சென்னையில் இருக்கும்போது சாமித்தோப்பு ஐயா பலபிரஜாபதி அடிகளார் அழைத்து என்னைப் பார்க்கவேண்டும், எப்போது வரலாம் என்று கேட்டார். அவர் என்னை வந்துபார்ப்பது சரியல்ல, நானே செல்லவேண்டும் என எண்ணினேன். லக்ஷ்மி மணிவண்ணனிடம் தொலைபேசியில் அழைத்து அடிகளாரைச் சென்று சந்திக்க உடன்வரும்படி அழைத்தேன். மணிவண்ணன் சாமித்தோப்பு அய்யாவழியின் அடியவர்களில் ஒருவர்.
ஊர் திரும்பியபின் மணிவண்ணன் வந்தார். காரில் சுவாமித்தோப்பு சென்றோம். அப்பகுதிக்குச் செல்ல உகந்த காலநிலை. முந்தைய இரவெல்லாம் மழை. குமரிமாவட்டத்தில் சென்ற ஜூன் முதல் அனேகமாக ஓரிரு நாட்கள் இடைவெளிவிட்டு நாளும் மழைபெய்துகொண்டிருக்கிறது. தென்மேற்குப்பருவக்காற்றின் மழை நீடித்து அப்படியே வடகிழக்குப் பருவக்காற்றின் மழையாக மாறிவிட்டிருக்கிறது. இரண்டு பருவக்காற்றுகளும் இணைந்த இத்தகைய நீள்மழைக்காலம் கொஞ்சம் அரிதானதுதான்
சாலையோரங்கள் பச்சை கொப்பளித்து கிடந்தன. எல்லா ஓடைகளிலும் நீர்ச்சுழிப்பு. சாலைகளில் பொன்னிற மணல்வரிகள், செந்நிற மணற்சுழிப்புகள். நாகர்கோயில் கன்யாகுமரி சாலையில் இருக்கிறது சாமித்தோப்பு. இப்பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள்தான். உண்மையில் நூறாண்டுகளாகவே இங்கே தோப்புகள் வந்தன. அதற்குமுன் இப்பகுதி பொற்றைநிலம்தான். அன்று பெரும்பாலும் ஊர்கள் இல்லை, இருக்கும் ஊர்களின் பெயர்களும் வேறு.
பாலபிரஜாபதி அடிகளாரை நான் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் கண்டதுண்டு. அணுகி பழக நேரிட்டதில்லை. அன்று அவரை அவருடைய இல்லத்தில் தனியாகச் சந்தித்து இரண்டுமணிநேரம் பேசமுடிந்தது ஒரு பெரிய கொடை. அவரிடமிருந்தே ஐயா வழியின் பலவகையான விரிவுகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. நான் இளமையில் ஒருமுறை சாமித்தோப்புக்கு வந்திருந்தேன். அந்நினைவு மங்கலாக மீண்டு வந்தபடியும் இருந்தது
அய்யாவழி என இன்று அழைக்கப்படும் மெய்ஞானவழி அய்யா வைகுண்டர் அவர்களிடமிருந்து தொடங்குகிறது. பொது யுகம் 1809-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் தாமரைகுளம் என்னும் ஊரில் பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார் அவருக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அது பேச்சு அழைப்பில் ‘முத்துக்குட்டி’ என்று ஆகியது.
வைகுண்டர் அருகே புவியூரைச் சார்ந்த திருமாலம்மாளை மணம்புரிந்துகொண்டார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது என்றும் முத்துக்குட்டி அவரை இரண்டவதாக மணம்புரிந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. முத்துக்குட்டி பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்தார்.
பெரும்பாலான ஞானியரின் வாழ்க்கையின் பொதுவான ஒரு வரைபடத்தையே நாம் ஐயா வைகுண்டரிலும் காண்கிறோம். அவருக்கு இளமையில் ஒரு நோயும் அதைத்தொடர்ந்த கடுமையான அக- புற நெருக்கடியும் நிகழ்ந்தது. அவர் உயிர்துறக்கக்கூடும் என்னும் நிலை. அவருடைய அன்னை அவரை திருச்செந்தூர் ஆலயத்திற்கு காவடி கட்டி கொண்டுசென்றார். அங்கே அவர் வியப்பூட்டும்படி குணமாகி முற்றிலும் பிறிதொருவராக எழுந்தார். அவருக்கு ஒரு மெய்யறிதல் நிகழ்ந்தது.
