங்கள் தளத்திலேயே பல கட்டுரைகள் உள்ளன. விஜயகுமார் உங்கள் நெடு நாளைய வாசகராக இருந்தால் படித்திருப்பார். குறிப்பாக ஒரு கட்டுரையில் ஏன் எந்த ஒரு ஆட்சி மத்தியில் அமைந்தாலும் சமஸ்கிருதத்தை வளர்க்கவே விரும்பவர் என எழுதியிருந்தீர்கள். உங்களது மற்றுமொரு கட்டுரையில் கீழே உள்ள பகுதி நண்பருக்கு விளக்கம் அளிக்கும்.
இந்திய நிலப்பகுதியில் இருந்த பிற மொழிகள் சம்ஸ்கிருதத்தை ஒட்டி வளர்ச்சி பெற்றன. சம்ஸ்கிருதம் அந்த மொழிகள் அனைத்துக்கும் பொதுவான இணைப்பாக அமைந்தது. அந்தமொழிகளில் இருந்து சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கு வந்தன. சம்ஸ்கிருதம் வழியாக அவை பிற மொழிகளுக்குச் சென்றன. எல்லா மொழிகளும் வளர்ச்சி அடைந்தன. அவற்றை சம்ஸ்கிருத அபப்பிரஹ்ம்ஸ மொழிகள் என்று சொல்கிறார்கள். இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துடன் ஆழமான பிரிக்க முடியாத உறவு உண்டு. அம்மொழிகளின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே சம்ஸ்கிருத உறவு இருந்திருக்கிறது. அந்த உறவின் விகிதாச்சாரம் மட்டுமே மாறுபடுகிறது.
அதேபோல சம்ஸ்கிருதத்தில் இந்த அத்தனை மொழிகளும் புகுந்துள்ளன. தமிழ் சம்ஸ்கிருதத்தில் ஆழமான பாதிப்பு செலுத்திய மொழி.
நீங்கள் எழுதிய இந்த வரிகள் அடங்கிய மொழி- 4, இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ் https://www.jeyamohan.in/3842#.XK8s6qRS82w கட்டுரையையும், மொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி? https://www.jeyamohan.in/3863#.XK8ofKRS82w கட்டுரையையும் நண்பர் துவக்கமாகப் படிக்கலாம்.
உ. நண்பர் குடுத்திருக்கும் செய்தியில் கல்வி இடை நிற்றல் காரணமாகக் குறிப்பிடவில்லை. மாறாக,
Ajay Singh, joint director of Sarva Shiksha Abhiyan, who is spearheading this project, said: “The idea is to help students learn lessons in a language that is easy for them to understand. Officials said that in Uttar Pradesh, teachers from one region are often posted in another region and are unable to reach out to students whose mother tongue is not known to them. To break the language barrier, we have transformed books from standard Hindi to local dialects. The content remains unchanged,” Mr. Singh said. என்கிறது. எந்த காரணத்திற்காக அந்த மாநில அரசு கொண்டு வந்திருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் இது குறிப்பிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மொழிகள் ஹிந்தியின் வட்டார வழக்குகள் என்ற நிலையிலிருந்து மாறி, தனி மொழிகளாக அங்கீகாரம் பெற இது முதற்படி ஆகும்.
உத்தரப்பிரதேசத்தில் ஹிந்தியில் பலர் தோல்வியடைந்தது பற்றி தமிழ் நாட்டில் ஒரு நக்கல் நிலவுகிறது. கரு.பழநியப்பன் போன்ற திரை/தொலைக்காட்சி பிரபலங்கள் கூட அப்படி பேசுகிறார்கள். ஒரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரின் பொதுத் தேர்வுகளில் பலர் தோற்றதும் அப்படி பேசப்பட்டது. அந்த மாநிலங்கள் தாங்கள் பின் தங்கி இருப்பதை உணர்ந்து கல்வியைத் தரப்படுத்த ஓட்டு வங்கி அரசியலைத் தாண்டி இந்தச் சீர்திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கின்றன. பீகாரில் பொதுத்தேர்வில் காப்பி அடிப்பது போன்ற விசயங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. இவற்றை பாராட்ட மனமில்லாவிட்டால் அமைதியாகவாவது இருக்கலாம். பா.ஜ.க. அரசு ஆள்கிறது என்பதாலேயே யோகி ஆதித்ய நாத் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் சிலர் இறந்ததை தமிழ் நாட்டில் அதிகம் பேசினார்கள். அதே காலகட்டத்தில் தமிழ் நாட்டில் அரியலூர்க்கருகில் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண கண்புரை அறுவை சிகிச்சை செய்து பலர் கண்பார்வை இழந்தது அதிகம் பேசப்படவில்லை. தமிழில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாமல், 8-ஆம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று தமிழ் நாட்டில் இருப்பதனால் என்ன பயன்?
