அபியின் அருவக் கவியுலகு-2

அபியின் அருவக் கவியுலகு-1

பகுதி இரண்டு: யாருடையதென்றிலாத சோகம்

 

அபியின் இரண்டாம் கட்டத்தில் அவரது கவியுலகில் அருவமான படிமங்கள் செறிவான மொழியில் வெளிப்படுகின்றன. அதேசமயம் மிக அரிதாகவும் அவை உள்ளன. அலங்காரங்களும், செயற்கையான ஒலி அழகுகளும் முற்றாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன உண்மையான அனுபவப் பின்புலம் உடையதாகவும் உள்ளன

 

உறக்கங்களுக்குள்

ஒளிக்கனவுகளுக்காய்

பதுங்கிய பகலைத்

தேடுகின்றதோ

 

என்று முந்தைய காலகட்டத்தில் எழுதிய அதே அருவமான அனுபவ நிலையையே

 

என்றைக்குமில்லாமல் இன்று

பின்னணி ஓசைகள் இன்றி

முனகலின்றி

வந்து நின்றது இருள்

 

என்று ஆரவாரமில்லாமல் சகஜமான மொழியில் கூறிவிட முடிகிறது இந்த மாற்றம் வெறுமே வெளிப்பாட்டில் நிகழ்ந்துவிட்டது அல்ல. மாறாக அடிப்படை மனநிலையில் ஏற்பட்ட மாற்றம். கவிதை என்பது ஒருவகையான கூறுமுறை என்ற எண்ணம் முதற்காலகட்ட கவிதையில் உள்ளது. கவிதை என்பது ஒருவித அறிதல் முறை என்ற பிரக்ஞை இரண்டாவதில். அகத்தில் அறிய நேரிட்ட வெற்றிடத்தை உரக்கக் கூவி அறிவிக்கும் முனைப்பு பின்னதில்.

 

அபியின் கவிதைகளில் முக்கியமானதும் ஒருவகையில் ஒரு திருப்புமுனையும் ஆகும்   ‘தெளிவு’ என்ற இக்கவிதை . கொள்ளும் மெளனம் மிக்க அழுத்தம் கைகூடிய கவிதை

 

சொல் அழிதலும் இரவு அவிழ்தலும் இசைவாயின

யாருடையதென்றிலாத

சோகம்

அரைக்கண் பார்வைபோல்

கிறங்கித் திரிந்தது

 

என்ற வரியில் தான் கூறவேண்டியது – அல்லது கூற முயலவேண்டியது என்ன என்பதை அபி அடையாளம் கண்டு விட்டிருக்கிறார். எங்கு தொடர்ந்து தன்கவிதை மோதி சிரம்  உடைந்து மடிய வேண்டுமோ அந்தக் கற்பாறைக்  குளுமையை.

 

‘யாருடையது என்றிலாத சோகம்’ அடை யாளங்கள் இல்லாதது. எவரும் எப்போதும் எடுத்தணியத்தக்கதாக எல்லோர் அருகேயும் காத்திருப்பது. காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது. சாத்தானால் புரிந்துகொள்ளப்படவோ கடவுளால் நிவர்த்திக்கப் படவோ முடியாதது

 

தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவை தேடி பிடிவாதம் ஏறி

பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக்கொண்டேன்

 

என்று அபி தன் தளமாற்றத்தை வாக்குமூலம் செய்கிறார். ‘எதையும் தொட்டிராத அந்தப் புதிய கைகள் எங்கெங்கும் நீண்டு எதையும் தொடாது திளைப்பதன்’ சித்திரங்களாகவே அவரது கவிதைகள் பிறகு காட்சி தருகின்றன.

 

இவ்விரண்டாம் கட்டத்தில் வாசகனின் கூரிய மொழிப்பிரக்ஞையின் தீண்டலுக்குக் காத்து நிற்கும் நுட்பமான சொல்லாட்சிகள் பலவற்றை அபியின்கவிதைகளில் காணமுடிகிறது.