தன்னை உணர்ந்தபின் வைகுண்டர் பூவண்டன் தோப்பு என்னும் இடத்தை அடைந்து அங்கே தன் அறநிலையை அமைத்துக்கொண்டார். அதுவே இன்றைய சுவாமித்தோப்பு. அங்கே அவர் கடுமையான தவங்களை மேற்கொண்டு தன்னை இறையுருவாக ஆக்கிக்கொண்டார். இவ்வாறு அகவிழிப்பு அடைந்த அனைத்து மெய்ஞானியரையும்போலவே அவர் தன் இறைநிலையை அறிவித்தார். மக்களை நல்வழிப்படுத்த, அணுகி மாணவர்கள் ஆனவர்களுக்கு மெய்மையை உணர்த்த முற்பட்டார்
மெய்ஞானியர் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தும்போது எப்போதுமே ஒன்றுதான் நிகழ்கிறது, மனிதர்களை அவர்களின் இனம், குலம், குடி என அடையாளப்படுத்தியிருக்கும் அமைப்பு திகைப்பு கொள்கிறது. ‘இவன் தச்சன் மகன் அல்லவோ?” என்று ஏசுவை நோக்கி கேட்ட அதே குரல் எழுகிறது. அவர் தன் மானுடத்தன்மையை விட்டு மேலெழுந்து பேருருக்கொள்கையில் அவரை தண்டிக்கவும் அழிக்கவும் அச்சமூக அமைப்பு முயல்கிறது.
வைகுண்டர் மேல் அன்றைய திருவிதாங்கூர் அரசு கடுமையான தண்டனைகளை, ஒடுக்குமுறைகளை ஏவியது. அன்றைய சாதிய மேலாதிக்கம் அவரை முற்றழிக்க முனைந்தது. அவருடைய துறவுக்கோலமும், ஞானி என்னும் நிலையுமே அவரை அவர்கள் அழிப்பதற்குத் தடையாக அமைந்தது. அவர்களின் ஒடுக்குமுறைகளில் இருந்து அவர் தன் அருளால் வெளிவந்தார்.
ஆனால் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வன்முறையைக் கைக்கொள்ள அவர் தன் மக்களுக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக கொலைத்தெய்வங்களையும், கொலைஆயுதங்களையும் கைவிடும்படி அறிவுறுத்தினார். ஒருங்கிணைதல், ஏற்றத்தாழ்வுகளை துறத்தல், கல்வி, வணிகம் தொழில் ஆகியவற்றில் ஈடுபடுதல் ஆகியவற்றை ஆணையிட்டார்
ஐயா வைகுண்டர் மதமாற்றத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணிய கிறித்தவ திருச்சபைகள் அவரைப்பற்றி மிகமிகக் கடுமையான வசைகளையும் அவதூறுகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர் சாத்தானின் வடிவம் என்றே அவர்களால் குறிப்பிடப்படுகிறார். அவர்கள் தங்கள் மேலிடத்திற்கு எழுதிய குறிப்புகளே ஐயாவழியின் வளர்ச்சி பற்றிய ஆவணங்களாக இன்று உள்ளன.
ஐயா வைகுண்டரின் போதனைகள் அவருடைய ஐந்து மாணவர்களில் முதன்மையானவரான அரிகோபாலன் அவர்களால் எழுதப்பட்டன. அவை நாட்டார் பாடல் அமைப்புக்கு அணுக்கமான , அகவலோசை கொண்ட பாடல்களாக உள்ளன. அவை அகிலத்திரட்டு என்று அழைக்கப்படுகின்றன. ஐயாவழியின் முதன்மைநூல் அகிலத்திரட்டுதான்.
ஐயா வைகுண்டர் தன் வாழ்நாளில் இரண்டுவகையான வழிபாட்டிடங்களை அமைத்தார். அவரால் இறைநிறுவல் செய்யப்பட்ட இடங்கள் பதிகள் எனப்படுகின்றன. அவர் மக்கள் பயணம் செய்யும்போது தங்குவதற்கும், நூல்பயில்வதற்கும் உருவாக்கிய மையங்கள் நிழல்தாங்கல் எனப்படுகின்றன. அன்றைய சூழலில் அடித்தள மக்கள் நெடுந்தொலைவு பயணம்செய்ய தடையாக இருந்தது வழியில் தங்குமிடங்கள் இல்லை என்னும் நிலையே. இது அவர்களின் வணிகத்திற்கு பெருந்தடையாக இருந்தது. நிழல்தாங்கல் அதன்பொருட்டே உருவாக்கப் பட்டது. கூடவே அது ஐயாவழியின் கொள்கைகளைப் பரப்பும் மையமாகவும் செயல்பட்டது.
ஐயா வழி எல்லா இந்திய மெய்ஞானவழிகளையும்போல விரிவான, தனக்குரிய புராணக்கட்டுமானம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அது அகிலத்திரட்டிலிருந்து தொடங்குகிறது. இந்துபுராணங்களின் அழகியலையும், ஆழ்ந்த குறிப்புகளையும் தன் நோக்கில் வளர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்த புராணக்கட்டுமானம். பக்தர்களை நேரடியாகச் சென்றடைவது இந்தப்புராணம்தான்
இதற்குச் சமானமாகவே ஒரு மெய்த்தரிசனம், அதற்குரிய தத்துவக் கட்டுமானம் அதற்கு உண்டு. உண்மையில் புராணமும் தத்துவமும் ஒன்றையொன்று நிரப்பி அந்த மெய்த்தரிசனத்தைச் சுட்டுவதை காணலாம். அந்தமெய்த்தரிசனத்தை ‘ஒருமைத்தரிசனம்’ எனலாம். எளியதளத்தில் வைணவம் சைவம் இரண்டையும் ஒன்றாக்கி வைகுண்டர் அதை முன்வைத்தார். அவர் சிவன் – விஷ்ணு இருவருடைய அம்சம்கொண்டவர், விஷ்ணுவின் அவதாரம் எனப்படுகிறார். உயர்தத்துவத் தளத்தில் அத்வைதத்திற்கு மிக அணுக்கமானது அய்யா வைகுண்டரின் தரிசனம்.
ஐயா வைகுண்டரின் காலகட்டத்தில், ஒரு நூறாண்டுகாலத்தில், இந்தியாவெங்கும் அத்வைதம் ஒரு மானுடவிடுதலைத் தத்துவமாக பற்பல மெய்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய சிறுவேறுபாடுகளுடன் ஒன்றையே சொல்லியிருக்கிறார்கள். அனைத்தும் பிரம்மமே என்னும் தரிசனம் மானுடர் அனைவரும் தெய்வவடிவங்களே, ஆகவே ஏற்றத்தாழ்வு என்று ஒன்று இல்லை என்னும் நடைமுறைத் தத்துவமாகவும் மாறியது.
கேரள மறுமலர்ச்சியின் முகங்களான சட்டம்பி சுவாமிகள், நாராயணகுரு, அய்யன்காளி, வாக்படானந்தர் போன்ற அனைவருமே அடிப்படையில் அத்வைதிகள். அவர்கள் அனைவருக்குமே ஆசிரியரான தைக்காடு அய்யாவு சுவாமிகள் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். அவருடைய அன்னை கொல்லத்தைச் சேர்ந்தவர். குமரிமாவட்டத்தில் அவருடைய அன்னைவழியினர் வாழ்ந்தனர். அவர் ஹடயோகியாயினும் அவருடைய மெய்யியல் அத்வைதம்தான். தைக்காடு அய்யாவு ஏறத்தாழ ஐயா வைகுண்டரின் காலத்தை ஒட்டியவர். ஐயா வைகுண்டரின் காலத்திற்கு சற்றே பிந்தியவர் வள்ளலார்
இவர்களை தத்துவநோக்கில் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்யப்பட்டதில்லை. ஒருவர் மேல் ஒருவரின் செல்வாக்கு என்ன என்பது ஆழமான உசாவலுக்குரியது. உதாரணமாக தைக்காடு அய்யாவு அவர்களிடம் ஐயா வைகுண்டரின் செல்வாக்கு இருக்க வாய்ப்புள்ளது. ஐயா வைகுண்டர் சுவாமித்தோப்பு பதி உட்பட பல ஆலயங்களில் நிலைக்கண்ணாடியை தெய்வமாக பதிட்டை செய்தார். அது ‘நான்கடவுள்’என்னும் அத்வைத தரிசனத்தின் குறியீட்டு வெளிப்பாடு. ஐம்பதாண்டுகளுக்குப்பின் நாராயணகுரு அவருடைய ஆலயங்களில் நிறுவியதும் நிலைக்கண்ணாடிதான்.
