ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையும் சமூக ஆவணத்தன்மையும் எந்த முயற்சியும் இன்றி அவற்றைக் கடந்துசெல்லும் வாழ்க்கைத்தரிசனமும் கொண்ட ஒரு நாவலை அதன் முகப்பில் அமர்ந்துகொண்டு வரையறுக்கவோ விளக்கவோ முயல்வது என்பது வாசகர்களுக்கு நலம் பயப்பதாகாது. ஆனாலும் சோ.தர்மனின் இந்நூலைப்பற்றிய சில மதிப்பீடுகளை முன்வைக்க விரும்புகிறேன்.
ஏனென்றால் நாம் பாலில் வெண்ணை மிதந்து கிடக்கவேண்டும் என விரும்பும் வாசகர்கள். பாலில் கலந்திருக்கும் வெண்ணையை எடுக்கும் கடைசலில் பயிற்சி இல்லாதவர்கள். யதார்த்தவாத அழகியல் கொண்டது இந்நாவல். ஆகவே ‘நான் ஒன்றும் கருத்துக்களைச் சொல்லவில்லை. எதையும் மதிப்பிடவில்லை, வெறுமே வாழ்க்கையை நோக்கி ஒரு கண்ணாடியை பிடித்திருக்கிறேன், அவ்வளவுதான்’ என்ற பாவனையை இது மேற்கொண்டிருக்கிறது. அந்தப்பாவனை அதன் புனைவை நிறுவ அவசியமானது, அதை வாசிக்கையில் நாம் அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அதை முழுமையாக நம்பி அதுவே இந்நாவல் என கருதிவிட்டோம் என்றால் நாம் இந்நாவலை இழப்போம்.
இதை கருத்தமுத்து என்னும் கரிசல்காட்டானின் கல்வியினூடாகச் செல்லும் கண்டடைதலின் விடுதலையின் கதை என்று வாசிக்கலாம். அதுவே அதன் முதல் கட்டம். ஆனால் வாசகன் கருத்தூன்றவேண்டிய சில புள்ளிகள் உள்ளன. இதன் இயல்பான யதார்த்தவாதப்பரப்பில் தன்னை குறியீடு என்றோ படிமம் என்றோ பண்பாட்டுக்குறிப்பு என்றோ காட்டிக்கொள்ளாமல் வந்துகொண்டே இருக்கும் தகவல்களை அவன் எவ்வாறு தன் கற்பனையால் தொட்டு விரிவாக்கிக்கொள்வது என்பது ஒரு முக்கியமான வாசிப்புப் பயிற்சி
உதாரணமாக கறுத்தமுத்து என்னும் பெயர். அது கரிசலின் பெயர். கரிசலின் உருவமாக உள்ள ஒரு தெய்வத்தின் பெயராக இருக்கலாம். எனக்கு அது கரிசலில் நீர்காத்துக் கிடக்கும் உறுதியான மேல்ஓடு கொண்ட ஒரு விதை என்னும் எண்ணத்தை அளித்தது. அவ்வெண்ணம் இந்த நாவலை என் வாசிப்பில் விரித்துக்கொள்வதற்கான சாவிகளில் ஒன்றாக அமைந்தது.
மையப்பேசுபொருளாக மதம் அமையும் இந்நாவலில் அதைப்பற்றிய முதல் குறிப்பே சுத்தம் சார்ந்த – மாதவிடாய் சார்ந்த ஒதுக்குமுறையாக அமைவதை இவ்வண்ணமே சுட்டிக்காட்டுவேன். தாய் மகனிடம் தனக்கு மாதவிடாய், ஆகவே கோயிலுக்குள் போகக்கூடாது என்று சொல்லமுடியாமல் அவன் பள்ளியில் நல்ல மதிப்பெண் இருப்பதற்காக விரதம் இருப்பதாகச் சொல்கிறாள். ஒதுக்குதல் ஒதுங்குதலாக உருவம் மாறுகிறது. இரண்டுமே தூய்மை காத்தல்தான். மதம் தொடங்கும்புள்ளி என இந்நாவல் தொட்டுக்காட்டுவது இதுவா என்னும் எண்ணம் எனக்கு உருவானது
இவ்வகையான நுண்ணிய குறிப்புகளினூடாக இந்நாவலை தொடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் வாசகர்களுக்கு உண்டு. அப்போதுமட்டுமே இந்நாவலை ஒருவாசகன் முழுமையாக உணரமுடியும். கடவுளுக்கு பாலம் கட்ட உதவுகிறது அணில். கடவுள் விடாய்க்கு நீர் கேட்டபோது சிறுநீரை அளிக்கிறது ஓணான். அணில் கடவுளால் தடவிக்கொடுக்கப்பட்டு வாழ்த்தப்பட்டு முதுகில் வரிகளை பெறுகிறது. ஓணான் வண்ணம் மாறிக்கொண்டே இருக்கிறது, கல்லடி பட்டு அழிகிறது
இந்த கதை நாவலின் போக்கில் கருத்தமுத்துவின் பார்வையில் இயல்பாக பதிவாகிறது. நம் சாதிகளின் தோற்றம் குறித்த கதைகளுக்கு இதனுடன் இருக்கும் பொதுமை திகைப்பூட்டுகிறது. ஒன்பது சாதிகள் இந்திரனை காணச்செல்கின்றன, அவர்களுக்கு இந்திரன் ஆளுக்கொரு பசுவை அளிக்கிறான், வரும்வழியில் பசியில் பசுவை கொன்று தின்றவர்களே அருந்ததியர் ஆனார்கள் என்று அருந்ததியர் குடியைப்பற்றிய தொல்கதை, அவர்களே சொல்லிக்கொள்வது, இங்கே நினைவிலெழுகிறது
அடிப்படையில் இந்நாவல் ஆதிக்கமே விடுதலையையும் கொண்டுவந்த கதையைச் சொல்கிறது. இங்கே வந்த காலனியாதிக்கவாதிகளே ஆங்கிலக் கல்வியினூடாக இங்கு எளிய மக்களுக்கான விடுதலைக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார்கள். கருத்தமுத்து அந்த விடுதலைக்கான முதற்சரடை எட்டிப்பாய்ந்து பற்றிக்கொள்வதன் வழியாக விரியத்தொடங்குகிறது இந்நாவல். ஆனால் மெல்லமெல்ல விடுதலையே ஆதிக்கமாக ஆவதன் சித்திரத்தை அளிக்க தொடங்குகிறது. நம் வரலாற்றின் மிகமிக முக்கியமான ஒரு புதிரை தொட்டுக் காட்டுவதன் வழியாகவே இந்நாவல் முக்கியமான படைப்பாக ஆகிறது
இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்கு கைநடுக்கம் தொடங்கிவிடும். பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல். பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது. இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘சமநிலையை’ பேணிக்கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள். சொ.தருமன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாக பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல்நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்
ஒரு கதையெனப் பார்த்தால் இந்நாவல் ஒரு ‘வயதடைதல்’ வகை ஆக்கம். கருத்தமுத்து ஒரு ஆணாக, குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது. நாவல் தொடங்கும்போது மூன்றுவகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர்கொள்கிறான். ஒன்று கல்வி, இன்னொன்று மதம், இணையாகவே காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிஉருவாகியிருக்கும் ஒரு பெரும்பரப்பை சென்றடைகிறான்.
ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப்பரப்பு இது. கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. வயதடைதல். ஆனால் அது கிறித்தவமதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தை காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டு பைபிளின் வரி. “சீயோன் குமாரத்தியே, அகம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களி கூறு. உன் ஆக்கினைகளை அகற்று. திறந்த உடலை களிப்பாக்கு”
விடுதலை என்னும் கருத்தை வெவ்வேறு கோணத்தில் ஆராயும் இந்நாவலை ஒருவாசிப்பினூடாகச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. “ஏஞ்சல் சற்றும் தாமதிக்காதே, உடனே புறப்படு. என்றென்றைக்கும் யாராலும் அடைத்துச் சாத்த முடியாத கதவை நான் திறந்து வைத்திருக்கிறேன். அதனுள் வா’ என்ற பறவையின் அழைப்பு ஏஞ்சலுக்கு அளிக்கும் விடுதலை என்ன என்று என்ணிக்கொள்கிறேன்.
கல்வியினூடாக, சமூகத்தளைகளைக் கடந்து ஒரு விடுதலையை நாடிச்சென்று அடைபடுவது மதமும் ஒழுக்கமும் அமைக்கும் கூண்டு. அதிலிருந்தும் விடுதலை என்றால் அது என்ன? ஏஞ்சல் தன் கன்னிமாட வாழ்க்கையை உதறி வெளியேறுகிறாள். காமத்தையும் உலகியலையும் நோக்கிய வெளியேற்றம் என அதைக் கொள்ளலாம். ஆனால் மானுடனுக்குள் இருந்துகொண்டு எப்போதும் விடுதலை விடுதலை என ஏங்கும் ஒன்றின் அழைப்புக்குச் செவிசாய்த்தல்தான் அது என எடுத்துக்கொள்ளவே நான் விரும்புவேன்
ஜெ
அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கும் சோ.தர்மனின் ‘பதிமூன்றாவது மையவாடி’ நாவலுக்கு எழுதிய முன்னுரை