சாகேத் ராமனின் பெயரால் – கடலூர் சீனு

ராமனின் பெயருடன்

இனிய ஜெயம்

 

தளத்தில்  சங்கர் அவர்கள் எழுதிய ராமனின் பெயரால் பதிவு கண்டேன். ஹே ராம்  வெளியாகி இருபது வருடங்களைத் தொடப் போகிறது.  கமல் அறுபத்தி ஐந்து,  கொண்டாட்ட வரிசையில் மீண்டும் ஹே ராம்,நல்ல ஒலி ஒளித் தரத்தில்  புதிய காப்பி நெட் பிளிக்ஸ்  உட்பட பார்க்கக்  கிடைக்கிறது.  ஹே ராம் திரைப்படம் சார்ந்த அன்றைய மதிப்பீடுகள் மீதான சங்கரின்  குழப்பம் ரசிக்க வைத்தது. ஹே ராம் திரைப்படம் சார்ந்து சில பின்னணிகளை அறிந்து கொண்டால், இந்தக் குழப்பம் தீரவோ பெருகவோ வழி கிடைக்கும்.

 

மலையாளத்தை ஒப்பு நோக்கினால் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை வழியே ஒரு தமிழ்த் திரைப்படம் என்பது  முற்ற முழுதாக வணிக சரக்கு எனும் நிலைக்குச் சென்ற வரலாற்றுக் காரணியை விளங்கிக் கொள்ள முடியும். கேரளத்தின் பொதுச் கல்விச் சூழலின் பின்னணியில் வைத்து, விஞ்ஞானத்துக்கும் கலைக்குமான கலப்புப் பிள்ளையாக சினிமாவை வளர்க்கும் சூழல், அங்கே திரை ரசனை அரும்பும் சூழலிலேயே துவங்கி விட்டது. உதாரணம் செம்மீன். தமிழின் சூழலை நாம் அறிவோம். புராணக் கதைகளில் துவங்கி, பகுத்தறிவுக் கதைகளில் வேகம் கொண்டு, முற்றிலும் வணிகக்களனில் நிலைபெற்ற ஒன்றில், எழுபதுகளில் தோன்றியதைப்போல அவ்வப்போது ஏதேனும் அலை எழுந்து விழும். நாம் தமிழ் சினிமாவின் சாதனைகள் எனக் கொண்டாடும் படங்கள் எல்லாம் இந்த ஓட்டத்தின் சாதக பாதகங்களை உள்வாங்கியும் திருப்பித் தாக்கியும் உருவானவையே.

 

இந்தப் பின்னணியில் ஹே ராம் வெளியான சூழலை பார்த்தால். படு தோல்வி அடைந்த அப்படம் வெளியான ஆண்டின் மாபெரும் வெற்றிப் படம் வானத்தைப் போல என்றொரு செண்டிமெண்ட் படம். இதுதான் அன்றைய நிலை. இவை போக தமிழ் சூழலில் அரசியல் பின்னணி கொண்ட எந்த திரைப்படமும், திரைப்பட வணிகர்கள் சொல்லில் சொல்வதானால் ”குடும்பமா வந்து பாக்க மாட்டாங்க” என்பதாகவே இருக்கும். வானத்தைப்போல குடும்பமா வந்து பாத்து வெற்றி பெற்ற படம்.  இது போலவே ஹே ராம் கதையின் கரு நிற்கும் சூழலான தேசப் பிரிவினை, அப்போதைய காந்தியின் நிலைப்பாடு, இவையெல்லாம் இன்றும் தமிழ் நிலத்தின் பொது மனத்துக்கு அந்நியமானவையே. மிக சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை அழிவுகள் தமிழ் நிலத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் என்ன விளைவை உருவாக்கியது? இப்படி ஒரு அன்னியம்  அது.

 

எனில் கமலின் இந்த முயற்சி எந்தப் பார்வையாளர்களை நோக்கியது?  ஆஸ்கார் கமிட்டி பார்வையாளர்களே அவரது குறி என்பதை கமல் தன்னை எவ்வாறு உருவாக்கிக் கொண்டு வளர்ந்து வந்தவர் எனும் பின்னணி கொண்டு அறியலாம். மூன்றாம் பிறை தேசிய விருதுக்குப் பிறகு, கமல் ஆஸ்கார் வாங்க வேண்டும் எனும் ஆவல் எங்கும் எழத் துவங்க, அனைத்து எல்லைகளிலும் அதற்குத் தகுதிப்படுத்திக் கொண்டு அங்கே செல்ல கமல் உழைக்கத் துவங்கினார்.

