பொன்னீலன் 80- விழா

 

இன்று காலை முதல் பொன்னீலன் 80 விழா. சமீபத்தில் நாகர்கோயிலில் நடந்தவற்றில் மிகப்பெரிய விழா இதுவே.கோவை, சென்னை, மதுரை என பல அயலூர்களிலிருந்தும் வாசகர்களும் எழுத்தாளர்களும் திரண்டு வந்திருந்தனர். ஐநூறுக்கும் மேல் பங்கேற்பாளர்கள். கணிசமான எழுத்தாளர் முகங்கள்

 

பொன்னீலனின் ஊர்க்காரர்கள் காலையிலேயே வந்திருந்து பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்திவிட்டுச் சென்றபின் அரங்கில் பெரும்பாலானவர்கள் இலக்கியவாசகர்களும் எழுத்தாளர்களும்தான். ஆர்.நல்லக்கண்ணு விழாவை தொடங்கிவைத்து உரையாற்றினார். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். சு.வேணுகோபால், ஸ்ரீனிவாசன் நடராஜன், விஜயா வேலாயுதம், அமிர்தம் சூரியா, பாரதி கிருஷ்ணகுமார், ‘விசாரணை’ சந்திரகுமார் , பவா செல்லத்துரை, ஷைலஜா, ஜெயஸ்ரீ, மலையாள எழுத்தாளர் மனோஜ் குறூர், என எழுத்தாளர்கள் மேடையில் தோன்றிப் பேசிக்கொண்டே இருந்தனர்.

பெரும்பாலானவர்களுக்கு பத்துநிமிடமே பேசமுடிந்தது. ஆனால் பொன்னீலனின் வேறுபட்ட முகங்கள் வெளிப்பட்ட பேச்சுக்கள். சுருக்கமான உரைகளாக அமைந்தமையாலேயே நிகழ்ச்சி ஒருவகையில் சுவாரசியமாக அமைந்தது என நினைக்கிறேன். பொன்னீலன் ஒரு இலக்கியவாதியாக அல்லாமல் தோழராகவும் அண்ணாச்சியாகவும் அனைவரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது

 

மாலைவரை கூட்டம். மாலையில் நான் பதினைந்துநிமிடம் உரையாற்றி விழாவை நிறைவுசெய்தேன். பொன்னீலனின் படைப்புக்களை வாசிப்பதற்கான ஒரு விமர்சன வரைவை முன்வைத்தேன். களைப்பாக உணர்ந்தாலும் நிறைவளித்த கூட்டம்

ராம் தங்கம்

முன்னோடியான ஓர் எழுத்தாளருக்கு இத்தனைபெரிய நிகழ்ச்சியை சிரமேற்கொண்டு ஒருங்கிணைத்த ராம் தங்கம் பாராட்டுக்குரியவர். அவருடன் இணைந்திருந்த சே.ராகுல் போன்ற இளைஞர்களின் உழைப்பும் நன்றிக்குரியது. தமிழகத்தில் இன்று வேறெந்த பகுதியிலாவது அவர்களின் மண்ணின் முக்கியமான படைப்பாளி ஒருவருக்கு இப்படி ஒருவிழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. வந்திருந்த வாசகர்சுற்றமும் ஒருவகையில் நன்றிக்குரியவர்களே.

முந்தைய கட்டுரைஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்
அடுத்த கட்டுரைசமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை