திராவிட வேதம்

உயர்திரு ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நண்பர்களாகிய நாங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும்,பிரதிவாதி பயங்கரம், ஸ்ரீ. உ. வே. அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின், திவ்விய ப்ரபந்த உரையையும் இணையத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த தளமானது www.dravidaveda.org என்ற முகவரியில் இன்று முதல் அதிகாரபூர்வமாக செயல் படத் துவங்குகிறது.

இந்த தளத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம். முதல் நோக்கம் , உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவது தான். இரண்டாவது, இது நல்ல முயற்சி என்று நீங்கள் கருதினால் இதை உங்களுடைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

இது யாரிடமும் எந்த நன்கொடையும் பெறப்படாமல் நண்பர்களின் உழைப்பு மற்றும் ஒத்துழைப்பு இவற்றில் மட்டுமே உருவான இணையதளம். எதிர் காலத்திலும் நன்கொடை பெறும் எண்ணம் எங்கள் குழுவினருக்கு இல்லை. வர்த்தக நோக்கமற்ற எங்களுடைய முயற்ச்சியை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இணையதளத்தை பார்வையிட வரும் நண்பர்கள் இந்த தளம் மேலும் வளர ஆலோசனைகள் சொல்லலாம். பாடல்கள், பதவுரை, தெளிவுரைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பாடல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு பிழைகளைச் சுட்டிக் காட்டவும். தொடர்புக்கு

[email protected]

மிக்க நன்றி!
திராவிட வேதா தள நிர்வாகிகள்

அன்புள்ள திராவிட வேத தள நிர்வாகிகளுக்கு,

உங்கள் தளத்தை பார்த்தேன். மிக முக்கியமான அரிய முயற்சி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நெடுங்காலம் இந்த உற்சாகம் நீடிக்கவேண்டும், இது ஒரு பெரிய செயலாக வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செய்யவேண்டியவை பல உள்ளன. கூடவே ஒலி வடிவமும் வந்தால் மேலும் நல்லது. பிரபந்தம் அதன் மொழியழகு காரணமாகவே செவிநுகர் கனி

அதன்பின் உரைகள். வைணவ உரைகள் அனைத்தையுமே இணையத்தில் ஏற்றுவது ஒரு பெரும் பணி. ஒரு கோயில் கட்டுவது போன்றது. இன்று சிலரேனும் முழுமூச்சுடன் செய்தாகவேண்டியது

வைணவத்தின் மணிப்பிரவாளச் சொற்களுக்கு ஓர் அகராதி உருவாக்கினால் மிக நல்லது. சம்ஸ்கிருதச் சொற்கள் பல கவித்துவ உட்குறிப்புகளுடன் தனிக்கலைச்சொற்களாக ஆக்கப்பட்டுள்ளன வைணவ உரைகளில்

இவற்றுடன் சு.வேங்கடராமன், இந்திரா பார்த்தசாரதி, அ.அ.மணவாளன் போன்றவர்கள் எழுதிய நவீன வைணவ ஆய்வுநூல்களையும் அனுமதி பெற்று இணையத்தில் கிடைக்கச்செய்யலாம்.

ஒரு பேராலயத்தின் வாஸ்துமண்டலம் மட்டுமே உருவாக்கியிருக்கிறீர்கள். கோபுரங்கள் எழட்டும்

இவவ்கை விஷயங்களை பேசுவதற்கு கையாளப்படும் மொழி பற்றி எனக்கு ஒரு விமர்சனம் உண்டு. உங்கள் இணையதளத்திலும் அந்த மொழி உள்ளது. இது கதாகாலட்சேபம் மற்றும் மதபிரவசனங்களில் இருந்து உருவான மொழி. பரப்பி, நெகிழ்வாக்கிச் சொல்வது. சம்பிரதாயமானது. நாமாவளிகளும் செயற்கையான நெகிழ்ச்சிகளும் தேய்வழக்குகளும் நிறைந்தது

இந்தச் சொல்லாட்சி இளைஞர்களை விலக்கும். ஒரு சலித்துப்போன பழைமை உணர்ச்சியை மட்டுமே அளிக்கும். ஆகவெ இன்று வைணவத்தின் உணர்ச்சிகரத்தை, தத்துவநுண்மையை, அழகியலை வெளிப்படுத்தும் கூர்மை கொண்ட நவீன மொழி தேவையாகிறது

இதற்கு நேர்மாறாக சிலர் ஜாலியாக எழுதுகிறோம், ‘கடைக்கோடிக்கும் புரிய வைக்கிறோம்’ என்ற பாவனையில் அரட்டை மொழிக்கு வருகிறார்கள். இது இவ்விஷயத்தின் தீவிரத்தன்மையை இல்லாமலாக்குகிறது. இது மிகப்பெரிய பிழை

ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமையான நேரடி நடைதான் தேவை. சிறிய சொற்றொடர்கள். தேய்வழக்குகளை தவிர்த்தல். சம்பிரதாயமான சொற்களை தவிர்த்தல். செய்தித்தாளின் நடையேகூட போதுமானது

அதை கவனத்தில்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்

வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறம், சோற்றுக்கணக்கு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிடவேதம்-கடிதம்