ஆ.சிவசுப்ரமணியம் ஓர் உரையாடல்

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது

தூத்துக்குடியில் இருந்து ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் பேசினார். என் வாழ்த்துக்குறிப்பில் அவருக்கிருந்த இரு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

ஒன்று நான் அவருடைய சமூகவியல் ஆய்வுமுறை செவ்வியல் மார்க்சிய அடிப்படை கொண்டது என்று சொல்லியிருந்தேன். அது எந்த கோணத்தில் சொல்லப்பட்டது என்று கேட்டார். மார்க்ஸியர்களில் மேற்கட்டுமானம் [ அரசு, கலாச்சாரம்] முழுமையாகவே அடித்தளத்தின் [ உற்பத்தி, வினியோகம்,சுரண்டல்] இயல்பான வளர்ச்சி என்று நம்புபவர்கள் செவ்வியல் மார்க்ஸிய பார்வை கொண்டவர்கள் என்று நான் சொன்னேன்.

டி.டி.கோஸாம்பி போன்றவர்கள் அவ்வாறுதான் வரையறை செய்யப்படுகிறார்கள். ஆ.சிவசுப்ரமணியம் அவர்களின் சமூகவியல் ஆய்வின் அடிப்படை அது என்றும், அவர் சமூகவியல் நிகழ்வுகளின் பொருளியல் அடித்தளம் நோக்கிய அணுகுமுறையையே கைக்கொள்கிறார் என்றும் கூறினேன். இது என்னுடைய பொதுவான புரிதல். குறிப்பாக ஓர் ஆய்வாளரின் எல்லா நிலைகளையும் மாற்றங்களையும் மதிப்பிடவேண்டும் என்றால் அவருடைய அனைத்து நூல்களையும் ஒரே வீச்சில் வாசிக்கவேண்டும். அது ஓர் ஆய்வுநோக்காக அமையவேண்டும்.

அவர் தன் பார்வை அதிலிருந்து விலகிவந்துவிட்டது என்றும் ஆகவே செவ்வியல் மார்க்ஸிய அணுமுறை கொண்டவர் என்னை தன்னைக் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக சாதியின் உருவாக்கம்,நிலைக்கோள் ஆகியவற்றை பொருளியல்காரணிகளிலிருந்து விலகி தன் விதிகளின்படி செயல்படும் பண்பாட்டு நிகழ்வாகவே தான் அணுகுவதாகவும் , சமீபத்தைய நூல்கள் அந்த கோணத்தை கொண்டவை என்றும், அந்த பார்வையை பிற செவ்வியல்மார்க்ஸியர்கள் விமர்சனம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்

இரண்டாவதாக, நான் என் கட்டுரையில் வலது கம்யூனிஸ்டுகள், இடது கம்யூனிஸ்டுகள் என்று சொல்லியிருந்தேன். அது இதழாளர்களால் உருவாக்கப்பட்ட, சற்று மட்டம்தட்டும் நோக்கம் கொண்ட , அடையாளம் என்று ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுக்கட்சியில் வலதுசாரி என ஒன்று இருக்கமுடியாது. அது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அடிப்படையை மறுப்பது.

1962 முதல் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டுக் கட்சியில் கருத்துவேறுபாடு உருவாகி 1964ல் பிளவு உருவாகியது. புரட்சிகர எதிர்ப்பு என்னும் கோஷம் கொண்டவர்கள் வெளியேறினார்கள். இடதுசாரி அமைப்புக்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியாகவே நீடித்தார்கள். பிரிந்துசென்றவர்கள் தங்களை இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி [மார்க்ஸிஸ்ட்] என அழைத்துக்கொண்டார்கள்.

ஓர் அமைப்பு தன்னை எப்படி குறிப்பிடுகிறதோ அப்படியே அதை அழைப்பதே முறை. ஆகவே சிபிஐ, சிபிஎம் என அவற்றை குறிப்பிடுவதே சரியானது என்றார். இந்தப்பிரிவினை கேரளத்திலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. நிலைத்திருப்பது வலது, விலகிச்சென்றது இடது என்னும் கோணத்திலேயே நான் குறிப்பிட்டேன், இத்தகைய உட்குறிப்புகள் நான் உத்தேசிக்காதவை, திருத்திக்கொள்கிறேன் என்று நான் கூறினேன்.

நான் ஆ.சிவசுப்ரமணியம் அவர்களிடம் உரையாடியதில்லை. அதற்கான வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சி அளித்தது.

 

முந்தைய கட்டுரைஅறமெனப்படுவது யாதெனின்…
அடுத்த கட்டுரைஇலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்