கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4

5. காலமுகம் நோக்கும் தவம்

 

பிரமிளின் கவிதைமொழி பற்றிய ஒரு விவாதமின்றி இக்கட்டுரை நிறைவு பெறமுடியாது. அவரது கவிதைகள்தமிழின் மிகச்சிறந்த மொழிச்சாத்தியங்களை நிகழ்த்தியவை என்று கூறப்படுகிறது. தேர்ந்த வாசகன் அதை எப்போதும் ஒத்துக்கொள்வான். ஆனால் அவர் மொழியைப் பயின்றாரா, நேர்த்தியான மொழி குறித்த புரிதல் அவருக்கு இருந்ததா ,அதற்காக முயன்றாரா என்று கேட்டுக்கொண்டால் அவரது கவிதைகள் மீதான அவதானிப்பு, இல்லை என்ற பதிலையே அளிக்கும். அவரது கவித்துவ உத்வேகமே அவரது மெழியைக் கவிதையாக்கியது. குழந்தை பேசுவதுபோல உண்மையான கவித்துவமும் மொழியைப் புதுப்பிறவி எடுக்கச் செய்கிறது. பிரமிளின் சிறந்த கவிதைகள் அத்தகையவை

 

அதேசமயம் கவித்துவ எழுச்சி நிகழாத கவிதைகளில் பிரமிளின் மொழி சாதாரணமான – ஏன் கத்துக்குட்டி நிலையில் உள்ள – ஒரு கவிஞனைவிடக் கீழானதாகவே உள்ளது. உத்வேகம் உந்திக்கொண்டு செல்லும் தூரம் வரை மட்டுமே அவர் கவிதைகளில் மொழி தக்கவைக்கப்படுகிறது. அது இறங்கியதுமே பிரமிளின் கவிதை மொழியும் கீழிறங்கத் தொடங்குகிறது.இவ்வாறு பார்க்கையில் பிரமிள் இரண்டு வகையான மொழிநடைகளைக் கையாள்கிறார் என்பதைப் பகுத்துக்கொள்ளலாம். முதல்வகை-மொழியில் கவித்துவ வேகம் உயிர்ச்சக்தியாக இயங்குகிறது. இரண்டாம் வகை மொழியில் அவரது கவனமோ பயிற்சியோ இல்லாத திறனற்ற மொழி உள்ளது.

 

பிரமிளின் கவித்துவ மொழிக்குச் சில தனித்தன்மைகள் உள்ளன(பெரும்பாலும்). கவித்துவ வேகம் கைகூடும் போது அவை தாளக்கட்டு கொண்டவையாக உள்ளன

 

மாலைக்கதிர்வாள்பட்டு

பரிதிப் புறாத்துடிப்பு

நெஞ்சில் பால்வெளியில்

பாலைத் தகட்டுப் படபடப்பு

 

(வலை)

 

முட்டித்தும்பியென்ன

மாலையில் பகல்வடிகிறது

ஒளியொதுங்கி இரவாகிறது

 

(அடிமனம்)

 

முதல் உதாரணத்தில் தாளக்கட்டு மிக வெளிப்படையாக உள்ளது,இரண்டாம் உதாரணத்தில் மிக உள்ளடங்கி மெளனமாக உள்ளது. வாசக மனதால் மட்டுமே உணரக்கூடியதாக. கவித்துவம் கொண்ட மொழியில் பிரமிள் இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட தமிழின் சிறந்த வெளிப்பாட்டு முறைகளின் நீட்சியாகத் தூய்மையுடன் வெளிப்படுகிறார். அவரது நல்ல வரிகளைச் சிறந்த ஆழ்வார் பாடல்களின் வரிசையில் வைத்துவிடமுடியும்

 

 

சென்றது இனி என்ற

கசப்பும் இனிப்புமற்று

அங்கு இங்கு என்ற

அந்தரம் தரையற்று

 

(சரண்)

 

அவள் சிரிப்பின்

நடையில் விளைந்த

சிலைவடிவச் சுவடுகள்

 

(மண்டபம்)

 

 

பிரமிளின் சிறந்த கவிதை வரிகளில் குழந்தைத்தன்மையின் பேதமையும் பேரெழிலும் கொண்ட புத்தம்புதுச் சொற்றொடர்கள் பிறக்கின்றன

 

வேளை சரிய

சிறகின் திசைமீறி

(வண்ணத்துப் பூச்சியும் கடலும்)