 

ஆஸ்கார் விளையாட்டில் ஈடுபட வேண்டும் எனில் அப்படத்தில் அமெரிக்க முதலீடு இருக்கவேண்டும். இல்லையேல் சிறந்த வெளிநாட்டுப் படம் எனும் பிரிவில் மொத்தமாக ஒரு ஆஸ்கார் கிடைக்கும். வெளிநாட்டு முதலீடு கிட்டிய மருதநாயகம் போக்ரான் சோதனை,பொருளாதார தடை இவற்றால் கைவிடப்பட,அதன் பின்பாக கமல் தயாரித்ததே ஹே ராம். ஆஸ்கார் விழா நோக்கி இந்தியாவிலிருந்து தேர்வானது அப்படம்.

 

ஹே ராம் கையாளும் தேசப் பிரிவினை  மத சண்டை, காந்தியம்,உள்ளிட்ட  பொலிட்டிகல் த்ரில்லர் ‘அங்கே’ அவர்களுக்குப் புரியும். முதலில் கமல் எனும் மார்க்கட் வேல்யு அடிப்படையில் அது தமிழ் படம். அடுத்து மல்டி ஸ்டார் மற்றும் கரு அடிப்படையில் அது இந்தியப் படம். காந்தியை கொல்லக் கிளம்பிய ஒருவன் குறித்த பொலிடிகல் த்ரில்லர் எனும் வகையில் ஆஸ்கார் கமிட்டி உள்ளிட்ட அமெரிக்கர்களுக்கான படமும் கூட.

 

இந்தப் பின்புலமே ஹே ராம்ன் கதை திரைக்கதை நடிப்பு,  சந்தித்த  வணிகம் கலை வெற்றி இவற்றின் பலம் பலவீனங்களை தீர்மானித்தது. இத்தனை சதுரங்க நகர்த்தலுக்கு நடுவேதான் கமல் தனது ஆதார தேடுதலை வைத்து ஒரு முயற்சியை செய்திருக்கிறார்.  தேவர் மகன், வறுமையின் நிறம் சிகப்பு, சத்யா, உன்னால் முடியும் தம்பி போல கமலின்  படங்களில் நாயகனின்  சிக்கலில் ஒரு ஒற்றுமையைக் காணலாம். அது தந்தையை விலகிச் செல்லும், மீறிச் செல்லும்,அல்லது வெறுக்கும் தனையன் எனும் உருவாக்கம்.  தந்தையைக் கொல்ல விழையும் மகன். இந்த ஆழுள்ள விசித்திர சிக்கலின் மற்றொரு பரிமாணமே ஹே ராம். இங்கே இலக்கு தேசத் தந்தை.

 

படத்தில் தெளிவாக பல விஷயங்கள் சொல்லப்படிருக்கிறது. குறிப்பாக சாகேத் ராம் நிலை.  சாகேத் ராம் சந்தித்து திகைத்து நிற்கும் ஒவ்வொரு பீக் பாய்ன்ட் நிலையிலும் அந்த நிலையின் போது தோன்றுபவனாக ஸ்ரீராம் அபியங்கார் இருக்கிறான். அதாவது சாகேத் ராம் அபியங்கரால் ‘திட்டமிட்டு’ தேர்வு செய்யப்படுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள்,தடை செய்யப்பட்ட சவர்கார் நூலை படிக்கவைப்பது உள்ளிட்ட டோசெஜ் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட சூழலில் காந்தியை கொல்லும் ‘கடமையை’ ராம் ஏற்கிறான். அப்போது ராம் முழு போதையில் வேறு இருக்கிறான். இப்படிப்பட்ட ராமின் பாயிண்ட் ஆப் வியு வில் நகரும் படம்.

 

அங்கே துவங்கும் அவனது பயணம் எங்கே எவ்வாறு நிறைகிறது என்பதே கதை. காந்தி, சாகேத் வசம் சொல்கிறார். என்னைக் கொல்வதன் வழியே,இங்கே இப்போது நிகழும் அத்தனை கீழ்மைகளையும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் என பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து கொண்டு என் நெஞ்சை  துப்பாக்கி தோட்டா கொண்டு துளையுங்கள். அந்தத் தோட்டா அளவு எனக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய பிறிதொன்றில்லை.  இதே வார்த்தைகளை சற்று மாற்றி அம்ஜத் அலி கான் தனது நண்பன் சாகேத் ராம் வசம் கேட்கிறான்.  அம்ஜத்தின் அந்த மன்றாட்டில் இருந்து காந்தியின் இந்த மன்றாட்டுக்கு சாகேத் ராம் வந்து சேருவதற்குள்,அவனால் ஊருக்குள் ஒரு மதக் கலவரமே நிகழ்ந்து ஓய்கிறது,  தனது நண்பன் அம்ஜத் உட்பட நண்பன் குடும்பத்தில் பலர் அதில் பலியாகிறார்கள்.

