விடுதலையின் முழுமை- அய்யன்காளி

 

 

[1]

 

அய்யன்காளியின் பெயரை என்னிடம் முதலில் சொன்னவர் மலையாள நாவலாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான பி.கே பாலகிருஷ்ணன். 1988-89 களில் நான் அவரை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் வழக்கமாக அமரும் உதரசிரோமணி சாலையில் உள்ள சிறிய மதுக்கடையில் சந்தித்தேன். அப்போது அவர் மது அருந்துவதை நிறுத்திவிட்டிருந்தார். வழக்கம்போல கொதிப்பும் கொந்தளிப்பும் வசைபாடலுமாக பேசிக்கொண்டிருந்தார். அய்யன்காளியின் பெயர் அவர் நாவில் எழுந்தது. அதுவும் அப்பெயர் எனக்கு நன்கு பழக்கமிருக்கும் என்பது போல.

 

நான் அப்போது கேரள வரலாற்றை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டிருந்தேன். கேரள சமூக சித்திரமும் எனக்கு தெரியும். ஆனால் அய்யன்காளியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை.  “யார் அது?” எனக்கேட்டேன். பேச்சை நிறுத்தி மேஜையின் விளிம்பைக் கையால் பற்றி என்னைப்பார்த்தார்.  “தெரியாதா? கேள்விப்பட்டதில்லையா?” என்றார். “இல்லை” என்றேன். “உங்கள் ஊர்க்காரர்” என்றார் .”தெரியாது” என்று நான் மீண்டும் சொன்னேன். அவருடைய சிவந்த கண்கள் என்னை நிலைத்துப்பார்த்தன ”நாகர்கோவிலில் ஒரு சிலையோ அடையாளச்சின்னமோ ஏதாவது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன்.

 

“மார்த்தாண்டத்தில், தக்கலையில்?” என்றார் பாலகிருஷ்ணன். “குமரி மாவட்டத்தில் எங்கும் அய்யன்காளிக்கு எந்த நினைவகமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை” என்றேன். கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறெங்கோ நினைவுகள் அலைய என்னை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நீள்மூச்சுடன் “உன்னைச்சொல்லி குற்றமில்லை. நமது பொது மேடைகளில் அய்யன்காளி பேசப்படுவதே இல்லை” என்றார். ”உன்னைப்போலத்தான் கேரளத்திலும் இருக்கும்…” அங்கே வந்த இன்னொருவரிடம் “அய்யன் காளி யார் தெரியுமா?” என்றார். அவர் மங்கலாகச் சிரித்தார். “போ!போ” என்றார் பாலகிருஷ்ணன்.

 

”அய்யன்காளியையோ நாராயணகுருவையோ வகுத்துக்கொள்வதில் இங்குள்ள இடது சாரிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. வலதுசாரிகளுக்கு அதைவிட பெரிய சிக்கல் இருக்கிறது .ஆகவே அவர்களை பெரிய கோவிலில் ஓரமாக இருக்கும் சிறிய துணைச்சன்னிதிகளாக மாற்றிவிடுகிறார்கள். அங்கு யாரும் சென்று கும்பிடுவதில்லை .அங்கு செல்லும் பாதையே புல் மூடி மறைந்திருக்கும். சாமி கழுத்தில் மலர் மாலைகள் காய்ந்து சருகாகக் கிடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அங்கே சென்று செண்டையும் மேளமும் கொட்டி படையலிட்டு பூசை செய்து திரும்பி வருவார்கள்” என்றார் பி.கே.பாலகிருஷ்ணன்

 

“நாராயணகுரு பிறந்தநாளில் அவருக்கு அரசு சார்பிலேயே சிறப்பு செய்யப்படும். சிவகிரியில் பெரிய விழா நடைபெறும். அன்று சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் அரசியல்வாதிகளையும் அங்கே அழைப்பார்கள். அவர்கள் வந்து வானளாவ நாராயணகுருவை பற்றி புகழ்ந்துவிட்டு செல்வார்கள். அங்கு வந்து கூடியிருக்கும் நாராயணகுருவை குலகுருவாக நினைக்கும் ஈழவ மக்கள் அதைக்கேட்டு புளகாங்கிதம் அடைவார்கள். அய்யன்காளிக்கு இன்னும் சிறிய வட்டம் தான். ஆகவே இன்னும் சிறிய கொடைக் கொண்டாட்டம்தான்” என்றார் பாலகிருஷ்ணன்

 

நாராயணகுரு தொகைநூல் என்னும் புகழ்பெற்றநூலில் பி.கே பாலகிருஷ்ணன் நீண்ட கட்டுரை ஒன்றில் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறார். நாராயண குருவின் விழாவின் போது அங்கே வந்து மேடையில் ஏறி நாராயணகுருவிடமிருந்து பலவற்றை கற்றுக்கொண்டதாக, நாராயண குருவின் சமூக சீர்திருத்த பங்களிப்பையும் ஆன்மீக பங்களிப்பையும் பெரிதும் மதிப்பதாக பேசும் அரசியல் வாதிகள் எவரேனும் வேறு ஏதேனும் மேடையில் நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா? தங்கள் வாழ்க்கை வரலாறுகளில் நாராயணகுருவை எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? எங்கேனும் தங்களுடைய சிந்தனையில் நாராயணகுரு ஆற்றிய பங்களிப்பை பற்றி பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார்களா? எங்கும் இல்லை என்று பாலகிருஷ்ணன் சொல்கிறார்.

 

”மலையாளியாகிய நாங்கள் இருபதாம் நூற்றாண்டைக் கற்றுக்கொண்டது பலவகையான இடக்கரடக்கல்களின் வழியாகத்தான். இருபதாம் நூற்றாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் என்ன என்பதல்ல இருபதாம் நூற்றாண்டில்  கடைபிடிக்க வேண்டிய பாவனைகள் என்ன என்று மட்டும் தான் மலையாளி புரிந்துகொண்டிருக்கிறான். பொது இடங்களில் எவரையும் சாதி அல்லது மதம் சார்ந்து குறைத்து குறிப்பிடக்கூடாது, தன்னுடைய மேட்டிமைத்தனத்தையோ பெருமிதத்தையோ பொது இடங்களில் சொல்லக்கூடாது, ஒரு பொதுப்பேச்சில் எவரையும் புண்படுத்தக்கூடாது, பிறர் என்று தாங்கள் உணரக்கூடிய எவரையும் சற்று தேவைக்கு மேலேயே புகழ்ந்து வைப்பதனால் பிழையொன்றுமில்லை இதெல்லாம்தான் இருபதாம் நூற்றாண்டில் மலையாளி அடைந்த புரிதல்கள்

 

முற்போக்கான சில கருத்துகளைச் சொல்லுதல், சாதிமதம் கடந்த பாவனை, பழைய ஆசாரங்களுக்கு கட்டுப்படாததுபோல வெளிப்படுதல் போன்றவற்றை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய முற்போக்கு. .அதன் ஒரு பகுதியாகவே நாராயணகுருவுக்கு அளிக்கப்படும் பாராட்டுக்களை பார்க்கவேண்டும்” என்று பாலகிருஷ்ணன் சொன்னார்.

 

“நாராயணகுருவுக்கு அந்தப் பாராட்டு வருவதற்கு ஒரு காரணம் ஈழவ மக்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் ,அவர்கள் ஒரு அரசியல் சக்தி, அவர்களால் அரசை கட்டுப்படுத்த முடியும் என்பது தான். ஈழவ மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதியின் அடையாளமாக இன்றைக்கு நாராயணகுருவை கருதுகிறார்கள் என்பதும் சிவகிரிமடம் அந்த இடத்தை வகிப்பதும் இன்னொரு காரணம். ஆனால் அய்யன்காளியின் சாதி கேரளத்தில் மிகக்குறைவானது. மொத்தமே இருபத்தைந்து லட்சம் பேர்தான். அவர்களில் கணிசமானவர்கள் மதம் மாறிவிட்டதனால் அய்யன்காளியை அவர்களால் புரிந்துகொள்ளவோ முன்வைக்கவோ இயலவில்லை ஆக அய்யன்காளியின் பெயர் என்பது இன்று அந்த சாதியினருக்கு அவ்வளவு முக்கியமில்லை. மிகச்சிலர் பிடிவாதமாக அங்குமிங்கும் சொல்லிக் கொண்டிருக்கும் பெயராகத்தான் அய்யன்காளி இருக்கிறார்”.

 

”அய்யன்காளி மீண்டெழக்கூடுமா என்றால் ,உண்மையாக அதற்கான வாய்ப்பில்லை. ஆனால் நம் மாபெரும் நடிப்பின் வழியாக அய்யன்காளி பேருரு கொள்ளவும் கூடும். மலையாளத்திலேயே அய்யன்காளியைப்பற்றி எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்று பார். நானறிந்து அய்யன்காளியைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு ஒரே ஒரு புத்தகம் தான் இருக்கிறது. அது  அபிமன்யு எழுதிய அய்யன்காளியைப்பற்றிய புத்தகம்” என்று பி.கே பாலகிருஷ்ணன் சொன்னார்.

[2]

 

ஒட்டுமொத்தமாக அய்யன்காளியைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு மலையாளத்திலேயே ஒரு புத்தகம் இல்லை என்பது எனக்கு மிகுந்த திகைப்பை அளித்தது. நான் அதன்பிறகுதான் கேரளத்தில் அய்யன்காளி எங்கே பேசப்படுகிறார் என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். எந்த மேடையிலும் எந்த விவாதத்திலும் அய்யன்காளியின் பெயர் பெரிதாக அடிபடுவதே இல்லை என்பதை அறிந்தேன். பின்னர் கூர்ந்து பார்க்கையில் திருவனந்தபுரத்தில் நெய்யாற்றங்கரை முதல் நேமம் வரையிலான பகுதிகளில் ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ மிகச்சிறிய சுவரொட்டிகள் அய்யன்காளியின் படத்துடன் வந்துகொண்டிருந்தன என்பதைக் கண்டேன். திருவனந்தபுரத்தில் அய்யன்காளிக்கு ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான்.

 

அய்யன்காளியைப் பற்றிய அந்த வரலாற்று நூலை தேடி வாங்க முயன்றேன். கேரள அரசுநூல்களை வெளியிடும் கேரளா பப்ளிகேஷன் டிவிஷனில் அந்த புத்தகம் இல்லை .அது விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். பல இடங்களில் விசாரித்தபோதும் அந்த புத்தகம் மறுபதிப்பு வெளியாகவில்லை என்றார்கள்.

 

பின்னர் திருச்சூர் கரண்ட் புக்ஸின் மாபெரும் புத்தகக் கிடங்கில் அந்த புத்தகம் புழுதி படிந்து ஒரு பிரதி இருப்பதை கண்டுபிடித்தேன். தூக்கிபோடப்பட்ட புத்தகங்களில் ஒன்று .ஒரு பகுதி நசுங்கி வளைந்திருந்தது. உடனடியாக அதை வாங்கி படித்தேன். அதன் பிறகு திரு அபிமன்யு அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அந்த புத்தகத்தை படித்ததை அவரிடம் தெரிவித்தேன். அவரும் மிகுந்த மனநிறைவை வெளிப்படுத்தினார்.

 

அய்யன் காளி குறித்த முதல் வாழ்க்கைக்குறிப்பு அய்யன்காளியின் பேரன் வெங்கானூர் சுரேந்திரன் அவர்களால் எழுதப்பட்டது. அபிமன்யூ அதையொட்டி நூலை விரிவாக்கினார். அந்நூலை ஒட்டி எழுதப்பட்ட சிறிய வழிநூல்கள் ஓரளவு கிடைக்கின்றன. அபிமன்யூவின் நூல் நீண்ட சட்டப்போராட்டங்களால் மொழியாக்க அனுமதிபெற முடியாமலிருந்தது.ஆகவே நூலை மொழியாக்க நூலாக அன்றி வழிநூலாக வெளியிடலாம் என அபிமன்யூ சொன்னார். அவ்வாறுதான் அய்யன்காளி குறித்த நிர்மால்யாவின் நூல் தமிழில் தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியாகியது

 

இன்று அய்யன்காளி குறித்து மலையாளத்திலும் பலநூல்கள் உள்ளன. ஆனாலும் தன் நூலின் முன்னுரையில் அபிமன்யு எதிர்பார்ப்புடன் குறிப்பிட்டது போல அய்யன்காளியைப்பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களுடன் முழுமையான பார்வையுடனும் எழுதப்பட்ட நூல்கள் மலையாளத்தில் அதன் பிறகும் கூட வரவில்லை. அப்படிப்பார்த்தால் இந்நூல் அந்த குறையை தீர்க்கக்கூடிய ஒரு முக்கியமான நூல் – விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் சரிபார்க்கப்பட்ட தகவல்களுடன் இந்நூல் வெளிவருகிறது.

[ 3 ]

 

அய்யன்காளியையும் நாராயணகுருவையும் கேரளச் சமூகம் ஏற்றுக்கொள்வதற்கான சிக்கல்கள் என்ன? அதை இந்தியா முழுக்க உள்ள கருத்துநிலைகளில் உள்ள ஒரு முரண்பாடாகத்தான் கருத வேண்டும். கேரளம் முழுக்க இருக்கும் வலதுசாரிகளுக்கு அய்யன்காளியையோ நாராயணகுருவையோ ஒரு ஆன்மீக தலைவர்களாக, சமூகசீர்திருத்தவாதிகளாக, முன்னோடி அறிவாளிகளாக ஏற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருக்கிறது.

 

நான் நாராயணகுரு பற்றி பேசும்போதெல்லாம் வழக்கமாகச் சில கடிதங்கள் வரும். பெரும்பாலும் பிராமணர்கள் அல்லது உயர்சாதியினர். “நாராயணகுரு பெரியவர்தான், ஆனால் அவர் ஞானி இல்லைதானே?” இதை அவர்களிடம் யாராவது சொல்லியிருப்பார்கள். நான் அவர்களிடம் “சரி, ஞானி என நீங்கள் நினைப்பவர் யார்?” என்பேன். அவர்கள் சிலபெயர்களைச் சொல்வார்கள். தாங்கள் பிறந்த சாதியைவிட குறைவான சாதியைச் சேர்ந்த ஒருவரை ஞானி என்று சொல்லும் மரபான ‘ஆன்மிகசாதகர்களை’ நான் பார்த்ததே இல்லை.

 

பிராமணர்கள் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர், காஞ்சி சங்கராச்சாரியார் என வந்து கடைசியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவ்வளவுதான். விவேகானந்தரோ அரவிந்தரோகூட இல்லை. பிற சாதியினர் என்றால் வள்ளலாரைச் சேர்த்துக் கொள்வார்கள். பிறரைப்பற்றி கேட்டால் “நான் சாதியெல்லாம் பாக்கிறதில்லை, ஆனா ஆன்மிகமா பாத்தா…” என ஆரம்பிப்பார்கள். தன் சொந்தச்சாதியைச் சேர்ந்த ஆசாரமான ஒருவர்தான் ஞானியாக அமையமுடியும் என ஒருவர் உண்மையிலேயே நம்பினால், அப்படியே வளர்க்கப்பட்டிருந்தால் என்னதான் செய்யமுடியும்?

 

இந்தியச் சமூகத்தில் ஒருவர் ஆன்மிகமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. ஆயிரம் அரசப்பாதைகள். இயல்பாகவே அமைந்த ஆழ்படிமத்தொகைகள். ஆனால் அதற்கான தடை அதைவிட பலமடங்கு பெரியது. ஆசாரமே ஆன்மிகம் என மயங்குவதும் சாதியிலிருந்து வெளியேற முடியாமையும் இரண்டு இரும்புத்தளைகள்.

 

மரபார்ந்த நோக்கு கொண்டவர்கள் நாராயணகுருவையும் அய்யன்காளியையும் ஏற்பதற்கான தடைகளில் அவர்கள் பிறந்த சாதி ஒரு காரணம் என்றால் இயல்பாக அவர்கள் இருக்கும் தீவிரமான முற்போக்குத் தன்மை இன்னொரு காரணம். சமூக மாற்றத்துக்காக குரல் கொடுத்தவர்கள், ஏற்கனவே இருக்கும் அமைப்பை உடைத்து வார்ப்பதற்கான அறைகூவலை நிகழத்தியவர்கள் அவர்கள். அவர்களுடைய இடதுசாரி முகம் இந்த வலதுசாரிகளை சங்கடப்படுத்துகிறது. ஆகவே அவர்களிடமிருந்து தாங்கள் விரும்பக்கூடிய ஒரு முகத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். அய்யன்காளியையோ நாராயணகுருவையோ ஒரு சமூகசீர்திருத்த கருத்துகளை கூறியவர்கள், தங்கள் சொந்தச் சாதி மேம்பட வேண்டுமென்று உழைத்தவர்கள் என்ற எளிமையான வரையறைகளுடன் அவர்கள் கடந்து செல்கிறார்கள்.

 

இடதுசாரிகளைப்பொருத்தவரை அவர்கள் இடதுசாரி இயக்கத்தின் வழியாகவே கேரளம் மறுபிறப்படைந்தது என்பதை வரலாற்றில் நிலைநாட்ட விரும்புகிறார்கள். ஆகவே அதற்குமுன்னோடிகளாக அமைந்த எவரையுமே அவர்கள் பெரிதாக முக்கியப்படுத்துவதில்லை. நாராயணகுருவுடைய இயக்கத்தையே அவர்கள் சற்று குறைத்துத்தான் பதிவு செய்கிறார்கள். அய்யன்காளியை அக்காலகட்டத்துப் பெயர்க்ளில் ஒன்றாக கருதுகிறார்கள். அத்துடன் நாராயணகுருவிடமும் அய்யன்காளியிடமும் இருக்கும் ஆன்மிகதளம், இந்து மறுமலர்ச்சி சார்ந்த முகம் அவர்களுக்கு ஒவ்வாமையை அளிக்கிறது.

 

அய்யன்காளியின் நூல் தமிழில் அவ்வளவு கடும் முயற்சிக்கு பிறகு வெளிவந்த போது அதற்கு மதிப்புரை எழுதிய ’தலித் முரசு’ எனும் இதழ் அய்யன்காளியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அவர் இந்து என்னும் அடையாளத்திலிருந்து வெளியே வரவில்லை என்று  நிராகரித்து எழுதியது. அந்நூலைப் பற்றி எழுதிய அ.மார்க்ஸ் அவர்கள் அய்யன்காளியை ஒரு தலித் தலைவராக தான் ஏற்றுக்கொள்ளமுடியாது, ஏனெனில் அவர் தன்னை இந்துவாக முன்வைத்து இந்து மதத்திற்குள்ளிருந்து சீர்திருத்தங்களை செய்யமுயன்றவர்  என்றார்.

 

அதாவது இன்று தலித் தலைவராக இருப்பவர் மட்டும் அல்ல, நேற்று தலித்துக்களுக்கு தலைவராக இருந்தவர்கூட இந்துவாக இருக்கக்கூடாது. இருந்தால் அவர் வரலாற்றில் புதைக்கப்படவேண்டும். இந்த ‘வரலாற்றுவிதியை’ உருவாக்கியவர் யார்? மிக எளிமையாக இதற்கு என் நண்பர் வே.அலெக்ஸ் பதில் சொன்னார். யாரை தலித் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு அ.மார்க்ஸ் யார்? அல்லது தலித் அரசியல்தலைமையிலேயே அதற்கு முழு அதிகாரம் கொண்டவர் யார்?

 

[ 4]

 

இவ்வாறு இங்கு உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது முன்வரைவு அய்யன்காளியையும் நாராயணகுருவையும் ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கின்றது. அவர்கள் இருவருமே சமூக சீர்திருத்தவாதிகள், கூடவே ஆன்மிகத்தலைவர்கள். ஏறத்தாழ இதே சிக்கல் இங்கு ஐயா வைகுண்டரைப்பற்றியும் உள்ளது என்பதை பார்க்கலாம். வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒரே சமயம் கண்டு கொள்ளாமல் கடந்து போகும் ஓர் ஆளுமையாக அவர் நீடிக்கிறார். மறுபக்கம் ஒருசாரார் அவரை தங்கள் சாதிக்குரிய அடையாளம் கொண்டவராக மட்டும் ஆக்கும்போது அவர் அந்த அடையாளத்திலிருந்து பிறகு ஒருபோதும் அவர் வெளிவரமுடியாது.

 

நாராயணகுரு ஈழவசாதியின் அடையாளம் என்னும் சிக்கலுக்குள் சிக்கி தன்னுடைய மாண்பை இழக்கிறார். அதிலிருந்து அவரை வெளிக்கொணர்வதற்கு நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் உருவாக்கிய நாராயணகுருகுலம் என்னும் அமைப்பின் பங்களிப்பு மிகப்பெரியது. அத்தகைய ஒன்று அய்யன்காளிக்கு நிகழவில்லை .அவர் இன்றும் வெறும் ஒரு சாதித்தலைவராகவே அறியப்படுகிறார். அய்யா வைகுண்டருக்கு அவ்வாறு ஒன்று அமைவதற்கான வாய்ப்பே தெரியவில்லை.

 

அய்யன்காளி நூலின் முதற்பதிப்பு தமிழில் வெளிவந்த போது பெரிதாகக் வனிக்கப்படாமலேயே கடந்து செல்வதற்கு இதெல்லாம்தான் காரணம். எதனால் மலையாளத்தில் அய்யன்காளி புறக்கணிக்கப்பட்டாரோ அதே காரணங்கள் இங்கும் அவ்வாறே உள்ளன. இந்தியா முழுக்கவே அவ்வாறுதான் இருக்கும் என தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக இந்து மதத்தின் மெய்ஞானத்தை நிராகரித்து வசைபாடியிருந்தால் இங்குள்ள இடதுசாரி இயக்கங்கள், கிறிஸ்தவ இஸ்லாமியப் பின்னணி கொண்ட அமைப்புகள் அவரை ஒர் அடையாளமாக தூக்கிப் பிடித்து கொண்டாடியிருப்பார்கள். சீர்திருத்தத்திற்கான எரியும் விமர்சனங்கள் இன்றி  வெறுமே மரபை திரும்பச் சொல்பவர்களாக அமைந்திருந்தால் வலதுசாரிகள் கொண்டாடியிருப்பார்கள். இன்றும் இந்திய சமுதாயத்தில் பாவனைகளுக்கெதிரான முகங்களாக அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

 

எனது நண்பர் வே.அலெக்ஸ் [எழுத்து பிரசுரம்] இந்நூலை வெளியிட திட்டமிட்டிருந்தார். அவருடன்  எனக்கு தொடர்பு உருவானபோது இதைப்பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்ச்சூழலில் தலித் தலைவர்கள் யார், அவர்கள் எவ்வகையாக இருக்கவேண்டும் என்பதை தலித் அல்லாதவர்கள் வரையறுத்து அவர்கள் மேல் சுமத்தும் சூழல் இருப்பதை அவர் மனக்கசப்புடன் சொன்னார். அலெக்ஸ் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பணியாற்றியவர். நெடுங்காலம் அங்கே ஆழ்ந்த சமூக செயல்பாடுகளை இயற்றியிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியேறுவதற்கான சூழல் ஏற்பட்டது ஒரு  இவ்வினா எழுப்பிய சிக்கலால்தான்

 

தமிழகத்தில் தலித் கல்வியை தொடங்கியவர்கள், முன்னெடுத்தவர்கள் யார் என்ற வினாவுடன் அலெக்ஸ் ஆய்வில் முன்சென்றபோது பிரம்மஞான சங்கம் [தியாசஃபிகல் சொசைட்டி] அதில் பெரும்பங்கு வகிப்பதை உணர்ந்தார் .தலித் கல்வி இயக்கம் என்ப்து பிரம்ம ஞானசங்கத்தின் கர்னல் ஆல்காட் அவர்களிடமிருந்து தொடங்குகிறது என்று அறிந்தார். அதைப்பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதியபோது அவர் சார்ந்த அமைப்புகளிலிருந்து மட்டுமல்ல தலித் செயல்தளங்கள் அனைத்திலும் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

 

பிரம்மஞான சங்கத்தின் பங்களிப்பு என்பது உண்மையல்ல, கட்டமைக்கப்பட்ட பொய் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.  தியாசஃபிகல் சொசைட்டி தலித் விழிப்புணர்விலும் கல்வியிலும் ஆற்றிய பங்களிப்பை எவ்வகையிலும் அங்கீகரிக்ககூடாது, வரலாற்றில் அடையாளப்படுத்தகூடாது என்ற எண்ணம் தமிழ் அறிவுச்சூழலில் இருப்பதை அலெக்ஸ் கண்டார். மெய்யை அறியவும் நிலைநாட்டவும் அவர் விழைந்தார். அந்த ஆர்வமே அவரை மதுரை பிரம்மஞான சங்க அலுவலகத்திலும், பின்னர் அவர்களின் சென்னை நூலகத்திலும் நெடுங்காலத்தை செலவிடச்செய்தது.

 

அலெக்ஸ் கர்னல். ஆல்காட் அவர்களைப் பற்றி மேலும் தகவல்களை திரட்டி அதிகாரபூர்வமான ஒரு சிறு நூலை தயாரித்தார். தலித் இயக்க முன்னோடியான அயோத்திதாசர் கர்னல் ஆல்காட்டிலிருந்து தன்னுடைய பணியை தொடங்கியவர். அயோத்திதாசரின் பௌத்தமே கர்னல் ஆல்காட்டிலிருந்து பெறப்பட்டதுதான். தமிழ்நாட்டில் தொடங்கிய முதல் அறிவியக்கமே ஒருவகையில் தலித் இயக்கம் தான். அதை தொடங்கி வைத்தது கர்னல் ஆல்காட் தலைமையிலான பிரம்ம ஞான சங்கம்.

 

தலித் இலக்கிய சிந்தனை முன்னோடிகளுக்குப் பிறகே தமிழகத்தில் காங்கிரஸும் அதன் பிறகே திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் தொடங்கின. இந்த முன்னோடித்தன்மையை அங்கீகரிப்பதற்கு திராவிட இயக்கமோ இடது சாரிக்ளோ தயாராக இல்லை. அவர்கள் தங்களுடைய பங்களிப்பை திரும்ப திரும்ப கூற முற்பட்டன. காங்கிரஸின் பங்களிப்பே மறுக்கப்பட்டது. காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் பங்களிப்பு கூட இடதுசாரிகளாலோ திராவிட இயக்கத்தாலோ ஏற்கப்படுவதில்லை . இன்று ஸ்டாலின் ராஜாங்கம் தலிக் கல்வியில் காந்திய இயக்கத்தின் பங்களிப்பை அடையாளப்படுத்தும்போது அவர் வசைபாடப்படுகிறார்

 

தலித் முன்னோடிகளை கிட்டத்தட்ட நூறாண்டுகாலம் பொது உரையாடலிலிருந்தே மறைத்து வைத்திருந்தார்கள். அயோத்தி தாசரின் படைப்புகள் நூறாண்டுகளுக்கு பிறகே மறுபதிப்பு கண்டன. இந்துமதத்தைத் துறந்த பௌத்தரான அயோத்தி தாசரையே ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களுக்கு நான் ஒரு இந்து என்று அறிவித்துக்கொண்ட எம்.சி.ராஜா மேலும் தயக்கத்தை உருவாக்குவதில் ஆச்சரியமில்லை. எம்.சி.ராஜாவின் படைப்புகளை அலெக்ஸ் தொகுத்து ஒரு நூலாக்கியபோது மேலும் எதிர்ப்புகள் எழுந்துவந்தன. நூல் வெளிவந்த பிறகும் கூட  எந்த வித கவனிப்பையும் பெறவில்லை .அதற்கு வந்த ஒரே விரிவான மதிப்புரை நான் எழுதியது ,அவ்வாறுதான் அலெக்ஸ் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய நண்பரானார். அவர் காலமாகும் வரை எங்கள் நட்பு இறுக்கமாக நீடித்தது

 

தலித்துகள் செயல்படவேண்டிய களத்தை பிறர் வரைந்து அவர்கள் மேல் சுமத்தியிருக்கும் இச்சூழல் அலெக்ஸை சலிப்புற செய்தது. அதற்கு எதிரான போராட்டமாகவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் வெளியிட்ட  நூல்கள் எல்லாமே அந்த வரைபடத்திற்கு வெளியே சென்று வரலாற்றை மெய்யாக ஆவணப்படுத்துவது என்ற கனவைக் கொண்டிருந்தன.  மதுரைப்பிள்ளை போன்ற தலித் முன்னோடிகளை அவர்தான் ஆவணப்படுத்தினார். அதன் பகுதியாகவே அய்யன்காளியைப்பற்றிய இந்நூலையும் மீண்டும் கொண்டுவர விரும்பினார்.

 

அய்யன்காளியைப்பற்றி நிர்மால்யா மொழியாக்கம் செய்த இந்நூலை உரிய முறையில் திருத்தங்களுடன் மறுபதிப்பு கொண்டுவரவேண்டும் என்று அலெக்ஸ் எண்ணினார். அதற்குள் அபிமன்யு ஓய்வு பெற்றுவிட்டிருந்தார். ஆகவே அபிமன்யூவின் முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு நூலாகவெ அதை கொண்டுவரலாமென்று திட்டமிட்டார். அய்யன்காளியை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. ஆவணங்களும் வரைபடங்களும் புகைப்படங்களும் திரட்டப்பட்டன. அலெக்ஸ் ஒரு முழுமையான நூலாக அதைக்கொண்டுவருவதற்கான கடும் உழைப்பை மேற்கொண்டார். அதற்குள் சிறுநீரக பாதிப்பினால் நோயுற்று அவர் மறைய நேரிட்டது .

 

துரதிருஷ்டவசமாக அலெக்ஸின் ஆய்வும் தொகுப்பும் கிடைக்கவே இல்லை. அவற்றை அவர் சேமித்திருந்த கணிப்பொறிகள் எங்கே என்றே தெரியவில்லை. ஆகவே மொத்த ஆய்வுமே மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே செய்யப்பட்டது. நிர்மால்யா, ஆ.கா.பெருமாள் ,செறாயி ராமதாஸ் ஆகியோரின் உழைப்பால் இந்நூல் மீண்டும் புதுநூலாகவே உருவானது. ஆகவே அலெக்ஸ் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இந்நூல் வெளிவருகிறது.

 

இந்நூல் இப்போது காலச்சுவடு வெளியீடாக வெளிவர இருக்கையில்  அலெக்ஸின் நோக்கத்தை கனவுகளை எண்ணிக்கொள்கிறேன் நமது சமகால வரலாற்றில் எத்தனை உள்ளோட்டங்கள் உள்ளன, அவற்றை எவர் எவர் எங்கிருந்தெல்லாம் இயக்குகிறார்கள் என்பது திகைப்பூட்டுவது. கருத்துகளை விடுங்கள், ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களை கூறுவதற்கே எத்தனை தடைகள், எத்தனை திரிபுகளை கடந்து வரவேண்டியிருக்கிறது.  அய்யன்காளியின் வரலாற்றின் இந்த நூல் அந்த வரைபடங்கள் அனைத்திற்கும் வெளியே இருந்து வெளியாவது. இது கருத்துலகின் ஒரு வலுவான தனிநிலைபாட்டையும் முன்வைக்கிறது

[ 5 ]

 

அய்யன்காளி குமரி மாவட்டமும் ஒரு பகுதியாக இருந்த பழைய திருவிதாங்கூரைச் சேர்ந்தவர் .உண்மையில் எனது குடும்பத்திலேயே அய்யன்காளியைப்பற்றிய பேச்சுகள் இருந்திருக்கின்றன என்பதை பிறகுதான் நான் அறிந்தேன். அவருடைய காலகட்டத்தில் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து சாதியக் கட்டுமானங்களையும் நடுங்க வைப்பவராக அவர் இருந்திருக்கிறார். அய்யன்காளிப் படை என்று ஒன்று இருந்திருக்கிறது. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழிவும் துன்பமும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் அய்யன்காளியின் படை வில்வண்டியில் கழிகளுடனும் வாள்களுடனும் வந்து வன்முறையை கையிலெடுத்து தாக்கியிருக்கிறது .

 

அய்யன்காளி தனது மானுட விடுதலைக்கான குரலை இந்திய மரபின் அத்வைத சிந்தனைகளிலிருந்தே பெற்றார் என்பது வரலாறு. ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் சட்டம்பி சுவாமிகள், நாராயண குரு, அய்யன் காளி ஆகியோர் உருவாயினர். அவர்களின் உருவாக்கத்தில் தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்னும் அத்வைதியின் இடம் முக்கியமானது. உண்மையில் இந்தக்கோணத்தில் இவர்களின் வரலாறு இன்னமும்கூட முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை.

 

அய்யன்காளியை ஓர் சமூகநீதிப்போராளியாக மட்டும் அல்ல , மானுட விடுதலையின் ஆன்மிகத்தை தொட்டறிந்த மெய்யியலாளராகவும் அணுகவேண்டும். இறுதிவரை ஒர் அத்வைதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவுமே அய்யன்காளி நீடித்தார். காந்தியை சந்தித்தபின் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டார். ஜனநாயகப் பாதையை தெரிவு செய்தார். தன் மக்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டசபையில் ஒலிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கேரள வரலாற்றின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும் இந்திய தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் அவர் ஆனார். இந்திய அளவில் அவருடைய இடம் இன்னமும் நிறுவப்படாத ஒன்று.

 

அய்யன்காளியின் வாழ்க்கை பல செய்திகளை உள்ளடக்கியது. எதிர்ப்பு என்பது ஆக்கபூர்வமானதாக இருக்க முடியும் என்றும்,  மீட்பு என்பது தன்னை மேம்படுத்திக்கொள்வதனூடாகவே நிறைவடைய முடியும் என்பதும் அவருடைய செய்தி. மரபை நிராகரிப்பது அல்ல அதை உள்வாங்கி வென்று மேல் செல்வது, அதை உரிமைகொள்வதுதான் மெய்யான விடுதலை என்றும் காட்டுவது. ஒரு காலகட்டத்திற்கான விடுதலையை மட்டும் பேசியவர் அல்ல அய்யன்காளி. அரசியல்விடுதலையை, சமூகவிடுதலையை மட்டும் முன்வைத்தவர் அல்ல. முழுமையான விடுதலையை நோக்கிப்பேசிய மெய்யியலாளரும்கூட. ஆகவே அவரை ஓர் அரசியல்வாதியாக, சமூகசீர்திருத்தவாதியாக மட்டுமல்ல, ஒரு மெய்யியலாளராகவும் கருத்தில்கொண்டாகவேண்டும். இந்திய தலித் தலைவர்களில் அய்யன்காளியின் தனித்துவமும் அதுதான்.

 

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு அய்யன்காளி கேரளத்தில் மறுபடி கண்டடையப்பட்டிருக்கிறார். இன்று அவர் பலகோணங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறார். அவருடைய ஆளுமை மேலும் மேலும் தெளிவடையும் அவருடைய செய்தி மேலும் வளரும் என்றே தோன்றுகிறது.

 

ஜெயமோகன்

நிர்மால்யா மொழியாக்கத்தில் காலச்சுவடு வெளியீடாக வரவொருக்கும் அய்யன்காளி வாழ்க்கை வரலாற்று நூலுக்கான முன்னுரை

முந்தைய கட்டுரைரேஸ் உலகின் கர்ணன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி உரை : ஆற்றூர் ரவிவர்மா