 

கொலுசு சூழாத

நிசப்தத்தில் நின்

வெண்பாதச் சதைகள்

மெத்திட்ட

புல்தரையைக் கவனி

(முதல் முகத்தின் தங்கைக்கு)

 

சிறந்த வரிகளில் மொழியினூடாக பிரமிள் சலன வடிவமாகவே காணக்கிடைக்கிறார். அவரை உறையவைத்துப் புரிந்துகொள்ள முடியாது

 

என் இதயத்தை வளைக்கும்

இருள் முடிச்சு

உன் புன்னகை விரல்களில்

அவிழ்ந்து

கருநிற மெத்தைகளாய்

சிதறிச் சிரிக்க

மனநடு இரவு

பூமுகம் கொள்ளுமெனில்

சொல்

சொல்லை இதயத்தின்

சொல்லற்ற சுனைதர

பேசு

 

(முதல் முகத்தின் தங்கைக்கு)

 

இவ்வரிகளினூடாகப் படிமம் உருமாறிச் சென்றபடியே உள்ளது என்பதைக் காணலாம் .பிரமிளின் தரமற்ற கவிதைகள் அவரது தன்முனைப்பால், அதன் ஆயுதங்களான குரோதத்தாலும் சிறுமையாலும் சமைக்கப்பட்டதையும்

 

அது இப்போ எதுக்கு கணக்கு வழக்கே கருத்தான ஞானிக்கு

அமெரிக்கனுக்கு ஐயாவாள் வளர்த்து எடுத்துச் சென்றது

சரித்திர அறிவாவிஞ்ஞானி வித்தையா கலைத்திறன் தனையா?

 

(அமெரிக்காவில் பறந்த கொடிவால்)

 

ஏனென்றால்

ஸுப்பர் ஈகோ

நொப்பர் ஈகோ

என்று எந்த

உள்தடுப்பும்

இன்றி வளர்ந்து

விட்ட பரிசுத்த

இட்’ இன் அவதாரம் நீ

(கவுண்டர் கல்சர் லிமிடெட்)

 

இத்தகைய கவிதைகளில் தன் மொழியின் மொண்ணைத்தனத்தையே பெரிதும் வெளிப்படுத்துகிறார். வசை என்று எடுத்துக்கொண்டால்கூட மறைபிரதிகளே இல்லாத நேரடியான கூற்றுக்கள் இவை. வசைகளை விரும்பும் மனம்கூட கூறப்பட்ட சொற்களைத் தாண்டி மேலும் முன்னகர விரும்பும். அந்தத் தளமே இக்கவிதைகளில் இல்லை. மேலும் பிரமிளின் மெழியின் இரு முக்கிய பலவீனங்கள் இவ்வரிகளில் வெளித் தெரிகின்றன. ஒன்று, அவருக்கு உரையாடலையோ புறச் சித்தரிப்பையோ எழுதத் தெரியாது. பிரமிள் எழுதும் உரையாடல் கூற்றுகள் ஐம்பது வருடம் பழைய மொழியில் செயற்கையாக உள்ளன.இரண்டு, அவர் தன் கவிதைகளில் ஆங்காங்கே பயன்படுத்தும் நேரடிஆங்கிலச் சொற்கள் தமிழ்நடையின் அனைத்து ஒருமையையும் சிதைத்துத் தாறுமாறாக்குகின்றன

 

இங்கு பிரமிள் தன்கவிதைகளில் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கலப்பது குறித்த என் தனிப்பட்ட கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்ய விழைகிறேன். பிரமிளின் மொழிநடை பலசமயம் மணிப்பிரவாளம் போலவேமாறுகிறது. மூர்க்கமான தனித்தமிழ்வாதம் கவிமொழியைச் செத்த மொழியாக்கிவிடுமென நான் அறிவேன். ஆனால் மொழிக்கு அதற்குரிய ஒரு ஒலியிசைவு உள்ளது. அவ்வொலியிசைவை அது இழக்கும்போது ருசியும் பிரக்ஞையும் உள்ளவர்களுக்குக் கூசவைக்கும் அனுபவமாக அது உள்ளது. தமிழில் பிரமிளின் அளவுக்கு இந்தக் கூச்சத்தை நமக்கு அளிக்கும் கவிமொழி பிறிது இல்லை.இதை இரு தடவை பிரமிளிடம் நான் நேரில் கூற அவர் என்மீது சினந்ததுநினைவுக்கு வருகிறது. (பிரமிளிடமிருந்து இந்த நோய்க்கூறு தொற்றிக்கொண்ட முக்கிய கவியாளுமை தேவதேவன்).ஆங்கிலம் அல்லது சம்ஸ்கிருதத்தைக் கையாள்வது நவீனக் கவிதையில் வழக்கம்தான். அங்கதமாகவும் வேறு தேவைக்காகவும். ஆனால் பிரமிள் அவரது உணர்ச்சிவேகமும் படிமஒருமையும் கொண்ட கவிதைகளில்கூட அசட்டுத்தனமாக ஆங்கிலவார்த்தைகளைக் கலந்து அவற்றைச் சீரழிக்கிறார்

 

காகிதத் தெருக்கள்

முழுவதும் ஓடி

வருகின்றன உன்

பிளஸ் குளம்படிகள்

 

(என்னைக் கொன்றவனுக்கு)

 

ஒளி விசிறி ஏழாயிற்று

ஒரு சூட்சும

ஜவ்வாக மாறி

ரூம்

கண்ணாயிற்று

 

(பட்டகம்)

 

இவ்வரிகளில் பிரமிள் நுண்ணிய தளத்துக்கு மொழியை மாற்றித்தொடமுயலும் தளத்துக்கும் ‘ரூம்’ என்ற சொல்லுக்கும் ஆன முரண்பாடு எளிய வாசகனைக்கூட பொட்டிலறைவது. அதைப்போல

 

ஆற்றுநீரை

உறிஞ்சிய மண்

புல்லைப் போஷித்தது

புல் கோஷித்தது

 

 

(புல்லின் குரல்)

 

என்ற சொல்லாட்சி மூலம் எவ்வித அழகும் உருவாகவில்லை என்பதுடன் அவ்வரிகளை வாய்விட்டுச் சொல்லிப் பார்க்கையில் தமிழ்மொழி உருவாக்கும் இனிய ஒலியிசைவு முற்றாகச் சிதறியழியவும் செய்கிறது.

 

படைப்பூக்கம் உச்சம் கொண்டு, தன்னைப் பிரமிள் மொழியிடம் ஒப்படைத்துவிடும் தருணங்களில் மட்டுமே அவர் கவிதைமொழியின் புத்தம்புதிய சாத்தியங்களை அடைகிறார். அந்த வேகம் சற்றுத் தளரும் போதுகூட உந்து காற்றாடி விசையிழக்கையில் ஆகாய விமானம் தள்ளாடிச் சரிவது போல அவரது மொழி சிதறியழிய ஆரம்பிக்கிறது. இந்த வேகம் அவரை உரைநடை வடிவக் கவிதையிலும் அழுத்தமான புதிய மொழியை உருவாக்கச் செய்கிறது என்பதற்கு தவிப்பு, முதுமை வருகை ஆகிய கவிதைகள் சிறந்த உதாரணங்கள். ’சுவர்கள்’ இவ்வகையில் பிரமிளின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று

 

சுவர்கள்

 

மனசின் இருண்ட அனுஷ்டானங்கள்என்னை வீடு திரும்ப விடாது

தடுத்துக் கொண்டிருக்கின்றன

இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில்

அலைகிறது

வீடு திரும்பும் வழி தெரியவில்லை

அன்று

ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த

சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கி திறந்த பாலை வெளியினூடே ஒரு

நட்சத்திரத்தின் அழுகையில் அழைத்து வழிகாட்டியது

நான் சக்கரவர்த்தியுமல்லன்

சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்தவெளியுமல்ல

பாலையாயினும், வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான

பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும்

வீடு

ஒன்று உண்டெனவே எண்ணுகிறேன்

இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல

கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண

 

 

இக்கவிதை பிரமிளின் முந்தைய தொகுப்புகளில் நேரடி வசனமாக இருந்தது. கால.சுப்ரமணியம் தொகுத்த மொத்தக் கவிதைகளின் தொகையில் வரியமைப்பு மாறியுள்ளது.பிரமிளின் சிறந்த கவிதைகள் போலவே இதிலும் வீடு என்ற படிமம் தொடர்ந்து உருமாறுவதை, பின்னிப் பின்னி நிழல் போலவிரிவதைக் காணலாம். வீடு, கொட்டில், சுவர்கள், வாய் திறந்த பசி,கருவறை, மறுபிறப்பு என்று அது விரிந்து விரிந்து செல்கிறது. தன்னுடைய திறனாய்வுக் கட்டுரைகளிலும் அபூர்வமாக பிரமிள் இதற்கிணையான உரைநடை வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால், இந்த உள்வேகம்அவரை இயக்காதபோது எழுதிய வரிகள் மூலம் நாம் அவரை பயிற்சியோ நுண்ணுணர்வோ இல்லாத உரைநடை கொண்டவராகவே அடையாளம் காண்கிறோம். அவரது கவிமொழியை இன்னும் முதிர்ச்சியற்ற ஒன்றாகபிரமிளின் ளின் ஆன்மிகத் தேடல் மீபொருண்மையை ஏணியாக்கி மேலே நகர்ந்து பறந்தெழுவதன் சிறந்த உதாரணமாக அமையும் இரு கவிதைகள் கிழக்குவாசல், தெற்குவாசல் ஆகியவை. இவற்றில்கிழக்குவாசல் அதன் மகத்தான தொடக்கம் மூலம் அடையும் தீவிரத்தை பிற்பாடு மெல்ல இழந்து மீண்டும் உத்வேகத்துடன் திரட்டிக் கொள்கிறது. தெற்குவாசல் வரிகூட மிகாத முழுமையுடன்,ஈராயிரமாண்டுத் தமிழ்க் கவிதையில் உருவான சாதனைகளில் முதன்மையானதாக நின்றுகொண்டிருக்கிறது. தாராசுரத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் மதுரையிலும் கருங்கல்லில்அகாலவடிவமாகச் சிலைத்து நிற்கும் கலைவடிவங்கள்போல பிரமிளின் இருப்பைத் தமிழில் நிறுவி நிற்கும் அற்புதம் இக்கவிதை (பிரமிள் நான்கு வாசல்களிலாக நான்கு கவிதைகள் எழுத எண்ணியதாகவும் ஒன்று எழுதப்படவில்லை என்றும் கால சுப்ரமணியம் தெரிவிக்கிறார்.

 

 

இவற்றில் வடக்கு வாசல் ஒருவகையிலும்கவிதையே அல்ல. பிரமிளின் வழக்கமான உளறல், வசை பாடல்களில் ஒன்று அது. கடைசியில்செயற்கையாக ஒரு மீபொருண்மைத்தளத்தை அவர் உருவாக்குகிறார் இக்கவிதைக்கும் பிற இரு கவிதைகளுக்கும் இடையேயான தூரமேபிரமிளின் ஆளுமையில் உள்ள பெரும்பிளவின் அகலம்

 

 

தெற்குவாசல்

 

தெற்குக் கோபுர வாசலுக்கு

வந்த உன்முன் உனது

இடப்புறமாக நிற்கிறான்

காலபைரவன்

பூணூலில் அவன்

கோர்த்தணிந்திருக்கும்

பொக்கிஷங்களைப் பார்

பூக்களல்ல. புஷ்பராகக்

கற்களல்ல

கபாலங்கள்

 

ஒவ்வொரு கபாலமும்

பார்ப்பனனில் இருந்து

பறையன்வரை

ஐரோப்பியனில் இருந்து

ஆப்பிரிக்க நீக்ரோப்

பழங்குடிவரை

ஒவ்வொரு மனித

இனப்பிரிவினைக் காண்

 

 

நேர்கொண்டு பார், சிலையின்

கால்களுக்குப் பின் நாயாய்

உறுமுகிறது மரணம்.

அது காலத்தின் வாகனம்

காலபைரவனின்

சிரசில் அணிந்த

நெருப்புக் கிரீடமாய்

நின்று எரிகிறது

சரித்திர நியதி. அவன்

ஏந்தி நிற்கும்

சிவாயுதங்களிலும்

நடுங்குகிறது அதன்

நிர்மூல கதி

 

 

டமருவில் பிறந்தது

நாதம்; நாதத்தில்

பிறந்த விந்து

கலைகளாய் விரிந்து

கால தேசங்களாயிற்று

தேசங்களின் காலத்தின்

நேற்றின்று நாளை என்ற

மூவிலைச் சூலத்தில்

கிழிபட்டுக் குலைந்து

அழிந்து கொண்டிருக்கின்றன

 

கையில் கலைமான்

உள்முகம் நோக்கி

ஓடிக்கொண்டிருக்கிறது

தெற்கே வந்த உன்முன்

நிற்கிறது காலம்

நிர்வாணமாய்

நேர்கொண்டு பார்க்காமல்

நீ தப்பமுடியாது

உன் கண்களைச் சந்தித்த

கருணையில் குரூரத்தில்

ஊடுருவி உள்ஓடிப்

பிறக்கிறது காலத்தின்

புரியொணாப் புன்னகை

 

உன் உடலில் அருவருத்து

உள் ஓடிப் புரள்கிறது

உனைவிட்டுப் பிரியாத

மரணத்தின் பூணூல்

உன் உயிரை நேர் நோக்கி

பரிகஸிகின்றன

காலங்கள்

கத்தி முனையாய்

துப்பாக்கியில் வெடித்துச்

சுழன்று வரும் குண்டாய்

உற்பாதங்கள் தந்து

உருக்குலைக்கும் நோயாய்

உடல்கூடிப் படுத்தவளின்

புணர்ச்சி விஷமாய்

தெற்குக் கோபுர வாசலில்

நிற்கிறது காலம்

நிர்வாணமாய்

காலிடறும் கல்லும்

ஒரு நாளில்லை ஒருநாள்

காலனுருக் கொள்ளும்

 

ஒ, மானுட

ஓடாதே நில்

நீ ஒட ஒட

தொடர்கிறது கல்

நாயாக உன்

நாலுகால் நிழலாக

நீ ஓட ஒட

தொடர்கிறது அக்னி

ஒயாத உன்

உயிரின் பசியாக

நீ ஓட ஒட

தொடர்கிறது இடைவெளி

சாவாக நீ

இல்லாத சூனியமாய்

கற்பிதத் திளைப்பில்

நீ நின்ற கணம்

மனம் தடுமாறி நீ

சிருஷ்டியைப் பிரதி

பலித்த அவ்வேளையில்

எதிரே நிற்கும்

கவிதையே காலம்

 

 

அறிவார்த்த திகைப்பில்

நீ நின்ற கணம்

திசை தடுமாறி உன்

அறிவு திருக

எதிரே எழுகிறது

காலத்தின் விபரீதக்

கருத்துருவக் கோலம்

உனக்குள் ஓய்ந்து

நீ நின்ற கணத்தில்

உள்வெளி மாற்றி இச்

கணத்தில் மடிகிறது

காலமாய் வக்கரித்த

ஞாபக லோகம்

 

 

நின்று நேர்கொண்டு

நோக்கிய கணத்தில்

நீ கண்டதென்ன

தெற்குக் கோபுர வாசலில்

நியதி நெருப்பைச்

சிரசில் அணிந்து

நிற்பது நீதான்

நீ அற்ற சூனியத்தில்

நிற்கின்ற பிரக்ஞைக்குள்

விழுகின்ற தத்துவ

நிழல் உன் காலம்

உனக்குள் உன்

உயிரென நீ

உருவேற்றிக் கொள்வதுவோ

உயிரல்ல, காலம்

 

 

எனவே எட்டாத

வெற்று வெளி ஒன்றில்

ஓயாத திகிரியை

மென்சிறகலைத்து

ஓட அசைத்தபடி

ஆடாமல் அசையாமல்

பறப்பது நீயல்ல

நானல்ல

காலாதீதம்

 

தெற்குக் கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற

கல்

 

