கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

4. மீபொருண்மை கனவு பித்து

 

பிரமிளின் ஆன்மீகம் தர்க்கபூர்வமாக வெளிப்படுவதையே அவருடைய  மீபொருண்மை என்றேன். அதை இவ்வாறு வகுத்துக் கொள்ளலாம்.

 

அ.அது இந்து ஞான மரபின் மீபொருண்மை உலகைச் சார்ந்தது.

 

ஆ. அம்மரபின் படிமங்களையும் உருவகங்களையும் தன் தீவிரமான பிரக்ஞை மூலம் மறுஆக்கம் செய்து கொள்வது. தலைகீழாகக்திருப்பிக் கொள்வது

 

இ தன் உச்சகட்டப் படைப்புநிலையில் அது தன்னையே கடந்துசெல்ல பிரமிளுக்கு உதவுகிறது

 

உ.பிற தருணங்களில் உலகத்தளத்துடன் ஒட்டாத விசித்திரமான ஒரு தருக்க முறை ஒன்றை அவருக்கு உருவாக்கியளிக்கும் எளிய கருவியாக அது இயங்குகிறது

 

இந்து ஞான மரபு என்று கூறும்போது நமது பாதிவெந்த இலக்கிய அரசியல்வாதிகள் என்ன சொல்லித் தாண்டிக்குதிப்பார்கள் என அறிவேன்- இவர்களுடன்தானே நம்முடைய கால்நூற்றாண்டு புழக்கம். அவர்களுக்கு பிரமிள் என்ன, எவருடைய கவிதையையும் அணுகும் திராணி இருப்பதாக அவர்கள் காட்டியதில்லை. அவர்களை மீறியே நாம் இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது. இந்து ஞான மரபு என்னும்போது அது ஏற்கனவே முக்கியமான ஞான நூல்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தெளி வாக எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆறு மதங்கள் (சைவம்வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செௌரம்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், நியாயம், யோகம், வைசேஷிகம், முன்மீமாம்சம், பின் மீமாம்சம்), மூன்று தத்துவ நூல்கள் (உபநிடதங்கள்,பிரம்ம சூத்திரம், பகவத் கீதை) ஆகியவற்றாலானது இந்து ஞான மரபு.

 

முன்பு அது சனாதன (பழைமையான) ஞான மரபு என்ற பேரில் அறியப்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக வே இந்து ஞான மரபு என்ற சொல் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த அடிப்படைக் கட்டுமானத்திலிருந்து புதிதாக முளைப்பவையும் இந்து ஞான மரபுக்குள் அடங்கும்.உதாரணம் சங்கர வேதாந்தம் அல்லது அத்வைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம், பசவண்ணரின் வீரசைவம்.நவீன காலகட்டத்தில் இம்மரபின் வேரிலிருந்து பல புதிய போக்குகள் தொடர்ந்து கிளைத்துவருகின்றன. தயானந்த சரஸ்வதி (ஆரியசமாஜம்)ராஜாராம் மோகன்ராய் (பிரம்ம சமாஜம்), ராமகிருஷ்ண பரமஹம்ஸர்விவேகானந்தர் (ராமகிருஷ்ண மடம்), அரவிந்தர் (அரவிந்தாஸ்ரமம்) நாராயண குரு, நடராஜ குரு, நித்யசைதன்ய யதி (நாராயண குருகுலம்)போன்றவர்களும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ முதலியோரும் இவ்வரிசையில் வருபவர்களே. இந்த மரபுகளுக்கெல்லாம் பொதுவானதும், இவற்றின் ஒட்டுமொத்தமும், இவை முளைத்தெழும் நிலமாக இருப்பதுமான தளமே இந்து ஞான மரபு என்று இக்கட்டுரையில் குறிக்கப்படுகிறது.

 

பிரமிளின் மீபொருண்மையின் இயல்புகள் மிக வெளிப்படையானவை. அவை முதன்மையாக சைவப் பெருமதம் சார்ந்தவை. சைவமதத்தின் ஒரு கூறாகிய சித்தர் ஞான மரபில் அவருக்குத் தனி ஈடுபாடுஉண்டு (இவ்வழியைச் சேர்ந்த பலரை பிரமிள் தன் கட்டுரைகளில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, கன்யாகுமரியில் வாழ்ந்த அன்னை மாயம்மா. பிரமிளின் பிரபலமான குறுநாவல் ‘ஆயி’  அவரைப்பற்றியது. ஈழத்தில் வாழ்ந்த சாது அப்பாத்துரையின் தியானதாராவை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். சைவ மதத்தின் மீபொருண்மை உருவகங்களைத் தன் ஆக்கங்களில் பிரமிள் மிகத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார். இரண்டாவதாக, பிரமிளின் நோக்கில் அத்வைத வேதாந்தத்தின் பாதிப்பு உண்டு. பெரிதும் அத்வைத நோக்கை முன்வைத்த ரமணர் பிரமிளுக்கு மிக உவப்பானவர். பிரமிளால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாது அப்பாத்துரையின் (தியானதாரா)நோக்கும் அத்வைதச் சார்புடையதேயாகும். மூன்றாவதாக, பிரமள் மீண்டும் மீண்டும் தன்னைச் சேர்த்து அடையாளப்படுத்திக்கொண்ட ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ஞான மரபு என்பது இந்து ஞான மரபின் ஒருவளர்ச்சி நிலையேயாகும்.

 

சைவத்துக்கும் பிரமிளுக்குமான உறவைத் தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பொதுவாக ஈழம் சைவம் தழைத்த பூமி. பிரமிளில் சைவச் சார்பு இருப்பது வியப்புமல்லை, ஆனால் ஈழந்தில் மேலோங்கிஇருந்த, ஆறுமுக நாவலரால் ஒழுங்குபடுத்தப்பட்டு முன்வைக்கப்பட்ட, சைவப் பெருமத்தின் உறுப்பல்ல பிரமிள். அவருக்கு அந்தப் போக்குகள் மிது கடுமையான விரோதம் இருந்தது. தன் கட்டுரைகளில் அப்போக்கை நிராகரித்திருக்கும் அவர் நேர்ப்பேச்சில் மேலும் கடுமையாகவே எதிர்வினை ஆற்றுவார். ஆலய வழிபாடு முதலிய எந்தச் சடங்குகளிலும் பிரமிள்ாடுபட்டதில்லை என்பதே நான் அறிந்தது. ஆனால் திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களில் ஒரு கடந்தநிலையை உணர்ந்த்தாகச் சொல்லியிருக்கிறார்.

 

பரவலாக, இவ்வாறு சடங்கு மதத்தை நிராகரிப்பவர்கள் செய்வதுபோல் வேறு அமைப்புக்களைச் சார்ந்து யோகப்பயிற்சி, தியானம் என்று செயல்பட்டவரும் அல்ல அவர். எனது தனிப்பட்ட குறுகிய காலப் பழக்கத்திலேயே பிரமிளுக்கு சாதாரண அளவில்கூட தியானப் பழக்கம் இல்லை என்று உறுதியாக அறிந்தேன். தியானப்பழக்கம் உடையவர்களிடம் எப்போதுமுள்ள குளிர்ந்த, நகைச்சுவையுணர்வு கொண்ட மனநிலை அவரிடம் எப்போமே இருக்கவில்லை. அவர் எப்போதுமே கொந்தளிப்பானவர். அவரது நகைச்சுவையுணர்வுகூட வசைகளில்தான் சிறப்பாக வெளிப்பட்டது. பிரமிள் எப்போதுமே கவிஞர்தான். பிறிதொரு ஆளுமையை அவருக்குக் கற்பிக்க இயலாது. அவரது ஆன்மிக ஈடுபாடும் மீபொருண்மையும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருந்தது.

 

 

சைவ மதம் சார்ந்த மீபொருண்மைக் கூறுகள் பிரமிளின் கவிதைகளில் தொடக்ககாலம் முதல் உள்ளன. பிசகு, E = MC2 முதலிய கவிதைகளில் அது நுட்பமாக உள்நுழைகிறது. பல கவிதைகளில் கவிதையின்இயங்குதளத்தில் அது செயல்பட்டிருக்கிறது.  ‘காலமுகம்’ போன்ற கவிதைகளில் நல்ல வாசகன் கண்டுகொள்ள முடியும். (எரிகிறது இன்று / காலமுக அக்கினியை / தாங்கிவரும் செய்தி ஒன்று.) நேரடியாகவே பிரமிளின் மீபொருண்மை நோக்கை ஆராய உதவும் இரு கவிதைகள் மண்டபம், தெற்குவாசல் ஆகியவை. மண்டபம் சாக்த மரபின் தெளிவான தடங்கள் கொண்டதாகும்

 

 

நீ முளைத்த நாளன்றே

முளைத்து உன் முகத்திசைக்கு

எதிர்த்திசை நோக்கி

விழித்திருப்பவள்’ என்றாள்

நாள்மணி வினாடிகள்

திக்கற்றுச் சிதறிய

கணம் ஒன்றில் நீ குனிந்து

நடுங்கும் பளிங்கில் உன்

முகம்தேடிய வேளை

ஜலத்தின் கதவுகள்

அலையோடித் திறக்க

குளத்தின் கருக்கிருட்டில்

நகைத்த கடல் நான்’ என்றாள்

 

 

‘தெற்குவாசல்’ இதைவிடவும் நேரடியாக சைவக் கூறுகளைக் கொண்டது. அதே சமயம் பிரமிளின் கவியுலகில் இதே சைவக் கூறுகள் அங்கதமாகவும் எள்ளலாகவும் தலைகீழாகத் திருப்பப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. ‘மேல்நோக்கிய பயணம்’ முக்கியமான உதாரணம்.

 

இடியொலி எழுப்பிய உடுக்கை

பொத்தல் விழுந்து

பொத் பொத் என்றொலிக்க

திரிசூலம் துருப்பிடித்து

கையைக் கடிக்க

மறுகையில் மானின்

கால் எலும்பும்

இன்னொரு கைநெருப்பு

அணைந்து புகைந்து

அரனார் இருமவும்

பின்தொடர்வோர் கல்லடியில்

படம் ஒடுங்கி

பாதி செத்த பாம்புமாலை

புழுவாகிப் புரள

ஊழித்தீ வரண்டு

நெற்றிக்கண் குழிவிழுந்து

திருதிரு என விழிக்க

அறுந்து பறக்கும் பூணூலை

பொடிமட்டையில் சுருட்டி

பொத்திப்பிடித்தபடி

அரனார் ஓடுகிறார்

 

அத்வைதத்தின் ஆதாரப் படிமங்களில் ஒன்றாகிய புறவெளியை விலக்கிய தூய அகவெளி குறித்த பெரும் மோகம் பிரமிளுக்கு இருப்பதை அவரது கவிதைகள் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.

 

தூரங்கள்கலைந்து

முத்தங்களாகி

மொய்த்தன’

 

(மோஹினி)

 

மீனுக்குத் தண்ணீர்

மிருகத்திற்கு

பிராணவாயு

மனிதாத்மாவுக்கோ

மனம்தான் வெளி

 

(இடம்)

 

இவை வெளிப்படையான தடங்கள். பிரமிளின் கவிதைகளை வாசிப்பதற்கு இம்மரபுகளின் மீபொருண்மையின் சாத்தியங்களை ஒருவாசகன் பயன்படுத்திக்கொண்டான் என்றால் அவனுக்குக் கிடைக்கும் அர்த்த விரிவு மேலும் வியப்பூட்டுவதாகும்

 

இயற்கைக்கு ஓய்வு

ஓயாத

மகத் சலித்த

அதன் பேரிரவு

 

 

அத்வைத ஞானத்தில் மகத் என்றால் என்ன என்று உணர்பவனுக்கு இக்கவிதை திறப்பதுபோல பிறருக்கு நிகழாது. பொதுவான வாசகர்களுக்கு இப்படி விளக்கலாம். இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள், உயிர்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து ஒற்றை இருப்பாக பார்ப்போம். அந்த ஒற்றைப்பருப்பொருள் இருப்பிற்கு அடிப்படையாக ஒரு கருத்துருவம் இருக்கவேண்டும். நாற்காலிக்கு பின்னணியில் நாற்காலி என்னும் கருத்து உள்ளது, அதைப்போல. அந்த மாபெரும் கருத்துருவே மகத். அதிலிருந்து பிரபஞ்சம் உருவாகிறது. ஒவ்வொரு பொருளும் மகத்தில்தான் தன் முதல்தொடக்கத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் அதை ஆழத்தில் உணர்கிறது. மகத் பிரம்மம் பிரபஞ்சமாக மாறும் ஒரு கருத்துமயக்க நிலையில் உருவாவது. பிரம்மத்தின் ஒரு தோற்றம்

 

ஒரு சொல் வழியாக பிரமிள் செல்வது தத்துவத்தால் மட்டுமே உருவகிக்கப்படும் ஒரு பிரம்மாண்டத்தை. ஓயாத மகத்தும் சலித்த பேரிரவு என்பது ஒரு அரிய கற்பனை. தமிழ்ப்புதுக்கவிதையில் அத்தனை ஆழமும் பித்தும் கொண்ட கற்பனைகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன

 

மேலும்

 

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5

முந்தைய கட்டுரைலா.ச.ராவின் பாற்கடல் – வெங்கி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்