இன்றைய தேதிக்கு செய்தித்தாள்கள் போன்ற ஊடகங்களிலேயே ஏகப்பட்ட பிழைகள். உத்தரப் பிரதேசத்தை நக்கல் செய்வதை விட்டுவிட்டு, இவர்கள் இதற்காக கவலைப் படலாம், /* The Higher Education Department has proposed to train college students in Tamil. The Tamil Nadu State Council for Higher Education is considering the idea as surveys have revealed that students are unable to coherently frame their thoughts and write even in their mother tongue.*/ https://www.thehindu.com/news/cities/chennai/college-students-to-be-imparted-training-in-tamil-language/article29551390.ece
ஊ. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள்
இவை சுருக்கப்பட்ட வடிவங்கள் என்பதால் இவற்றை மொழிபெயர்ப்பு எனச் சொல்ல முடியாது. இவற்றின் பயன் அறிமுகமாக மட்டுமே இருக்க முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆட்சி மொழியாக இருப்பதால் அந்த மொழிகளில் ஆவணங்களை வெளியிடுவது மத்திய அரசின் வழக்கமான நடை முறை சார்ந்தது . ரயில் நிலைய பெயர்ப்பலகையில் 22 மொழிகளிலும் ஊரின் பெயரை எழுதி வைக்க முடியாது. ஆனால், இது போன்ற விசயங்களில் செய்யலாம். அதற்கான காலம் கனிந்து வர வேண்டும்.
எ. மொழிபெயர்ப்பு ஒரு பிரச்சனை. சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என பார்ப்பது கடினம். NEET தேர்வின் கேள்வித்தாள்களை தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டவர்களை வைத்து மொழிபெயர்ப்பு செய்தும் கூட, தமிழ் கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததாகவும் அதனால் பல மாணவர்கள் தவறான விடையளிக்க நேர்ந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. மத்திய அரசு வெளியிடும் ஒவ்வொரு அறிக்கை, கோப்புகளையும் 22 மொழிகளில் வெளியிட்டு மொழிபெயர்ப்புக்கும் பொறுப்பேற்பது நடக்காத வேலை. மொழிபெயர்ப்பு பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து உரிய கால அவகாசம் கொடுத்து அவை தயாரானவுடன் ஒன்றாக வெளியிடலாம்.
பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் வெளியிடப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பிலும் தவறான பொருளைத்தரும் மொழிபெயர்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு இந்த 2 வரிகளைப் பார்க்கலாம்.
Children between the ages of 2 and 8 also have an extremely flexible capacity to learn multiple languages, which is a crucial social capacity that must be harnessed, in addition to the well-established cognitive benefits of multilingualism.
இதை, ‘இரண்டு முதல் எட்டு வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு பலமொழிகளை கற்றுக்கொள்வதற்கான மிக நெகிழ்வான ஆற்றல் இருக்கிறது. பலமொழிகளைக் கற்பதால் கிடைக்கும் நன்மைகள் பல இருப்பினும் இந்த சமூக ஆற்றலை இயன்றளவு நேர்வழிப்படுத்தவும் வேண்டும்’என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
harness என்பதை இடத்திற்குத் தகுந்தவாறு பொருள்கொள்ளாமல் அகராதி சொல்லும் நேரடி முதற் பொருளில் பயன்படுத்தி உள்ளார்கள். இது பன்மொழித்திறன் என்பது என்னவோ தவறாகப் பயன்படக்கூடிய திறமை போலவும், அதனால் அதை நேர்வழிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பது போலவும் மாற்றிவிடுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு எனக்குக் கிடைக்கும் முன்னர், நான் இதை இப்படி மொழி பெயர்த்திருந்தேன்.
’2 வயதிலிருந்து 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மொழிகளைக் கற்பதில் மிக அதிகமான நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய திறன் பெற்றுள்ளனர். இந்தத்திறனானது, பன்மொழி அறிவின் காரணமாக வெவ்வேறு விசயங்களையும் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்வதோடு, முக்கியமான சமூக ஆளுமைத் திறனாகவும் விளங்குவதால், ஊக்குவிக்கபடவேண்டிய திறனாகும். ’
சுற்றி வளைத்துச் சொன்னாலும், இது ஆங்கிலத்தில் கொடுக்கும் பொருளுக்கு நெருக்கமானது என நினைக்கிறேன். நான் இதில் துறை நிபுணர் அல்ல். மேலும் மிகவும் மெனக்கெட்டு செய்த மொழிபெயர்ப்பும் அல்ல.
இப்போது யோசிக்கையில் ’பயன்படுத்திக்கொள்ள வேண்டிய திறன்’ அல்லது ‘வளர்த்துவிடப் படவேண்டிய திறன்’ என்று கூட நேரடியாக harness இன் இரண்டாவது பொருளில் மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது.
ஏ. உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிப்பில் எதைக் குறையாக குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. விண்ணப்ப்போருக்கு ஏற்கனவே கற்பித்தல் அனுபவம் இருப்பின் அதற்கு குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கப்படும் என்றும் புதிதாக தேர்வு வைக்காமல் ஏற்கனவே SLET, UGC NET ஆகிய தேர்வுகள் எழுதியிருப்பின் அந்த மதிப்பெண்களைக் கொண்டும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் பெரிதாக எதுவும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. முந்தைய பத்தியில் ‘தமிழ் நாடு பெருமைப்பட வேண்டும்’ என்றும் 9 வது பத்தியில் ‘தமிழ் நாடு வெட்கப்பட வேண்டும்’ என்றும் நண்பர் குறிப்பிடுகிறார். என்ன ஒரு உணர்ச்சிகர ஊசலாட்டம்.
நன்றி,
சாய் மகேஷ்.