 

வடிவ விளிம்புகளைக்

கற்பிக்க

நான் இல்லாததனால்

நீலவியாபகம் கொண்டது

 

என்ற வரிகளில் உள்ள ‘நீலவியாபகம்’ சட்டென்று விரியச் செய்யும் ஓர் அகன்ற அனுபவம் உயர்தரக் கவிதைகளுக்கு மட்டும் உரியது

 

இம்முறை

பள்ளத்தாக்கில்

பனியின் மிச்சம் அதிகம்

 

என்று ரத்தினச் சுருக்கமாக தொட்டுக்காட்டி கவிதை நகர்கையில் மலைப் படுகையில் வெண்நுரைபோல எஞ்சிய, மெல்லக் கரைந்து மறைகிற பனி ஓர் ஓவியக் காட்சிபோல் மனதில் விரிந்து விடுகிறது. இக்கவிதையின் அர்த்த, உணர்வு எல்லைகளைக்கூட கடந்து அக்காட்சி புதுப்புது தரிசனங்களைத் தருகிறது.

 

காலம்

ஊசியிட்டு குத்தி மல்லாத்திய

பூச்சிகளாய்

மனிதர்கள் – புகைப்படங்களில்

பேசமுயன்று

சிரித்து, திகைத்து இப்படி..

 

என்ற மிகத்துல்லியமான புறவயக்காட்சித்தளம் கொண்ட படிமங்களும் அபியின் இக்காலகட்டத்துக் கவிதைகளை சிறப்புறச் செய்கின்றன. இவற்றினூடாக வெளிப்படும் அபியே தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர்

 

இந்தக் கவிதைகளைவைத்து அபியை இவ்வாறு வகுத்துக்கொள்ள முடியும். அவரது வானம்பாடிக் காலம் ஒரு பயிற்சிக் காலகட்டம்கூடஅல்ல. வழிதவறி அங்கு சென்றார் என்றே கூறவேண்டும். வானம்பாடியின் கருத்தியல் சார்ந்த கவிதையும், அகப்புறப் பிரிவினையும் அபியில் எவ்வகையிலும் ஒட்டவில்லை. இன்னொரு கோணத்தில் யோசித்தால் கலில் கிப்ரானின் வசன கவிதையின் வடிவம் சற்று நெகிழ்வானதும் ஓங்கி ஒலிப்பதுமான கவிக்குரல் அபியைக் கவர்ந்ததனால் அவர் அவ்வடிவை தெரிவு செய்திருக்கலாம். ஆனால் கவிதையின் அகம்புறம் குறித்தோ, கருத்தியல் உள்ளடக்கங்கள் குறித்தோ எவ்விதப் பரிசீலனைக்கும் முயலாமல் அபி சட்டென்று தன்னுடையஇடத்தை அடையாளம் கண்டுகொண்டார். அது ‘எழுத்து’ மரபின் அகவயச்செறிவுள்ள கவிதைதான். தன் வானம்பாடிக் காலகட்டத்தை தவளை வாலை முறிப்பது போல முறித்தும் விட்டிருக்கிறார்.

 

