சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்

திருவள்ளுவர் எந்த மதத்தவர்? பொதுவாக எந்த நெறிநூலையும் இன்னொரு நெறிநூலுடன் ஒப்பிடலாம். உள்ளடக்கம் பெரும்பாலும் ஒத்துப்போகும்.  ஆகவே உள்ளடக்கம் வைத்து நூல் எங்களுடையது என விவாதிப்பதில் பொருளில்லை

திருக்குறள் ஒரு சமணரால் எழுதப்பட்ட நூல் என கருதப்படுவதற்கான காரணங்கள் சில வலுவானவை

  1. அது எழுதப்பட்ட காலம் களப்பிரர்காலம். அது சமணம் மேலோங்கியிருந்த காலகட்டம்
  2. அது பதினெண்கீழ்க்கணக்கின் முதன்மைநூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் அனைத்துமே சமண பௌத்த நூல்கள்
  3. அதில் திட்டவட்டமான தெய்வம் குறிப்பிடப்படவில்லை. திட்டவட்டமாக தெய்வத்தை குறிப்பிடாமல் இறைவாழ்த்து எழுதும் வழக்கம் இந்துக்களுக்கு இல்லை. ஆனால் சமணம் அப்போதே தத்துவார்த்தமான இறைவணக்கம் என்னும் கருத்தைச் சென்றடைந்துவிட்டிருந்தது.
  4. குறளின் முதல் பாடலே ஆதிநாதரைக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான இறைக்குறிப்புகள் பரம்பொருளை குறிப்பிடவில்லை, மானுடவடிவிலெழுந்த அருகர்களையே குறிப்பிடுவனவாக அமைகின்றன.
  5. அந்த வரலாற்றுக்காலகட்டத்தில் சமணர்கள் தங்கள் கல்விப்பணிக்காக இலக்கணநூல்களையும் நெறிநூல்களையும் தொகைநூல்களையும் உருவாக்கினர். குறள் அதையே குறிக்கிறது.
  6. தென்னகத்துச் சமணமெய்ஞானியரில் முதல்வரான ஆச்சாரிய குந்துகுந்தரின் மாணவர் என திருவள்ளுவர்          சமணர்களால் குறிப்பிடப்படுகிறார். திருவள்ளுவரையே குந்துகுந்தர் என்பவர்களும் உண்டு. அது அக்கால மரபு, ஆசிரியர் பெயரையே மாணவர்களும் வழங்கி ஒற்றைக் குருகுலமாக அறியப்படுவது
  1. சமணர்களே தொடர்ச்சியாக திருவள்ளுவரை தங்கள் மெய்யியலாளர் என்று முன்வைக்கிறார்கள். தெய்வமென வழிபடுகிறார்கள்.பௌத்த- சமண பின்னணிகொண்ட கந்தப்பரின் இல்லத்தில் அதன் சுவடி பேணப்பட்டுவந்தது. மாறாக இந்துக்களில் பல தரப்பினருக்கு குறள் அறியப்படாத நூலாகவே நெடுங்காலம் இருந்துள்ளது. சில தரப்பினருக்கு அது தவிர்க்கப்படவேண்டிய நூலாகவும் இருந்தது
  1. குறள்பேசும் நெறிகளில் பெரும்பகுதி சமணசூத்திரங்களில் ஏறத்தாழ அதேவடிவில் உள்ளது. குறளாசிரியர் அவற்றை ஒட்டி மேலெழுந்த கவிஞர்.

9.குறள் சமணநூலென்றால் அகப்பொருள் எப்படி வந்தது என்னும் கேள்விக்கான பதில் சமணர் என அறியப்பட்ட திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணியும் அகத்துறைநூலே என்பதுதான்.

  1. குறள் பரிமேலழகர் போன்றவர்களால் வைணவநோக்கில் உரையெழுதப்பட்டுள்ளது. பிற்காலத்தில் கா.சு.பிள்ளை போன்றவர்களால் சைவநூலாக விளக்கப்பட்டது. ஆனால் முதன்மை ஆய்வாளர்கள் பெரும்பாலானவர்கள் குறள் சமணநூல் என்று கருதுகிறார்கள்.

ஆனால் குறள் ஒரு ‘சமணநூல்’அல்ல. நாலடியார் போன்ற நூல்களைப்போலவே அதுவும் சமணரால் எழுதப்பட்ட பொதுவான நெறிநூல். அனைத்து தரப்பினருக்கும் உரியது

இந்தியப்பெருநிலம் மிகமிக அகன்றது. மக்கள்நெரிசல் மிக்கது. பல்லாயிரம் பழங்குடிகள் செறிந்து வாழ்ந்தது. இது ஆதிக்கத்தால் ஒருங்கிணைக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பும் சென்றகாலத்தில் இல்லை. ஏனென்றால் இதன் நிலவிரிவின் இயல்பு அத்தகையது. ஆகவே இது நெறிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது. [விரிவாக கோஸாம்பி போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்]

இந்நோக்குடன் இங்கே தொடர்ச்சியாக நெறிநூல்கள் உருவாக்கப்பட்டன. அரசநெறிகள், குடிமைநெறிகள், மதநெறிகள். இந்த நெறிநூல்கள் உண்மையில் ஏற்கனவே பல்வேறு மக்கள்கூட்டங்களால் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட நெறிகளின் தொகுப்பாக உருவானவைதான். எவரும் புதிதாக ஒரு நெறியை உருவாக்கி பிறர் மேல் சுமத்த இயலாது

இவ்வாறு நெறிகளை ஒருங்கிணைக்க, ஒத்திசைவுகொள்ளச் செய்ய தொடர்ச்சியான நெறிவிவாதம் தேவையாகியது. ஆகவே நெறிநூல்கள் உருவாயின. அவற்றுக்கு உரைநூல்களும் வழிநூல்களும் உருவாயின. இந்தச் செயல்பாடு தொடர்ச்சியாக மூவாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றது. மகாபாரதத்தின் பெரும்பகுதி வெவ்வேறுவகையான நெறிநூல்கள்தான். அந்த  நீள்வரிசையில் கடைசியில் வந்த ஆசாரக்கோவை வரை நெறிநூல்கள் பல்லாயிரம் உள்ளன

இந்த நெறிநூல்கள் உருவாக்கும் ஒரு மொத்தச் சொல்லாடலை ஒரு இந்திய ஞானப்பரப்பு என்று சொல்லலாம். குறள் அதிலிருந்தே உருவாகிறது. ஒரு நெறிநூல் ஒருவரின் சிந்தனையில் உருவாக முடியாது. அதற்கு மிக நீண்ட ஒரு தத்துவ- வரலாற்றுப் பின்புலம் இருக்கும். அதற்கு சிந்தனையாளர்களின் ஒரு பின்வரிசைநீட்சி இருக்கும். அது ஒரு விவாதத்தின் பகுதியாகவே இருக்கும்

இது எல்லா சமண- பௌத்த நூல்களுக்கும் பொருந்தும். நெறிநூல்கள் மட்டுமல்ல தத்துவநூல்களுக்கும்கூட,. அவை அவற்றுக்கு முன்பிருந்த இந்துமெய்யியல்மரபின் நீட்சியாகவும் அவற்றின் எதிர்தரப்பாகவும் உருவாகி வந்தவை. உதாரணமாக பௌத்த நியாயநூல்கள் அனைத்துக்கும் முதல்நூல் கௌதமரின் நியாயசூத்திரங்கள்தான். பௌத்த ஜாதகக் கதைகள் அனைத்தும் இந்து புராணங்களின் மறு ஆக்கங்கள்தான்.

அதேபோல அத்தனை சமணமதநூல்களும் ஒட்டுமொத்தமாக இந்துமெய்யியல் உருவாக்கிய கருத்துக் களத்தில் இருந்தே உருவாகின்றன. இந்து தொன்மவியலில் இருந்தே படிமங்களை எடுத்துக்கொள்கின்றன. சமணநெறிநூல்கள் அனைத்துமே இந்துமெய்யியலின் தொடர்ச்சியாகவே எழுகின்றன. சற்று விலக்கமும் மறுப்பும் கொள்ளவும் செய்கின்றன. இப்படித்தான் சிந்தனைகள் செயல்பட முடியும். உலகமெங்கும் அப்படித்தான்

ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இந்தியா முழுக்க ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் சமணர்களின் நெறிநூல்கள் உருவாயின. அவை அனைத்துக்கும் குறளுடன் பொதுத்தன்மை உண்டு. அதற்கு முன்னும்பின்னும் இந்துமெய்யியல் மரபிலிருந்து உருவான நெறிநூல்கள் பல உண்டு. அவற்றுக்கும் குறளுக்கும் பொதுத்தன்மை உண்டு

குறள் அதன் ‘பக்தர்களால்’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது. அது வேறெங்கும் இல்லாதது, இணையே இல்லாதது, அதில் பேசப்பட்டது வேறெங்கும் இல்லை, உலகிலேயே அதைப்போல வேறில்லை என்றெல்லாம் மிகையுணர்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. எல்லா மதநூல்களைப்பற்றியும் இப்படிப்பட்ட ஆராயாத மிகைப்பெருமிதம் உண்டு.

உண்மையில் அரசியல்நோக்குடன் இங்கே இஸ்லாமியரும் கிறித்தவரும் மேலேசொன்ன பெருமிதவாதிகளுடன் சேர்ந்து குறளை கொண்டாடுகிறார்கள். அவர்களிடம் அவர்களின் மூலநூலுடன் ஒப்பிட குறளின் இடமென்ன என்று கேட்டால்போதும் பம்ம ஆரம்பித்துவிடுவார்கள். மதங்களுக்கு அவர்களின் மூலநூல் மட்டுமே ஒரே நூல், மற்றவை எல்லாமே  தொழுதுபின்செல்பவைதான்

ஏன் சைவர்களுக்கே சைவத்திருமறைகள் அளவுக்கு குறள் முதன்மையானது அல்ல. வைணவர்களுக்கு திராவிடவேதமான நாலாயிரம் அளவுக்கு குறள் முதன்மையானது அல்ல. இருந்தும் இந்தக் கூட்டுப்பாவலா அரசியலுக்காக இங்கே செய்யப்படுகிறது.

குறள் இந்தியாவின் முதன்மையான நெறிநூல்களில் ஒன்று. அதற்கிணையான நெறிநூல்கள் உலகின் தொன்மையான பண்பாடுகள் அனைத்திலும் உள்ளன. இந்தியாவின் இந்து, சமண, பௌத்த மரபுகளில் குறளை உருவாக்கிய முதல்நூல்கள் பல உள்ளன.

குறளின் தனிச்சிறப்பு அதன் கவித்துவம். அது தன் நோக்கை வட்டாரம், இனம்,மொழி சார்ந்து வகுத்துக்கொள்ளாமை. அதன் அடிப்படையாக திகழும் கருணை. பேரருளானன் ஒருவனால் எழுதப்பட்ட நெறிநூல் அது. அதன்பொருட்டு நாம் பெருமைப்படலாம். அதன்மேல் இல்லாத பெருமையை எல்லாம் ஏற்றிச்சொல்லி அதை மாற்றார்முன் இளிவரலுக்கு உள்ளாக்கவேண்டாம்

பதினாறாம் நூற்றாண்டு முதல்  குறளை வெவ்வேறு தரப்பினர் உரிமைகொண்டாட தொடங்கினர். குறளுக்கு சைவமுகம் அளிக்கும் முயற்சிகள் தமிழ்நாவலர்சரிதை முதலே நிகழ்கின்றன. ஜமீன்தாரிணி உரை [திருக்குறள் தீபாலங்காரம்] அதில் ஒரு நவீனத் தொடக்கம். திருக்குறள் ஒரு கிறித்தவநூல் என நிறுவ தொடர்முயற்சிகள் நடைபெற்றன. அதன்பொருட்டு நிகழ்ந்த கருத்தரங்குகளில் இப்போது பொங்கிக்கூச்சலிடும் திராவிட இயக்கத்தின் பெருந்தலைகள் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள்

இருபதாம்நூற்றாண்டில் நவீன ஜனநாயகம் உருவானபோது, மதச்சார்பின்மை ஒரு விழுமியமாக முன்வைக்கப்பட்டபோது, மதச்சார்பற்ற அறநூல்களுக்கான தேடல் தொடங்கியது. அவ்வாறுதான் குறள் முன்னிலைப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான நவீன உரைகள் வழியாகவே குறள் பொதுமறையாக நிலைநாட்டப்பட்டது

ஆனால் குறளை அப்படி முழுமையாக ‘மதநீக்கம்’ செய்யமுடியாது. குறளாசிரியரின் மெய்மைத்தரிசனம் ஊழ்தான். ஊழ், மறுபிறப்பு போன்று அவர் சொல்லும் கருத்துக்கள் இந்திய மதங்களுக்கு மட்டுமே ஏற்புடையவை [நான் அவற்றை முழுமையாக மெய்யென ஏற்பவன்]. ஆகவே சமகாலப் பொருத்தம் கொண்ட குறிப்பிட்ட குறள்கள் வழியாகவே குறள் ஒரு நவீன பொதுஅறத்தைச் சொல்லும் நூல் என நிலைநிறுத்தப்படுகிறது.

ஆனால் ஒரு நவீனச்சூழலில் அவ்வாறு குறள் ஒரு பொது அறநூலாக நிலைநிறுத்தப்படுவது நன்று என்றே நான் நினைக்கிறேன். அதை மீண்டும் மதநூலாக கொண்டுசெல்லவேண்டியதில்லை. சைவ வைணவநூலாக அல்ல, சமணரால் எழுதப்பட்ட நூலாகக் கூட இன்று விளக்கவேண்டியதில்லை. அது சமணரால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களுக்குரியதாகவே நீடிக்கட்டும்.

ஒருசாரார் குறளை தங்கள் மதநூலாகக் கொண்டால் அது அவர்களின் நம்பிக்கை. அதனுடன் விவாதிப்பதில் பொருளில்லை. பொதுவாசகர்களுக்கு இன்றைய நவீன வாழ்க்கைக்குரிய பொதுவான அறங்களை கவிதையினூடாக வெளிப்படுத்தும் நூலாகவே நீடிக்கட்டும். அதுவே குறள் மீதான இன்றைய சிறந்த வாசிப்பு. அவ்வாசிப்பை வாசித்துவாசித்து நிலைநாட்டுவதே செய்யவேண்டியது.

சட்டநூல்களை சொல்மாறாமல் பொருள்மாறாமல் வாசிக்கவேண்டும். ஆனால் சட்டநூல்கள் காலம் கடந்தவை அல்ல. நெறிநூல்களை மாறாவிழுமியங்கள், மாறும் நெறிமுறைகள் என பிரித்து படிக்கவேண்டும். விழுமியங்களைக் கொள்ளவேண்டும்  காலத்துக்கு உகக்காத நெறிகளை விலக்கியும் விடவேண்டும். இதுவே இந்தியாவின் தொல்மரபும்கூட

ஆனால் குறள் கவிதைநூல். நெறிகளையும் கவிதையாகச் சொல்வது. கவிதை அதை வாசிப்பவனில் வளர்ச்சிகொள்வது, முழுமை அடைவது. குறள்போன்ற நூல்கள் காலந்தோறும் வளரும் வாசிப்பு கொண்டவை. குறள்மீதான இன்றைய சிறந்த வாசிப்பு மதச்சார்பற்ற வாசிப்பே. குறள் எப்படி எந்த மரபிலிருந்து எழுவது என்பது அறிஞர்கள், ஆய்வாளர்களுக்கான கேள்வி. எப்படி அதை வாசிப்பது என்பதே இன்றைய கேள்வி. நான் அதை பொதுமறையாகவே வாசிப்பேன்.

 

முந்தைய கட்டுரைபொன்னீலன் 80 விழா உரை
அடுத்த கட்டுரைஇங்கிருந்தவர்கள் – கடிதம்