வைகுண்டர் 1851ல் சமாதியானார். அவர் வாழ்ந்த இடத்தில் இன்று சுவாமித்தோப்பு பதி ஓரு முழு ஆலயமாகவே உருவாகியிருக்கிறது. வைகுண்டரின் குருதிவழியில் வந்த பாலபிரஜாபதி அடிகளார் இந்த மரபின் தலைமை குருவாக இன்று விளங்கிவருகிறார். அவருடைய ஊனுடல் அங்குள்ள மண்ணறையில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கே கருவறையில் நிலைக்கண்ணாடியே மையவிக்ரகமாக அமைந்துள்ளது
பாலபிரஜாபதி அடிகளாரின் குருகுலத்தில் பெரிய அரங்கு அமைந்துள்ளது. நாள்தோறும் அன்னதானம் நிகழ்கிறது. ஐயா வைகுண்டர் வாழ்ந்த குடிலின் மாதிரி ஒன்று அவ்வண்ணமே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஞானமரபின் தனித்தன்மைகளை பாலபிரஜாபதி அடிகள் கூறியபடி வந்தார். அன்று அடித்தளமக்கள் திண்ணை வைத்து வீடுகட்ட தடை இருந்தது. தலைப்பாகை கட்ட தடை இருந்தது. மீசை வைத்துக்கொள்ளவும் தடை இருந்தது. அவை ஒவ்வொன்றையும் தன் பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். பூசாரிகள் அனைவரையும் தொட்டு வாழ்த்தும் வழிபாட்டுமுறையைக் கொண்டுவந்தார்
அகிலத்திரட்டின் முற்கூறல்களில் ஒன்று எந்த திருவிதாங்கூர் அரசரால் வைகுண்டர் சிறையிடப்பட்டாரோ அவருடைய வாரிசுகள் வந்து சாமித்தோப்பு பதியில் வணங்குவார்கள் என்பது. அங்கிருந்த புகைப்படங்களில் திருவிதாங்கூரின் அரசர் பாலராம வர்மா, மார்த்தாண்டவர்மா, அரசி என பலர் வந்து வணங்கி அருள்பெற்றுக்கொள்வதைப் பார்த்தபோது அழியாச்சொல் என்பதன் பொருள் தெரிந்தது.
அன்னதானத்திற்கு நன்கொடை அளித்தபின் சுவாமித்தோப்பு பதிக்குச் சென்று வழிபட்டேன். சமூகவியல், மெய்யியல் எல்லாம் மண்டைக்குள் ஓடினாலும் சன்னிதியில் நின்றபோது என் குழந்தைகளுக்காகவும், நண்பர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளத்தான் முதலில் தோன்றியது. முன்பெல்லாம் இப்படி தோன்றுவதில்லை. இன்று இதுவே இயல்பென்று தோன்றும் ஒரு நிலை அமைந்திருக்கிறது.
ஐயா வைகுண்டர் ‘கலி’ என்னும் சொல்லை அறியாமை, பாவம், துன்பம் ஆகிய மூன்றுக்கும் பொதுவானதாக பயன்படுத்துகிறார். கலியை அழிப்பது மெய்ஞானத்தின் வழியாகவே. அது தன்னை அறிதல் வழியாகவே. தெய்வ உருவம் என தன்னை உணர்வதும், அந்த ஞானத்தால் நிமிர்வும் அறவுணர்வும் கொள்வதுமே அவர் கூறிய வழி என மிக எளிமையாகச் சொல்லமுடியும். அ.கா.பெருமாள் அவர்களால் தொகுக்கப்பட்ட அகிலத்திரட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
திரும்பி வரும்போது ஒரு நிறைவான நாள் என உளம் சிந்தை அடங்கி அமைந்திருந்தது. முன்பு ஒரு பேச்சில் ஜெயகாந்தன் சொன்னார். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், ஒருவர் ஒருநாளுக்குள் நடந்துசெல்லும் தொலைவுக்குள் பத்து சித்தர்கள் இருப்பார்கள், ஒரு மெய்ஞானியாவது வாழ்ந்திருப்பார் என்று. பெருங்கல்வியாளரான நாராயணகுருவுக்கும் வள்ளலாருக்கும் முன்னோடியாகத் திகழும் ஒருவர் முறையான எந்தக் கல்வியும் அற்றவர், தன்னுள் இருந்தே மெய்மையை ஈட்டிக்கொண்டவர் என்பது இந்திய மெய்யியலை அறிந்த ஒருவருக்கு எவ்வகையிலும் வியப்பை அளிக்காது
சுவாமித்தோப்பு பதியில் ஓர் அறையில் பழைய வேல்கம்புகள் குவிந்துகிடந்தன. அவை அன்றைய மக்களின் படைக்கலங்கள். அவற்றை கைவிடும்படி, அந்தந்த பதிகளில் கொண்டுசென்று போட்டுவிடும்படி ஐயா வைகுண்டர் ஆணையிட்டார். ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்ட மக்களிடம் ஆயுதங்களை கைவிடும்படிச் சொல்ல காலம்கடந்து நோக்கும், எளிய மனிதர்களுக்கும் சிந்தனைகளுக்கும் மேல் மலைமுகடு என எழுந்து நின்றிருக்கும் ஞானநிமிர்வும் தேவை. ஞானிகளால் மட்டுமே அதைச் சொல்ல இயலும், அவர்கள் சொன்னால் மட்டுமே அவை கேட்கவும்படும்.
இன்று கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் அந்தக்காலம் கடந்துசென்றுவிட்டிருக்கிறது. அழியாச்சொல் என அவருடைய மெய்மை நின்றிருக்கிறது.