மாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்

மாபெரும் மலர்ச்செண்டு

அன்புள்ள ஜெ,

மாபெரும் மலர்ச்செண்டு கட்டுரை என் மனதுக்கு அணுக்கமான கட்டுரைகளில் ஒன்று. காரணம் நான் வாழ்வில் முதல் முதலாக இயற்கையின் மடியில் விழுந்து, புரண்டு, ஏங்கி, வியந்து, மருண்டு நின்ற நிலத்தைப் பற்றிய கட்டுரை அது. இரண்டு வருடங்கள் என் பாஸ்டன் வாழ்வில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிட்டத்தட்ட இருவாரங்களுக்கு ஒரு முறை சென்று வந்த நிலம். அதன் ஒவ்வொரு வண்ணமும் இன்னும் கனவில். இழந்த அந்த நிலத்தின் ஏக்கம் மட்டுமே நனவில். உங்களை வாசிப்பதன் முதன்மை இன்பமே வார்த்தையாகாத உணர்வுகளை பொருளேற்றும் வரிகளை கண்டடைவது தான்.

இக்கட்டுரையின் இறுதியில் வந்த ஏக்கம் குறித்த இவ்வரிகள்

‘மலர்வதென்றால் அப்படி மலர வேண்டும், மலரில்லாமலேயே கூட, உடலே மலராக’ என்று நள்ளிரவில் ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டேன். ஏன் ஏக்கம்? இழந்த நிலம் என ஏன் எண்ணுகிறேன்? மீண்டும் அங்கே போகலாம். ஆனால் அந்த தருணத்தை, அந்த மலர்வை இனி நினைவிலிருந்தே மீட்டெடுக்க முடியும். இந்த உடலுடன் இந்தக் காலத்தில் வாழ வேண்டும் என நாம் விதிக்கப்பட்டிருக்கும் வரை எல்லா நிலமும் இழந்தநிலமே”

பல நிலங்களை இழந்திருக்கிறேன், ஏக்கம் மட்டுமே எஞ்ச!! ஆனால் அது தான் நமக்கு விதிக்கப்பட்டது என்ற எண்ணம் போல ஆற்றுப்படுத்தும் ஒன்று கிடையாது

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

அன்புள்ள ஜெ

மாபெரும் மலர்ச்செண்டு அழகான கட்டுரை. ஒரு பயணக்குறிப்பை படித்து ஆழ்ந்த இலக்கிய அனுபவத்தை அடைவதென்பது உங்கள் கட்டுரைகள் வழியாகத்தான். பயணக்கட்டுரைகளில் என்ன தவறவிடப்படுகிறது? பெரும்பாலானவர்கள் பயணத்தில் நடந்தவற்றை எழுதிவிடுகிறார்கள். தகவல்களையும் எழுதிவிடுகிறார்கள். அதற்கும் அப்பால் எழுதவேண்டியது இரண்டு விஷயங்கள். ஒன்று பயணம் செய்பவரின் உள்ளம் அந்த அனுபவங்கள் வழியாகச் சென்றடைந்த சிந்தனைகள். அவை அரசியல் சமூகவியல் சிந்தனைகளாக இருக்கலாம். ஆன்மிகசிந்தனைகளாக இருக்கலாம். ஆனால் அத்தனையையும் விட முக்கியமானது அந்த அனுபவத்தை ஒரு ஸ்பிரிச்சுவல் அனுபவமாக ஆக்குவது. நம்மவர்களால் அது முடிவதில்லை.

எல்லா நிலமும் இழந்த நிலமே என்ற அந்த முத்தாய்ப்பைத்தான் சொல்கிறேன். ஒரு கணத்தில் நான் இழந்த எல்லா நிலங்களையும் ஞாபகப்படுத்தியது. கடைசியில் மொத்த பூமியையும் இழக்கத்தானே போகிறேன் என்று என்னிடம் சொல்லியது. வெவ்வேறு கவிதைவரிகள் வழியாக அந்நிலத்தை நீங்கள் உங்கள் சப்கானிஷியஸ் செல்ஃபுடன் இணைப்பதுதான் அந்தக்கட்டுரையின் சாரம். நான் பலமுறை போன காடு. பலமுறை உணர்ந்த அனுபவம். ஆனால் அதை வாசிக்கையில் அது மீண்டும் புதிதாக இருக்கிறது

நடராஜன் மாணிக்கவேல்

 

முந்தைய கட்டுரைஅறமெனப்படுவது…. கடிதம்
அடுத்த கட்டுரைசமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி