சமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை

 

சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்லுங்கள் என்ற அழுத்தம்தான் இன்றைய எழுத்தாளர்களின் மிகப்பெரிய சுமை. எழுத்தாளர்கள் தங்களுக்கே உரிய பிரச்சினைகளும் அதிலிருந்து தனித்தன்மைகொண்ட கேள்விகளும் உடையவர்கள். எழுத்தினூடாக அதற்கான விடைகளை தேடுபவர்கள். அந்த தனித்தன்மை காரணமாகத்தான் அவர்கள் வாசிக்கப்படுகிறார்கள்.

ஆனால் சமகாலச் சூழல் அவர்களிடம் எப்போதும் பொதுவான பிரச்சினைகளைப் பேசு, பொதுவான பதில்களை கூறு என அழுத்தமளிக்கிறது. அந்த அழுத்தத்துக்குப் பணிந்து பொதுப்பிரச்ச்னைகளில் பொதுவான கருத்துக்களைக் கூறும் எழுத்தாளர்களை அதே சமகாலச் சூழல் பொருட்படுத்தாமல் தூக்கி வீசிவிட்டு கடந்துசென்றுவிடும்.

ஏனென்றால் அப்படி பொதுவான பிரச்சினைகளில் பொதுவான கருத்துக்களைச் சொல்லத்தான் ஆயிரம்பேர் இருக்கிறார்களே, எழுத்தாளரின் தேவை என்ன? அவனுடைய தனித்தன்மையால்தானே அவன் கவனிக்கப்படவேண்டும்?

சமகாலப்பிரச்சினை என்பது என்ன? ஊடகங்களால் முன்வைக்கப்படுவது. அரசியல்வாதிகளால் அரசியலாக்கப்படுவது. ஆகவே அத்தனைபேராலும் கொஞ்சநாளைக்குப் பேசப்படுவது. அடுத்தபிரச்சினையின்போது மறக்கப்படுவது.

பொதுவாக அதன் எல்லா தளங்களும் ஊடகங்களால், சமூக ஊடகங்களால் பேசப்பட்டிருக்கும். அவை இரண்டு எதிரெதிர் தரப்புகளாக இருக்கும். ஒன்று அதிகாரத்தரப்பு இன்னொன்று எதிர்த்தரப்பு. இரண்டில் ஒரு நிலைபாட்டை எடுக்கவேண்டும். எதிர்தரப்பின் வசைகளுக்கு ஆளாகவேண்டும். இரண்டுமற்ற ஒரு தரப்பை எடுத்தால் இரண்டுதரப்பின் வசைகளையும் சந்திக்கவேண்டும்.

ஓர் எழுத்தாளன் ஊடகங்களால் பேசப்படாத ஒன்றைப்பற்றி, அரசியல்வாதிகளால் தொடப்படாத ஒன்றைப்பற்றி பேசக்கூடாதா? புறப்பிரச்சினைகளுக்குப் பதிலாக அகப்பிரச்சினைகளைப் பற்றிப் பேசக்கூடாதா? வாழ்நாள் முழுக்க ஒரு குறிப்பிட்டபிரச்சினையை மட்டும் அவன் கவனப்படுத்திக்கொண்டே இருக்கக்கூடாதா? அப்படித்தானே உலகமெங்கும் மகத்தான எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்?

அதை இங்கே தமிழ்ச்சூழலில் கேட்கமுடியாது. இங்கே எல்லாமே அரசியல்பிரச்சினைகள்தான். அரசியல்பிரச்சினைகள் அல்லாத எதுவுமே பிரச்சினை அல்ல. அரசியல்பிரச்சினையும் நேரடியாக கறுப்பு வெளுப்புதான். நடுப்பகுதியே இல்லை. சிக்கலான கேள்விகளுக்கே இடமில்லை. உறுதியான பதில்களும் தீர்வுகளும்தான் அனைவரிடமும் உள்ளன.

இந்த ‘உறுதியான பதில்காரர்களுக்கு ‘ அபாரமான நம்பிக்கை. அந்தப்பதிலை அப்படியே சொல்லாதவர்கள் எல்லாரும் மடையர்கள் அல்லது அயோக்கியர்களாகத்தானே இருக்கமுடியும்? அந்த பதிலுடன் முரண்படுபவர்களை வசைபாடுவதுதானே கருத்துச் செயல்பாடு.

இவர்கள் அந்த உறுதியான பதிலுக்கு எப்படிச் சென்று சேர்ந்தார்கள்? அது பிறப்பாலேயே இங்கே முடிவாகிவிடுகிறது. மதம்,சாதி, மொழி சார்ந்த பற்றுகள் மட்டும்தான் அதற்கான அடிப்படை. எந்தக் கல்வியும் தேவையில்லை. எந்த ஆதாரமும் தேவையில்லை.

இந்த விஷச்சூழலை அஞ்சி பெரும்பாலான எழுத்தாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அமைதியாக இருந்தால் கொஞ்சம் வசைகிடைக்கும், ஆனால் அதற்கும் அமைதியாக இருந்தால் வசையும் மறைந்துவிடும். அது ஒரு நல்ல உத்திதான். உண்மையில் இந்த கூச்சலிடும் கூட்டத்திலிருந்து தன் படைப்புக்களை பாதுகாத்துக்கொள்ள எழுத்தாளனுக்கு வேறுவழியில்லை

எனக்கு அந்தப் பாதுகாப்பு தேவையில்லை என்பதை நான் முப்பதாண்டுகளுக்கு முன்னரே முடிவுசெய்துவிட்டேன். என் படைப்புக்கள், என் எழுத்தாளுமை திரிக்கப்படும் என்றும் அறிவேன். ஆனாலும் என்னை ஒரு பண்பாட்டுச்செயல்பாட்டாளனாக எண்ணிக்கொள்வதனால் நான் ஏதேனும் சொல்வதற்கிருக்கும் தளங்களில் கருத்து சொல்கிறேன்

ஆனால் அங்கும் பிரச்சினை. நான் சொல்லவிருக்கும் கருத்து எப்போதுமே கறுப்புவெள்ளை அல்ல. ஊடுபாவுகளை, முரணியக்கங்களையே சொல்கிறேன். ஏற்பும்மறுப்புமாகவே நான் அனைத்தையும் அணுகுகிறேன். அதைச் சொல்ல இங்கே இடமில்லை. அதைச் சொல்லி வருவதற்குள் விஷயங்கள் கடந்துபோய்விட்டிருக்கும்

உதாரணமாக, திருக்குறள் இந்து நூலா என்ற விவாதம். அதைப்பற்றிய கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. எழுதலாமா என எண்ணுவதற்குள் ராமஜன்மபூமி தீர்ப்பு விவகாரம். அதை என்ன ஏது என்று பார்ப்பதற்குள் ஐஐடியில் தற்கொலை சார்ந்த பரபரப்பு. இதன் செய்திகளை புரட்டிப்பார்ப்பதற்குள் அடுத்த பரபரப்பு வந்துவிடும். மறந்துவிட்டேன், நடுவே மூடாத குழாய்க்குள் குழந்தை விழுந்த கொந்தளிப்பு.

சமூக ஊடகங்கள் “இப்போது இது மட்டுமே, நேற்றும் நாளையும் இல்லை ” என்ற அடிப்படையில் இயங்குகின்றன. ஒவ்வொன்றையும் ஒட்டி புரட்சிப்புத்திரனாக ’அம்பேத்கப்பெரியார் சீடன், கருணாநிதிசீமான் தம்பி’ என ஒரு படம்காட்டினால் ஒரு தரப்பாயிற்று. அடுத்த சோலிக்குப்போகலாம். அல்லது ‘இந்துதேசியம்’ சூடி மோடி காட்டவேண்டும்.

இன்றைக்கு நான் ‘திருக்குறள் பற்றி என்ன சொல்றேன்னா’ என ஆரம்பித்தால் ‘அடப்போய்யா, அதையெல்லாம் பேசி முடிச்சாச்சு’ என்பார்கள். ‘என்ன பேசினீர்கள்? என்ன முடிவு?” என்றால் ‘அதெல்லாம் அவ்வளவுதான்’ என்று பதில். இது அறிவாடலே அல்ல. ஒரு வாய்ப்பந்தல். ஒரு வகை கூட்டுநடிப்பு.

ஒரு சூழலில் எல்லாருமே மிகையாக நடித்தால் என்னதான் பேசுவது? கண்ணீர் மல்குகிறார்கள். நெஞ்சிலறைந்து கூவுகிறார்கள். அத்தனை பேரும் லெனின்கள், சேகுவேராக்கள். அத்தனைபேரும் அடுத்தகணம் தீக்குளிக்கச் சாத்தியமானவர்கள். எதைப்பேசினாலும் ‘அடேய் பாதகா!” என கொஞ்சம்பேர் கிளம்புகிறார்கள். ஒரு பெரிய கிறுக்கு உலகம்

அதிலிருந்து தப்ப ஒரே வழி கொஞ்சம் பிந்தியே செல்வதுதான். சொல்லப்போனால் நாளிதழ்களை ஒருவாரம் கழித்துப் படிப்பது நல்லது. எல்லாமே அதன் மெய்யான அளவுக்கு சுருங்கி கையாளும்படி இயல்பாக ஆகிவிட்டிருக்கும். சூப்பர்ஃபாஸ்ட் பேருந்துகள் ஓடும் சாலையில் ஒருமுறை ஓரமாக ஒரு ஆமை சென்றுகொண்டிருப்பதைக் கண்டேன். இன்று சிந்திப்பதென்றால் அத்தனை மெல்லத்தான் சென்றாகவேண்டும் என தோன்றியது.

ஆகவே போதுமான அளவுக்குப் பிந்தி இக்குறிப்பு. சமகாலப்பிரச்சினைகள். திருவள்ளுவர் விவாதத்தில் நான் சொல்ல நினைப்பது என்ன? ராமஜன்மபூமி தீர்ப்பு பற்றி என்ன சொல்வேன்?

 

[மேலும்]