சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி

ராமர்கோயில் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் எனக்கு தொடர்ச்சியாக கடிதங்கள். ஒரு தரப்பு என்னை ராமர்கோயில் கட்டுவதற்கு ஆதரவானவன் என்று சொல்லி வசைபாட இன்னொரு தரப்பு நான் முன்பு ராமர்கோயில் கட்டுவதை ஏற்கமுடியாது என எழுதியிருந்த கட்டுரையைச் சுழற்சியில் விட்டு வசைபாடியது. இரண்டு தரப்பும் வசைபாடியபோது நான் என் சவரக்கத்திமுனைநடையை மறுபடியும் சீரமைத்துக்கொண்டேன். ஆகவே எல்லா தரப்பும் வசைபாடும்படி இக்கட்டுரை.

ராமர்கோயில் கட்டப்படுவது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது தேசத்திற்கு எதிரான ஒரு குற்றம் என்றே நினைக்கிறேன். முதலில் அது நாட்டின் ஒருமைப்பாடுக்கு எதிரான செயல். பெரும்பான்மையால் இழைக்கப்படும் வன்முறை சிறுபான்மையினர் உள்ளத்தில் தேசம்பற்றிய அவநம்பிக்கையை உருவாக்குகிறது. அதன் விளைவாக நீண்டகால அளவில் தேசத்தைக் கட்டியிருக்கும் நல்லுணர்வுகள் அழிகின்றன.

இரண்டாவதாக அது இந்தியாவின் ஒரு தொல்லியல் கட்டுமானம் மீதான அழிப்புநடவடிக்கை. இந்தியாவின் தொல்லியல்தடயங்கள் ஏராளமானவை. அரசால் முழுமையாக பாதுகாக்கப்பட முடியாதவை. ஒவ்வொரு தொல்லியல்தடையம் மீதும் இங்குள்ள வெவ்வேறு மதக்குழுக்களுக்கு, சாதிக்குழுக்களுக்கு, வட்டாரக்குழுக்களுக்கு வேறுவேறு கருத்துக்கள் இருக்கலாம். அவற்றின் அடிப்படையில் அவர்கள் தொல்லியல்மையங்களை அழிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் ஒன்றுமே எஞ்சாது.

உதாரணமாக, ஒரு சாரார் தமிழகத்திலுள்ள மராட்டிய, தெலுங்கு அடையாளங்களை அழிக்க ஆரம்பித்தால் நமக்கு என்ன எஞ்சும்? இன்னும் ஒருசாரார் டச்சு, போர்ச்சுக்கல், பிரிட்டிஷ் அடையாளங்களை அழிக்கலாம். இன்னொருசாரார் சமண பௌத்த அடையாளங்களை அழிக்கலாம். கர்நாடகத்தில் தமிழகக் கல்வெட்டுகள் பல உள்ளன. ஆந்திரத்தில் தமிழகப் பண்பாட்டுத் தடையங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சாராருக்கு வரலாறு, இன்னொருவருக்கு ஆதிக்கத்தின் அடையாளம்.

வரலாற்று அடையாளம் வரலாற்று அடையாளம்தான். வரலாற்றை மாற்ற வரலாற்று அடையாளங்களை அழிப்பது வரலாற்றை அழிப்பதுதான். அது தேசத்திற்கு எதிரான அழிவுச்செயல். அதில் எந்தவகையான மறுசொல்லுக்கும் இடமில்லை. என் பார்வையில் பாபர்கும்மட்டம் இடிக்கப்பட்டது பாமியான் புத்தர்சிலைகள் இடிப்பப்பட்டமைக்கு நிகரான அராஜகச்செயல்பாடு.

மூன்றாவதாக அது பெரும்பான்மையின் வன்முறை. பெரும்பான்மை தன் ஆதிக்கத்தை இப்படி சிறுபான்மையினர்மேல் காட்டுவது, அதை வெற்றிஎனக் கொண்டாடுவது சமூகம் தேசம் என்னும் கட்டமைவுகளை அழிப்பதாகவே அமையும். இந்தியாபோன்ற ஒரு நொய்மையான பொருளியல்கொண்ட தேசத்தில் அது நீண்டகால அளவில் பேரழிவை உருவாக்கலாம்

நான்காவதாக, அழிவின்மேல் வெறுப்பைக்கொண்டு கட்டப்படுவது ஆலயம் அல்ல.

*

இன்றைக்கு வரலாற்றை எவரும் நினைவுகூர்வதில்லை. இன்று ஒட்டுமொத்தமாக இப்பிரச்சினையின் முகங்களை ஒருவர் சொல்லத்தொடங்கினால் அத்தனைபேரும் அவர்மேல் பாய்வார்கள். ஏனென்றால் அத்தனை அரசியல் தரப்பினருக்கும் அவரவர் அரசியல்சார்புநிலைகள், அரசியல் காழ்ப்புகள்சார்ந்துதான் நிலைபாடுகள் உள்ளன

ராமர்கோயில் அரசியலாக்கப்பட்டதற்கு முதன்மைப் பொறுப்பு பாரதிய ஜனதாவுக்கு. பாரதிய ஜனதா இந்தியா முழுக்க மதப்பூசல்களை அரசியல்பூசல்களாக்க, அதன்வழியாக காழ்ப்புகளை உருவாக்கி இந்து வாக்கு ஒன்றை அமைக்க தொடர்ந்து முயன்று வருகிறது. அவர்களின் அரசியல் அது. ஆனால் இந்தியாவில் திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் இன,மொழி .மத ‘மாற்றான்களை’ கட்டமைத்து வெறுப்பரசியலைத்தான் செய்துவருகின்றன.

எண்பதுகளின் தொடக்கத்தில் ராமர்கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை ராமபக்தர்களிடமிருந்து விஸ்வஹிந்து பரிஷத் கையில் எடுத்ததும் அரசியல் தொடங்கியது.ஆனால் அதைத் தொட்ட அனைவருமே அதை அரசியலாக்கினர். இப்பிரச்சினையின் சமகாலச் சிக்கலின் தொடக்கம் ராஜீவ் காந்தியிலிருந்து. 1985 ல் ஷாபானு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. சரிஅத் சட்டம் விவாகரத்தாகும் பெண்களுக்கு நீதிவழங்குவதில்லை என்றும், ஆகவே இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறாக விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு விவாகரத்து செய்யும் கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும் அத்தீர்ப்ப்பு சொன்னது.

உண்மையில் இது ஒரு எளிமையான மனிதாபிமானத் தீர்ப்புதான். இந்தியாவில் இஸ்லாமியக் குற்றச்சட்டம் நடைமுறையில் இல்லை. இஸ்லாமிய சிவில்சட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இஸ்லாமிய சிவில்சட்டத்திலும் குர்ஆன் வகுத்தவற்றில் இஸ்லாமியர் கடைப்பிடிப்பவை மிகச்சிலவே – இஸ்லாமிய சிவில்சட்டப்படி இஸ்லாமியர் வட்டி வாங்கக்கூடாது என்று இந்திய அரசு சொல்லியிருந்தால் கடைப்பிடிப்பார்களா என்ன? தலாக் என்பது சிவில்சட்ட வரம்புக்குள் இருந்தது. அது இஸ்லாமியப்பெண்களின் நலனுக்காக சற்றே மாற்றியமைக்கப்பட்டது

ஆனால் இந்தியா முழுக்க அதற்கு எதிராக இஸ்லாமிய மதகுருக்களும், இஸ்லாமிய அமைப்புக்களும் கிளர்ந்தெழுந்தனர். பல இடங்களில் நேரடி வன்முறை நடந்தது. காசர்கோடு நகரில் நான் ஒரு வன்முறையை நேரில் கண்டேன்.இருபது வயதுகூட ஆகாத இஸ்லாமிய இளைஞர்கள் தெருவையே சூறையாடினர். நான் ஓரு விடுதிமாடியறையில் பதுங்கியிருந்தேன். எனக்கு அது ஒருவகை பேருருக்காட்சி..

இந்தியவரலாற்றில் இஸ்லாமிய செய்த முதல் மாபெரும் தவறு இந்திய உச்சநீதிமன்றம் முழுக்கமுழுக்க மனிதாபிமான அடிப்படையில் கூறிய அந்தத் தீர்ப்புக்கு எதிரான கலவரமும் அதை பொதுவாக இங்குள்ள இஸ்லாமியப் பெரும்பான்மையினர் ஆதரித்தமையும்தான். அந்த மூர்க்கத்தனமே முதல்முறையாக இந்தியாவெங்கும் அவர்களை மைய ஓட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியது. ‘அவர்கள்’ என எண்ண செய்தது.இன்று பாரதிய ஜனதாவை ஆட்சிக்குக் கொண்டு வந்து அமரச்செய்திருப்பது உட்பட அனைத்தும் தொடங்கும் புள்ளி அதுவே

ஏனென்ளால் முத்தலாக் சட்டத்தால் இஸ்லாமியப்பெண்கள் கைவிடப்படுவதன் குரூரத்தை மொத்தச் சமூகமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அநீதி நிகழ்கிறது என்பதை எந்த இஸ்லாமியரும் மறுக்கவுமில்லை. ஆனால் அது தங்கள் மதத்தின்மீதான தாக்குதலாக அவர்கள் எடுத்துக்கொண்டனர். இஸ்லாமிய மதகுருக்களும் அடிப்படைவாதிகளும் அவர்களிடம் அவ்வாறு கூறினர்.

விளைவாக ராஜீவ்காந்தி அரசு 1986ல் ஒரு சட்டத்திருத்தம் வழியாக அந்தத் தீர்ப்பை நடைமுறையில் ரத்து செய்தது. அது தேர்தல்காலம் என்பதனால் ராஜீவ் அரசு பணியவேண்டியிருந்தது.இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய அதிர்ச்சி. காங்கிரஸ் அன்று இஸ்லாமியர் வாக்கை பெருவாரியாகப் பெற்றுவந்த கட்சி. இந்துக்களும் காங்கிரஸுக்கே வாக்களித்தனர். 1984ல் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தேசிய அளவில் பெற்ற ஒட்டுமொத்த பாராளுமன்ற இருக்கைகள் இரண்டே இரண்டுதான். பாரதியஜனதா ஒரு சிறு மாநிலக்கட்சியின் இடத்தில்கூட இருக்கவில்லை.

நல்வாய்ப்பை பாரதிய ஜனதா பயன்படுத்திக்கொண்டது. ஷாபானு வழக்கை முன்வைத்து உக்கிரமான ஒரு பிரச்சாரத்தை இந்தியா முழுக்க பாரதியஜனதா முன்னெடுத்தது. இந்தியாவின் அரசை, சட்ட அமைப்பை, அரசியல்சட்டத்தையே இஸ்லாமியர் வாக்குவங்கி அரசியல் வழியாக கட்டுப்படுத்துகிறார்கள் என்று அது கூறியது. “இந்தியாவின் எஜமானர்கள்” என்று இஸ்லாமியரை பாரதியஜனதா குறிப்பிட்டது. அந்த பிரச்சாரம் முதல்முறையாக இந்துக்கள் உள்ளத்தில் பதியத்தொடங்கியது. பாரதிய ஜனதாவுக்கு முதல்முறையாக வட இந்தியா முழுக்க ஆதரவு உருவாகியது. அதை நான் என் பயணங்களில் கண்கூடாகவே கண்டேன்

இந்துக்கள் மத்தியில் அவ்வாறு உருவான கசப்பை சமன் செய்தாகவேண்டும் என ராஜீவ் அரசு நினைத்தது. அதற்கான தருணம் ராமர்கோயில் தீர்ப்பு வழியாக அமைந்தது. 1985ல் மாவட்ட நீதிமன்றம் ராமர்கோயில் இருந்த இடத்தில், பாபர்கும்மட்டத்திற்குள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தபோது அதை இந்துக்களுக்காக திறந்துகொடுத்தது ராஜீவ் அரசு.

நான் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக அணுக்கமானவர்களாக இருந்த இரு முதன்மையான காங்கிரஸ் தலைவர்களிடம் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். அன்றிருந்த இஸ்லாமிய தலைமையிடம் ஒப்புதல்பெற்றே இதை காங்கிரஸ் அரசு செய்தது. இது ஒரு சின்ன விஷயம், உத்தரபிரதேசத்தின் ஒரு வட்டார வழிபாட்டுச்சிக்கல் என்றே அரசு நினைத்தது. ஆனால் ஒரு நல்லெண்ண சமிக்ஞை, அது பாரதிய ஜனதா உருவாக்கிவந்த இந்து வாக்குவங்கியை இல்லாமலாக்கும் என திட்டமிட்டது.

பொதுவாக மதவிஷயங்களில் தலைமை என்பதே இல்லை. ஒரு தலைமை ஒப்புக்கொண்டதை இன்னொரு தலைமை ஒப்புக்கொள்ளவேண்டியதில்லை. ஒரு மிதவாத தலைமை ஒன்றை ஒப்புக்கொண்டால் இன்னொரு தீவிரப்போக்கு கொண்ட தலைமை உருவாகி அவர்கள் விவகாரத்தைக் கையிலெடுப்பார்கள். மிதவாதிகள் ‘சமரசம் செய்துகொண்டவர்கள்’ என முத்திரைகுத்தப்படுவார்கள். மக்களாதரவு ‘சமரசம் அற்ற’ தீவிரப்போக்காளர்களுக்கு கிடைக்கும்

ராமர்கோயில் விஷயத்தில் அன்று அரசியலில் இரு குரல்கள் ஒலித்தன. ஆரிஃப் முகமது கான் சமரசத்தின் குரலாக ஒலித்தார். சையது சஹாபுதீன் தீவிரப்போக்குள்ள குரலாக ஒலித்தார். ஆரிஃப் முகமதுகானுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இந்தியாவின் இஸ்லாமியர் சகாபுதீனையே ஆதரித்தனர். இந்தியாவின் தாராள சிந்தனையாளர்களும் இடதுசாரிகளும்கூட சகாபுதீனையே ஆதரித்தனர்.

விளைவாக ராமர்கோயில் கட்டக்கூடாது என்றும் அது இஸ்லாமிய வழிபாட்டிடம் என்றும் இந்திய இஸ்லாமியர் தரப்பு கூறத்தொடங்கியது. இரு தரப்பும் சமரசமற்ற நிலை எடுத்தன. விளைவாக அங்கே வழிபடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப்பெற்றது. அது இந்துக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்களின் மிரட்டலுக்கு அரசு பணிகிறது, அரசே அவர்களால் ஆட்டுவிக்கப்படுகிறது என்னும் சித்திரம் உருவாகியது. பாரதிய ஜனதா தொடர்ச்சியாக செல்வாக்கு பெறலாயிற்று. 1990ல் அத்வானி ராமர்கோயில் கட்டுவதற்கான தன் ரத யாத்திரையை தொடங்கினார். 1992ல் பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது. பாரதிய ஜனதா வலுவான இந்து வாக்குவங்கியை உருவாக்கியது. ஆட்சியை படிப்படியாகக் கைப்பற்றியது

இந்த விவகாரத்தில் இஸ்லாமியர் செய்த பிழை என்பது ஜனநாயகத்தில் மத அடிப்படையில் திரட்டப்படும் வாக்குவங்கிக்கு இருக்கும் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டது, தவறாக மூர்க்கமாக பயன்படுத்திக்கொண்டது. அவர்களுக்கு சாதகமாக இருந்த காங்கிரஸ் அரசை மிரட்டி காரியம் சாதித்துக்கொண்டது. அப்படி மிரட்டுபவர்களை தலைவர்களாக தேர்வுசெய்தது. அவர்களைக் கொண்டாடியது.

அதன் எதிர்விளைவாக இந்துக்கள் அப்படி திரட்டப்படுவார்கள் என்றால் இஸ்லாமியரின் அனைத்து அரசியலதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிடும் என அன்றே அரசியலறிந்தோர் எச்சரித்தனர். சரிஅத் திருத்தம் பற்றி கருத்து சொன்னதற்காக இ.எம்.எஸ். இஸ்லாமியரால் மிகமிகக் கடுமையாக வசைபாடப்பட்டார். [ஒன்றும் கட்டுவோம் நாலும் கட்டுவோம். இஎம்எஸின் மனைவியையும் கட்டுவோம்… அன்றைய புகழ்பெற்ற கோஷம்]

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது ஒருவகையில் இந்தியதேசத்தின் குரல், இங்குள்ள பெரும்பான்மையினரின் குரல். உண்மையிலேயே அது அன்று இஸ்லாமியரை பெருமதிப்புடன் கனிவுடன் அணுகிய அன்றிருந்த சமூகத்தின் குரல். அதை மூர்க்கமாக நிராகரித்தனர் அன்றைய இஸ்லாமியர். தங்களை இந்தியாவின் சட்டத்திற்கு, தேசக்கட்டுமானத்திற்கு அப்பாற்பட்டவர்களாக அறிவித்துக்கொள்வது அது.

அச்செயல் மிக ஆழமான ஒரு புண்ணை பெரும்பான்மையினரின் உள்ளத்தில் உருவாக்கும் என்றும், இஸ்லாமியர் ஒரு வாக்குவங்கியாக ஒற்றைத்திரளாகச் செயல்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக்கி இந்துக்களும் அப்படி திரள வழிவகுக்கும் என்றும் திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டப்பட்டது. எங்களுக்கு பிறர் அறிவுரை சொல்லத்தேவையில்லை, இது எங்கள் மதத்தின் உள்விவகாரம், நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்பதே அதற்கான பதிலாக இருந்தது

இன்று இஎம்எஸின் தீர்க்கதரிசனமே நடந்துவிட்டிருக்கிறது. இன்று அரசியலில் இஸ்லாமியருக்கு இடமே இல்லை. இஸ்லாமியர் ஒரு கட்சிக்கு வாக்களித்தால் அக்கட்சி உறுதியாக தேர்தலில் தோல்வியுறும் என்பதே நிலைமை. ஆகவே காங்கிரஸே இஸ்லாமியரைக் கைவிடுகிறது. எதற்கெல்லாம் எதிராக இஸ்லாமியர் எண்பதுகளில் அதீத நிலைபாடுகளை எடுத்தார்களோ அவற்றை எல்லாம் அவர்களின் எந்த பங்களிப்பும் இல்லாமலேயே இன்றைய அரசு அரசாணையாக்கும்போது அவர்கள் ஒன்றும்செய்யமுடியாமல், ஒரு வார்த்தைகூட பேசமுடியாமல், நின்றிருக்கவேண்டியிருக்கிறது.

வாக்குவங்கி அரசியலை- தெருமுனைப்போராட்டத்த்ன் அழுத்தத்தை இஸ்லாமியர் ஷாபானு வழக்கில் தொடங்கினார்கள், பாபர்கும்மட்ட வழக்கில் மேலும் தீவிரமடைந்தனர். இன்று பாரதிய ஜனதா அரசு முத்தலாக் சட்டம் கொண்டுவந்துவிட்டது. ராமர்கோயில் கட்டப்போகிறது. ஆனால் இன்றும் இஸ்லாமியரின் அணுகுமுறை மேலும் தீவிரப்போக்குள்ள, ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் தேசிய பெரும்போக்கிலிருந்து அகற்றுகிற, தலைமையை நாடிச்செல்வதாகவே இருக்கிறது.

*

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் மிகப்பெரிய பிழை இந்தியாவின் இடதுசாரி- தாராளவாத சிந்தனையாளர்களிடமிருந்தே எழுந்தது. அவர்கள் பொதுவெளியில் தங்கள் பிம்பத்தைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டார்கள். புரட்சியாளர்களாக, தங்கள் பிறப்பின் எல்லையைக் கடந்தவர்களாக காட்டிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் இஸ்லாமியரைவிட தீவிர இஸ்லாமிய நிலைபாடு எடுத்தனர்.

உண்மையில் பாபர் ராமர்கோயில் இருந்த இடத்தின்மேல் கட்டிய அந்த கும்மட்டம் இஸ்லாமியருக்கு அவ்வளவு முக்கியமானதா என்ன? அது என்றுமே வழிபாட்டிடமாக இருந்ததில்லை. நாடெங்கும் பாழடைந்து கிடக்கும் பல தொல்லியல்சின்னங்களில் ஒன்று அது. மிகச்சாதாரணமான ஒரு பேச்சுவார்த்தை வழியாக அதை எளிதாகத் தீர்த்துவைத்திருக்க முடியும்.

இந்துக்களின் குழந்தைராமர் கோயில் ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக அங்கே இருந்தது. அது பாபரின் தளபதியால் இடிக்கப்பட்ட நாள் முதல் எப்போதுமே இந்துக்கள் அங்கே வழிபடும் உரிமைக்காகப் போராடிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அந்தக்கோயிலைக் கைப்பற்றும் உரிமைக்காகப் போர்களும் பூசல்களும் நடந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேலான வரலாற்றுக்குறிப்புகள் அங்கே ராமர் கோயில் இருந்ததைச் சுட்டுகின்றன. திட்டவட்டமான தொல்லியல்சான்றுகளும் உள்ளன.

இந்துக்களில் ஒருசாராருக்கு அது புனிதநிலம் – இஸ்லாமியருக்கு மெக்கா எப்படியோ அப்படி. அந்த உணர்வை இஸ்லாமியர் புரிந்துகொள்ளமாட்டார்களா என்ன? நானறிந்தவரை இஸ்லாமியர்களில் மிகப்பெரும்பான்மையினர் அன்று அத்தகைய இணக்க மனநிலையில்தான் இருந்தனர். அரசியல் இல்லாமலிருந்தால் இன்றும்கூட எளிதாக அதை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எத்தனையோ ஆலயங்கள், மசூதிகள், வரலாற்றுச் சின்னங்கள் அணைக்கட்டுக்காக, வளர்ச்சிப்பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பாபர் கும்மட்டத்தை சற்று அப்பால் அப்படியே இடமாற்றம் செய்திருக்க முடியாதா என்ன?அது அங்கேயே இருந்தாக வேண்டும் என்னும் பிடிவாதம் இஸ்லாமிய மதத்துடன் சம்பந்தப்பட்டதா என்ன? எந்த இஸ்லாமியருக்கும் அது புனிதத்தலம் அல்ல. பெரும்பாலும் எவருக்குமே அந்த இடம் பற்றித் தெரியாது. அப்படி நிகழாமல் தடுத்தவர்கள் இந்தியாவின் ‘முற்போக்காளர்களே’. அவர்கள் இஸ்லாமியர்கள் விட்டே கொடுக்கக்கூடாது என்று வாதிட்டனர். இஸ்லாமியர்களில் தீவிரப்போக்குள்ளவர்களை முன்னிறுத்தினர்.விட்டுக்கொடுப்பது இஸ்லாமியரின் தோல்வி என்றும் அத்தோல்விகள் தொடரும் என்றும் அச்சுறுத்தினர்.

அங்கே ராமர்கோயில் இருந்ததும், அந்த இடம் இடிக்கப்பட்டதும், அதன்பொருட்டு இந்துக்கள் முந்நூறாண்டுகளாக போராடி வருவதும் மிகமிக அப்பட்டமான வரலாற்று உண்மை. ஆனால் இடதுசாரிகள் அந்த ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்தார்கள். அங்கே தொல்லியல் அகழ்வாய்வு ஆலயம் இருந்ததைக் கண்டறிந்து முறையான அறிக்கையை அரசுக்கு அளித்தபின்னரும் இருபதாண்டுகள் அங்கே எந்த ஆலயச்சான்றும் கண்டடையப்படவில்லை என்று வாதிட்டனர்.

ஏன் ஜேஎன்யூவை மையமாக்கிய இந்திய இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் அங்கே இந்து ஆலயம் இருந்தமைக்கு எந்த தொல்லியல்சான்றும் இல்லை என கூட்டறிக்கை கூட விட்டனர். அங்கிருக்கும் மிகமிகத்தெளிவான விரிவான தொல்லியல்சான்றுகளைப் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கை அப்போது அரசுக்கு அளிக்கப்பட்டுவிட்டிருந்தது. ஏறத்தாழ அத்தனை அறிஞர்களுக்கும் அதைபற்றி தெரிந்தும் இருந்தது.

தொல்லியல் அகழ்வுச்சான்றுகள் வெளியானபோது அந்த இந்து ஆலயத்திற்கு அடியிலிருப்பது பௌத்த கட்டுமானம் என்று மீண்டும் வாதிட்டனர். அதுவும் பிழை என நிறுவப்பட்டபோது அகழ்வாய்வு செய்தவர்களை அவதூறும் ஆளுமைக்கொலையும் செய்தனர். [கே.கே.முகமது அவர்கள் தன் நூலில் இதையெல்லாம் மிக விரிவாகப்பதிவுசெய்திருக்கிறார்]

ஒரு பேச்சுக்காக இதையெல்லாம் அவர்கள் மதச்சார்பின்மை மேல் கொண்ட நம்பிக்கையால் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இத்தனை அப்பட்டமான மோசடி வழியாக அதைச்செய்யும்போது அவர்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொள்கிறார்கள் என்பதல்லவா மெய்?

ராமர்கோயில் கட்டவேண்டும் என்னும் கோரிக்கை இந்துக்களுடையது அல்ல, இந்துத்துவ அரசியல்வாதிகளுடையது மட்டுமே என்று இடதுசாரிகள் வாதிட்டனர். வேண்டுமென்றே இஸ்லாமியரின் நிலத்தை பறிக்கும் முயற்சி நிகழ்கிறது என எழுதி எழுதி நிலைநாட்டினர். விளைவாக இந்துக்களை இந்துத்துவம் நோக்கி தள்ளினர். இஸ்லாமியரை இஸ்லாமிய அடிப்படைவாதம் நோக்கி தள்ளினர். இன்றைய மதவாத அரசியலெழுச்சிக்கு அவர்களே வழிவகுத்தனர்.

அந்த கும்மட்டத்தை நான் இருமுறை பார்த்திருக்கிறேன். அதை மசூதி என பேசி நிறுவியது இடதுசாரிகள்தான். அங்கே பல்லாயிரம்பேர் அன்றாடம் வழிபட்டுக்கொண்டிருந்தனர் என்று அவர்கள்தான் எழுதிக்குவித்தனர். அயோத்தியோ உத்தரப்பிரதேசமோ எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத இஸ்லாமியர் நடுவே இஸ்லாமிய மதத்துக்கு எதிரான தாக்குதல் என மொத்த ராமர்கோயில் கோரிக்கையையும் மாற்றிக்காட்டியவர்கள் இடதுசாரிகள். குறிப்பாக இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் இதழாளர்களும்.

இவர்களில் மிக முக்கியமானவர் பேரா இர்ஃபான் ஹபீப். அவர் இடதுசாரி வரலாற்றாசிரியர் என புகழ்பெற்றவர். டி.டி.கோசாம்பி வழிவந்தவர். ஆனால் அவர் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியாகவே இவ்விவகாரத்தில் செயல்பட்டார். உணர்வுகளை தூண்டிவிடுவது, அப்பட்டமான ஆதாரங்களை மறுப்பதும் திரிப்பதும் என அவர் இந்திய வரலாற்றாய்வின் ஒரு மாபெரும் களங்கச்சின்னமாகவே செயல்பட்டார். ஆதாரங்களுடன் நடுநிலையில் நின்றுபேசியவர்களை வசைபாடினார். இன்று வாசிக்கையில் மார்க்ஸிய முகமூடி அணிந்த மதவெறியர் என்று மட்டுமே அவரை என்னால் மதிப்பிட இயல்கிறது.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் இன்று சோர்வூட்டுவதாகப் படுவது கொஞ்சமேனும் நடுநிலையுடன் பேசிய அனைவரையும் இரு தரப்பினரும் வசைபாடி தங்கள் எதிர்தரப்புக்கு தள்ளினர் என்பதே. குறிப்பாக இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் இந்துத்தரப்பில் பொறுமையுடன் பேசிய அனைவரையும் இந்துத்துவர் என முத்திரை குத்தி அந்தப்பக்கமாகவே தள்ளினர். இந்துமதத்தை வசைபாடினர். அந்த வசையை ஏற்றுக்கொள்ளாதவர்களையே இந்துத்துவர் என்றனர்.

இன்றுவரை இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் இந்துமத நம்பிக்கை உடைய அனைவருமே இந்துத்துவர்களே என்னும் நிலைபாட்டை எடுத்துள்ளனர். ஆச்சரியமென்னவென்றால் அந்நிலைபாடு இந்த்துத்துவத்திற்கு மிகமிக சாதகமானது, அவர்கள் விரும்புவது. இங்கே இந்துக்கள் இத்தனைதூரம் இந்து அரசியலுக்குள் தள்ளப்பட்டமைக்கு இந்த ‘எதிர்ப்பாளர்’களே காரணம்.

இன்றும்கூட ‘மென்இந்துத்துவத்தைக் கண்டுபிடித்தல்’ ‘ இந்துத்துவச் சதியை வெளிப்படுத்தல்’ என்றெல்லாம் களமாடி இந்துத்துவ அரசியலையும் எதிர்க்கும் இந்துக்களைக்கூட இந்துத்துவர் என அடையாளப்படுத்துபவர்கள் இவர்களே. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கருவிகளை தயாரிப்பவர்கள் இவர்களே. இந்துமெய்யியலையும் மதத்தையும் இந்துத்துவ அரசியலுடன் கலக்கக் கூடாது என்று வாதிடும் இந்துக்களுக்கு முதன்மை எதிர்ப்பு இந்துத்துவர்களிடமிருந்து அல்ல இவர்களிடமிருந்தே வருகிறது.

இன்றைய இந்துத்துவ அரசியல் என்பது இஸ்லாமியரை மேலும் மேலும் தனிமைப்படுத்தி அதிகாரமற்றவர்களாக்கி, அக்கசப்பால் அடிப்படைவாதம்நோக்கி தள்ளி, அந்த அடிப்படைவாதத்தையே சுட்டிக்காட்டி தங்கள் வாக்குவங்கியை உறுதிசெய்துகொள்வதாகவே உள்ளது. இஸ்லாமியரும் தங்கள் ஒதுங்குதல் வழியாக, அடிப்படைவாதத்தை ஆதரிப்பதன் வழியாக அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.

இன்றைய சூழலில் இஸ்லாமியர் தங்களை ஜனநாயகப்படுத்திக்கொண்டு, மையஓட்ட அரசியலில் ஈடுபட்டு, அதிகாரம் நோக்கிச் செல்வதும் ;தேசக்கட்டமைப்பில் தங்கள் இடத்தை பெறுவதும்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி. தங்கள் சொந்த ‘இமேஜ்’ க்காக அவர்களின் மேடைகளில் வந்து அடிப்படைவாதத்தை புகழ்ந்துவிட்டுச்செல்லும் ‘லிபரல்கள்’ சென்ற முப்பதாண்டுகளாக அவர்களின் அடித்தளத்தையே இங்கே அழித்துவிட்டார்கள் என்று அவர்கள் உணர்ந்தாகவேண்டும்.