அபியின் இந்த இரண்டாம் காலகட்டத்துக் கவிதைகள் முழுக்கவே ஒரு தனிமனிதன், அந்தரங்கமான கணங்களில் தன்னை முற்றுமாக வே தனித்துணரும் நுண்பிரக்ஞை கொண்ட மனம், காலம் வெளி எனும் முடிவிலிகளை ஏறிட்டுப் பார்த்து கொள்ளும் கையறுநிலையையோ வெறுமையையோ நிறைவையோ வெளிப்படுத்துபவையாகவே உள்ளன. இந்தக் கோணத்தில இவை எழுத்து மரபின் அந்தரங்கக் கவிக்குரலை கொண்டிருந்தாலும்  எழுத்துமரபில் நிலைகொள்வன அல்ல. எழுத்துமரபின் கவிதைகளில் உள்ள அந்த அந்தரங்க நிலையானது சமூகத்துடனான உறவில் இருந்து விளைந்த அன்னியத்தன்மையை மட்டுமே கருவாகக் கொண்டிருந்தது. அபியின் இரண்டாம் கட்டத்தை ஒருவகையில் கலில் கிப்ரானின் ஆன்மிகத்தேடலும் எழுத்து மரபின் அந்தரங்கக் கவிதை வடிவும் இணைந்தமையில் இருந்து உருவானது என்று நிர்ணயித்துக் கொள்ளமுடியும். அந்த நவீனத்துவக் கவிதையின் இலக்கணங்களுக்குள் பொருந்துவனவாகவும், தன் ஆன்மிகச் சமநிலை மூலம் மீறிச் செல்பவையாகவும் இவை செயல்படுகின்றன.

 

அபியின் ஆன்மிகத் தேடல் எங்கிருந்து தொடங்குகிறது?

 

காலத்தின்

இருள் வாய் திறந்த ஆழங்களில்

இன்னும் எத்தனை நாள்

உன்னை நீ சொட்டிக் கொண்டிருக்கப் போகிறாய்

 

என்று மெளனத்தின் நாவுகள் தொகுப்பின் ஒரு கவிதை வினவுகிறது. அந்த வினா கவிஞர் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது. அடிப்படையில் காலம், வெளி, தற்செயல் என்று மூன்றுவகை முடிவின்மைகளின் முன் தனித்து சிறுத்து ஒருகணமும், கரைந்து சுயமிழந்து மறுகணமும் தன்னைஉணரும் கவிஞனின் அந்தரங்கத்தின் குரலே அவரது கவிதைகளின் தொடக்கப் புள்ளியாகும். நவீனத்துவ அழகியலுக்கு ஆதாரமாக அமைந்த மேற்கத்திய தத்துவ தரிசனத்தின் மையமும் தனிமனிதனின் இந்த தவிர்க்க இயலாத கையறு நிலைதான். மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் தன் தனியாளுமையை உத்வேகத்துடன், சுயகண்டடைந்த மேற்கத்திய மனம் பிறகு அத்தனியாளுமையை பிரபஞ்ச/கால விரிவுகளின் முன் நிறுத்துகையில் அர்த்தமற்ற இருப்பாக உணர நேரிட்டது .இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் குறிப்பாக ஃப்ரான்சில் உருவான இருத்தலிய சிந்தனைப்போக்கு இந்த மனநிலையின் தத்துவார்த்தமான உச்சம். இம்மரபின் முதல் விதைகளை தத்துவவாதியும் விஞ்ஞானியுமான பாஸ்கலில் (Pascal) காண்கிறார்கள். ஆயினும் இருத்தலியத்தின் மையைச்சிந்தனையாளர் கீர்கேகாட் தான். நீட்ச்சேயின் சிந்தனைகளிலும் இருத்தலியத்தின் அடித்தளக் கட்டுமானம் உள்ளது என்று கூறப்படுகிறது. இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ் கியை இருத்தலிய சிந்தனையின் துவக்கப் புள்ளியாக சிலர் கூறுகிறார்கள்.

 

இரண்டாம் உலகப்போர் மனிதனின் உள்ளார்ந்த தீமையை, இருண்ட வழிகளில் அவன் எவ்வளவு தூரம் போக முடியும் என்ற கசப்பான உண்மையை வெளியே கொண்டுவந்தது. அத்துடன் அதுவரை ஹெகலிய வரலாற்றுவாதிகள் தொடர்ந்து முன்வைத்து வந்த மகாமானுடம் குறித்த கனவுகள் கலைந்தன. மேலும் மேலும் மேம்பட்டபடியேதான் வரலாறு முன்னர்கிறது என்பதற்கும், மானுட நாகரீகம் மேலும் சிறந்த படிகளைத் தான் அடைய முடியும் என்பதற்கும் எவ்வித உறுதிப்பாடும் இல்லை என்பது அப்பட்டமாக முகத்தில் அறைந்தது. நீதி, கருணை, மனசாட்சி என்பவையெல்லாம் சமூக உருவாக்கங்களேயொழிய அவை மானுடதின் ஆழத்து சாராம்சங்களல்ல என்று தெளிவாகியது. விளைவாக தன்னுடைய அபாரமான சுயத்துவப் பிரக்ஞையுடன் காலவெளிமுன் தனித்து நிற்பவனாக மனிதன் தன்னை உணர்ந்தான். தன் பிரக்ஞை தன்னை முற்றிலும் ஏமாற்றிவிட முடியும் என்று உணர்ந்து கொண்டான். தன்னுடைய சுயம் என்பது தன்னால் உருவகிக்கப்படுவது மட்டுமா, அதற்கு அப்பால் ஏதாவது தனித்த அர்த்தமும் அதற்கு உண்டா என்று அவன் தத்தளித்தான். இத்தத்தளிப்பையும் தேடலையும்தான் இருத்தலியம் தன் சிந்தனைகள் மற்றும் படைப்புகளின் வழியாக முன்வைத்தது. சார்த்தரும் ஹைடெக்கரும் இதன் தத்துவவாதிகளாகவும் காம்யுவும் காஃப்காவும் இதன் படைப்பாளிகளாகவும் ஆனார்கள்

 

 

தமிழ்நாட்டில் இருத்தலியத்தின் நேரடிப் பாதிப்பு எழுபதுகளில் தான் நிகழ்ந்தது – இருபது வருடம் கழிந்தே எந்த சிந்தனைப்புலமும் இங்கு தன் செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதை நாம் பொதுவாகக் காணமுடியும். தமிழ் சிறுகதைகளில் குறிப்பாகவும் தமிழ் புதுக்கவிதைகளில் முக்கியமாகவும் இதன் பாதிப்பைக் காணலாம். அசோகமித்திரன், சம்பத், சுந்தரராமசாமி (இரண்டாம் கட்ட சிறுகதைகள்,குறிப்பாக ‘பல்லக்கு தூக்கிகள்’ என்ற தொகுப்பு) சி.மணி, நகுலன்,ஆத்மாநாம் ஆகியோர் உதாரணமாகச் சொல்லப்படவேண்டியவர்கள்.இந்திய மொழிகளில் எல்லாமே ஏறத்தாழ இதே இருத்தலியத்தின் பாதிப்பைக் காண்கிறோம். இருத்தலியத்தை நவீனத்துவ அழகியல் முதிர்ந்து உருவாகும் தத்துவபோதம் எனலாம். இந்திய மொழிகளிலும் இதே போக்குதான் காணப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இருந்த உத்வேகங்கள் மெல்ல வடிந்தபிறகு, இரண்டு இடதுசாரி புரட்சி முயற்சிகள் (கல்கத்தா தீஸிஸ் மற்றும் நக்சல்பாரி இயக்கம்) சிதைந்த பிறகு பொதுவாக இந்திய அறிவுச்சூழல் எங்கும் ஏற்பட்ட வெறுமையின், நிராசையின், தத்துவ சித்தாந்தங்கள் மீது உருவான அவநம்பிக்கையின் விளைவாகவே இங்கு இருத்தலியல் வேர்விட்டது.

 

இந்தியப் படைப்பாளிகள்பலருக்கு அப்படி நம்பிக்கை மிகுந்த இறந்தகாலம் உண்டு. ஒரு சோஷலிஸ எழுச்சியின் விளைவாக இலக்கியத்துக்கு வந்து நிராசையடைந்தவர் அனந்தமூர்த்தி. இடதுசாரி கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்கள்தான் ஓ.வி.விஜயனும் சுனில் கங்கோபாதயாயவும். தமிழிலும் சுந்தரராமசாமி முதலியோருக்கு உத்வேகமும் தம்பிக்கையும் கொண்ட ஓர் இறந்த காலம் உள்ளது. தமிழ்ச் சூழலில் வானம்பாடி’க் காலம் ஒருவிதமான (கற்பனையம்சம் மிகுந்த)நம்பிக்கையின் காலகட்டம். நெம்புகோல்களாக கவிதையை கண்ட காலகட்டம். அக்காலகட்டத்தின் உணர்வெழுச்சியை ஒரளவு அபியும் பங்குவைத்துப் பெற்றுக்கொள்கிறார். ஆயினும் அதனுள் முன்பே கூறியது போல தனிமனிதன் பெரும் முடிவின்மைகளை நோக்கி மனதால் துழாவும் மனநிலையும் அடங்கியிருந்தது.

 

இரண்டாம் காலகட்டத்தில் அபியின் எழுத்து பலவகையிலும் இருத்தலியலின் எதிரொலிகளைப் பதிவு செய்கிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இருத்தலியல் கவிதைகளில் ஒருசிலவற்றை அபியின் இக்காலகட்டத்து எழுத்தில் நாம் காணலாம். என் கணிப்பில் இருத்தலியல் மனநிலயின் ஆகச் சிறந்த உதாரணமாக நான் கூறும் மூன்றுகவிதைகளில் ஒன்று அபியின் ’தெருவில்’  (பிற இரண்டு : பிரமிளின் ‘சுவர்கள்’, ஆத்மாநாமின் ‘முத்தம்கொடுங்கள்’)

 

வருவோம் போவோமாய்த்

தெருவை நிறைப்போம்

 

என்று அர்த்தமற்ற வாழ்க்கைத் ததும்பலின் சித்தரிப்பை தரும் இக்கவிதை அர்த்தமின்மையையே அசைவாக சித்தரித்துச் சென்று

 

சுழற்சி

திளைப்பு என்றிலாத

திரிதலில்

தெருவை நிறைப்போம்

 

என்று முடிகிறது. அங்கு அர்த்தமின்மை ஒரு ஆக்ரோஷமான அலறல்போல ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து இக்கவிதையின் இரண்டாம் பகுதியாக “மனதின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன” என்று பிரமிளின் ‘சுவர்கள்’ கவிதையை தொடங்கலாம்.

 

இச்சுவர்களின் உள் விழுங்கப்பட அல்ல

கருவாகி

புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை காண

 

என்று அக்கவிதை முடியும் புள்ளியிலிருந்து ஒர் எக்களிப்புடன் முத்தம் கொடுங்கள்! முத்தம் கொடுங்கள்’ என்று ஆத்மாநாமின் கவிதையை மூன்றாம் பகுதியாகத் தொடங்கி முடிக்கலாம். ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டு அவை மிகத்தீவிரமான, முழுமையான ஒரு பெரும் கவிதையை சமைப்பதைக் காணலாம்

 

ஆனால் ஒரு அம்சம் அபியின் கவிதைகளில் இருத்தலியத்தை மீறிச் செல்கிறது. அது அவர் தொடக்கக் கவிதைகளிலேயே உள்ளது. அதை கிப்ரான் அம்சம்’ என்று வேண்டுமானால் வரையறுத்துக் கூறலாம். இருப்பின் துயர், முடிவற்ற வெறுமை ஆகியவற்றை தரிசிக்கும்போதே அத்தரிசனம் மூலம் ஒரு நிறைவையும் அடையும் நிலை அது. எடையின்மையும்கூட. அது அதுவரைமானுடத்தை அழுத்திய பல விஷயங்களிலிருந்து விடுதலை

 

எப்போதும் நீ கேட்பது

நாதமல்ல

நாதத்தில் படியும் உன்

நிழல்

 

நாதமென நீ காண்பது

நாதத்தில் உன் அசைவுதரும்

அதிர்வு

என்ற அழுத்தமான தரிசனநிலை

நாதம்

அலைபாய்வதெப்படி

இருப்பது அது

அலைபாய்வதன்று

 

என்ற இறுதிநிலை. இதை ஒருவிதமான கீழைத்தேய மெய்நிலை என்று நான் கருதுகிறேன். இதற்குச் சமமான சூத்திரவாக்கியங்களை சூஃபி மரபிலும், ஜென் மரபிலும், அத்வைத மரபிலும் தொடர்ந்து கண்டடைய முடியும். இம்மனநிலையை இருத்தலியம் சார்ந்த உக்கிரமான அலைவின் அடுத்தபடி என்று நான் கணிக்கிறேன். இம்மனநிலையின் அழகிய வெளிப்பாடு என்று அபியின் இன்னொரு சிறந்த கவிதையையும் கூறலாம்

 

தூரத்தே

எல்லைக்கோடுகள்

திமிராக மினுக்கின’ (எல்லைக்கோடுகள்)

 

என்ற வரிகளில் ‘இங்கு’ எல்லைகள் இல்லாமல் இருக்கும் ஒரு நிலை தெளிவடைகிறது. இந்த அமைவுநிலையை கிப்ரானின் தீர்க்கதரிசிக் குரலில் கூவிச் சொல்லாமல் கனத்த மந்திரதொனியில்தனக்கெனக் கூறிக்கொள்ளும் தருணங்களிலேயே அபி தன் கவித்துவத்தின் சிறந்த கணங்களை அடைகிறார்

 

அபி ஒரு கவிஞராக முழுமையாக மலராதவர் என்ற எண்ணம் பொதுவான தமிழ் கவிதைவாசகர்களுக்கு உண்டு. அவரது படைப்பியக்கம் கூர்ந்து வாசிக்கப்பட்ட ஒன்று அல்ல. கூர்ந்து வாசித்த வாசகர்கள் கூட அவரைக்குறித்து இதே எண்ணம் கொண்டிருக்கலாம். தமிழின்தொண்ணூறு சத தீவிரப் படைப்பாளிகளையும்போல அவரது படைப்பியக்கம் ஒரு தொடக்க நிலையிலேயே அறுபட்டு, தேய்ந்து மறைந்தது என்று அவரது மொத்தப் படைப்புகளையும் திரட்டிப் படிக்கும் எவரும் கூறமுடியாது. தமிழ்ச் சூழல் இலக்கியம் மீது உதாசீனம் உடையது. படிப்பவர்கள் குறைவு. அதில் கூர்ந்து படிப்பவர்கள் மேலும் குறைவு. அவர்களில் வெகுசிலர்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். ஆக ஒரு படைப்பாளி தன் வாழ்நாள் இழுக்க இருட்டில் புன்னகைப்பவனின் நிலையில் இருந்து மடியநேரிடுகிறது. இச்சூழல் தரும் சோர்வு படைப்பாளிகளை தேங்கவைக்கிறது  இதற்கு நம் சூழலையும் விமர்சகர்களையும்தான் பழி சுமத்தவேண்டும், படைப்பாளிகளை அல்ல

 

அபியை முக்கியமான கவிஞராக அடையாளம் காட்டுபவை ‘என்ற ஒன்று’ தொகுப்பிலும் பின்னரும் வந்த சிறந்த கவிதைகள் மட்டுமே யாகும். இக்கவிதைகளை முன்வைத்து அபியின் படைப்புலக எல்லைகள் என்ன என்று வரையறுக்க முற்படுவது அவசியம். முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது அவரது படைப்புலகில் புற உலகம் அல்லது பரவுலகம் இல்லை என்பதே. முழுக்க முழுக்க அகவுலகம் நோக்கியே திரும்பியிருக்கிறது அவருடைய கண். அகச்சலனங்களைத் தொடர்புறுத்தும் பொருட்டு மட்டும் புறஉலகப் பருப்பொருட்கள் மீது படியச் செய்கிறார்.

 

பிற்காலக் கவிதைகளில் பல சமயம் அந்தச் சவாலைக்கூட எதிர்கொள்ளாமல் முற்றிலும் அருவமான   கவிதையை நிகழ்த்திவிட முயல்கிறார் .இடைவெளிகள், சுற்றி போன்ற பல கவிதைகளை உதாரணமாக கூறலாம். இக்கவிதைகளுக்கும் நாதம், அந்தி, எல்லைக்கோடுகள் போன்ற கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிந்தைய கவிதைகள் அகமன எழுச்சிகளை கூறமுற்படுபவை. அருவமான கருத்துருவங்களையே அவை முன்வைக்கின்றன. ஆனால் மொழியின்சாத்தியங்களினூடாக நம் மனதில் பருவடிவக் காட்சிப்புலங்களை உருவாக்குகின்றன

 

ஓசைகள் இறுகிப்

பாறைகளாயின

 

என்ற வரி முற்றிலும் அருவமான ஒரு அனுபவத்தின் வெளிப்பாடுதான்.ஆயினும் பாறை என்ற சொல் நம் முன் ஒரு பொருளைக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. ஊடுருவ முடியாத கரிய கற்பரப்பு, காலத்தில் உறைந்த மெளன இருப்பு என .அது கவிஞர் கூறியதையும் கூறாததையும் நமமுன் கொண்டுவந்து விடுகிறது. முதலில் கூறப்பட்ட அருவமான கவிதைகளில் அப்படி நிகழவில்லை. கருத்துருவங்கள் ஒருபோதும் படிமம் ஆக மாறுவதில்லை. படிமங்கள் கண்ணிலும் கருத்திலும் காட்சிப்படுபவையேயாகும். இப்பலவீனம் அபியின் பல கவிதைகளை தோற்று உதிரச்செய்கிறது

 

இதன் தொடர்ச்சியாகவே அபியின் படைப்புலகில் வாழ்வின் லெளகீக இயக்கம் இல்லாமல் இருப்பதையும் கூறவேண்டும். எப்படியானாலும் நாம் வாழ்வது இந்த சகமனிதர்களுடன்தான். முடிவற்ற முடிச்சுகளுடன், நிறபேதங்களுடன் மண்ணில்தான் வாழ்வு இங்கு இயங்கிக்கொண்டுள்ளது. அதன் அலைகளில் இடைவிடாது நாம் தத்தளிக்கிறோம். ஒரு படைப்புலகு இதை முற்றிலும் தவிர்ப்பது எந்த அளவு சாத்தியம் என்பது எனக்கு ஐயமாக உள்ளது. மனிதமனதின் இச்சைகள், குரூரங்கள், வெறிகள், வெற்றி தோல்விகள் உத்வேகங்கள், இணைவின் லயங்கள் ஆகியவற்றிலிருந்தே இலக்கியப்படைப்புகள் பிறக்க முடியும். அவை அங்கிருந்து வானில் எழக்கூடும்.கிளைவிட்டு காலமும் வெளியும் முயங்கும் முடிவிலிகளில் மின்னல் போல பயணம் செய்யக்கூடும். உண்மையில் முடிவிலிக்குச் சென்ற பிறகு எந்தக் கலைஞனுக்கும் சொல்வதற்கு அதிகமில்லை.

 

அப்படி முடிவிலியைக் காட்டிய எந்தப் பெரும் கவிஞனையும் புறவயமாக ஆராய்ந்து அவனது சாராம்சமான வாழ்க்கைத் தரிசனம் இன்னதுதான் என்று ஓரிரு வரிகளில் கூறிவிடமுடியும். தல்ஸ்தோயாக இருந்தாலும் சரி வியாசனாக இருந்தாலும் சரி! அவனது வண்ணவிரிவை உருவாக்குவது அவன் படைப்புகள் காலூன்றியுள்ள லெளகீக வாழ்க்கைத்தளமேயாகும் .முடிவற்ற பதைப்புடனும் தேடலுடனும் அவனது படைப்புமனம் லெளகீக வாழ்வை  ஊடுருவிச்செல்வதன் விளைவே அவனது படைப்பு

 

அபி துரதிர்ஷ்டவசமாக தன்னைச் சுற்றியுள்ள, தான் வாழும் லெளகீக யதார்த்தங்களை முற்றிலும் தவிர்த்து தன்கவியுலகைப் படைக்கிறார். இவ்வாழ்வின் நெருக்கடிகளையோ, சரிவுகளையோ, முரண்களையோ அவரது கவிதைகளில் காணமுடிவதில்லை. அபூர்வமாக வரும் லெளகீக உலகு சார்ந்த சில வரிகள்கூட அருவமான வேறு ஒரு தளத்துடன் பிரிக்க முடியாதபடி பொருந்தியே வருகின்றன. இந்தக் குறை காரணமாகவே அவரால் அதிகமாக எழுத முடியாது போயிற்று போலும். குறைவாக எழுதிய வரிகளுக்குள்ளேகூட கவிதை மீண்டும் மண்டும் ஒரே குரலில் பேசுவது போன்ற தொனி ஏற்பட்டது போலும் .

 

இறுதியாக, அபி தன் படைப்புலகில் கருத்தியல் சார்ந்த ஆடைகளை’ முழுக்க கழற்றிவிட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும் கருத்தியல் சார்ந்த ஒற்றைப்படையான ஏற்ற நிலையை அவரது ஆரம்பகட்டக் கவிதைகள் காட்டின. கருத்தியலை மேலும் விரிவான அளவில் சொந்த வாழ்வின் தளத்தில் வைத்து, அனைத்துச் சிக்கல்களுடனும் பரிசீலனை செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குப் பதிலாக அபி அச்சவாலை அப்படியே பாம்பு தோலுரிப்பதுபோல கழற்றிவிட்டு நழுவிச் சென்றுவிட்டார். சரி, அபியின் இந்த அருவமான பிரக்ஞையுலகில் ஒரு அநீதி தன் உதிரவீச்சத்தை இழந்துவிடுமா? இல்லை முடிவிலி நோக்கி விரியும் தத்துவார்த்தமான அகப்பிரக்ஞை இவற்றையும் தன் விளக்கங்களுக்குள்  இழுத்துக்கொண்டுவிடுமா? (அல்லது புரிதல்களுக்குள்) உள்வாங்கிக் கொள்ள முனையுமா? அப்படிமுனைந்தால் மீண்டும் அங்கு கருத்தியல் சார்ந்த சிக்கல் உருவாகி  விடுகிறது. மாறாக அபியின்கவிதை அப்பகுதியையே உதாசீனம் செய்து விடுகிறது. அதாவது அறச்சார்பை, அறச்சீற்றத்தை அது முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறது. இக்கவியுலகின் குறுகலுக்கு – அளவில் கூட -இதுவும் ஒரு காரணம்

 

அபியின் படைப்புலகம் நமது கவிதை வாசகர்கள் மற்றும் சித்தாந்திகளின் விரிவான ஆய்வுக்கு உரியது. மானுடப் பொது அறங்கள் குறித்துப் பேசிய ஒரு மரபுக்கும் தனி அறங்கள் மீது கவனம் செலுத்திய ஒரு மரபுக்கும் இடையேனா முரண்பாடு என திகழ்வது அது. தன்னுள் இருந்து மட்டுமே  கவிதையை உருவாக்க முயன்ற ஒரு மரபுக்கும் கவிதையை கருத்தியலுக்கு பதிலியாகக் கண்ட ஒரு மரபுக்கும் இடையே ஆடும் ஆட்டம் அது. அதன் வெற்றி தோல்விகளும், ஊசலாட்டங்களும் இவ்வகையில் மிகவும் முக்கியமானவை.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரம், ஒரு சந்திப்பு