இலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

இராமலிங்க வள்ளலார்

அன்புள்ள் ஜெ,

 

அருட்பா மருட்பா காலத்தை விட தற்பொழுது இலக்கிய விவாத தளம் மேம்பட்டிருப்பதாகவா எண்ணுகிறீர்கள்? மதம் சார்ந்த ஒரு புது முயற்சி தோன்றும் பொழுது முன்னர் இருக்கும் மதச் சார்பாளர்கள் அதனை எதிர்ப்பது காலம் காலமாக எல்லா நாடுகளிலும் நடை பெறக் கூடிய ஒன்றுதான்.மார்டின் லூதர்போன்று மதத்தில் மாற்றம் செய்ய நினைத்த பல பேர் அவ்வாறான எதிர்ப்பை சந்தித்து இருக்கின்றனர். அந்த மன நிலை முன்பை விட இப்பொழுது இன்னும் பல மடங்கு தீவீரமாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.

 

அருட்பா மருட்பா போன்ற ஒரு நிகழ்வு இப்பொழுது நடை பெறுமானால் பல இடங்களில் போராட்டங்களும் கை கலப்புகளும் ஏற்படக் கூடும். ஏனென்றால் அருட்பா மருட்பா நிகழ்வில் எந்த இலக்கிய விவாதங்களும் நிகழவில்லை.அருட்பாவின் இலக்கிய தரம் குறித்து எந்த விவாதமும் செய்யப்படவில்லை. மாறாக அருட்பாவை படைத்த வள்ளலார் நால்வருக்கு இணயானவரா என்ற கேள்வியே முன் எழுப்பப்பட்டது.அதனைத் தொடர்ந்து அருட்பாவின் முன் “திரு” சேர்க்கப்படலாமா கூடாதா என்பதே விவாதப் பொருளாக மாறியது.மதம் சார்ந்த விவாதங்களில் இத்தகைய எல்லை மீறிய தாக்குதல்கள் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அண்மைக் காலமாக மதங்களுக்கிடையே நடைபெற்ற விவாத அரங்களில் இதை நீங்கள் காண முடியும்.

 

இத்தகைய நிகழ்வுகளுக்கும் இலக்கியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு இலக்கியவாதி மதம் சார்ந்தவராகவோ, அரசியல் சார்ந்தவரகவோ அல்லது ஏதோ ஒரு குழுவின் அறிமுகமான நபராகவோ இருந்தார்களேயானால் அவர்களுடைய படைப்புகளுக்கு எதிரான விமர்சனங்கள் மிகவும் மூர்க்கமான முறையில் எதிர் கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. இலக்கியவாதிகளை இலக்கியங்களை விமர்சிக்கும்பொழுது தனிபட்ட வெறுப்பின் காரணமாக தரமற்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. சில சமயம் தனி நபர் தாக்குதல்களையும் அதில் காணலாம்..

 

நான் அறிந்த வரையில் நீங்கள் மட்டுமே படைப்பாளின் சமூக நிலைப்பாட்டினை கணக்கில் ஏற்காது படைப்பினை அதன் தரத்திற்கு ஏற்றவாறு விமர்சிக்கிறீர்கள். அதகைய விமர்சனங்களுக்கு எதிர்வினையாக வரும் தனிமனித விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு படைப்புத் தொடர்பான விவாதங்களை முன் வைக்கிறீர்கள். என்றாலும் விமர்சனங்களை எதிர் கொள்ளும் மன நிலையும் பண்பும் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளதால் உங்களை “பார்ப்பன அடிவருடி” என்றும் “இந்து வெறியர் ” என்றும் லேட்டஸ்டாக “புளித்த மாவு” என்றும் குறிப்பிடுவதை பார்க்கும் பொழுது இலக்கிய விவாத தளம் ஒரு செண்டி மீட்டர் அளவு கூட உயரவில்லை என்றே தோன்றுகிறது.

 

கொ.வை. அரங்கநாதன்

 

அன்புள்ள ஜெ,

 

இலக்கியவிவாதங்களும் எல்லைமீறல்களும் ஒரு அருமையான கட்டுரை. கொஞ்சம் நீளமானது. ஆனால் பயனுள்ளது. இலக்கிய விவாதங்கள் எந்தவிதங்களில் இங்கே நடைபெற்றன, உலகம் முழுக்க எப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றமாக காட்டிய கட்டுரை அது. அறிவார்ந்த விவாதங்களில் எப்போதுமே ஆணவமே முக்கியமானதாக இருந்துள்ளது. பெருமாளின் புகழ் பாடும் வைணவ விவாதங்களில் எல்லாம் ஆணவம் புழுத்துநாறுவதை வைணவ உரையாசிரியர்களிடம் காணலாம். அறிவிலிருந்து ஆணவத்தைப் பிரிக்கமுடியாது. ஒன்று சரிதான் என்று ஒரு சிரிப்பு தேவை. க.நா.சுவிடம் அந்தச் சிரிப்பு இருந்த்து. அல்லது சுந்தர ராமசாமிபோல எல்லா நிலைமையிலும் தன்மதிப்பை விட்டுக்கொடுக்காத கெத்து தேவை. அப்படி இந்தச் சகதியில் இருந்து வெளியே நின்றால்தானெ எதையாவது உருப்படியாகச் செய்யவும் முடியும்

 

எஸ்.ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைஆ.சிவசுப்ரமணியம் ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைமெய்மையின் பதியில்…