கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

3 தன்னைக் கடத்தலின் கொந்தளிப்பும் அமுதும்

 

பிரமிளின் ஆன்மீகம் எது? அவர் முதலில் எழுதியதாகக் கூறப்படும் ‘நான்’ என்ற கவிதையை வைத்து இதை மிகத்திட்டவட்டமாக விவாதிக்க முடியும். பொதுவாக கவிஞர்களை, புனைவிலக்கியவாதிகளை அவர்களின் தொடக்க்காலப் படைப்புகளைக்கொண்டு சுருக்கிக்கொள்வது ஒரு நல்ல பயிற்சி. அப்போது அவர்களின் புனைவுலகம் தேர்ச்சியற்றதாக இருக்கும். ஆகவே மறைப்புகள் இருக்காது, மயக்கங்கள் நிகழாது. அவர்களின் அடிப்படைக் கேள்விகள் அவ்வண்ணமே பதிவாகியிருக்கும். அவர்களின் புனைவுலகம் மிக சிறியதென்பதனால் கூர்மையாக அவற்றை தொகுத்துக்கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாக அவர்களின் முன்னோடிகள் எவர், மரபு என்ன, எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இருக்கும்.

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரின்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவளென்
தாய்

இவ்வரிகளில் பிரமிளின் கவிதையை இறுதிவரை தீர்மானிக்கப்போகும் வினா உருவாகிவிட்டது. ஆன்மிகத் தேடலின் முதல் வினா என்று நம் மரபு என்றும் குறிப்பிடுவது ‘நான்?’ என்ற
வினாவையே. தன்னைக் காலத்தில், பிரபஞ்சத்தில், உறவுகளில் வைத்துப்
புரிந்துகொள்ள முயலும் தவிப்பு

யாரோ நான்! ஒ ஓ
யாரோ நான் என்றதற்குக்
குரல் மண்டிப் போனதென்ன
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்

இக்கவிதையில் பிரமிள் மிக மரபார்ந்த மொழியில் மிக மரபான மீபொருண்மைப் படிமங்களில் பேசுகிறார்

விடெதுவோ எந்தனுக்கு
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்து பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்

என்று தான் சார்ந்த சைவ மரபின் வழக்கமான மீபொருண்மைத் தரிசனத்தையே அவர் வெளிப்படுத்துகிறார். பிற்காலக் கவிதைகளில் பிரமிளில் நடந்த முக்கியமான மாற்றம் மரபார்ந்த எந்த விடையையும் அவரால் ஏற்கமுடியாமலாவதுதான். தன் சைவ மரபைக் கடுமையான எள்ளலுக்கு உட்படுத்தி அதிலிருந்து மூர்க்கமாக உதறி வெளியேற அவர் செய்யும் முயற்சிகளை பிற்காலக் கவிதைகளில் காணலாம். கட்டுரைகளின் இன்னமும் துல்லியமாக்க் காணலாம். கோவில், நம்பிக்கை என்ற கவிதைகளை உதாரணமாக்க் கூறலாம்.

இதன் அடுத்தபடியாக மரபான படிமங்களை அப்படியே பயன்படுத்துவதை பிரமிள் தவிர்க்க ஆரம்பித்தார். மரபின் கூறுகள் அவருடைய சொந்த மீபொருண்மைத் தளத்தில் உருமாற்றம் கொண்டேவெளிவந்தன. ‘தெற்குவாசல்’ கவிதையில் மகாகாலரூபம் கொண்டு நிற்கும் பைரவனைஅவர் விவரிக்கும்போது ஒவ்வொரு சைவப் பெருமதப் படிமமும் அவரால் மறுவிளக்கம் அளிக்கப்படுவதைக் காணலாம். அதற்கேற்ப பிரமிளின் மொழியும் மிகவும் மாறுதலடைந்தது. நேரடியான கூறுதலுக்குப் பதிலாக ஒன்றோடொன்று சிக்கி விரியும் அசையும் படிமங்களின்
வெளியாக ஆயிற்று அவருடைய படைப்புலகம். அதனூடாக அவர் பலதிசைகளில் நகர்ந்து பலமுனைகளில் முட்டி மோதிச் சென்றார். பிரமிளின் இறுதிப்படைப்பில் (உள்தகவல்) அதே தேடல் ஒருவகையில் தன் தாவலைக் கொந்தளிப்பும் அலைபாய்தலுமின்றி அதே தீவிரத்துடன்நிகழ்த்திக் கொண்டுள்ளது என்பதைக் காணலாம். ‘தளமற்ற பெருவெளியாய் கூரையற்று நிற்கும்’ காலாதீதத்தின் கணத்தில் வந்து முடிகிறது அக்கவிதை

