ஆ.சிவசுப்ரமணியன் விக்கிப்பீடியா

 

ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இயல்பிரிவு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் ஆ.சிவசுப்ரமணியன். ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை

 

1984ல் சுந்தர ராமசாமி ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய அடிமை முறையும் தமிழகமும் என்னும் நூலை எனக்கு அறிமுகம் செய்தார். நான் அப்போது பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ஜாதியமைப்பும் கேரளவரலாறும் என்னும் நூலை ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன் [பின்னாளில் அதைப்பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை காலச்சுவடு இதழில் எழுதினேன்] மக்கள் வரலாற்றை எழுதும் இருமுயற்சிகள் ஒன்றோடொன்று இணைவதை வியப்புடன் அறிந்தேன். அதன்பின் அவருடைய நூல்களில் ஆர்வம் ஏற்பட்டது.

 

ஆ.சிவசுப்ரமணியனின் வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம்( (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) ஆகிய இருநூல்களும் தமிழ்ச்சூழலில் தொழிலாளர் இயக்கம் உருவாகிவந்த சித்திரத்தை அளிப்பவை. 1989 ல் இந்நூல்களை வாசிக்கையில் நான் திருவிகவின் நினைவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்நூலின் இடைவெளிகளை நிரப்பும் நூல்களாக இவை அமைந்தன

 

ஆ.சிவசுப்ரமணியன் அவர்களின் கிறித்தவமும் சாதியும் தமிழ்ச்சூழலில் அலைகளை உருவாக்கிய நூல். இந்தியாவுக்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவம் இங்கே சாதியை ஒழிக்க முயலவில்லை, இங்கிருந்த சாதியமைப்புடன் சமரசமே செய்துகொண்டது என்று காட்டிய நூல். இங்கிருந்த கிறித்தவ ஆலயங்களில் சாதிகளை பிரித்து அமரச்செய்யும் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன, பல ஆலயங்களில் தலித்துக்கள் உள்ளே விடப்படவே இல்லை  என்பதை சுட்டிக்காட்டியது.

 

பொதுவாக இடதுசாரி வரலாற்றுக் ‘கதையாடல்களுக்கு’ சங்கடமானது இது. ஆகவே அதிகம்பேசப்படவில்லை. ஆ.சிவசுப்ரமணியம் அவருடைய வலதுகம்யூனிஸ்டுக் கட்சிச் சூழலுக்கு வெளியே பொருட்படுத்தப்படாமல் மறையவும் இது காரணமாகியது. ஆனால் ஆய்வாளராக ஆ.சிவசுப்ரமணியம் தன் ஆய்வுமுறைமைக்கே விசுவாசமானவர் என்பதற்கான சான்று இந்நூல்.  தொடர்ந்து வந்த கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் இன்னொரு ஆழ்ந்த பார்வையை முன்வைத்தது

 

ஒரு புனைவெழுத்தாளரை கிளர்ச்சியடையச்செய்யும் செய்திகள் அடங்கியவை ஆ.சிவசுப்ரமணியன் அவர்களின் நூல்கள். கோபுரத் தற்கொலைகள் அவ்வகையில் முக்கியமானது. சுசீந்திரம் ஆலயத்தில் ஒரு நம்பூதிரி எண்ணைக்கொப்பரையில் கைவிடப் பயந்து கோபுரத்தில் ஏறி கீழே பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டார். சுவாதித்திருநாள் மகாராஜா  சுசீந்திரம் கைமுக்கு சடங்கை ரத்துசெய்ய அது காரணமாகியது. அது இளமையில் நானறிந்த கதை. அத்தகைய பல கதைகள் வழியாக கோபுரத்திலிருந்து குதிப்பது எப்படி நீதிக்கான ஒர் அறைகூவலாக ஒரு போராட்டமுறையாக இருந்தது என்று காட்டுகிறார் ஆ.சிவசுப்ரமணியம்

 

அவருடைய நோக்கின் எல்லைகள் என நான் நினைப்பவை எல்லாமே அவர் கொண்டுள்ள ஆய்வுமுறைமையின் எல்லைகளே. அவருடைய ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. அந்த ஆய்வுமுறைக்கு உள்ளடக்கமாக சில நம்பிக்கைகள் உண்டு. அதை ஒருவகை ஐரோப்பியவாதம் எனலாம். அந்த ஐரோப்பியவாதத்துடன் வானமாமலை அவர்களிடமிருந்து ஆ.சிவசுப்ரமணியம் பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைகையில் அவருடைய பார்வை உருவாகிறது. அது ஒருவகை இரும்புக்கருவி போன்றது. அகழ்வதற்கு ஏற்றது, ஆனால் அகழ்கையிலேயே உடைக்கவும் செய்வது

 

ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் பண்பாட்டை பொருளியல்சார்ந்த அடித்தளத்தின் மேற்க்கட்டுமானம் என்று சொல்லும் மார்க்ஸியப் பார்வையையே தானும் கொண்டிருக்கிறார். ஆகவே பண்பாட்டிலிருந்து ஆதிக்கத்தையும் சுரண்டலையும் அதற்கெதிரான எதிர்ப்புகளையும் மட்டுமே கண்டெடுக்கிறார். பண்பாட்டின் நுண்மையான உள்ளியக்கங்களை அவர் காண்பதில்லை. பின்னாளைய மார்க்ஸிய ஆய்வாளர்கள் கண்ட பண்பாட்டு முரணியக்கங்கள்கூட அவர் கண்களுக்குப் படுவதில்லை. அவர் ஒரு செவ்வியல்மார்க்ஸிய நோக்குள்ள ஆய்வாளர் என்று எளிதாக வரையறை செய்துவிடலாம்

 

பண்பாடுசார்ந்த நுண்மையான நோக்கு கொண்டவர்கள் ஆ.சிவசுப்ரமணியன் அவருடைய ஆய்வுகளில் சமூக இயக்கத்தை எளிமைப்படுத்துகிறார் என்று எண்ணக்கூடும். ஆனால் அவர்களுக்கேகூட அரிய தரவுகளையும் அறியப்படாத பக்கங்களையும் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல்கள் அவருடையவை. தமிழகத்தில் வெகுஜனப் புகழ்பெற்றுள்ள பல ஆய்வாளர்கள் எளிய மேடைப்பேச்சுத்தன்மையுடன் ஆதாரங்களோ முறைமையோ இல்லாமல் எழுதுபவர்கள். ஆ.சிவசுப்ரமணியனின் அத்தனை தரவுகளும் நம்பகமானவை, அவருடைய முறைமை புறவயமானது. ஆகவே நம் காலகட்டத்தின் முக்கியமான சமூக – பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர்

 

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்