 

எத்தனை நிகழ்தகவுகள் மீது ஒரு வன்முறை வெறியாட்டம் நிகழ்கிறது என்பதன் சாட்சியாக கையறு நிலையில் குற்ற உணர்ச்சி கொண்டு சாகேத் ராம் நிற்கும் அந்த சூழலில்தான் ராம் தனக்கேற்றப்பட்ட  டொசெஜ்ல் இருந்து வெளியே வந்து காந்தியின் நிலை என்ன என்பதை முழுமையாக உணர்கிறான். நேரடியாக சொல்லப்பட்ட கதைதான் .நல்ல கதைதான். இதில் சிக்கலான அம்சம் எது எனில், கதையில் நாயகனின் உணர்வு நிலையுடன் பார்வையாளர் தம்மைப் பிணைத்துக் கொள்வதற்கு படத்துக்குள் எந்த முகாந்திரமும் இல்லை என்பது முதலாவது,இரண்டாவது படமே பெங்காலி ஹிந்தி ஆங்கிலம் என கலந்து கட்டி ஒரு மொழிப் பிராந்தியமாக இருக்கிறது என்பது. இவை இயல்பாகவே ஒரு சராசரிப் பார்வையாளனுக்கு  விலகலை அளித்து விடுகிறது.

 

இவற்றிலிருந்து வெளியேறி இந்தப் படத்தின் ஒவ்வொரு அலகிலுமான நுண்விவரணைகளுக்குள் சென்றால் கமலின் ஹோம் ஒர்க் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. இந்திய சுதந்திர போரில்,  தட்டி எழுப்பப்பட வேண்டிய சத்ரிய வீரம் எனும் கருதுகோள் முக்கிய இடம் வகித்தது. சத்ரியனாக மாறும் பிராமணர் இதன் தொடர்ச்சியே . வாஞ்சி நாதன் பின்னணி கொண்டு இங்கு இந்த சாகேத் ராமனின் ‘தேர்வு செய்யப்படும்’ நிலையை புரிந்து கொள்ள முடியும்.

 

மதக் கலவரச் சூழலில், கையில் சிக்கும் ஒரு ஆயுதம், அந்த ஆயுதத்தின் மேல் பயிற்சியும் கொண்ட ஆளுமை அவன் எனில் என்ன ஆகும்? படத்தில் சாந்தினி சௌக்கில் நடக்கும் அந்த குழப்பத்தின் பாற்ப்பட்ட சண்டைகள்தான் நிஜத்திலும் பல இடங்களில் வன்முறை அடங்காமல் பார்த்துக் கொண்ட காரணியும் கூட.

 

அண்மையில் ராஜ்மோகன் காந்தி எழுதி, ஜனனி ரமேஷ் மொழிபெயர்ப்பில், கிழக்கு பதிப்பக வெளியீடாக தேசத் தந்தைகள் எனும் நூலை வாசித்தேன். நூலின் இறுதி அத்யாயத்தில் பிரிவினை சூழலில் அந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்ட இத்தகு காரணி குறித்து ராஜ்மோகன் காந்தி குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றாக,நேதாஜி படையில் இருந்தவர்கள் ‘மீண்டும்’ இந்தியா வந்த பிறகு என்ன செய்தார்கள் என்பதை லாகூர் பிரிட்டிஷ் காவல்துறை ஆவணங்கள் அடிப்படையில் காட்டுகிறார். ஆங்காங்கே இணைந்து சிறு குழுக்களின் தலைமையை ஏற்று கலவரத்தில் இறங்குகிறார்கள். அக்பர் கான் எனும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி எழுதிய ரைடர்ஸ் இன் காஷ்மீர் நூலில், இந்த முன்னாள் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்து விரிவாகவே சொல்லி இருப்பதாக நூலாசிரியர் தெரிவிக்கிறார்.

 

கமல் செய்ததெல்லாம் இத்தகு வரலாற்று சிற்றோடைகளில் ஒன்றாக சாகேத் ராம் பயணத்தை உருவாக்கியதுதான். காந்தியை கொலை செய்ய நாதுராம் கோட்சே அருகே நின்றுதான் வேவு பார்க்கிறான் ராம். ராம் துப்பாகியுடன் தங்கி இருக்கும் விடுதியில்தான் ஆயுதபாணி ஒருவன் [கோட்சே] தங்கி இருப்பதாக, டில்லி போலிஸ் தேடுகிறது.

 

கதாபாத்திர தேர்வும் மிக ஆச்சர்யமானது. கல்கத்தாவின் சுராவர்த்தி கோட்சே என ஒவ்வொரு முகமும் பார்த்து பார்த்து நிகழ்த்தப்பட்ட  தேர்வு. உபரியாக படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எந்தெந்த சாதி மதம் என்று காட்டப் படுகிறதோ, நடிகர்களின் பின்னணியும் அதுவாகவே இருக்கிறது. சாகேத்ராம ஐயங்கார். கமல். அம்ஜத் பட்டாணி. சாருக் கான். ராணி முகர்ஜி. பெங்காலி இப்படி.

 

ஒளிப்பதிவு வார்ம் டோன் முறையில் படத்தின் உணர்வு தளத்துக்கும்,’அந்த காலத்துல’ போன்ற ஒரு தன்மைக்கும் வலு சேர்க்கிறது. சாபு சிறிலின் கலை இயக்கத்தின் டீடெய்லிங் மிக முக்கியமானது. குறிப்பாக கல்கத்தா ட்ராமில் ராமும் அபயன்கரும் பயணம் செய்கையில் ட்ராமின் ஜன்னல் வழியே அவுட் ஆப் போகஸில் வரும் காட்சிகள் [கிழிந்து கிடக்கும் பசு ஒன்றின் வயிற்றிலிருந்து நாய் ஒன்று வெளியேறி செல்லும்].இப்படி பல.

 

இசை குறித்து தனியே எவரேனும் ஆய்வு செய்து எழுதினால் நன்று. இத்தனையும் கூடிய இந்தப் படமும்,கமலின் நடிப்பும் ஆஸ்க்கார் தகுதி கொண்ட ஒன்றா? வினவினால் ஐயமின்றி ஆம் என்று சொல்லலாம். இந்தப் படத்துக்கு ஐந்து வருடங்கள் கழித்து வெளியானது ஸ்பீல்பெர்க் இயக்கிய பொலிடிகல் த்ரில்லராகிய முனிச். இயக்கத்துக்கான ஆஸ்கார் வென்றார் ஸ்பீல்பெர்க். அந்தப் படத்தின் திரை மொழிக்கு மிக அருகே நின்ற படம் ஹே ராம். சில காட்சி அமைப்புகள் உட்பட. முனிச் படத்தில் அன்வர் தனது காதலியுடன் கலவி கொள்ளும் காட்சி  மெஷின் கன் சுடும் மாண்டேஜ் காட்சியுடன் தொடுக்கப்பட்டிருக்கும். ஹே ராமில் ராம் மைதிலி உடன் கொள்ளும் கலவி இதே போன்ற ஒரு துப்பாக்கி மாண்டேஜ் உடன் தொடுக்கப் பட்டிருக்கும்.

 

ஹே ராமுக்கு இரண்டு வருடம் பின்னர் வெளியானது பொலான்ஸ்கி இயக்கிய பியானிஸ்ட். நாயகன் ப்ரோடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் வென்றார். படத்தில் பிணங்கள் சிதறிக் கிடக்கும் சாலையில் ப்ரோடி அழுதபடி நடக்கும் காட்சி ஒன்று வரும், இதே காட்சி ஹே ராமில் வரும். இரண்டுக்குமான இரு நடிகர்களின் மெய்ப்பாட்டில் இருக்கும் ஒற்றுமையை கண்டால், கமல் எல்லா நிலையிலும் ஆஸ்கார் நடிப்பு எதுவோ [அதுவே சிறந்த நடிப்பு எனும் வரையறையை நான் செய்ய வில்லை] அந்த ஸ்கேலில் மிக சரியாக பயணிப்பதை காண முடியும்.

 

ஆக ஏன் ஹே ராம் தமிழின் முக்கியமான படம் என்றால் அதன்  கலாபூர்வமான பலம் பலவீனத்துக்கான காரணங்ககளை இந்தப் பின்னணியில் வைத்துப் புரிந்து கொண்டால் அதன் தீவிரம் விளங்கும். முன்பு வெளியான இந்த படத்தின் திரைக்கதையை புத்தகமாக படித்திருக்கிறேன். படமே பார்க்காமல் படித்தாலும் ஒரு விறுவிறுப்பான வரலாற்று அரசியல் த்ரில்லர் நாவல் ஒன்றை வாசித்த அனுபவம் கிடைக்கும். தற்போது புவியரசு அவர்களின் சப்னா பதிப்பகத்தில் இந்த ஹே ராம் திரைக்கதை புத்தகமாக கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு படத்தைப் பார்த்தால் இந்த படத்தின்  ‘புரியாத’ விஷயங்களில்  இன்னும் தெளிவு கிடைக்கும்.

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபாலியலை எதுவரை எழுதுவது?
அடுத்த கட்டுரைவெயில் கவிதைகள்