பாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை

 

பாவண்ணனுக்கு விளக்கு விருது

இனிய ஜெயம்

 

உங்கள் தளத்தில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கான விருது அறிவிப்பினைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. [எங்கூர் பக்க எழுத்தாளர் ]  தொடர்ந்து சலிப்பே இன்றி எழுத்துப் பணியில் இருப்பவர். கடுமையான விமர்சனங்கள் அற்றவர். ஆகவே அனைவரின் நட்பிலும் உடனிருப்பவர்.இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில்,எங்கோ ஒருவர் அவர் மொழிபெயர்த்த பைரப்பா அவர்களின் பர்வா நாவலை வாசித்துக் கொண்டிருப்பார். பாவண்ணன் விளக்கு  விருது பெற்றமை குறித்து மகிழ்ச்சி.

 

அதே சமயம் இன்றைய  தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலின் பின்புலத்தில் இந்த விருது வருகை எனும் நிகழ்வை பொருத்திப் பார்த்தால் ஒரு வாசகனாக என்னால்  சில விமர்சனங்களை முன்வைக்காமல் மனம் அமையாது.

 

முதல் விமர்சனம் விருது அளிக்கும் அமைப்பினர் எவருக்கு அந்த விருதினை அளிக்கிறாரோ அவர்களின் பங்களிப்பை சுருக்கமாகவேனும் குறிப்பிட்டு அந்தத் தேதியில் தமிழ் நிலத்தின் குறிப்பிட்ட நாளிதழ்கள் முதல் முன்னணி நிலையில் இருக்கும் இலக்கிய, இடைநிலை பத்திரிகைகளில் செய்தி வரும்படி செய்திருக்க வேண்டும்.அதை செய்தார்களா தெரியவில்லை.

 

இரண்டாவது விமர்சனம்.சக எழுத்தாளர்கள் சார்ந்தது. ஒரு  வாசகன் தேடி வந்து அன்றாடம் திறந்து பார்க்கும் எந்த எழுத்தாளர் தளத்திலும் கடந்த பத்தாம் தேதி அறிவிக்கப்பட்ட விருது இன்று வரை செய்தியாக பகிரப்பட வில்லை. பாவண்ணன் தனது தளத்தில் தானே விருது செய்தியை வெளியிடாதது அவரது தன்னடக்கம். ஆனால் இலக்கிய எழுத்தாளர்  வட்டம் மிக சிறியது சக முன்னணி எழுத்தாளர்களுக்கு இந்த விருது செய்தி  முக்கியம் இல்லையா? ஒரு விருது குறிப்பிட்ட எழுத்தாளருக்கு அறிவிக்கப் படுகையில், அந்த எழுத்தாளர் செயல்படும் களம் சார்ந்த பிற எழுத்தாளர்களின் வரவேற்போ மௌனமோ அது இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி இல்லையா?

 

பாவண்ணன் அவர்களின் எழுத்தின் மீதான திறனாய்வு விமர்சனங்களுக்கு வெளியே, விளக்கு விருது இதுவரை சரியான ஆளுமைகளையே சென்று சேரும் பின்புலத்தில், பாவண்ணன் அவர்கள் இந்த விருது பெறுவதை சட்டென எழும் உவகையோடு எல்லா எழுத்தாளர்களும் கொண்டாடுவதுதானே முறை? சென்ற ஆண்டு வரை அதுதானே நடந்தது.?

 

சும்மா கூகுளில் விளக்கு விருது 2019 என உள்ளிட்டு தேடினேன். உங்கள் பதிவு தவிர வேறு எந்தப் பதிவும் இல்லை. தங்கையின் முகநூல் கணக்கில் சென்று பாவண்ணன் விளக்கு விருது என உள்ளிட்டு தேடினேன் பப்ளிக் போஸ்ட் எதிலும் ஒரு செய்தி இல்லை.  இது எல்லாமே பாவண்ணன் அவர்களுக்கு ‘எதிரான மௌனம்’ எனும் மௌடீக கருத்தை நான் இங்கே முன் வைக்க வில்லை. ஒரு சூழலில் சட்டென எழும் எதிர்வினை சார்ந்தது இது. ஒட்டு மொத்த சூழலின் கூருணர்வு சார்ந்தது இது. இந்த பின்புலத்தில்தான் இலக்கியச் செயல்பாட்டாளன் எனும் வகையில் உங்களின் தளம் அதில் வரும் அறிவிப்பு முக்கியத்துவம் கொள்கிறது.  பாவண்ணன் அவர்களின் கதைகள்,அவரது தளம், அவர் மீதான பார்வைகள்,அவருக்கான சிறப்பிதழ்,அவர் மீதான உங்களின் சுருக்கமான பாராட்டு என கிட்டத்தட்ட அவரை முழுமையாக முன்வைத்த பதிவு அது.  நன்றி.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள கடலூர் சீனு

 

எந்த விருதும் அதை அளிப்பவர்களால் அறிவிக்கப்படவேண்டும். முறையாக அனைத்து ஊடகங்களுக்கும், முதன்மையான எழுத்தாளர்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும். அது அந்த அமைப்பின் கடமை. உண்மையில் விருது என்பது கொடுப்பவர் – வாங்குபவர் சார்ந்த நிகழ்வு அல்ல. அது வாசிப்பவர்களை நோக்கிய ஓர் அறிவிப்பு. இதோ இவரை நாங்கள் முக்கியமான படைப்பாளியாக நினைக்கிறோம் என்னும் பிரகடனம் அது.

 

விஷ்ணுபுரம் விருது அவ்வாறுதான் அளிக்கப்படுகிறது. ஆத்மாநாம் விருது அவ்வாறுதான் அளிக்கப்படுகிறது.  கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் – இயல் விருதுகள் அப்படித்தான் அளிக்கப்படுகின்றன. ஆனால் விளக்கு விருது அதைப் பொருட்படுத்துவதில்லை. அதை அளிப்பவர்கள் வெளிநாட்டிலிருக்கிறார்கள். உள்ளூரில் அவர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஒரு சம்பிரதாயமான தொகுப்பு மின்ன்ஞ்சலே போதும். அதுகூட வருவதில்லை. பாவண்ணன் என் நண்பர். எனக்கு பரவலாக இலக்கிய நண்பர்களும் உண்டு. ஆனால் எனக்கே இரண்டுநாட்களுக்குப்பின் செவிவழிச்செய்தியாகவே இது தெரியவந்தது. இப்போதுகூட இது எனக்கு உறுதிசெய்யப்படாத செய்திதான். அந்த அமைப்பிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

 

இது ஒரு பொறுப்பின்மை. விளக்கு விருது சென்றகாலங்களில் அது வழங்கப்பட்ட எழுத்தாளர்களால் ஓர் அடையாளத்தை, முக்கியத்துவத்தை பெற்ற ஒன்று. ஆனால் மதிப்பிற்குரிய முறையில் அளிக்கப்படவில்லை.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபுத்தசாந்தம்
அடுத்த கட்டுரைஉலகெலாம்…