பிரமிளின் ஆன்மிகத் தேடல் தமிழ்ச் சூழலில் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டுள்ளது ? அவர் எழுத ஆரம்பித்து ஐம்பது வருடம் கழித்து நான் எழுத வந்தபோதுகூட ஆன்மிகம் என்று சொன்னால் சாமி கும்பிடுதல் என்று புரிந்துகொள்பவர்களேதமிழ்ச் சூழலில் அதிகமும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தனர். என் கட்டுரைகளில் ஆன்மிகம் என்று கூறுமிடத்திலெல்லாம் அடைப்புக்குறிக்குள் ‘மதம் சார்ந்த பொருளில் அல்ல’ என்று கூறவேண்டியிருந்தது. பிரமிள் இடைவிடாது பேசிய, தன் ஆக்கங்களில் முன்வைத்த ஆன்மிகம் குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும்
எவ்விவாதமும் நடந்தது இல்லை என்பது ஆச்சரியமளிப்பது; தமிழ்ச்சூழலைப் புரிந்துகொண்டவர்களுக்கு ஆச்சரியம் அளிக்காதது. பிரமிளின் தீவிர ஆதரவாளர்கூட அத்தகைய ஒருவினாவை எழுப்பியது இல்லை. இன்றும்கூட பிரமிள் அல்லது தேவதேவன் அல்லது நான் பேசும் ஆன்மிகம், மெய்நாட்டம் பற்றி எந்த அடிப்படைப்புரிதலும் தமிழ்ச்சூழலில் இல்லை. மெய்யியல் என்று வந்தாலே உடனே அதை பார்ப்பனியம், பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக உள்ளடக்கம் என்று கூறுபோட்டு பேசுபவர்களே இங்கே மிகுதி. தன் வாழ்நாளில் பிரமிளும் தேவதேவனும் அவர்களை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நான் சலிக்காமல் அவர்களிடம் உரையாடி, விளக்க முயன்றுகொண்டிருக்கிறேன்.

இப்படி யோசிக்கலாம், பிரமிள் பிறப்பால் ஒரு பிராமணர் என்றால் அவர் கூறியவை எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்?

 

1) அவர் இந்துமதம்சார்ந்த படிமங்களையே அதிகமாகச் சார்ந்திருந்தார்.

 

2) ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று அவர் முக்கியப்படுத்திய ஞானிகள் அனைவரும்
பிராமணர்களே

 

3) அவருக்கு சமஸ்கிருதம் மீது மிகுந்த மோகம் இருந்தது.

 

எப்படி இவற்றின் அடிப்படையில் அவர்மதிப்பிடப்பட்டிருப்பார்? அவர் தன் எழுத்துச் செயல்பாட்டின் பிற்பகுதியில் வைதிக மதம்,பிராமணசாதி ஆகியவற்றை மிகமிகக் கடுமையாகத் தாக்கியது அவருக்கு ஒரு ‘தடுப்புக்கம்பியை அமைத்ததா? இல்லை என்றே கருதுகிறேன். எஸ்.என்.நாகராஜன் பிரமிளை விடவும் பிராமணச் சடங்குகளையும் சாதியத்தையும், வைதிக மதத்தையும் எதிர்த்திருக்கிறார். ஒயாது அவர் மீது பிராமண முத்திரை குத்தப்பட்டது. நம் சமகாலத்தில்கூட தீவிரப்பெரியாரியரான ஞாநியும் அவ்வசையிலிருந்து தப்பவில்லை. அப்படியானால் எப்படி பிரமிள் அதனிடமிருந்து தப்பினார்? புதுமைப்புதுமைப்பித்தனுக்குக்கூட இங்கே சாதிய முத்திரை குத்தப்பட்டபோது பிரமிள் எப்படி விடுபட்டார்?

 

எளிய நிதரிசன விடை இதுதான். தமிழ் இலக்கியப் பூசல் உலகில் இங்குள்ள திராவிட, இடதுசாரி எழுத்துக்களை அழகியல்ரீதியாக மறுத்தவர்களை அவர்கள் முத்திரைகுத்திகள் எதிர்த்து வசைபாடினர். அந்த முத்திரைகுத்திகளால் கடுமையாக எதிர்த்து வசைபாடப்ப்ட்ட சுந்தர ராமசாமி, வெங்கட் சாமி நாதன் ஆகியோரை பிரமிள் தானும் கடுமையாக விமர்சனம் செய்தார். சுந்தர ராமசாமியையோ அல்லது வெங்கட் சாமிநாதனையோ எதிர்க்கும் கலைசார் படைக்கலங்கள் நம்மூர் வசைபாடிகாளிடம் இல்லை. ஆகவே அவர்கள் பிரமிளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவரை தங்கள் ஆயுதமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான தந்திரமாகவே பிரமிள் அவர்களுக்கு உவப்பானவராக ஆனார். பிரமிளும் அவர் கடைசிக்காலத்தில் திராவிட இயக்க வசைபாடிகளுக்கு சிலபல எலும்புத்துண்டுகளை வீசியெறிந்து அரண் அமைக்க முயன்றார். ஆனால் தமிழ்ச்சூழலில் சுந்தர ராமசாமிக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் முக்கியத்துவம் குறையும்தோறும் பிரமிள் அவரது ஆன்மிகச் சார்புக்காக மதவாதி என்றோ சாதியவாதி என்றோ முத்திரை குத்தப்படுவார் என்பது உறுதி என நான் எழுதினேன். அது பிரமிள் இருந்தபோதே அவர் வாசிக்கவே நிகழவும் தொடங்கியது.

பிரமிள் முன்வைத்த மதம் சாராத, தனிநபர் ஆழம் சார்ந்த ஆன்மிகத் தேடலை – பிரமிளைப் பொறுத்தவரை அதை ஆன்மிகத் தத்தளிப்பு என்றே வகுக்கவேண்டும் – புரிந்துகொள்வதற்கான கருவிகள் தமிழ் அறிவுச்சூழலில் புழங்கவில்லை. குறிப்பாகஇன்று, மார்க்ஸியர்கள் மார்க்ஸிய ஆய்வுமுறையை உதறி ஈவேரா பாணி மட்டையடி முறையைக் கைக்கொண்டுள்ளபோது, அது சாத்தியமேயில்லை. அவருடைய அந்தரங்க ஆன்மிகத் தேட்டம் காரணமாக அறிவுத்தளத்தில் பிரமிளிடம் ஆழமான ஓர் அராஜகப்போக்கு நிலவியது. அதை நம் அரசியல், சமூகவியல் செயல்பாட்டாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிரமிளை அவர்கள் பல கோணங்களில் விமரிசித்துள்எனர்; சாதகமாக வும் பாதகமாகவும். அவரது சமூகப் பொறுப்பு என்ன என்ற வினா முற்போக்கு முகாமிலிருந்து மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுமைப்பித்தன், மெளனி, க.நா.சு ஆகியோரைப் பற்றி எழுப்பப்பட்ட வினாதான் அது. அவர் எவ்வகையான சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்று எண்ணுகிறார், அதை உருவாக்க அவர்என்ன செய்தார்; இல்லை, இப்போதுள்ள சமூக அமைப்பில் அவருக்குத் திருப்தியா – முதலிய வினாக்கள்.

பிரமிள் இவற்றுக்குத் திட்டவட்டமாகவும் சில சமயம் எல்லைமீறிச் சென்றும் பதிலளித்திருக்கிறார். எந்த ஒரு செயல்திட்டம், கோட்பாடு, கொள்கையும் அவருக்குஏற்புடையதாக இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரமிள் விஷயத்தில் இதில் இன்னும் ஒரு சிக்கல் உண்டு. தமிழில் அகவயமான, ஆன்மிக நோக்கை முதன்மைப்படுத்திய படைப்பாளிகளான மௌனி, நகுலன் முதலியோர் அவர்களுடைய அரசியல்சமூகவியல் நோக்கு குறித்த வினாக்களுக்கு பெரும்பாலும் பதிலளித்தது இலலை. புதுமைப்பித்தன் விதிவிலைக்காக தன் அரசியலின்மையையே தீவிர அரசியலாக முன்வைத்தவர். பிரமிளும் அதே நோக்கைக்கொண்டவர்; மேலும் தீவிரமாக.புதுமைப்பித்தனுக்கு இன்று ஒரு ‘முற்போக்கு மீட்பு’ அளிக்கப்பட்டிருப்பது விசித்திரமானது; அதேசமயம் வரலாற்றில் எப்போதும் நிகழ்வது. வாழும் காலத்தில் படைப்பாளியிடம், அத்தனை அரசியல் தரப்பும் வந்து ‘வா, வந்து என்னுடன் சேர்ந்து கோஷமிடு’ என்று அழைப்பு விடுக்கின்றன. தன்னுடன் வராதவன் தன் எதிரியின் தரப்பாளன் என்று முத்திரை குத்துகின்றன. அவ்வாறு அவன் அனைவருக்கும் எதிரியாகிறான். தன் படைப்பு வல்லமையால் தவிர்க்க முடியாத தரப்பாக நின்று கொண்டுமிருக்கிறான்.

புதுமைப்பித்தன், பிரமிள் ஆகியோரைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் தரப்பை முன்வைத்தவர்கள்
மட்டுமல்ல; எதிர்த்தரப்புகளையெல்லாம் தாக்கியவர்களும்கூட.ஆயினும் அவர்கள் மறைந்து அவர்களுடைய படைப்புலகு ஒரு முன் மாதிரியாக அமைந்து அவர்களைப் புறக்கணிக்க முடியாதநிலை உருவாகையில் அவர்களைஉள்வாங்கிக்கொள்ளவே அனைத்துத் தரப்பினரும் முயலுவார்கள். அப்படித்தான் புதுமைப்பித்தன் என்ற ‘அராஜகவாதி-நச்சிலக்கியவாதி’ முற்போக்குப் படைப்பாளியாக ஆனார். உண்மையில் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் எல்லாத் தரப்பினருக்கும் அவர்களுக்கு உரிய ஒரு வாசல் திறப்பு தென்படும். துன்பக்கேணி, மனிதயந்திரம், பொன்னகரம் மூலம் புதுமைப்பித்தன் முற்போக்கினரால் சொந்தம் கொள்ளப்படலாம் என்றால் புதிய கூண்டு முதலிய கதைகள்வழியாக இந்துத்துவர்களும் அவரைச் சொந்தம் கொண்டாடலாம். சணப்பன்கோழி போன்ற கதைகள் வழியாக சம்பிரதாய இந்துமத நம்பிக்கையாளர்களுக்கும் அவர் உவப்பானாராக ஆகலாம். பிரமிளுக்கும் அவர் இறந்த ஒரு வருடத்திற்குள் மீட்பு தொடங்கியுள்ளது. அவரை பிராமணிய, வைதீக எதிர்ப்பாளராக கொண்டாடி அதனூடாகச் சென்று அவரது படைப்புலகையே முற்போக்குத் தரப்பாக விளக்கிவிடலாம்தான். அது வரும் காலங்களில் விரிவாகவே நிகழும். பிராமணியத்தை எதிர்த்த பிரமிள்தான் வைதிக மரபின் சாராம்சமான பலவற்றை உள்வாங்கிக்கொண்ட கவிஞர் என்பதும் தமிழ்ச்சூழலில் உபநிடதங்களின் மரபை அவர் அளவுக்கு முன்வைத்த இன்னொருவர் நவீனச்சூழலில் இல்லை என்பதும் மழுங்கடிக்கப்படும்

படைப்பாளியை உள்நுழைந்து அறிய முயலும் தீவிர வாசகனுக்கு தொடக்கத்தில் இத்தகைய ‘பின் மரண முத்திரை/கள் பெரும் தடையாக அமையும். பிரமிள் உக்கிரமான பிராமண எதிர்ப்பாளர், அதுவே அவரது அரசியல், அதையே அவரது படைப்புகள் முன்வைக்கின்றன என்ற எண்ணத்துடன் அவரை அணுகினால் அவரது எந்தெந்தப் படைப்புகள் நம் முன் கண்திறக்காது போகும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஆன்மிகத் தேடலுக்கு மட்டுமே உரிய முழுமுற்றான அராஜகம் கொண்டவர் பிரமிள். தனக்குக் கிடைத்த நுண்மையான வாசனை ஒன்றையே குறிவைத்து பிற அனைத்தையும் தவிர்த்து முன்னால் ஓடியபடியே இருக்கும் வேட்டை நாய் அது. இந்தப் பிரக்ஞையை இதன் தளத்தைத் தன்னளவில் சிறிதேனும் தொடரத ஒருவர் புரிந்துகொள்வது மிகவும் சிரமம் என்றே என் அனுபவங்கள் மீண்டும் மீண்டுமகூறுகின்றன.

அ) உடன்வாழ் மனிதர்கள் பசித்துச் சாகும்போது அழகுகளையும் உன்னதங்களையும் தேடுபவன்.

ஆ) அறைக்குள் மூடிக்கொண்டு இருளில்தனித்திருந்து தன்னைத் தேடும் உலகறியாக் குருடன்.

இ) வாழ்வை நிராகரிப்பவன்; வாழ்வுக்கு எதிரான கூறுகளை நோக்குபவன்.

ஈ) தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனையால் பிறரை உதாசீனமும் செய்பவன்

ஆகிய முத்திரைகளை ஆன்மிகத் தேடல் கொண்டவர்கள் மீது பிறர் சுமத்துவதுண்டு. அதற்கு
அளிக்கப்படும் எந்தவிதமான பதிலும் அவர்களைத் திருப்தி செய்வதில்லை.ஆன்மிகத் தேடல் கொண்ட ஒருவனைப் பொறுத்தவரை வாழ்வின் அனைத்துத் தளங்களைச் சேர்ந்த பிரச்சினைகளுக்கும், வினாக்களுக்கும் பொதுவான, சாரமான, முழுமையான பதில்களே இருக்க முடியும். எளிய விடைகள், உடனடித் தீர்வுகளில் அவன் ஆர்வம் காட்டமாட்டான். ஓர் அரசியல் பிரச்சினையை அரசியல் நோக்குடன் பகுப்பாய்வு செய்து அரசியல் தளத்தில் முடிவு காண முடியுமென அவன் நம்பமாட்டான். அதனுடன் தனிமனிதனின் அந்தரங்க இச்சைகள், வரலாற்று வல்லமைகள், இயற்கையின் விதிகள் பின்னிப்பிணைந்து கிடப்பதையே அவன் காண்பான். எளிய விடைகளும் தீர்வுகளும் முன்வைக்கப்படுகையில் அவற்றை நிராகரித்து அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டுசெல்வான். எப்போதும் முழுமையிலேயே நோக்கு ஊன்றுவான்

இவ்வாறு கூறலாம், பொதுவாகச் சிந்தனை மூலம் அடையப்படும் உண்மைகளெல்லாம் துண்டுபட்ட, வெட்டி எடுக்கப்பட்ட உண்மைகளே. ஆன்மிகவாதி அவ்வுண்மைக்கான தேடலில் நாடுவது பிளவுபடாத உண்மையை மட்டுமே. அவனுக்கு மயக்கங்கள், மனத்தளர்வுகள், பொய்கள் தடையாக அமைவதில்லை; சிற்றுண்மைகளும்கூட தடையாகவே உள்ளன. ஆகவே ஆன்மிகத் தேடல் கொண்டவன் அன்பு, கருணை,அறவுணர்வு, மனிதாபிமானம் முதலியவற்றைக்கூட இரண்டாம் பட்சமானவையாகக் கருதக்கூடும். அவனில் இவ்வுணர்ச்சிகள் சார்ந்த வெளிப்பாடுகள் அந்தந்தத் தருணத்திற்குரிய உண்மைகளாக மட்டுமே பிறந்து வரக்கூடும். புதுமைப்பித்தனிலும் பிரமிளிலும் அத்தகைய உடனடி வெளிப்பாடுகள் பல உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அவர்களை இவ்வுணர்ச்சிகளினால் ஆனவர்கள் என்று வகுக்க முடிவதில்லை. இவற்றை எளிதில் கீழே உதறிவிட்டு அவர்கள் மேலும் செல்வதையே காண்கிறோம்.

ஆர்வமூட்டும் அவதானிப்பு ஒன்று இவ்விஷயத்தில் எனக்கு உண்டு. பொதுவாக இரண்டாம்தளப் படைப்பாளிகளையே நம்மால் மனிதபிமானி என்றோ, அறப்போராளி என்றோ, கருணையின் முகம் என்றோ ஐயமின்றி வகுத்துவிட முடிகிறது.முதல்தளப் படைப்பாளிகள் நமக்கு அந்த உறுதிப்பாட்டை அளிப்பதில்லை. அவர்களின் படைப்புலகில் அந்தந்தத் தருணங்களில் கருணையும், மனிதாபிமானமும், அறச்சீற்றமும் உக்கிரமும் கவித்துவமுமாக வெளிப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அதற்கு எதிரான கூறுகளினால் அவை ஒட்டுமொத்தமாகச் சமன் செய்யப்பட்டிருக்கும். அவர்களை முழுமையாகப் பார்க்கும்தோறும் அந்த வகையான உறுதிகளை அவர்கள் நமக்கு அளிக்கமாட்டார்கள். மிகச்சிறந்த உதாரணம் ஷேக்ஸ்பியர்.

அதற்குக் காரணம் இதுதான், கருணை, அறம், மனிதாபிமானமெல்லாம் நிலைப்பாடுகள். ஆன்மிகத் தேடல் எதிர்காலத்தில் தன் புள்ளியை வைத்துகிகொண்டு ஓயாது முன்னகரும் ஒரு பயணம். பிரமிள் என்ற ஆன்மிகத் தேடல் கொண்ட படைப்பாளியின் உலகில் அறச் சிற்றம் வெளிப்படும் பல தருணங்கள் உள்ளன. குருக்ஷேத்ரம், மூன்று இந்தியக் குழந்தைகள், கலப்பு முதலிய கவிதைகளைக் உதாரணமாக் கூறலாம். அழுத்தமான மனிதாபிமான நோக்கு வெளிப்படும் E = Mc2 முதலிய கவிதைகளையும் அவரில் நாம் காண்கிறோம். ஆனால் அவையல்ல பிரமிள். அவற்றில் வெளிப்படுவது அவரது ஒரு சாயலே, முழுமை அல்ல. பிரமிள் தன் கவிதைகள் உச்சம் கொள்ளும்போது வெளிப்படுத்தியதே அவரது தேடல், அவரது நல்ல கவிதைகளின் உச்ச வரிகளும் முடிப்பு வரிகளும் அதை அழகிய வெளிப்பாடுகளாக நமக்குத் தருகின்றன.

அதன் இல்லாமுகத்தின்
மெளனம்
வெற்று வெளியில்
ஒளியின் பிலம்
என்குரல்
உறுமி
உயிராயிற்று
(மண்டபம்)

நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெருமெனம்

(பியானோ)

தெற்குக் கோபுர வாசலில்
திகைத்து நிற்கிறது
நீயற்ற நானற்ற
கல்
(தெற்கு வாசல்)

இவ்வரிகளைத் தன் கவித்துவ வேகத்தில் நிகழ்த்தும் பிரமிள் அவ்வேகம் நிகழாத கவிதைகளில் அத்தகைய வரிகளை செயற்கையாக உருவாக்கி எழுதிச் சேர்க்கவும் செய்கிறார். ஏராளமான கவிதைகளை இவ்வாறு அவர் முடித்திருப்பதைக் காணலாம்

ஆயிரம் அதிர்வெடி
திசையெங்கும்
ஒரே ஒரு மலர்
பூக்கும் பேரொலி

(கோதம இந்ரம்)

தபசேற்றது ஆல்
ஒவ்வொரு
தெறித்தது சுவர்க்கம்
(திரிசங்கு)

இலையிலும்
ஒருகணம் நானே
கருவானேன்
கனவு கண்களாயிற்று
(கனவு

பிரமிளை அவரது ஆன்மிகத் தேடலுடன் கூட ஓடியபடி அறிவதே அவருக்கு நியாயம் செய்யும் நோக்காகும். அவரது படைப்புலகம் நமக்களிக்கும் அனுபவம் என்பது அப்படி நம்மையும் ஓடவைப்பதே

 

[மேலும்]

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4

 

 

 

முந்தைய கட்டுரைகாந்தி வாசித்த நூல்கள்
அடுத்த கட்டுரைஅக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்