கவிதையை விளக்கி அதை அனுபவம் அல்லாமலாக்கும் வீண்செயலுக்கு இங்கே நான் முயலவில்லை. ஆயினும் இக்கவிதை பிரமிளை அவரது முழுமையுடன் நாம் தொட்டறிய உதவியாக உள்ள கலையாதாரமாகும். காலவடிவமாக சிலைத்த காலபைரவன், மரபிலிருந்து பிரமிள் பெற்றுக்கொண்ட பெரும் படிமம். காலம், அழிவு, மரணம், மறுபிறப்பு இருள், முடிவின்மை ஆகியவற்றின் குறியீடு அது. தன் வரிகளினூடாக பிரமிள் அந்த புராதன மீபொருண்மை உருவகத்தை விளக்குகிறார். காலபைரவனின் மண்டையோட்டு மாலையை மானுடனங்களினால் ஆனதாகப் பார்க்கிறார். பேதங்களை இழந்து மரணத்தின் மூலம் ஒரே மாலையில் கோர்க்கப்பட்ட இனங்கள். அவனது உடுக்கொலியில் யுகங்களும் ஓசைகளும்உருவங்களும் பிறக்கின்றன. கண்களைச் சந்திக்கும்  “கருணையின் குரூரத்தில்’ உருவாகும் அந்த ‘காலத்தின் புரியொணாப் புன்னகை’யே இக்கவிதையின் மையம்.அப்புன்னகை அளிக்கும் அறிதலை இக்கவிதையில் பிரமிள் முழுக்க முழுக்க வாசக ஊகத்துக்கே விட்டுவிட்டிருக்கிறார். பலவிதமான மொழி யத்தனங்கள் மூலம் அந்தத் திறப்பின் கணத்தை ஒரு சிறு திகைப்பாக வாசக உள்ளத் தில் உருவாக்க முனைகிறார்

 

‘தொடர்கிறது அக்னி ஓயாத உன் உயிரின் பசியாக; தொடர்கிறது நீ இல்லாத சூனியமாக’, அந்த அறிதலின் கணத்திற்குப் பிறகு காலப் பேருருவமாக நின்ற பைரவன் காட்சி மாறித் தெரிகிறான்

 

தெற்குக்கோபுரவாசலில்

நியதி நெருப்பைச்

சிரசில் அணிந்து

நிற்பது நீதான்

 

அவ்வறிதலில் இருந்து கவிதை மெல்ல அடங்க ஆரம்பிக்கிறது கல்பட்டு மரத்தில் கலைந்தெழுந்த பறவைகள் கூடித் தவித்தலைந்து கூவிப் பரிதவித்து ஒவ்வொன்றாக மீண்டும் அமர்வதுபோல் சொற்கள்மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டடைகின்றன

 

எட்டாத

வெற்றுவெளி ஒன்றில்

ஓயாத திகிரியை

மென்சிறகலைத்து

ஓட அசைத்தபடி

ஆடாமல் அசையாமல்

பறப்பது நீயல்ல

நானல்ல

காலாதீதம்

 

அப்பெரும் தரிசனத்தின் முன் தெற்குக் கோபுர வாசலில் காலமும் திகைத்து நின்று விடுகிறது. பிரமிள் தன் வாழ்நாள் முழுக்க கவிதை மூலம் தேடிய ஒன்றைத் தொட்டு மீளும் அற்புதக் கணங்களுள் ஒன்று இக்கவிதையின் முடிவு.

 

தமிழ் நவீனக்கவிதை உருவாகி அரை நூற்றாண்டாகிவிட்டது. இன்றுவரை அது பலகவித்துவ வெற்றிகளை அடைந்துள்ளது என்றாலும் அது தவறவிட்டுவிட்ட ஒன்று உண்டு. அதைத் ‘தமிழ்த்துவம்’ என்று சொல்ல நான் துணிவேன். இந்தத் தென்னிலத்தில் நம் நினைப்புக்கு எட்டாக் காலத்திலிருந்து நம் மூதாதையர் வாழ்ந்து வருகிறார்கள். அலையலையாக நாகரிகங்கள் உருவாகி உருவாகி இக்கணம் வரை நீண்டுள்ளன. நம் மொழியோ இவ்வலைகளின் வழியாக நீண்டுவரும் அறுபடாத ஒளிக்கதிர்ச்சரடு. நமது புதுக்கவிதை இந்த மகத்தான பண்பாட்டின் நீட்சியுடன் தன்னைஇணத்துக் கொண்டுள்ளதா? திறனாய்வும் நிராகரிப்பும்கூட நீட்சியேயாகும். நாம் காண்பது மனக்குறுகலின் விளைவான ஒருதுண்டிப்பை. நமது புதுக்கவிதைகள் அவற்றின் சிறந்த .நிலையில்கூட ஜரோப்பிய, அமெரிக்கப்புதுக்கவிதைகளின் நீட்சிகளும் பலசமயம் மறு ஆக்கங்களும் மட்டுமே. இது நாமனைவரும் அறிந்த சசப்பூட்டும் உண்மை. நமக்கு நம் மரபில் அறிமுகமே இல்லை. அதி்ல எவ்விதமான தொடர்பும் இல்லை என்ற நிலையில் ஏற்பு அல்லது மறுப்பு என்பதற்குப் பொருளே இல்லை. நாமறிந்தது ஒன்றையே. மேலை நாட்டுப் புதுக்கவிதையின் வடிவச் சட்டகம், படிம உருவாக்க முறைமை. அவ்வச்சில் நமது சொந்த வாழ்வனுபவங்களின் சில துளிகளைச் சரியாகப் பொருத்திவிட்டால் நாம் ஒரு ‘வெற்றிகரமான’ தமிழ்ப் புதுக் கவிதையை எழுதி விடுகிறோம்!