*

இதுவே ராமர்கோயில் தீர்ப்பின் சென்ற முப்பதாண்டுக்காலப் பின்னணி. இப்பின்னணியிலிருந்து துண்டுபடுத்தி ஒற்றைவரிக்கூச்சல்களாகவே இப்பிரச்சினையை ஊடகங்களும் அரசியல்தரப்புகளும் அணுகிவருகின்றன.

ராமர்கோயில் தீர்ப்பு இப்படித்தான் வரும் , வரமுடியும் என காங்கிரஸ் அரசுக்கே தெரியும். ஏனென்றால் எளிய அகழ்வாய்விலேயே அங்கே இரண்டு ஆலயங்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றெனக் கிடப்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. திட்டவட்டமான தொல்லியல்சான்றுகளை எவராலும் மறைக்க முடியாது. கே.கே.முகமது என்னிடம் சொன்னதுபோல தொல்லியலில் இருக்கிறது, அல்லது இல்லை என்றே சொல்லமுடியும். சொந்தக்கருத்துக்கு இடமில்லை. அங்கே ராமர் ஆலயம் இருந்திருக்கிறது, அவ்வளவுதான்..

இது சிவில் வழக்கு. நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது இரண்டே கேள்விகள். அந்நிலம் மீது இஸ்லாமியர்களுக்கு உரிமை உண்டா? அந்த கும்மட்டம் ஆலயத்தை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதா? நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்த முடிவுகள் இவை. அந்நிலம் இஸ்லாமிய வழிபாட்டு அமைப்புக்குச் சொந்தமானது அல்ல, சட்டப்படி அது அரசு நிலம். அங்கே நிலத்துக்கு அடியில் கோயிலின் அடித்தளமும் தூண்களும் உள்ளன. ஆலயம் இடிக்கப்பட்டு அங்கே கும்மட்டம் கட்டப்பட்டுள்ளது

நீதிமன்றம் இப்போது தீர்ப்பாகச் சொல்லியிருப்பது ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்டதும் , இஸ்லாமியர்களிலேயே பலர் ஏற்கனவே பலமுறை ஒப்புக்கொண்டதுமான சமரசத்தைத்தான். அது பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட முடிவு என்பதால்தான் அதற்கு இன்றுள்ள ஏற்பு. ஏனென்றால் அது ஒன்றே சாத்தியமான வழி என அனைவருக்கும் தெரியும். ஆனால் இஸ்லாமியர் தரப்பில் நின்று அதை ஏற்க எவருக்கும் தைரியமில்லை. அவர்கள் துரோகிகள் என முத்திரையிடப்படுவார்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மட்டுமல்ல நம் இடதுசாரிகளாலும் ஊடகங்களாலும் கூட. ஆகவே அந்த சமரசமே உச்சநீதிமன்ற தீர்ப்பாக வெளிவரும்போது அதை எதிர்பார்த்திருந்தவர்களாக ஏற்கிறார்கள்.

இத்தீர்ப்பு முற்றிலும் சட்டம் சார்ந்ததா? இல்லை. அந்த இடம் ஒரு தொல்லியல் அகழ்வு மையம். அடியில் தொல்லியல் சான்றுகள் உள்ளன என்பதனாலேயே அது அவ்வாறே பேணப்படவேண்டுமே ஒழிய அதன்மேல் இன்னொரு கட்டுமானம் கட்டப்படக்கூடாது. இங்கல்ல எல்லா தொல்லியல் மையங்களிலும் அதுவே சட்டம். உலகமெங்கும். அதை தொல்லியல் அகழ்வுக்கு விட்டுக்கொடுத்திருக்கவேண்டும். அங்குள்ள தொல்லியல் சான்றுகளை எடுத்து, மேலும் சேர்த்துச் செப்பனிட்டு கொனார்க் சூரியர் கோயில்போல மறு அமைப்புகூட செய்திருக்கலாம். அதன்மேல் ஒரு புதிய கட்டுமானத்தை அனுமதிக்கவே கூடாது. இது முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவெங்கும் கான்கிரீட் குவியல்களே எஞ்சும்

ஆனால் இப்பிரச்சினை இப்படி தேசமளாவ பெரும்பிரச்சினையாக ஆனபின், பலகோடி மக்களின் கருத்து திரட்டப்பட்டு நின்றிருக்கையும் சட்டத்திற்கும் வேறுவழி இல்லை. ஒன்று, இப்பிரச்சினையை மீண்டும் ஏதேனும் கமிட்டிக்கு விட்டு ஒத்திப்போடலாம் – நான் அதையே எதிர்பார்த்தேன். முடித்துவைக்கவேண்டும் என்றால் இப்படித்தான் முடிக்கமுடியும். மீண்டும் மீண்டும் சமரசத்துக்கான வாய்ப்புகளை வழங்கிய பின் நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது. இப்பிரச்சினை மேலும் வளர்க்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செல்லவேண்டாம் என நீதிமன்றம் எண்ணியிருக்கலாம். உண்மையில் இஸ்லாமியரிலேயே பெரும்பாலானவர்களின் எண்ணம் இன்று அதுதான்..

உலகம் எங்கும் நீதிமன்றங்களின் செயல்பாட்டில் சமரசவழியும் உள்ளது. சட்டஅமைப்பையும் அதை உருவாக்கிய ஆதார விழுமியங்களையும் அடிப்படையாகக்கொண்டுதான் நீதிமன்றங்கள் பொதுவாக தீர்ப்பளிக்கின்றன. அவற்றை அச்சமூகம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என வலியுறுத்துகின்றன. அதற்கு அரசின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறுதான் இந்து சிவில்சட்டம் இந்திய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது. ஆனால் அரிதாக அச்சமூகம் ஒற்றைத்தரப்பாக, உணர்ச்சிகரமாக கொண்டிருக்கும் நிலைபாடுகள் மற்றும் விழுமியங்களில் சமரசத் தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் முன்வைத்தாகவேண்டும். அதற்கும் பல முன்னுதாரணங்கள் உள்ளன, உலகம் எங்கும்.

*

ஆனால் இந்துக்களின் தரப்பில், இந்திய அரசின் தரப்பில் மிகப்பெரிய அநீதி ஒன்று உள்ளது. அது அங்கிருந்த பாபர்கட்டுமானம் இடிக்கப்பட்ட குற்றவியல் வழக்கில் இன்றுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை என்பதில் உள்ளது. ஓரு சிவில் வழக்கில் தாமதம் ஓரளவு புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் அப்பட்டமான ஒரு குற்றத்தில், தேசத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக எவரும் தண்டிக்கப்படவில்லை என்றால் அதுதான் அநீதி.

அந்தக் குற்றவழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கையில் இந்த சிவில் வழக்கில் வந்திருக்கும் தீர்ப்புதான் இந்திய நீதியமைப்பு மேல் ஐயமும் கசப்பும் கொள்ளச்செய்கிறது. அதில் விளையாடும் அரசியல்மேல் விலக்கம் உருவாக வழிவகுக்கிறது. இவ்விஷயத்தில் பேசும் அத்தனைபேரும் இருவழக்குகளையும் ஒன்றாக்கி இடித்தவனுக்கே நிலமா என்று கொந்தளிக்கிறார்கள். இந்தப் பாமரத்தனம் மீதுதான் நம்பிக்கை வைத்துத்தான் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன.

இந்த அநீதிக்குமேல்தான் இங்குள்ள ‘ராமபக்தர்களின்’ ஜெய்ஸ்ரீராம் கோஷம் ஒலிக்கிறது. அது இஸ்லாமியர் செவிகளில் மட்டுமல்ல நடுநிலையாளர் செவிகளிலும் அநீதியின் எக்களிப்பாகவே ஒலிக்கும். ஓர் அநீதி வென்று நிற்கையில், எதிர்க்குரலே இல்லாமல் இருக்கையில், எல்லாம் சுமுகமாகச் செல்கிறது என்று பொருள் இல்லை. அநீதிகளின்மேல் எந்த நீடித்த அமைப்பையும் கட்டி நிலைநிறுத்திவிடமுடியாது. எதுவும் மெய்யான வளர்ச்சியை அடையாது. இந்த அநீதி இந்தியத் தேசியக் கட்டுமானம் மீது ஓரு புண்ணாகவே நீடிக்கும்.

இந்தியா என்னும் அமைப்பின்மேல், இங்குள்ள நீதிமுறைமேல், இங்குள்ள பெரும்பான்மையின் அறவுணர்வின்மேல் இங்குள்ள இஸ்லாமியர் நம்பிக்கைகொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்கள் இந்நாட்டு மக்கள்தொகையின் ஒரு பெரும்பகுதி. அந்நம்பிக்கையை ஈட்டுவது பெரும்பான்மையினரின் கடமை. அதுவே இத்தேசத்தை நீடித்த ஆற்றலுடன் திகழச்செய்யும். உண்மையான தேசப்பற்று என்பது அதுவே.

இன்னும்கூட பிந்திவிடவில்லை. இதே விரைவுடன் பாபர்கும்மட்டத்தை இடித்தவர்கள் மீதான குற்றவியல் வழக்கும் நடைபெற்று தீர்ப்பு வரட்டும். அவர்கள் தண்டிக்கப்படட்டும். பல்வேறு சட்ட கழைக்கூத்துக்கள் வழியாக ஆறப்போடப்பட்டிருக்கும் அந்த வழக்கு உயிர்பெறட்டும்

இன்று, வேறுவழியில்லாமல் இஸ்லாமியர் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஏனென்றால் அரசியலில் அவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். இந்த இடதுசாரி – தாராளவாதிகள் வெறும் மண்பொம்மைகள் என தெரிந்துகொண்டுவிட்டார்கள். இவர்களை நம்பி மையச்சமூகத்தால் விலக்கப்படும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க, இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்று காட்ட இந்த குற்றவியல்வழக்கு ஒரு நல்ல வாய்ப்பு

***

முந்தைய கட்டுரைமாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை