ஒரு வாசகனின் வழி- சக்திவேல்

அன்பு ஜெயமோகன்,

வாசிப்புக்குள் எப்போது நுழைந்தேன் என்பதை இக்கணம் யோசித்தால், ஏழாம் வகுப்புதான் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு பாபு என்பவர் தமிழாசிரியராக இருந்தார். வகுப்பறையில் பாடம் எடுக்க மாட்டார்; பெரும்பாலும் மரத்தடிகள்தான். திருக்குறளை அவர் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக்கேட்டு மயங்கி இருந்திருக்கிறேன். சில தனிப்பாடல்களை சுவைகுன்றாமல் அவர் பாணியில் சிலாகிப்பார்; அப்பாடல்களில் உள்ள பல சொற்களைச் சுட்டி அதன் அழகை விவரிப்பார். தமிழ்ச்சொற்களின் மீது இன்ம்புரியா காதல் கொண்டிருந்த என்னை, அவர் இன்னும் பித்தனாக்கினார். தமிழ்ப்பாடல்களைச் சொற்களின் பொருட்டு வாசிப்புக்கு வந்தேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாத நாவல்கள் அறிமுகமாகின. ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர் போன்றோரின் நாவல்களை நண்பர்களுக்கிடை யே பரிமாறிக் கொள்வோம். ராஜேஷ்குமாரின் தீவிர வெறியனாக இருந்த காலகட்டம் அது. வீட்டில் அவரின் முதல் க்ரைம் நாவலான நந்தினி 440 வாட்ஸ் துவங்கி விவேக் இருக்க பயமேன் நாவல் வரை நூற்றுக்கணக்கான நாவல்களைச் சேகரித்திருந்தேன். அந்நாவல்கள் எனக்கு அளித்தது கிளுகிளுப்பை மட்டுமே. எனினும், அவற்றை வாசிக்காமல் தவிர்த்ததில்லை. இடையே, தமிழ்ப்பாக்களின் மீதான மோகமும் என்னை ஆட்டிப்படைத்தது. ”செந்தமிழே உயிரே நறுந்தேனே, செயலினை மூச்சினை உனக்களித்தேனே” எனும் பாடலின் வழி பாரதிதாசன் என் ஆதர்சமானார். அவரின் பாடல்களைத் தேடித்தேடி வாசிக்கத் துவங்கினேன். பள்ளி மேடைகளில் பாரதிதாசன் பாடல்களை உரக்கச் சொல்வதையே சொற்பொழிவாகவும் கருதி இருந்த வயது அது. “பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியில் வா” எனும் பாடலைச் சொன்னால் போதும், கைதட்டல் நிச்சயம். அப்போதைய என் மனநிலையை இன்னும் சுலபமாக விளங்கி கொள்ள சீமானின் உரையை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடராசன் என்பவர் எனக்கு தமிழ்வகுப்பு எடுத்தார். தமிழ் இலக்கணத்தைக் கதையைப் போன்றே அவர் கற்பித்தார். வெண்பா அசை, சீர், தளை பிரித்தலை ஒரு விளையாட்டாகவே நான் எதிர்கொண்டேன். குறள் வெண்பா எனும் பாவகையாலேயே அது குறள் எனும் பெயர் பெற்றதை நடராசன் வழியாகவே அறிந்து கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் பா வகைகளில் தெளிந்த எனக்கு வெண்பா, ஆசிரியப்பா எழுதும் ஆர்வம் வந்தது. அக்காலகட்டத்தில் தனித்தமிழ் இதழ்கள் அறிமுகமாகின. தெளிதமிழ், நற்றமிழ் போன்ற இதழ்கள் என் வீட்டுக்கு மாதந்தோறும் வரும். அவ்விதழ்களில் வெண்பாக்களும், ஆசிரியப்பாக்களும் எழுதி இருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது தமிழில் 96 மதிப்பெண்கள் எடுத்தேன். நடராசன் என்னை உச்சிமோந்தார்; கட்டித்தழுவிக் கொண்டார். மாநிலத்தில் முதலாவதாக வரும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டு விட்டாய் என அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது, நான் மதிப்பெண்களுக்காக தமிழைக் கற்கவில்லை என்பது. எனினும், தமிழ் ஏன் என்னை அங்ஙனம் கவர்ந்தது எனப் புரியவே இல்லை.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தமிழ்க்காவியம் எழுதிட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். அச்சமயத்தில்தான், குன்றக்குடி அடிகளார் என் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஆசிரியர் இரா.காளியண்ணன் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரைக் குறித்து எதுவுமே அறிந்திராத நான் “உங்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டேன். தன்னருகே அழைத்து, அவரின் முகவரியைக் கைப்பட எழுதிக் கொடுத்தார்.

அவரின் பல நூல்கள் சமயம் குறித்த எனது பார்வையைத் திடுக்கிட வைத்தன. ஆத்திகனாக இருந்த நான், நாத்திகனாக என்னை அறிவித்துக் கொண்டிருந்த பொழுதில் குன்றக்குடி அடிகளாரின் கட்டுரைகள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின. என்றாலும், பெரியாரின் நையாண்டித்தனமும், கலாய்த்தல்களுமே எனக்கு உவப்பாய் இருந்தன. பெரியாரை மதித்தவர் என்பதற்காகவே அடிகளாரை மதித்திருக்கிறேன் என பிற்பாடு தெரிந்தது. கல்லூரிக்காலம் வரை அடிகளாருடனான கடிதநட்பு தொடர்ந்தது.

இடையிடையே காவியக்கனவு கன்ன்று கொண்டே இருந்தது. அறுசீர் விருத்தத்தில்தான் காவியம் அமையவேண்டும் எனத் தீர்மானித்து நூற்றுக்கணக்கான விருத்தங்களை எழுதிச் சென்றேன். சொற்களைத் தெரிவு செய்து இலக்கண விதிகளை மீறாமல் விருத்தங்களை எழுதுவது விளையாட்டாய்த் தொனித்தது. விடுமுறை நாட்களின் மாலைப்பொழுதுகளில்தான் எழுதத் துவங்குவேன்; இரண்டு மணிநேரங்களுக்கு மேலாய் மல்லுக்கட்டி விருத்தப்பாக்களை உருவாக்கி விடுவேன். இக்காலகட்டத்தில்தான், எனக்கு வரலாற்றுப்புதினங்கள் அறிமுகமாகின.

கோவி.மணிசேகரனின் கோவில்மணி என்று நினைவு. ஒருநாளின் காலையில் ஆரம்பித்து மாலையில் முடித்தேன். அதன் தாக்கத்தில், அவரின் பிற நாவல்களைத் தேடிப் படிக்கத் துவங்கினேன். எல்லோருக்குப் பிடித்த கல்கி ஏனோ என்னை ஈர்க்கவே இல்லை. புதினங்களின் வர்ணனை விவரிப்புகள் கொடுத்த பிரமிப்பில், காவியக்கனவு கலைந்து விட்டது. விருத்தப்பாக்கள் எழுதிய காகிதங்களை அடுப்பு நெருப்பில் போட்டுவிட்டேன். கிளுகிளுப்பு நாவல் வாசிப்பு சலிப்பாகப் பட்டு, புதின வாசிப்பு என்னைத் தொற்றிக் கொண்டது. நெடிய வரலாற்றுப் புதினங்களை வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாலகுமாரன் அறிமுகமானார்.

என் புதின நாவல் வாசிப்பைக் கேள்விக்குள்ளாக்கினார் பாலகுமாரன். அவரின் முன்கதைச்சுருக்கமே முதலில் நான் வாசித்தது. அந்நாவலைக் கொடுத்து பாலகுமாரனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அண்ணன் சக்திவேல்(செந்தில் ஆண்டவர் மெடிக்கல்ஸ்) அவர்கள். ஓராண்டில் பாலகுமார வெறிபிடித்த பித்தனானேன். நூற்றுக்கணக்கான அவரின் நாவல்களைச் சேகரித்து, அவற்றை பலமுறை வாசிக்கவும் செய்தேன். விசித்திரமான மனச்சூழலில் பாலகுமாரன் எனக்கு நெருக்காமான நண்பரைப் போலவே தோன்றினார். ஒருமுறை, அவரைச் சந்திப்பதற்காக சென்னையும் சென்றிருந்தேன். அவர் நாவல்களை வெளியிடும் பொன்.சந்திரசேகரனை(பல்சுவைநாவல் ஆசிரியர்) மட்டுமே சந்திக்க முடிந்தது.

இச்சமயத்தில்தான், ஓஷோ எனக்கு அறிமுகமானார். வாழ்க்கையின் சிடுக்குகளைப் பாலகுமாரன் புலம்பியபடி இருக்க, ஓஷோவோ நித்தியானந்தத்தைப் போதித்தபடி இருந்தார். இரண்டுக்கும் நடுவே நான் ஊசலாடிக் கொண்டிருந்தேன். வாசிப்பு இப்படியாக ஊடாடிக் கொண்டிருந்த நேரத்தில், அசோகமித்திரன் அறிமுகமானார்.

அசோகமித்திரனின் ஒரு சிறுகதையைப் படித்து விட்டு பிதிர் பிடித்தது போல அமர்ந்திருந்த காட்சி, இன்றும் நினைவிருக்கிறது. மிக எளிய கதைதான். ஆனால், அது என் வாசிப்பைத் திடுக்கிட வைத்தது. ஒற்றைத்தன்மையில் வாழ்வை அணுகும் படைப்புகளையே தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு, அசோகமித்திரன் ஒருவித மிரட்சியையே தந்தார். சிலநாட்கள், அவரின் கதை பதற்றத்தோடு என்னைத் தொடர்ந்தது. அப்பதற்றம், அவரின் பிற படைப்புகளைத் தேட வைத்தது. அவரின் பத்னெட்டாவது அட்சக்கோடு பற்றி அவருக்கு அஞ்சலட்டை எழுதவும் செய்தேன். என்ன ஆச்சரியம், தன் கைப்பட அவரும எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்பினார். அசோகமித்திரன் போன்றோரை எனக்கு அறிமுகப்படுத்திய இலக்கியச்சிந்தனைக் குழுவுக்கு இவ்விடத்தில் நன்றி பாராட்டியே ஆக வேண்டும்.

தொடர்ந்து கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஆதவன், மெளனி, நகுலன், நாகராஜன், ப.சிங்காரம், வல்லிக்கண்ணன், சுஜாதா, எம்.வி.வெங்கட் ராம், வெங்கட் சாமிநாதன்,  விந்தன், கரிச்சான் குஞ்சு, சம்பத், நீல.பத்மநாபன், நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், சுந்தர ராமசாமி, திலீப்குமார், சூத்ரதாரி, தேவிபாரதி, வா.மு.கோமு, யுவன் சந்திரசேகர் போன்றோரை வாசிக்கும் சூழல். இங்கு, பல எழுத்தாளர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நவீன இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்த்தனிப்பாடல்களில் துவங்கி நவீன இலக்கியம் வரையிலான என் பயணத்தில் வாசிப்பு கூர்பட்டு வந்திருப்பதைத் தெளிவாகவே உணர்கிறேன். வாசிப்பு கூர்பட்டு வ்ந்திருக்கிறது என்பதைத் தட்டையாகப் புரிந்து கொள்ளும் சூழலில் வாழ்வதால், அதைக் கொஞ்சம் விளக்கி விடுவது சிறப்பு எனக்கருதுகிறேன்.

ஒரு வாசகனின் செளகர்யங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கெனத் தயாராவது பண்டம்; சமூகத்துக்கும் தனக்குமான ஊடாட்டத்தைக் கறாரான மொழியில் வாசகனிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது படைப்பு. படைப்பு என்பது வாசகனின் செளகர்யங்களை அதட்டவும் செய்யலாம்; அலைக்கழிக்கவும் செய்யலாம். அப்படி செய்யாவிடினும், அவனின் செளகர்யங்களைத் திருப்திபடுத்தவென்று தன்னை ஒப்புக்கொடுக்காது.

பண்டங்கள் நிச்சயம் சலிப்பைத் தந்துவிடும்; படைப்புகளோ எப்போதும் சலிப்பைத் தராது. பண்டங்களை மறுவாசிப்பு செய்வது சாத்தியமற்றது; படைப்புகளை மறுவாசிப்பு செய்யாமல் இருக்க முடியாது. பண்டங்களின் வாழ்நாள் மிகக்குறைவு அல்லது அதற்கு காலாவதி நாள் உண்டு. படைப்புகளுக்கு நிந்தரத்தன்மை உண்டு. இராமாயணமும், மகாபாரதமும் படைப்புகள் என்பதாலேயே இன்றுவரை நிலவுகின்றன என்பது என் தீர்மானம். அவற்றை அரசியல்பிரதிகளாக்கும் கூத்துகளில் இருந்து விடுபட்டு, அவற்றை அணுகும் வாசகனுக்கு அவை தரும் வாசிப்பின்பம்.. சொல்ல இயலாதது.

சமீபத்தில், கம்பராமாயண வாசிப்புக்கான வாய்ப்பு கிட்டியது. பாடலைப் படித்துவிட்டு அதை அசைபோடுதல் வழக்கம். கும்பகர்ணனின் வாய்சொல்லாக வரும் “நீர்க்கோல வாழ்வை நச்சி” எனும் பதத்தில் திகைத்துப் போனேன்(வெண்முரசு வரிசையில் ஒரு நாவலுக்கு நீர்க்கோலம் என்பது தலைப்பு). ஒருநாள் முழுக்க அச்சொல் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. சொற்களின் காதலனான எனக்கு, கம்பராமாயணம் நல்ல வேட்டைதான் எனக் கருதிய சமயத்தில், மற்றுமொரு வியப்பும் என்னை அடைந்தது. அவ்வியப்பு, வால்மீகி மற்றும் கம்பரின் இராமாயணப் பிரதிகள் பற்றிய கட்டுரை ஒன்று.

வால்மீகியின் ‘பண்டத்’ தருணங்களை, கம்பன் தன் ‘படைப்பு’ கணங்களால் மீளுருவாக்கிய காட்சியாகவே அக்கட்டுரையைக் கண்டேன். இப்படிச் சொல்வதால், வால்மீகி ராமாயணத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன் எனக்குற்றம் சொல்ல வருவார்கள். அவர்களுக்கான சமாளிப்பாக இதைச் சொல்லவில்லை. இராமனை அவதார புருஷனாகக் கொண்டு வால்மீகி தன் பிரதியை முன்வைத்திருப்பார். கம்பனோ இராமனை மானுடப்பிறப்பாகக் கொண்டே தன் பிரதியை எடுத்துச் செல்வார். அதனாலேயே வால்மீகிக்கு ‘பண்ட’ நெருக்கடியும், கமப்னுக்கு ‘படைப்பு’ இன்பமும் வாய்த்தன. கறாரான கருத்தாகவே இதை வைக்கிறேன்.

பண்டங்களின் வழியாகப் பொழுதுபோக்குவதும், கிளுகிளுப்படைவதும் மலின வாசிப்பு. படைப்புகளின் வழியாகத் தன் அனுபவங்களைத் திரட்டிக் கொள்வதும், இன்னும் விசாலமாவதும் கூர்பட்ட வாசிப்பு.

உங்களின் மூன்று முக்கியமான குறிப்புகளை நான் நண்பர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். அக்குறிப்புகள் வாசகனாக விரும்பும் ஒருவருக்கானது மட்டுமல்ல; படைப்பாளர்களுக்கும்தான்.

நல்ல இலக்கியப் படைப்பு நிலைபாடுகளினால் ஆனதல்ல. அது தேடலினால் ஆனது. அது கருத்துக்களை முன்வைப்பது இல்லை. அது முன்வைப்பது படிமங்களை. நான் எனக்கு பிரியமான உவமையை சொல்கிறேன். இலக்கியப் படைப்பு ஒருவகை கனவு. கனவு வாழ்க்கையில் இருந்து பிறப்பது என்பதனால் அது அரசியலற்றது அல்ல. ஆனால் அதன் அரசியல் ஒரு துண்டு பிரசுரத்தின் அரசியல் அல்ல.

வாசிப்பு என்பது ஒற்றைப் படையாக நிகழும் ஓர் எளிய நிகழ்வு அல்ல. வாசகன் ஒரு காலியான பாத்திரமும் அல்ல. அவனுக்கு ஒரு கருத்தியல் நிலைபாடு உள்ளது. அனுபவ மண்டலம் உள்ளது. அவனுக்கென்று ஒரு ஆன்மீக தளமும் உள்ளது. அதை இலக்கியப் படைப்பு பாதிக்கிறது. அவன் அதை எதிர்த்துத் தான் தன்னை முன் வைக்கிறான். அவன் உருவாக்கும் எதிர் வியூகத்தை உடைத்துத் தான் படைப்பு தன்னை நிறுவுகிறது.

வாசிப்புத் தந்திரங்களின் பொதுமைகளை வைத்து வாசகனை ஒரு தனியாளுமையாக பார்க்காமல் வாசிப்புக் குழுக்களாக [ பெண்கள், தலித்துக்கள், ஆய்வு மாணவர்கள் இவ்வாறெல்லாம்] பார்க்கும் பார்வை இன்று இலக்கிய உலகில் உள்ளது. அதை நான் ஏற்பவனல்ல. ஓர் உதாரணமான வாசகன் வாசிப்பின் போது தனி மனிதனாக, அந்தரங்கமாக, படைப்பை எதிர்கொள்பவனே என்று தான் நான் எண்ணுகிறேன். எந்த படைப்பும் அவனை நோக்கியே தன்னை நிறுத்திக் கொண்டுள்ளது என்பதே என் எண்ணம்.

திரும்பத் திரும்ப உங்கள் கருத்தைத் திணிப்பதில்லை என்பதாலேயே நீங்கள் எனக்கு அணுக்கமானவர். மேலதிகமாக, எம் வாசிப்பைக் கூர்படுத்தும்படியான தனிமனித இயக்கமாகவும் இருக்கிறீர்கள். அவ்வகையில், நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படி சொல்வதாலேயே. சிலர் ஜெயமோகனடிமைகள் என வசைபாடக் கூடும்; கல்லெறியவும் செய்யலாம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையே இருப்பது ‘பலன் கருதிய’ உறவல்ல என்பதைப் புரிய வைத்துவிடவே முடியாது. அதுவும் சமூக ஊடகக் காலகட்டத்தில், முடியவே முடியாது.

இலக்கியப்படைப்பாளி எப்படி ஓயாது போராட்டத்தில் இருக்கிறானோ, அப்படி இலக்கியவாசகனும் போராட்டத்தில்தான் இருக்கிறான். அப்படி இருப்பதே படைப்பியக்கத்தின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.

 

சத்திவேல்,கோபிசெட்டிபாளையம்.

கு.ப.ராஜகோபாலன் தமிழ் விக்கி

நம்மாழ்வார் – கடிதம் 2

ஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்

ஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5

குருவை ஆராய்தல் -கடிதங்கள்

அந்த மாபெரும் வெள்ளம் – குறித்து…

போதி – சிறுகதை குறித்து..

கைவிடுபசுங்கழை -கடிதம்

சிதையப்போவது பிரபஞ்சமன்று, நாமே!(அறத்தாறிது)

 

முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்
அடுத்த கட்டுரைசகஜயோகம் – கடிதங்கள்