 

நம் மொழி அதன் அறுபடாத மரபுத் தொடர்ச்சி காரணமாக சொற்களில் ஏற்றும் தமிழடையாளமே அதன் அழகு. அப்போதுகூட கவிதையில் அத்தமிழ் அடையாளங்களைத் தவிர்க்கும் முயற்சியைச் செய்பவர்கள் நம்மில் உண்டு. ஐரோப்பியப் புதுக்கவிதையை ஏற்கனவே நன்கறிந்த வாசகனுக்குத் தமிழ்ப் புதுக்கவிதை பெரிய மனஅசைவை அளிப்பது இல்லை. இதை நான் நேரடியாக நுட்பமாக அறிந்தது நித்ய சைதன்ய யதியின் உரையாடல்களில். தமிழின் புகழ்பெற்ற பல புதுக்கவிதைகளை அவர் ஒரு சம்பிரதாயமான ‘நல்லது’ என்ற சொல்லால்தான் எதிர்கொண்டார். பிரமிளின் இந்த கவிதை மட்டும்தான் அவரைத் தொட்டு எழுப்பியது. “இக்கவிதையின் தனித்தன்மை என்ன?” என்று நான் அவரிடம் கேட்டேன். “இது ஒரு தமிழ்க் கவிதை. தமிழனால் மட்டுமே எழுத முடியக்கூடியது. திருமூலர்முதல் சித்தர்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், ராமலிங்க வள்ளலார் வழியாக இக்கவிதைவரை ஒரு கோடு நீண்டு வருகிறது” என்றார் நித்யா.ஆம், அதுதான் பிரமிளின் தனித்துவம். தமிழ்ப் புதுக்கவிதையின் முழுமையான தனித்துவம் பிரமிள் கவிதைகளில் மட்டுமே உள்ளது. அதற்குத் தெளிவான உதாரணமாக ஆகும் கவிதை இது என்பதனாலேயே இங்கு சுட்டப்பட்டது.

 

இக்கவிதையில் பிரமிள் தொடும் மெளனம் மிக்க உக்கிரம் – அகம் பிரம்மாஸ்மி என்ற அறிதலுக்கு நிகரான உள எழுச்சி தமிழிலக்கியத்தில் மிகமிக அபூர்வமான நிகழ்வாகும். வரலாறு ஒவ்வொரு கணமும் பின்னகர்கிறது. மொழி பழைமை கொள்கிறது. ஆனால் காலத்தைக் கிழித்து முன்னகர்ந்தபடி யேஇருப்பவை படிமங்கள். ஒரு மரபு உருவாக்கும் படிமங்கள் அம்மரபின் ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள். அம்மரபின் சாரங்கள் அவை ஆகவேதான் பெரும்படைப்பாளிகள் மரபின் படிமங்கள் மீது ஆழமானபிடிப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் பெரும்படைப்பாளிகளின் மனம் மரபின் படிமங்கள் தொடர்ந்து தங்களை மறுஆக்கம் செய்யும் வெளியாகவே உள்ளது. எலியட்டாக இருப்பினும் சரி, ஜேம்ஸ் ஜாய்ஸாக இருப்பினும் சரி, கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸாக இருப்பினும் சரி, அவர்கள் தங்கள் மரபின் படிமங்களிலிருந்து உருவாகி வருகிறார்கள். நாம் நம் மரபின் படிமங்களை உதாசீனம் செய்யும்படி நமது அரைவேக்காட்டு கல்விமுறையாலும், ஆன்மாவை விற்றுவிட்ட அறிவுச்சூழலாலும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.காலபைரவன் போன்ற ஒரு மகத்தான படிமம் நம் கவிதையில் பிறர் மூலம் வர வாய்ப்பேயில்லை என்பது இதனால்தான்.

 

ஆனால் நாம் சிஸிபஸைப் பற்றி, பிரமித்யூஸைப் பற்றி, மெடுஸாவைப் பற்றி அசட்டுத்தனமாகக் கவிதை எழுதிக்குவிப்போம். பிரமிளின் கவிதையில் கருங்கல்த் திடத்துடன் எழுந்துவரும் இந்தக் காலபைரவன் எத்தனை மகத்தான ஆழத்திலிருந்து பிறந்தவன். அதைக் கற்பனைமூலம் தொட்டுப் பார்க்க முயல்பவன் முன்பு விரிந்தபடியே போகும் தன்மகொண்ட்து இக்கவிதை. நம் மரபில் தெற்குத்திசை மரணத்தின் திசையாக உள்ளது. கருமையின் திசையாகவும் மூதாதையரின் திசையாகவும் உள்ளது. தென் நிலமாகிய குமரிநாடு கடல் கொண்டது என்றும் அதை அஞ்சி தொடர்ந்து வடக்கே புலம்பெயர்ந்தது தமிழ்க்குலம் என்றும் கூறும் தொல்கதைகளுடன் எவ்விதமோஉளத்தொடர்பு கொண்ட செய்தி இது. இங்கு மூதாதையர் தொன்புலத்தாராகவே குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுக்குப் பலியுணவு ஊட்டுதல் ‘தெற்கு வைத்தல்’ என்று கூறப்படுகிறது. மரணதேவனின் திசை தெற்கு. அவனே காலம் அல்லது என்றால் கருமை என்றும் பொருள். இத்திசை நோக்கி நகரும்தமிழ் மனம் இறந்த காலத்தின் முடிவின்மையைத் தொட்டு திகைத்து நிற்கும். பிரமிள் தெற்கு வாசலைத் திறக்கையில் கருமைகொண்டு திகைத்து நிற்கும் வெட்டவெளியைக் காண்பது இப்பின்புலத்திலேயே. இதே வாசலைத் திறந்து இறங்கிச் சென்றுதான் புதுமைப்பித்தன் ‘கபாடபுரம்’ கண்டார். தன் மரபின் முடிவிலி நோக்கி வேர்களை இறக்கும் திராணிகொண்ட நவீனத் தமிழ் ஆளுமைகள் இவர்கள் இருவருமே என்பதை நம் இலக்கிய வரலாறு சாட்சியப்படுத்துகிறது

 

பிரமிள் காலந்தோறும் மனிதனை முடிவிலி நோக்கிச் செலுத்திய அடிப்படை வினாவால் உருவாக்கப்பட்டவர். எந்த வினா ரிக்வேதத்து சிருஷ்டிகீதத்தை, கணியன் பூங்குன்றனின் செய்யுள் வரிகளை உருவாக்கியதோ அதே வினாவால் செலுத்தப்பட்டவர். அவ்வினாவுக்கு விடைதேடும் பொருட்டுமரபு தனக்களித்த படிமப் பெரும் செல்வத்தைக் கருவியாக்கி முன்னைகர்பவர். தன் ஆளுமையின்பெரும் கொந்தளிப்பான கவியுலகு ஒன்றை உருவாக்கியவர். எங்கெல்லாம் அந்த முதல்பெருவினா தன்னைச் செலுத்துகிறதோ அங்கெல்லாம் புத்தம்புது கவிமொழியை உருவாக்கியவர். நவீனத் தமிழில் மரபின் முடிவிலி யிலிருந்து வேர்நீர் கொண்ட இரண்டாவது பெரும் படைப்பாளி. நவீனத்தமிழ்ப் புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தைத் தன் வரிகளில் புதுப்பிக்க முடிந்த முதல் பெரும் கவிஞர். பித்தும் தன்முனைப்பும் தத்தளிப்பும் தரிசனங்களுமாக நம்முன் வாழ்ந்து மறைந்த இப்பெருங்கலைஞனைத் தமிழ் நமக்களிக்கும் பெருமிதம் ததும்பும் அனைத்துச் சொற்களாலும் கௌரவிக்கவேண்டும் நாம்

 

நிறைவு

 

[2000த்தில் எழுதப்பட்ட கட்டுரை – உள்ளுணர்வின் தடத்தில் [தமிழினி பிரசுரம்] நூலில் உள்ளது.]

முந்தைய கட்டுரைஉலகம் யாவையும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 3